Advertisement

அத்தியாயம் ஐந்து:

பக்கத்தில் நாமக்கல் தான் பெரிய ஊர் என்பதால் அங்கே வண்டியை விரட்டினான் அசோக்.

அங்கே இருந்த ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நேரம் மணி ஏழு தான். அதனால் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. ட்யுடி டாக்டர் மட்டும் தான் இருந்தார்.

அவரின் சீஃப் டாக்டருக்கு போன் செய்தவர், “அவர் இப்போ வந்துடுவார், கத்தி குத்துன்றதால இது போலீஸ் கேஸ்……. முதல்ல போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணிடுங்க”, என்றார்.

சொல்லிவிட்டு அவர் முதலுதவியை ஆரம்பிக்கப் போனார்…..

அதன் பிறகே, “என்ன ஆச்சு”, என்ற கேள்வி கனிமொழியிடம் கேட்கப் பட……

“நாங்க ரெண்டு பேரும் அங்க இருந்தப்போ மூணு பேர் வந்தாங்க……… அவங்களுக்கு  நான் தான் குறியாய் இருந்தேன். இவரைப் பார்த்து நீ கிளம்பிடு இல்லைனா இந்த பொண்ணோட நீயும் இங்கயே சமாதி ஆயிடுவன்னு சொன்னாங்க…….”,

இதைக் கேட்டதும் அங்கிருந்த மூவருக்கும் அதிர்ச்சி…… “என்ன கனிமொழியை குறிவைத்து இந்த தாக்குதலா?”,

“அப்புறம் இவர் எவ்வளவு பணம்னாலும் நான் குடுக்கறேன், எங்களை விட்டு போயிடுங்கன்னு பேசிட்டு இருந்தார்”,

“அவங்க கேட்ட மாதிரி தான் இருந்தது, அதுக்குள்ள நீங்க வந்தீங்க….. நான் உங்களை பார்த்துட்டு இருந்தேன்……. இவர் அலறன சத்தம் கேட்டது, பார்த்தா இவரை குத்தி இருந்தான்…….”,

“உனக்கு அவங்களை  தெரியுமா”, என்றார் அண்ணாமலை.

“தெரியாது”, என்றாள் கனிமொழி.

“ஆகாஷ் எதுக்கு அங்க வந்தான்”, என்றார்.

“எனக்கு தெரியாது”, என்றாள்….

“இப்போ போலீஸ் கிட்ட என்ன சொல்றது”, என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டிருக்கும் போதே……..

ஒரு நர்ஸ் வந்து, “சார்! பேஷன்ட் கொஞ்சம் கான்ஷியஸ் வந்திருக்கார். உங்களை பார்க்கனும்ங்கறார்”, என்றார்.

அண்ணாமலையும் செந்திலும் உள்ளே போக……. “நான் கொஞ்சம் தனியா பேசணும்”, என்று அங்கேயிருந்த டாக்டரையும் நர்சையும் அனுப்பினான்.

மிகவும் சிரமப்பட்டு பேசினாலும் கோர்வையாக பேசினான். “போலீஸ்கிட்ட சொன்னீங்களா….”,

“இனிமே தான் சொல்லணும்”, என்று அண்ணாமலை சொல்ல…….

“வேண்டாம்! சொல்ல வேண்டாம்!”, என்றான்.

“ஏன்?”, என்று அண்ணாமலை கேட்க……

“கனிமொழி பேர் எங்கயும் வரக்கூடாது………. காலையில நான் அவளோட இருந்திருக்கேன்……. என்ன ஏதுன்னு கேள்வி வரும்……… அதுவும் இது அவளுக்கு வந்த ஆபத்து வேற……. தேவையில்லாத பேச்சுக்கள் வரும்……. அவளையும் கேள்வி கேட்டு கஷ்டப்படுத்துவாங்க”,

“பேப்பர்ல கண்டதையும் திரிச்சி போடுவாங்க……. அவ பேர் எங்கயும் வர்றதை நான் விரும்பலை………. போலீஸ் போகவேண்டாம்”, என்றான்.

“மறுபடியும் அவளுக்கு ஆபத்து வந்தா”, என்று செந்தில் கேட்க…….

“வராம நாம பார்த்துக்கலாம்…….. போலீஸ் போகவேண்டாம்”, என்றான் மறுபடியும்.

“சரி போகலை! ஆனா இங்க டாக்டர் கேட்டா?”,

“ஹாஸ்பிடல் டொனேசன் அது இதுன்னு ஏதாவது சொல்லுங்க……… என்ன வேணா பண்ணுங்க……… எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை……… அவ பேர் வெளிய வரக்கூடாது”,

அண்ணாமலைக்கு ஒன்றுமே புரியவில்லை. இவனுக்கு ஏன் அந்த பெண் மேல் இவ்வளவு அக்கறை என்று அவருக்கு விளங்கவேயில்லை. 

“அவ இங்க இருக்காளா?”,

“ம்”, என்று செந்தில் தலையாட்ட…….. 

“அனுப்பிடு! இங்க வேண்டாம்!”, என்றான்…….

“சரி”, என்று செந்தில் போக………. அண்ணாமலை அவனை தொடர்ந்தார்.

அவரிடமும், “அக்காகிட்ட சொல்லாதீங்க……. பயந்துடுவா! வேற ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்”, என்றான்.

வெளியே வந்தவர்கள்………. “இங்கே நடந்தது யாருக்கும் தெரியவேண்டாம்! தெரிஞ்சா போலீஸ் அது இதுன்னு கேஸ் ஆகும்! கனிமொழி பேர் அடிப்படும்னு ஆகாஷ்  பயப்படறான்! அதனால அவளை இங்கே இருந்து கிளம்ப சொல்றான்! நீ அவளை கூட்டிட்டு போய் வீட்ல விடு!”, என்றான் அசோக்கை பார்த்து செந்தில்…..

“உங்க வீட்ல கூட யாருக்கும் தெரிய வேண்டாம் அசோக், அப்படியே விஷயம் பரவிடும் நம்ம நாலு பேருக்குள்ள மட்டும் தான் இருக்கணும்”, என்றான்.

அசோகிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது கனிமொழிக்கான தாக்குதல் என்பதில் அவன் மிகவும் பயந்து போயிருந்தான். அசோக்கின் பயந்த முகத்தை பார்த்த செந்தில், “ஒண்ணும் ஆகாது! பயப்படாத நாங்கள்லாம் இருக்கோம்!”, என்று அவனை தைரியப்படுத்தினான்.

“இனிமே ஹாஸ்பிடல் பக்கம் வராத, ஒரு வேலை அவனுங்க கனியை பின்தொடர்ந்தா அவங்க உஷாரகிடுவாங்க அதுக்கு தான்”, என்றான்.

அவளைக் கூப்பிட்டு கொண்டு அசோக் கிளம்ப…….. வாசல் வரை சென்ற கனி திரும்ப வந்து, “நான் ஒருதடவை அவரைப் பார்க்கட்டுமா”, என்றாள்.

“வா”, என்று அழைத்துப் போன செந்தில்…….. அவளை உள்ளே விட்டு வெளியே வந்தான்.

கனிமொழியின் கலங்கிய முகத்தைப் பார்த்த ஆகாஷ், “எனக்கு ஒண்ணுமில்லை, சரியாகிடும்!”, என்றான்.

என்ன பேசுவது என்றே தெரியாமல் கனிமொழி நிற்க….. “எனக்கு மட்டுமில்லை உனக்கும் ஒண்ணும் ஆகாது……. பயப்படாத நான் இருக்கேன்……. உனக்கு ஒண்ணும் ஆகாது, தைரியமா போ!”, என்றான்.

“ஆனா இனிமே எங்கேயும் தனியா போகக்கூடாது……….. அவங்க யார் என்னன்னு நான் கண்டுபிடிக்கற வரைக்கும் தனியா போகாத……. வீட்ல ஏதாவது சொன்னாலும் எதையும் காதுல போட்டுக்காத……… உன்னை மீறி எதுவும் நடக்க விடமாட்டேன் போ!”, என்றான்.  

தலையாட்டி வெளியே வந்தாள்.

பின்பு அசோக்கோடு அவள் வீட்டிற்கு கிளம்ப….. அங்கே பெரிய டாக்டரும் வந்துவிட…… அவர், “உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும்”, என்றார்.

அண்ணாமலை சர்ஜெரியின் போது எதுவானாலும் சம்மதம் என்று எழுதிக்கொடுத்து ஹாஸ்பிடலுக்கு பெரிய அமௌன்ட் டொனேசனாக கொடுப்பதாக சொல்லி………. ஒரு வழியாக போலீசிற்கு போகாமல் பார்த்துக்கொண்டார்.   

கொஞ்சம் ஆழமான கத்திகுத்து என்றாலும் நல்ல உடல் வலிமையையும் மன வலிமையையும் இருந்ததால் அபாய கட்டத்தை அதிக சிரமமில்லாமல் கடந்துவிட்டான் ஆகாஷ்.

“சென்னை போகலாமா”, என்று அண்ணாமலை கேட்க……..

“வேண்டாம்”, என்று மறுத்துவிட்டான். “யார்? என்ன? எதற்கு?”, என்ற விவரம் தெரியாமல் அவன் அந்த ஊரை விட்டு அசைவதாய் இல்லை.

இப்போது தெளிவாகவே அண்ணாமலைக்கு விவரம் பிடிப்பட்டது……. ஆகாஷ்  கனிமொழியை விரும்புகிறான் என்று.

“உனக்கென்ன குறை? பொண்ணா கிடைக்காது! ஏன் இப்படி ஒரு பொண்ணை செலக்ட் பண்ணின?”, என்றார்.

“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு! மேலயும் அவளோட நிலைமையை பத்தி யாரும் விமர்சிக்கறத நான் விரும்பலை! அது நீங்களா இருந்தாலும் சரி!”, என்றான்.

அண்ணாமலை அதற்கெல்லாம் கோபப்படாமல்………. மேலும் மேலும் பேச எல்லாவற்றிற்கும் தெளிவாகவே பதில் கொடுத்தான்.  

“நீ இவ்வளவு உறுதியா இருக்கும்போது எங்களுக்கென்ன நடத்திக்கொடுக்க நானாச்சு!”, என்றார்.     

அசோக்கிடம் செந்தில்………. ஆகாஷ் கனிமொழியை திருமணம் செய்ய விருப்பபடுவதாய் கூறினான்.

ஆகாஷ் கனிமொழிக்காக கத்திக்குத்து வாங்கி நிற்கும் போதே……. அவளுக்கான அவனின் ப்ரியம் அசோகிற்கு புரிந்து தான் இருந்தது.

“என்ன செய்யட்டும்”, என்று பதிலுக்கு செந்திலிடமே அசோக் கேட்டான்.

“அவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுறா…….. என்ன செய்யடும்னு கேட்கிற?”,

“கனி ஒத்துக்குவாளா?”,

“அவளை விடு! அப்புறம் பார்க்கலாம்! உங்கப்பாம்மா கிட்ட பேசு முதல்ல”, என்றான்.

“எங்கப்பா ஜாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்றா! அவ்வளவு சுலபமா ஒத்துக்குவார்ன்னு எனக்கு தோணலை!”,

“ஒரே ஜாதி தானேடா”,

“அப்படியா? என்ன பிரிவு? அப்பா இதெல்லாம் பார்ப்பாங்க”,  

“விளங்கும்! அவர் சம்மதிச்சாலும் சம்மதிக்கட்டாலும் கல்யாணம் நடக்கும்! நீ பேசறதை  பாரு. மத்ததை நாங்க பார்துக்குறோம்! நாங்க என்ன பார்க்குறது……. ஆகாஷ் பார்த்துக்குவான்…….. உங்க விருப்பம் இதுல எதுவுமே இல்லை!”,

“என்னடா நீயே இப்படி பேசுற? எனக்கிருக்குற தைரியமே நீதான்! நீயே இப்படி பேசுனா, நான் எங்கடா போவேன்!”, என்றவன் குரல் தழுதழுத்தது.

அவனை நட்போடு அணைத்துக்கொண்டான்.

சற்றுக் கறாராக பேசிவிட்டோம் என்றுணர்ந்த செந்தில்……. “சாரி! சாரி! நான் உன்னை விட்டுடுவேனா என்ன? கனி, ஆகாஷை மிஸ் பண்ணிடக்கூடாதேன்னு தான் பேசினேன்”.

“அவனை மாதிரி மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்காது……….. பார்த்தேயில்லை அவ பேர் வெளில வரக்கூடாதுன்னு அவன் அடிபட்டிருந்த நேரத்திலும் நினைச்சான். இல்லையா! அவனை விட யார் அவளை நல்லா பார்த்துக்குவா சொல்லு!”, என்று சமாதானப்படுத்தினான்.   

“டைம் பார்த்து பேசறேன்”, என்று அசோக் உறுதி அளித்தான்.  

ஹாஸ்பிடலில் செந்திலும் அண்ணாமலையும் ஆகாஷை விட்டு அசையவில்லை. இதற்கு நடுவில் அந்த இன்டிகா காரின் நம்பரை வைத்து அதன் ஓனர் யார் என்று கண்டுபிடிக்க முற்பட்டனர். 

அவன் அட்ரெஸ்சை எடுத்துவிட்டாலும் அது அவன் தானா என்று அறிவதற்கு ஆகாஷ் வரவேண்டி இருந்தது. அந்த வீடும் பூட்டியே இருந்தது. சரியாக விவரமும் பிடிக்கமுடியவில்லை.   

ஆகாஷ் ஹாஸ்பிடலில் இருந்துக் கொண்டே ஆட்களை சென்னையில் இருந்து வரவழைத்தான். புதிதாக கனிமொழியின் வீடு இருந்த வீதியில் ஒரு பழ வண்டி முளைத்தது. அதில் இரண்டு ஆட்கள் எப்போதும் சேர் போட்டு அமர்ந்திருந்தனர். கனிமொழியின் பாதுகாப்பிற்கு அவர்களை ஏற்பாடு செய்திருந்தான்.

கனிமொழியின் வீட்டில் யாருக்கும் எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அசோக்கும் சொல்லவில்லை……. கனிமொழியும் சொல்லவில்லை.

கனிமொழியின் வீட்டில் அவள் வீட்டை விட்டு கோபித்து கணவன் வீட்டிற்கு சென்றதால் அப்போதைக்கு அவளின் அப்பா அவளின் திருமண விஷயம் பேசுவதை ஒத்திப்போட்டார்.   

ராஜியை தவிர எல்லோரிடமும் ஆகாஷிற்கு திடீரென்று வயிற்றுவலி, அப்பெண்டிக்ஸ், அதனால் உடனே ஆபரேஷன் செய்யும் படி ஆகிவிட்டது என்றே சொல்லப்பட்டது.  

நான்கு நாட்களுக்கு பிறகு ஆகாஷ் படுக்கையை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனான். இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாகவே யாருக்கும் தெரியவில்லை.    

டிஸ்சார்ஜ் ஆனவுடன் காரை நேராக புதன் சந்தைக்கு தான் விட்டான். இவன் காரில் இருந்தபடியே அன்று பார்த்தவர்கள் யாராவது கண்ணில் தென்படுகிறார்களா என்று பார்த்தான்.

யாரும் படவில்லை.  

அனிதா என்னவோ ஏதோ என்று பயந்து இருந்ததால் சென்னை வேறு செல்ல வேண்டி இருந்தது.  இந்த ஒரு வாரமாக கனியைப் பார்க்கவில்லை என்றாலும் அவள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் இருக்கிறான் என்பதால் அவளுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்ளும் தைரியம் இருந்தது.

அவளை விட்டு தொலைவு போக முடியாமல் மனம் துடித்தது.  

மேலும் இரண்டு நாட்கள் அந்த ஆட்களை ஊர் முழுக்க சல்லடைப் போட்டு தேடினான் எவனும் கண்ணில் படவில்லை…… அந்த வண்டியின் ஓனர் வீடும் பூட்டியே இருந்தது. அது எப்போது திறந்தாலும் தனக்கு தகவல் வரும்படி ஏற்பாடு செய்தான்.  

கனிமொழி முற்றிலும் மாறியிருந்தாள். ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியாது அவளால். ஆனால் இப்போது பேச்சென்பதே இல்லை. முன்பெல்லாம் எப்போதாவது ஒரு தரம் தான் பஃப் உபயோகிப்பாள். இப்போதெல்லாம் அடிக்கடி மூச்சிரைப்பு வர அதிகமாக அதை உபயோகத்தாள்.

அவளின் கணவன் இறந்த போது கூட அதிலிருந்து மீண்டு வந்திருந்தாள். இப்போது தன் தந்தையின் பேச்சு, ஆகாஷின் பேச்சு, அதற்கு பின் நிகழ்ந்த நிகழ்வு….. தன்னை யார் கொல்லும் அளவுக்கு விரோதியாக இருப்பர் என்ற யோசனை அவளின் மனதை புயலாக சுழற்றி அடித்தது.  

எல்லாவற்றையும் விட நாளை இந்த குழந்தை பிறந்த பிறகு தனக்கு இப்படி ஏதாவது ஆகிவிட்டால் தன் குழந்தையை யார் காப்பாற்றுவார் என்ற பயம் அவளை முற்றிலும் ஒடுக்கியது. என்ன தான் உறவுகள் விட்டு விட மாட்டார்கள் என்றாலும் தந்தையும் இல்லாமல் தாயும் இல்லாமல் தன் குழந்தை அனாதையாக வளர வேண்டுமா என்ற நினைப்பே அவளை வாட்டியது.

அசோக் அவளோடு பேசமுயன்றாலும் தவிர்த்தாள்…… ஏற்கனவே அவன் பயந்து இருக்கிறான், மேலும் தன் மனதின் கவலைகளை சொல்லி அவனை பயமுறுத்த விரும்பவில்லை………  தங்கைகளோடும் அதிகம் பேசவில்லை….. அவர்களையும் தவிர்த்தாள்.

கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்த அவளின் தங்கை ப்ரியா, “அப்பா! எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே நம்ம வீட்டை இந்த பாடு படுத்தும் இந்த கல்யாணம் வேண்டாம்பா!”, என்றாள்.  

கனிமொழிக்கு சரியாக உணவு கூட இறங்கவில்லை. உடம்பு ஏற வேண்டிய இந்த சமையத்தில் உடம்பு இளைத்தாள். 

பிறந்ததிலிருந்து இப்படி தங்கள் மகளைப் பார்த்திராத பெற்றோரும் பிறகு அவளை கல்யாணத்திற்கு வற்புறுத்தவில்லை.

அவளைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்துக்கொண்டு இருந்தனர். பிரசவத்திற்கு நாள் வேறு நெருங்கிக்கொண்டு இருந்தது. டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு இன்னும் இருபது நாட்களே இருந்தது.  

மாப்பிள்ளை வீட்டில் எப்படி சொல்வது என்று அவர்கள் தயங்கிய போது அசோக்கே அவர்களிடம் பேசினான்…… “எங்க சின்ன பொண்ணை மட்டும் தான் குடுப்போம். எங்க பெரிய தங்கச்சிக்கு கல்யாணத்துல இஷ்டமில்லை. அவளைக் கட்டாயப்படுத்த முடியாது! இஷ்டம்னா மேல பேசலாம் இல்லைன்னா சம்பந்தத்தை முடிச்சிக்கலாம்”, என்றான் கறாராக…..

வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் இறங்கி வந்தனர், “சரி”, என்று……

ஆகாஷிற்கு ஒருமுறை கனிமொழியை பார்க்க வேண்டும் என்று மிகுந்த தவிப்பாக இருந்தது.

மீண்டும் செந்திலிடம் போய் நின்றான், “எனக்கு அவளை பார்க்கம்ணுடா”, என்று……

“இரு யோசிக்கறேன், ஏதாவது செய்யலாம்”, என்றவன்……

“கணக்கு வழக்கு நீ ஸ்டோர் பண்ணி வைத்தது எங்கேன்னு தெரியலை! வந்து எடுத்துக்கொடுக்குறியா!”, என்று கனியிடம் கேட்டான்.

“சரி”, என்று சொன்னவளிடம்……..

“நான் வந்து கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி கிளம்பி அசோக்கின் வீட்டிற்கு வந்தான்.    

அசோக்கோடு வீட்டை விட்டு வெளியே வந்தவளை பார்த்து அதிர்ந்து விட்டான்.

“டேய்! என்னடா இப்படி ஆகிட்டா!”, என்றான் ஆற்றாமை தாங்காமல். “பத்து நாள்ல என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க பொண்ணை”, என்றவன் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான்.

அசோக்கின் அப்பா அங்கே அமர்ந்திருக்க, “என்னாப்பா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க! எவனாவது பொண்ணு கேட்டா நம்ம வீட்டு பொண்ணை டார்ச்சர் பண்ணுவீங்களா! எப்படி இருந்த பொண்ணை எப்படி பண்ணி வெச்சிருக்கீங்க!”,

“எவன் அவன் பொண்ணு கேக்கறது, ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க!”, என்று சத்தம் போட்டான்.

“இல்லை செந்தில்! முடியாதுன்னு சொல்லிட்டோம்!”,

“எதுக்கும் கொஞ்சம் நல்லா  விசாரிச்சிக்கோங்க அப்பா! நாளைக்கு நம்ம ப்ரியாவை கொடுக்கும் போது ஏதாவது பிரச்சனை பண்ணப் போறாங்க”,

“இல்லையில்லை! மாப்பிள்ளைகிட்ட நானே தெளிவா பேசிட்டேன்! இது எதுவும் என் சின்ன மகளோட வாழ்க்கையை பாதிக்கக் கூடாதுன்னு, அவரும் சரின்னு தான்பா சொன்னார்!”, என்றார்.

“எதுக்கும் நீங்க அவர் பேரு, அவர் வேலை செய்யற இடம் எல்லாம் சொல்லுங்க! நானும் விசாரிக்கிறேன்!”, என்றான் பொறுப்புள்ளவனாக……

அவர் கொடுத்த முகவரியை வாங்கிய பிறகே கனிமொழியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். கூட கிளம்பிய அசோக்கை, “நீயிரு!”, என்று தவிர்த்துவிட்டான். அவனை வைத்துக்கொண்டு எப்படி கனிமொழியை ஆகாஷுடன் பேசவிடுவது என்றே  தவிர்த்துவிட்டான்.  

ஆனால் கனிமொழியை கூப்பிட்டுக் கொண்டு போகும்போது அவனுக்கு ஒரே யோசனை…… இவளை இப்படி பார்த்தால் ஆகாஷ் என்ன சொல்வானோ என்று….

ஆமாம் இத்தனை நேரம் ஆகிற்று இந்த கனிமொழி ஒரு வார்த்தை கூட பேசாமல் வருகிறாள் எப்படி முடிந்தது அவளால். “உன் வாயை கொஞ்சம் குறை கனி”, என்று அவனே அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறான்.

அவளின் மாற்றம் சிறிது நேரத்திலேயே செந்திலுக்கு நன்கு தெரிந்தது. அவளின் தோற்றத்தில் மட்டும் மாற்றமில்லை……. அவளே மாறியிருக்கிறாள் என்று நன்கு புரிந்தது. செய்யும் வகை தெரியாது அவளை மில்லுக்கு அழைத்து சென்றான்.

“ஆகாஷ்! எப்படி இருக்கிறார்!”, என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் எதற்கும் வாயே திறக்கவில்லை.

மில்லுகுள் சென்றதுமே அவளை ரூமிற்கு அழைத்து சென்றவன்….. அவள் உள்ளே நுழையும் சமயம், “நீ உள்ள இரு கனி! நான் இப்போ வந்துடறேன்!”, என்று சொல்லி சென்றான்.

உள்ளே நுழைந்ததுமே அவளை எதிர்கொண்டான் ஆகாஷ்…….. கனி ஓரளவிற்கு இதை எதிர்பார்த்தாள். இங்கே மில்லுக்கு கூட்டி வருவது ஆகாஷின் வேலையாக தான் இருக்கும் என்று! மற்றபடி மில்லில் செந்திலுக்கு தெரியாமல் ஒரு சின்ன பொருள் கூட இருக்க முடியாது என்னும் போது கணக்கு வழக்கு பைல் எங்கே என்று தெரியவில்லை என்பதெல்லாம் சும்மா!

“வா கனி!”, என்று சொல்ல வாய் திறந்த ஆகாஷிற்கு கனிமொழியை பார்த்ததும் வெறும் காற்று தான் வந்தது. அப்படி உருக்குலைந்திருந்தாள் அவள்………

அவளைப் பார்த்ததும் பதறியவன், “உடம்பு சரியில்லையா? அலைய வெச்சிடேனா உன்னை?”, என்றான்.

“இல்லை”, என்பது போல தலையாட்டியவள், “உங்க உடம்பு எப்படி இருக்கு?”, என்றாள்.

“இது நான் தான் உன்னைப் பார்த்து கேட்கணும் போல இருக்கு! சாப்பிடறையா இல்லையா?”, என்றான் அக்கறையாக.

முன்பு போல அவனை எடுத்தெறிந்து பேசமுடியவில்லை….. அன்றைய நிகழ்வு அவன் மேல் இருந்த கோபத்தைக் காணாமல் செய்திருந்தது. தன்னை எந்த வகையிலும் அவன் கஷ்டப்படுத்த மாட்டான், மற்றவர்களையும் கஷ்டப்படுத்த விடமாட்டான் என்ற நம்பிக்கை வந்திருந்தது. 

அதுவும் அன்று நடந்த அந்த நிகழ்வு உலகத்தாரின் பார்வைக்கு வந்திருந்தால் தான் அவர்களின் வாயிற்க்கெல்லாம் அவலாக ஆகியிருப்போம் என்று நன்கு அவளுக்கு தெரியும்.

கணவனை பதினைந்து நாட்களில் இழந்த போது அவளுக்காக பரிதாபப்பட்டவர்களை விட, “இவ வந்த நேரம் பாரு ராஜா மாதிரி வாழ்ந்துட்டிருந்த குடும்பத்தை அப்படியே சாச்சிடுச்சு”, என்று சொன்னவர்கள் தான் அதிகம்.

அத்தனை வார்த்தைகளையும் தாங்கிக்கொண்டவள் தன் முகத்தில் எதையும் காட்டியது இல்லை. கலகலப்பான பெண் என்றாலும் தன் உணர்வுகளை யாரோடும் பகிரவில்லை. மற்றவர்கள் இப்படி பேசுகிறார்களே என்று அழுதுகொண்டு மூலையில் உட்காரவும் இல்லை. தைரியமாக தான் சூழ்நிலைகளை எதிர்கொண்டாள்.  

ஆனால் இப்போது????????

அவளின் தைரியம் எங்கே போனது என்று அவளுக்கே தெரியவில்லை! 

அதுவும் போலீஸ் கேஸ் என்று ஏதாவது ஆகியிருந்தால் இவளின் தவறான தொடர்புகள் காரணம் என்று கதைகட்டி கேசை திசை திருப்ப பார்த்திருக்கலாம்!

தினமும் பேப்பர் படிக்கிறாளே! அதில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று வரும்போது அதில் ஒரு கள்ள தொடர்பு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காதே!

அதுவும் இவள் வேறு கணவன் இல்லாமல் நிராதரவான நிலைமையில் இருப்பவள்….

அதுவும் அவள் கணவன் வெட்டுப்பட்டு இறந்த போதே, “உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி காதல் அது இதுன்னு யாரோடவாவது இருந்ததா”, என்று வகை வகையாக எத்தனை கேள்வி கேட்டனர்.

அதையெல்லாமே இன்னும் அவளால் மறக்க முடியவில்லை. 

என்னதான் குடும்பத்தார் துணை நின்றாலும் தேவையில்லாத அவப்பெயர் அவப்பெயர் தானே……  

ஏன் பெண்கள் என்றால் இப்படிதான் இருக்கும் என்று யோசிக்காமல் கதை பேசி விடுகிறார்கள் என்று அடுத்தவர்களுக்காக பரிதாபப்பட்ட நிலைமை போய் அவளுக்கு அப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் யோசிக்கவே முடியவில்லை.

அந்தா மாதிரி எதுவும் தனக்கு நேராமல் இவன் பார்த்துக்கொண்டதற்கே இவனுக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் என்று தோன்றியது.   

“சாரி! நானே உங்களை வந்து பார்த்திருக்கணும்! அட்லீஸ்ட் போன் பண்ணியாவது கேட்டிருக்கணும்! எப்படி இருக்கீங்க?”, என்றாள் மறுபடியும்.

“நேத்து தான் தையல் பிரிச்சாங்க! நான் நல்லா இருக்கேன்! இன்னும் கொஞ்சம் நாள் நல்லா ஆகிடுவேன்!”, என்றான்.

புன்னகைக்க முயன்று தோற்றாள்…..

“மறுபடியும் ஏதாவது பிரச்சனையா? அப்பா ஏதாவது பிரஷர் குடுக்கறாரா?”,

“இல்லை! அப்பா அவங்களை வேண்டாம்னு சொல்லிட்டாங்க”,

“நான் ஏதாவது உன்னை கஷ்டப்படுத்தறேனா?”

“இல்லையில்லை! அப்படி எல்லாம் எதுவும் இல்லை!”, 

“வேற ஏதாவது அன்னைக்கு மாதிரி ஆளுங்க யாரையாவது பார்த்தியா?”,

“அன்னைக்கு அப்புறம் நான் இன்னைக்கு தான் வீட்டை விட்டு வர்றேன்! இன்னும் செக் அப் கூட போகலை”,

“ஏன் போகலை? இந்த சமயம் அஜாக்ரதையா இருக்கலாமா?”, என்று கடிந்தான்.

“இன்னைக்கு போகலாம்னு இருந்தேன் ஆனா இங்க வந்துட்டேன்! நாளைக்கு தான் போகணும்”.

“மறக்காம போயிடு! கவனமில்லாம இருக்காத!”,  

“ம்”, என்று சொல்லி தலையாட்டினாள்…….

“அவங்க யாரு? என்ன காரணம்னு? ஏதாவது உனக்கு அனுமானம் இருக்கா?”,

“இல்லை”,

“உன் கணவர் கூட இந்த மாதிரி சம்பவத்துல தானே இறந்தாங்க! அதை செஞ்ச ஆளுங்களுக்கு தண்டனை கிடைச்சதா?”,

“அவங்க யாருன்னு தெரியவேயில்லை! இன்னும் கேஸ் நடந்துட்டு தான் இருக்கு!”,

“உன் கணவருக்கு யாரு விரோதிங்கன்னு உனக்கு ஏதாவது தெரியுமா?”,

“அவரை பத்தி எனக்கு அதிகம் தெரியாது! கல்யாணமாகி பதினஞ்சு நாள் தானே சேர்ந்து இருந்தோம்…… இதுல நாங்க பேசுன நேரங்கள் கம்மி! எப்பவும் நான் தான் பேசுவேன்! அவர் அதிகம் பேசவும் மாட்டார்! ஏன் அதிகம் வீடே தங்க மாட்டார். அவர் வெளியவே தான் சுத்துவார்”.    

“எட்டு மாசமா யாருன்னு கண்டுபிடிக்கவே இல்லையா? ஒருத்தரை கூடவா அரெஸ்ட் பண்ணலை?”,

“இல்லை”, என்றாள்.

“வெட்டுனவனை அரெஸ்ட் பண்ணலைன்னாலும் வேற எவனையாவதாவது அரெஸ்ட் பண்ணி கேஸ் க்ளோஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்களே! அதைக்கூடவா பண்ணலை!”,

“இல்லை”, என்று தலையாட்டினாள்.

“ஸ்ட்ரேஞ்”, என்றவன்…….

“ஏன் கனி? ஏன் இப்படி இருக்க! நான் பத்து நாளைக்கு முன்னாடி பார்த்த கனியே வேற! அந்த வாயெல்லாம் எங்கப் போச்சு?

“தெரியலை! ஒரு வேளை அப்படி பேசி பேசி தான் எதையாவது இழுத்து விட்டுகிட்டனா தெரியலை! அவங்க யாருன்னே எனக்கு தெரியலை? ஏன் வந்தாங்க அதுவும் கொல்ற அளவுக்கு….. நான் எதுவும் யாருக்கும் பண்ணின மாதிரி ஞாபகமில்லை! நீங்க மட்டும் வரலைன்னா இந்நேரம் நான் இருந்திருக்க மாட்டேன்”, என்றாள் கண்ணீரோடு…….

“ப்ச்! நான் இல்லைன்னாலும் கடவுள் உன்னை காப்பாத்த யாரையாவது அனுப்பி இருப்பார்! என்ன எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதுல கொஞ்சம் தலைகால் புரியாம தடுமாறிட்டேன்! கிடைச்ச கேப்ல சொருகிட்டு போயிட்டான்”, என்றான் ஈசியாக ஆகாஷ்.

அவளின் முகம் தெளியவில்லை!

“அதான் ஒண்ணும் ஆகலைல்ல! அப்புறம் ஏன் இவ்வளவு பயம்?”,

தன் மனதின் பயத்தை யாரிடமும் பகிராதவள் அவனிடம் பகிர்ந்தாள்.

“ஒரு வேளை எனக்கு குழந்தை பிறந்த பிறகு இந்த மாதிரி ஏதாவது ஆகி…… நான் இறந்துட்டேன்னா என் குழந்தையை யார் பார்த்துக்குவா? இல்லை எனக்கு வர்ற ஆபத்து என் குழந்தைக்கும் வந்துடுச்சின்னா”,  என்று சொன்னவள் முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்……

“முட்டாள்”, என்று அவளை அதட்டியவன்……. “உனக்கு ஒண்ணும் ஆகாது! நான் ஆக விடமாட்டேன்!”, என்றான்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல விழைந்த கைகளை சிரமப்பட்டு அடக்கினான்.  

அழுததில் அவளுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. அவளின் பர்சை திறந்து பஃப் இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.

இருந்தது அதை அவளிடம் கொடுத்தான். அவள் பஃப் உடனே எடுத்தாலும் அவள் சமன்பட சிறிது நேரம் ஆகிற்று.

அவளும் அமைதியாக உட்கார்ந்திருக்க….. அவனும் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

“நான் இன்னைக்கு நைட் ஊருக்கு போறேன். இங்க உன் பாதுகாப்புக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன். இருந்தாலும் தனியா எங்கேயும் போகாத, ஹாஸ்பிடல் போகும்போது கூட அசோக் கூட போ செந்திலும் கூட வருவான்”.

“ம்”, என்று தலையாட்டினாள்…….

“நான் ஒண்ணு சொல்லுவேன், கோபப்படாம யோசிக்கணும்”,

“என்ன?”, என்பது போல அவள் பார்க்க…..

“எத்தனை பேரை நான் பாதுக்காப்புக்கு போட்டாலும் எனக்கு பயமாவே தான் இருக்கும். என்னால உன்னை இங்க விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியாது…… நான் உன்னை தொந்தரவு பண்றேன்னு தெரியுது! இருந்தாலும் கேட்கறேன், நீ என்னை கல்யாணம்  பண்ணிக்கிறியா”,  என்றான் அவனின் உயிரை கண்ணில் தேக்கி….   

Advertisement