Advertisement

அத்தியாயம் நான்கு:

“வீட்டிற்கு வா உணவிற்கு”, என்று செந்தில் எவ்வளவோக் கேட்டும்…..

“இப்போ என்னால எங்கேயும் வர முடியாது”, என்று மறுத்து விட்டான் ஆகாஷ்.

வேறு வழியில்லாமல் உணவை அங்கேயே தருவித்துக் கொடுத்தான் செந்தில். அதையும் அறையும் குறையுமாக தான் உண்டான் ஆகாஷ்.

“எப்படி சிரித்த முகமாக இருப்பவன் இவ்வளவு இறுக்கமாக ஒரே நாளில் மாறிவிட்டான்”, என்றிருந்தது செந்திலுக்கு.

மாலைவரை செந்தில் அவனின் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க ஆகாஷ் எதையும் செய்யாமல் எதையும் பார்க்காமல் அமர்ந்திருந்தான்.

இவன் வந்திருப்பது தெரிந்ததுமே இவனைப் பார்க்க வந்த அண்ணாமலை…. இவனை பார்த்ததுமே இவன் ஏதோ அப்செட் போல தோன்ற ஆகாஷை தனியாக விடாமல் கையோடு அவனை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார். அவன் வரமாட்டேன் என்று சொல்லியும் விடவில்லை, வற்புறுத்தி அழைத்து சென்றுவிட்டார்.

அதன் பிறகே செந்திலால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. கையோடு அசோக்கை அழைத்தான் முதலில் அவனிடம் பேசிவிடுவோம் என்று.

அவன் போனே எடுக்கவில்லை. “இவனுக்கு நம்ம மேல ஏதாவது கோபமா போனை எடுக்க மாட்டேங்கறான் இவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே???”, என்று முதலில் கவலைப்பட்டவன்….  

பிறகும் பலமுறை முயன்றான். அவன் எடுக்கவேயில்லை. போனை மறந்துவெச்சிட்டு எங்கேயாவது போயிருப்பான். அவனேக் கூப்பிடுவான் என்று கொஞ்சம் அசால்டாக விட்டுவிட்டான்.    

“பேசாம நம்மளும் வீட்டுக்கு போயி நல்லாத் தூங்கி எந்திரிச்சி யோசிப்போம். காலையில இருந்து ஒரு வழியாயிட்டேன்………. என் காதலுக்கு கூட இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன் போல இருக்கே…… ஒரே நாள்ல தண்ணி குடிக்க வைக்கிறாங்க”, என்று அவனுக்கு அவனே நொந்து கொண்டான். 

அங்கே அண்ணாமலை வீட்டில் தேவிகா ஆகாஷை நன்கு கவனித்து கொண்டார். காலையில் இருந்து வாடியிருந்த அவன் வயிற்றை மீண்டும் வாடாமல் பார்த்துக்கொள்ள மனமும் சற்று அமைதியானது.

சீக்கிரமே உறங்கி விட்டான்……. சீக்கிரம் உறங்கியதால் விழிப்பும் அதிகாலை ஐந்து மணிக்கே வந்துவிட்டது. 

விழிப்பு வந்தவுடன்……… இங்கேயே இப்போதே விழித்திருந்து என்ன பண்ணுவது என்று நினைத்தவன், அப்படியே காலாற நடக்கலாம் என்று முடிவெடுத்து வீட்டின் முன்னே இருந்த வாட்ச் மேனிடம் சொல்லி வெளியே இறங்கினான்.

மணி அப்போது அதிகாலை ஐந்து பத்து என்று காட்டியது. இன்னும் விடியவில்லை. இரவின் வெளிச்சம் மிச்சமிருக்க அந்த ரம்மியமான சூழலை அனுபவித்துக்கொண்டே நடந்தான்.

“ச்சே! இந்த கனிமொழி வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சாலாவது அந்த பக்கமா நடந்து அவ கண்லப் படறாளான்னு ஒரு முயற்சி பண்ணியிருக்கலாம். ஆனா வீடு எங்கன்னு தெரியாதே……”,

செந்திலுக்கு ஒரு போனை போட்டு கேட்போமா என்று பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவன் ஒரு ஆறு மணியாவது ஆகட்டும் கூப்பிடலாம் என்று மீண்டும் அதைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

அங்கங்கே சில வீடுகளின் வாசல்களில் பெண்கள் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். “இன்னும் அஞ்சரை மணி கூட ஆகலை அதுக்குள்ள…… நம்ம பொண்ணுங்க நம்ம பொண்ணுங்க தான்”, என்று சிலாகித்துக்கொண்டே மெயின் ரோட்டிற்கு வந்தான்.

அங்கே அந்த டீக்கடை இருக்கிறதா என்று பார்க்க, அப்போதுதான் டீக்கடைக்காரன் கடையைத் திறந்துக் கொண்டிருந்தான்.

அவன் அங்கே செல்லலாம் என்று கால்களை நகர்த்திய போது….. அங்கு இருந்த பேருந்து நிலையத்தை பார்க்க…….

பார்த்தவன், “அது யார் கனிமொழியா”, என்று அதிர்ந்தான். சற்று தூரத்தில் இருந்தது பேருந்து நிறுத்தம். முகம் நன்றாகத் தெரியவில்லை என்றாலும் அவளின் பெரிய வயிறும் நேற்றுக் கட்டியிருந்த அதே புடவையும் அது அவள் தான் என்று அவனின் உள் மனதிற்குச் சொன்னது.

வேகமாக அவன் நடையை எட்டிப் போட்டான். அவன் பக்கத்தில் நெருங்க நெருங்க அது கனிமொழிதான் என்று உறுதியாயிற்று.

அதற்குள் ஒரு பேருந்து வர, அவள் அதில் ஏறுவது தெரிந்தது. தம் பிடித்து ஓடி பேருந்து நகர நகர அதில் ஏறிக்கொண்டான்.

அவன் ஆசுவாசப்படுத்தி நிமிர்ந்து அவள் எங்கே என்று தேடினான்.  பேருந்தில் அதிகம் பேர் இல்லை. பூ மூட்டைகளும் காய்கறி மூட்டைகளும் தான் அதிகம் இருந்தன, ஆட்கள் ஒரு ஏழெட்டு பேர் இருந்தனர். அவள் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தாள்.

கண்டக்டர் வந்து இவனிடம், “எங்கே”, என்று டிக்கெட் கொடுப்பதற்காக கேட்க….. இவனுக்கு எங்கே என்று தெரியவில்லை.

“இந்த பஸ் எங்கப் போகுதோ அங்க ஒண்ணு குடுங்க”, என்றான்…….

கண்டக்டர் அவனை விசித்திரமாய் பார்த்தபடி டிக்கெட்டை கொடுத்தார். அவன் பார்வை முழுவதும் கனிமொழி மேலேயே இருந்தது. அவள் முன் போய் நின்று எங்கேப் போகிறாள் என்று கேட்போமா என்றுக் கூட நினைத்தான்.

அவன் உள் மனது சொல்லிற்று ஏதோ பிரச்சனைக் காரணமாக தான் அவள் எங்கோ செல்கிறாள். இப்போது அவள் முன் சென்று நின்று பயமுறுத்த வேண்டாம். அவள் எங்கேப் போகிறாள் என்று பாப்போம் என்று நினைத்தவன் மனது…… இருந்தாலும் எட்டு மாதக் கர்ப்பிணியான அவள் இந்த நேரத்தில் செல்வது மனதுக்கு சரியாக படாததால் உடனே செந்திலுக்கு அழைத்தான்.

அவனின் நேரம் உறங்கிக்கொண்டிருந்த செந்திலையும் ராஜியையும் அது எழுப்பவில்லை. மறுபடியும் அழைத்திருந்தால் அவர்கள் எழுந்திருப்பர்களோ என்னவோ இன்னும் சற்று நேரம் பொறுத்து அவனை அழைக்கலாம் என்று விட்டுவிட்டான். அது தான் அவன் செய்த தவறு.

ஒரு அரைமணி நேரப் பிரயாணத்திற்கு பின் கனிமொழி இறங்க…….. இவனும் அவளின் பின்னேயே இறங்கினான்.

அவள் இறங்கியப் பிறகு பின்னோடு இறங்கிய ஆகாஷும் கனிமொழியின் கண்களில் பட…….. இவன் எங்கே இங்கே என்று ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.   

“நீங்க எங்க இங்க?”, என்றாள் கோபமாக.

“நீ எங்க இந்த நேரத்துல தனியா இங்க”, என்று அவளைப் பார்த்து சற்று அதட்டலாக கேட்டான் ஆகாஷ்.

அவனை பார்வையாலேயே எரித்தவள், “என்னை உயிரோட கொல்ல எத்தனை பேர்டா கிளம்பியிருக்கீங்க”, என்று ஆவேசமாகக் கேட்டவள்……. வேகமாக நடையை எட்டிப் போடத்  துவங்கினாள்.

“என்ன வார்த்தைகள் இது”, என்று அதிர்ந்தவன்…….. ஏதோக் கொஞ்சம் பெரிய பிரச்சனை தான் என்று கணித்தான்.

அவளின் வேகத்தைப் பார்த்து பயந்தவன், “கனி நீ இப்போ இவ்வளவு வேகமா எல்லாம் நடக்கக் கூடாது! குழந்தைக்கு ஆகாது! மெதுவா போ!”, என்று சொல்ல…….

குழந்தையின் பேரைக் கேட்டதும் அவளின் நடை சற்று தளர்ந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஒன்றும் பேசாமல் ஆகாஷும் அவளைத்  தொடர்ந்தான்.

மெதுவாக அங்கிருந்த ஏதாவது போர்டில் அந்த ஊரின் பேர் தெரிகிறதா என்று பார்க்க, “புதன் சந்தை”, என்றது.

செந்தில் போனை எடுக்காததால், “மீ அண்ட் கனி அட் புதன் சந்தை! டோன்ட் நோ வேர் ஷி கோ! மீ ஃபால்லோ ஹெர்!”, என்று ஒரு மெசேஜை செந்திலுக்கு தட்டி விட்டவன்……. “டெல் யுவர் மாமனார்”, என்று மறுபடியும் ஒரு மெசேஜ் கொடுத்தான். அவனை அண்ணாமலை எங்கே என்று தேடுவார் என்பதால்.

அவன் மெசேஜ் கொடுத்துக்கொண்டும் கனியை தொடர்ந்து கொண்டும் இருந்ததால் சுற்றுப் புறத்தை கவனிக்கத் தவறினான்.

கனியைப் பார்த்த ஒரு நபர் யாருக்கோ உடனே போன் செய்து, “அண்ணே! அந்த வீட்டு மருமகப் பொண்ணு தனியா இப்போ அவங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கு!”, என்று சொன்னான்.

“தனியா இருக்கா.. நல்லாத் தெரியுமா?”, என்றான் எதிர்புறம் இருந்தவன்.  

அவன் கனியை பார்க்கும் போது அவள் தனியாக தான் நடந்து சென்று கொண்டிருந்தாள். ஆகாஷ் சற்று இடைவெளி விட்டு வந்ததால் அவளோடு வருவது போல தெரியவில்லை.

“அண்ணே தனியாத் தான் போகுது!”,

இதற்கு ஆகாஷின் காதுகளில் அந்த வார்த்தை விழுந்தது. அவன் அது கனியை பற்றி என்று அனுமானிக்கவில்லை.  

“இந்த நேரத்துல எதுக்குடா அவ தனியாப் போறா?”, என்று எதிர்புறம் கேள்வி கேட்க….

“அண்ணே அந்தப் பொண்ணை போட்டுடலாம்னு, அவங்க குடும்பத்துல யாரும் உயிரோட இருக்கக் கூடாதுன்னு நேத்துத் தான் சொன்னீங்க……… அந்த பொண்ணு வசமா வந்து சிக்கியிருக்கு. அது எதுக்கு வருது, என்ன ஏதுன்னு பார்க்காம காரியத்தை முடிப்பீங்களா”, என்று இவன் சொல்ல………

“எப்படியும் அவ வீட்டுக்கு தாண்டா போவா…….. நாங்க இப்போ வர்றோம்”, என்று எதிர்முனையில் போன் வைக்கப்பட்டது.

சொன்னதுடன் வேலை முடிந்தது, நாம் இங்கே இருக்க வேண்டாம் என்று அந்த சொன்னவன் நினைத்தானோ என்னவோ வந்துக் கொண்டிருந்த பஸ்ஸில் ஒரே தாவாக தாவி ஏறி போய்விட்டான்.

அவன் ஏறியதையும் ஆகாஷ் பார்த்தான்………. “எப்படி ஓடற பஸ்ல இப்படி ஏறுறான்”, என்று வேறு நினைத்துக்கொண்டான்.

அது வரை மெயின் ரோட்டில் நடந்துக் கொண்டிருந்த கனிமொழி ஒரு கிளை ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் அதிக தூரம் செல்லவில்லை. அங்கே தனியாக ஒரு பெரிய வீடு இருந்தது.

சுற்றிலும் காம்பவுண்ட் இருந்தது. அதை தாண்டி எல்லாம் வயல்கள். நடுவில் வீடிருக்க வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தது. முன்னிருந்த கேட்டை திறந்து உள்ளேப் போனவள் முன் இருந்த திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டாள். வீடு பூட்டியிருந்தது.

வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தான் ஆகாஷ்.

“நான் எங்கே வந்திருக்கேன்னு தெரிஞ்சிக்க தானே பின்னாடியே வந்தீங்க. இதுதான் என் வீடு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து பண்ணையாளுங்க வீட்டை தொறந்துடுவாங்க. நான் உள்ள போயிடுவேன். நீங்க இப்படியே தயவு பண்ணி கிளம்பறீங்களா”, என்றாள்.

ஆகாஷ் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இடத்தை விட்டும் நகரவில்லை.  இப்போது சற்று நேரமாகி விட்டதால் செந்திலுக்கு அழைத்தான். அப்போதுதான் எழுந்த செந்தில் இவனின் மெசேஜை பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன தெரியவில்லையே?”, என்று செந்தில் பதட்டத்தோடு நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆகாஷின் அழைப்பு வர அவசரமாக எடுத்தான்.

“என்னடா நடக்குது?”,

“தெரியலை! நான் காலையில சும்மா நடக்கலாம்னு வந்தேன்! வந்தா கனி பஸ் ஏறினா! நானும் பின்னாடியே ஏறிட்டேன்! இங்க வந்து இறங்குனவ, இது எங்க வீடு கொஞ்ச நேரத்துல வேலைக்காரங்க வந்துடுவாங்கன்னு உட்கார்ந்திருக்கா!!!!!”,

“அது அவ புருஷன் வீடுடா! அங்க யாரும் இப்போ இருக்கறது இல்லை! வேலைக்காரங்க வந்து சுத்தம் பண்ணுவாங்க, அவ்வளவு தான். இவ ஏன் அங்கப் போய் உட்கார்ந்திருக்கா தெரியலையே”, என்றவன்……

“நான் இப்போவே கிளம்பி அங்க வர்றேன்”, என்று போனை வைத்தான்.

அங்கே கனியைக் காணோம் என்று அசோக்கின் வீடும் அல்லோல கல்லோலப் பட…. அசோக் செந்திலுக்கு அழைக்க…….. அவள் இருக்குமிடம் சொன்னவன், “கிளம்பி வா, போகலாம்”, எனவும்………

அவசரமாக அண்ணாமலையின் வீடு சென்று அவரின் சுமோவை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனிக்க……….

அவர்களின் அவசரத்தை பார்த்து என்னவோ ஏதோவென்று பதறிய அண்ணாமலையும், “நானும் வர்றேன்”, என்றுக் கூட கிளம்பினார்.

செந்திலிடம் போன் பேசிமுடித்த ஆகாஷ்……. அவனும் கேட்டைத் திறந்து உள்ளே போனான். “இங்க எதுக்கு வர்றீங்க”, என்று கோபமாக கனிமொழி கேட்க…….

பதில் பேசாமல் அவனும் திண்ணையில் அமர்ந்தான்.

“சொல்றவங்களை பார்த்தா மனுஷங்களாவே தெரியலையா! கிளம்புங்கன்னு சொன்னேன்!”, என்றாள் எரிச்சலாக.

எதற்கும் அசையவில்லை ஆகாஷ்.

“ப்ளீஸ்! ஏற்கனவே நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்! நீங்களும் என்னை தொல்லை பண்ணாதீங்க”, என்றாள்.

“இப்படி வீட்டை விட்டு எங்கேயாவது விடியற்காலையில சொல்லாம கொள்ளாம வர்ற அளவுக்கு என்ன டென்சன்”, என்றான்.

“நான் எங்கேயாவது வரலை என் வீடுக்கு தான் வந்திருக்கேன்”.

“அதுதான் ஏன்னு கேட்கறேன்”,

“உங்ககிட்ட சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா”,

“சொல்லித்தான் பாரேன், ஏதாவது சொல்யுசன் இருந்தா சொல்றேன்”,

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்னு எதிர்பார்க்கறீங்க”, என்றாள் கோபமாக….

“ஏன் சொல்லக்கூடாது…… நேத்து என்ன கேட்டேன் நான்………. உனக்கு எத்தனை மாசம், எப்போ டெலிவரின்னு தானே கேட்டேன்! அதுல என்ன தப்பிருக்கு! ஒரு அக்கறையில கேட்டேன்”,

“அதுக்கு ஏன் நீ அப்படி ஒரு சீனைப் போட்ட……… நான் இனிமே இங்கேயே வரமாட்டேன்னு! அப்படி நான் உன்னை என்ன செஞ்சேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னா சொன்னேன்!”,

“ஒஹ்! உங்களுக்கு அந்த நினைப்பு வேற இருக்கா”, என்று ஆத்திர மிகுதியில் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.

“சோ சாரி! இது உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்! இருந்தாலும் சொல்றேன்! எனக்கு இப்போதைக்கு அந்த நினைப்பை விட்டா வேற நினைப்பே கிடையாது!”, என்றான் சீரியஸாக.

“உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா! ஒரு கல்யாணமான பொண்ணுகிட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு தெரியாதா! என் கணவர் இப்போ உயிரோட இல்லைன்னா என்ன? அவர் கட்டின தாலி என் கழுத்துல இல்லைனா என்ன?…….”,

“அதனால நான் அவர் மனைவி இல்லைன்னு ஆகிடுவனா…….. இல்லை அவர் என் கழுத்துல தாலி கட்டினது தான் இல்லைன்னு ஆகிடுமா”, என்றாள் ஆக்ரோஷமாக.

அவளை மிகவும் கோபப்படுத்தி விட்டது ஆகாஷிற்கு நன்கு புரிந்தது. அவனை பேசவே விடாமல் மேலே மேலே பேசிக்கொண்டே போனாள். ஒரு மாதிரி வெடித்தாள் என்றே சொல்ல வேண்டும். அழுகை ஒருபக்கம் வர, மறுப்பக்கம் வார்த்தைகள் கரை புரண்டு ஓடியது………… நிறுத்தவே முடியவில்லை. 

நேற்றிலிருந்து அவளின் வீட்டில் அவள் அனுபவித்த மன உளைச்சல் அவளையும் மீறி வார்த்தைகளை விட வைத்தது.   

“விடியற்காலையில எதுக்கு சொல்லாம கொள்ளாம இந்த வீட்டை தேடி ஓடிவந்தேன்னா இது தான் காரணம். இப்படி தான் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக் கொடுக்க போற வீட்ல அந்த மாப்பிள்ளைக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கானாம்…….”,

“அவனுக்கு கல்யாணமாகி மனைவியோட ஏதோ ஒரு பிரச்சினையில விவாகரத்து ஆகிடுச்சாம். என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லி அவங்க எங்கப்பாம்மா கிட்ட பிரஷர் பண்றாங்க. அதனால எங்கப்பாவும் நீ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும் கல்யாணம் பண்ணிக்கோங்கறாங்க”.

“இப்படி தான் எனக்கு நடந்த கல்யாணத்தப்போ எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை. சொத்திருக்கு ஒரே பையன். நல்ல பையன். ரெண்டு மூணு வருஷமா என்னவோ எந்த மாப்பிளையும் அமையாம தட்டிப் போகுது….. மாப்பிள்ளை பார்க்கத் தான் சுமாரா இருக்கார், ஆனா நல்ல குணவான்……. அது இதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வெச்சாங்க……”,

“ஆனா அந்த நல்ல பையன்……. நல்ல குணவான்…… என்ன பண்ணினாங்க? அவங்க அப்படித்தானான்னு நான் ஒரு முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே என்னை அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாங்க….”,  

“அவர் இறந்து எட்டு மாசம் தான் ஆகுது…. ஆனா இப்போ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கோ அப்போ தான் உன் தங்கச்சி கல்யாணம் நல்ல படியா நடக்கும்னா…….?”,

“அப்படி  காம்ப்ரமைஸ் பண்ணி அந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்னு என்ன? கல்யாணத்துல சீர்வரிசையை தான் டிமேன்ட் பண்ணுவாங்கன்னு பார்த்தா….. இவங்க ஒரு உயிருள்ள மனுஷியான என்னை டிமேன்ட் பண்ணியிருக்காங்க……”,

“ச்சே! ச்சே! இவங்கல்லாம் மனுஷங்களா! நேத்து ஈவினிங் ஃபுல்லா எங்கப்பாம்மாகிட்ட சொல்றேன்……… புரிஞ்சிக்காம யோசி யோசின்னு சொல்றாங்க! அதான் எங்க வீட்டுக்கே வந்துட்டேன்! எனக்கென்ன வீடு இல்லையா…. வாழ வழியில்லையா?”,  என்றாள் அழுகையோடே ரோஷமாக.    

“அவர் வீட்ல இருக்கறதுனால தானே எனக்கு பிரஷர் குடுக்கறார் எங்கப்பா! அதான் நான் எங்க வீட்டுக்கே வந்துட்டேன்!”,    

“இங்க வந்தா என் பின்னாடியே பிசாசு மாதிரி வந்து நீயும் அதையே சொல்ற…… நான் வாழறதா? சாகறதா?”, என்று வார்த்தையால் ஆகாஷை கொன்றாள்.   

ஆகாஷ் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான். வார்த்தைகளில் அவளின் வலி தெரிந்தது. “இந்த வலி அவளை என்னிடம் இருந்து விலக்கி விடுமா”, என்று ஆகாஷிற்கு பயமாக இருந்தது. 

அந்த நேரம் பார்த்து சரியாக இன்டிகா காரில் மூன்று பேர் வந்து இறங்கினர்.

இறங்கியவர்கள் கனிமொழியோடு ஆகாஷ் இருப்பதை பார்த்ததும், எடுத்த காரியத்தை முடிப்பதா இல்லை பின்வாங்குவதா என்று ஒரு நிமிடமே யோசித்தனர். பின்பு மீண்டும் இதுபோல சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று நினைத்து கனிமொழியோடு சேர்த்து ஆகாஷையும் போட்டு விடலாம் என்று முடிவெடுத்து அவர்களை நெருங்கினர்.

கனிமொழியைப் பார்த்தான் ஆகாஷ் அவளுக்கு தெரிந்தவர்களோ என்று…… அவளும் அவசரமாக கண்களை துடைத்து அவர்கள் யார் என்ற ஐயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் முகபாவனையை பார்த்தே அவர்கள் யார் என்பது அவளுக்கும் தெரியாது என்று புரிந்துக் கொண்டான்.

அவர்கள் நடந்து வரும்போதே ஏதோ விபரீதமாக தோன்ற….. கனிமொழியை மறைத்து நின்றவன், “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?”, என்றான்.

“எங்களுக்கு அந்த பொண்ணுத் தான் வேணும்! நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துட்டுப் போயிட்டான்னா உயிர் தப்பிப்ப! இல்லைனா அவளோட சேர்ந்து நீயும் இங்க சமாதியாகிடுவ! எப்படி வசதி?”, என்று பேசிக்கொண்டே அருகில் நெருங்கி விட்டனர்.

கனிமொழி பெண் என்பதால் அதிக ஆயுதமெல்லாம் அவர்களின் கைகளில் இல்லை. ஒருவன் மட்டுமே கத்திக்கும் சேராமல் அருவாளுக்கும் சேராமல் ஒரு ஆயுதத்தை கையில் வைத்திருந்தான்.

மற்ற இருவரும் வெறும் கையோடு தான் இருந்தனர்.

கனிமொழி பயந்து ஆகாஷின் பின்னே ஒண்டினாள். யார் இவர்கள் என்னை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளின் மனதுக்குள் ஓடியது. அவள் பயந்து தன் பின்னே ஒண்டியதைப் பார்த்த ஆகாஷ் ஆதூரமாக அவளின் கையை பிடித்துக்கொண்டான்.

அவர்களை அளவெடுத்த ஆகாஷ்……. இப்போதைக்கு அவர்களுடன் போராடுவது புத்திசாலித்தனமல்ல என்றேத் தோன்றியது.

அந்த நேரத்திலும் கனி கையை விலக்கி கொள்ளவே விரும்பினாள், ஆகாஷ் விடவில்லை. முடியாதென்று தெரிந்து முயற்சியை கைவிட்டாள்.    

அவன் அவர்களுடன் போராடும் சமயம் எவனாவது ஒருவன் வந்து கனிமொழியை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. மூன்று பேரை அடித்து வீழ்த்தும் தைரியம் இருந்ததுதான். அடித்துவிட்டாலும் வேகமாக கனிமொழியை கூப்பிட்டுக்கொண்டு இடத்தை விட்டு போக முடியாது! எட்டு மாத கர்ப்பிணி அவள்!  

யோசித்த ஆகாஷ் அவர்களிடம் பேச ஆரம்பித்தான்…….. “எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தர்றேன்! அவளை விட்டுடுங்க! ஒரு கோடி இல்லை, ரெண்டு கோடி”, என்று அவன் பேரம் பேச ஆரம்பிக்க……

ஆயுதம் வைதிருந்தவனை தவிர மற்ற இருவரின் கண்ணிலும் ஆசை தெரிந்தது. தெருக்கோடியை தவிர வேறு கோடி தெரிந்திராத அவர்களுக்கு…….. கோடி என்பது பெரிய விஷயம். அவர்களின் கண்களில் ஆசை தெரிந்தது.

அவர்கள் இருவரும் வெறும் ஐம்பதாயிரம் பணத்திற்கு வந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். உடனே அவர்கள் பின்னோக்கி செல்லவில்லை என்றாலும் முன்னேறவில்லை.   

ஆயுதம் வைத்திருந்தவன் கண்களில் இருந்த வெறி மட்டும் மாறவில்லை. அவனுடன் வந்தவர்கள் பின்வாங்கவும் அவனுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. இவன் ஒருவனை சமாளித்தால் போதும் என்று ஆகாஷ் எண்ணிக்கொண்டிருக்கும்போதே,

அண்ணாமலையின் சுமோ வந்து நின்றது. ஆட்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடனே கூட இருந்த இருவரும் காம்பவுண்ட் சுவரை நோக்கி ஓடினர். ஆகாஷ் அவர்கள் வந்துவிட்டார்கள் இனி பயமில்லை என்று ஒரு நொடி அசால்டாக இருக்க….

அந்த நொடியில் அவன் வயிற்றில் அந்த ஆயுதத்தை சொருகிவிட்டு அந்த மற்றொருவனும் ஓட்டம் பிடித்தான்.

“அம்மா!!!!!!!!!”, என்ற ஆகாஷின் அலறல் வந்த பிறகே அந்த ஆயுதம் அவன் வயிற்றில் இருந்ததை கனிமொழியும் பார்த்தாள், வண்டியில் இருந்து இறங்கிய செந்தில், அசோக், அண்ணாமலையும் பார்த்தனர்.

ஆகாஷின் வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட அவன் மயக்கத்துக்கு சென்றுக் கொண்டிருந்தான். அவன் கனிமொழியின் மீதே சாய அவன் பாரத்தை தாங்க முடியாமல் தாங்கினாள்.

“ஐயோ! என்ன இது?”, என்று கத்திக்கொண்டே செந்தில் வந்து பிடித்துக்கொண்டான்.

எல்லோரும் ஆகாஷை நெருங்கி அவனை கவனிக்க…….. அந்த மூவரும் அதற்குள் தப்பி இருந்தனர். அவர்கள் வந்த வண்டி மட்டுமே இருந்தது.

ஓடி வந்த அண்ணாமலை, “ஆகாஷ்”, என்று கத்திக்கொண்டே அவன் வயிற்றில் இருந்த கத்தியை பிடுங்கினார். அவர் பிடுங்கியதும் ரத்தம் இன்னும் அதிகமாக பீறிட்டு வர……. தன் சட்டையை கழற்றி இறுக்கமாக காயத்தை கட்டினார்.

அதுவரை ஆகாஷை  தாங்கியிருந்த  செந்தில் அவனைத் தூக்க முற்பட அவன் கை ஒத்துழைக்காததால் தூக்க முடியவில்லை. அவன் முயற்சிக்கும் போதே அண்ணாமலைஆகாஷைத் தூக்கி தோள் மேல் போட்டவர்…….. வண்டியை நோக்கி விரைந்தார்……. “வண்டியை எடுங்க”, என்று கத்திக்கொண்டே.   

அசோக் வண்டி எடுக்க ஓடினான். கனிமொழி அதிர்ச்சியில் அவர்களோடு  போகவேண்டும் என்ற உணர்வு கூட இன்றி நின்றாள்…. அசோக்கின் பின்னேயே கனிமொழியின் கையை பற்றி செந்தில் வேகமாக போனான்.

அசோக்கின் கைகளில் வண்டி ஹாஸ்பிடல் நோக்கி பறந்தது.  

அசோக்கின் எண்ணம் பின்னே சென்றது…… இப்படி யாராவது ஒருவரை வண்டியில் தூக்கிக்கொண்டு   ஓடுவதே வேலையாகப் போயிற்று என்று………

ஒரு இரவில் இப்படித்தானே செந்திலை தூக்கி போட்டுக்கொண்டு ஓடினோம்….. அதே மாதிரி கனியின் கணவன் வெட்டுப்பட்டு கிடந்த போதும் இப்படித்தான் வண்டியில் தூக்கி போட்டுக்கொண்டு ஓடினோம்……… ஒருவன் பிழைத்தான், மற்றொருவன் பிழைக்கவில்லை………   

என்ன சாபமோ இது?????

அவனுக்கு ரொம்பவும் பயமாக இருந்தது.

ஏன்? என்ன? என்று யாரும் எதுவும் பேசவில்லை…… கனியிடமும் கேட்கவில்லை. இப்போதைக்கு ஆகாஷின் உயிர் மட்டுமே முக்கியமாக தெரிந்ததால், அவன் பிழைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக்கொண்டு செந்திலும் அண்ணாமலையும் அமர்ந்திருந்தனர்.    

நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் கனிமொழியின் கண்களில் இருந்த நீர் கூட நின்றிருந்தது.  

வெறித்து அமர்ந்திருந்தாள்……. ஆகாஷ் உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.  

இப்படித்தானே அவரையும் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடினோம் என்ற நினைவுகளே அதிகமாக இருந்தது.

அன்று அவளின் கணவனின் உயிர் அவளின் மடியில் அடங்கியது இன்றும் ஞாபகத்தில் இருந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் தன் கணவனின் உயிர் பிரிவதை அன்று பார்த்து அமர்ந்திருந்தாள்.

அந்த நினைவுகளோடே ஆகாஷை பார்த்திருந்தாள்.

எங்கிருந்து வந்தான் இவன் என்று மிகவும் அதிர்ந்திருந்தாள்.

ஆகாஷோ பாதி மயக்கமான அந்த நிலையிலும்…… நான் வாழறதா? சாகறதா? என்ற அவளின் வார்த்தைகள் தந்த வலியில்……. அவன் நினைவலைகளில்,

“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே……….                                                                   என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே………  ”

 என்றே இருந்தான்.

Advertisement