Advertisement

அத்தியாயம் மூன்று:

செந்திலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. “ஆகாஷ் என்ன பேசற நீன்னு தெரிஞ்சு தான் பேசறியா இது தப்பு…….”,

“எது தப்பு?”,

“நீ இப்படி அவ நெத்தில பொட்டில்லாம இருக்கறது உன் பிரச்சனை சொல்றது தப்பு. அவ நெத்தில பொட்டிருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன?”,

“எனக்கு அது தெரியுது! ஆனா எனக்கென்னன்னு என்னால விட முடியலை!”,

“ஏண்டா ஏன்” என்ற செந்திலின் கேள்விக்கு பதிலே இல்லை ஆகாஷிடம்.  

“இதை நீ அவ கிட்ட வேற போய் சொல்லி வெச்சிருக்க………. உன் மண்டையை உடைக்காம விட்டாளேன்னு சந்தோஷப்படு! ரொம்ப பெண்ணியம் பேசுவா  கனிமொழி…….. ஆண்களுக்கு பெண்கள் குறைஞ்சவங்க இல்லை அது இதுன்னு….. கையும் நீளம், எப்பவும் ஏதாவது பிரச்சனை கொண்டுவந்துடுவா! நானும் அசோக்கும் தான் பஞ்சாயத்துக்கு போவோம்”.

“இப்போ கூட மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்கூல்ல தான் வேலை பார்த்துட்டு இருந்தா. அங்க எவனோ ஒருத்தன் உங்களுக்கு வாழ்க்கை குடுக்கறேன் அது இதுன்னு உளறி இருக்கான்”.

“நீ யாருடா எனக்கு வாழ்க்கை குடுக்கன்னு கைல கிடைச்சதை எடுத்து அவன் மண்டையை உடைச்சிட்டா….. அது போலிஸ் கேஸ் ஆகமா இருக்கறதுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா செலவு பண்ணினோம். அதுவுமில்லாம அவன் ட்ரீட்மென்ட் செலவை வேற ஏத்துகிட்டோம்……”,

“அவங்கப்பாவும் அசோக்கும் ரொம்ப பயந்துட்டாங்க. அவங்களுக்கு போலீஸ் அது இதுன்னா பயம். அவங்க வீட்ல யாரும் எந்த பிரச்சனைக்கும் போக மாட்டாங்க. இவ அப்படியே தனி அவங்க வீட்ல……. ஏதாவது பிரச்சனையை இழுத்துட்டு வந்துடுவா! எதுக்கும் பயமே கிடையாது!”,

கேட்க கேட்க ஆகாஷின் முகம் புன்னகையில் விரிந்தது. “சரியான ரவுடி ரங்கம்மாவா இருப்பா போல இருக்கே நம்மாளு”,   

“நீ இப்போ தான் காலைல அவளைப் பார்த்துட்டு, எத்தனை மாசம்ங்கற, எப்போ டெலிவரிங்கற. ஒரு அக்கறையில கூட கேட்கலாம் தப்பில்லை! ஆனா இந்த மாதிரி உரிமை எடுத்து பேசறது அவளுக்கு பிடிக்காது…..”,

“ரொம்ப கோபம் வேற வரும்! பாரு, ஒரே நிமிஷத்துல நான் இங்க இனிமே வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா! அதனால இந்த மாதிரி இனிமே பேசாத!”,

“ஏன், அவளுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியமா?”.

“ச்சே! ச்சே! வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கறதுக்கு ஒரு சேஞ்க்கு வந்துட்டு போறா! வீட்ல இருந்தா இவளைப் பார்த்து இவங்கப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படறாங்க. இவளோட இந்த நிலைமையை பார்த்து கவலைப்பட்டு அவங்க உடம்பு கெடுதுன்னு தான் இவ வீட்ல இருக்காம வேலைக்கு வர்றா”, 

“வெளில அனுப்பினாலும் பிரச்சனையை இழுத்துட்டு வந்துடறா! சரி நீ இங்க வான்னு நான் தான் கூப்பிட்டேன்”,

“நம்ம இடம்ன்றதால எப்போ வேணா வருவா எப்போ வேணா போவா! அசோக் வீடு கொஞ்சம் வசதிதான்! இவளை வெச்சு பார்க்க முடியாத அளவுக்கு இல்லை. அதுவுமில்லாம இவளைக் கல்யாணம் பண்ணி குடுத்த வீடும் ரொம்ப வசதி தான்”.

‘அந்த பையனுக்கு அம்மா இல்லை அப்பா மட்டும் தான் ஒரே பையன். பையன் இறந்ததுமே அப்பா ரொம்ப நாள் இருக்க மாட்டோம்னு தெரிஞ்சிகிட்டாரோ என்னவோ அவங்க குடும்ப வாரிசு கனி வயித்துல வளருதுன்னு தெரிஞ்சவுடனே எல்லா சொத்தையும் இவ பேருக்கு மாத்திட்டார். அவரும் அதுக்கப்புறம் ஒரு ரெண்டு மாசத்துலயே இறந்துட்டார்”.

“அவ இப்போ மட்டுமில்லை எப்பவுமே வேலைக்கு போகனும்னு அவசியமில்லை. அவ பேர்ல இருக்கற சொத்தை கட்டிக் காப்பாத்தவே அவ தனியா ஆள் வெக்கணும்”.

“ஆமா நீயேன் இப்படி அவளை பத்தி துருவி துருவி கேட்கற?”,

“ம்! என் பொது அறிவை வளர்த்துக்கலாம்னு தான்”, என்றான் நக்கலாக……

“காலையில என் கூட பேசும்போது நல்லாத் தானே இருந்த, அதுக்கப்புறம் என்ன ஆச்சு உனக்கு”,

“அதுக்கப்புறம் தானே அவளைப் பார்த்தேன்”,

“ஏன் ஆகாஷ் இப்படியெல்லாம் பேசற?”,

“உனக்கு நிஜமாவே நான் பேசறது பார்க்கறது எல்லாம் புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?”, என்றான் கோபமாக.

“அவன் சொல்ல வருவது அவளைப் பிடித்திருக்கிறது என்றா??????? அதற்கும் மேலேயா???????”,  

ஆகாஷின் கோபம் செந்திலுக்கு வித்தியாசமாக பட்டது. எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்காதவன் ஆகாஷ்…….. அவனை இந்த மாதிரி நிதானம் இழக்க செய்கிறதென்றால்…..

“நீ தெளிவா பேசு! புரியலையா? நடிக்கிறியா? இதெல்லாம் வேண்டாம்!”, என்றான் செந்திலும் சீரியசாகவே.

“சாரி, ஹர்ட் பண்ணிடனா”,

“ப்ச்! அதை விடு நீ மேட்டரை சொல்லு”,

“நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன்”, என்றான்.

ஓரளவு ஆகாஷின் பேச்சுக்களை வைத்து செந்தில் அனுமானித்து இருந்ததால் வியப்பெதுவும் இல்லை.  நல்ல விஷயம் தான், ஆனால் கனிமொழி??????

“காலையில தான் அந்த பொண்ணை பார்த்த, அதுக்குள்ள உன்னை இந்த முடிவு எடுக்கத் தூண்டினது எது……”, என்றான் ஆகாஷை கேள்வியாகப் பார்த்து.

“எதுன்னு ஆராய்ச்சி பண்ற நிலைமையில நான் இல்லை. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்”.

“நீ சொல்றது அவ சாதாரண பொண்ணுன்னா பரவாயில்லை. ஆனா ஏற்கனவே அவ கல்யாணம் ஆனவ. கணவனை இழந்தவ. இன்னும் ஒரு மாசத்துல அவளுக்கு குழந்தை பொறக்கப் போகுது. புருஷனை இழந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலை, அதுவும் குழந்தைப் பிறக்க போகிற இந்த நிலமையில………… நாம எதுவும் பேசமுடியாது!”,

“அதுவுமில்லாம அசோக்கோட ரெண்டாவது தங்கச்சிக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்….. இப்போலாம் பேச முடியாது”,

“அவங்க வீட்ல எத்தனை பேர்?”,

“அப்பா, அம்மா, அசோக், கனி, இவ இல்லாம இன்னும் ரெண்டு தங்கச்சிங்க”,

“ஒஹ்! மூணு பொண்ணுங்களா! அந்த பொண்ணுக்கு கல்யாணம் இருந்தா இவ கல்யாணம்  நடக்கக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? அவங்க எதுவும் பண்ண வேண்டாம், எல்லாம் நம்மளே பார்த்துக்கலாம், நீ பேசு”, என்று விடாமல் காரியத்திலேயே குறியாய் இருந்தான்.

“டேய்! இப்போ பேச முடியாதுடா! அசோக் தங்கச்சி கல்யாணமாவதுமுடியட்டும்”,

“ஏன் பேசமுடியாது, இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை”,

“உனக்கு இல்லை, அவங்களுக்கு இருக்கலாம் இல்லையா”,

“பேசலாம்! பேசறதுக்கு முன்னாடியே நாம எதுக்கு அது இதுன்னு நினைக்கணும்”,

“பேசினாலும் இது வொர்க் அவுட் ஆகும்னு எனக்கு நம்பிக்கையில்லை! அவ கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு எனக்குத் தோணலை. முதல்ல நடந்த கல்யாணத்துக்கே ரொம்ப சிரமப்பட்டு தான் அவகிட்ட சம்மதம் வாங்கினாங்க”.

“இப்போதான் மூணு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தன் அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு கேட்டதுக்கு அவன் மண்டையை உடைச்சிருக்கா”,

“அது அவன் வாழ்க்கை குடுக்கறேன்னு சொன்னதுனால இருக்கும்! வாழ்க்கை குடுக்கற அளவுக்கு அவகிட்ட எந்த குறையும் இல்லையே”,

சற்றே வியப்பு தோன்றியது செந்திலுக்கு, “ஏன் அவன் மண்டையை உடைச்ச”, என்று செந்தில் கனியிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதிலும் இதுதான்.

“இவன் எனக்கு வாழ்க்கை கொடுக்கறேன்னு சொல்றான். இவன் வாழ்க்கை குடுக்கறேன்னு சொல்ற அளவுக்கு என்கிட்டே என்ன குறை இருக்கு! என்கிட்டே ஒரு குறையும் இல்லை! எவனும் எனக்கு வாழ்க்கை குடுக்க வேண்டிய அவசியமுமில்லை”,

ஆகாஷும் அதை ஒட்டியே பேசுகிறான். என்ன பேசினாலும் கேட்கும் மனநிலையில் இல்லை ஆகாஷ் என்று செந்திலுக்கு நன்கு புரிந்தது. ஆகாஷை பற்றிக் குறை சொல்வதற்கும் எதுவும் இல்லை. நிச்சயம் இந்த திருமணம் நடந்தால் கனிமொழி நன்றாக இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இதை இப்படியே கனிமொழியிடம் சொல்ல முடியாது, “ஏன் இப்போ நான் என்ன நல்லாயில்லை”, என்று கேட்பாள்.

“என்ன பண்ணலாம் சொல்லு?”, என்று செந்தில் ஆகாஷிடம் கேட்க…….

“எனக்கு அவளை கல்யாணம் பண்ணனும்! அதுக்கு என்ன பண்ணலாம்னு நீ சொல்லு!”, என்று திருப்பி அவனிடமே கேட்டான்.

“எனக்கு தெரியலையேடா”, என்றான் செந்தில்.

“என்னைப் பத்தி இங்க இருக்கறவங்கள்ள தெரிஞ்சது நீ மட்டும் தான்! நீதான் அவங்க வீட்ல பேசணும்”, என்றான்.  

செந்தில் யோசிக்கவும்……..

“ஏன் எனக்காக நீ பேசமாட்டியா?”,

“ச்சே! ச்சே! உனக்கு பேசாம வேற யாருக்கு நான் பேசுவேன்! ஆனா எப்படி ஆரம்பிக்கறது யார்கிட்ட பேசறதுன்னு தான் தெரியலை. நான் சொன்னாக் கட்டாயம் அவங்கப்பாம்மா அசோக் எல்லோரும் யோசிப்பாங்க, நல்ல பதிலா சொல்லுவாங்க”,

“ஆனா கனிமொழி! எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமேயில்லை ஒத்துக்க மாட்டா! ஏன்னா காலையில இங்க உன்னைப் பார்த்ததுக்கே இனிமே நான் இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா! அதுதான் ஒரே யோசனையா இருக்கு”,

“என்னவோ பிளான் பண்ணு! ஆனா என் கல்யாணத்தை மட்டும் நடத்திவெச்சிடு!”,

“பேசலாம்! முதல்ல குழந்தை பிறக்கட்டும் பேசலாம்!”, என்று அவனை சமாதானப்படுத்த விழைய……….  

“குழந்தை பிறந்ததுக்கு பிறகு அவகிட்ட பேசலாம்! இப்போவே அவங்கப்பாம்மா கிட்ட பேசலாம்! விஷயத்தை தள்ளிப் போடவேண்டாம்”, என்று ஆகாஷ் மிகவும் தீவிரமாக இருந்தான்.

செந்திலுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. காலையில் தான் அவளைப் பார்த்தான், அதற்குள் இத்தனை தீவிரமா. யோசித்து குழம்பியவன் ராஜியிடம் பேச முடிவெடுத்து தனியாக வந்து ராஜியை அழைத்தான்.

“ராஜி! இந்த ஆகாஷ்……….”, என்று ஆரம்பித்து அவன் பேசியது எல்லாம் சொன்னான். அங்கே மறுபுறம் பேச்சே இல்லை.

“ராஜி இருக்கியா?”, என்று இவன் கத்த……..

“இருக்கேன்! சொன்ன விஷயத்தை ஜீரணிக்க வேண்டாமா? இது கண்டிப்பா நல்ல விஷயம் தான்! நான் அவங்களை கூட அவங்க கல்யாணத்தில பார்த்திருக்கேன்! என்ன அழகுன்னு ரொம்பவும் வியந்திருக்கிறேன்”.

“நீங்க அவங்க நிலைமையை பத்தி சொன்ன போது எனக்கு கூட அதிர்ச்சி தான். அவங்க ஆகாஷ்க்கு பொருத்தமா தான் இருப்பாங்க! என்ன இது அவங்களுக்கு முதல் கல்யாணமா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷமாயிருந்திருக்கும். இப்போ மட்டும் என்ன ஆகாஷ்க்கு அது ஒரு குறையா தெரியலைன்னா நாம ஏன் அதை பெருசு படுத்தணும் விட்டுடுங்க”,

“நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது! இந்த கல்யாணம் நடக்கணும்”, என்றாள் அவளும்.

இதற்கு மேல் செந்திலுக்கு யோசிக்க என்ன இருக்கிறது, “பேசறேன்”, என்று உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வந்ததும் அவனைப் பார்த்த ஆகாஷ், “என்ன உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டியா?”, என்றான்.

“எப்படிடா கண்டுபிடிச்ச”, என்று செந்தில் ஆச்சர்யப்பட……

“ம்! கழுத கெட்டா குட்டிச்சுவரு”, என்றான்.

“நோ! நோ! நோ! நீ ஆஸ்திரேலியன் ரிடர்ன்……. நீ இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது…….”, என்று பாவனையாக செந்தில் சொல்ல.

காலையில் கனிமொழியை பார்த்ததில் இருந்து அவளிடமே லயித்திருந்த ஆகாஷின் முகம் சற்று புன்னகையை காட்டியது.

“ஒரு வழியா சிரிச்சிடாண்டா”, என்றவன்……

“விடு பார்த்துக்கலாம்! அவங்கப்பாம்மா அசோக் இவங்ககிட்ட எல்லாம் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறது என் பொறுப்பு! ஆனா கனிகிட்ட என்னால ஓரளவு தான் பேசமுடியும்! அதுக்கு மேல பேசமுடியாது!”,

“அவகிட்ட சம்மதம் வாங்கறது என் பொறுப்பு”, என்றான் ஆகாஷ்.

“முடியுமா……?”,

“நீ இதுல தலையிடக்கூடாது……. நான் தலையிட மாட்டேன்னு ராஜி மேல ப்ராமிஸ் பண்ணு”,

“ஏண்டா இவ்வளவு தீவிரமா இருக்க! என்ன பண்ணலாம்னு இருக்க!”,

“முடிஞ்சா பார்பேன்! இல்லைன்னா தூக்கிடுவேன்!”, என்றான்.

“யாரைடா”,

“பொண்ணதாண்டா”,

“டேய்! எப்ப இருந்துடா இப்படி ஆன”, என்று செந்தில் சற்று சஞ்சலத்தோடு ஆச்சர்யப்பட……

ஆகாஷ் அதற்கு வெளியே பதில் சொல்லவில்லை, ஆனால் மனதிற்குள் சொல்லிக்கொண்டான், “எப்போ நான் ராஜியை மிஸ் பண்ணினனோ அப்போவே இப்படி ஆகிட்டேன்! மறுபடியும் நான் கனியை மிஸ் பண்ணத் தயாராயில்லை! இந்த கல்யாணம் நடக்கும்!”,

“நீ ஹீரோடா……… வில்லன் ரேஞ்சுக்குப் பேசற”, என்று செந்தில் சொல்ல..

“ஹீரோயினை கல்யாணம் பண்ணினா தான் ஹீரோ! இல்லைனா டம்மி பீஸ் தான்!”, மனதிற்குள்ளேயே அதற்கும் கவுன்ட்டர் கொடுத்தான்.

“நான் என்ன பண்ணினாலும் நீ தலையிடமாட்ட தானே!”, என்று ஆகாஷ் மறுபடியும் செந்திலிடம் கேட்க……

“முயற்சி பண்றேன்! அசோக்கோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி மாதிரி தான்! அவளை அப்படியும் என்னால விட முடியாது!”,

“ஏண்டா? நான் அவளை கல்யாணம் பண்ணிக்கத் தானேக் கேட்கறேன்”,

“ஆனா அவளுக்கு விருப்பமில்லைன்னா”,

“விருப்பமில்லைனா என்ன விருப்பமில்லைனா?…….. ராஜிக்கு விருப்பம் இல்லைனா நீ விட்டிருப்பியா?…….. மாட்டே இல்லை! எனக்கு மட்டும் ஏண்டா அட்வைஸ் பண்ற!”,

“கைல அடிப்பட்டு தாலியே கட்ட முடியாத நிலைமையில் இருந்தப்போ கூட அவசரமா தாலி கட்டி மனைவியாக்கிக்கிட்ட……… கை சரியாகட்டும்னு நீ பொறுமையா இருந்தியா”, என்று செந்திலைக் கேள்வி கேட்டான்.  

இப்படி பேசுபவனிடம் என்னப் பேசுவது என்று தெரியாமல் செந்தில் முழிக்க….

“கண்டிப்பா கனிக்கு விருப்பம் இருக்காதுதான். அதுக்காக அப்படியே விட மாட்டேன்! மறுபடியும் சொல்றேன் கட்டாயப்படுத்தாம அவ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா! அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது நீ அதுல தலையிடக்கூடாது! அவ மட்டும் உன் தங்கச்சி கிடையாது நானும் உன் நண்பன் தான் ஞாபகம் வெச்சிக்கோ”,  என்றான் தீவிரமானக் குரலில்.

“இல்லை! மறந்துடுவியா”,

“நம்புடா! நீ எனக்கு ரொம்ப முக்கியம்! உன் வாழ்க்கை இதுதான்னு நீ நினைக்கும் போது கட்டாயம் அதை நடத்திக்கொடுப்பேன் நம்பு!”,   

கனியை வீட்டிற்கு கூட்டி வந்த அசோக் கனியிடம் கேட்டுக்கொண்டிருந்தான், “என்னமா? என்னம்மா அவனோடப் பிரச்சனை! இனிமே அங்கே மில்லுக்கே வரமாட்டேன்னு செந்தில் கிட்ட சொல்லிட்டு வந்துட்ட “,

சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள், அவளின் அம்மா அப்பா இருக்கிறார்களா என்று.

“அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீட்ல வரச்சொன்னாங்கன்னு போனாங்க”,

“ஹப்பா! இல்லையா? இல்லைனா ஏன் வந்துட்ட? என்ன காரணம்னு? அம்மா என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க! அவங்ககிட்ட உண்மையை சொன்னா அப்புறம் பயந்துடுவாங்க!”,

“பயப்படற அளவுக்கு என்ன இருக்கு”, என்றான் அசோக் புரியாமல்…..

“அதுதான் அங்க ஒரு பிரகஸ்பதியை பார்த்தோமே….. அவன் தான் என் பயமே”, என்றாள்.

“ஏம்மா ஏதாவது வம்பு பண்ணினானா”, என்றான் கோபமாக.

“வம்பு பண்ணியிருந்தா நானே திருப்பி கொடுத்திருப்பேன்! ஆனா இவன் என் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டான். என்னை பார்த்தவுடனே அழகான பொண்ணுன்னு நினைச்சு அந்த ஆர்வம் வந்திருந்தாக் கூடப் பரவாயில்லை”,

“ஆனா இது அப்படியில்லை! என்னைப் பார்த்தான், பேசினான், எனக்கு ஹெல்ப் கூட பண்ணினான். நான் எப்பவும் போல வம்புப் பேச்சு தான் பேசினேன்! அதுக்கும் தன்மையா தான் பதில் சொன்னான்”.

“ஆனா நான் எந்திரிச்சு நின்னவுடனே, என் பெரிய வயிறை பார்த்தவுடனே அவனுக்கு அப்படி ஒரு ஷாக். அப்புறம் என் பொட்டில்லாத நெத்தியை பார்த்து அதுக்கும் ஒரு ஷாக்”.

“அதுக்கப்புறம் செந்தில் அண்ணா கூட பேசி அவர் இல்லைன்னு தெரிஞ்சிருப்பான் போல…….. அதுக்கப்புறம் என்னை ரொம்ப சீரியஸா பார்த்தான். என்கிட்டே ரொம்ப உரிமை எடுத்துகிட்டான், கட்டாயபடுத்தி காபி குடிக்க வெச்சான்”, 

“அப்புறம் எத்தனை மாசம்ங்றான், எப்போ டெலிவரிங்கறான்……… என்னால இதையெல்லாம் பொறுக்கவே முடியலை! என்னடா உனக்கு பிரச்சனைன்னா? உன் நெத்தில பொட்டில்லாதது என் பிரச்சனைங்கறான்”,

“என்ன?”, என்று அதிர்ந்தான் அசோக்.

“அட ஆமாம்னா! அவன் மண்டையை உடைக்கற அளவுக்கு எனக்கு கோபம்தான்! ஆனா நான் அப்படி ஏதாவது செஞ்சா அதையே சாக்கா வெச்சி என்னை தூக்குனாலும் தூக்கிருவான்னு தோணிச்சு! அதான் அவன் கண்ல படாம இருக்கறது தான் பெஸ்ட்ன்னு அங்க இனிமே வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.

மிகுந்த குழப்பம் அசோகிற்கு…… செந்தில் சொல்லி அவன் உருவகபடுத்தி இருந்த ஆகாஷ் மிகவும் கண்ணியமானவன். அவன் எப்படி இப்படி? தாங்க முடியாமல் செந்திலுக்கு அழைக்க….. “நானே உன்னை கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்”, என்று சொல்லி வைத்தான் செந்தில்.

இங்கே கனி பேசுவதை வைத்து அசோகிற்கு பயமாக இருந்தது. “இவ என்னடா தூக்கிருவான் அது இதுன்னு பேசறா! எவனுக்கும் பயப்படாதவ! இப்படி அவனை விட்டு தூர விலகறதுதான் பெஸ்ட்ன்னு சொல்றா? என்னடா நடக்குது நம்மை சுத்தி”, என்று பயந்துப் போனான்.

மூன்று தங்கைகளோடு பிறந்த அண்ணன் அல்லவா….. அப்படி அலட்சியமாக யாரையும் நினைக்க முடியாது…….. எதுவும் வம்பு வராமல் இருக்க வேண்டும் என்பதே அவன் வேண்டுதலாக இருந்தது.

அங்கே ஆகாஷ் பேசி முடித்ததும், “கணக்கு”, என்று செந்தில் ஆரம்பித்ததுமே……..

“ம்! தூக்கி என் தலையில போடு! மனுஷன் அவஸ்தையை புரிஞ்சுக்க மாட்டியா நீ! நானே எப்படிடா அவளை கல்யாணம் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் கணக்காம் கணக்கு”.

“ஏதாவது ஐடியா இருக்கா நான் அவளைப் பார்க்க”,

“உன்முன்னாடி தானே தெளிவா நான் இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு போனா… அப்புறம் அவளை எப்படி பார்க்கறதுன்னு கேட்கற! பார்த்த முதல் நாளே துரத்திவிட்டுட்ட! அப்புறம் ஐடியா குடுன்னா”, என்று செந்தில் அவனைக் கடிக்க….

பதிலுக்கு அவனை முறைத்தான் ஆகாஷ்…….

“ம்க்கும் முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! அவ என்ன சொல்லிவெச்சாளோ தெரியலை அதுக்குள்ள அசோக் வேற கூப்பிட்டான், நான் அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டேன்”,

“டேய் பேசுடா! அவ என்ன சொன்னான்னு எனக்கு தெரியணும்”,

செந்தில் அவனையே முறைத்திருக்க….. “பேசுடா”, என்றான் தன்மையாக ஆகாஷ்.

அதன் பிறகு செந்தில் அசோக்கை கூப்பிட, அவன் எடுத்த உடனே புலம்ப ஆரம்பித்தான், “டேய் மாப்ள! என்னடா சொல்றா இவ? என்னை பயபடுத்தறாடா”,

“என்னடா பயப்படுத்தறா?”,

“எனக்கு சொல்லவே தெரியலை! அவனைப் பார்த்த பயமா இருக்குன்றா! அவனை விட்டு தள்ளி நிக்கனும்றா! அவன் ரொம்ப அக்கறை எடுத்துக்கறான்றா! விட்டா என்னையே தூக்கிடுவான்னு அசால்டா சொல்றாடா”, என்றான்.

செந்திலின் முகத்தில் அவனையறியாமல் ஒரு புன்னகை பூத்தது. இவனை கரக்டாக எடை போட்டிருக்கிறாள். இத்தனை நாள் பழகிய நாம் கூட இவன் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்காத போது எவ்வளவு சரியாக எடை போட்டிருக்கிறாள்.

“அப்படி எல்லாம் எதுவுமில்லை. நாம நேர்ல பேசலாம்”, என்று சமாளித்து போனை வைத்தான் செந்தில்.

அவன் பேசுவதையே பார்த்திருந்த ஆகாஷ், “என்னடா சிரிப்பு”, என்று கேட்க…..

“ம்! உன்னை விட்டு விலகறதுல ரொம்ப தெளிவா இருக்கா….. இல்லைனா உன்னை பார்த்து பயமா இருக்குன்னு சொல்லியிருக்கா…….. உன்னை விட்டு தூர தள்ளி இருக்கறது பெஸ்ட்ன்னு சொல்லியிருக்கா…….”,

“இங்கே நீ என்கிட்ட அவளை நீ தூக்கிடுவேன்னு சொன்னதை அப்படியே அனுமானிச்சு அவ அண்ணன் கிட்ட சொல்லியிருக்கா….. ரெண்டு பேருக்கும் ஒரே நினைப்புடா………. சரியான அடாவடி கேசுங்க ரெண்டு பேரும்………. பார்போம் நீயா அவளான்னு”, என்று சிரித்தான் செந்தில்.  

ஆனால் அந்த சிரிப்பு ஆகாஷை தொற்றவில்லை…….. “என்னை இனம் கண்டுக் கொண்டாள்…… என் அகம் தொடுகிறாள்………”,

“என்னை தெரிந்து கொள்கிறவள் என்னை விலகும் வழியையும் தெரிந்து வைத்திருப்பாளா”,

ஒரு இனம் புரியாத பய உணர்ச்சி நெஞ்சில் பரவ…….

“என்னே என்னை படைத்தவனின் விந்தை……..”,

“அவள் கிடைக்க வேண்டும் என்று நான் அவளைப் பார்த்து பயப்படுகிறேன்….”,

“நான் கிடைக்கக் கூடாது என்று அவள் என்னைப் பார்த்து பயப்படுகிறாள்….’,

 “பார்த்ததில் இருந்து அவள் நினைவாகவே என்னை இருக்க வைக்கிறாள்……”,

“அவளை என் பக்கத்தில் இப்போதே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைக்கிறாள்……”,

“அவள் மறுத்தாள் அவளை கொன்றாவது என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை…….. நான் இறந்தாவது அவளுடன் இருக்க வேண்டும் என்ற வெறி கிளம்புகிறதே…….”,

“ராஜி வேறு திருமணம் செய்து வந்த போது ஒரு ஏமாற்றம் என்னுள் பரவியதுதான்…… அது காலத்திற்கும் தொடரும் தான்……. ஆனால் இந்த உணர்வு புதிதாய் இருக்கிறதே….”,  

“இந்த உணர்வில் இன்பம் என்பதை விட துன்பம் அதிகமாய் இருக்கிறதே….”,

“அவள் எனக்கு வேண்டும்…… நிச்சயமாய் வேண்டும்…… என் அருகில் வேண்டும்…… என் மனைவியாய் வேண்டும்…….”, 

“யார் சொன்னார்கள் காதல் ஒருமுறை தான் வருமென்று……. எனக்குள் மீண்டும் வந்துவிட்டதா……..”,   

இது காதலா……? நான் மீண்டும் காதலிக்கிறேனா? இப்படியும் காதல் வருமா? அது சாத்தியமா ? என்னை பைய்த்தியமாய் மாற்றத் துடிக்கிறதா?……… எண்ணங்கள் அவனுள் சுழன்று அடிக்க……….. கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.  

Advertisement