Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

ஆறு வருடங்களுக்கு பிறகு…….

அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் ……….

என்ற பெயரைத் தாங்கி நின்ற கட்டத்திற்கு முன் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் அவசரமாக இறங்கி அதன் கதவைத் திறந்து விட……… தன் கனத்த சரீரத்தை தூக்கிக்கொண்டு இறங்கினார் தேவிகா.

அவர் தான் அதன் தற்போதைய நிர்வாகி. ஆனால் அதன் மானேஜிங் டிரஸ்ட்டீ ராகவ். அவன் பெயரில் இருந்தது.

அந்த கட்டிடம் அமைந்திருந்த இடம் அறிவரசுவின் தென்னந் தோப்பு. அங்கே அந்த கட்டிடத்தைச் சுற்றி இன்னும் இரண்டு மூன்று கட்டிடங்கள் இருந்தது. இன்னும் புதிதாகப் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

அந்த இடங்களில் மட்டுமே கட்டடங்கள், பின்பு அத்தனையும் தோப்பு மற்றும் விவசாய நிலமே.

டிரஸ்ட் சார்பில் ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் இருந்தது. அங்கே பிள்ளைகளால் அனுப்பப்பட்ட பெற்றோர் பலர் இருந்தனர். அங்கே மிகவும் குறைவான கட்டணத்தில் தங்கி இருந்தனர்.

இப்படி குறைவான கட்டணத்தில் ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் மட்டுமல்லாமல் ஆதரவற்ற பெண்களுக்கு என்று ஒரு ஹோம் இருந்தது. அங்கு ஆதரவில்லாமல் இருந்த பெண்கள்….. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்……. கணவனை இழந்த பெண்கள் என்று இருந்தனர்.

ஒரு சமையல் மசாலா ப்ராடக்ட்ஸ் கம்பனி ஆரம்பிக்கப்பட்டு அங்கு எல்லா விதமான மசாலாப் பொருட்களும் தயாரிக்கப்பட……… அங்கே அந்தப் பெண்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் அறிவரசுவின் பெயரில் சிறியதாக ஒரு ஃப்ரீ ட்ரீட்மென்ட் ஹாஸ்பிடல் கூட நடத்தப்பட்டது.

அதுவுமில்லாமல் அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பல குழந்தைகள் படிப்பிற்கென்று தத்தெடுக்கப்பட்டு………. அவர்களுக்கு கல்லூரி முடியும் வரையிலும் அவர்களின் கல்லூரி கட்டணத்தை அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் ஏற்றுக்கொண்டது.

இது தனிநபரின் உழைப்பல்ல.. பலரின் யோசனைகள் செயல் பாடுகள் அமைந்துள்ளது. இதை நிர்வாகம் செய்பவர் தேவிகா. 

அவரை நிர்வாகி ஆக்கியது கனிமொழி. அவள் தான் ஆகாஷிடம் சொன்னாள், அவரை நிர்வாகி ஆக்குவோம் என்று.

“எப்படி கனி அவங்களால முடியுமா?”, என்றான்.

“ஏன் முடியாது…… இது நம்ம முக்கியமா ஆதரவற்ற பெண்களுக்காக செய்யும் போது அவங்களால ஏன் முடியாது?”,

“கணவனின் துரோகத்தை நேரடியா அனுபவிச்சவங்க அவங்க…… அவங்களுக்கு என்னத் தெரியும், கணவனை சும்மா விட்டுட்டு அப்படியே வாழ்ந்துட்டு இருக்காங்க, தைரியமில்லாதவங்கன்னு மத்தவங்க நினைக்கலாம். ஆனா அது அப்படி கிடையாது”,

“அவங்க…….. அவங்க இருக்குற சூழ்நிலைக்கு தக்கமாதிரி நாலையும் யோசிச்சி முடிவெடுத்து இருக்காங்க………..   அவங்க கணவனை சகிச்சிக்கிற சகிப்புத் தன்மை இருக்கு….. இது மத்தவங்கப் பார்வையில வேறுமாதிரி ஒரு கோழை மாதிரி தோணலாம். ஆனா அவங்க தைரியமானவங்க……”,

“இல்லைன்னா இந்த ஏமாத்துன கணவனோட ஒரே வீட்ல இருக்கறது கஷ்டம். என்னவோ இந்த விஷயத்துல ஒவ்வொருத்தர் பார்வையும் மாறுபடும்.  எதுவா இருந்தா என்ன? அவங்க நல்லா செயல்படுவாங்கன்னு எனக்குத் தோணுது”,

“அவங்க இருக்கட்டும்! முடியலைன்னா நாம வேற யோசனை பண்ணலாம்….. அதுவுமில்லாம உங்க அக்காவை அவங்க கணவனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு நீங்களும் சரியா நடந்துக்கலை….. அது உங்க தப்பு…… உங்க தப்பை சரி செய்யற கடமை எனக்கு இருக்கு!”,

“அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்து கணவனோட துரோகத்தை சகிச்சிட்டே இருக்கணும்மா என்ன? அவங்க வெளில வரட்டும்! வெளி வாழ்க்கையை பார்க்கட்டும்! கணவன் பொண்ணுன்னு ஏன் கூட்டுக்குள்ள இருக்கணும்?”,

“நீ சும்மா ஒரு வார்த்தை சொன்னாவேக் கேட்பேன்! எதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் அழகி! அப்படியே செஞ்சிடுவோம்!”, என்றான்.

அவருக்கு உதவியாக அசோக்கைப் போட்டனர். 

அவனும் மறுபேச்சு பேசாமல் சரியென்று விட்டான். எத்தனை நாள் தான் ஒரே மாதிரி லாபத்தை தரும் தொழிலை கட்டி அழுவது. அவன் இல்லாவிட்டாலும் அவனின் தந்தை பார்த்துக்கொள்வார். அதே லாபம் தான் வரப்போகிறது. இதில் தனியாக இவன் செய்வதற்கு என்ன இருக்கிறது.

அவனும் மனதில் சற்று வருத்தமாகத் தான் இருந்தான். முன்பெல்லாம் எங்காவது செந்திலும் அவனும் வெளியே சென்றால் செந்திலிடம் செலவு செய்ய பணம் இருக்காது. அசோக் தான் செய்வான். ஆனால் இன்றைய அவனின் நிலை….

மில் ஓனர்!………. அதுவுமில்லாமல் என்னத்தான் ராஜி அவளின் தந்தையிடம் பேசாமல் இருந்தாலும், அவரோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் அவரின் சொத்துக்கள் எல்லாம் ராஜியைத் தானே சேரும்! ஊரின் மிகப் பெரிய பணக்காரர்.

செந்தில் எல்லாம் சொந்தமாக காரை வாங்கி அதில் சுத்திக்கொண்டு இருக்கும்போது தான் மட்டும் ஒரு செகண்ட் ஹான்ட் டூ வீலரை வைத்து காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

தங்கைகளும் நல்ல வசதியாக இருக்கின்றனர்.

இப்போது தேவிகாவுக்கு உதவியாக அவனை இருக்கும்படி சொல்லி அவனுக்கு ஒரு நல்ல சம்பளத்தையும் ஆகாஷ் சொல்ல உடனே, “சரி”, என்றான்.

ஆனால் அந்த சந்தோஷம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே இருந்தது. அதற்கும் வேட்டு வைத்தான் செந்தில், ஆனால் இன்பமான வேட்டு…….

ஆம், அவன் ஆகாஷின் மில்லில் இருந்து விலகிக்கொள்ள அசோக் அந்த இடத்திற்கு வந்தான்.

ராஜி செந்திலை அதிக நாள் ஆகாஷின் மில்லில் இருக்க விடவில்லை. தாங்கள் கொஞ்சம் கையூன்றியதுமே….. அதில் இருந்து விலகிக்கொண்டார்கள்.

ஆகாஷிற்கு அதில் மிகுந்த வருத்தம்.

ஒரு சமயம் அவன் அவனின் மாமனார் வீட்டிற்கு கனியுடன் வந்த போது தான் செந்திலும் ராஜியும் அவனைப் பார்க்க வந்திருந்தனர்.

செந்தில் தான் தயங்கித் தயங்கி, “நான் மில்லுல பார்ட்னர் ஷிப்ல இருந்து விலகிக்கலாம்னு இருக்கேன்”, என்றான் ஆகாஷிடம்.

“ஏன்? என்னப் பிரச்சனை?”, என்றான் அதிர்ந்து போனவனாக ஆகாஷ். மில் இப்போது நல்ல லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதை விட்டு இவன் விலகுகிறான் என்றால் ஏன் என்ற கேள்வி ஆகாஷினுள். அவனுக்கு லாபம் முக்கியமில்லை, ஆனால் இவ்வளவு லாபம் வந்துகொண்டிருக்கும் தொழிலில் இருந்து இவன் விலகுகிறான் என்றால் என்னப் பிரச்சனையோ என்று நினைக்க தான் தோன்றியது.

“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை. நான் முதல் வருஷம் வந்த லாபத்துலயே இடம் வாங்கிப் போட்டிருந்தேன். இப்போ அது நல்ல விலைக்கு போகுது. அதுவுமில்லாம இந்த ரெண்டு வருஷம் வந்த லாபமும் இருக்கு….. அதையும் முதலீடு பண்ணியிருக்கேன், அதுவும் பெருகியிருக்கு……. இப்போ ஒரு மில் விலைக்கு வருது…. கூடக் கொஞ்சம் லோன் போட்டா அதை வாங்கிடுவேன். அதான்…….”, என்று இழுத்தான்.

இதைக் கேட்டதும் ஆகாஷிற்கு சந்தோஷம் தான்.

“வாங்குடா…… சந்தோஷமா வாங்கு! இன்னும் ரெண்டு மில் கூட வாங்கு. அதுக்கும் நீ பார்ட்னர் ஷிப்ல இருந்து விலகறதுக்கும் என்ன சம்மந்தம். நீ ஒன்னென்ன நாலு மில்லைக் கூட ஒரே சமயத்துல பார்த்துக்குவ…… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”, என்றான்.

“இல்லை, அது சரிவராது”, என்றான் ராஜியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.

ஆகாஷிற்கு பயங்கரக் கோபம்…….. இது கண்டிப்பாக செந்திலின் யோசனையாக மட்டும் இருக்காது……. கண்டிப்பாக இதில் ராஜி இருப்பாள் என்று தெரியும்.

“யாருக்கு சரிவராது?”, என்றான் கோபமாக.

பக்கத்தில் இருந்தக் கனியும் அசோக்கும், என்ன இவன் இப்படி பேசுகிறான் என்பது போல ஆகாஷைப் பார்த்திருக்க…….

செந்திலுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியில்லை. இந்த தொழில் சம்மந்தத்தை முறிக்க ஆகாஷிற்கு இஷ்டம் இருக்காது என்று தெரியும். ஆனால் ராஜி பிடிவாதமாக இருந்தாள். பார்ட்னர் ஷிப் இருந்தவரைக்கும் போதும் இனி வேண்டாம் என்று.

ஆகாஷ் ராஜியைக் குறிப்பிட்டுத் தான் அப்படிக் கேட்கிறான் என்று செந்திலுக்கு புரிந்தது. சூழ்நிலை ஹாட்டாக மாறிக்கொண்டு இருந்தது.

“சொல்லு, யாருக்கு சரிவராது”, என்றான் மறுபடியும் ஆகாஷ்.

“எனக்கு சரிவராது”, என்றாள் ராஜி.

“ஏன்? இத்தனை நாள் சரிவந்தது, இப்போ ஏன் வராது?”, என்றான் கோபமாக ஆகாஷ்.

“அப்போ வந்தது! இப்போ வரலை! அதுக்கென்ன இப்போ!”, என்றாள் சற்றும் குறையாமல் ராஜியும்.

எதற்கு இவ்வளவு கோபமாக இருவரும் பேசிக்கொள்கின்றனர் என்பது போல கனிப் பார்க்க….. அவளுக்கு விஷயம் புரியவில்லை.

இப்போதெல்லாம் லீவ் விட்டால் போதும் பதிமூன்று வயது நந்தன் ஊருக்கு வந்துவிடுவான். அவனின் அப்பாவின் பின் மட்டுமல்ல அவனின் பெரியம்மாவின் பின்னும் சுற்றுவது தான் அவன் வேலை.

அப்படி ஒரு நாள் நந்தன், தேவிகாவின் வீட்டில் இருக்கும் போது ராஜியும் செந்திலும் அங்கே வந்திருந்தனர், அவர்களின் செல்ல மகள் பூர்ணிமாவை தூக்கிக்கொண்டு…….. செந்தில் அவனின் அம்மா அன்னபூரணியின் பெயர் கொண்டு தங்கள் மகளுக்கு பூர்ணிமா என்று வைத்திருந்தான்.

அவர்களை அம்மா வீட்டில் விட்டுவிட்டு செந்தில் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்……. ராஜிக்கு நந்தன் வந்தது தெரியாது. அவளுக்கு நந்தன் வருவது பிடிக்காது. அவன் வந்திருக்கிறான் என்று தெரிந்தால் வந்தே இருக்க மாட்டாள்.

அதேப் போல தான் நந்தனுக்கு அவனின் அக்காவைப் பார்த்தால் அப்படி ஒரு பயம்… அதனால் செந்தில் கிளம்பவும், “நானும் உங்க கூட எங்க மில்லுக்கு வர்றேன் மாமா”, என்று சொல்லி விட்டான்.

சிறுவயதில் இருந்து அங்கே அவர்களுக்கு ஒரு மில் இருக்கிறது என்று அவனுக்கு தெரியும். அதனால் அவன் சிறு பையன் சாதாரணமாக எங்க மில்லுக்கு வர்றேன் என்று சொன்னதுதான் அப்படி ஒரு கோபம் ராஜிக்கு…… உடனே பார்ட்னர் ஷிப் வேண்டாம் என்று ஒரே பிடிவாதம்.

“நாம கஷ்டத்துல இருந்தப்போ ஆகாஷ் உதவி செஞ்சது ராஜி. இப்போ அப்படி மறுக்க முடியாது”, என்று சொல்லியும் ராஜி ஒரே பிடிவாதம். அவளின் பிடிவாதம் தான் செந்தில் நன்கு அறிவானே….

அதனால் ஆகாஷிடம் இப்போது மறுக்க…… என்னக் காரணம் என்று ஆகாஷிற்கு புரியாவிட்டாலும் இது ராஜியின்  வேலை என்று நன்குத் தெரிய…..

இந்த சண்டை ஆரம்பமானது.    

“ராஜி…….”, என்று மறுபடியும் ஆகாஷ் ஏதோ சொல்ல வர……

“எந்த சமாதானமும் வேண்டாம், இந்த பார்ட்னர் ஷிப் வேண்டாம்!”, என்றாள்.

“என்னடாக் காரணம்?”, என்று ஆகாஷ் செந்திலைப் பார்த்துக் கேட்க……

செந்தில் ராஜியைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் பார்வையே சொன்னது, “வாயை திறந்தே, மவனே கொன்னுடுவேன்”, என்று……

வேறுவழியில்லாமல் வாயை கப்பென்று மூடிக்கொண்டான் செந்தில். இதையெல்லாம் பார்த்த கனிமொழிக்கு ஆச்சரயமாக இருந்தது……. அதுவும் ராஜியைப் பார்த்து……… கண்ணசைவில் எல்லோரையும் ஆட்டி வைக்கிறாள் இவள். she is a dominating personality over others என்றுத் தோன்றியது.

“வேண்டாம்னா விட்டுடுங்களேன்”, என்றாள் ராஜி.

மறுபடியும் ஆகாஷ் பேசப் போக…….

“உங்களால நாங்க வளர்ந்ததா வேணா இருக்கட்டும்! வாழ்ந்ததா இருக்க வேண்டாம்!”, என்றாள் சட்டென்று எடுத்தெறிந்து.

ஆகாஷை அந்த வார்த்தைகள் மிகவும் கடுமையாகத் தாக்கின.

கேட்ட எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.   

“ராஜி!!!”, என்று செந்தில் ஓங்கி ஒரு அதட்டல் போட……… ராஜியின் வாய் தானாக பூட்டு போட்டுக் கொண்டது. ஆனால் பேசியதற்கு கடுகளவும் வருத்தம் இல்லை. 

கனிக்கு தன் கணவனை ராஜி எடுத்தெறிந்து பேசியதும் மிகுந்த கோபம் வந்தது. கொஞ்சமும் இந்த பெண்ணிற்கு நன்றி உணர்ச்சியே இல்லையா? எவ்வளவு செய்திருப்பார் இவர். இப்படி எடுத்தெறிந்து ஒரே நிமிடத்தில் பேசிவிட்டாளே என்று இருந்தது.

விட்டால் ராஜியை விடவும் பேசி கனி இதற்கு பதிலடி கொடுத்திருப்பாள்.  ஆனால் அவளுக்கு தெரியும் ராஜி, ஆகாஷிற்கு ஸ்பெஷல் என்று. இவளைப் பேசினால் அவன் வருத்தப்படுவான் என்று தெரியும். அதனால் வாய் மூடி மௌனியாக நின்றாள்.     

சில சமயம் அவளின் அப்பாவின் உறவு அனிதாவோடு, நந்தன், அக்ஷரா,  இவர்களை பற்றியெல்லாம் நினைத்தால் இப்படித் தான் ஆகிவிடுவாள். என்னயிருந்தாலும் அவளின் இத்தனை வருடத்து பிரியமான தந்தை ஒரு நொடியில் அன்னியமாகிப்

 போனார். அதன் பிறகு இந்த நான்கு வருடங்களாக அவரிடம் எத்தனை தேவைகள் வந்த போதும் ஒரு வார்த்தைக் கூட ராஜி பேசியதில்லை.

அவள் வளர்ந்த செழிப்பு, செழுமை எல்லாவற்றையும் ஒரே நொடியில் உதறித் தள்ளவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டாள். அவளுக்கு உரிமையான சொத்து எவ்வளவோ இருக்க……… அடுத்தவர் உதவியினால் இவர்கள் முன்னுக்கு வரும்படி ஆகிற்று.

அவளுக்கு இருந்த ஒரே திருப்தி, ஆகாஷ் கொடுத்தது வாய்ப்பு மட்டுமே! மற்றப்படி எல்லாமே செந்திலின் உழைப்பு. அதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும் இப்போது அதுவும் கூட அவளுக்கு தேவையில்லை என்றுத் தோன்ற இந்தப் பிரச்சனை.      

செந்தில் அதட்டியதும் அதன் பிறகு ராஜி வாய் திறக்கவே இல்லை. செந்தில் தான், “சாரி ஆகாஷ்!”, என்றான்.

ஆகாஷிற்கு என்னச் சொல்வது என்று தெரியவில்லை…. அவன் அமைதியாகவே இருக்க…. அப்போது பார்த்து நான்கு வயது ஆகப்போகும் ராகவ், மூன்று வயது ஆகப்போகும் பூர்ணிமாவை கூப்பிட்டுக் கொண்டு வந்தவன்……

“அப்பா! இவ என்னை அடிச்சிட்டே இருக்கா!”, என்றான்.

“இவ உன்னை கையில அடிக்கறா! இவங்கம்மா என்னை வார்த்தையால அடிக்கறா!”, என்று நினைத்தவன் அதை வெளியில் சொல்லாமல்……

“பூரணி குட்டி ஏன் இப்படி பண்றீங்க?”, என்று சொல்லியபடி  குழந்தையைத் தூக்க…….

“சாரி ராகவண்ணா!”, என்றது அது மழலையில்……

“நீங்க கேட்பீங்க, உங்கம்மா சேன்சே இல்லை!”, என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியில் சொல்லவில்லை.

“என்ன இஷ்டமோ பண்ணிக்கங்கப்பா”, என்றான் செந்திலிடம்.

செந்தில் இன்னும் தயங்கவும்……. “என்ன?”, என்று ஆகாஷ் கேட்க…..

“நான் என் பார்ட்னர் ஷிப்பை அசோக் பேருக்கு மாத்திடவா”, என்றுக் கேட்டு, அவனும் அசோக்கும் உற்ற நண்பர்கள் என்று மறுபடியும் நிரூபித்தான்.

“செய்!”, என்றான் ஒற்றைவார்த்தையாக ஆகாஷ்.

அப்படிக் கிடைத்தது தான் அசோக்கிற்கு வாய்ப்பு. அதனால் அவன் செல்வ நிலைமை பெருகியது. அதன் பிறகு அவனின் இன்னொரு தங்கைக்கு திருமணம் செய்தப் பிறகே அவன் திருமணம் செய்துக் கொண்டு தன் தங்கைகளுக்கு ஒரு நல்ல அண்ணனாக திகழ்ந்தான்.

இந்த ஆறுவருடத்தில் எல்லோர் வாழ்கையும் ஏறுமுகம் தான். செந்திலுக்கு இப்போது இன்னொரு மகனும் பிறந்திருந்தான்.

தேவிகா தன்னை பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மகள் கணவன் மேல் அதிகப் பற்று வைத்துவிட……. கணவர் தன் பற்றை இன்னொருத்திக்கும் பங்குப் போட்டுக் கொடுத்துவிட ……….வாழ்க்கையில் அவ்வளவாகப் பிடிப்பில்லாமல் இருந்த அவர்……..

அறிவரசு சேரிடபில் டிரஸ்ட் நிர்வாகியான பிறகு வாழ்க்கையில் அவருக்கு பிடிப்பு அதிகரிக்க…. தன் உடல் உபாதைகளை எல்லாம் மறந்து வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டார்.

நாளை அறிவரசு  சேரிடபில் டிரஸ்டின் ஆறாவது ஆண்டு விழா…. அதற்காக கனி, ஆகாஷ், நந்தன், அக்ஷரா, ராகவ் என்று எல்லோரும் வந்திருந்தனர்.  அப்போது அவர்கள் தேவிகாவின் வீட்டில் தான் இருந்தனர்.

இப்போது நந்தனுக்கு பதினாறு வயது, அக்ஷ்ராவிற்கு ஏழு வயது, ராகவிற்கு ஆறு வயது.  

“நான் ராஜிக்கா வீட்டுக்குப் போகணும், செந்தில் மாமாவைப் பார்க்கனும்!”, என்று நச்ச ஆரம்பித்தாள் அக்ஷரா…… அவளுக்கு செந்தில் என்றாள் மிகவும் ப்ரியம். ராஜி அவளைத் தூக்கி கொஞ்சி என்று அவளிடம் ப்ரியம் காட்டாவிட்டாலும் நந்தனிடம் காட்டும் விலகல் தன்மை அவளிடம் காட்ட மாட்டாள். அக்ஷராவும் அவளோடு விடாமல் சுற்றுவாள். 

சீனியப்பனிடம் அண்ணாமலை அவளை வீட்டுக்கு கூட்டிப் போகக் கேட்க……… கூட ராகவ், “நானும் போவேன்! பூர்ணியை பார்க்கணும்!”, என்றுக் கிளம்ப……

“நானும் போகவா?”, என்றான் நந்தன் தயங்கி தயங்கி.

இதுவரை அவன் ராஜி வீட்டிற்கு சென்றதில்லை. முடிந்தவரையில் ராஜி இருக்கும் இடத்தில் இருக்க மாட்டான்.

இவன் அப்படிக் கேட்டதும் கனிமொழிக்கு ஆச்சர்யம். அவனை யோசனையாய், “என்ன?”, என்பது போலப் பார்த்தாள். நந்தன் எப்போதும் அவளிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்வான்.

இப்போது அவள் பார்க்கவும், “அத்தை! மாமா என்னை இங்க இருக்குற ஸ்கூல்ல பிளஸ் ஒன், பிளஸ் டூ சேர்க்கறேன்னு சொன்னாங்க! இங்க ஹாஸ்டல் சேர்க்கறேன்னு சொன்னாங்க! நான் அப்பாவோட இருக்கட்டுமான்னு கேட்டேன்! ராஜிக்கா பெர்மிஷன் குடுக்கனும்னு சொன்னாங்க! அதான் அவங்க கிட்ட கேட்கலாம்னு?”, என்றான் தயங்கித் தயங்கி.

கனிக்கு பயங்கரக் கோபம், “அவளை எதுக்கு கேட்கணும்? தேவிகாம்மா தானே முடிவெடுக்கணும்!”, என்றாள் ஆகாஷிடம் தனியாக.

“ராஜி சொல்லாம அவங்க முடிவு எடுக்க மாட்டாங்க, தேவிகா அக்கா கேட்டாலும் அவ வேண்டாம்னு தான் சொல்வா, ஒருவேளை இவனாப் போய்க் கேட்டா இளகுறாளான்னு பார்க்கலாம்!”, என்றான்.

“என்னவோப் போங்க!”, என்று கனி குறைபட…

“புரிஞ்சிக்கோ கனி! அவன் பாட்டுக்கு இங்க வந்து…… மறுபடியும் அவ அவங்கம்மா கிட்ட முறைச்சிகிட்டு……. இங்க வீட்டுக்கு வராமா இருந்தா நல்லாவா இருக்கும். மறுபடியும் எல்லோரும் எங்கக்காவை பத்தித் தான் பேசுவாங்க!”, என்றான்.

ஒரு நிமிடம் கூட இவன் அனிதாவின் சௌக்கியத்தை தள்ளி வைப்பதில்லை. அவளுக்கு எந்தப் பிரச்சனையும் அணுகாமல் எப்படி பார்த்துக்கொள்கிறான் என்று இருந்தது. அவனை நினைத்து கர்வமாக இருந்தது.

அங்கே செந்தில் வீட்டில் நந்தன் வெளியே நிற்க……. அக்ஷ்ராவும் ராகவும் உள்ளே சென்றனர். அவர்களைப் பார்த்ததும் பூரணி ஓடி வந்தாள், “ராகவண்ணா”, என்று.

சத்தம் கேட்டு செந்திலும் ராஜியும் வெளியே வர… செந்திலைப் பார்த்த அக்ஷரா, “மாமா!”, என்று அவனிடம் ஓடினாள்…….

“அவளை அப்படியே அசால்டாக தூக்கியவன், “அக்ஷி பாப்பா, எப்போ வந்தீங்க?”,

“காலையில……… நீங்க ஏன் என்னைப் பார்க்க வரலை”, என்று அவள் சலுகையாக குறைபட .

“இதோ கிளம்பிட்டே இருந்தேன்!”, என்றான்.

அவனிடம் பேசி முடித்த அக்ஷரா, திரும்பி ராஜியைப் பார்க்க…….. செல்லமாக அவளின் கன்னத்தில் தட்டினாள் ராஜி.

“அக்கா நந்து அண்ணா வந்திருக்காங்க! உள்ள வரட்டுமான்னு கேட்டாங்க!”, என்றாள் அக்ஷரா.

செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். உடனே சுதாரித்த செந்தில் வேகமாக வெளியேப் போனான்…… “வா நந்து!”, என்றுக் கூப்பிட …….அவன் தயங்க கையைப் பிடித்து அழைத்து வந்தான்.

ராஜிக்கு வா என்று அழைப்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பம்… செந்தில் விடாமல் அவளின் முகத்தைப் பார்க்க……..

“வா நந்தன்!”, என்றாள்.

நந்தனின் முகத்தில் ஒரு மலர்ச்சி. அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அதற்குள் பூரணி அவளுக்கு வாங்கியிருந்த பொம்மையை ராகவிடம் காட்டப் போக கூட அவளின் தம்பி பிரபுவும் ஆர்வமாகப் போனான்.

அக்ஷி செந்திலை விட்டு நகரவில்லை. ராஜி எல்லோருக்கும் அவரவற்கு தகுந்த மாதிரி குடிக்க எடுத்து வந்தாள்.

உடனே எடுத்து குடித்தான் நந்தன். பதின் வயதில் இருந்தான். அரும்பு மீசை எட்டிப் பார்த்தது. அவன் ஏதோ கேட்க நினைப்பதாக செந்திலுக்கு தோன்ற, “என்ன நந்து, ஏதாவது கேட்டகனுமா?”, என்றான்.

ஸ்கூல் இங்கே சேரப்போவதை சொன்னவன், “மாமா என்னை ஹாஸ்டல் சேர்க்கறேன்னு சொன்னாங்க”, என்றான்.

“இதுவா விஷயம்”, என்பது போல செந்திலும் ராஜியும் பார்க்க….. ராஜியின் புறம் பார்வையைத் திருப்பியவன், “நான் உங்க வீட்ல இருந்து போகட்டுமா அக்கா!”, என்றான்.

இவன் எங்கே என்று சொல்கிறான் என்று புரியாமல் ராஜி பார்க்க…….. “நான் பெரியம்மாக் கூட இருந்துப் போறேன்!”, என்றான். மறந்தும் அப்பாவிடம் இருந்து போகிறேன் என்று சொல்லவில்லை.

ராஜிக்கு அவன் திடீர் என்று கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் தான் யோசித்தாள், நந்தனின் முகத்தைப் பார்த்தவள்…….. அந்தப் பார்வை…….. அதில் தெரிந்த வேண்டுதல், அதையும் மீறிய ஆசையையும் ஆர்வத்தையும் பார்த்து……. அவளையும் மீறி, “சரி”, என்றாள்.

நந்தனை விடவும் ஆர்வமாக செந்தில் அவளை பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் சரி என்றதும் அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம், “என் செல்லம் வளர்ந்துட்டா!”, என்று அவனே சொல்லிக்கொண்டான்.

அவர்களையெல்லாம் மீண்டும் சீனியப்பனுடன் வீட்டிற்கு அனுப்பக் கிளப்ப……… பூரணியும், பிரபுவும் அவர்களுடன் போவேன் என்று ரகளை……

“நாம போகும்போது போகட்டும்!”, என்று சொன்ன ராஜியையும் மீறி எல்லோரையும் கிளப்பி விட்டான் செந்தில்.   

நந்தனுக்கு மிகுந்த சந்தோஷம். அவர்கள் சென்றவுடன் ராஜியை கையணைப்பில் கொண்டு வந்த செந்தில், “என் செல்லம் வளர்ந்துட்டப் போல! எப்படி ஒத்துக்கிட்ட?”, என்று கேட்டான்.  

“என்னவோ அவன் முகம் பார்த்தவுடனே தோனுச்சு ஒத்துக்கிட்டேன். நான் தான் அப்பான்ற ஒருத்தரை வெச்சு சந்தோஷமா இல்லை, அவருக்கு என் வாழ்க்கையிலும் இடம் இல்லை. அவரால அவனாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்”, என்றாள்.

“இது தான் என் ராஜி!”, என்று அவளை மென்மையாக இறுக்கிக்கொண்டான். “யார் கிட்டயும் வெறுப்பைக் காட்டாத!”, என்றான்.

அவள், “யார்கிட்டயும் நான் வெறுப்பைக் காட்டலை! எனக்குப் பிடிக்கலை! நான் ஒதுங்கிக்கறேன்! அவ்வளவு தான்!”, என்றாள்.

“உன் முடிவு, உங்கப்பா அனிதாக்காவை பொருத்தவரை ஓகே ராஜி! ஆனா இந்த பசங்க உன்னை விட மாட்டேங்கறாங்களே விடாம துரத்துறாங்களே!”, என்றான்.

அவர்கள் விடாமல் அவளிடம் உறவு பாராட்டுவது ராஜிக்குப் புரிந்ததே. அதுவும் அக்ஷராவிடம் அவளுக்கு தனிப் பாசம் தான். ஆனால் ஒத்துக்கொள்ள மாட்டாள்.

“அதுவும் நம்ம அக்ஷி”, என்று செந்தில் சொல்லும்போது அவளையறியாமல் புன்னகை மலர்ந்தது.

“அவ ரொம்ப ஸ்வீட்!”, என்றவள், “இன்னைக்கு நம்ம பூரணி கிட்ட அவ ஒரே கலாட்டா……. நீ என்னை சித்தின்னு கூப்பிடுன்னு, ஒரே காமெடி தான், போங்க!”, என்றாள். 

“நானும் பார்த்தேன், பூரணி கேட்கலை! ஆனா பிரபு அப்படித் தான் ஒரு தடவை கூப்பிட்டான், நான் கவனிச்சேன்”, என்றான். அதன் பிறகும் வளவளவென்று அவர்களையும் மீறி குழந்தைகளின் பெருமைகளையே பேசிக்கொண்டு இருந்தார்கள். 

ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு அவர்களையும் தாண்டி பிள்ளைகளின் பெருமைகள் தானே முன்னிற்க்கின்றன.   

அதைத் தான் அப்போது சந்தோஷமாக ராஜியும் செந்திலும் செய்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே வீட்டிற்குள் நுழைந்ததுமே, “தாத்தா!”, என்று பூரணி அண்ணாமலையை நோக்கி ஓட………. அதே சமயம், “அப்பா”, என்று அக்ஷியும் ஓடினாள்.

அவர் அனாயாசமாக இருவரையும் இருக்கையில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச, பார்த்துக்கொண்டிருந்த கனிக்கு அப்படி ஒரு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி அவர்கள் தங்கியிருந்த ரூமின் உள் சென்று சிரித்தாள். அவள் பின்னோடு வந்த ஆகாஷ், “என்ன அழகி?”, என்றுக் கேட்க……….

“ஒண்ணு அப்பான்னு தாவி ஏறுது! ஒண்ணு தாத்தான்னு தாவி ஏறுது! என்ன கொடுமைடா இது!”, என்று கிண்டலாக சிரித்தாள்.

“அவரைப் பார்த்தா தாத்தா மாதிரியா இருக்கு!”, என்று ஆகாஷ் சொல்ல….

“அது இல்லைன்னு உங்கக்கா மயங்கி கிடக்கிற அழகுலயே தெரியலையா?”, என்றாள் மறுபடியும் கிண்டலாக.

“அவருக்கு திறமையிருக்கு அவர் பெத்துக்கறார்! உனக்கேண்டி!”, என்றான்.

“என்னத் திறமை இது! கேவலம்!”, என்றாள்.     

சிரிப்போடு பேச்சு திசை மாறுவதை உணர்ந்த இருவருமே பேச்சை அடக்கினர். ஆனாலும் ஆகாஷின் முகமும் மனமும் சுருங்கி விட்டது.

“சாரி!”, என்றாள்.

“சரியோ? தப்போ? இனி இப்படி பேசாதக் கனி!”, என்றான் கோபத்துடன் கூடிய வருத்தமாக.

“சாரி! நான் எதையும் மீன் பண்ணி பேசலை, ஒரு ஃப்ளோல வந்துடுச்சு!”,

“மனசுல இருக்கறது தானே வெளில வரும்!”,

“ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை”, என்று பதறினாள்.

“இந்த ஆறுவருஷமா இப்படி ஏதாவது பேசி நீங்க பார்த்திருக்கீங்களா என்ன? அது பூரணி தாத்தான்னு கூப்பிட்டிட்டு ஓடவும்……… அக்ஷி அப்பான்னு கூப்பிட்டிட்டு ஓடவும், இப்படியாகிடிச்சு”, என்றாள் பரிதாபமாக.

கனிக்கு தன் மேலேயே கோபம் வந்தது, அனிதாவிற்கான அவனது பாசம் தான் அறிந்தது தானே, இப்படி பேசலாமா? என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

ஆகாஷிற்கும் தெரியும், கனி உணர்ந்து இதை சொல்லியிருக்க மாட்டாள் என்று. இந்த ஆறு வருடமாக கனியும் அனிதாவும் ஒரே வீட்டில் இருகிறார்கள், இருவருக்குள்ளும் பிரச்சனை என்று ஒன்றும் வந்ததில்லை, ஏன் ஒருவருக்கொருவர் செல்லமாகக் கூட சண்டையிட்டதில்லை.

இருவரும் ஒருவருக்கொருவர் எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுப்பர். அதுவும் கனி அனிதாவுடன் வேலை கற்றுக்கொண்டு தொழிலிலும் பொறுப்பெடுக்க ஆரம்பித்தததில் இருந்து அவர்களின் நெருக்கம் அதிகம் தான் ஆகியிருந்தது.

இருந்தாலும் கோபத்தை இழுத்துப் பிடித்தான் ஆகாஷ். நாளை ஊர் செல்லும் வரை கோபமாக இருப்பது போலக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தான். அப்போது தான் அவள் விளையாட்டிற்கு கூட இப்படி பேச மாட்டாள் என்று நினைத்தான்.

“சரி, விடு!”, என்று சலுப்பாக அவளிடம் சொல்வது போல சொல்லி வெளியே வந்தான். அவன் வரவும் ராஜி செந்தில் அசோக் எல்லோரும் வரவும் நேரம் பறந்தது. அப்போதும் கனியிடம் ஆகாஷ் முகத்தை தூக்கி வைத்திருக்க…..

“நான் தான் சாரி கேட்டு விட்டேனே அப்படியிருந்தும் என்னக் கோபம்”, என்று கனியும் சுணங்கிக் கொண்டாள்.

இருவருக்குள்ளும் சண்டை என்பது போல ஒரு தோற்றம் வந்தது.    

கனியின் அம்மா வீட்டினர் இப்போதுதான் வீடு கட்டிக் கொண்டிருப்பதால் கனியும் ஆகாஷும் இரவும் அண்ணாமலை வீட்டில் தான் தங்கினர்.

இரவில் ராகவும் அக்ஷியும் அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக்கொண்டதால் கனிமொழிக்கு பேச வாய்ப்பில்லாது போயிற்று. 

ஆகாஷும் பேச முயற்சிக்கவில்லை. “போடா டேய்! போடா! பார்த்துக்கறேண்டா உன்னை!”, என்று கனி மனதுக்குள் சபதம் எடுத்தது ஆகாஷிற்கு தெரியாது. தெரிந்திருந்தால் சண்டையை விட்டு சமாதானம் ஆகியிருப்பான், ஆனால் அவனுக்கு தான் தெரியாதே.

அடுத்த நாள் டிரஸ்ட்டின் ஆறாவது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடந்தது. அன்று அவர்களின் இல்லத்தில் இருக்கும் மூன்று விதவை பெண்களுக்கு தேவிகாவும் கனிமொழியின் அம்மாவும் தாலி எடுத்துக் கொடுக்க அவர்களுக்கு திருமணமும் நடந்தது.

கனியின் யோசனை தான் அது. வாழ்க்கையில் துணை இல்லாமல் இருப்பது என்பது மிகக் கொடுமை. எந்த வயதில் நிகழ்ந்தாலும் அது பெரும் கொடுமையே. ஆனாலும் அது இளம் வயதில் நடக்கும் பொழுது இன்னும் கொடுமை.

ஆரம்பத்தில் உடலில் வலுவும் மனதில் தெம்பும் இருக்கும் போது இப்படியே இருந்துவிடுவோம் என்று பல பெண்கள் நினைப்பது தான். ஆனால் அவர்கள் ஒரு துணையை திருமணம் செய்திருக்கலாமோ என்று நினைக்கும் போது காலம் கடந்திருக்கலாம், இல்லையென்றால் எடுத்து செய்ய ஆளில்லாமல் இருக்கலாம்.    

பெண்களுக்கு திருமண வயதாகியும் திருமணமாகாமல் இருப்பது கொடுமை. அதை விடவும் கொடுமை வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்து, அதன் சுகங்களையும் அறிந்து பின் கணவன் இறந்தப் பின் அது மறுக்கப்படுவதும்.  

அதனைக் கொண்டே இந்த வருடம் தான் புதிதாக இதை அவர்கள் முடிவெடுத்து விதவை பெண்களுக்கும் உற்ற விருப்பம் இருந்த மணமகனைக் கொண்டு நடத்தியிருந்தனர்.

ஆகாஷுடன் போட்ட சண்டையெல்லாம் கனியிடம் பின்னுக்குப் போயிருந்தது. இப்போது அவளின் மனதில் இருந்ததெல்லாம் இந்தப் பெண்கள் நன்றாக வாழவேண்டும் என்பதே.

தனக்கு கிடைத்தது போல ஒரு துணை எல்லோருக்கும் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக நடக்கும் விஷயம் என்பது தெரியும். ஆகாஷின் மேல் காதல் உணர்வு கரைகாணமல் தோன்றியது. 

அந்த பிரார்த்தனையோடே ஒரு மோன நிலையில் இருந்தாள். எல்லாம் நல்லபடியாக முடிந்து மதிய விருந்தும் அங்கேயே உண்டு அவர்கள் கிளம்பினர்.

ராஜி தான் ஆகாஷையும் கனியையும் கவனித்துக் கொண்டிருந்தாள், இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமல் முகம் திருப்பிக்கொண்டிருப்பதை பார்த்து, “என்னப் பிரச்சனை அக்கா”, என்று கனியிடம் மெதுவாக கேட்டாள்.

கனியும் பாவம் போல ஒரு காரணத்தை சொல்ல…… “இதுக்கா சண்டை! தப்பு உங்க மேலதான் அக்கா இனிமே இப்படி செய்யாதீங்க”, என்றாள்.

ராஜி பேசியது ஆகாஷிற்கும் கேட்டது. “என்னச் சொல்லி வெச்சாளோ தெரியலியே?”, என்று அவன் டென்சன் ஆகிவிட்டான். அனிதாவைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை தப்பாக பேசுவதை அவன் விரும்பவில்லை.

அவன் அதே பதட்டத்தோடு இருக்க…. ராஜி அந்த விஷயத்தை செந்திலிடம் சொன்னாள்.

செந்தில் ஆகாஷிடம் வந்து, “ஏண்டா டேய் இதுக்கா சண்டை? போடா போ! தெரியாம சொல்லுவா! நீ தான் பக்குவமா சொல்லணும்!”, என்றான்.

ராஜி அதை தேவிகாவிடம், கனிமொழி அம்மாவிடம் என்று எல்லோரிடமும் கூற…… ஆளாளுக்கு இப்படி செய்யக்கூடாது என்று கனிமொழிக்கு அட்வைஸ் செய்தனர். அவர்கள் கனிமொழிக்கு தான் செய்தனர். இருந்தாலும் இப்படி அனிதா விஷயத்திற்கு பிரச்சனை வந்ததை எல்லோரிடமும் சொல்லி விட்டாளே என்று கோபமாக வந்தது ஆகாஷிற்கு.

அதனால் வந்தவுடனே ஊருக்கு கிளம்பிவிட்டான். அண்ணாமலை ராகவையும், அக்ஷராவையும், நந்தனையும் நிறுத்திக் கொண்டார். “இன்னும் ரெண்டு நாள்ல நான் கொண்டு வந்து விடறேன்”, என்று.

ராகவும் அக்ஷியும் பூரணி பிரபுவுடன் சேர்ந்து லூட்டி அடித்துக் கொண்டே அவர்களும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க…….. “நான் பார்த்துக்கறேன்”, என்று ராஜி சொன்ன பிறகே அவர்களை விட்டுக் கிளம்பினான் ஆகாஷ்.

காரில் ஏறியது தான் தெரியும் உடனே உறங்க ஆரம்பித்தாள் கனி….

“கும்பகர்ணி தூங்கறதப் பாரு! சண்டை போட்டதும் இல்லாம, அதை எல்லார்கிட்டயும் சொல்லி வெச்சி, இப்படி எல்லார்கிட்டயும் அட்வைஸ் வாங்கிட்டு வரா”, என்று நினைத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

நடுவில் டீ குடிக்க எழுப்பிய போது கூட…. “எனக்கு வீட்டுக்கு போனவுடனே வேலை இருக்கு! டிஸ்டர்ப் பண்ணாதீங்க”, என்றாள்.

“போடி!”, என்று நினைத்தவன் அப்படியே விட்டுவிட்டான்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விட்டனர். இருந்த சஞ்சலத்தில் சரியாக அனிதாவிடம் கூட பேசாமல் போய் படுத்துக்கொண்டான்.

அனிதாவிடம் ஊரில் நடந்ததையெல்லாம் சொல்லி, கனி ரூமிற்குள் சென்ற போது ஒரு மணி நேரத்திற்கு மேலேயே ஆகியிருந்தது.

படுக்கையில்  படுத்து கண்களை மூடியிருந்தான். சண்டையை இனிமேலும் இழுக்க வேண்டாம் என்று நினைத்த கனி அவனை சமாதானப்படுத்துவதற்காக அவனின் பக்கத்தில் நெருங்கி படுத்து ஒரு இயற் போனை அவனின் காதில் மாட்டி மற்றொரு இயற் போனை இவளின் காதில் மாட்டி பாட்டை ஓட விட்டாள்…..

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்                                                                                 அந்தி மாலக் காத்து வழியா                                                                                                                    வந்துச்சா வந்துச்சா                                                                                                                    சொல்லு சொல்லு…..

என்றது.                                       

அவளின் அருகாமையே அவனை இம்சை செய்யும் அளவுக்கு நெருங்கி படுத்திருந்தாள். அவனும் விலக, அவளும் நெருங்க கட்டிலின் விளிம்பிற்கே வந்திருந்தான்.

“இப்போ என்ன தான் செய்யனுங்கற”, என்றான் அவள் பக்கமாக திரும்பி,

“சமாதானமா போயிடலாம்”, என்றாள் இன்னும் முழுதாக அவன் மேல் சாய்ந்துக் கொண்டு…..

இப்படிக் கேட்டால் அவனும் தான் என்ன செய்வான்…… “நீ அப்படி செஞ்சிருக்கக் கூடாது”, என்றான்.

“எப்படி?”,

“நம்ம சண்டை நம்ம வரைக்கும், எதுக்கு எல்லோர் கிட்டயும் சொன்ன? அவங்க அனியைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க”, என்றான் வருத்தமாக……

“டேய் மடையா!”, என்றவள், “நான் அண்ணியைப் பத்தியோ உங்க மாமாவைப் பத்தியோ   ஒண்ணுமே பேசலை”, என்றாள்.

“ஹப்பாடா”, என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டவன் எழுந்து உட்கார்ந்து, “அப்போ என்னச் சொன்ன? ஆளாளுக்கு உனக்கு அட்வைஸ் பண்ணினாங்க”, என்று அவன் கேட்க…….

விஷமமாக சிரித்தாள், அவள் சிரித்த விதமே ஏதோ குறும்பு செய்திருக்கிறாள் என்று புரிய, “என்னடி செஞ்ச?”,

“சொல்ல மாட்டேண்டா”, என்று சொன்னவள் சிரித்தாள்.

“எதுக்கு சிரிப்பு”, என்றுக் கேட்க……. இப்போது சிரிப்பு பெரிதாகி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“ஏய் பிசாசு! சொல்லிட்டு சிரிடி”, என்றுச் சொல்ல…..

“ராஜி என்ன சண்டை உங்களுக்குள்ளன்னு கேட்டா……..”,

“கேட்டாளா?……..”,  என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள்.

அவன் டென்சனில் முறைக்கவும்……..

“அதனால சும்மா அவளைக் கலாய்ச்சேன், அவ ஊர் பூராவும் சொல்லிட்டா. எனக்கு ஆளாளுக்கு அட்வைஸ்”, என்று சொல்லி சிரித்தாள்.

அவன் மீண்டும் முறைக்கவும் விஷயத்தை சொன்னாள்.

“நீங்க என்கிட்ட ராகவ்க்கு ஒரு தம்பி பாப்பாவோ இல்லை தங்கச்சி பாப்பாவோ வேணும்னு கேட்டு இருக்கீங்க…. நான் தள்ளிப் போட்டுட்டே இருக்கேன், அதுக்கு சண்டைன்னு சொன்னேன்”,

“அவ அதை சீரியஸா நினைச்சு எனக்கு குழந்தைப் பெத்துக்க அட்வைஸ் பண்ணிட்டு போனா”, என்று சிரிக்க ஆகாஷின் முகம் புன்னகைக்கு மாறியது.

“அது மட்டுமில்லை அவ எல்லோர் கிட்டயும் இதை சொல்லி எங்கம்மா, தேவிகாம்மா, எல்லோரும் எனக்கு குழந்தை பெத்துக்கச் சொல்லி அட்வைஸ், என்னாலா முடியலை….”, என்று சொல்லி சிரிக்க…..

“போடி பிசாசு! மொத்ததுல என் மானத்தை வாங்கியிருக்க. செந்தில் வேற என்கிட்ட வந்து இதெல்லாமா சொல்லுவாங்க, பார்த்து பக்குவமா நடந்துக்கோடான்னு சொன்னான்”, என்று சொல்ல……

இன்னும் சிரித்தாள் கனி.

“செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு, சிரிக்குற! இரு முதல்ல ராகவ்க்கு தம்பி பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ ரெடி பண்ணிட்டுத் தான் வேற வேலை!”, என்று அவன் சொல்ல…..

“அதான் நான் கார்லயே சொன்னேனே! எனக்கு வீட்டுக்குப் போனவுடனே நிறைய வேலை இருக்குன்னு! உங்களுக்கு  புரியலைன்னா?……..”, என்று சொல்லி கண்ணடிக்க…….

அவள் தலையில் செல்லமாக முட்டினான்.

இருவருக்குமே முகம் கொள்ளா சிரிப்பு, மகிழ்ச்சி கூடிய வெட்கம்,…….

ஆகாஷ் பார்த்து பக்குவமாக நடக்க ஆரம்பிக்க……. 

இப்போது ஸ்டீரியோவில்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ………..

என்றுப் பாடியது.

                      முற்றும்                           

           

                  

                    

                                      

 

               

Advertisement