Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

அடுத்த நாள் ஆகாஷ் சற்று தெளிவாகி இருந்தான். காலையில் கனி எழுமுன்னே அவளின் குடும்பத்தை ஊரிலிருந்து அழைத்து வர காரை அனுப்பியிருந்தான்.

அவள் எழுந்தப் பிறகு தான் அவளுக்கு தெரியும். “சொன்னா ட்ரெயின்ல வந்திருப்பாங்க!”, என்றாள்.

“அவங்க வர்றேன்னு சொன்னப்போ நாம தான் தள்ளிப் போட்டோம்! இப்போ கிளம்பி வாங்கன்னு சொன்னா மரியாதையாவா இருக்கும்! அதான் அனுப்பினேன்…..”, “அசோக்கிட்டயும் மதியத்துக்கு மேல கிளம்பற மாதிரி ரெடியா இருக்க சொல்லிட்டேன்!”, என்றான்.

“இன்னைக்கு நீங்க கம்பெனிக்கு போக வேண்டாமா?”,

“போகனும்! ஆனா அவங்க வரும் போது வந்துடுவோம்…….”,

“அண்ணியும் வர்றாங்களா!”,

“ம்! வருவா! ஆனா அவ கொஞ்ச நேரத்துல திரும்ப வந்துடுவா……”, என்று சொல்லியபடியே கிளம்பினர் ஆகாஷும் அனிதாவும்.

கனியின் அப்பாவும், அம்மாவும், அவள் சிறிய தங்கை லக்ஷ்மியும், வந்தனர். அவர்கள் வரும்போதே நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருந்தது.

கனியின் பெற்றோர்களுக்கு அவர்களின் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்தே ஆச்சர்யம்! வீட்டின் உள்புறம் இன்னும் பயமுறுத்தியது, அதன் செல்வச் செழிப்பு…….. சினிமாவில் தான் இது போல ஒரு வீட்டை பார்த்திருந்தனர் அவர்கள்.

“வாங்க மாமா, வாங்க அத்தை என்று முறைமை வைத்து அனிதா ஆர்வமாக வரவேற்றாள்.    

“வாங்க!”, என்ற ஆகாஷ்……. “இது என் அக்கா!”, என்று அறிமுகப்படுத்தினான். பார்வையால் அவளை எடை போட்டனர் கனியின் பெற்றோர்.

“பார்க்க நல்லா இருக்கு! சொத்து பத்தும் எக்கச்சக்கமா இருக்கும் போல! அப்புறம் எப்படி அந்த அண்ணாமலை கிட்ட விழுந்தது!”, என்ற கேள்வியே அவர்களின் மனதிற்குள், ஆனாலும் முகத்தில் ஒன்றும் காட்டவில்லை.  

முன்பு கனியை கொடுத்த வீடும் வசதிதான். ஆனால் இவ்வளவு இல்லை. அதுவுமில்லாமல் அங்கே எல்லாமே பழமை! இங்கே எல்லாமே புதுமை! வீடே பளபளவென்று இருந்தது.

தங்களின் பெண்ணை பார்த்த அவர்களின் முகத்தில் மிகவும் திருப்தி….. கனியின் அழகு இங்கு வந்த பிறகு அதிகரித்திருப்பதாகவே தோன்றியது. ஆகாஷின் அருகாமை அவளின் முகத்தில் பொலிவை கூட்டி ஒரு பூரிப்பைக் கொடுத்திருந்தது.

“குழந்தை எங்க கண்ணு?”,

“தூங்கறான்மா!”, என்றாள் கனி.

“தூக்கிட்டு வா கனி”, என்று அனிதா சொல்ல, தூங்கும் குழந்தையை எடுத்து வந்தாள்.

அவர்களுக்கு உடனே ஒரு ரூமை காட்டினாள் கனி……. “அம்மா முகம் கைகால் கழுவிக்கோங்க, சாப்பிட்டு அப்புறம் பேசலாம்!”, என்றாள்.

“நீ இங்க சந்தோஷமா இருக்கியா கண்ணு?”, என்றார் அவளின் அம்மா.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நல்லா பார்த்துக்கறாங்க! அவங்க மட்டுமில்லை, அண்ணி கூட நல்லா பார்த்துக்கறாங்க!”, என்றாள்.   

அவளின் முக மலர்ச்சியே அவள் பேசுவது முற்றிலும் உண்மை என்று புரிந்தது.

அவளின் தங்கை அவளை பேச்சிற்கு பிடித்துக்கொள்ள……… பின்பு அவர்கள் வந்த போது டைனிங் டேபிள் முன்பு பெரிய விருந்தே இருந்தது.

“ராத்திரி நேரம் கனிம்மா, எப்படி இவ்வளவு சாப்பிடறது”, என்று கனியின் அப்பா அவளிடம் மெதுவாக கூற…….

“முடிஞ்சவரைக்கும் சாப்பிடுங்க அப்பா! கஷ்டப்படுதிக்கனும்னு அவசியம் இல்லை!”, என்றாள். 

சாப்பிட்டு முடித்தவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவளின் அப்பா, “கடவுள் இருக்கார்மா! இருக்கார்!”, என்றார் சம்மந்தமில்லாமல்.

“என்னப்பா?”, என்று கனி கேட்க……..

“அந்த குமரேசு பய இல்லை…….. முந்தா நேத்து ஒரு பஸ் ஆக்சிடென்ட்ல செத்து போயிடான்மா….. எனக்கு தகவல் வந்துச்சி, போகலாமா வேணாமான்னு ஒரே யோசனையா இருந்தது, அப்புறம் செத்தே போயிட்டான். இன்னும் என்ன விரோதம்னு போயிட்டு வந்தேன்மா!”, என்றார்.

அனிதாவும் கனியும் ஆகாஷைப் பார்க்க………. அவன் ராகவிற்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தான். இவர்களின் பேச்சை கவனித்ததாகவே தெரியவில்லை.

அது அவன் வேலை என்பது அவர்களுக்கு புரிந்தது. கனியின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தெரியவில்லை. அவர்கள் அவனின் சாவை கதையாக சொல்லிகொண்டிருக்க…… வேறு ஏதோ பேசி பேச்சை மாற்றிவிட்டாள் கனி.

உறங்கும் நேரம் தனிமையில், “இது தப்பில்லையா!”, என்றாள் ஆகாஷிடம்….

“தப்பு தான்! ஆனா நம்ம கிட்ட வேற வழியே கிடையாது. நான் இதை செய்யலைன்னா அவன் இதை நம்மகிட்ட செஞ்சிருப்பான். அதுவுமில்லாம அறிவரசோட சாவுக்கு நாம ஒரு நியாயம் செய்ய வேண்டாமா….. இதை இதோட விட்டுடு இனிமே பேசாத…..”,

கனியும் அதோடு அதை விட்டாள்.

அடுத்த நாள் அவள் எழும்போதே வீடு பரபரப்பாக இருந்தது.

“என்ன விஷயம்”, என்பது போல அனிதாவை பார்க்க……

“உன் வீட்டுக்காரன் தான்! குழந்தைக்கு இன்னைக்கு பேர் வைக்கனுமாம்…… ஏண்டா இவ்வளவு அவசரம்னா இதுவே லேட்ங்கிறான்…. சரி சீக்கிரம் போய் குளிச்சிட்டு தயாராகு! எட்டு மணிக்கு அய்யர் வந்துடுவார்!”, என்றாள்.

“ஏன் என்கிட்ட சொல்லலை அண்ணி?”,

“எனக்கே காலையில தான் தெரியும் கனி! அஞ்சு மணிக்கு எழுப்பி சொல்றான்……”,

“இப்போ அவர் எங்கே?”,

“எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் மோஸ்ட்லி சென்னை தான்! எல்லோரையும் அழைக்க போயிருக்கான்”, என்று அவள் சொல்லும்போதே……..

“அப்பா!”, என்ற நந்தனின் குரல் உற்சாகமாக கேட்க……. அவர்கள் வாசலைப் பார்த்தால் அண்ணாமலை வந்து கொண்டிருந்தார். நந்தன் ஓடிப்போய் அவர் மீது தாவி ஏறினான்.

அவரைப் பார்த்ததும் அவரின் அருகில் விரைந்து சென்ற அனிதா, “நீங்க எப்போ கிளம்புனிங்க சொல்லவேயில்லை”,

“நானா? நான் ராத்திரி பத்து மணி ட்ரெயின்க்கு கிளம்பினேன். ஆகாஷ் தான் சஸ்பென்சா வாங்கன்னான்”,

அதற்குள் வீட்டின் முன்புறம் தோட்டம் இருந்த இடம் சீர் செய்யப்பட்டு…… சாமியானா போட்டு……… விருந்துக்கு அமர்வது போல டேபிள் சேர் எல்லாம் நிறைய போடப்பட்டது.

“இத்தனை எதற்கு? யார் சாப்பிட வருகிறார்?”, என்று கனிமொழியும் அனிதாவும் விழித்தனர்.

கனியின் அப்பா வந்து, “இன்னைக்கு குழந்தைக்கு பேர் வைக்கறது கூட உங்க கல்யாண விருந்தாமே கனி”, என்றார்.

அவர் சொல்லும்போதே ஆகாஷ் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

“என்கிட்ட கூட ஏண்டா சொல்லலை!”, என்று அனிதா கோபப்பட……

“எல்லாமே திடீர் பிளான் தான் அனி!”,

“காலைல கூட சொல்லலை…..”,

“மாமா வர்றார்! ஒரு சர்ப்ரைஸ் இருக்கட்டும்! நந்தன் அவரை ரொம்ப தேடினான்னு சொல்லலை”,

“எல்லோரையும் கூப்பிட்டியா”,

“ம்! ஆச்சு!”, என்று அவன் சொல்லும்போதே அவனின் உறவுகள் வரத் துவங்க…..

“வாங்க பெரியப்பா! வாங்க பெரியம்மா!”, என்று அனிதா அவர்களை நோக்கி விரைந்தாள், கூடவே அண்ணாமலையும், “நீங்களும் வாங்க”, என்று கூட்டிக்கொண்டு போனாள்.

“எங்க சைட்?”, என்று கனி கேட்க……..

“அசோக்கும் செந்திலும் இந்நேரம் கூட்டிட்டு கிளம்பியிருப்பாங்க, முதல்ல அவனுக்கு பேர் வைப்போம்! சீக்கிரம் போய் ரெடியாகு! அவனையும் ரெடி பண்ணு!”, என்றான்.

கனிக்கு யோசிக்க அவகாசமே இல்லை…….. விரைந்து சென்றாள் ரெடியாக, “என்ன சேலை கட்டட்டும்?”,

“இப்போ சிம்பிளா ஏதாவது கட்டிக்கோ! அவனுக்கு பேர் வெச்சு ஹோமம் முடிஞ்சதும் கிராண்டா கட்டுவியாம்!”, என்றான்.

“நான் புதுசு தான் கட்டுவேன்! இப்போ என்கிட்ட இல்லை!”, என்றாள்.

“அழகி……!!!!”, என்று செல்லமாக கத்தியவன்……. “கேவலப்படுத்தாதடி! நம்ம தான் தமிழ்நாட்லயே ஹோல் சேல்ல பெரிய டீலர்ஸ் நம்மகிட்ட இல்லாததா! நீ டெய்லி கூட புதுசுக் கட்டலாம்”,

“அப்போ நான் டெய்லி கூட புதுசுக் கட்டலாமா?”,

“டெய்லி இல்லை, காலைல, மத்தியானம், ராத்திரின்னு கூட புதுசுக் கட்டலாம், போ! போய் குளி!”, என்று பாத்ரூமிற்குள் தள்ளி சென்று விட்டவன்……..

“ஏதாவது ஹெல்ப் வேணுமா?”, என்றான் குறும்பாக.

“ஹெல்ப்னா எப்படி?”, என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல…..

“இந்த ட்ரெஸ் கழற்றதுல ஹெல்ப் பண்றது! தண்ணி எடுத்துக்குடுகறதுல ஹெல்ப் பண்றது! இந்த சோப்பு போடறதுல ஹெல்ப் பண்றது! இப்படி……!”, என்று அவன் இன்னும் குறும்பாக சொல்ல…..

“அப்படியா! நான் கூட நீங்க போய் வெளில நின்னுட்டு எனக்கு பதிலா கதவை வெளில இருந்து நீங்க தாழ்பாள் போடறீங்களோன்னு நினைச்சேன்!”, என்றாள் பாவனையாக…..

இருவருக்குமே முகம் கொள்ளா சிரிப்பு. அந்த க்ஷணத்தை இருவருமே அனுபவித்தனர். 

அவள் தலையில் செல்லமாக முட்டினான். “சீக்கிரம் குளிச்சிட்டு வா!”, என்றபடி அவன் வெளியே சென்றான்.    

 அவள் மனமேயில்லாமல் குளிக்கப் போனாள். குளித்து விட்டு வரும்போது… இரண்டு பெரிய பண்டல் இருந்தது……. ஒரு பண்டலில் சிம்பிளானா பட்டு சேலைகள்……

“என்கிட்ட மேச்சா ப்ளௌஸ் இருக்காதே”,

“உன்கிட்ட மேட்சிங் ப்ளௌஸ் இருக்குற சேரியா எடு! அதுக்கு தான் ஒரு பெரிய பண்டலே கொண்டு வரச் சொன்னேன்……..  பேர் வைக்கும் போது கட்டிக்கறதுக்கு…… எடு……”,

“லூசு, எல்லாம் அவசரம்!”, என்று திட்டிக்கொண்டே எடுத்தாள்…..

அடுத்த பண்டலைக் காட்டி……… “இப்போ இதுல ஒண்ணு எடு! அப்புறம் கட்ட!”,

“இதுவும் மேட்ச் ப்ளௌஸ் இருக்குற மாதிரியா?”,

“இல்லை, எதுவேணா எடு! ஒரு ஒன் ஹௌர்ல வந்துடும்!”, என்றான்.

“எதுக்கு இவ்வளவு அவசரம்! பொறுமையா பண்ணலாம் தானே!”,

“பேச டைம் இல்லை கனி! அப்புறம் சொல்றேன்! வெளில கெஸ்ட் இருக்காங்க! நம்ம உள்ள புகுந்துட்டு இருக்க முடியாது, சீக்கிரம் வெளிய வா!”,    

“எப்படி விருந்து ஏற்பாடு செஞ்சு எல்லாம் நீங்களே பார்ப்பீங்க…..”,

“அதெங்க நான் செய்வேன்! அதுக்கு ஈவென்ட் மேனேஜ் செய்யற ஆளுங்க கிட்ட சொல்லிட்டேன்! எல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க! நம்ம ரெடி ஆனா போதும்!”, என்றான்.

புடவை மட்டுமல்ல நகைகளும் எல்லாமே புதிதாக வந்தன……

அய்யர் ஹோமம் வளர்க்க…….. குழந்தையுடன் அமர்ந்த ஆகாஷும் கனிமொழியும்,  வீர ராகவன் என்கிற ராகவ் என்று பெயர் சூட்டினர்.

அதன் பிறகு வந்த உறவுகளை ஆகாஷ் கவனிக்க ஆரம்பித்தான்……. அன்று அவர்களின் அத்தனை தொழில் நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு…….. வீட்டில் திருமண விருந்து என்று சொல்ல……. எல்லோரும் அங்கு வர ஆரம்பித்தனர்.

வர வர விருந்து நடந்துகொண்டே இருந்தது……. ஒரு பக்கம் பரிமாற உணவு விருந்து நடைபெற……… இன்னொரு பக்கம் பஃபே சிஸ்டம் நடைபெற….. விருந்து அமர்க்களப்பட்டது…….

கனி அழகாக தயாராகி வர……. அங்கிருந்த எல்லோருக்கும் பெண்ணைப் பார்த்ததும் அவ்வளவு திருப்தி…… யாரும் முன் நடந்தவைகளை பற்றி பேசவில்லை….

எல்லோரிடமும் கனியை அறிமுகப்படுத்தி வைத்தான். “இது எங்க அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா”, என்று தனித் தனியாக அறிமுகப்படுத்தினான்.

அவனின் மாமா கூட கிண்டல் செய்தார், “இப்படி ஒரு அழகியை பிடிக்க தான் இத்தனை நாள் கல்யாணத்தை தள்ளிபோட்டியாடா”, என்று…   

அங்கிருந்த பெண்மணிகளும் அவளின் குழந்தையை ஆர்வமாக வாங்கி கையில் வைத்திருந்தனர்.

கனிக்கு இப்போதுதான் மிகவும் நிம்மதியாக இருந்தது. 

மாலை  நெருங்கும் நேரம் இரண்டு பஸ் முழுக்க கனியின் அம்மா, அப்பா வகை சொந்தங்களோடு அசோக்கும் செந்திலும் வந்தனர்…..

வந்தவுடனே செந்தில் தனியாகப் போய் ஆகாஷை திட்டினான். “ஏண்டா, கொஞ்சம் முன்னாடியே சொல்லக் கூடாது! நேத்து நைட் சொல்ற! எங்களுக்கு இவங்க எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்து வண்டி எடுக்கறதுக்குள்ள….. ஒரு வழியாயிட்டோம் போ!”,  

“என் பொண்டாட்டி தான் சரியான பிடிவாதம்ன்னு நினைச்சா, எனக்கு நண்பன்னு வாய்ச்சவனும் அப்படியேவா இருக்கனும்…….. இரு! முதல்ல இது நல்லபடியா முடியட்டும்! அப்புறம் இருக்குடா உனக்கு!”, என்றான்.

“நண்பன்டா நீ!”, என்று ஆகாஷ் டையலாக் அடித்தான். பக்கத்தில் இருந்த கனிக்கு சிரிப்பு வந்தது.

“எல்லாம் அவசரம்டா உனக்கு!”, என்றபடி செந்தில் போக….. கனி இப்போது நன்றாக சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கற…….?”,

“உங்களுக்கு அவசரமாம்!”, என்று மறுபடியும் பொங்கி பொங்கி சிரித்தவள்………

“முப்பது வயசாகியும் ஒரு லிப் லாக் கூட பண்ணாம இருந்த உங்களுக்கு அவசரமாம்…… இத்தனை வருஷம் பிரம்மச்சாரியா இருந்தது ஓகே…….. கல்யாணம் ஆகியும் பத்து நாளா பிரமச்சாரியா இருக்குற உங்களுக்கு அவசரமாம்”, என்றாள்.  

ஆகாஷிற்கு சிரிப்பு வந்தாலும்……… “ஏதாவது பேசின, இப்படியே ரூமுக்கு தள்ளிட்டு போயிடுவேன்!”, என்று அவன் சீரியஸ் போல சொல்ல…….

“அண்ணி கூப்பிடீங்களா! இதோ வந்துட்டேன்!”, என்று சொல்லிக்கொண்டே சற்று தூரத்தில் இருந்த அனிதாவின் பக்கத்தில் சென்று நின்று கொண்டு ஆகாஷைப் பார்த்து பழிப்புக் காட்டினாள் கனி…..

“இரு! நீ தனியா மாட்டாமயா போயிடுவ!”, என்று உதட்டை அசைத்து……. முகம் முழுக்க சிரிப்போடும் நெஞ்சம் முழுக்க சந்தோஷத்தோடும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஆகாஷ்.         

அருகில் இருந்த ஒரு ஹோட்டல் முழுவதும் கனியின் உறவுகளுக்கு புக் செய்திருந்தான்.  அவர்களும் தயாராகி வர……

கனிமொழி ஆகாஷின் திருமண விருந்து வெகு சிறப்பாக நடந்தது. 

அனிதாவும் அண்ணாமலையும் யாரும் எந்த குறையும் சொல்ல வழியில்லாமல் எல்லோரையும் நன்றாக கவனித்தனர். நந்தன் அண்ணாமலையை விட்டு நிமிஷமும் நகரவில்லை. அப்பா அப்பா என்று பின்னாடியே சுற்றினான். 

செந்திலிடம் கனி கேட்டாள், “ஏன் அண்ணா ராஜியைக் கூட்டிட்டு வரலை…?”,

“ராஜியா….?”, என்று கனியிடம் கேட்டவன்……. “அவ இங்க வரமாட்டா கனி…….!”,

“ஏன்?”, என்று கனி கேட்க……

“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது…… அப்புறமே உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ”, என்றவன்……. 

அண்ணாமலையின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தனை காட்டினான்.  “இதையெல்லாம் பார்த்தா…. பொங்கிடுவா!”,என்று மட்டும் சொன்னான்.  

சமயம் கிடைத்த போது கனி மெதுவாக ஆகாஷிடம், “என் தங்கை ப்ரியாவை கூப்பிடலையா? அவளை மட்டும் காணோம்!”,

“கூப்பிட்டேன்! அவ மட்டும் தனியா வரமுடியாது இல்லையா! நம்ம வீட்டுக்கு ஃபஸ்ட் டைம் வரப்போறா, எப்படி புருஷனை விட்டுட்டு வருவா?”,

“ஏன்? அவ புருஷனுக்கு என்ன ஆச்சு?”,

“அவ புருஷனோட அண்ணன் ரத்னம்ன்னு ஒருத்தன் இருக்கானாமே…… அவன்  பைக்ல போகும்போது ஏதோ பள்ளத்துல விழுந்துட்டானாம்…….. ரெண்டு கால்லையும் நல்ல அடி போல! இன்னைக்கு ஆபரேஷனாம்! அவங்க அப்பா அம்மா அழவும், அந்த மாப்பிள்ளை பையன் ஏதோ ஒத்தாசைக்கு கூடப் போயிருப்பான் போல, அதான் வரலை!”, என்றான் எதுவும் தெரியாதவன் போல.

அவன் தான் இதற்கும் காரணம் என்று நினைத்து…… “உங்களை!!!!!”, என்று அவள் பல்லை கடிக்க…….

“நோ! நோ! நோ! நாட் மீ……! நோ டெரர் லுக் ஆன் மீ…….இது அவனுங்க…”, என்ற அவன் கையைக் காட்ட, அவன் கையை காட்டிய புறம் செந்திலும் அசோக்கும் இருந்தனர்.

கனி அவர்களை போலியாக முறைத்தாள்.

“என்னடா கத விட்டுட்டு இருக்க அவகிட்ட”, என்று செந்தில் குரல் கொடுக்க…..

“உங்க ரெண்டு பேருக்கும் ரத்னம்னா யாருன்னு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் அவனை பைக்ல இடிக்கற மாதிரி போகலை……. அதனால அவன் பயந்து தடுமாறி பள்ளத்துல விழலைன்னு சொல்லிட்டு இருந்தேன்…..”, என்றான் புன்னகையுடன்….

“ஒஹ்! நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டியா நீ!”, என்று செந்தில் சொல்ல……..

“அதை நான் வேற சொல்லனுமா? எல்லாருக்கும் தெரியும்டா”, என்று ஆகாஷ் சொல்ல..

“உன்னைவிடவாடா ….”, என்று பதிலுக்கு செந்தில் சொல்ல…..

“அட, நீங்கல்லாம் கொஞ்சம் நிறுத்தறிங்களா! உங்க எல்லோர் பெருமையும் எனக்கு நல்லாத் தெரியும்! இப்போ வந்தவங்களை கவனிங்க போங்க!”, என்று கனிமொழி சிரிப்போடு அவர்களை விரட்டினாள். 

நல்லபடியாக அன்றைய விருந்து காலையில் இருந்து மாலை வரை நடந்தது. மாலை விருந்துக்கு வந்த எல்லோரும் கிளம்பினர். ஆகாஷின் உறவினர்கள் எல்லோரும் சென்னை என்பதால் அவர்களும் வீடு கிளம்பிவிட்டனர்.

கனியின் உறவுகள் எல்லாம் ஒரு நாள் தங்கியிருந்து சென்னையை சுத்திப் பார்ப்பது என்று ஆக……. அவர்கள் எல்லோரும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

எஞ்சியிருந்தது கனியின் குடும்பமும், செந்திலும், அண்ணாமலையும் தான்.

காலையில் இருந்து அலைந்து திரிந்ததில் கனி மிகவும் ஓய்ந்திருந்தாள்…… படுத்தால் தேவலாம் போல தோன்றியது. ஆனால் எல்லோரும் இருக்கும் போது எப்படி தூங்குவது என்றும் இருந்தது.

அவளை கவனிப்பதே தான் தலையாய கடமையாய் கொண்டிருந்த ஆகாஷிற்கு அவளின் அயர்ச்சி புரிய, “நான் எல்லோரையும் பார்த்துக்கறேன் நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு”, என்றான்.

“ராகவ்”, என்றாள் பரிதாபமாக.

“அவனுக்கு நீ தேவைன்னா நான் எழுப்பறேன்”, என்று சொல்லி அனுப்பினான்.

இரவு எட்டு மணிக்கே கனிக்கு நல்ல உறக்கம் வந்தது. நடுவில் ராகவிற்கு அவள் தேவைப்பட்டபோது ஆகாஷே தான் அவளை எழுப்பினான். ராகவிற்கு பசியாற்றியவள் மீண்டும் அவனிடமே குழந்தையைக் கொடுத்து படுத்துக்கொண்டாள்.

“இவளுக்கு கும்பகர்ணனே தேவலாம் போலவே!”, என்று நொந்துக் கொண்டான் ஆகாஷ்.

எல்லோரையும் பார்த்து பேசி அவர்கள் எல்லாம் தூங்க ரூமிற்குள் சென்ற பிறகு ஆகாஷ்…….. மறுபடியும் ரூமிற்கு வந்த போது மணி இரவு பன்னிரெண்டு என்றது.

அவன் தூங்க படுக்கையில் படுத்ததும், தூக்கம் கலைந்தது கனிக்கு. எழுந்து உட்கார்ந்தவள், “எதுக்கு அவசரமா இந்த விருந்து”, என்றாள்.

“நீ தூங்கிட்டு தானே இருந்த”,

“இந்த மண்டையை குடையற விஷயத்தை கேட்காம சரியாத் தூங்கலை”,

“சரியா தூங்காதப்போவே இப்படின்னா, இன்னும் விஷயத்தைச் சொன்னா”,

“இன்னைக்கு தூங்கி நாளைன்னைக்கு காலையில தான் எழுந்துகுவேன்”, என்றாள்.

“ஒண்ணும் விஷயமில்லை! எங்க சித்தப்பாகிட்ட நேத்து தான் பேசினேன். எனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொன்னேன். அவர் கல்யாணம் யாருக்கும் தெரியாம நடந்துடுச்சு, உடனே எல்லோருக்கும் சொல்ல வேண்டாமா, அதுதானே நீ அந்த பொண்ணுக்கு குடுக்கற மரியாதைன்னு திட்டினார்”,

“அவர் சொல்லறது எனக்கு சரின்னு பட்டது. என்னவோ இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஆடி மாசம் பொறக்குதாமே….. இன்னைக்கு தான் கடைசி முகூர்த்த நாள், வரவேற்பு மாதிரி வைக்கலைன்னாலும் உடனே ஒரு விருந்து கொடுத்துடுன்னார். அதான் உடனே இந்த ஏற்பாடு….. எங்கப்பாக்கு பிறகு இப்போதைக்கு எங்க வீட்டுக்கு அவர் தான் பெரியவர்…. எங்கப்பாவோட தம்பி…… அவர் பேச்சை தட்ட முடியாது”,

“அவர் வந்தாரா, நான் பார்க்கலையா……”,  

“இல்லை, அவரும் சித்தியும், அவர் மருமக டெலிவரிக்கு யு.எஸ் போயிருக்காங்க”,

“அண்ணி கிட்ட ஏன் சொல்லலை?”,

“அவளுக்கும் எங்க சித்தப்பாக்கும் ஆகாது! அவர் சொன்னார்ன்னு சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா! அதான் சொல்லலை!”,

“ஏன் ஆகாது?”,

“நாங்க யாரும் செய்யாத வேலையை அவர் செஞ்சார், அதான்”,

அவள் புரியாமல் பார்க்கவும்,

“அவளுக்கும் ராஜியோட அப்பாவுக்குமான உறவை எதிர்த்தார். திட்டக் கூட செஞ்சார். அது தப்புன்னு எவ்வளவோ சொன்னார். ஆனா அவ எதையுமே காது குடுத்து கேட்கலை, அவர் மேல பைத்தியமா இருந்தா! பத்தாததுக்கு வயித்துல குழந்தை வேற…….! யார் பேச்சையும் கேட்க்கற நிலைமையையும் மீறிட்டா…..”,

“எனக்கு இன்னுமே புரியலை, எப்படி இந்த உறவு உண்டாச்சுன்னு….  இவ எவ்வளவு ஹை ஃபையா இருப்பா…… கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்குற அப்பா கூட தொடர்பு…….. மனசு வெறுத்துப் போயிட்டேன்”,

“அதுக்கப்புறம் நான் யாரோடயும் பேசறதைக் கூட குறைச்சிக்கிட்டேன். யாராவது கேட்டுடுவாங்களோ இல்லை அசிங்கமாப் பேசிடுவாங்களோன்னு எவ்வளவு பயந்திருக்கேன் தெரியுமா”, என்றான் குரல் தழுதழுக்க.  

“எனக்கு உடன்பாடு இல்லைனாலும் வேற வழியில்லாம அதை சரி செஞ்சி குடுத்தேன். தேவிகா அக்கா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன்……… அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டேன்……. அவர் கண்டிப்பா அனிதாவை கைவிட்டு இருக்க மாட்டார், அவர் மனைவிகிட்ட அவரே சம்மதம் வாங்கியிருப்பார்……. இருந்தாலும் என்னோட மனதிருப்திக்காக கால்ல விழுந்தேன்!”, என்று அன்றைய தினத்தின் நிகழ்வுக்கு போனான்.

ஆதரவாக அவள் தோள் மீது கையை வைத்தவள்…… “சரியோ? தப்போ? ஒரு அக்காவுக்கு தம்பியா உங்க சைட் நீங்க சரியா இருக்க முயற்சி எடுத்திருக்கீங்க……. அவங்க நடத்தைக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”, என்றாள்.

அவசரமாக, “நீ எங்கக்காவை தப்பா நினைக்கிறியா?”, என்றான். அப்படி மட்டும் சொல்லிவிடாதே என்று அவனின் ஒவ்வொரு அணுவும் துடிப்பது தெரிந்தது.

“இல்லை! எல்லா உறவுகளையும் கொச்சைப்படுத்த முடியாது….. எல்லார்க்கும் அவங்க அவங்க நியாயம்…. அடுத்தவங்களை விமர்சிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை……. இதுல கருத்து சொல்ல கூடியவங்க தேவிம்மா மட்டும் தான்…. அவங்களே சரி சரின்னு போறப்போ அடுத்தவங்க சொல்ல என்ன இருக்கு……”,

“எப்படி இப்படி அவ வாழ்க்கையில சருக்குனான்னு எனக்கு தெரியாது…. எங்கக்காவும் எனக்கு ஒரு பொண்ணு போல தான்…. அவ எப்படி இருந்தாலும் அவ வாழ்க்கையை சீர் செஞ்சு குடுக்கறது என் கடமை…….  அவளோட செய்கைக்காக எப்பவும் அவளை தப்பா பேசிடாத, வெறுத்துடாத……..”,

“இல்லை! நிச்சயமா மாட்டேன். உங்க மாமா, அவர் செய்கை, என்னை பொறுத்த வரைக்கும் ஏத்துக்கக் கூடியது இல்லை, ஆனா மரியாதை குறைவா கண்டிப்பா நடக்க மாட்டேன்……. அவங்களுக்காக இல்லைனாலும், உங்க அக்காவுக்காக இல்லைனாலும், உங்களுக்காக”, என்றாள்.

“இது போது அழகி எனக்கு! அவ இருக்குற வரைக்கும் நம்ம கூடத் தான் இருப்பா! நீ அவளையும் தான் பார்த்துக்கனும்”, என்றான்.

“உங்களுக்கு அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்….. எப்பவும் என்னைக்கும் அவங்க உங்க ப்ரியமான அக்கா தான்!”, 

“தேங்க்யூ! தேங்யூ வெரி மச்!”, என்று அவளிடம் சொல்ல………. அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவளின் தோள்களில் ஒரு துளி ஈரம் பட அவசரமாக அவனை விலக்கி பார்த்தாள். அவன் கண்களில் தான் அந்த நீர், “என்னப்பா?”, என்று அவள் பதற….

“எங்கக்கானால எத்தனை நாள் நான் தூங்காம இருந்திருக்கேன். என்னவோ நானே தவறிட்டதா நினைச்சு வருதப்பட்டிருக்கேன். என்னால அதை யார்கிட்டயும் சொல்ல கூட முடியலை… தேவிகா அக்கா மட்டும் ஒத்துக்கமா இருந்திருந்தா என்னால என்னை மன்னிச்சே இருக்க முடியாது. அவங்க அவளுக்கு மட்டும் வாழ்க்கை குடுக்கலை எனக்கும் நிம்மதியக் குடுத்திருக்காங்க!”, என்றான்.

அவனைப் புரிந்தவளாக அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.  இருவருக்குமே அந்த அணைப்பு மிகவும் தேவையாக இருந்தது.

Advertisement