Advertisement

அத்தியாயம் இருபது:

வாழ்க்கை லகுவாக சென்றது கனிமொழிக்கு. அவர்களுக்குள் தாம்பத்யம் என்ற ஒன்று தான் தொடங்கப்படாமல் இருந்ததே தவிர மற்றபடி ஆகாஷும் கனியும் மேட் பார் ஈச் அதர் ஆகினர் மனதளவில்.

ஆகாஷ் தான் அவளின் கணவன் என்பதை எல்லா செய்கைகளிலும் நிரூபித்தான். அவளை அக்கறையாக கவனித்தான், அப்போது அப்போது சிறு சிறு சீண்டல்கள் கூட இருந்தது. ஆனால் அவனிடம் அதற்கு மேல் நேரம் இல்லை. அந்த தொழில் பிரச்சனையில் உளன்று கொண்டிருந்தான்.  

ஆனால் கனி அவனோடான வாழ்க்கையை மனதளவில் ஏற்றுகொண்டாள். அவளுடைய முந்தைய கணவனோடான வாழ்க்கையில் அவளுக்கு பெரிய ஞாபகங்கள் இல்லை. அவன் அவள் மடியில் உயிர் நீத்தது மட்டுமே அழியா ஞாபகம். அதனால் அவளால் ஆகாஷோடு எந்த மன உறுத்தலும் இல்லாமல் ஒன்ற முடிந்தது.

என்ன அவளின் பிரச்சனை என்றால் உடனே குழந்தை உண்டாகி விடக்கூடாது என்ற எண்ணத்தினால் தான் ஆகாஷை விலக முற்பட்டாள். அவள் சொல்லுகின்ற காரணங்கள் ஆகாஷிற்கு புரிந்ததால் அவனும் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

அவள் சொல்வது போல இன்னும் மூன்று வருடம் என்பது எல்லாம் அவனால் முடியாது என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை தான் எடுப்பதா அவள் எடுப்பதா என்பதில் குழப்பம். எதுவாகினும் குழந்தைக்கு ஒரு ஐந்து மாதமாவது ஆகட்டும் என்று நினைத்து ஒத்திப்போட்டான்.

அதுவுமில்லாமல் தொழில் பிரச்சனை அவனை மனதளவில் மிகவும் சோர்வுற செய்தது என்பது நிதர்சனமான உண்மை.

கனிமொழிக்கு இங்கே ஆகாஷின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவனின் வாழ்க்கை முறையோடு ஒன்ற முற்பட்டாள். ஆனால் இந்த ஒரு வாரமாக ஆகாஷ் பயங்கர பிசியாக இருந்தான். உறங்கும் நேரம் மட்டுமே வீட்டிற்கு வந்தான். சில சமயம் அனிதாவையும் கூப்பிட்டான். அக்ஷரா பிறக்கும் வரை அவள் தானே அவர்களின் தந்தையுடன் தொழிலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.   

அதனால் அவளும் செல்ல வேண்டி இருந்தது.

“வீட்ல வேலை செய்யறவங்க பார்த்துக்குவாங்க…….. கூட நீயும் அக்ஷராவையும் பார்த்துக்கறியா அழகி, அனிதா அங்க வரணும்”, என்று தயங்கி தயங்கி கேட்டான் ஆகாஷ்.

“பார்த்துக்கறேன்! எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை! என்கிட்ட சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம். பட்டுகுட்டிய பார்க்க யாருக்காவது கசக்குமா என்ன?”, என்று தான் கையில் இருந்தா அக்ஷராவை உச்சி முகர்ந்தாள். 

“ராகவ் வேற இருக்கானே!”,

“இல்லை, பார்த்துக்குவேன் இங்கே தான் கூட மலர் இருக்காளே”, என்றாள். மலர் குழந்தையை பார்த்துக்கொள்ள உதவியாய் அங்கே இருக்கும் பெண்.

அனிதாவிற்கு அப்போதும் மிகவும் தயக்கம். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவளுக்கும் குழந்தை இருக்கு என்ற நிலையில் அவளை சிரமப்படுத்துவது அதிகப்படியாக தான் தோன்றியது.

இருந்தாலும் சூழ்நிலை, கட்டாயம் அவள் அங்கே தொழிலில் நடந்த குளறுபடியை கண்டுபிடிக்க இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை.  

அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்த போதும் கனிமொழி சிறிதும் தயங்கவில்லை….. “நீங்க போயிட்டு வாங்க அண்ணி”, என்று அனுப்பி விட்டாள். 

அன்றைக்கு தொழிலில் ஏற்ப்பட்ட பிரச்சனை இன்னும் முடியவில்லை. கனியின்  பெற்றோர் வேறு அவளை பார்க்க வர கேட்டனர்.

ஆகாஷ், “இன்னும் நாலஞ்சு நாள் போகட்டும்னு சொல்லு கனி! அவங்க வந்தா நானோ அனிதாவோ இங்கே இருக்க முடியாது! முதல் தடவை வர்றாங்க! நாங்க இல்லைனா தப்பாயிடும்”, என்றான்.

“என்ன பிரச்சனை சீரியஸா”, என்றாள் கவலையாக…..

“நமக்கு அது சீரியஸ்னு பெருசா கிடையாது! ஆனா எனக்கு அது சீரியஸ் தான்!”, என்றான்.   

“என்னங்க குழப்பறீங்க!”,

மெலிதான புன்னகை ஆகாஷிடமிருந்து, ஆனால் அந்த புன்னகையில் ஒரு வருத்தம் தான் தெரிந்தது.

“என்கிட்ட சொல்லக்கூடாதா! கான்பிடன்ஸியலா!”,

“அதெல்லாம் இல்லை! சொல்றேன்!”, என்று அனிதாவை அழைத்துப் போனான்.

கனி எதையோ பெற்றோரிடம் சொல்லி சமாளித்தாள். “இன்னும் ஒரு நாலஞ்சு நாள் போகட்டும்மா”, என்று.

அவர்களுக்கு மனமேயில்லை……

“டேய் அசோக்! என்னடா அவ்வளவு இதா கல்யாணம் கட்டிக்கிட்டு போயிட்டு! இப்போ நம்மை பார்க்க கூட விடாம பண்றாங்க….. சொந்தப் பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு வரட்டுமான்னு கேட்டுட்டு போக வேண்டி இருக்கு…….”,

“நம்மை மீறின இடமா இருந்தா எல்லாம் அப்படி தான்மா”, என்று மனதிற்குள் நினைத்த அசோக் அதை வெளியில் சொல்லவில்லை……..

“அதொன்னுமில்லை பா! ஏதாவது காரணம் இருக்கும். ஆகாஷ் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாதுப்பா”, என்றான் ஸ்திரமாக அசோக்.

இருந்தாலும் கனியைப் பார்த்தால் தான் அவர்களின் மனம் ஆறும் என்று அவனுக்கு நன்கு புரிந்தது. இருந்தாலும் செய்யும் வகை தெரியாது அமைதியாக இருந்தான்.

அங்கே கனியும் சற்று தனிமையை உணர்ந்தாள். இரண்டு மூன்று நாட்களாக அக்காவும் தம்பியும் வரும் நேரமும் போகும் நேரமும் தெரியவில்லை. இவளோடு தான் அக்ஷராவும் தூங்கினாள், நந்தனும் தூங்கினான். இதோடு ராகவ் வேறு……..   

ஆனால் நேரம் சரியாக இருந்தது. ராகவ் மாற்றி அக்ஷரா….. அக்ஷரா மாற்றி நந்தன் என்று நேரம் சரியாக இருந்தது. இவர்களுடனெல்லாம் நேரம் செலவிட்டாலும் ஆகாஷுடனும் நேரம் செலவிட மனம் விரும்பியது.

அன்று மாலை சீக்கிரமே வந்துட்டனர் ஆகாஷும் அனிதாவும். “விடுடா பார்த்துக்கலாம்!”, என்று அனிதா ஆகாஷை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.

ஆகாஷ் பதில் பேசாமல் ரூமினுள் சென்று புகுந்து கொண்டான். அக்ஷராவை கையில் வைத்துக்கொண்டு இருந்தாள் கனி.

அவளை கையில் வாங்கிய அனிதா, “போய் அவனை பாரு கனி!”, என்றாள்.

“ஏன் அண்ணி? ரொம்ப பிரச்சனையா!”,

“அதெல்லாம் இல்லை! சின்னது தான்! பிஸினெஸ்ல இதெல்லாம் சகஜம்…… எல்லா நேரமும் எல்லாமும் சரியா இருக்காது! ஆனா இவன் ரொம்ப அப்செட்!”, என்றாள். 

கனி உள்ளே போக படுக்கையில் படுத்திருந்தான். கண்கள் மேலே சீலிங்கை பார்த்திருந்தது….

“காஃபி கொண்டு வரட்டுமா”,

“வேண்டாம் கனி! கொஞ்சம் நேரம் போகட்டும்!”,

“வெளில இருந்து வந்து அப்படியே படுத்துகிட்டீங்க! ராகவ் பாருங்க பக்கத்துல தூங்கறான்! போய் குளிச்சிட்டு வந்து தூங்குங்க!”, என்றாள்.

அவனுக்கு சலுப்பாக இருந்தாலும், மறுபேச்சு பேசாமல் எழுந்து குளிக்க சென்றான். அன்று போலவே அவன் வெளியே வரும் நேரம் டவளுடன் நின்றாள். அவன் சொல்லாமலேயே அவனின் தலையை துவட்டி விட்டாள். ஆனால் அவனின் அணைப்பு மிஸ்ஸிங். ஏதோ யோசனைகள் அவனுள் ஓடுகின்றது என்று அவளுக்கு நன்கு புரிந்தது. 

அவன் உடை மாற்றும் நேரம் இரண்டு சப்பாத்தியை எடுத்து வந்தவள், அவன் கேட்காமலேயே ஊட்டி விட்டாள்.

பிறகு அவள் படுக்கையில் அமர, அவள் மடியில் முகம் புதைத்து படுத்துக்கொண்டான்.

அவன் தூங்கவில்லை என்று தெரிந்தது. “என்ன பிரச்சனை?”, என்றாள் மெதுவாக…..

“ஒண்ணுமில்லை”,

“ரொம்ப பெரிய நஷ்டமா! நம்மளால சமாளிக்க முடியாதா!”,

அவளின் மடியில் புதைத்த முகத்தை எடுக்காமலேயே பதில் சொன்னான். “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சொல்ல போனா பணம் ஒரு பிரச்சனையில்லை”, என்றான்.

“வேற, வேற என்ன பிரச்சனை?”,

“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன் இல்லை! விடு!”, என்றான் சலிப்பாக…..

கனி திரும்பவும் எதுவும் கேட்கவில்லை…… அமைதியாக அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் உறங்கி விட்டான்.

பிறகு இரவு அவள் உறங்க செல்லும் வரையிலும் ஆகாஷ் விழிக்கவில்லை. எழுப்பி சாப்பிட சொல்லலாம் என்றால் நல்ல உறக்கம் அவனுக்கு……… எழுப்ப மனமில்லாமல், எழுந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அவளும் அருகில் படுத்து உறங்கிவிட்டாள்.

குழந்தை பிறந்ததில் இருந்து ஆழ்ந்த உறக்கம் என்பது கனிக்கு கிடையாது. எப்போது ஒரு இரண்டு மணிநேரத்திற்கு ஒரு தரம் விழித்து குழந்தை தூங்குகிறதா இல்லையா என்று சரிபார்த்து தூங்குவாள்.

அது போல ஒரு ஒரு மணி வாக்கில் அவள் விழிக்க…. ஆகாஷ் படுக்கையில் இல்லாமல் அங்கிருந்த குஷனில் கண்களை மூடி அமர்ந்திருந்தான். காதுகளில் ஹெட் போன் இருந்தது. பாட்டு கேட்டுகொண்டிருகிறான் என்பது புரிந்தது.   

அவனருகில் சென்றவள் ஒரு காதில் இருந்த ஹெட் போனை கழட்டி அவளின் காதுகளில் வைத்தாள்.

கண்விழித்து அவளைப் பார்த்தான் ஆகாஷ். “நானும் கேட்கறேன்”, என்றாள். இன்னொரு ஹெட் போனையும் அவன் கழட்டப் போக….. “அது அங்கேயே இருக்கட்டும்”, என்பது போல சைய்கை செய்தாள்.

ஹெட் போனிற்காக அவள் குனிந்து நிற்க…… அது ஒற்றை குஷன் என்பதால் அவளை அப்படியே  மடியில் இருத்திக்கொண்டான் ஆகாஷ். அவளும் அமர்ந்து அவன் மேல் சாய்ந்து கொண்டு அவன் கேட்கும் பாடலில் கவனத்தை திருப்பினாள். அது….

வசந்தமுல்லை போலே வந்து                                                                                                                அசைந்து ஆடும் பெண் புறாவே                                                                                                   மாயமெல்லாம் நானறிவேனே                                                                                                              வா வா ஓடிவா…….

என்று பாடியது

அவனுடன் அந்தப் பாடலை கேட்டுகொண்டே , அவன் மேலேயே திரும்பி அமர்ந்து நன்கு வாகாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

அதில் வரும் ஒரு வரி கனிக்கு மிகவும் பிடித்தது.

ஈடில்லா உனையே என்மனம் நாடுதே….                                                                            ஈடில்லா உனையே என்மனம் நாடுதே…..

அந்த வரிகள் வரும்போது முகத்தை தூக்கி அவனின் கழுத்தினில் இதழ்களை புதைக்க….. உடல் சிலிர்த்தவன், “அழகி என்னப் பண்ற……..”,

அவள் பதில் பேசாமல் மீண்டும் இதழ்களை அழுத்தவும்…….

“இந்த நேரத்துல எல்லாம் போய் என்னால ஷவர் அடில நிற்க முடியாது, புரிஞ்சிக்கோ!”, என்றான்.

மெதுவாக இதழ்களின் அழுத்தத்தை குறைத்தவள்,  

“என்னப் பிரச்சனை”, என்றாள்.

ஒன்றும் பேசாமல் அவளை இறுக்கிக் கொண்டான்.

அவன் சொல்வான் என்று காத்திருந்தவள், அவன் சொல்லாதிருக்கவும் மீண்டும்….. “சொல்லுங்க”, என்றாள்.

இப்போதும் சொல்லாமல்  இருக்க, மீண்டும் இதழ்களை அவனின் கழுத்தில் அழுந்த புதைக்கவும்.

அவஸ்தையாக நெளிந்தவன், “ஏய், விடுடி!”, என்றான்.

“நீங்க சொல்ற வரைக்கும் விடமாட்டேன்!”,

“இந்த  ப்ளாக் மெயில் ரொம்ப பயங்கரமா இருக்கே! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!”, என்றவன் சிரித்து விட்டான்.

“ஹப்பா சிரிச்சிடீங்களா…. சிரிக்காம உங்க முகம் பார்க்கவே சகிக்கலை…. இப்படியே சிரிச்சிட்டே இருங்க, இப்போ விஷயத்தை சொல்லுங்க…”,     

“விடமாட்டியே நீ….. கொஞ்சம் சரக்கு எக்ஸ்ட்ராவா கணக்குல வராம வெளிய போயிருக்கு”, என்றான்…. 

“எவ்வளவு…..”,

“ஏறக்குறைய ஒன் குரோர், பிப்டி லாக்ஸ்”,

அவனை தலை தூக்கிப் பார்த்தவள், “நமக்கு ரொம்ப நஷ்டமா?”,

“இல்லைல்ல நாம வெச்சிருக்குற ஒரு காரே அதை விட விலை அதிகம்”,

“அப்புறம் என்ன?”,

“இது என்னோட தோல்வி, உனக்குப் புரியலையா, இதெல்லாம் நடந்தது நான் பொறுப்பெடுத்த அப்புறம் தான். ஈசியா என்கிட்ட இருந்து திருடியிருக்காங்க. எனக்கு தெரியலை, என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை……”,

“விடுங்க! தோல்வி அது இதுன்னு பேசிட்டு, இனிமே கவனமா இருந்துக்கலாம்…..”,

“அப்படியில்லை அழகி, இனிமே நான் கவனமா இருப்பேன்றது வேற…… நமக்கு இதனால பெரிய நஷ்டம் இல்லைன்றது வேற… ஆனா இப்போ நடந்ததுக்கு நான் தானே பொறுப்பு…….”,   

“நான் பெருசா சொத்து சம்பாரிச்சு என் பசங்களுக்கு சேர்த்து வைக்கனும்ற அவசியமே இல்லை. அவ்வளவு சொத்து நமக்கு இருக்கு……. நான் புதுசா சம்பாரிக்கலைன்னாலும் அதை அழிக்காம இருக்கணும் இல்லையா”,

குரலில் அவ்வளவு வேதனை….

“எனக்கு இந்த வேலை அவ்வளவா பிடிபட மாட்டேங்குது….. இவ்வளவு நாளா அப்பாவும் அக்காவும் தான் பார்த்துகிட்டாங்க! நான் உண்டு என் ப்ரோக்ராம்மிங் உண்டுன்னு சாப்ட்வேர் லைன்ல தான் இருந்தேன். எனக்கு அதுதான் இஷ்டமும் கூட”,

“அப்பா திடீர்ன்னு இறந்துட்டாங்க….. அக்காவும் குழந்தையை பார்த்துக்கனும்ங்கற சூழ்நிலையில தான் பொருப்பெடுத்தேன்…..  எவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருக்கேன்”,

“இப்போ நான் தொலைச்சிருக்குற இந்தப் பணம், நான் வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ எனக்கு கிடைச்சிட்டிருந்த ஒரு நாலு வருஷ சம்பளம்……. எவ்வளவு அசால்டா விட்டிருக்கேன்”,  

“வருத்தப்படாதீங்க…….. சில சமயம் ஆகறதுதான்! இனிமே பார்த்துக்கலாம்!”,

அவளின் வார்த்தைகளை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை, அவன் மேலே மேலே பேசிக்கொண்டே போனான்.  

“எனக்கு ஏதோ தப்புன்னு தெரியுது! ஆனா எங்க நடந்ததுன்னு தெரியலை…. அனிதா வந்தா ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிட்டா, என்னால முடியலைன்றதை விட எனக்கு தெரியலைன்றது தான் நிஜம்”,  

“நான் கூட நினைப்பேன்! நாம பார்க்கவும் நல்லா தான் இருக்கோம், நம்ம வசதியும் அதிகம், படிப்பும் அதிகம், ஆனா இந்த ராஜிக்கு ஏன் என்னைப் பிடிக்கலை, செந்திலை கல்யாணம் பண்ணிகிட்டான்னு!”,

அவனின் வார்த்தைகளை கேட்டதும் மெல்லிய அதிர்வு கனிக்குள்……

“ஆனா பாரேன் அவ சரியான முடிவெடுத்திருக்கா…..”,

“அவன்கிட்ட நஷ்டத்துல ஓடிகிட்டு இருந்த எங்க மில்லை குடுத்தேன்…… ஆறே மாசத்துல அதை நஷ்டத்துல இருந்து மீட்டான்….. இந்த மாசம் என்கிட்ட லாபம் காட்டியிருக்கான்…..”,

“நான் தானா லாபம் வந்துகிட்டு இருக்கிற தொழில்ல…… என்னோட  அஜாக்ரதையால நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கேன்”,

“இவன் நஷ்டம் ஏற்பட்டதினால் வருத்தப்படுகிறானா, இல்லை மறுபடியும் ராஜியை மிஸ் செய்துவிட்டேன் என்று வருத்தப்படுகிறானா”, என்று கனிக்கு புரியவில்லை.

ஏதோ ஒன்று………. கனிக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. ராஜி ஆகாஷின் மனதில் அழியா சித்திரம். இதுவரை எப்படியோ? கனியை திருமணம் செய்தப் பிறகும் அவன் ராஜியை மிஸ் செய்துவிட்டேன் என்ற நினைப்பு அவன் மனதில் இருந்தால் அதைவிட தோல்வி தனக்கென்ன இருக்கிறது வாழ்க்கையில் என்று தோன்றியது அவளுக்கு.  

“அந்த தோல்வியை எனக்கு கொடுத்துவிடாதே கடவுளே”, என்று அந்த நொடி கடவுளிடம் மனமுருக வேண்டினாள்…..

ஆகாஷும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை…… அமைதியாக அவளை அணைத்தபடியே உட்கார்ந்திருந்தான்.

கனி தான் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தாள்……. “கவலைப்படாதீங்க! இனிமே கவனமா இருங்க!”, என்று.

“ம்!”, என்று தலையாட்டியவன்………. “ஆனா எனக்கு இதுல அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லை, என்னோட ஃபீல்ட் வேற”,

“அதனால என்ன? இன்ட்ரெஸ்ட் இருக்குற ஃபீல்ட் ல சாதிக்கறதா பெரிய விஷயம்! அது இல்லைனாலும் சாதிக்கணும்! அது தான் மேட்டர்”, என்றாள்.

“மேட்டரா!”, என்று சிரித்தவன், “என்னால முடியுமா என்ன?”, என்றான் புன்னகையுடனே…….  

“உங்களால முடியாம வேற யாரால முடியும்? வாழ்க்கையில விழறதுன்றது சகஜம்……. ஆனா நாம யானையில்லை குதிரைன்னு நிரூபிக்கனும்”,

அவளின் பேச்சு அவனை மனநிலையை முற்றிலும் மாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனால் சற்று உற்சாகத்தை கொடுத்தது. சிரிப்பு அதிகமாக வந்தது. “இது என்ன? யானை, குதிரைன்னு…..”,

“யானை விழுந்தா எழுந்திருக்க நேரமாகும்! குதிரை உடனே எழுதிரிச்சிக்கும்! ஏன் நான் சொன்னது நல்லாயில்லை”,

“கலக்கற போ நீ!”, என்றான் சற்று கிண்டலாக……….

அவள் முறைக்கவும், “நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு , நீ சொன்னதும் நல்லா இருக்கு! நீயும் நல்லா இருக்க!”, என்றவன்…..

“இந்த உன் நெத்தி நல்லா இருக்கு…. உன் கன்னம் நல்லா இருக்கு……”, என்று ஓவ்வொன்றாக சொல்லி முதலில் விரல்களால் அதில் கோலம் போட்டு பின் அவனின் இதழ்களை பதிக்க ஆரம்பித்தான். சிலிர்க்கும் அவள் உடலின் சூட்டை உணர்ந்து இறுதியாக அவளின் இதழ்களில் அதிக நேரம் எடுத்துகொண்டு இளைப்பாறினான்.

ஆனால் எல்லை மீறவில்லை. அன்றிருந்த மனநிலையில் அவன் எல்லை மீறி இருந்தாலும் கனி ஒத்துழைத்திருப்பாள் …… ஆனால் அவன் மீறவில்லை.

அவள் எதுவும் அவன் எதிர்பார்கிறானோ என்பது போல பார்க்க……. “எனக்கு இப்போதைக்கு இது போதும் அழகி”, என்றான். 

மீண்டும் ஒரு பாட்டு போட அவன் விழைய………

“உங்களுக்கு பழைய பாட்டு தான் பிடிக்குமா….”,

“பழைய பாட்டு ரொம்ப பிடிக்கும், அதுக்காக புதுசு பிடிக்காதுன்னு கிடையாது”,

“எனக்கு ராஜா சாரோட எய்டீஸ்ல வந்த ஸாங்ஸ் ரொம்ப, ரொம்ப, ரொம்ப பிடிக்கும்”, என்றாள்.

“என்கிட்ட நிறைய கலெக்க்ஷன்ஸ் இருக்கே! இரு! உனக்காக ஒண்ணு கேட்கலாம்”, என்று சொல்லி தேடி எடுத்து அவளுக்காக அந்தப் பாட்டை போட்டான்.

முன்பு போலவே ஹெட் போன் இவள் காதிலும் அவன் காதிலும் இருக்க….. அவன் மேல் இன்னும் அழுத்தமாக படர்ந்தாள் கனி……   

விழியிலே மலர்ந்தது                                                                                                          உயிரிலே கலந்தது                                                                                                                          பெண்ணென்னும் பொன்னழகே……                                                                                                                     அடடா எங்கெங்கும் உன்னழகே……                                                                                          அடடா எங்கெங்கும் உன்னழகே…..

பாட்டை நிறுத்தியவள், “உங்களுக்கு இந்த பாட்டு தெரியுமா?”, என்றாள்.

அவன் தெரியும் என்பது போல பார்க்க……… “அப்போ நீங்க பாடுங்க!”, என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டாள்……

ஆகாஷ் பாட ஆரம்பித்தான்………

உன் நினைவே போதுமடி………                                                                                                             மனம் மயங்கும்…….. மெய் மறக்கும்……                                                                                                                               புது உலகின் வழி தெரியும்                                                                                                                          பொன் விளக்கே……. தீபமே…..

ஓவியனும் வரைந்ததில்லையே                                                                                                 உன்னைப்போல்                                                                                                                         ஓரழகை கண்டதில்லையே                                                                                                   காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி                                                                                           கண்களுக்கு விளைந்த மாங்கனி                                                                                                               காதலுக்கு வளர்ந்த பூங்கொடி 

விழியிலே மலர்ந்தது……..

அதனை கேட்டுக்கொண்டே அவனை அணைத்திருந்த கனிமொழியும் அவனை விட்டு விலகாமல் அவன் மேலேயே உறங்க ஆரம்பித்தாள்.    

Advertisement