Advertisement

அத்தியாயம் இரண்டு:

கனிமொழியை பார்த்தது பார்த்தப் படி நின்றான். மனதில் எண்ணங்கள் அலைமோதின. என்ன மாதிரியான எண்ணங்கள் வரையறுக்க முடியவில்லை. அவன் முகமும் இறுக்கமாக இருந்தது.

பார்வையை அகற்ற அவன் விழையவில்லை. அவன் அப்படி இமைசிமிட்டாமல் தன்னை பார்ப்பது கனிமொழிக்கு ஒரு மாதிரி இருந்தது.

செந்தில் ஏதோ ஆகாஷிடம் பேசினான்…….. அது அவன் காதிலேயே விழவில்லை.  

தன்னையே அவன் பார்ப்பதை உணர்ந்த கனிமொழி அது பிடிக்காமல், “ஒரு நிமிஷம்”, என்று அசோக்கிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள். நிச்சயம் அது தவறான பார்வையல்ல அவளுக்கு அது புரிந்தது. இருந்தாலும் அந்த பார்வை என்னவோ செய்தது. அதை எதிர்கொள்ள முடியாததால் அது பிடிக்கவில்லை.  

“நீ அவன்கிட்ட கொஞ்சம் ஓவரா பேசிட்டியோ! அவனுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சோ! அதான் முறைச்சு முறைச்சுப் பார்க்கறானா……… என்ன இருந்தாலும் முதலாளி இல்லையா! அந்த கெத்து இருக்கத் தானே செய்யும்”.

“நானென்ன பாஸ்ன்னு தெரிஞ்சா பேசினேன். அந்த லூசு வந்தவுடனே பாஸ்ன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே! ஏதோ ஒண்ணு விடு! பேசினதுக்கு அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை”.

“அவன் வேற அந்த லுக்கு விடறான். கொஞ்சம் பயங்கரமானவனா இருப்பானோ? எதுக்கும் வாயை அடக்கி தள்ளியே இரு”, என்று அவளுக்கு அவளே முடிவெடுத்தாள்.

அங்கே செந்தில் ரூமினுள் இருவரும் நுழைந்தவுடனே செந்திலைப் பார்த்து ஆகாஷ் கேட்டான், “யாரந்த பொண்ணு”,

“இப்போ தானே சொன்னேன், என் நண்பன் அசோக்கோட தங்கச்சி”,

“நான் கவனிக்கலை”,……

“அவளுக்கு……… ஐ மீன் அந்த பொண்ணுக்கு………. ஐ மீன் அந்த பொண்ணோட கணவன்………”, என்று ஆகாஷ் தடுமாற,

“இறந்துட்டான்”, என்றான் செந்தில்.

ஓரளவிற்கு எதிர்பார்த்துதான், “எப்படி”, என்றான் ஆகாஷ்.

“இப்போதானேடா வந்த……. பேசலாம் உட்காரு! சாப்டியா இல்லை கேண்டீன்ல ஏதாவது செஞ்சிதர சொல்லவா?”, என்றான்.

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு? எப்படி?”, என்றான் சீரியசாக…..

இவன் என்ன இவ்வளவு சீரியசாக இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே……  “அவங்க ஊர்ல அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்தது கொஞ்சம் பெரிய ஆளுங்க. அவங்க ஊர்ல ஏதாவது பிரச்சனைனா முன்னப் போய் நிற்பாங்க….. அப்படி ஏதோ ஒரு பிரச்சனைக்கு முன்னப் போய் நின்னதுதான் வாய் தகராறு, கைத் தகராறு ஆகி….. வெட்டு குத்துன்னு போய் ஆளையே சாச்சுடாங்க….”,

“என்ன நடந்ததுன்னு தெரியறதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சு போச்சு…….. அதுவும் என்ன கொடுமைன்னா கல்யாணம் ஆகி ஒரு பதினஞ்சு நாள் தான் இருக்கும் அப்போவே முடிஞ்சிடுச்சு…”,

“அப்போ நானும் ராஜியும் சென்னைல இருந்தோம் என் ட்ரீட்மென்ட்க்காக…… எனக்கு விஷயம் கூட தெரியலை? யாரும் சொல்லாம விட்டுட்டாங்க! அசோக் இருந்த மனநிலையில யார்கூடவும் பேசலை! ஏன் என்கூட கூட பேசலை. இங்க வந்ததுக்கு பிறகு தான் தெரிஞ்சது……..”,        

“நடந்ததுக்கு பிறகு யார் மட்டும் என்ன பண்ண முடியும்? அவ கல்யாணத்தை முடிச்சிக்கிட்டு தான் நான் ட்ரீட்மென்ட்க்கே வந்தேன். நான் திரும்ப வர்றதுக்குள்ள அவ இப்படி நிக்கறா”, என்றான் வருத்தமாக.

அவன் வருத்தப்பட்டது எல்லாம் ஆகாஷ் கவனத்தில் பதிந்ததாகவே தெரியவில்லை. அவன் சீரியசாகவே இருந்தான்.

“ஏன் ஏதாவது விளையாட்டுத்தனமா பேசி உன்னை கோபப்படுத்திட்டாளா”, என்றான்.

“ப்ச்! இல்லை!”,

“ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க! சாப்டியா முதல்ல அதுக்கு பதில் சொல்லு”,

“ஞாபகமில்லை”,

“என்ன ஞாபகமில்லையா?”, என்ன பதில் இது என்பது போல பார்த்தான் செந்தில்.

அது எதையுமே கவனிக்கும் மனநிலையில் இல்லை ஆகாஷ்……..

அவன் ஏதோ மூடவுட்டில் இருக்கிறான் என்று புரிந்த செந்தில், என்ன அவனிடம் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான். அவனுக்குத் தெரிந்த ஆகாஷ் அவன் பேசும்முன்பே அவனிடம் பேசுவான். இப்படி என்றும் அவனிடம் நடந்தது இல்லை என்ன பேசுவது என்று அவன் விழிக்க……

அதற்குள் கனிமொழி உள்ளே வந்தாள்…… “அங்க மெசின்ல ஏதோ பிரச்சனை போல மெக்கானிக் உங்க கிட்ட ஏதோக் காட்டணுமாம். நீங்க வந்தா பரவயில்லைங்கறாங்க”, என்றாள்.

செந்தில் ஆகாஷை பார்க்க, “நீ போய் பார்த்துட்டு வா, நான் இருக்கேன் ஒண்ணும் அவசரமில்லை………. நீ போயிட்டு வா”, என்றான்.

வெளியே வந்த செந்தில், “அவருக்கு ஏதாவது குடிக்கக் கொடு! நான் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன்”, என்று அவசரமாக போனான்.

“என்ன குடுக்கணும்னு சொல்லிட்டு போகக்கூடாதா? ஏதாவது கொடுன்னா என்ன கழனித்தண்ணியா கொடுக்கறது! அவனும் வந்ததுல இருந்து என்னை அசபோட்டுட்டே இருக்கற மாதிரி தான் தோணுது”, என்று காரமாக நினைத்தாள்.

வேண்டா வெறுப்பாக உள்ளே சென்றவள், “என்ன குடிக்கறீங்க காபியா? டீயா? வாங்கிட்டு வர சொல்லணும்”, என்றாள்.

மீண்டும் அவளின் பொட்டில்லாத முகத்தையே பார்த்தான். அவளின் முகத்தில் மிகச்சிறிய தங்க மூக்குத்தி இருந்ததையும் பார்த்தான். மீண்டும் அவளையே பார்த்திருக்க……..

“இவன் என்ன பொண்ணுங்களையே பார்த்திருக்காத மாதிரி பார்க்கிறான்”, என்று நினைத்தவள் அதை கேட்க வேறு செய்தாள்….

“சென்னையில பொண்ணுங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம்னு ஸ்ட்ரைக்கா?”, என்றாள்.

அவன் புரியாத பார்வை பார்க்க…… “பொண்ணுங்க முகத்தையே பார்த்திருக்காத மாதிரி இப்படி பார்க்கறீங்களே அதான் கேட்டேன்”, என்றாள் நக்கலாக.

“நிறைய பொண்ணுங்களை பார்த்திருக்கேன்! ஆனா உன்னை மாதிரி பார்த்ததில்லை! இந்த மாதிரி அழகு முகத்தை பார்த்ததில்லை!”, என்று அதற்கும் சீரியசாகவே பதில் சொன்னான். அவன் பார்வை அவளின் முகத்திலும் அவளின் மிகபெரிய வயிற்றிலும் மாறி மாறி நிலைத்தது.

அவனின் பார்வையிலும் அவனின் பதிலிலும் உதட்டை சுளித்தவள், “என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டேன்”.

“எதுனாலும்”, என்றான்.

“நிச்சயம் இவன் என்னைத்தான் அசை போடறான்! இவனுக்கு கழனிதண்ணி தான் பெஸ்ட்!”, என்று நினைத்தபடியே வெளியே போனாள்.

சிறிது நேரத்திலேயே அட்டெண்டர் காபியோடு வந்தான். கனிமொழி உள்ளே வர இஷ்டமில்லாமல் அவனிடம் கொடுத்து அனுப்பினாள்.

“அந்த மேடம் இல்லையா?”, என்றான் அவனிடம்.

“இருக்காங்க சார்”,

“அவங்களை கூப்பிடுங்க”,

“நம்மை எதுக்கு கூப்பிடறான்! நான் பேசக்கூடாதுன்னு நினைச்சாலும் என் வாயில இருந்து வார்த்தையை புடுங்காம இவன் போக மாட்டான் போல இருக்கே”, என்று எண்ணி அவள் உள்ளே போனாள்.

அவளைப் பார்த்ததும், “உட்காருங்க”, என்றான். மிகவும் சீரியசாகவே இருந்தான். வந்தப்போ கொஞ்சம் நல்லா தானே இருந்தான். இப்போ ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வெச்சிருக்கான் என்று இப்போது ஆகாஷை அசை போட்டாள் கனிமொழி. 

பிறகு பெல் அடிக்க அந்த அட்டெண்டர் வரவும், “ரெண்டு பேருக்கும் காபி ஊத்துங்க”, என்றான்.

“நான் இப்போதான் குடிச்சேன்”, என்று அவள் எழ முற்பட…….

“உட்காருங்க வேலை இருக்கு”, என்றவன், “ரெண்டு பேருக்கும் ஊத்துங்க”, என்றான்.

என்ன இருந்தாலும்  முதலாளி, அதனால் அட்டெண்டர் முன்னிலையில் அதிகம் பேசவேண்டாம் என்று நினைத்து வாயை அடக்கினாள்.

அவன் காபியை டம்ளர்களில் ஊற்றிவிட்டு போனதும், “குடிங்க”, என்றான்.

அதை கையில் கூட தொடாமல், “என்ன வேலை?”, என்றாள்.

“இதை குடிக்கற வேலைதான்”, என்றான் அசால்டாக…….

“என்ன  விளையாடறீங்களா?”,

“இதுவரைக்கும் இல்லை! உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே! என்ன விளையாடலாம்?”,

“நிச்சயம் இவன் லூசு தான்”, என்று முடிவுக்கட்டியவள், வேண்டாம் பிரச்சனை என்று நினைத்து அமைதியாக எழுந்து வெளியே போகப் போக……

“கனி”, என்று ஒரு அதட்டல் போட்டான்.

“இதை குடின்னு சொன்னேன்”, என்றான் இன்னும் அதட்டலாக………

“லூசில்லையோ பையித்தமோ”, என்று அவனின் அதட்டலில் ஒரு நொடி கனி பயந்தே போனாள். ஏன் வம்பு எதையாவது தூக்கி மேலே வீசிவிட்டால் என்று திரும்பவும் வந்து அமர்ந்து காபியை எடுத்து அருந்தத் தொடங்கினாள்.

அவள் குடிப்பதை பார்த்து அவனும் குடித்தவன், “ஆமா, என்ன நினைச்ச என்னை? கிறுக்கன்னா!”,

“இல்லையே லூசு பையித்தியம்னு தான் நினைச்சேன்”, என்றவள், “அச்சோ”, என்று நாக்கை கடித்தாள்.

பார்ப்பவர் யாருக்கும் ஒரு புன்னகையை வரவழைக்கும். சொல்லிய கனிமொழியின் முகத்திலும் ஒரு அசட்டுப் புன்னகையை வரவழைத்தது. ஆனால் அதற்கு கூட முகத்தில் இருந்த இறுக்கம் தளராமல் இருந்தான் ஆகாஷ்.

“எத்தனாவது மாசம்”, என்றான்.

“மூணாவது மாசம்”, என்றாள்.

“இருக்காதே வயிறு ரொம்ப பெருசா இருக்கே”,

“நான் வேலைல சேர்ந்ததை சொன்னேன்”, என்றாள் பல்லை கடித்து,

“நான் உங்களுக்கு எத்தனை மாசம்னு கேட்டேன்”,

“அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க?”, என்று கோபமாக எழுந்து வெளியேப் போகப்போக பதட்டத்தில் தடுமாறினாள். ஒரே எட்டில் அவளின் கையை பிடித்து நிலைபடுத்தினான்.

பிடித்த கையை விடவும் இல்லை….

“கையை விடுங்க!”, என்று சீறினாள் கனிமொழி அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை ஆகாஷிடம்.

“கையை விடுங்க சார்”, என்று அவள் கையை இழுக்கவும் விடிவித்தவன்…….

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை”, என்றான். பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறியிருந்தான்.

அதை கவனித்த கனிமொழிக்கு இன்னும் கோபம் வந்தது. “நீங்க அதை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை”, என்று சொல்லியவள் வெளியேப் போக முயல….. அவள் முன் அடைகட்டி நின்றான்.

“எனக்கு பதில் சொல்லிட்டு தான் நீ இங்க இருந்து போகணும்”, என்று தீவிரமாக அவன் சொல்ல…..  

“என்ன தான் உங்களுக்கு பிரச்சனை? இப்போ தான் என்னைப் பார்த்தீங்க! எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க! நான் பேசுனது ஏதாவது உங்களுக்கு கோபம் வரவழைச்சிடுச்சா? சாரி வழியை விடுங்க”, என்றாள்.

அப்படியே அசையாமல் நின்றான்.

“என்ன தான் சார் உங்க பிரச்சனை”, என்றாள் சலிப்பாக.

“என் பிரச்சனையை சொன்னா நீ நம்புவியா?”,

“முதல்ல சொல்லுங்க! அப்புறமா நம்பறதா இல்லையான்னு பார்ப்போம்”, என்றாள்.

“உன் முகத்துல பொட்டில்லாதது தான் என் பிரச்சனை”, என்றான் தீவிரம் சற்றும் குறையாத குரலில்.

அவள் காதில் கேட்டதை ஒரு நிமிடம் கனிமொழியாள் ஒரு நிமிடம் ஜீரணிக்கமுடியவில்லை. அவள் உடலின் ரத்த ஓட்டமெல்லாம் முகத்தில் வந்து நிலைத்தது போல முகம் ரத்த நிறம் கொண்டது.

“ஏய்”, என்றவள்….. “நீ முதலாளியா இருந்தா உன் வரைக்கும்! ஒழுங்கா மரியாதையா பேசு! இப்படி லூசுத்தனமா உளர்ன தொலைச்சிடுவேன்”, என்றாள் கையை நீட்டி……

அவளின் நீட்டிய கையை பிடித்தான், “என் முன்னாடி கையை நீட்டி பேசாத, எனக்கு பிடிக்கவே பிடிக்காது”,

அவன் கையில் இருந்து கையை உருவ முற்பட்டாள் முடியவேயில்லை. அந்த பிடியின் இறுக்கத்தில் கனியின் தைரியம் எல்லாம் வடிந்தது.

“விடு! விடு!”, என்று சொன்ன கனியின் கண்களில் பதட்டத்தில் நீர் நிறைய ஆரம்பித்தது. சற்று மூச்சும் வாங்க ஆரம்பித்தது. அவள் ஒரு ஆஸ்த்மாடிக் பயத்தில் அவளுக்கு சற்று வீசிங் ஆரம்பித்தது.

அவளிடம் வித்தியாசத்தை உணர்ந்தவன் தான் நடந்து கொண்டது அவளை ஏதோ செய்துவிட்டதை உணர்ந்தான்.

கையை விட்டவன், “என்ன பண்ணுது”,

“ஒண்ணுமில்லை’, என்று தலையை மட்டும் ஆட்டியவள் வெளியே சென்று அமர்ந்து கொண்டாள்.

தான் நடந்து கொண்டது மிகவும் அதிகம் என்று ஆகாஷிற்கு தெரிந்தாலும் அதற்கான வருத்தம் சிறிதும் இல்லை அவனிடம்.

வெளியே இருந்த கனியிடம் வீட்டிற்கு போகும் எண்ணமும் அதிகரித்தது. உடனே போனை எடுத்தவள் அசோக்கை அழைத்தாள்…..

“அண்ணா! நீ எங்க இருக்க?”,

“ஏம்மா? வீட்ல தான் இருக்கேன்”,

“எனக்கு கொஞ்சம் மூச்சு வாங்குது! உறியர மருந்து வேற எடுத்துட்டு வரலை”, என்றாள்.

பேசும்போதே அவள் சிரமப்படுகிறாள் என்பது புரிய……. “என்ன கனி இந்த மாதிரி நிலைமையில ரிஸ்க் எடுக்க கூடாது ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா? மருந்து எங்க வெச்சிருக்க?”, என்று கேட்டுக்கொண்டவன்………

“இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க இருப்பேன்”, என்றான்.

சிறிது நேரத்திலேயே ஆகாஷ் எட்டிப் பார்த்தான்……. கனி தலையை குனிந்து கம்ப்யூட்டர் டேபிளில் புதைத்திருந்தாள். ஏறி இறங்கிய மூச்சுக்கள் அவளின் சிரமத்தை காட்ட, அவள் ஆஸ்த்மேடிக் என்பதை புரிந்து கொண்டான்.

தன் மீதே நிறைய கோபம் வந்தது. அவன் அவளிடம் பேச வாய்திறக்கும் போதே செந்தில் வந்தான்.

வந்தவன், இவன் வெளியே நிற்பதை பார்த்ததும்……. “வேலை முடிஞ்சது ஆகாஷ், மேசின்ல………”, என்று ஆரம்பித்தவன்……. கனி டேபிளில் கவிழ்ந்திருபதைப் பார்த்து, “கனி”, என்றபடி அருகில் போனவன்……. “என்ன? என்னாச்சு?”, என்றான் ஆகாஷை பார்த்து.

ஆகாஷ் பதில் பேசாமல் தான் நின்றான்.

“கனி”, என்று அவள் அருகில் சென்று மீண்டும் அழைக்கவும் தலையைத் தூக்கினாள்.

“என்னம்மா? என்ன பண்ணுது?, மருந்து எடுத்தியா இல்லையா”,

“கொண்டுவரலை”,

“என்ன கொண்டுவரலையா? இப்படியா இருப்ப?”, என்று அவள் சொல்லும்போதே அசோகிற்கு போன் செய்ய எடுத்தான்.

“அண்ணாகிட்ட சொல்லிட்டேன்! அவன் வந்துட்டு இருக்கான்!”, என்றாள்.

“நீ உள்ள இரு ஆகாஷ்! எப்படியும் ஒரு டென் மினிட்ஸ்ல அசோக் வந்துடுவான். சாதாரண நிலைமைன்னா பரவாயில்லை! இவ வேற இப்படி இருக்கா! தனியா விட முடியாது, நான் இப்போ வந்துடறேன்”, என்றான்.

அவளிடம் கேட்ட அதே கேள்வியை இப்போது செந்திலிடம் கேட்டான் ஆகாஷ், “எத்தனை மாசம்”, என்று.

செந்தில் என்ன என்பது போல பார்க்க….. “இந்த பொண்ணுக்கு எத்தனை மாசம்?”, என்றான்.

இவன் எதற்கு இதெல்லாம் கேட்கிறான் என்பது போல செந்தில் பார்த்தாலும் அவனுக்கு பதில் சொன்னான், “எட்டு”, என்று.

அதை கேட்டிருந்த கனிமொழி அவனை எரித்து விடுவது போல பார்க்க…… அவள் பார்க்கும் பார்வையை உணர்ந்தாலும் அதற்கெல்லாம் சற்றும் கவலைப்படவில்லை ஆகாஷ். அதே சமயம் அவளின் பார்வையை சந்திக்கவும் தயங்கவில்லை.  

அவர்கள் மேலும் பேசும்முன்னேஅங்கே இருந்தான் அசோக், அவனுக்கு மூச்சிரைத்ததில் இருந்தே அவன் வந்த வேகம் புரிந்தது. அங்கே செந்திலோடு ஆகாஷையும் பார்த்தவன் நின்றான்.

அவன் ஆகாஷை பார்த்திருக்கிறான் ஆனால் அறிமுகம் இல்லை, ஆனால் ஆகாஷ் அசோக்கை பார்த்திருந்தாலும் கவனித்தது இல்லை. அதனால் அவனுக்கு தெரியவில்லை.

வேகமாக அவன் இன்ஹேலர் கொண்டு வந்து கனியிடம் கொடுக்க, இவர்கள் யாரும் அசைவது போல தெரியாததால் அவள் அதை எடுத்துக்கொண்டு ரூமினுள் போனாள்.

செந்தில் ஆகாஷையும் அசோக்கையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான். “பார்த்திருக்கோம்னு நினைக்கிறேன்! ஆனா பேசினது இல்லை!”, என்றபடி கைகுலுக்க கையை நீட்டினான் ஆகாஷ்.

அசோக் தயங்கியபடியே அவன் கையைப் பற்றி குலுக்கினான்.

“என்னப் பண்றீங்க”, என்று ஆகாஷ் அவனை பார்த்து கேட்டான். ஒரு சிநேக பாவம் அதில் இருந்தாலும் அதையும் மீறி ஏதோ ஆராய்வது மாதிரியே அசோகிற்கும் தோன்றியது செந்திலுக்கும் தோன்றியது.

“இவன் வந்ததுல இருந்தே சரியில்லை. என்கிட்டே வந்தவுடனே போன் பேசினப்ப கூட நல்லா தானே பேசினான், நடுவுல என்ன ஆச்சு”, என்று செந்தில் நினைக்க……

“பவர்லூம்ஸ் ஓடுது”, என்று ஆகாஷிற்கு பதில் கொடுத்தான்.

“எத்தனை?”, என்றான் ஆகாஷ் மறுபடியும் ஆராயும் குரலில்……

செந்தில் அசோக்கை தர்மசங்கடமாக பார்த்தான் அவன் ஏதாவது தப்பாக எடுத்துக்கொள்வானோ என்று.

“இருபத்தி அஞ்சு”, என்றான் அசோக்.

“எப்போ அவங்களுக்கு டெலிவரிக்கு டேட் சொல்லியிருக்காங்க?”, என்றான்.

இதை நிஜமாகவே செந்திலும் எதிர்பார்க்கவில்லை அசோக்கும் எதிர்பார்க்கவில்லை.

சரியாக அப்போது வெளியே வந்த கனிமொழி, “நீங்க அதை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமேயில்லைன்னு நான் முன்னாடியே சொன்னேன்”, என்று தீர்க்கமாக சொன்னவள், “போலாம் அண்ணா”, என்றாள் அசோக்கைப் பார்த்து……

ஏதோ நடந்திருக்கிறது என்று செந்திலும் அசோக்கும் யூகித்தனர். ஆனால் ஆகாஷ் தப்பாக நடந்திருப்பான் என்றெல்லாம் அவர்களால் எண்ண முடியவில்லை. இந்த கனி ஏதாவது அவனை கோபப்படும்படி பேசிவிட்டாளோ என்று எண்ணத்தான் தோன்றியது.

“என்ன  பிரச்சனை”, என்றான் செந்தில் இருவரையும் பார்த்து……….

பதில் பேசாமல் ஆகாஷ் நிற்க…….

“எங்கண்ணன் மாதிரியும் ஒரு ஃபிரண்ட் உங்களுக்கு இந்த மாதிரியும் ஒரு ஃபிரண்ட் உங்களுக்கு”, என்று ஆகாஷை ஒரு பார்வை பார்த்தபடி செந்திலிடம் சொன்னாள் கனிமொழி.

அதற்கு மறுத்தெல்லாம் ஆகாஷ் எதுவும் பேசவில்லை.

“நான் இனிமே இங்கே வரமாட்டேன் அண்ணா”, என்று செந்திலிடம் சொல்லியபடி  அசோக்குடன் கிளம்பினாள் கனிமொழி.

“ஏன் கனி?”, என்று செந்தில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே…… அசோக்கின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

என்ன சொல்வது, என்ன செய்வது, என்று தெரியாமல் அசோக் அவர்களிடம் தலையாட்டி விடைபெற்ற படி சென்றான்.

“நீ வரலைன்னா என்ன? நீ இருக்கிற இடத்துக்கு நான் வருவேன்! முடியலைன்னா உன்னை வரவைப்பேன்”, என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் ஆகாஷ்.

அவன் சொன்னது செந்தில் காதில் விழுந்தும் விழாமல் விழ…….

“என்னடா உனக்கு அவளோட பிரச்சனை?”, என்று அதட்டலாக செந்தில் கேட்க…

“அவ நெத்தில பொட்டு இல்லாதது தான் என் பிரச்சனைன்னு சொன்னா நீயாவது நம்புவியா”, என்றான்.

அதிர்ந்த செந்தில், “நீயாவது நம்புவியான்னா, அவகிட்டையும் சொன்னியா நீ”,  

“ம்”, என்று ஆகாஷ் தலையாட்ட  மிகவும் அதிர்ந்து நின்றான் செந்தில்.  

Advertisement