Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

கனிமொழியை ஆகாஷ் வீட்டில் விட்டு விட்டு அன்று மதியமே அசோக்கும் செந்திலும் கிளம்பிவிட்டனர்.

ஆகாஷும் கனியும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னதற்கு கூட, “அப்புறம் சாவகாசமாய் வர்றோம்”, என்று விட்டான் செந்தில்.

அவனுடைய பயம் அவனுக்கு………… ஒரு நாளைக்கு மேல் இங்கே இருந்தால் யார் ராஜியிடம் திட்டு வாங்குவது என்று….. அசோகிற்கும் அது தெரியும்….. அவனுக்கு இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் செந்திலோடு வந்ததால் அவனோடே கிளம்ப முடிவெடுத்து கிளம்பி விட்டான்.   

அவர்கள் இருக்கும் வரை கனிக்கும் ஆகாஷிற்கும் மீண்டும் தனிமை கிட்டவேயில்லை. இருந்தாலும் கனி அந்த வீட்டில் அவன் மனைவியாக அவனோடு இருக்கிறாள் என்ற எண்ணமே உற்சாகத்தோடு ஆகாஷை நடமாட வைத்தது.

அது அவனை மனதோடு பாட வைத்து, வாய் விட்டும் ஹம் செய்ய வைத்தது.  அக்ஷியை வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டு இருந்தான்.

ரூமினுள் ராகவை உறங்க வைத்துக்கொண்டு இருந்தாள் கனி…… அக்ஷராவை தூக்கிக்கொண்டு அவன் வரவும், அவளை கையில் வாங்கியவள், “இவளை நான் பார்த்துக்கறேன், நீங்க உங்க பையனை தூங்க வைங்க….. அரை மணிநேரமா இந்த தொட்டிலை ஆட்டறேன், தூங்குவனாங்கறான்…..”, என்றவள் அக்ஷியை கொஞ்ச ஆரம்பித்தாள்.

அவளிடம் அந்த ஆட்டம் காட்டிகொண்டிருந்த ராகவ்……. ஆகாஷ் ஆட்டவும் ஐந்து நிமிடத்தில் உறங்கினான்.

“அது எப்படி? நானும் அரை மணிநேரமா ஆட்டறேன், தூங்காதவன், உங்க கிட்ட உடனே தூங்கிட்டான்”, என்றாள் ஆச்சர்யமாக.

“இரு, அவன் எழுந்திறிக்கட்டும், கேட்டு சொல்றேன்”, என்றான் சிரிக்காமல்.

“ம்! ஜோக்கு! சிரிச்சிட்டேன்!”, என்று அவள் வழக்கம் போல வாயை இழுத்துப்பிடிக்கப் போக…….

“அம்மா! தாயே! என்னை விட்டுடு!”, என்றபடி ஆகாஷ் வெளியே ஓடினான்.

“ம்! அந்த பயம் இருக்கட்டும்!”, என்று சொல்லியபடியே வெளியேப் போனாள்.

அவள் வெளியே வரும்போதே, “வர்றேன்!”, என்று யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.

அதை வைத்தவன்…… “நான் குடௌன் போகணும்! அங்க சரக்கு ஏத்துறதுல ஏதோப் பிரச்சனை போல!”, என்றான்.   

“போயிட்டு வாங்க!”, என்று அவள் வார்த்தையை முடிக்கும் போது அவன் காரை ஸ்டார்ட் செய்து இருந்தான்.

கார் சீறிப்பாய்ந்தது……..

“எதுக்கு இவ்வளவு வேகமா போகணும்! வரட்டும்!”, என்று அவனை மனதிற்குள் திட்டிகொண்டாள் கனிமொழி. அவனின் வேகம் அவளுக்கு பயத்தை கொடுத்தது.

“எதுக்கு அண்ணி இவ்வளவு வேகமா போகணும்”, என்று அனிதாவிடம் கூட குறைப்பட்டாள்.

“அவன் எப்பவுமே கொஞ்சம் வேகம் தான்! சொல்லணும்!”, என்ற அனிதா… “எங்க போறான்? சொன்னானா!”,

“குடௌன் போகணும்! சரக்கு ஏத்துறதுல பிரச்சனைன்னு சொன்னாங்க…..”,

“பிரச்சனையா?”, என்று உடனே கவலை தொற்றிக்கொண்டது அனிதாவிற்கு……

“என்னன்னு கேளுங்க அண்ணி”, என்றாள் கனிமொழியும்.

“இப்போ ட்ரைவிங்க்ள இருப்பான். கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்”, என்றாள்……

சிறிது நேரம் கழித்து கூப்பிட்டதற்கு எடுக்கவில்லை. அதற்கு பிறகு சிறிது நேரம் கழித்து சுவிட்ச் ஆப் என்று வந்தது. 

குடௌனில் இருந்த நம்பருக்கு போன் செய்தாள் அனிதா…….

அங்கே இருந்த மானேஜர் போனை எடுக்கவும், “என்ன அங்க பிரச்சனை?”, என்றாள்.

“அது வந்துங்க மேடம்………”, என்றவன், “எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லைங்க….”, என்றான்.

“உனக்கு சம்மந்தம் இருக்கா இல்லையான்னு கேட்கலை? என்ன பிரச்சனைன்னு கேட்டேன்”.

“சரக்கு அனுப்பறதுல குளறுபடி நடந்திருக்குதுங்க! ரெண்டு பண்டல் அனுப்பற மாதிரி கணக்கு எழுதிட்டு மூணு பண்டல் அனுப்பியிருக்காங்க! இந்த மாதிரி நிறைய தடவை அனுப்பியிருக்காங்க போல!”, என்றார்.

“நீங்க தானே அங்க இன்சார்ஜ்! உங்களுக்கு தெரியாம எப்படி நடந்துச்சு…..?”,

“என்னோட கவனத்துக்கு இது வரவே இல்லைங்க மேடம்! இப்போ தான் தெரிஞ்சது உடனே சார் கிட்ட சொல்லிட்டேன்”, என்றான்.

“சார் என்ன பண்றார்?”,

“ஏதோ கணக்கு வழக்கு சரி பார்த்துட்டு இருக்காங்க!”, என்றான்.

அவன் வேலை பார்க்கும் போது அவனாக அழைத்தால் தான் உண்டு…… அது அவனிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டான்.

“சார் கொஞ்சம் ப்ரீ ஆனதுமே வீட்டுக்கு கூப்பிட சொன்னாங்கன்னு சொல்லுங்க!”, என்றாள் அனிதா.

“சரிங்க மேடம்!”, என்றான் அந்த மானேஜர்.

இரவு பதினொன்று வரையிலும் ஆகாஷ் வரவில்லை. அவனுக்கு அழைத்து பார்க்கலாம் என்று அனிதா அழைத்தாள்.

“அனி! கொஞ்சம் பிசியா இருக்கேன்! பாதில விட்டுட்டு வரமுடியாது. வந்தா திரும்ப முதல்ல இருந்து பார்க்கணும். நீங்க தூங்குங்க, கனி கிட்டயும் சொல்லிடு!”, என்றபடி போனை வைத்துவிட்டான்.    

மீண்டும் அழைத்த அனிதா, “கனிகிட்ட நீயே ஒரு வார்த்தை சொல்லிடு! அப்போதான் தூங்குவா!”, என்றாள்.

அவள் பேச்சை தட்டாமல் உடனே கனிக்கு அழைத்த ஆகாஷ், “இங்கே கொஞ்சம் பிரச்சனை கனி! கணக்கு பார்த்துட்டு இருக்கேன்! பாதில விடமுடியாது! நீ தூங்கு, வேலை முடிஞ்ச உடனே வந்துடறேன்!”, என்றான்.

அவளுக்கு பேச சந்தர்ப்பமே கொடுக்கவில்லை, சொல்லி உடனே வைத்தும்விட்டான்.

நேற்று ஆகாஷ் இருந்ததால் நிம்மதியாக உறங்கிய கனிமொழிக்கு இன்று உறக்கமே வரவில்லை. ராகவை தூங்க வைத்துவிட்டு அந்த புறம், இந்த புறம் என்று மாறி மாறி தலை வைத்து தூங்கிப் பார்த்தாள். உறக்கம் வருவேனா என்றது.

ஆகாஷும் வந்துவிடுவான் என்று பார்த்துக்கொண்டே இருக்க………. அவன் வரும் வழியாக காணோம். எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் விழித்த போதும் ஆகாஷ் வந்திருக்கவில்லை.

எழுந்ததும் முதல் வேலையாக அவனுக்கு போன் செய்தாள். அது ஸ்விச்ஆப் என்று வந்தது. ஏதாவது வேலையாக இருக்கும் என்று மனதை தைரியப்படுத்திக்கொண்டு எப்போது வருவான் என்று அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

குழந்தைக்கு பசியாற்றி அவனை தூங்க வைத்துக்கொண்டிருக்கும் போது ஆகாஷின் குரல் கேட்டது. குழந்தை தூங்கிவிட்டதை உறுதி செய்துகொண்டு வேகமாக வந்தாள் அவனை காண…..

கண்ட கண்கள் கண்டது கண்ட படி நின்றது. அவன் உடை முழுக்க அங்கங்கே ரத்தம். அவன் சாவகாசமாக அனிதாவிடம் பேசிக்கொண்டு நின்றிருந்த போதே அவனுக்கு ஒன்றுமில்லை என்று புரிந்தது.

ஆனால் அவனை அந்த மாதிரி பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள். ஒரு பயப்பந்து நெஞ்சில் உருண்டது. நின்றது நின்றபடியே நின்றிருந்தாள். கால்கள் வேரோடி விழுந்துவிடுவோமா என்று தோன்ற அருகில் இருந்த சுவற்றை பிடித்துக்கொண்டாள்.

அவளை அப்போது தான் பார்த்த ஆகாஷ், அவளின் பயந்த பார்வையை பார்த்து…. “எனக்கு ஒண்ணுமில்லை! வழில ஒரு ஆக்சிடென்ட்! ஹெல்ப் பண்ணினேன்! அது தான் இப்படி!”, என்று தன் உடையை காட்டினான்.

ஒன்றும் பேசாமல் ரூமிற்குள்ளேயே சென்று விட்டாள்……..

“அவ பாரு முகத்தை தூக்கி வெச்சிட்டுப் போறா! நாம அப்புறம் பேசலாம்!”, என்று அனிதாவிடம் சொல்லிவிட்டு கனியின் பின்னாலேயே போனான்.

“இந்த தடவை அடிவாங்கினா…… என்கிட்ட மட்டும் சொல்லு! நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!”, என்றாள் போகிறபோக்கில் அனிதா.

“அக்கா…….!”, என்று அவளிடம் செல்லமாக கொஞ்சி, முகம் முழுக்க புன்னகையுடன் உள்ளே போனான்.

உள்ளே சென்று கனியைப் பார்த்தால் அவள் அமர்ந்திருந்த கோலம்….. படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள், மடியில் ஒரு தலையணையை வைத்து கைகளை அதன் மேல் வைத்து கைகளுக்குள் முகத்தை புதைத்து அமர்ந்திருந்தாள்.

“ஹேய்! அழகி! என்ன போஸ் இது!”, என்று சொல்லியபடியே அவளின் அருகில் போக…..

கைகளில் இருந்து முகத்தை எடுத்து அவனை பார்த்தவள், “முதல்ல இந்த ஷர்ட் கழட்டுங்க”, என்றாள்.

“ஓகே! கழற்றது என்ன? குளிச்சிட்டே வந்துடறேன்!”, என்று சொல்லியபடி பாத்ரூமினுள் போனான்.

அவன் குளித்து முடித்துப் பார்த்தால் டவல் எடுத்து வராதது தெரிந்தது…

மெதுவாக கதவை திறந்துப் பார்த்தால் அவள் மீண்டும் முகத்தை கைகளுக்குள் புதைத்து அமர்ந்திருந்தாள்.

“அழகி”, என்றான் மெதுவாக…….. இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் அசைவில்லை…….

சத்தம் போட்டால் குழந்தை எழுந்துக்கொள்வானோ என்று மறுபடியும், “கனி”, என்று இரண்டு மூன்று முறை அழைத்து பார்த்தான்.  

அவளோ அவளுக்குள்ளேயே ஏதோ நினைவுகள் என்பது மாதிரி அமர்ந்திருந்தாள்.

“கனிமொழி!!!!!!”, என்று அதட்டலாக ஒரு சத்தம் போடவும் தான் அவசரமாக முகத்தில் இருந்து கையை எடுத்து, “என்ன?”, என்பது மாதிரி பார்த்தாள்.

“டவல் எடுத்துத் தர்றியா? இல்லை கதவை திறந்து இப்படியே வரட்டுமா”, என்று கேட்டான்.

அப்போது தான் அவன் குளித்து தலையை வெளியே விட்டு கொண்டிருக்கிறான் என்றுணர்ந்தவள், “வேண்டாம்!”, என்று அலறி அவசர அவசரமாக அவனின் கபோர்டை திறந்து ஒரு துண்டை எடுத்துக் கொண்டு போய் நீட்டினாள்.

அவளின் செய்கையை பார்த்து அவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை…..” ஈசி! ஈசி! எதுக்கு இந்த பதட்டம்!”, என்று சிரித்தபடியே வாங்கினான்.

“இருடி பொண்டாட்டி! உன்னை ஒரு நாள் உள்ள இழுக்காம விடறதில்லை! ஒரு நாள் என்ன ஒரு நாள் தினமும் என்னை குளிப்பாட்ட வெச்சா போச்சு”, என்று நினைத்தபடியே.

அவள் முகத்தில் சிரிப்பெல்லாம் இல்லை. “ம்! கொஞ்சம் கோபம் பெருசு போல!”, என்றெண்ணியபடியே டவலைக் கட்டிக்கொண்டு வந்தவன்……

“எதுக்கு அழகி கோபம்!”, என்றான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், அவன் நின்றிருந்தக் கோலத்தைப் பார்த்து கண்களை திருப்பினாள்.

அவள் பார்வை சென்ற புறம் முன் சென்று நின்றான்.

“ப்ச்!”, என்றவள்…….. “முதல்ல ட்ரெஸ் பண்ணுங்க”, என்றாள்……. அவளின் பாவனை சற்று அவனுக்கு கடுப்பை கிளப்ப……  

“ஹேய்! ஓவரா பண்ணாத! இது எவ்வளவு பெரிய டவல். என்னத் தெரியுது உனக்கு இதுல? நான் என்னவோ இன்னர்ஸ்ஸோட நிக்கற மாதிரி எதுக்கு இந்த எக்ஸ்ப்ரஸன்…… இதுக்குள்ள ரெண்டு பேர் நிக்கலாம்! உள்ள வர்றியா!”, என்றான் கண்ணடித்து….

அவள் பதில் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நிற்க…….

“ஏன்? இப்படி டவல் கட்டி இருந்தா நீ பேசமாட்டியா! என்னைப் பார்த்து மயங்கிடுவன்னு பயமா இருக்கா!”, என்றான் அவளை சீண்டும் எண்ணத்துடன்.

கோபம் வந்த கனி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்………. “எனக்கென்ன பயம்! நீ இது இல்லாம இருந்தாக் கூட பேசுவேன்!”, என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.

“அப்படியா!”, என்று சிரித்தபடி…….. “அப்போ இந்த டவல் இல்லாம இருந்தா கூட என்னைப் பார்த்து பேசுவ!”, என்று அவன் சொன்ன பிறகே அதன் முழு அர்த்தத்தையும் உணர்ந்தவள்…..

“டேய்! அறிவு கெட்டவனே! என்னை உளற வைக்காத!”, என்று எரிச்சலாக சொன்னவள் எம்பி அவனின் தலையில் ஒரு குட்டு குட்டினாள். 

குட்டிய கையை அனாயசமாக பிடித்து அவளை அருகில் இழுத்தவன், “என்ன அழகி கோபம்!”, என்றான்.

“ஒண்ணுமில்லை!”,

“அப்புறம் ஏன் மேடம் இப்படி முகத்தை தூக்கி வெச்சிருக்கீங்க! சொல்லுங்க ப்ளீஸ்!”, என்றான் கெஞ்சலாக. 

அவனின் கெஞ்சுதலில் இளகியவள்……. “உங்களை அந்த மாதிரி ரத்தக் கறை படிஞ்ச ட்ரெஸ்ல பார்த்தவுடனே பயந்துட்டேன்”.

“ஒரு ஸ்கூல் பையன், சைக்கிள்ல போனவனை ஒரு கார் இடிச்சு தூக்கி தூர போட்டுடுச்சி…. மேஜர் ஆக்சிடென்ட் ………எல்லோரும் ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணினாங்க…….”,

“எனக்கு அது வர்ற வரைக்கும் பொறுமை இல்லை! அதான் யாராவது ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னேன். ஒருத்தர் ஹெல்ப் பண்ணினார். அவனை அப்படியே நம்ம கார்லயே தூக்கி போட்டுட்டு போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வந்தேன்”,

“இப்போ அந்த பையன் எப்படி இருக்கான்……?”,

“உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொன்னாங்க! வந்துட்டேன்! அப்புறமா போய் பார்த்துக்கறேன்”, என்றான்.

கனிமொழிக்கு முகம் சற்று தெளிந்தாலும் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது.

“என்னடாம்மா”, என்றான் கனிவாக.

அவனின் கேள்வியில் கண்கள் கலங்கியது.

“நீங்க ஏன் நேத்து அவ்வளவு வேகமா போனீங்க?”, என்றாள்.

“எப்போ?”,

“குடௌன்ல இருந்து போன் வந்தவுடனே”,

“கொஞ்ச நாளாவே சரக்கு கணக்குல இருக்கறதுக்கு மேல வெளில போகுதுன்னு கம்ப்ளைன்ட் , இப்போ வந்தா கையும் களவுமா பிடிச்சிடலாம்னாங்க, அதான் கொஞ்சம் வேகமா போனேன்”,

“எனக்கு எவ்வளவு பயமா இருந்திச்சி தெரியுமா?”, என்றவள்………

“அதுவும் ரத்த கறையோட உங்களை இன்னைக்கு பார்த்தவுடனே, என் உயிரே என்கிட்ட இல்லை”, என்றாள் கண்கள் கலங்கியவளாக…….                     

“என்ன இது? எதுக்கு இந்த பயம்! எனக்கு ஒண்ணும் ஆகாது! உன் வாழ்க்கையில முன்ன நடந்ததை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஏதாவது ஆகிடும்னு பயந்துட்டே இருப்பியா? எனக்கு ஒண்ணும் ஆகாதுடா….. “, என்றான் அவளை தைரியப்படுத்தும் விதமாக.

அவனையே பார்த்தவள், “நீங்க என்கிட்ட ஒரு வரம் கேட்டீங்க தானே”, என்றாள்.

“ஆமாம்! நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வாழ்க்கை துணையா வர்ற வரம் கேட்டேன். அதான் நீ கொடுத்திட்டியே! அப்புறம் என்ன?”,

“நீங்களும்  எனக்கு ஒரு வரம் கொடுக்கணும்!”, என்றாள் அவனை பார்த்து.

“என்னடா? என் அழகி எது கேட்டாலும் நான் கொடுப்பேன்! சொல்லு!”,

“உங்களுக்கு முன்னாடி நான் செத்து போயிடனும்! நீங்க இல்லாத இந்த உலகத்துல நான் இருக்கவே கூடாது. எனக்கு அப்புறம் தான் நீங்க இந்த உலகத்தை விட்டு போகணும்! எனக்கு அந்த வரத்தைக் கொடுப்பீங்களா!”, என்றாள் கண்களில் நீர் நிறைந்து….

வேகமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்…… அவளும் அவனுள் புதைந்து விடுபவள் போல இறுக்கிக் கொண்டாள்.  

“இந்த மாதிரி எல்லாம் பேசாத அழகி! நாம நல்லா இருப்போம்! அதையும் இதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பாத!”,

“நான் இப்போதைக்கு பேசலை……. எப்பவுமே……. எனக்கு வயசானாலுமே……. என் பசங்க உங்களை  விட என்னை நல்லா பார்த்துக்குவாங்கன்ற நம்பிக்கை இருந்தாலுமே……… நீங்க எனக்கு அப்புறம் தான் போகணும்!”, என்றாள் வேண்டுதலாக.  

“இதெல்லாம் நம்ம கையிலையா இருக்கு!”,

“எனக்கு அதெல்லாம் தெரியாது! நீங்க எனக்கு வரத்தை கொடுப்பீங்களா மாட்டீங்களா”,

அவளை விலக்கி நிறுத்தியவன்……. “கையை நீட்டு!”, என்றான் அவளைப் போலவே,

அவள் நீட்டவும்…… அதில் அடித்து………. “கொடுத்துட்டேன்!”, என்றான்.

“உன்னை விட்டுட்டுப் போகமாட்டேன்! போகற மாதிரி நிலைமை  வந்தாலும், உன்னை கூட கூட்டிட்டுப் போயிடுவேன்!”, என்றான்.

இந்த முறை அவளாக அவனை இறுக்கமாக அணைத்து, “தேங்க்ஸ்”, என்றவள், அவனுள் முகத்தை புதைத்துக் கொண்டே பேசினாள், “நான் உங்களை நம்பறேன்! நீங்க என்னை விட்டுட்டுப் போகமாட்டீங்கன்னு……… அப்படியே உங்களை மீறி ஏதாவது நடந்தாலும், நான் உங்களோட வந்துடுவேன்!”, என்றாள் ஸ்திரமாக.

“என்ன அழகி பேச்சு இது! நம்ம இன்னும் வாழவே ஆரம்பிக்கலை! அதுக்குள்ள ஏன் இப்படி பேசற…?”,   

“ஒரு தடவை! என் திருப்திக்காக”,

“நான் கொடுத்த வரம் கொடுத்ததுதான், மீற மாட்டேன்! மாட்டவே மாட்டேன்!”, என்றான் உறுதியாக…..

அதனைக் கேட்டவள் அவனை விடவே மாட்டாதவள் போல இன்னும் இறுக்கி கொண்டாள். அவனை விடும் எண்ணமில்லாதவள் போல அப்படியே நிற்க……

ஆகாஷ் தான் பெரும் சோதனைக்கு உள்ளானான். “என்னடா இவ? இப்படி பண்றா! நானும் எவ்வளவு நேரம் தான் நல்லவனாவே இருக்கிறது….. முடியலைடா சாமி…..”,    

அவனின் வெற்று மார்பில் புதைந்திருக்கிறோம் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  தன்னுடைய முழுவுடலும் அவன் மேல் இருக்கிறது என்ற உணர்வும் இல்லை. அவளுக்கு இருந்ததெல்லாம் ஒரே எண்ணம் தான், என்னவோ விட்டால் அவன் போய்விடுவானோ என்பது போல அப்படியே அவனை விடாமல் பிடித்து இருந்தாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை விட ஆகாஷிற்கு மனமில்லாவிட்டாலும், இப்படியே நின்றால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வது ஆகாத காரியம் என்று நன்கு தெரிந்தவன் மெதுவாக அவளை விலக்க முற்பட……

அவள் ஏன் என்பது போல தலை நிமிர்ந்து பார்க்க…….. மிகவும் அருகில் இருக்கும் அவளின் அழகு முகத்தை விட விருப்பமில்லாதவன், “என்னால இதுக்கு மேல முடியாதுடா அழகி”, என்றவன்……..

நெற்றியில் ஆரம்பித்து, முகம் முழுவதும் தன் இதழ்களால் கதை எழுதத் துவங்கினான். கனியும் மயங்க ஆரம்பித்தாள்……. அவளின் கைகள் இறுக்கத்தை விட  அவளின் உடலின் தளர்ச்சி புரிந்தவன், தன் மேல் அவளை இன்னும் சாய்த்து இப்போது இறுக்கத்தை தனதாக்கிக் கொண்டு இதழில் கதை எழுத ஆரம்பித்தான்.

நீண்ட நெடு நேரம் தொடர்ந்த அந்த முத்தம், எல்லைகளை மீறு என்று அவனுக்கு கட்டளையிட….. அவனின் கைகள் அத்து மீற ஆரம்பித்தது.

விரல்களின் பேதம், அந்த பேதைக்கும் புரிய…… “தடுக்காதே அவனை”, என்று சொன்ன மனதையும் மீறி அவள் தடுத்தாள்…….

“வேண்டாமே”, என்று…..

அவன் கண்டு கொள்வதாக தெரியவில்லை….. அவளின் வேண்டாமே அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எங்கே கேட்கும்….. கலையத் தொடங்கிய மனதையும் உடலையும் அடக்கும் வழி தெரியாது……. அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளி விலக்கி நிறுத்தினாள்.

“ஏன் கனி?”, என்றான் சற்று எரிச்சலாக.

“இப்போ வேண்டாம்!”, என்றாள்.

“எனக்கு வேணும்!”, என்றான் பிடிவாதமாக.

“இல்லை! இது நடக்கக் கூடாது!”,  

“ஏன்? ஏன் நடக்கக் கூடாது?”,

அவள் குழந்தையைப் பார்க்க…..

“அவன் தூங்கறான்! அவன் சின்னக் குழந்தை! அவன் இருக்கறதால வேண்டாம்ன்னு சொல்றியா!”,

“ம்! அவன் சின்னக் குழந்தை! அது தான் பிரச்சனை! அவனுக்கு ஒன்னரை மாசம் தான் ஆகுது! நான் அவனுக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன்……. இந்த மாதிரி நிலைமையில நமக்குள்ள ஏதாவது நடந்தா மறுபடியும் நான் குழந்தை உண்டாகறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு”,

“இப்போதைக்கு எனக்கு குழந்தை வேண்டாம், குழந்தை உருவானா இவனுக்கு ஒரு வயசாகும் போதும் அடுத்த குழந்தையே பொறந்துடுவான்….. அந்த மாதிரி நான் விரும்பலை…..”,

“என்னோட முதல் குழந்தை அப்போவே ஒரு அம்மா சொன்னாங்க…… எனக்கு இன்னும் அதை மறக்க முடியலை….. அவங்க பொண்ணுக்கு நிறைய வருஷமா குழந்தை இல்லையாம்…… அதுக்கு அந்தம்மா சொல்லுது, என் பொண்ணு இத்தனை வருஷமா புருஷனோட சேர்ந்து இருக்குது, ஒரு குழந்தைக்கு வழியக் காணோம்! இவ என்னடான்னா பதினஞ்சு நாள்ல புருஷனை காவு கொடுத்தும் விவரமா புள்ளையை வயித்துல வாங்கிட்டானாங்க”,

“என் உடம்பெல்லாம் கூசிப்போச்சு! எவ்வளவு அசிங்கமா பீல் பண்ணினேன் தெரியுமா! என் குழந்தை உண்டான ஒரு சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியலை!  எனக்கு அந்த பேச்செல்லாம் மறக்கவே மறக்காது. மறுபடியும் எனக்கு அந்த மாதிரி ஒரு பேச்சு வேண்டாம்…… வேண்டவே வேண்டாம்….”,

“அப்போ  நமக்கு இன்னொரு குழந்தை வேண்டாமா”, என்றான் அதிர்ச்சியாக ஆகாஷ்.

“இவ்வளவு சீக்கிரமா மறுபடியும் ஒரு குழந்தையை வயித்துல வாங்கிட்டு என்னால யாரையும் பார்க்க முடியாது”,

“அப்போ என்னால ஒரு குழந்தை வர்றது உனக்குப் பிடிக்கலை….”,

“இல்லைங்க! இல்லை! அப்படி சொல்லலை! குழந்தைக்கு ஒரு மூணு வயசாவது ஆகட்டும்”, என்றாள் கெஞ்சுதலாக…..

“அவ்வளவுதானே! குழந்தை உருவாகாம பார்த்துக்கலாம்!”, என்று மீண்டும் அவளை நாட…..

“ப்ளீஸ்! ப்ளீஸ்! முதல்ல அதுக்கு வழி செஞ்சிட்டு அப்புறம் பார்க்கலாம்! என்னால கொஞ்சம் கூட இந்த விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது”, என்று அவள் கெஞ்ச..

“போடி…..”, என்று அவளை உதறினான்.

ஆகாஷிற்கு அவளின் நிலை புரிந்தாலும், அவள் சொல்வது சரி என்று பட்டாலும், அவனால் அப்போதைக்கு அவளை விட முடியவில்லை.

மீண்டும் குளியலறை சென்று ஷவரின் அடியில் வெகு நேரம் நின்றவன்…… நன்றாக  தெளிந்தான். “பொறு மனமே! பொறு! அவசரப்படாதே!”, என்று அவனுக்கு அவனே பலமுறை சொல்லிக்கொண்டு…… முடிவெடுத்து…..

வெளியே வர கதவு திறக்க…… கதவுக்கு வெளியில் வேறு டவலை வைத்துக்கொண்டு கனி நின்றிருந்தாள்.

அவனின் முடிவெல்லாம் காற்றில் பறந்தது…

அவனை பார்த்ததும் அவனிடம் நீட்ட, “என்கிட்ட இருக்கு!”, என்றான்.

“அது ஈரமா இருக்கும்!”, என்று சொல்லி அவள் நீட்டிக்கொண்டே இருக்க……

கையில் வாங்கினான், “குழந்தை இப்போதைக்கு வேண்டாம் அழகி! ஆனா நான் உன்னை விடறதா இல்லை…….”, என்று எண்ணிக்கொண்டே ……

அவன் வரவும் அவன் தலையில் இருந்து நீர் சொட்டியதை பார்த்தவள், “தலை ஈரமா இருக்கு”, என்றாள்.

“வாயில சொன்னாப் போதுமா! துவட்டி விட மாட்டியா!”,

“ம்! நானா!”,

“ஏன்? நீதான்!”,

“இப்போதான் ஷவர் அடில போய் இவ்வளவு நேரம் நின்னுட்டு வந்தீங்க…… மறுபடியும் நான் துவட்டி விடறதா!”, என்றாள் கிண்டலாக.  

அவள் சொல்வது புரிந்தாலும், “சொன்னதைச் செய்!”, என்றான் அதட்டலாக, அவன் போய் படுக்கையில் அமர்ந்து கொள்ள…….           

“இம்சை பண்றான் இவன்!”, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே, ஒரு டவலை எடுத்து துடைக்கப் போக…..

“இன்னாது இது!”, என்றான்.

“தலை துவட்றேன்….”,

“அது தெரியுது! டவல் வேண்டாம்! உன் புடவைல துவட்டு!”,

“என்ன புடவையிலையா?”,

“ம்! புடவையில தான்! காட்டன் புடவை தான்! தண்ணி ஈட்டும், துடை!”, என்றான்.

“நீ மறுபடியும் போய் தண்ணி அடில தான் நிக்கப் போற!”, என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் துடைக்க அருகில் வர…….

“சும்மா பேசாம துவட்டுடி!”,

“என்ன டீ யா?”,

“ஆமாண்டி! என் பொண்டாட்டி!”, என்று அவளை அருகில் இழுத்து அவளின் இடையை வளைத்து வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான்.

“இப்படி இருந்தா? எப்படி துவட்ட!”,

“எப்படியோ துவட்டு”, என்றவன் இம்மியும் நகரவில்லை தலையையும் நகர்த்தவில்லை. அவளை வாசம் பிடித்துக்கொண்டிருந்தான்.

வேறு வழியில்லாமல் அப்படியே புடவையின் முந்தானையை எடுத்து துடைக்க ஆரம்பித்தாள்.

விலகிய புடவையின் பின் தெரிந்த அவளது இடையில் இதழ் பதித்து கோலமிட…….

உடல் சிலிர்த்தவள், “ப்ளீஸ்”, என்றாள் கெஞ்சுதலாக…..  

“வேலையைப் பாரு அழகி!”, என்று சொல்லி, மேலும் அவளை சோதிக்காமல், அவள் துவட்டும் வரை அப்படியே அவளை அணைத்தபடியே இருந்தான்.

 “விலகுங்க, துவட்டிட்டேன்!”,

விலகியவன், “போய் டிஃபன் எடுத்துட்டு வா! பசிக்குது!”,

“இங்கயா?”.

“இங்க தான்!”,

போய் எடுத்து வந்தாள்.

அதற்குள் அவன் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தான்.

“அதை எடுத்துவைங்க! சூடா இருக்கும் போதே சாப்பிடுங்க!”, என்று அவள் சொல்ல.

“முக்கியமான வேலை! எடுத்து வைக்க முடியாது!”,

“பசிக்குதுன்னு சொன்னீங்க!”,

“பசிக்குதுதான்!”,

“அப்புறம்”,

“ஊட்டி விடு!”, என்றான்.

“ஆங்!”, என்று வாயை பிளந்தவள்…… “இது கொஞ்சம் ஓவரா தெரியலை!”,

“எனக்கொன்னும் தெரியலை! ஊட்டி விட்டா சாப்பிடறேன்! இல்லன்னா வேண்டாம்!”, என்றான்.

வேறுவழியில்லாமல் ஊட்டி விட்டாள்…… “ரொம்பப் படுத்தறடா நீ!”, என்று சொல்லிகொண்டே …….

“என்ன டா வா?”,

“நீ என்னை டீ சொல்லும்போது, நான் உன்னை டா சொல்லக் கூடாதா”,

“சொல்லலாம்! சொல்லலாம்! உன்கிட்ட தான் லைசென்ஸ் இருக்கே!”, என்று சுவாதீனமாக கையை விட்டு தாலியை வெளியே எடுத்தான்.

பட்டென்று அவனின் கையை தட்டி விட்டவள், “லைசென்ஸ்ன்னு சொன்னா எங்களுக்கு தெரியாதா, அதைக் காட்டணுமா!”,

“காட்டனும்! அழகி காட்டனும்!”, என்று இரு பொருள் பட சொல்லி, வாய் மேல் ஒரு அடி வாங்கி………. அதற்கும் அடங்காமல்………

“என்ன தான் சொல்லு சாரி தான் இருக்கறதுலயே…….”, என்று சொல்ல வந்தவன்….. அவள் வாய் மூடி, “ப்ளீஸ்!”, என்று கெஞ்சவும்……… மேலே கலாட்டா செய்யாமல் சாப்பிட்டு முடித்தவன்…….

“ஆனா ஒரே ஒரு ரிக்வெஸ்ட்! நம்ம தனியா இருக்கும் போது மட்டும் டா சொல்லு!”,

“சரிடா! டால்டா!”, என்றாள் ரைமிங்காக…….

“என்ன டால்டாவா!, உன் வாயை……..!”, என்று அவளை இழுத்து, அவளின் இதழ்களை முற்றுகையிட்டு, அவளுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க…….. அந்த பனிஷ்மென்ட் கொடுப்பவருக்கும் பிடித்தது, வாங்குபவருக்கும் பிடித்தது.   

சிவந்த முகத்தை மறைத்து, அவள் கையை கழுவி வர…….. இப்போது லாப்பை ஷட் டௌன் செய்திருந்தவன், “என்னைத் தூங்க வை!”, என்றான் அடுத்ததாக…..  

“நீ ரொம்பப் பண்ற!”, என்று சிடுசிடுத்தவள்….. “நீ தூங்குனா தூங்கு! தூங்கலைன்னா போ!”, என்று வெளியே போக……

“அப்போ சரி! நான் நைட் முழுசும் தூங்கலைனாலும் பரவாயில்லை, மறுபடியும் ஆபிஸ் போறேன்!”, என்று கிளம்ப போக…..

“என்ன பண்ணனும்!”, என்று அவன் முன் வந்து நின்றாள்.

“உட்காரு!”, என்று படுக்கையை காட்ட……….. அவள் உட்கார்ந்ததும்,

அவளின் மடியில் தலை வைத்து அவளின் இடுப்பைக் கட்டி கொண்டு உறங்க முற்பட்டான்.  சில நிமிஷங்களில் உறங்கியும் விட்டான்.

அவன் உறங்கியது தெரிந்ததும், அவன் நெற்றியில் முத்தமிட்டு அவன் கையை மெதுவாக விலக்கி, அவனின் தலைக்கு ஒரு தலையணை கொடுத்து…… விலகியவள்……. நின்று அவளின் மகனும் அவனின் தந்தையும் உறங்கும் அழகை பார்த்துக்கொண்டு நின்றாள்.

ஒரு வானவில் போலே                                                                                                     என் வாழ்விலே வந்தாய்                                                                                                     உன் பார்வையால் எனை வென்றாய்                                                                                              என் உயிரிலே நீ கலந்தாய்………..

Advertisement