Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

கனி வெகு நேரம் அழுதுக்கொண்டு இருந்தும் ஆகாஷ் விழிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக அழுகையை நிறுத்தினாள்.

அவன் விழித்துக்கொண்டால் திட்டுவான், அவன் எழும்முன் படுக்கலாம் என்று கட்டிலை நெருங்கி அவனைத் தாண்டும் போது திடீரென்று குழந்தை அழுகையில் வீறிட  பதட்டத்தில் அவன் மேலேயே விழுந்தாள்.

அவள் மேலே விழுந்ததில் விழித்துக்கொண்ட ஆகாஷ் குழந்தையின் வீறிடலையும் கேட்டான்.

அவன் விழித்துக்கொண்ட பயத்தில் கனிமொழிக்கு அவன் மேல் இருந்து எழ வேண்டும் என்று கூட சட்டென்று தோன்றவில்லை. அவன் அழுததற்கு திட்டுவானோ என்று பயத்தோடு அவனை பார்த்தாள்.

அவள் அழுததே அவனுக்கு தெரியாது என்பதை மறந்துப் போனாள்.

தன் மேலே படுத்திருந்த அவளை வியப்போடு பார்த்தான்… “என்ன கனி”, என்று கேட்க…..

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவள்.. சற்று திணறியபடி…..

“தண்ணி குடிக்கப் போனேன்….. குழந்தை அழுதானா…… மேல விழுந்துட்டேன்”,  என்றாள் அவன் மேலேயே இருந்துகொண்டு.

அவளுக்கு தன் மேல் படுத்திருக்கும்  உணர்வே இல்லை என்று புரிந்த ஆகாஷ்…….. அது கொடுத்த சுகம் பிடித்திருந்தாலும்…… குழந்தையின் அழுகை சத்தம் முக்கியமானதாய்ப் பட …….

“குழந்தை அழறான் பாரு”, என்றான்.

அப்போதுதான் அவன் மேலே தான் படுத்திருக்கிறோம் என்று புரிந்தவள், இன்னும் பதட்டமாக எழ முற்பட்டு…… அவசரமாக முயன்றதால், உடை தடுக்க அவன் மேலேயே மீண்டும் விழுந்தாள்.

மீண்டும் சுகமான ஒரு மோதல் தான் ஆகாஷிற்கு, ஆனால் என்ன செய்வது?…….  அவளின் அழகு முகம் அவனுக்கு மிக அருகில்……. பெருமூச்சு விட்டபடி, “இரு….”, என்றபடி, அப்படியே அவளை பிடித்துக்கொண்டு ஒருக்களித்து திரும்பினான்.

அவள் படுக்கையில் விழுந்தாள்…..

அதன் பின் வேகமாக எழுந்துக் குழந்தையை தூக்க அதன் வீறிடலைக் குறைத்தது. “அழக்கூடாதுடா கண்ணா!”, என்று சமாதானமாக பேசி அவனைத் தட்டி கொடுத்தாலும்…..

சிந்தனை முழுதும் ஆகாஷே இருந்தான். “வந்து முதல் நாள் பக்கத்தில் படுத்ததுமே இப்படி போய் மேலே விழுந்திருக்கோமே, என்ன நினைத்திருப்பான் நம்மை பற்றி, எதுவும் தவறாக நினைத்திருப்பானோ”, என்ற எண்ணமே நின்ற அழுகையை மீண்டும் வரவைத்தது.  

ஆகாஷ் தண்ணியை எடுத்து வந்து நீட்டினான்.

அவள் அதை குடித்துவிட்டு கொடுக்கும்போதுதான் அவளின் அழுகையை பார்த்தவன்…..

“என்னடா? என்ன?”, என்றான் கனிவாக……..

“அது நான் வேணும்னு மேல விழலை! தெரியாம, குழந்தை அழுதவுடனே தடுக்கி விழுந்துட்டேன்”, என்றாள் அழுகையுடன்.

“அதுக்கு எதுக்கு அழுகை”,

“நீங்க என்னைத் தப்பா நினைச்சிட்டா”, என்றாள்.

அப்போதுதான் ஆகாஷிற்கு விஷயம் புரிந்தது…..

“அவள் ஏதோ தன் மீது விருப்பம் கொண்டு வேறு தேவைகளுக்காக மேலே விழுந்ததாக தான் நினைத்துக்கொள்வேன் என்று அழுகிறாள்”, என்றுப் புரிந்தது.

“ஏய் கனி! என்ன இது? நான் அப்படி எல்லாம் நினைக்கலை! நினைக்கவும் மாட்டேன்!…. என்று இடைவெளி விட்டவன்……… “ஆனா அதுல தப்பில்லை கனி!”, என்றான் தைரியமாக…..

உடம்பெல்லாம் கூசிப் போயிற்று கனிமொழிக்கு…….. “ப்ளீஸ் இந்த மாதிரி பேச்சு வேண்டாமே”, என்றாள் தேம்பிக்கொண்டே

“நானா ஆரம்பிச்சேன்……..”, என்று சொல்ல வந்தவன்…….. அவள் வருந்துவான் என்று தெரிந்து அதை சொல்லாமல் விட்டான்.                   

“எதையும் நினைக்காத………. எப்பவும் எதுக்கும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன்! நான் உன் கணவன்! நீ என் மனைவி! முதல்ல அதை மனசுல, மூளைல எல்லாத்துலையும் ஃபிக்ஸ் பண்ணு, அதை மட்டும் நினை…..”, என்று சொன்னவன்,

“இன்னும் ஃபீவர் இருக்கா”, என்று அவளின் நெற்றிய தொட்டுப் பார்த்தான், சற்று குறைந்திருந்தது.

“ஃபீவர் பரவாயில்லை, ஆனா நீ அழுது அழுது உன் முகத்தை இப்படி வீங்க வெச்சிருக்க…..”,

“இப்படி அழாத கனி! நீ இப்படி அழுதா நான் ஏதாவது தப்புப் பண்றனோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சுடும். என்னைப் புரிஞ்சிக்கோ, ப்ளீஸ்!”, என்றான் மன்றாடலுடன்.

கண்களை அவசரமாக துடைத்தவள், “இல்லை! நான் அழலை!”, என்றவள், சிரிக்க முயன்றாள்.

அது வருவேனா என்றது…..

“வேண்டாம்! வேண்டாம்! வரலைனா விட்டுடு! சிரிச்சு கிறிச்சு என்னை பயப்படுத்திடாத…….”, என்றான் நக்கலாக.

“ஜோக்கா சிரிச்சிட்டேன்!”, என்று எப்பொழுதும் போல அவள் வாயை இழுத்துப் பிடிக்கப் போக…….

“இதுக்கு நீ  சிரிக்காமையே இருந்திருக்கலாம்”, என்றான் சீரியஸாக….

அவள் முறைக்ககவும்……

“நீ சிரிச்சாலும் சிரிக்கலைன்னாலும் அழகி தாண்டி!”, என்றவன்…… எப்போதும் அவளைப் பார்க்கும்போது அவனுக்கு தோன்றும் பாட்டான………

அழகி நீ பேரழகி……..,

அழகான கண்ணழகி………….

என்று அவளைக் காதலோடு பார்த்து மெதுவாக பாடினான்.

இரேண்டே வரிகள் தான். அதை இரண்டு மூன்று முறை திருப்பினான்…….. ஆனால் அவன் குரல் மயக்கத்தைக் கொடுத்தது.

சிணுங்கிய குழந்தை கூட சிணுங்களை நிறுத்தியது……..

அந்த இரவின் ஏகாந்தத்தில் அவன் குரல் அமுதகானமாய் தான் இருந்தது. அவனின் குரலில் லயித்தவள், “நீங்க நல்லாப் பாடுறீங்க!”, என்றாள்.

ஏதோ ஜோக்கை கேட்டவன் போல ஆகாஷ் வாய் விட்டு சிரித்தான்……    

“எனக்கு எப்படியோ? இவனையாவது நான் இந்த சிரிப்பு வாடாமல் வைத்திருக்க வேண்டும்….. எனக்காக நிறைய, நிறையப் பார்த்து பார்த்து செய்கிறான்…… கொஞ்சம் இந்த அழுகையை எங்காவது தூக்கி தூரப் போடவேண்டும்…… இவன் என் கணவன்……”, என்று அந்த நொடியில் நினைத்தாள். 

சற்று முன் இருந்த சஞ்சலமெல்லாம் மறைந்து மனது சற்று தெளிவானது.  

“நான் கொஞ்ச நேரம் வெச்சிருக்கட்டுமா”, என்று அவன் குழந்தையைக் கேட்க…….

“அவன் பசிக்கு தான் அழுதான்”, என்றாள்.

அவள் பாலூட்ட வேண்டும் என்று புரிந்தவன்……  “நீ ஃபீட் பண்ணு!”, என்று அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தவன்……..

“நான் திரும்ப மாட்டேன்! டென்ஷன், அழுகை, எதுவுமில்லாம ஃபீட் பண்ணு”, என்றான்.  

குழந்தைக்கு பால் கொடுத்து முடிக்கும் வரை அவனையேப் பார்த்திருந்தவள், “இவன் என்னுடையவன்! எனக்கானவன்!”, என்று மனதில் பதிய வைக்க ஆரம்பித்தாள்.

இவ்வளவு நாளாகவும் அவன் அன்பை அவள் பார்த்திருந்தாலும்…….. இவள் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்ததால் ஆகாஷை ஒரு நண்பனாக நினைக்க மட்டுமே மூளைக்கும் மனதுக்கும் கட்டளையிட்டிருந்தாள்……

இப்போது அவளின் இந்த திருமணம் முடிந்து இனி அவன் உனக்கு நண்பன் மட்டும் கிடையாது என்று எடுத்துரைக்க அதை மாற்ற ஆரம்பித்தாள்.   

அவள் குழந்தையின் பசியாற்றி முடித்து, “இப்போ வெச்சிருங்க!”, என்று சற்று உரிமையோடு அவனிடம் சொல்ல……. எழுந்து குழந்தையை வாங்கினான்.  

“என்ன பேரு வைக்கப் போறீங்கன்னு சொல்லவேயில்லை இன்னும் நீங்க?”, என்று அவள் சலுகையாக குறைபட…..

“வீர ராகவன் என்கிற ராகவ்…… வீர ராகவன் வெக்கறோம்! ஆனா அவன் சர்டிபிகேட் நேம், நாம கூப்பிடறது எல்லாமே ராகவ்”,

இவள் முன்பே அறிவரசுவின் குடும்பத்தில் முதல் குழந்தைக்கு வீர ராகவன் என்று பெயர் வைப்பர் என்று கூறியிருந்தாள்…..

இவன் அறிவரசுவுக்கும் மரியாதை செய்வது போல அந்தப் பேரை வைத்து…… அதனோடு ஒட்டிய வேறு பெயரும் வைத்துவிட்டான் என்பதில் கனிக்கு மிகவும் நிம்மதி.

“நீங்க இன்னும் அந்தப் பேரை ஞாபகம் வெச்சிருந்தீங்களா”, என்றாள் ஆச்சர்யமாக.

“நான் உன் விஷயம் எதுவுமே மறக்கறது இல்லை, உன்னை பார்த்து மூணு மாசம் தான் ஆகுது! ஆனா எனக்கு ரொம்ப காலம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங். உன்னை பார்த்த இந்த மூணு  மாசமா நான் உன்னைப் பத்தியே  நினைச்சிட்டு இருக்கேன்!”,

“ஒன்ஸ் பார் ஆல், இந்த விஷயத்தையும் சொல்லிடறேன்! நான் ராஜியைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்! ஏன்? அவ கல்யாணத்துக்கு பிறகு கூட அவளை மிஸ் பண்ணிட்டேன்னு ஒரு நினைப்பு இருந்துச்சு”,

“ஆனா ராஜி செந்திலை கல்யாணம் பண்ணி வந்து நின்னப்போ…… எனக்கு ஏமாற்றமா இருந்தாலும்……. செந்திலை அடிக்கனும்னோ கொல்லனும்னோ எந்த ஒரு வெறியும் வரலை…..”,

“அவங்க வாழ்க்கையைப் பார்த்து, அவங்க காதலைப் பார்த்து, கொஞ்ச நாளைக்கு பிறகு ரசிக்க தோணிச்சு!”,

“ஆனா உன் விஷயம் அப்படி இல்லை கனி! உன்னைப் பார்த்த நாள்ல இருந்து ஒரு தவிப்பு, உன் நிலை தெரிஞ்ச உடனே உன்னை இனிமே விடக்கூடாதுன்ற என் முடிவு…. இதெல்லாம் என்னை மீறி வந்தது”,

“உனக்காக அது கத்திக் குத்து வாங்கவும் சொன்னது, உன்னை தொந்தரவு பண்றவனை அந்த கத்தியாலயே குத்துன்னும் சொன்னது. நான் இப்படி கிடையாது……. என்னோட இயல்பும் இது கிடையாது……… பொதுவா யார் பிரச்சனைக்கும் போகமாட்டேன்… பிரச்சனை வரும்னு தெரிஞ்சா விலகிடுவேன்”.

“உன்னோட விஷயத்துல எல்லாமே எதிர்ப்பதம் தான்! உன்னை இந்த அளவுக்கு ஆளாக்கின அந்த குமரேசனை கொல்லனும் போலத் தோணுது………. அந்த அளவுக்கு ஒரு வெறி வருது….”,

“விடு! பழசை எதுவும் நினைக்க வேண்டாம்! கண்டிப்பா அறிவரசுக்கு ஒரு நியாயம் கிடைக்கும்! ஆனா அதுக்காக அவரையே நினைச்சிக்கிட்டு நீ எதையும் செய்யறதை நான் விரும்பலை…..”,

“இனிமே நீ என் மனைவி, ராகவ் என் குழந்தை! அவன் அப்படி வளர்றதை தான் நான் விரும்பறேன். எப்படியும் பின்னால அவன் பெரியவனாகும் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவனுக்கு விஷயம் தெரியாமப் போகாது……”,

“ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் அப்போவும் என்னை அப்பான்னு சொல்லுவான், என்னை மட்டும் தான் சொல்வான்”.

“அதே மாதிரி அறிவரசோட சொத்துல வர்ற பணத்துல அஞ்சு பைசாவைக் கூட நீ செலவு பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை…..”,

அவன் பேசும்போதே இடை மறித்தாள்….. “எனக்கு அது தேவையில்லை, ஆனா அது ராகவோட சொத்து! அதுல அவனுக்கு உரிமையில்லைன்னு சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லை….. உங்க கிட்ட அதைவிட பணம் இருக்கலாம்……. ஆனா……”,  என்று அவள் சொல்லும்போதே அவன் இடைமறித்தான்.

“உங்க கிட்ட இல்லை நம்ம கிட்ட”, என்று…..

“சரி! நம்ம கிட்ட!”, என்று உடனே ஒத்துக்கொண்டவள் ……. “ஆனா அவங்க நல்லா வாழ்ந்த குடும்பம்! அவங்களோட அடையாளம் ராகவ்! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிடேன்றதால அவங்க குடும்பம் அடையாளம் இல்லாமப் போகக் கூடாது…..! நம்ம பணம் நம்ம பையனுக்கும் உண்டு தான்…… !”,

“அதே சமயம்……. அந்த சொத்து, அது கண்டிப்பா அவனை சேரனும்…… அதை சொத்துன்றதை விட அது உரிமை! அது அவனோட அடையாளம்!”, என்றாள் மறுபடியும்………

“அவன் பெரியவனாகி அதை என்ன பண்றதுன்னு அவன் முடிவெடுக்கட்டும். அது வரை அதுல வர்ற வருமானத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்து…..   அதை கொண்டு படிப்பிலையோ, இல்லை ஏதாவது சிகிச்சைக்கு உதவி தேவைப்படறவங்களுக்கோ இல்லை வேற எந்த விதமான நல்ல காரியங்களுக்கும், அறிவரசுவோட பேர் ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு உதவி செய்!”, என்றான்….

“நீ அவனை பத்தி பேசக்கூடாது! அவன் பேரையே எடுக்க கூடாது! அப்படின்னு நான் சொல்லலை! ஆனா இனிமே நீ என் மனைவி மட்டும் தான்………..”,

“அந்த உறவை வேற எதோடவும் இணைக்கிறதை நான் எப்பவும் விரும்ப மாட்டேன்….. உன் பேர்ல இருக்கற சொத்தை…… இப்போ உடனே வேண்டாம், ஒரு ஆறு மாசம் கழிச்சு ராகவ் பேர்ல மாத்திடு!”, என்றான் உறுதியான குரலில்…….

பதில் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்…..

“உனக்கு இதுல ஏதாவது வருத்தமா”,

அவனை நேர் பார்வை பார்த்தவள்…… “ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லை, நிச்சயமா இல்லை, உறுதியா இல்லை. என்னை விட உங்களுக்கு அதிகமா விஷயங்கள் தெரியும், அதை என்ன பண்ணலாம், என்ன வழில பயன்படுத்தலாம், நீங்களே சொல்லுங்க…….!”, என்றாள் தெளிவாக எந்த வித மன சஞ்சலமும் இல்லாமல்.

“உங்க கூட கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னது உண்மைதான். நடந்த பிறகு கூட இது சரியா தப்பானு சஞ்சலம் தான்….. சொன்னா திட்டுவீங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட எதுக்குன்னே தெரியாம அவ்வளவு அழுகை வந்துச்சி…. ஆனா இப்போ நீங்க சொல்ற பேச்சை கேட்கறதுன்னு முடிவெடுத்து இருக்கேன்….”,

“அதனால மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன், நீங்க தான் எனக்கு எல்லாம்னு”, என்றாள் உண்மையாக……. உடனேயே, “அந்த சொத்து விஷயம் எல்லாம் நீங்களே என்ன பண்ணணுமோ பண்ணிடுங்க”, என்றாள்.       

அவளுடைய பதில் அவனுக்கு உற்சாகத்தை தர…….  

“பண்ணலாம்! பண்ணலாம்………! அதுக்கு முன்னாடி நான் உன் கணவன்ங்கறதை உன் மனசுல இன்னும் ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் பண்ணலாம்!”, என்றான்.

மெதுவாக புன்னகைத்தவள், “எப்படி ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் பண்ணுவீங்கலாம்”,

“நிறைய வழி இருக்கு! இப்போதைக்கு இந்த ஃபெவிகால் போதும்!”, என்று எட்டி அவளின் நெற்றியில் மென்மையாக தன் முத்திரையை பதித்தான்.    

புன்னகை விரிவானது கனிமொழிக்கு………

“இது ஸ்ட்ராங்கா ஒட்டுமா?”,

“இன்னொரு தரம் செக் பண்ணட்டா”, என்று ஆகாஷும் புன்னகையோடு கேட்க….

“வேண்டாம்! வேண்டாம்!”, என்றாள் சிரிப்புடனே……

மனதை அழுத்திக்கொண்டு இருந்த பாரங்கள் எல்லாம் மாயம் போல மறைந்தன ஆகாஷுடன் பேசும்போது……

“நான் ஒண்ணு கேட்கறேன் உண்மையா சொல்லணும்”, என்று பீடிகையோடு ஆரம்பித்தவன்,

“நான் இப்போ கிஸ் பண்ணினேனே!  ஒரு சிலிர்ப்பு, ஒரு படபடப்பு, இன்னும் வேணும் மாதிரி! இப்படி எல்லாம் தோணலையா?”, என்றான்.

“ஒரு மண்ணும் தோணலை!”, என்று சொல்லி வாய் விட்டு சிரித்த கனி….. “நெத்தில கிஸ் பண்ணிட்டு, என்ன கேள்வி இது”, என்றாள்.

முகம் மலர்ந்து சிரித்ததை ஆசையுடன் பார்த்தான்….

“வேற எங்க கிஸ் பண்ணினா ஆகும்…..”, என்று வேண்டுமென்றே கேட்க….

கனி பதில் சொல்லாமல் சிரிப்புடனே பார்க்க…….

“உனக்கு தெரியுமா?”, என்றான் சோகம் போல…….

“என்ன தெரியுமா?”, என்றாள் சிரிப்பு மாறாமலேயே……

“எனக்கு முப்பது வயசாச்சு……”,

“அதுக்கு?”,

“இன்னும் எந்த ஒரு பொண்ணையும் ஒரு லிப் லாக் கூட பண்ணுனதில்லை!”, என்றான் பெருமூச்சு விடுவது போல ஆக்ஷன் செய்தபடி……

“ஏன்? யாராவது உங்ககிட்ட பண்ண வேண்டாம்னு சொன்னாங்களா!  இல்லை பொண்ணு கிடைக்கலையா!”,

“என்னை பார்த்தா பொண்ணு கிடைக்காத மாதிரியா இருக்கு!”, என்றான்.

இப்போதும் சிரித்தாள்……..

“என்னை நல்லாப் பாரு! பார்த்துட்டு சொல்லு!”,

இப்போது இன்னும் பொங்கி சிரித்தாள்….

“இப்படி சிரிச்சா எப்படி? பதில் சொல்லு?”, என்றான் சின்ன பையன் போல………   

“உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன் தான்! அதுக்காக உங்களை பார்த்துக் கூடவா இருக்க மாட்டேன்!”, என்றாள்.   

“அப்போ பார்த்தியா! எப்போ?”,

“நீங்க வந்த முதல் நாள்………. அதுக்காக சைட் அடிச்சேன்னு நினைச்சிக்காதீங்க….. நீங்க என்னை முறைச்சு முறைச்சு பார்த்தீங்களா! எவன்டா அவன் நம்மை பார்க்கறவன்னு பார்த்தேன்”,

“பார்த்தவுடனே என்ன நினைச்ச?”, என்றான் ஆவலாக…….

“தெலுகு ஆக்டர் மகேஷ் பாபு மாதிரி இருக்கீங்கன்னு நினைச்சேன்”, என்றாள்.

“அவ்வளவு ஹாண்ட்சமாவா இருக்கேன்!”,

“ம்கூம்…….”, என்று தலையாடியவள்……… அவன் முகம் சுருங்கவும்…… “அதை விட ஹாண்ட்சம்”, என்றாள்.

“அப்புறம் வேற என்ன நினைச்ச!”, என்றான் ஆர்வமாக…….  

“ஒண்ணும் நினைக்கலை!”,

“ஒண்ணுமே நினைக்கலையா?”,

“நிஜம்மா ஒண்ணும் நினைக்கலை!”,

“சரி! அதை விடு!”, என்று மறுபடியும் மேட்டருக்கே வந்தான்……. “நான் இன்னும் லிப் லாக் கூட பண்ணுனதில்லை! ஒரு தடவை பண்ணிப் பார்க்கட்டுமா!”, என்றான் ஆவலாக…..

“உங்களுக்கு எதையும் மறுக்கனும்ன்றது என் எண்ணமில்லை! கொஞ்சம் டைம் குடுங்க! நான் மாறுவேன், கண்டிப்பா மாறுவேன்! நீங்க என் மேல வெச்சிருக்குற காதலை விட உங்க மேல நான் அதிகமா காட்டுற மாதிரி மாறுவேன்!”, என்றாள்  நல்ல விதமாகவே…..

அவள் இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறி, அவள் இவ்வளவு பேசியதே பெரிது, என்றுணர்ந்தவன்……. “ஓகே! அஸ் யூ விஷ்!”, என்றான் ஈசியாக…..

“கோபம் இல்லையே!”, என்றாள் தயக்கமாக….

“இல்லை! இல்லவே இல்லை!”, என்றான்.

குழந்தை இப்போது ஆகாஷின் மடியிலேயே தூங்கியிருந்தான்.     

குழந்தையை கொடுங்கள் என்று கேட்காமல்……. அவளே சகஜமாக ஆகாஷை நெருங்கி அவன் மடியில் இருந்த குழந்தையைத் தூக்கினாள்,

“இது போதும்! தள்ளித் தள்ளி நிற்காமல் இப்போதைக்கு என்னுடன் இப்படி சகஜமாக பழகினாலே போதும்!”, என்றிருந்தது ஆகாஷிற்கு…..

இருவர் மனதுமே இப்போது பெரும் நிம்மதியில் இருக்க……… உறக்கம் அவர்களை விரைவில் தழுவியது.

இருவருமே நன்கு தூங்கி விட்டனர். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் குழந்தையும் நன்கு தூங்கியது.

காலை எட்டரை மணிக்கு நந்தன் பள்ளி செல்லக் கிளம்பும் வரையிலும் அவர்கள் எழுந்துக் கொள்ளவில்லை.

அசோக்கும் செந்திலும் கூட எழுந்து குளித்து அமர்ந்திருந்தனர்.

நந்தன் ஸ்கூல் போகும் போது எப்பொழுதும் ஆகாஷிடம் சொல்லி தான் செல்வான். அதற்காக ரூம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான். 

ஆகாஷ் இதுவரை ரூம் கதவை தாழ் போட்டு உறங்கியிராததால்……  இப்போது கனி இருக்கிறாள் தாழ் போட வேண்டும் என்று தோன்றியிராததால்…….. கதவு வெறுமனே  மூடி  மட்டும் இருக்க, அவன் பாட்டிற்கு உள்ளே சென்றான்.

அவன் போகும்போது தான் அனிதா பார்க்க…… “போகாத நந்தன்!”, என்று அவள் சொல்லும்போதே உள்ளே நுழைந்திருந்தான்.

அவன் பார்த்த பொழுது இன்னும் ஆகாஷும் கனியும் குழந்தையும் உறங்கிக்கொண்டு தான் இருந்தனர்.

“இன்னுமா தூங்கறீங்க! எழுந்திருங்க மாமா! நந்தன் ரெடி!”, என்று அவன் குரல் கொடுக்க…….

வெளியே இருந்து அனிதாவும் குரல் கொடுத்து கொண்டிருந்தாள், “நந்து! வா இங்க!”, என்று……

இந்த சத்தத்தில் ஆகாஷும் கனிமொழியும் விழித்தனர். “ஷ்! நந்து, பாப்பா தூங்கறான்! மெதுவா பேசு!”, என்று ஆகாஷ் சொல்ல…

குரலை சட்டென்று தழைத்து ரகசியம் போல, “நான் கிளம்பனும் மாமா!”, என்றான் நந்தன்.  

“நான் வர்றேன்!”, என்று ஆகாஷ் சொல்ல, நந்தன் வெளியே வந்தான்.

வெளியே இருந்த அனிதா அவனை அதட்டினாள்……. “ரூம் கதவை தட்டாம, உள்ளப் போவியா…… என்ன பழக்கம் இது?”, என்று அவள் மிரட்ட……

அசோக்கும் செந்திலும் அதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

நந்தன் விழித்துக்கொண்டிருந்தான்.

ஆகாஷ் பாத்ரூமில் இருந்ததால் அவனுக்கு கேட்கவில்லை. கனிமொழிக்கு நன்கு கேட்டது.

வெளியே சென்றவள், “என்ன பண்றீங்க அண்ணி? எதுக்கு அவனை திட்டுறீங்க?”, என்றாள்.

“பின்ன ரூம் கதவை தட்டாம வர்றான்”,

“அதனால என்ன?”,

“அதுதான் மேனர்ஸ்……..”,

“என்ன மேனர்ஸ்……….?”,

“புரியாம பேசாத கனிமொழி”, என்றாள், “நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள்”, என்று சொல்ல முடியாமல்……

இதேதடா இந்த வாக்குவாதம் என்று அசோக்கும் செந்திலும் சற்று பதட்டத்தோடு பார்த்தனர்.

“என்ன புரியாம பேசறேன்!”, என்றவள்……. “இவ்வளவு நாளா உங்க மாமா ரூம்க்கு கதவை தட்டிட்டாப் போவ!”, என்றாள் நந்துவைப் பார்த்து….

“இல்லையே!”, என்று அவன் அழகாக சொல்ல….

“எங்க பசங்க எல்லாம் எங்க ரூம் கதவை தட்டிட்டு தான் வருவாங்களா என்ன? தட்ட மாட்டாங்க……… அவனும் எங்க பையன் தான் அண்ணி……… நான் வந்ததால புதுசா எதுவும் மாற வேண்டியது இல்லை! எல்லாம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கட்டும்! அவங்க மாமா ரூம்க்கு அவன் வர்றான், கதவை தட்டு அது இதுன்னு புதுசா ஏன் சொல்றீங்க!”, என்றாள்……..

அனிதாவிற்கு இதைக் கேட்டதும் அவ்வளவு நிம்மதி. வருகிறவள் எப்படியோ? நந்தன் ஏற்கனவே தந்தையைத் தேடுகிறான், இதில் ஆகாஷும் தள்ளிப் போனால் மனதளவில் அவன் ஏங்குவானே என்று அனிதா நினைத்திருக்க…….

அந்த நினைப்பிற்க்கெல்லாம் அவசியமேயில்லை என்று கனிமொழி உணர்த்தினாள்….

வெளியே வந்திருந்த ஆகாஷும் இதை கேட்டிருந்தான்……..  “கலக்குற அழகி நீ”, என்று மனதிற்குள் நினைத்தான்.

அனிதாவிற்கு மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது……

“நேத்து உன்னைப் பார்த்தவுடனே நீ பேசவே மாட்ட! அமைதின்னு நினைச்சேன்!”, என்றாள் அனிதா கனிமொழியைப் பார்த்து……..

“ஹா….. ஹா…. ஹா……”, என்று சத்தமாக சிரித்த ஆகாஷ்………

“எப்படி அனி நீ இவ்வளவு தப்பா நினைக்கலாம்? நம்ம வீட்ல இனிமே நாய்கள் ஜாக்கிரதை போர்டே தேவையில்லை! கனிமொழி ஜாக்கிரதை போர்ட் தான் போடனும்! அப்படியே எல்லாரையும் கடிச்சு குதறிடுவா! இவ அமைதியா?”, என்று அவன் சொல்லி மறுபடியும் பெரிதாய் சிரிக்க……..

“என்ன? கனிமொழி ஜாக்கிரதையா!”, என்று இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள்…..

அனிதாவிற்கும் புன்னகை வர……… நந்தனும் சிரிக்க…….. அசோக்கும் செந்திலும் கூட புன்னகைக்க……

“உங்களை…….”, என்று சொன்னவள்…….. ஆகாஷை அடிக்க விரைய….. அவன் ஓட…….

கனி அவனை துரத்தியவள்……. அவன் செந்திலும் அசோக்கும் இருக்கும் புறம் விரையவும், “அண்ணா !அவரைப் பிடிங்க!”, என்று கத்தினாள்……

“டேய்! எவனும் என் மேல கை வைக்கக் கூடாது!”, என்று ஆகாஷ் நழுவ……

நந்தன் கைதட்டி சிரித்தான்.

அனிதாவிற்கு கண்களில் நீரே வந்துவிட்டது, யாரும் பார்க்காமல் துடைத்தாள்.

அக்ஷராவை கையில் வைத்துக்கொண்டிருந்த செந்தில், ஒரு கையால் ஆகாஷை பிடிக்கவும்…….. வேண்டுமென்றே ஓடாமல் நின்ற ஆகாஷ், “விடுடா!”, என்றான்.

சிரித்த செந்தில்……. “நீ போயேண்டா……”, என்றான்.

பதிலுக்கு ஆகாஷ், “நீ விடுடா….”, என்றான்.

அதற்குள் அவனை நெருங்கிய கனி, ஆகாஷின்  தோளில் ஒரு தட்டு தட்டியவள், “என்ன? கனிமொழி ஜாக்கிரதையா!”,  என்று அவனை முறைத்துப் பார்த்தாள்…..

“நிஜம்மா இது நல்லா இருக்கு!”, என்று மீண்டும் சொல்லி ஆகாஷும் செந்திலும் சிரிக்க…….

அசோக்கின் கையைப் பிடித்துக்கொண்டு அவனின் பின் ஒன்டியவள், “டேய் அண்ணா! பாருடா ரெண்டு பேரையும்! என்னை கிண்டல் பண்றாங்க!”, என்றாள் சலுகையாக…….. அசோக்கோடு அவளுக்கு சண்டை என்பதையே மறந்து போனாள்.

“உன்னையா கிண்டல் பண்றாங்க! இரு, அவங்க ரெண்டு பேரையும் நான் என்ன பண்றேன்னு பாரு!”, என்று சொல்லியபடி ஆகாஷின் அருகில் வந்த அசோக்……..

அப்படியே அவனை அணைத்துக்கொண்டு, “தேங்க்ஸ் மச்சான்! இந்த வார்த்தை ரொம்ப சின்னது தான் இருந்தாலும்……..”, அவனுக்கு சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை.

“எங்க கனி இனிமே சந்தோஷமா இருப்பா!”, என்றான் அசோக் உணர்ச்சி பெருக்கில்……

“அவ மட்டுமில்லை நாங்களும் தான்!”, என்று பதிலுக்கு அனிதாவும் சொன்னாள். 

தன்னுடைய செய்கைகள் ஆகாஷை மிகவும் வருத்திக்கொண்டிருந்தன…… அதிலிருந்து அவன் வெளியே வரவேயில்லை என்று அனிதாவிற்கு நன்கு தெரியும்……. ஆகாஷ் இப்படி மனம்விட்டு சிரித்தோ, கிண்டல் பேசியோ வருடங்கள் பல ஆகிறது…..

தன்னுடைய நிலைமையை கொண்டு கனிமொழி மாதிரி ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறானோ என்று அவளின் மனதில் ஒரு சஞ்சலம் இருந்தது.

இப்போது ஆகாஷின் செய்கைகள் அவனுக்கு கனியை எவ்வளவு பிடிக்கும் என்று காட்டிக்கொண்டு இருந்தது.                                                                                                                                          மனம் விட்டு காதலோடு தன் மனைவியைப் பார்த்து சிரிக்கும் தன் தம்பியை ஆசைதீர கண்களுக்குள் நிறைத்துக்கொண்டாள் அனிதா…….. 

Advertisement