Advertisement

அத்தியாயம் பதினேழு:

கனியின் கண்ணீர் துளிகள்  கைகளில் விழுந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆகாஷ், அவள் எதையும் கவனிக்கவில்லை குனிந்த தலையும் நிமிரவில்லை.

அவளின் கைகளைப் பிடித்து அதை ஆதரவாக அழுத்திக்கொடுத்தான். அவளின் கைகளை பிடிக்கவும் தான் அவளின் உடம்பு சூடு தெரிந்தது.

அவளின் காய்ச்சல் இன்னும் விடவில்லை என்று புரிந்தான். அவளின் காய்ச்சலை மறந்த தன்னையே நொந்துக் கொண்டான். காலையில் ஒரு மாத்திரை கொடுத்திருக்க வேண்டும் தவறி விட்டோம் என்று புரிந்தது.

“இவள் காய்ச்சல் வந்தவள் போலவா பேசுகிறாள்! என்ன வாய்? என்ன வாய்?”, என்று மறுபடியும் நொந்துக் கொண்டான்.     

பிறகு ஒரு இரண்டு மூன்று முக்கியமான சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் ப்ரோகிதர் செய்யச் சொல்ல…… அதற்குள் கனியின் அருகில் வந்த ராஜி அவளிடம், “குழந்தை ரொம்ப அழறானாம்! அம்மா சொன்னாங்க!”, என்று சொல்ல வந்தவள்…. அவளின் முகத்தைப் பார்த்து எதுவும் சொல்லாமல் விடுத்து அதை ஆகாஷிடம் சொன்னாள்.

சற்றும் தாமதிக்கவில்லை ஆகாஷ், உடனே கிளம்பிவிட்டான். “நீங்க இங்க எல்லோரையும் கவனிங்க”, என்று கனிமொழியின் பெற்றோரிடம் கூறி….. யாரும் மேலே பேச இடமே கொடாமல் கனியை அழைத்துக்கொண்டு அண்ணாமலையின் வீடு வந்த போது குழந்தையின் அழுகை சத்தம் வாயிலுக்கே கேட்டது.

கனி காரின் கதவை திறந்து ஏறக்குறைய ஓடினாள்.

வீறிட்டுக் கொண்டிருந்த குழந்தையை கையில் தூக்கிய பிறகு தன் அம்மாவின் ஸ்பரிசம் உணர்ந்து வீறிடல் குறைந்தது.

அவசரமாக அவள் தங்கியிருந்த ரூமிற்கு குழந்தையைக் கொண்டு போய் பால் கொடுக்க ஆரம்பித்தப் பிறகு தான் குழந்தையின் அழுகை நின்றது.

“சாரி கண்ணா! நேத்து இருந்து உன்னை ரொம்ப பாடாய்ப் படுத்தறேன் அம்மா….. இனிமே உன்னை விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன்!”, என்று குழந்தையிடம் சமாதனம் பேச ஆரம்பித்தாள்.  

குழந்தைக்கு பால் கொடுத்து அதன் பிறகும் அவனை கீழே மெத்தையின் மேல் கூட வைக்க விருப்பமில்லாமல் சிறிது நேரம் வைத்திருந்தாள். பின்பு மெல்ல அவனை படுக்கையில் கிடத்தி எதிரே இருந்த கண்ணாடியில் பூவும் பொட்டுமாய் நின்ற தன் தோற்றத்தை ஆராய்ந்தாள்.

“கிட்டாதாயின் வெட்டென மற”, என்று அவள் நினைத்திருந்த விஷயம் இது.

எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இனி தன் வாழ்க்கையில் இல்லை என்று நினைத்த விஷயங்களுடன் தன் தோற்றம் இருந்ததை ஆசை தீரப் பார்த்தாள்.

பிறகே ரூமை விட்டு வெளியே வந்தாள். 

 எல்லோரும் அவள் வருவதற்காக உணவு உண்ணுவதற்காக காத்திருந்தனர். காலை உணவே அப்போது தான் எல்லோரும் உண்டனர்.

உணவு உண்ண ஆரம்பித்த பிறகு தான் அவளுக்கு தன் காய்ச்சலின் வேகம் புரிந்தது. நேற்று இருந்து மாத்திரை போட்டதும் சற்று மட்டுப்பட்டது இப்போது அதிகரித்து இருந்தது.            

உணவும் இறங்கவில்லை……. ஒரு இட்லி கஷ்டப்பட்டு இறங்கியது. 

“ராஜி, ஒரு டம்ளர் பால் கொண்டு வா!”, என்று ஆகாஷ் சொல்லி…… அதை அவளை குடிக்கச் செய்து ஒரு மாத்திரை மட்டும் கொடுத்தான்.

அவனுக்கு அந்த ஊரில் இருக்கவே பிடிக்கவில்லை…….. கனி எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டது அவனை மிகவும் பாதித்து இருந்தது. தான் இருந்தும் எப்படி அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வரலாம் என்று நினைத்து அவன் மேலேயே அவனுக்கு கோபமாக வந்தது. 

மறுபடியும் போய் கனியின் பெற்றோரிடம் சொல்லக்கொண்டு  கிளம்பவெல்லாம் அவனுக்கு விருப்பம் இல்லை. கனி பேசியது அதிகம் தான் என்றாலும் அவளுடைய நியாத்தை அவள் சொல்கிறாள், அதை தவறென்று மறுக்க முடியாதே……..  

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவெல்லாம் இல்லை. முன்பே அங்கிருந்தவர்களிடம் சொல்லியிருப்பான் போல, “நாங்க கிளம்பறோம்”, என்று……

அதனால் கனியை பார்த்து, “கிளம்பலாமா”, என்றான்..

“எங்கே?”, என்பது போல அவள் பார்க்க……….

“நம்ம வீட்டுக்கு”, என்றான்.

“ம்!”, என்று தலையாட்ட…….

அவர்கள் கிளம்பினர். யார் வண்டி ஓட்டுவது என்பது பிரச்சனை ஆகிற்று. ஆகாஷ் ஓட்டுனர் இருக்கையில் அமரப் போக…….. “வேண்டாம் தம்பி! நீங்க நைட் முழுசும் தூங்கவேயில்லை!”, என்று தேவிகா மறுத்தார்.

செந்தில், “நான் வரவா!”, என்று கூடக் கிளம்ப போக……….

“நீங்களும் கல்யாண வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகிடுச்சே”, என்றாள் ராஜி.

அதற்குள் அசோக் வேகமாக வந்தான்…… அவர்கள் கிளம்புவது தெரிந்து அவசரமாக வந்திருக்கிறான் என்று புரிந்தது.

“எப்படித் தெரியும்?”, என்பது போல ஆகாஷ் பார்க்க………

“நண்பேன்டா!”, என்பது போல் செந்தில் பார்க்க……..

இது அவன் வேலை என்று ஆகாஷிற்கு புரிந்தது.

“கல்யாணம் முடிஞ்சு அப்படியே போக வேண்டாமே! வீட்டுக்கு வந்துட்டு போகலாமே!”, என்று அசோக் அழைக்க……

“இல்லை அசோக்! கிளம்பறோம்! அவளுக்கு காய்ச்சல்……. ரொம்ப அலைச்சல் வேண்டாம்……. சென்னை போயிடறோம்!”, என்றான் ஆகாஷ். கனி எதுவுமே பேசவில்லை.

தன் தங்கை இனி தனக்கு அன்னியம் என்று அசோகிற்கு நன்கு புரிந்தது. இத்தனை நாட்களாக கூட அப்படி ஒரு உணர்வு தோன்றவில்லை. அவள் சண்டைப் போட்ட போது கூட சமாதானம் பண்ணிவிடலாம் என்று தோன்றியது. இப்போது, “ம்கூம்”, இனி அவளின் முடிவுகள் எல்லாம் ஆகாஷுடையதாகவே இருக்கும் என்று புரிந்தது. 

அசோக்கும் அதற்க்கு மேல் வற்புறுத்தவில்லை….. “நான் கூட வந்து விட்டிட்டு வரட்டா”, என்று மட்டும் கேட்டான்.

“வாங்களேன்!”, என்ற ஆகாஷ்…….. “ஆனா! இங்க ப்ரியா கல்யாண வேலை”, என்றிழுக்க…….

“கல்யாணம் முடிஞ்சிடுச்சு! இனி என் தேவை அதிகம் இல்லை! அப்பா பார்த்துக்குவாங்க!”, என்று கூடக் கிளம்புவதில் உறுதியாக இருந்தான்.

கூடவே அசோக் செந்திலையும் ஒரு பார்வை பார்க்க…….. அது சொல்லாமல் சொன்னது, “நீயும் கூட வருகிறாய்”, என்று.

செந்தில் ராஜியைப் பரிதாபமாக பார்க்க, “போயிட்டு வாங்க!”, என்றாள்.

ஒருவழியாக செந்தில் அசோக் ஆகாஷ் மூவரும் மாற்றி மாற்றி வண்டி ஓட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து கிளம்பினர்.

கனி கிளம்பும்போது ஞாபகம் வந்தவராக தேவிகா, “ராஜி! குங்குமம் எடுத்துட்டு வாம்மா”, என்றார்.

அவள் வேகமாக சென்று எடுத்து வந்து நீட்ட……. ஆகாஷ் அவளையே தான் பார்த்திருந்தான் அவளின் கை நடுங்குகிறதா என்று…..

இப்போது கை நடுக்கமெல்லாம் இல்லை கனியிடம், குங்குமத்தை  வைத்துக்கொண்டு கிளம்பினாள்.

மனம் இப்போதுதான் நிறைவாக இருந்தது ஆகாஷிற்கு…..

வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் ஏற முயன்ற ஆகாஷை…….  “நீங்க பின்னால போய் கனியோட உட்காருங்க மச்சான்!”, என்றபடி அசோக் ஏறப் போக………

“நீ அந்தப் பக்கம் போய் உட்காருடா!”,  என்று அசோக்கை பார்த்து சொல்லியபடி செந்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.  

வேறுவழியில்லாமல் அசோக் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தான்.

ராஜி, “அவ்வளவு சொல்லியும் நீ வண்டி ஒட்டுகிறாயா”, என்பது போலப் பார்க்க……….

ராஜியை பதிலுக்கு பார்த்த செந்தில், “பயம் வேண்டாம்! தூக்கமெல்லாம் வராது! பத்திரமா போயிட்டு வர்றேன்!”, என்று உறுதிக்கொடுத்து கிளம்பினான்.

கார் சென்னையை நோக்கி தன் பயணத்தை தொடங்க……. கனியும் ஆகாஷுடன் தன் பயணத்தை தொடங்கினாள்.

ஏறி அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மாத்திரையின் வீரியத்தால் கனி உறங்க ஆரம்பிக்க…….. அவளின் கைகளில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை வாங்கி அணைவாக பிடித்துக்கொண்டான் ஆகாஷ்.

குழந்தை இருந்ததால் செந்தில் வண்டியை மிதமான வேகத்தில் ஒரே சீராக ஓட்டிக்கொண்டு போனான்.

ஆகாஷோ, அசோக்கோ, செந்திலோ ஒரு நிமிடம் கூட கண்ணயரவில்லை……. கனியும் குழந்தையும் தான் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர்.

செந்திலே தான் காரை ஓட்டினான். அவர்கள் இருவரும் கேட்டதற்கு கூட…… “நீங்க ரெண்டு பேரும் தூங்கவே இல்லை! வேண்டவே வேண்டாம்!”, என்று விட்டான். 

“எங்கயாவது நிறுத்தி சாப்பிடுங்க”, என்று ஆகாஷ் சொன்னால்……..

“நீயும் சாப்பிடு!”, என்றனர்.

அவனுக்கு கனியை விட்டு சாப்பிட இஷ்டமில்லை……. அவளா தூங்கி வழிந்துக் கொண்டிருந்தாள்.  

எழுப்பினாலும் அசையவில்லை. ஒரு வழியாக எழுப்பி, “சாப்பிடு கனி!”, என்றால்… “இல்லை! வேண்டாம்! என்னால முடியாது!”, என்று மறுத்தாள்….

முடிவிலோ கனி சாப்பிடவில்லை என்று ஆகாஷ் சாப்பிடாமல் இருக்க…….. அவன் சாப்பிடவில்லை என்று இவர்கள் இருவரும் சாப்பிடவில்லை.

வழியில் உணவுக்கு கூட நிறுத்தவில்லை…….. வெறும் டீயை மட்டுமே குடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இவர்கள் இருவரும் உண்ணவில்லை என்றதுமே ஆகாஷ் அனிதாவிற்கு போன் செய்து விருந்து தயார் செய்யச் சொன்னான்.

இவர்களின் கார் வீட்டிற்குள் நுழைந்ததுமே அனிதா அக்ஷியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டின் பிரமாண்டத்தை பார்த்து கனிக்கு மிகுந்த தயக்கமாக இருந்தது. அவள் ஒன்றும் இல்லாதவள் இல்லை என்றாலும் தயக்கம் இருந்தது.

“இறங்கு கனி!”, என்று அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு இறங்க சொன்னான் ஆகாஷ்.

அவள் இறங்கியதுமே, “வா! வா! வா கனிமொழி!”, என்று ஆர்வமாக வரவேற்றாள் அனிதா……

கனியின் தயக்கம் கொஞ்சம் விலகியது.

பிறகு செந்திலையும் அசோக்கையும் வரவேற்க, அனிதாவின் கையில் இருந்த அக்ஷரா செந்திலை நோக்கி தாவினாள்.

அதை சற்று ஆச்சர்யத்தோடு பார்த்தாள் கனி.

அக்ஷரா செந்திலை நோக்கி தாவவும், ஆகாஷ் கையில் இருந்த  குழந்தையை அனிதா வாங்கினாள்.

சமையல் செய்யும் அம்மா ஆரத்தி கரைத்து வந்துக் கொடுக்க……. குழந்தையை கனியின் கையில் கொடுத்த அனிதா…….. ஆகாஷ், கனி, குழந்தை என்று மூவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள்.

“வலது காலை எடுத்து வெச்சு வா கனிமொழி”, என்று சொல்லிக்கொண்டே குழந்தையை மறுபடியும் தன் கைகளில் வாங்கிக்கொண்டு உள்ளே போனாள் அனிதா.

“எங்க அனி நந்தன்?”, என்று ஆகாஷ் கேட்க…….

“உன்கூட கோவமா இருக்கானாம்! உன்கிட்ட சொல்லச் சொன்னான்!”,

“எதுக்கு கோபம்?”,

“அதை நீ அவன்கிட்ட தான் கேட்கணும்!”, என்று அனிதா சொல்ல……

ஆகாஷ் நந்தனை நோக்கி போகப் போக……..

“இரு ஆகாஷ்! ஒரு டென் மினிட்ஸ் இரு! முதல்ல கனியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ! அவ கொஞ்சம் ப்ரெஷ் ஆகட்டும்! அப்புறம் வந்து பூஜை ரூம்ல விளக்கேத்தட்டும்! அதுக்கு அப்புறம் நீ நந்தனைப் பார்க்க போ!”, என்றாள்.

“ரெண்டு நிமிஷம் பார்த்துட்டுப் போயிடறனே!”, என்ற அவனை……..

“சொன்னதை செய் முதல்ல! கனியை ரூம்க்கு கூட்டிட்டு போ!”, என்றாள்.

“வா கனி!”, என்று ஆகாஷ் அவளை அழைக்க……. அவள் குழந்தையை வாங்க அனிதாவிடம் கை நீட்ட ………

“போ கனி! முதல்ல வந்து பூஜை ரூம்ல விளக்கேத்து! அதுவரைக்கும் நான் வெச்சிருக்கேன்!”, என்றாள்.

கனியை ஆகாஷ் அவனின் ரூமிற்கு அழைத்து போக…. ரூம் மிகவும் பெரியதாக இருந்தது.  நடுவில் பெரிய கட்டில், ஒரு ஓரமாக பெரிய எல் ஈடி டீ வீ…. பெரிய மியூசிக் சிஸ்டம்…… ஒரு சைட் பூராவும் அலமாரிகள்……  என்று அவள் ரூமை ஆராய்ந்து கொண்டிருக்க ஆகாஷ் கனியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“இப்போதான் கனி நீ இன்னும் அழகா இருக்க”, என்றான். அவன் தான் பூவும் பொட்டும் வைத்திருப்பதை கூறுகிறான் என்று புரிந்தவள் அவனுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

அவள் பாத்ரூம் நோக்கி போகப்போக………. வேகமாக வந்து அவளின் நெற்றிய தொட்டு பார்த்தான் காய்ச்சல் இருந்தது.

“இன்னும் ஃபீவர் குறையலையே!”,

“குறைஞ்சிடும்”, என்று சொல்லி அவள் முகம், கை, கால் கழுவ செல்ல…..

“அங்க அவ்வளவு வாயடிச்சிட்டு வந்து இங்க என் கிட்ட எண்ணி எண்ணி பேசறா! இவளை என்னப் பண்ணலாம்!”, என்று அவன் யோசித்தான்.  

அவன் யோசனையின் நாயகி சில நிமிடங்களிலேயே வர, இவன் போய் ப்ரெஷ் ஆகி வரும்பொழுது அவள் ரூமில் இல்லை.

“என்னோட வந்தா என்னோடப் போகனும்னு தெரியாது! முன்னாடி போயிட்டா!”, என்று நினைத்துக்கொண்டே வந்தான்.    

அவன் வருவதற்காக காத்திருந்த அனிதா, “போ கனி! போய் விளக்கேத்து!”, என்றவள் “நீயும் கூட போய் ஹெல்ப் பண்ணு!”,  என்றாள் ஆகாஷைப் பார்த்து.

கனி விளக்கேற்றி வெளியே வருவதற்காகவே காத்திருந்தது போல அவளின் மகன் அவள் வெளியே வந்ததும் அழத் துவங்க…….

கனி அவனை தூக்கிக்கொண்டு ஆகாஷின் ரூம் போனாள்.

“அனி! இவனுங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை!”, என்று அசோக்கையும் செந்திலையும் அனிதாவிடம் ஆகாஷ் கை காட்ட…..

“முதல்ல சாப்பிடுங்க!”, என்று கட்டாயப்படுத்தி அவர்களை டைனிங் ஹால் அழைத்து சென்றாள்.

“ஆகாஷும் வரட்டும் அக்கா”, என்றான் செந்தில்.

“அவன் என் மகனை சமாதானப்படுத்த போயிருக்கான்….. இப்போவே வந்தாலும் ஆச்சு……. இல்லை அரைமணிநேரம் ஆனாலும் ஆச்சு……… நந்தன் மூட் போல…. சொல்ல முடியாது! நீங்க சாப்பிடுங்க!”, என்றாள். 

அவள் பரிமாற முயன்ற நேரம், அக்ஷரா அழ, அவளை போய்த் தூக்கினாள்.

“அவளுக்கு தூக்கம் வந்துடுச்சு போல…….. நீங்க போங்க அக்கா, போய் அவளை தூங்க வைங்க! நானும் இவனும் சாப்பிட்டுக்குவோம்!”,

“இல்லை! நான் பரிமாறுறேன்!”, என்ற அக்ஷராவை தூக்கிக்கொண்டே அனிதா வர…..

“நீங்க போங்க அக்கா!”,

சமையல் அம்மாவை கூப்பிட போனவளையும், “வேண்டாம் அக்கா!”, என்று மறுத்தவன்………. “நீங்க போங்க அக்கா! அசோக்கை நான் பார்த்துக்கறேன்!”, என்று சொல்லி அக்ஷராவை தூங்க வைக்க அவளை அனுப்பினான்.

அங்கே இருந்த ஐட்டங்களை பார்த்து அசோக் அசந்து விட்டான்…… “டேய்! இத்தனையா நமக்கு இப்படி ஒரு விருந்தா!”,

“டேய்! இது என் சின்ன மாமியார் வீடுடா! மாப்பிள்ளையை நல்லா கவனிக்கச் சொல்லி என் மாமனார் சொன்னாரோ என்னவோ!”, என்று செந்தில் சொல்ல…….

“மவனே! இதை மட்டும் ராஜி கேட்டா! நீ செத்தடா!”, என்றான் அசோக்.

“அய்யயோ!”, என்ற நிஜமாகவே பதறிய செந்தில்……..

“யப்பா ராசா! மறந்தும் இதை ராஜிகிட்ட சொல்லிடாதடா! அப்புறம் ஒரு புருஷன் பொண்டாட்டியை பிரிச்ச பாவம் உனக்கு வந்து சேரும்!”, என்றான்.

“பயப்படாத! குடிச்சிருந்தா கூட உளற மாட்டேன்!”, என்று வாக்கு கொடுத்தான் அசோக்.

அப்புறம் தான் செந்தில் தன் முன் இருந்ததில் கவனம் செலுத்தி சாப்பிட ஆரம்பித்தான். இருந்த பசியில் இருவரும் ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தனர். 

அங்கே நந்தன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ரூமினுள் அமர்ந்திருந்தான்.

“என்ன நந்து? நந்துக்கு எதுக்கு கோபம்?”, என்றபடி ஆகாஷ் அருகில் போக…

அவன் பேசாமல் முகத்தை திருப்பினான்.

“எதுக்கு கோபம்னு சொன்னா மாமா உடனே அதை சரி செய்வேன்”,

“ம்! இப்படிதான் சொல்வீங்க! ஆனா செய்ய மாட்டீங்க! என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு விட்டுட்டுப் போயிடீங்க…….. “,

அவனுக்கு கனியைப் பற்றி இருந்த டென்சனில்……… அவன் நந்தனிடம் ப்ராமிஸ் செய்ததை ஆகாஷ் மறந்திருந்தான்.

“சாரி! சாரி! நந்து! உனக்கு அப்பாவைப் பார்க்கணும் அவ்வளவு தானே! நாளைக்கு செந்தில் மாமா ஊருக்குப் போவாங்க! நீ அவங்க கூட போ! நான் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்!”, என்று அவன் சொன்னதும்…

“நிஜமா!”, என்று அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு கேட்க……

“நிஜம்மா!”, என்றபடியே அவனை அப்படியேத் தூக்கிகொண்டு வெளியே வந்தான்.

அவன் வரவும் கனி வரவும் சரியாக இருக்க……….

“இது நந்தன்! என் செல்லப் பையன்”, என்று கனியிடம் சொன்னவன்…..

“இது உங்க……”, என்று அவன் ஆரம்பிக்கும்போதே……. “அத்தை!”, என்றான் நந்தன்.

“அம்மா என்கிட்டே சொல்லிட்டாங்களே! க்ளாட் டு மீட் யூ அத்தை!”, என்றான் நந்தன்.

“இது தான் நான் இனிமே பார்த்துக்கப் போற குட்டி பாப்பாவா”, என்றான்.

“அம்மா சொன்னாங்க, அக்ஷியோட சேர்த்து இனிமே நான் தான் இவனையும் பார்த்துக்கனுமாமே!”, என்றான் பெரிய மனிதன் போல.

கனிக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.

“அப்புறம் ஏன் அத்தையையும் குட்டிப் பாப்பாவையும் பார்க்க வராம உள்ள இருந்த நந்து”,

“என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு மாமா விட்டுட்டுப் போயிட்டார்”, என்றவன்………. “இவன் பேர் என்ன?”, என்று குழந்தையைக் காட்டி கேட்க…….

கனி ஆகாஷையே பார்த்தாள்……. அந்த பொறுப்பை தான் அவனிடம் கொடுத்திருந்தாளே, அவன் தான் அதை இன்னும் கண்டு கொள்ளவே இல்லையே.

“பேர் வெச்சதுக்கு அப்புறம் தான் கூப்பிடனும் நந்து! மாமா நாளைக்கு சொல்றேன்!”, என்றான்.

“செலக்ட் பண்ணிடீங்களா”, என்றாள் கனிமொழி ஆர்வத்தை அடக்க முடியாமல்.

 “அதெல்லாம் நீ சொன்னப்போவே செலக்ட் பண்ணிட்டேன்”,

“என்ன பேரு?”,

“அது சஸ்பென்ஸ்!”, என்றான்.

“எத்தனைக்கு நாளைக்கு இந்த சஸ்பென்ஸ்”, என்று அவள் கேட்க…….

“நாளைக்கு வரைக்கும்!”, என்றான்.

“நீ சாப்பிட்டிட்டு முதல்ல மாத்திரை சாப்பிடு! இன்னும் பீவர் விடலை! காலைல சாப்பிட்டது இன்னும் சாப்பிடக் கூட இல்லை!”, என்று அவளை டைனிங் ஹால் கூட்டிக்கொண்டு போக…….

அப்போதுதான் செந்திலும் அசோக்கும் எழுந்து இருந்தனர்.

அசோக் அவளின் கையில் இருந்தக் குழந்தையை வாங்க கை நீட்ட, கனி அவனை முறைத்தாள்.

“என் குழந்தையை நீ பார்க்க வரவில்லை”, என்ற ஆதங்கமும் கோபமும் இருந்தது.

அதைப் பார்த்த ஆகாஷ்….. “குழந்தையை அவன் கிட்ட குடு கனி! மறுபடியும் எதுவும் பேச ஆரம்பிக்காத! ரொம்ப பேசிட்ட!”, என்று அவளை அதட்டினான்.

கனியின் முகம் அவனின் அதட்டலில் சுருங்கினாலும்….. அவன் சொன்னதை மறுபேச்சு பேசாமல் செய்தாள்……

பிறகு செந்திலையும் அசோக்கையும் கவனித்து, இவர்களும் சாப்பிட்டு ஒருவாறு உறங்க சென்றனர்.

“குழந்தைக்கு தொட்டில் வேணும்”,

“கூடப் படுக்க வெக்க மாட்டியா”,

“கூடத் தான் படுக்க வெப்பேன்! தொட்டில்ல தூங்கின பிறகு தான் எடுத்துக் கூட போட்டுக்குவேன்! அதுவுமில்லாம சில சமயம் நைட்லாம் அழுவான்! அப்போ தொட்டில் இருந்தா பெட்டர்”. 

நடுவில் கட்டில் இருந்தது. தொட்டில் கட்ட வேண்டும் என்றாள் கட்டிலை சுவரோடு ஒட்டிப் போடவேண்டும். சுவரோடு ஒட்டி போடா முடியாத படி ஒரு பக்க சுவரில் அலமாரி இருந்தது, ஒரு பக்க சுவரை ஒட்டி மியூசிக் சிஸ்டம் இருந்தது, ஒரு பக்க சுவரை ஒட்டி டீ வீ இருந்தது. இன்னொரு புறம் கதவு இருந்தது.

“இன்னைக்கு ஒரு நாள் தொட்டில் இல்லாம அட்ஜஸ்ட் பண்ண முடியுமா, நாளைக்கு ஏதாவது செய்யலாம்”, என்றான்.

“சரி”, என்றவள் குழந்தையை கட்டிலின் நடுவில் போட்டு, அதன் பக்கத்தில் அமர்ந்து தூங்குவதற்காக தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.    

இப்போது ஆகாஷ் மாத்திரை கொடுத்திருந்ததால் காய்ச்சல் சற்று மட்டுப்பட்டாலும் அசதி அவளை தூங்கச் சொல்ல, அப்படியே படுத்துக்கொண்டு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“நான் எங்க படுக்கட்டும்”, என்று வந்து நின்றான் ஆகாஷ்.

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கறீங்க”, என்றாள் சுள்ளென்று.

ஆகாஷிற்கும் சட்டென்று கோபம் வந்தது. “எதுக்கு எப்போப் பார்த்தாலும் எல்லாத்தையும் எக்ஸ்ட்ரீம்க்கு திங்க் பண்ணுற! இப்ப நான் என்னக் கேட்டேன், இல்லை உன்னை என்ன பண்ணிடுவேன் நான்.  உன்னை எந்தவகையிலாவது இதுவரைக்கும் ஹர்ட் பண்ணியிருக்கேனா! என்ன நம்பிக்கை உனக்கு என் மேல” என்றான் ஆதங்கமாக. 

“எனக்கு இன்னும் இவ்வளவு சின்னக் குழந்தை பக்கத்துல படுத்து பழக்கம் கிடையாது”,

“நந்தன் என் கூட படுத்துக்குவான்னாலும் ஒரு ரெண்டு வயசுக்கு அப்புறம் தான். நீ குழந்தையை நடுவுலப் போட்டிருக்க… பெரிய கட்டில்னாலும் ரொம்ப பெருசு இல்லை. நான் தூக்கத்துல குழந்தையை இடிச்சிட்டனா! அதுக்கு கேட்டேன்!”, என்றான்.

“சாரி”, என்றாள்.

அவளின் சாரி என்ற வார்த்தையை கேட்டதும் இன்னும் கோபம் அதிகமாகியது ஆகாஷிற்கு…..

“முதல்ல எழுந்துரு! நான் உன்கிட்ட பேசணும்!”, என்றான் கோபமாக……..

இவ்வளவு கோபம் கனியிடம் இதுவரை ஆகாஷ் காட்டியதில்லை.

கனி பயந்துவிட்டாள்.

எழுந்து அமரவும்…….

“எதுக்கு ரொம்ப பேசுவ! அப்புறம் சாரி கேட்ப……”,

அவளின் பயந்த முகத்தை பார்த்தும் அவன் கோபத்தை குறைக்கவில்லை, “நான் என்கிட்டே பேசினதுக்கு சொல்லலை! நீ என்கிட்டே என்ன வேணாப் பேசலாம்! எனக்கு பிரச்சனையில்லை!”,

“ஆனா மத்தவங்க கிட்ட பேசும்போது யோசிச்சுப் பேசு! எதையாவது பேசிட்டு அப்புறம் சாரின்னு கேட்காத!”,

“இன்னைக்கு மண்டபத்துல அவ்வளவு பேசினதே தப்பு….. இதுல சாரி வேறக் கேட்கற!, பேசிட்ட, அப்புறம் எதுக்கு மன்னிபெல்லாம் கேட்கற…….  நீ பேசுனது ஒரு வகையில அதிகம்னாலும் அதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்ட ……..”,

“நீ தப்பே செஞ்சிருந்தாலும் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கனும்ங்கற அவசியம் கிடையாது. முன்னாடி எப்படியோ இப்போ நீ என்மனைவி! நீ எதுக்காகவும் யார்கிட்டயும் இந்த மன்னிப்புபெல்லாம் கேட்கக் கூடாது புரிஞ்சதா”, என்றான்.          

“நான் இன்னைக்கு ரொம்ப பேசிட்டனா?”, என்றாள் மெல்லிய விசும்பலுடன்.

“கொஞ்சம் பேசின தான் விடு! இனி அதை நினைக்காத!  ஆனா மன்னிப்பெல்லாம் எப்பவும் கேட்காத!”, என்றான் மறுபடியும்.

“சரி”, என்பது போல தலையாட்டினாள்………. பேசவே முடியவில்லை. அழுகை தொண்டையை அடைத்தது.

“எதுக்கெடுத்தாலும் அழாதக் கனி”, என்று எரிச்சலாக சொன்னவன்……….. தான் ரொம்ப ஓவராகப் போகிறோம் என்றுணர்ந்தவன்……. “அழாதடா, ஏற்கனவே ஃபீவர், இன்னும் அதிகமாகிடப்போகுது!”, என்றான் கனிவாக…… 

அதற்கும், “சரி”, என்று தலையாட்டினாள்.

“இப்போ சொல்லு! எங்க படுக்கட்டும்?”,

அவசரமாக கண்ணைத் துடைத்தவள், “நீங்களே சொல்லுங்க!”, என்றாள்.

“குழந்தையை ஓரமா போட்டுட்டு, நீ நடுவுல படுத்துக்கோ! நான் உன் பக்கம் படுத்துக்கறேன்”, என்றான்.

“என்ன பக்கத்திலா?”, என்று நினைத்தவள், அதை சொன்னால்……. “ஏன்? நான் உன் பக்கதுல படுத்தா என்ன பண்ணிடுவேன்”, என்று அதற்கும் கோபப்படுவான் என்று அமைதியாக இருந்தாள்.

ஏற்கனவே தான் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற மன உளைச்சலில் இருந்தவளுக்கு இப்போது ஆகாஷ் வேறு திட்டவும் ஒரு மாதிரி குற்ற உணர்ச்சி தோன்றியது. அதனால் அவளுக்கு பழக்கமில்லாத ஆயுதமான மௌனத்தை கையில் எடுத்தாள்.        

அதனால் அவனை மறுத்தெல்லாம் எதுவும் பேசவில்லை, அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டினாள்.

பிறகு அவனே, “குழந்தை கீழ விழுந்துட்டான்னா என்ன பண்றது! வேண்டாம்!”, என்றான்.

“இப்போ அலமாரிய திறக்க வேண்டாம்”, என்று கட்டிலை இருவருமாக பிடித்து அதனை ஒட்டிப் போட்டு……. குழந்தையை ஓரமாக போட்டு, கனி குழந்தை அருகில் படுக்க……….. இவன் கனியின் அருகில் படுத்துக்கொண்டான்.

நேற்று இரவும் ஒரு பொட்டு தூக்கமில்லாததால்…….. இன்று கனி வேறு அருகில் இருப்பதால்…….. எல்லையிலா ஒரு நிம்மதி ஆகாஷின் மனதில் இருக்க…… எப்போதும் கேட்கும் பாட்டை கூட போடாமல் படுத்தவுடனே உறங்கியும் விட்டான்.

நல்ல ஆழ்ந்த உறக்கம்…….

குழந்தையும் உறங்க…….

அவன் என்னவோ படுத்ததும் உறங்கி விட்டான்…….

ஆனால் கனிக்கு அந்த பஞ்சு மெத்தையிலும் என்னவோ முள் மேல் படுத்திருப்பது மாதிரி இருந்தது. 

தன்னுடைய மனதிற்குள்ளேயே மிகவும் போராடினாள்.

மெதுவாக ஆகாஷைத் தாண்டி அவன் எழுந்துக்கொள்ளாமல் கட்டிலை விட்டு இறங்கியவள், ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு சத்தம் வராமல் அழ ஆரம்பித்தாள்…….     

 எதற்கு அழுகிறோம் என்று அவளுக்கே தெரியாமல் வெகு நேரம் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்தது.

அழுதுக்கொண்டே கட்டிலில் படுத்திருந்தால் ஆகாஷ் விழித்துக்கொள்வான் என்று நினைத்தவள்…….. அழுகையை நிறுத்தி அவன் விழிக்கும் முன் போய் படுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அழுகை நிற்பேனா என்றது….

அழுதுக்கொண்டே இருந்தாள்…..  

         

Advertisement