Advertisement

அத்தியாயம் பதினாறு:

இவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பே செந்தில் கனியின் பெட்டிகள் பைகள் என்று எல்லாவற்றையும் காரில் வைத்து…….. இவர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை பூட்டுவதற்காகக் காத்திருந்தான்.

“கிளம்பலாம் ஆகாஷ், டைம் ஆச்சு!”, என்று குரலும் கொடுக்க அவர்கள் வெளியே வந்தனர்.

“எதுக்குடா டைம் ஆச்சு”, என்றான் ஆகாஷ்.

“அங்க குழந்தை முழிச்சிக்கப் போறான், அதைச் சொன்னேன்!”, என்று சமாளித்தான் செந்தில்.

பிறகு மூவரும் கிளம்ப செந்தில் காரை மண்டபத்தை நோக்கி தான் விட்டான்.

“நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொன்னேன் அண்ணா!”, என்று சற்று டென்ஷனாக கத்தினாள் கனிமொழி.

“அவங்க கல்யாணத்துக்கு நீ போகலை கனி!”, என்று சொல்லியபடியே மண்டப வாசலில் காரை நிறுத்தியவன்…….

“சாவியைக் குடுத்துட்டு வந்துடறேன்”, என்று உள்ளே சென்றான்.

“எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை, எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலை, நான் நடந்தாவது போறேன்”, என்று காரின் கதவை திறக்க முற்பட்டாள்.

“இரு கனி! வந்துடுவான்!”, என்று ஆகாஷ் சமாளித்துக் கொண்டிருந்தான்.

அது திறக்கவில்லை………

“கதவு திறக்கலை”, என்றாள் ஆகாஷிடம்.

அவனும் முயற்சித்து விட்டு, “வெளில லாக் ஆகியிருக்கு”, என்றான்.

அதற்குள் அசோக் இவர்களின் காரை நோக்கி வேகமாக வந்தான்…..

அவனைப் பார்த்து டென்ஷனான கனி, “எனக்கு தான் யாரையும் பார்க்க பிடிக்கலைன்னு சொன்னேனே! அப்புறம் ஏன் இப்படி பண்றாங்க இந்த செந்தில் அண்ணா!”, என்றாள் எரிச்சலாக.

“இவள் வேறு இப்போது தான் என்னுடன் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்… இந்த செந்தில் ஏன் இப்படி செய்கிறான்? இவளின் அப்பா அம்மா ஒரு வேளை இவளை சமாதானப்படுத்தி விட்டால்….. கனி என்னுடன் வரமாட்டேன், வீட்டிற்க்கேப் போகிறேன் என்று சொல்லிவிட்டால்…….?”, என்று ஆகாஷ் ஒரு புறம் டென்சன் ஆனான்.

அசோக் வந்து காரின் கதவைத் திறக்க முற்பட அது திறக்கவில்லை. கனி தான் உள்ளிருந்து பூட்டிக்கொண்டாளோ என்று நினைத்த அசோக், “கதவை திற கனி!”, என்றான்.

உள்ளே இவர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் வாயசைவில் தெரிந்தது.

ஆகாஷ் சைகையில், “சாவி இல்லை”, என்றான்.

எல்லோரும் மண்டபத்தைப் பார்க்க செந்தில் மெதுவாக இறங்கி வந்துகொண்டிருந்தான். இவன் ஏன் இப்படி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் நடப்பதுப் போல வருகிறான் என்று ஆகாஷிற்க்கும் கனிமொழிக்கும் புரியவில்லை.

போனை எடுத்த ஆகாஷ் செந்திலை அழைத்து, “டேய்! கார் கதவை பூட்டிட்டு என்னடா பண்ணிட்டு இருக்க! கதவைத் திற! இல்லை சாவியைக் கொடு! நாங்க கிளம்பறோம்!”, என்றான்.

“இரு! அவசரப்படாத!”, என்று மேலே எதுவும் பேசாமல் போனை வைத்துவிட்டான். இவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என்று ஆகாஷிற்கு புரிந்தது.

“பய ஏதோ பிளான் பண்ணிட்டான்! என்னப் பண்ண போறானோ தெரியலையே? இவ மறுபடியும் எங்கம்மா வீட்டுக்கே போயிடறேன்னு போயிடக்கூடாதே! கடவுளே ப்ளீஸ்…. எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோ! அவ என்னை விட்டுப் போகாம பார்த்துக்கோ!”, என்று மனமுருக வேண்டினான் எதிரில் இருந்த பிள்ளையாரை பார்த்து.

ஆம், அவர்கள் கார் நின்ற இடத்தின் எதிரில் மண்டபத்திற்கு உரிமையான பிள்ளையார் சன்னதி சிறியதாய் இருந்தது. அதனருகிலேயே முருகர் சன்னதியும் இருந்தது.

கனி போலவே அவரும் அவன் வேண்டின வரத்தை கொடுத்தது தெரியாமல் மீண்டும் மீண்டும் அவர் முன் கோரிக்கையை வைத்துக்கொண்டு இருந்தான்.

அதற்குள் செந்தில் வந்து கதவை திறந்தவன், “இறங்கு ஆகாஷ்! இறங்கு கனி!”, என்றான்.

“எதுக்கு நான் இறங்கலை!”, என்றாள் விறைப்பாக…….

“சொன்னாக் கேட்கணும்! நீ ஏதாவது தப்பு பண்ணினியா! யாருக்கும் தெரியாம யார்கிட்டயும் சொல்லாம போறதுக்கு, முறையா தான் நீ ஆகாஷோடப் போகணும்…….  நீ அண்ணான்னு என்னைக் கூப்பிடறது நிஜம்னா இறங்கு!”, என்றான்.

வேறு வழியில்லாமல் இறங்கினாள்.

ஆகாஷிற்கு அப்போதும் செந்தில் என்னச் செய்யப்போகிறான் என்று புரியவில்லை. அவன் எதுவானாலும் தன் நன்மைக்குத் தான் செய்வான் என்று தெரியும். ஆனால் அவனின் பயமெல்லாம் கனி திரும்பி விடக் கூடாதே என்பதுதான்.  

அவன் காரைவிட்டு இறங்கவில்லை. பிறகு செந்திலும் இறங்கச் சொல்லவில்லை.  

“கனி……..”, என்று அசோக் பேச வர முகத்தை திருப்பிக்கொண்டாள்.

இன்னும் அசோகிற்கோ கனியின் பெற்றோருக்கோ அவள் துணிமணிகளை பேக் செய்து கிளம்பிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாது. அவள் கோபமாக இருக்கிறாள் திருமணத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் என்று மட்டுமே நினைத்தான்.   

“உள்ள வா கனி!”, என்றான் அசோக் மறுபடியும்.

முகூர்த்தம் முடிந்து சிறிது நேரமே ஆகியிருந்ததால் அப்போதுதான் பல உறவுகள் மண்டபத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் இவர்களைப் பார்த்தபடி நின்றனர்.

கனி பதிலே பேசவில்லை.

அதற்குள் வெளியே வந்திருந்த கனியின் பெற்றோர்கள் அவளிடம் வந்தனர். “மண்டபத்துக்கு உள்ள வா கண்ணு!”, என்று கனியின் அம்மா கையை பிடிக்க வர நகர்ந்து நின்றாள்.

“எதுக்கு கண்ணு இவ்வளவு கோபம்? உன்னை விட்டுட்டு இந்தக் கல்யாணத்தை நடத்தினதுல எங்க மனசு எவ்வளவு வருதப்பட்டிருக்கும்ன்னு உனக்கு புரியலையா”,

வந்தக் கோபத்தை அடக்கி……. பதிலே பேசாமல்…… யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைப் போல நின்றாள்.   

அதற்குள் உறவு ஜனமும் சுத்தி கூட ஆரம்பித்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் கூட வெளியே வந்தனர். 

“அவளுக்கு மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு கண்ணு! அதான் இந்தக் கல்யாணத்தை நடத்த வேண்டியதாப் போயிடுச்சு!”, என்று அவளின் அம்மா சொன்னதும் ஆத்திரம் அளவு மீற………

“உங்கப் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குன்னு சொன்னவுடனே கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சு அதை பண்ணியும் முடிச்சிடீங்களே…….. எனக்கு கல்யாணம் பேசினப்போ எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கலை இது சரிவராதுன்னு எத்தனை தடவை சொன்னேன்…….”,

“கேட்டீங்களா………. யாராவது  காது கொடுத்து கேட்டீங்களா…….. வர்ற மாப்பிள்ளையை எல்லாம் தட்டி விடற…….. உன்னால உன் தங்கச்சிங்க  கல்யாணம் எல்லாம் தள்ளிப் போகுது…….. படிச்ச திமிரு யார் பேச்சையும் கேக்கறதில்லை…… அப்படி இப்படின்னு சொல்லி…… சொத்திருக்கு அது இருக்கு இது இருக்குன்னு சொல்லி……… என் கல்யாணத்தை நடத்தினிங்களே…….”,

“இப்போ என்ன ஆச்சு? நானும் என் பையனும் அனாதையா நிக்கறோம்! காணாமப் போன குழந்தை கிடைச்சதுக்கு அப்புறம் அவன் எப்படி இருக்கான் என்னன்னு எட்டிப் பார்க்கக் கூட ஆள் இல்லாம நாதியத்து நிக்கறோம்…….”,  

இதைச் சொல்லும்போது அவளின் முகம் காட்டிய உணர்வுகள், அதில் தெரிந்த அழுகை  பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கியது.

“நீங்க சொன்ன சொத்தால தான் அத்தனைப் பிரச்சனையும்”,

“அந்த சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு பூ வைக்க முடியுமா? என்னால ஒரு பொட்டு வைக்க முடியுமா? ஒரு கண்ணாடி வளையல் தான் போட முடியுமா?”,

“காணாமப்போன என் பையன் கிடைச்சதுக்கு அப்புறம் ஒரு நிமிஷம் என் குழந்தையை வந்து பார்த்துட்டு போக கூட நேரமில்லை. நான் ஏதாவது சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திடுவனோன்னு அவ்வளவு பயம்……”,

“நீங்க இப்படி பயந்து பயந்து என்னை கூட வெச்சுக்க வேண்டிய அவசியமேயில்லை! நான் போறேன்!”, என்று காரில் ஏறப் போனாள்.

திருமணத்திற்கு வந்த அத்தனை உறவுகளும் அவளையேப் பார்த்தது. யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

கனியின் அம்மா அழவே ஆரம்பித்தார்.

“எங்க கண்ணுப் போற?”, என்று அவர் பதற…….

“எங்கயோப் போறேன்! உனக்கென்ன? அதான் இவளைக் கூட்டிட்டு போங்க தம்பின்னு நேத்தே அவர்கிட்ட சொல்லிட்டியே…..”,

“என்ன கண்ணு இப்படிப் பேசற……..”, என்று அழுகையோடு அவர் கேட்கவும்…..

சூழ்ந்துள்ள அத்தனை பேருக்கும் தாங்கள் காட்சிப் பொருளாக நிற்கவும்…… 

அவளுக்கும் மனது தாளவில்லை. எல்லோர் முன்னிலையிலும் தனது பெற்றோரை இப்படி நிறுத்தி கேள்வி கேட்டதற்கு அந்த நொடியில் தன்னையே வெறுத்தாள்.   

“என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் நான்?”, என்று நினைத்தவள்…….

“என்னால முடியலைம்மா”, என்று தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்…..

அழத்துவங்கிய நிமிடத்திலேயே அங்கிருந்த அவளுக்கு அத்தை முறையான ஒரு பெண்மணி…… “என்ன கனி இப்படி மனசு விடற, பாரு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்படறாங்க”, என்று அவளைத் தேற்ற……

சுதாரித்தவள், கண்ணை துடைத்துக்கொண்டு பெற்றவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.    

“கண்டிப்பா எந்தப் பெத்தவங்களும் தங்களோட பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு தெரிஞ்சா எனக்கு நடந்த மாதிரி ஒரு கல்யாணத்தை செய்யனும்னு கனவுல கூட நினைக்க மாட்டாங்க”,

“எனக்குப் புரியுது……..”,

“என் கல்யாணம் நடந்ததுக்கு நீங்க காரணம்னாலும் என் நிலைமைக்கு நீங்க எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது, அது ஆண்டவன் போட்ட முடிச்சு…… என் தலையெழுத்து இதுதான்னு அவன் செஞ்ச தீர்மானம் அது……”,  என்று அவள் சொல்லும்போதே காரில் அமர்ந்து இதைக் கேட்டுகொண்டிருந்த ஆகாஷின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது……..

“போச்சு! போச்சு! மறுபடியும் அவங்கம்மா அப்பாகூடவே போகப் போறா போல”, என்று பயந்து விட்டான். 

அவள் மேலே மேலே பேசிக்கொண்டேப் போனாள்…..

“என்னோட குழந்தைக்காக ப்ரியா அவளுக்கு இஷ்டமான வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கனும்னு எந்த அவசியமுமில்லை….. புரியுது……”,

“நான் இப்படியெல்லாம் உங்களைப் பத்தி தப்பா நினைச்சு பேசறதால ஒரு வகையில சுயநலவாதியா ஆகிட்டேன்”, என்று விரக்தியாக புன்னகைத்தாள்.

“அசோக்கை பாரு! அவன் வயசு பசங்க எல்லாம் கல்யாணம் முடிச்சு லைஃப்ல செட்டில் ஆகிட்டாங்க! இவன் இன்னும் தங்கச்சிங்க வாழ்க்கையை பார்த்துக்கிட்டு இருக்கான்! அவன் கல்யாணம் முடிச்சுக் கூடப் பார்க்கலாம்! ஆனா அவன் அந்த மாதிரி நினைக்கவேயில்லை எனக்குப் புரியுது!”,

“என்னையேயும் நீங்க காலம் முழுசும் பார்க்க முடியாது, உங்களுக்கு மத்த பசங்களும் இருக்காங்க அதுவும் புரியுது”

“ஆனா என் பையனை நீங்க யாரும் எட்டிக் கூட பார்க்கலைங்கறது எனக்கு ரொம்ப வருத்தம்! இப்போதைக்கு அது போகாது! அது மாறுற வரைக்குமாவது நான் கொஞ்சம் தள்ளி இருக்கேன்”,  என்றாள்.

இதைக்கேட்ட பிறகு தான் ஆகாஷ் மூச்சு சீரானது. ஹப்பா அவள் என்னோடு வரும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.  

ஆனால் அவன் மூச்சு சீரானது சில நொடிகளே……

“நான் என்னை மட்டும் பார்த்து சுயநலமா நடந்துக்கிட்டேன்….. நான் நேத்தும் இன்னைக்கும் ஏதாவது உங்களைத் தப்பா பேசியிருந்தாலோ, மனசு நோகும்படி பேசியிருந்தாலோ மன்னிச்சிக்கங்க” என்று அவள் இரு கை கூப்ப…….

யாருமே எதிர்பார்க்கவில்லை……

ஆகாஷ் இதைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவனுக்கு மிகவும் மனசு கஷ்டமாக போய்விட்டது. அவளின் இந்த நிலையில் தன்னால் ஒன்று செய்யமுடியவில்லையே என்று வருந்தினான். 

அத்தை முறையான அந்த பெண்மணி வேகமாக அவளின் கையை இறக்கியவர், “நீர் அடிச்சு நீர் விலகாது கனிமொழி…… யார் வீட்ல பிரச்சனையில்லை……. வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி….”,

“ஏன் இப்படி மன்னிப்பெல்லாம் கேட்டு இன்னும் அவங்க மனசை வருத்துற”,

“இல்லை அத்தை! நான் மனசாரத் தான் கேட்கிறேன்! என் பிரச்சனை நான் தான் பார்க்கனும். அவங்க எத்தனை நாள் என்னையே பார்ப்பாங்க, ஒரு வகையில வயசான காலத்துல நான் அவங்களுக்கு பிரச்சனையாகிட்டேன்றது எனக்கு வருத்தம் தான்..”, 

“பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம், அவ நல்லாயிருக்கான்னு நினைக்க முடியாம, மறுபடியும் இங்கேயே வந்து உட்கார்ந்துக்கிட்டேன் இல்லை”

அவளின் அம்மா ஓடி அவளருகில் வந்தவர்…… “இப்படி எல்லாம் பேசாதக் கண்ணு”, என்று பொங்கி பொங்கி அழுதவர்…….. “எங்கயும் போகாதக் கண்ணு”, என்றார். 

“இல்லைம்மா! கொஞ்ச நாள் தள்ளியே இருக்கேன்! கல்யாணம் பண்ணிப் போறேன்னு போயி கொஞ்ச நாளேயே மறுபடியும் வந்து உட்கார்ந்துடேன்!”,

“பசங்க மாதிரியாம்மா பொண்ணுங்க! பசங்களுக்கு எப்பவும் அவங்க வீடு தான்! ஆனா பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிட்டாலே அது அவங்க வீடு கிடையாது இல்லையா…….. அது அம்மா வீடு ஆகிடுது…….. அதுல நான் ரொம்ப நாள் இருக்க முடியாது…… எது எப்படியோ நான் மனசளவுல தேறக் கொஞ்சம் நாள் ஆகும்மா! தள்ளியே இருப்போம்!”, என்றாள்.

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அண்ணாமலையும் ராஜியும் வந்தனர்.

ராஜியைப் பார்த்ததும், “குழந்தை”, என்றாள் கனி.

“தூங்கறான் அக்கா! இன்னும் முழிக்கலை! அம்மா குழந்தைக் கூட இருக்காங்க!”, என்றவள் செந்திலைப் பார்த்து தலையசைத்தாள்.

காரின் அருகில் சென்ற செந்தில் காரின் கதவை திறந்து, “இறங்கு ஆகாஷ்”, என்றான்.  

“என்னடா?”, என்று கேட்டுக்கொண்டே இறங்கினான்.

“அவளை கூடக் கூட்டிட்டுப் போறதுன்னா கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போ! அது தான் அவளுக்கும் மரியாதை உனக்கும் மரியாதை!”, என்றான்.

ஆகாஷ் இதை எதிர்பார்க்கவில்லை, “என்ன இப்போவே என் கல்யாணமா?”, என்றான்.

இதை செந்தில் ஆகாஷிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை….. “ஏண்டா? என்னடா இப்படிச் சொல்ற? நான் இப்போ தான் மாமாவையும் ராஜியையும் தாலியை வாங்கிட்டு வரச் சொன்னேன்”,

“இப்படி யாருக்கோ ஏற்பாடு பண்ணின மண்டபத்துல என் கல்யாணம் நடக்கறது எப்படிடா”,

“இல்லை நாம மண்டபத்துக்கு உள்ள போகலை! இங்க முருகர் முன்னாடி தான் கல்யாணம்”,

“இல்லை! நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து நல்லா பண்ணலாம்டா! இப்படி அவசரமாவா எனக்கு என் கல்யாணம் நடக்கணும்!”,

“ரிசெப்ஷன் நல்லா பண்ணிடிலாம்டா!”,

இவர்கள் இருவரும் என்ன ரகசியமாக பேசுகிறார்கள் என்று கனியின் பார்வை இங்கேயே இருந்தது. அவளின் பெற்றோர் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தாலும், அவர்களுக்கு அவள் பதில் கொடுத்துக்கொண்டு இருந்தாலும் பார்வை இங்கேயும் இருந்தது.

அப்போதும் ஆகாஷின் முகம் தெளியவில்லை…..

“இன்னும் என்னடா?”, என்றான் செந்தில்.

“அனி, என் அக்கா இல்லையே! அவ இல்லாம எப்படி? என் அக்கா இல்லாம என் கல்யாணம் நடக்கறதுல எனக்கு இஷ்டமேயில்லை! அவ என் ஒரே அக்கா! அவ இல்லாம எப்படி?”, என்று புலம்பினான்.

“சென்னை போய் நாளைக்கே கூட கல்யாணம் வெச்சிக்கலாம்…….. இல்லை அனியை வரச்சொல்லி நாளைக்கு இங்கயேக் கூட கல்யாணம் வெச்சிக்கலாம்”.

செந்திலுக்கு கோபமே வந்துவிட்டது. “இத்தனை நாள் பொண்ணு வேணும், வேணும்ன்னு சொல்லிட்டு……. எப்படியாவது அவ மனசு மாறரதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தா……..  இப்போ போய் பாசமலர் படத்தை ஓட்ற நீ……… உன்னை என்னப் பண்ணலாம்!”, என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவர்களின் அருகில் வந்த ராஜி, செந்திலைப் பார்த்து, “இப்போ என்ன பேசிட்டு இருக்கீங்க? என்னப் பிரச்சனை? இங்க உங்க மாமனார் ப்ரோகிதர்கிட்ட பேசிட்டார்…… முகூர்த்த நேரம் முடிய இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்காம்! சீக்கிரம் இவங்களை கூட்டிட்டுப் போங்க”,என்று ஆகாஷைக் காட்டினாள்.

“இவன் யோசிக்கறான்”, என்று செந்தில் ராஜியிடம் சொல்ல,

“ஏன்? என்னப் பிரச்சனை?”, என்றாள் வியப்பாக…

“இவன் அக்கா இல்லையாம்”, என்று எப்படி ராஜியிடம் சொல்வது என்று செந்தில் தயங்கினான்.

அவன் தயங்கும்போதே, சற்று யோசித்தவள், “என்ன அவங்கக்கா இல்லைன்னு சொல்றாங்களா?”,

“ம்”, என்று செந்தில் தலையாட்ட…….. 

“அதானே இவங்களாவது அவங்கக்காவை விடறாவது……… டைம் வேஸ்ட் பண்ணாம அவங்கக்காக்கு ஃபோன் பண்ணுங்க…… அவங்கக்கா சொன்னாக் கேட்பாங்க…… காதலிக்கும் போது……… பின்னாடி சுத்தும்போது இவங்களுக்கு ஒண்ணும் தெரியாது……… இந்த மாதிரி சூழ்நிலையிலும்  கல்யாணத்துக்கு அவங்க அக்கா இருக்கணும்ங்கறாங்க……… இவங்க ரொம்ப நல்லவங்க!”, என்றாள் அவளும் சற்று எரிச்சலான குரலில்.

இரண்டு பேரும் திட்டியும் ஆகாஷ் அசையவில்லை……

வேறு வழியில்லாமல் அனிதாவிற்கு செந்தில் அழைத்து விஷயத்தை சொல்ல……… “இப்போவே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வரணும்!”, என்று அனிதா சொன்னப் பிறகே முகம் தெளிந்தான் ஆகாஷ்.

அதன் பிறகே உடனே கல்யாணம் நடக்க வேண்டும் என்ற பரபரப்பு அவனிடம் தொற்றியது.

“இப்போதான் இவனை தெளியவெச்சிருக்கோம்! இனி கனியை சமாளிக்கணும்!”, என்றான் செந்தில்.

“போங்க! போய் நீங்களே பேசுங்க!”, என்று ராஜி ஆகாஷையே அனுப்பினாள்.

அனுப்பியவள்……. பிறகு செந்திலிடம், “உங்களுக்கு தெரியாதா அவங்க அவங்க அக்காவுக்காக என்ன வேணாப் பண்ணுவாங்கன்னு……. ஆசைப்பட்டான்னு அடுத்தவங்க புருஷனையே கல்யாணம் பண்ணி வெச்சிருக்கான்….. அந்த இடியட்”, என்றாள் ஆத்திரம் மிகுதியில்.

“மறுபடியும் பழசைக் கிளறாத ராஜி….. அதனால எதுவும் மாறப்போறது இல்லை…. மனசு வருத்தம் தான் மிஞ்சும்….. முதல்ல இவன் கல்யாணத்தை நல்ல படியா முடிப்போம்”, என்றான் செந்தில். 

கனியின் அருகில் போய் நின்றான் ஆகாஷ்.

அவன் வந்ததுமே, “போகலாமா? குழந்தை முழிச்சிக்குவான்!”, என்று கனி சொல்ல……

“நாம கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போகலாமா?”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக.

அவன் மெதுவாக கேட்டாலும் அவளின் பக்கத்தில் நின்ற கனியின் அம்மா, அப்பா, அசோக், மற்றும் சிலருக்கும் கேட்டது.

பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் என்னப் பேசுகிறார்கள் என்று கேட்காவிட்டாலும் அவர்களையே தான் எல்லோரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“கல்யாணம்”, என்றதும் முகத்தில் அறைந்ததுப் போல இருந்தது கனிக்கு.

“பின்பு என்ன முறையில் நீ அவனுடன் அவனின் வீட்டிற்கு போவாய்! இதுக் கூட யோசிக்காத முட்டாளா நீ! உன் வீட்டிற்கு கூப்பிட மாட்டாயா என்று ஜம்பமாக கிளம்பிவிட்டாய்! முறையாக போக வேண்டாமா!”,

“இத்தனை உறவுகளுக்கு மத்தியில் நடந்திருக்கிறது இந்தப் பிரச்சனை! நீயாகப் போய் பிறகு திருமணம் செய்தாலும் உனக்கு மரியாதையில்லை கனி! வருவதை நீ எதிர்க்கொண்டு தான் ஆகவேண்டும்! சரியென்று சொல்!”, என்று மனம் கட்டளையிட…

கண்களில் நீர் வர துடித்தது. இப்போது அந்த மாதிரி கண்களில் நீர் வந்தாலோ இல்லை தான் பின்வாங்கினாலோ ஆகாஷிற்கு மிகவும் தலையிறக்கமாகி விடும் என்றுணர்ந்தவள்……..

“சரி”, என்றாள் ஆகாஷைப் பார்த்து.

அந்த ஒற்றை வார்த்தையில் அவனின் அகமும் முகமும் மலர…… “தேங்யூ”, என்றான் அவளைப் பார்த்து. 

கனியின் பெற்றோர் பெண்ணின் முடிவில் சந்தோஷமடைந்தாலும், அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று புரிந்தாலும், தங்களுடன் சண்டை போட்டு தங்களின் பெண் இந்த முடிவை எடுத்தது மிகுந்த துன்பத்தைக் கொடுத்தது.

அவளின் அந்த வார்த்தைக்காக காத்திருந்த ராஜியும் செந்திலும் வேகமாக செயல்பட்டனர். ப்ரோகிதரை அழைத்து ஏற்பாடுகள் செய்ய….

அவளின், “சரி”, என்ற வார்த்தைக்கு பிறகு நேராக கனியின் பெற்றோரிடம் சென்ற ஆகாஷ், “எனக்கு அவளைக் கல்யாணம் செஞ்சு குடுக்கறிங்களா”, என்று அவர்களின் சம்மதத்தை வேண்டி நின்றான்.

அவனின் அந்த கேள்வியில் இப்போது அவர்களின் அகமும் முகமும் மலர்ந்தது. “சம்மதம் மாப்பிள்ளை! எங்களுக்கு பரிபூரண சம்மதம்!”, என்று அவனின் கையை பிடித்து கனியின் தந்தை சம்மதத்தை தெரிவித்தார்.

பார்த்துக்கொண்டிருவர்களின் மனதிலும் ஆகாஷ் உயர்ந்தான்.

அங்கு பெரும்பான்மையோர் ஜவுளி தொழில் செய்ததாலும் அல்லது தறி நெய்பவர்களாக இருந்ததாலும் ஆகாஷை அறியாவிட்டாலும் அதனோடு தொடர்புடைய ஆகாஷின் தொழில் நிறுவனம் அவர்கள் அறிந்ததே…..

அவர்களின் குலப்பெருமை, பின்புலம், செல்வ செழிப்பு, அங்கிருந்த நிறையப் பேருக்கு தெரிந்திருந்தது.  

நேற்று நடந்த பிரச்சனைகளுக்கு அவன் மூலமாக விடிவு வந்திருந்தாலும், அவனோடு நிறைய அடியாட்கள் இருந்ததால் அவன் எப்படியோ என்று நினைத்திருந்தவர்களின் மனதில் எல்லாம் அவன் திருமணத்திற்கு முறையாக சம்மதம் கேட்கவும் அவன் மீது மிகுந்த மரியாதை தோன்றியது.

அவன் தோற்றமே யாராயிருந்தாலும் அவனை மரியாதையாக தான் பார்க்கத் தோன்றும், பேசத் தோன்றும். இப்போது இன்னும் அது உயர்ந்தது.   

“இன்னும் சித்த நாழி தான் இருக்கு, வாங்கோ”, என்று ப்ரோகிதர் குரல் கொடுக்க……..

இவர்கள் இருவரும் விநாயகருக்கு பக்கத்தில் இருந்த முருகன் சன்னதியில் நின்றனர்.

வேகமாக ஓடிவந்த கல்யாணப் பெண்ணான கனியின் தங்கை அவளிடம் தன் கையை நீட்டினாள். அவளின் உள்ளங்கையில் சிறிய குங்கும டப்பா இருந்தது.

 “வெச்சிக்கோ அக்கா!”, என்று அவளிடம் ப்ரியா நீட்ட, குங்குமத்தை எடுத்த கனியின் விரல்கள் அதை நெற்றியில் வைக்கப் போகும் போது தடுமாறி நடுங்கியது.

“நீங்க வெச்சிவிடுங்க மாமா!”, என்றாள் கனியின் தங்கை ப்ரியா.

கனி கை நடுங்க வைத்தது சற்று கோணலாக சிறியதாக இருந்தது. தன் விரல்களில் குங்குமத்தை எடுத்த ஆகாஷ் அதை சற்றுப் பெரியதாக்கி நேர் செய்தான்.

அவனின் மனதில் சொல்லொணா திருப்தி…….. இந்த பொட்டிலாத கனியின் முகம் தானே அவனை அவள் பால் ஈர்க்க முதல் காரணம். அப்போதே அவளின் முகத்தில் பொட்டு வைக்க மனம் துடித்தது அல்லவா…

பொட்டிருந்த அவளின் முகத்தைப் பார்க்க பார்க்க ஆகாஷிற்கு கண்களை விலக்கவே முடியவில்லை. 

ஏதோ புதிதாக வேறு பெண்ணைப் பார்ப்பது போல இருந்தது…….

இருவரையும் பார்க்கும் போது அங்கிருந்த அனைவருக்குமே திருப்தி……. எல்லோரும் அவளின் முதல் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் தானே….. அப்போது அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாத அறிவரசு நின்ற போது இவ்வளவு அழகான பொண்ணை இப்படி ஒருத்தனுக்கு குடுக்கறாங்களே என்று தோன்றியவர்களின் மனது எல்லாம் இப்போது இந்த ஜோடிப் பொருத்தத்தை மெச்சியது.   

கனி இமைகளை தாழ்த்தியவள்தான், அதன் பிறகு இமைகள் உயர்ந்து கண்கள் அவனைப் பார்க்கவே இல்லை, அவனை மட்டுமல்ல யாரையும் பார்க்கவில்லை. அது நிலம் நோக்கியே இருந்தது.

தான் தேவையில்லாமல் நிறைய பேசிவிட்டதாக தோன்றியது. சரியோ தவறோ இனி இவ்வளவு பேச்சுக்கள் பேசக்கூடாது, வார்த்தைகளை மிச்சம் வைக்க வேண்டும் என்றே தோன்றியது. இருந்தாலும் தன் போராட்டம் எல்லாம் இனி முடிந்துவிடும் எதுவாகினும் ஆகாஷ் பார்த்துக்கொள்வான் என்று மனதில் நிம்மதி பரவியது.  

அப்போது கனியின் சிறிய தங்கை லக்ஷ்மி கை நிறைய மல்லிகை பூவை எடுத்து வந்து கனியின் தலையில் வைத்தாள்.

அங்கிருந்த அத்தனை பேருமே மன நிறைவாகவே உணர்ந்தனர். அந்த மறுமணத்தை மனதால் அங்கிருந்த அதிகம் பேர் வரவேற்றனர் என்பதே உண்மை. ஒரு மகிழ்ச்சியை சந்தோஷத்தைப் பெரும்பான்மையோர் முகத்தில் பார்க்க முடிந்தது.

நிறைய மந்திரங்கள் சொல்லி ப்ரோகிதர் ஆகாஷை சோதிக்கவில்லை…. சில நிமிடங்களிலேயே, “தாலியைக் கட்டுங்கோ”, என்று சொல்ல…… அவன் முன் தாலி நீட்டப்பட……….

அவன் அதை எடுத்து அவளின் கழுத்தினில் பூட்டி மூன்று முடிச்சையும் அவனேப் போட்டான். அதன் பின் அந்த மாங்கல்யத்தை கையில் ஏந்தி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மரியாதை செய்தான்.

வீடியோ காரர் ஒருபுறம் வீடியோ எடுக்க…….. போடோக்ராபர் ஒரு புறம் போட்டோ எடுக்க…… இதையெல்லாம் விட அங்கிருந்த கேமரா செல் போன் வைத்திருந்த அனைவரின் செல்லிலுமே இந்த காட்சி உள்ளே நுழைந்தது.

அப்போது கனியின் மனதில் ஓடிய எண்ணமெல்லாம் ஒன்றே தான், “நான் சாகும்வரை இது என் கழுத்தில் இருந்து இறங்கக் கூடாது”, என்பதே……….

அவளையும் மீறி நீர் மணி முத்துக்கள் அவளின் கண்களில் இருந்து இறங்கி மாங்கல்யத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டிருந்த ஆகாஷின் கைகளில் விழுந்தது.

                   

     

Advertisement