Advertisement

அத்தியாயம் பதினைந்து:

அதிகாலை நான்கு மணிக்கு உறங்க ஆரம்பித்தாள் கனி. குழந்தைக்கு அவளின் தேவை ஒரு ஆறுமணி போல இருக்க ஆகாஷ் சென்று அவளை எழுப்பி விட்டான்.

கனியாவது முன்பு ஒரு நான்கைந்து மணிநேரம், இப்போது ஒரு இரண்டு மணிநேரம் போலத் தூங்கினாள். ஆனால் ஆகாஷிற்கு ஒரு பொட்டுத் தூக்கமில்லை.

சிறிது நேரம் தூங்கேன் என்று அவனின் கண்கள் அவனிடம் கெஞ்சியது தான். ஆனால் அவனோ அதற்கெல்லாம் அசையவேயில்லை…….. ஏதோ அவளை கவனித்துக்கொள்ளவே பிறப்பெடுத்தது போல காரியமே கண்ணாயினான்.

தேவிகா தான் சொன்னார், “நீங்க ராத்திரி முழுசும் தூங்கவேயில்லை போல தம்பி, கொஞ்சம் நேரம் தூங்குங்க”, என்று……

“தூக்கம் வரலை அக்கா! எனக்கு இது பழக்கம் தான்! சில சமயம் வேலை அதிகமா இருக்கும் போது ஒரு நாள் முழுசும் தூங்காம இருக்கறது தான்! சமாளிச்சுக்குவேன்!”, என்றான்.

கனி இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள், “இவன் ஒருத்தன் அக்கறை காட்டியே என்னைக் கொல்றான்”, என்று நினைத்தாள்.

“எஸ், கனி இஸ் பேக் டு ஃபார்ம்”. நேற்று இருந்த சஞ்சலமான மனநிலை எல்லாம் இல்லை, விரக்தி எல்லாம் பறந்துப் போயிருந்தது.

“அவன் என் குழந்தை! யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் அவனுக்கு!”, என்று தெளிந்திருந்தாள்.

அவளிடம் குளித்து போட உடை எதுவும் இல்லை. குழந்தைக்கு பால் கொடுப்பதால் பருத்தி ஆடையையே அணிந்திருந்தாள். திருமணதிற்காக பட்டு மாற்றும் முன் இந்த நிகழ்வுகலெல்லாம் நடந்திருந்தால் இன்னும் அந்த உடையிலேயே இருந்தாள்.

குழந்தையும் அதே மேல் சட்டையில் இருந்தான். தேவிகா அவரின் நூல் சேலையை எடுத்துக்கொடுதிருக்க அதை கிழித்து அவனின் இடையில் அவ்வப்போது மாற்றி மாற்றி கட்டிக் கொண்டிருந்தாள். 

“குளிச்சிடுறியா கனி”, என்றான் ஆகாஷ்.

“என்கிட்டே மாத்திக்க ட்ரெஸ் இல்லை”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே செந்திலும் ராஜியும் வந்துவிட்டனர்.

அவளருகில் வந்தமர்ந்த ராஜி, “சாரி அக்கா! எனக்கு நடந்தது எதுவும் தெரியாது. இவங்க என்கிட்டே சொல்ல வேயில்லை. நைட் வீட்டுக்கு வந்துத் தான் சொன்னாங்க. குழந்தைக் காணோம்னு ரொம்ப கஷ்டப்படிருப்பீங்க”, என்று ஃபீல் செய்தாள்.

“சாரி! அதனால தான் நான் நேத்து வரலை! தெரிஞ்சிருந்தா வந்திருப்பேன், அம்மா கூட குழந்தை இங்கிருக்கறதை என்கிட்டே சொல்லலை!”, என்றாள்.  

“ஒரு சேஃப்டிக்காக யார்கிட்டயும் சொல்லலை, அவளே இப்போ தான் அதை மறந்திருப்பா, அதை நீ ஏன் கிளர்ற”, என்று செந்தில் ராஜியை அதட்ட…….

“அவ கேக்கறா! கேட்டா எனக்கொரு ஆறுதல்! அதை நீங்க ஏன் அண்ணா அதட்டறீங்க! அப்போ நடந்ததையெல்லாம் விட்டுட்டு வேற பேச சொல்றீங்களா! அவ என்னால வரமுடியலை சாரின்னாவது சொல்றா! எங்க வீட்டு ஆளுங்க வந்து எட்டியும் பார்க்கலை! ஒரு போன் கூட பண்ணலை!”, என்றாள் கனி.

அவளின் பேச்சிலேயே அவள் மிகவும் தெளிந்து விட்டாள் என்று புரிந்தது அங்கிருந்த அனைவருக்கும்  புரிந்தது.

“அது அவங்க வரக்கூடாதுன்னு இல்லை கனி! வந்தா நீ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவ! உன்னை மீறி செய்யற மாதிரி இருக்கும்! அதான் வந்திருக்க மாட்டாங்க!”, என்று சமாதானப்படுத்தினான் செந்தில்.

“அண்ணா ப்ளீஸ்! அவங்களுக்காக யாரும் என்கிட்டே பேச வேண்டாம்! ஏன் இந்த பேச்சே வேண்டாம்!”, என்றாள் கறாராக.

“சரி பேசலை! நீ ரெடியானா நம்ம கல்யாணத்துக்கு போகலாம்!”, என்றான் ஆகாஷ்.           

“எந்த கல்யாணத்துக்கும் நான் வரமாட்டேன்”,

“நான் உன்னை காலையில கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன் கனி”,

“சொன்னா செய்யனும்னு ஏதாவது அவசியம் இருக்கா என்ன? என்னால வரமுடியாது!”,

“அடம்பிடிக்காத கனி! நான் சொல்லிட்டு வந்திருக்கேன் நீ வருவேன்னு! கிளம்பு நீ! வரலைன்னா உங்க அப்பா அம்மாக்கு வருத்தமா இருக்கும்”, என்றான் ஆகாஷ் மறுபடியும்.

“அதிகப்ரசிங்கித்தனம் பண்ணாதீங்க! என்னோட முடிவுகளை நீங்க எடுக்காதீங்க! இன்னும் நான் உங்களுக்கு அந்த உரிமையைக் குடுக்கலை!”, என்றாள்.

எத்தனை உதவிகளை ஆகாஷ் இவளுக்கு செய்திருக்கிறான், எப்படி எடுத்தெறிந்து பேசுகிறாள் என்பது போலவே செந்திலுக்கும் ராஜிக்கும் இருந்தது. இருந்தாலும் அவர்களின் சண்டையில் தலையிடாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

ஆகாஷ் அவள் அப்படி பேசியும் கோபப்படாமல், வரத்துடித்த கோபத்தையும் அடக்கி,   “சரி சொல்லு! எப்போ எனக்கந்த உரிமையை கொடுக்கப் போற!”, என்றான்.

“தெரியலை? எதையும் கட்டம் கட்டிச் சொல்ல முடியாது!”, என்றாள் அலட்சியமாக…

“நம்ம சண்டையை அப்புறம் வெச்சிக்கலாம்! நீ கல்யாணத்துக்கு கிளம்பு கனி! அவ உன் தங்கச்சி, அவளுக்கு அந்த பையனைப் பிடிச்சிருக்கு! அதனால தான் இந்த கல்யாணம்”,

“என்ன பெரிய பிடிச்சிருக்கு?”,

“அதானே! உனக்கு காதலைப் பத்தியெல்லாம் என்னத் தெரியப் போகுது”, என்றான் கிண்டலாக எரிச்சலான ஆகாஷ்.  

அது கனியை பதம் பார்த்து சீண்ட…… அவனுக்கு சற்றும் குறையாமல் அதே கிண்டலான தொனியில் பதிலளித்தாள். “ஆமா! எனக்கு அதை பத்தி தெரியாது! ஒரு பதினஞ்சு நாள் சேர்ந்து வாழ்ந்தாலும் என் கணவனுக்காக வாழ நினைக்கிற எனக்கு காதலைப் பத்தி தெரியாது”,

“ஆனா ஒரு வருஷம் முன்னாடி வேற ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு…… இப்போ என் பின்னாடி சுத்திட்டு இருக்குற உங்களுக்குதான் காதலைப் பத்தி நல்லா தெரியும்”, என்றாள் நக்கலாக……

“ஏய்!”, என்று கோபத்தில் அவளின் கழுத்தில் கை வைத்து சுவரோடு சேர்த்து நிறுத்தினான்.

“என்ன வாயிடி உனக்கு? நாக்கா? இது சவுக்கா?”, என்றான்.

“அவ கல்யாணம் ஆனவடி! அவ புருஷனோட உள்ள இருக்கா! அவளை ஏன் இழுக்கற!”,

அவனின் கையை கழுத்தில் இருந்து விலக்கியவள்…… “அறிவுகெட்டவனே! அவ கல்யாணமான பொண்ணுன்றது உங்களை விட எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! நான் அவளை எங்க இழுத்தேன், பேச்சை வேற மாதிரி கொண்டு போகாதீங்க!”,

“நான் உன்னை மட்டும் தான் சொன்னேன்! நீ பண்ணினதை தான் சொன்னேன்! அவ பண்ணினான்னா சொன்னேன்! இப்போ நீதான் அவளை இழுக்கற!”, என்றாள் அவனை விடவும் கோபமாக…..       

“இப்போ என்ன தான் பண்ணனும்ங்கற”,

“என்னால கல்யாணத்துக்கு வரமுடியாது! நீங்க  இந்த விஷயத்துல தலையிடாதீங்க!”,

“நான் சொன்னேன்னு தான் அவங்க கல்யாணம் பண்றாங்க!”,

“என்ன நீங்க சொன்னீங்கன்னு கல்யாணம் பண்றாங்களா…….. அப்போ நீங்க சொல்லியிருந்தா அவங்க கல்யாணத்தை நிறுத்தியிருப்பாங்களா……. மாட்டாங்க……… அது அவங்க எண்ணம்! அதை நீங்க அமோதிச்சு இருக்கீங்க! அவ்வளவுதான்!”,  

“என்னை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம இருந்திருப்பாங்க! நீங்க பெரிய இவன் மாதிரி நான் பார்த்துக்கறேன்னு கூப்பிட்டிட்டு வந்திருப்பீங்க! அதுதான் நடந்திருக்குது!”,

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”, என்றான் ஆகாஷ்.

“மதியாதார் வாசல் மிதியாதே”, என்றாள் கனி.

“இப்போ என்ன தான் நீ சொல்ற”,

“போங்க போய் வேலையை பாருங்க”,

“என்ன வேலையைப் பார்க்கறது”,

“என்னை பார்க்கறதை தானே உங்க வேலையா வெச்சிருக்கீங்க, அதையேப் போய் கன்டினியு பண்ணுங்க”, என்றாள் சலிப்பாக.

சிரிப்பு வந்தது ஆகாஷிற்கு…….

“இப்போ என்ன வேலை எனக்கு?”,

“எனக்கு குளிக்கணும், குளிச்சா போட்டுக்க ட்ரெஸ் இல்லை, ஏற்பாடு பண்ணுங்க”,  என்றாள்.

“இரு! ராஜிகிட்ட புது ட்ரெஸ் ஏதாவது இருக்கான்னு கேட்கறேன்”, என்று ராஜியை அழைக்க சென்றான்.

உள்ளே ராஜியுடன் இருந்த செந்தில்……. “என்னடா சொல்றா”,

“ஃபுல் ஃபார்ம்ல இருக்கா!”,

“என்ன ஃபுல் ஃபார்ம்?”,

“எல்லார் உயிரையும் எடுத்துட்டு தான் விடறதுன்னு”,

“இருங்க! நான் போய் சொல்றேன்!”, என்று ராஜி செல்வது போல ஆக்ஷன் காட்ட….

“அம்மா தாயே! அவளே எதுல சாக்கு கிடைக்கும், என்னை துவைச்சு தொங்கப்போடலாம்னு காத்துட்டு இருக்கா! நீ போய் சொன்ன! என் டங்கு டனாலு தான்! டுங்கு டுனாலு தான்!”, என்றான்.

ராஜியும் செந்திலும் வாய்விட்டு சிரித்தவர்கள், “எங்கிருந்து பிடிச்சீங்க இதெல்லாம். அப்பியரேன்ஸ்ல மட்டும் தான் நீங்க ஆஸ்திரேலியன் ரிடர்ன்……… மத்தபடி பக்கா லோக்கலுக்கும் மோசமாயிடீங்க……… லோக்கள் பாஷை……… லோக்கல் ரௌடிங்க…. கலக்கறிங்க போங்க……..”, என்றாள் ராஜி புன்னகையுடன்.

“தேங்க்யூ! தேங்க்யூ! தேங்க்யூ!”, என்றான் ரஜினி ஸ்டைலில்.  

எல்லோரும் ஹாலுக்கு வர, கனி இவர்கள் வந்த அரவம் கூட தெரியாமல் எங்கேயே வெறித்தப்படி உட்கார்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் இவர்களின் மனநிலை மாற அமைதி ஆனார்கள்.

“கனிக்கா குளிக்கறீங்களா? ட்ரெஸ் இல்லைன்னு யோசிக்காதீங்க! புது சாரி இருக்கு! வாங்க!”, என்றாள் ராஜி அவளிடம் போய் மெதுவாக.

“புடவை இருக்கும், ப்ளௌஸ் எல்லாம் இல்லையே!”,

“என்னோடது மேட்சா புதுசு இருக்கு! நான் உங்களுக்கு தகுந்த மாதிரி ஆல்டர் பண்ணி தர்றேன்! வாங்க!”, என்று அவளை எழுப்பிக் கொண்டு போனாள்.

அவள் குளிக்கப் போகவும் அசோக் அழைக்கவும் சரியாக இருந்தது.

“கிளம்பிடீங்களா”, என்று ஆகாஷிடம் கேட்டான்.

ஆகாஷிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

செந்திலைப் பார்க்க அவனிடம் இருந்து போனை வாங்கிய செந்தில், “குழந்தை கொஞ்சம் அழுதுட்டே இருக்கான்! என்னன்னு தெரியலை! அவன் கொஞ்சம் சரியாகட்டும் கூட்டிட்டு வர்றேன்! நீ கல்யாண வேலையைப் பாரு!”, என்றான்.

“கனிக்கு கோபமா?”, என்றான் அசோக்.

“உன் தங்கச்சியைப் பத்தி உனக்கு தான்பா தெரியணும்”,

“எனக்கு தெரியும் கோவமா தான் இருப்பா! நான் அங்க வரட்டுமா!”, என்றான்.

“தாலி கட்டுற நேரத்துல நீ அங்க இருக்கணும்! முடிச்சிட்டு வேணா வா! ரொம்ப கோபமா தான் இருக்கா!”, என்றான் செந்தில்.

“அப்போ அவ கல்யாணத்துக்கு வரமாட்டாளா?”,

“முயற்சிப் பண்ணி பார்க்கிறோம்! சொல்ல முடியாது!”,

“ஏதாவது பண்ணுங்கடா! அவளை கூட்டிட்டு வர பாருங்கடா!”, என்றான்.

“நான் தான் சொல்றேனில்லை! குளிக்கப் போயிருக்கா! வந்ததும் மறுபடியும் பேசிப்பார்க்கிறோம்!”, என்றான்.

எப்படியாவது பேசி அழைத்து வந்துவிடுவார்கள் என்று நம்பினான் அசோக், அவனின் நம்பிக்கை பொய்க்கப் போவது தெரியாமல்.

குளித்து ராஜி கொடுத்த புடவையை அணிந்து வந்தாள். ஒரு மாதிரி அவளுக்கு சரியாக தான் இருந்தது.

“கனி, உன்னை எல்லோரும் அங்க எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க!”, என்றனர் செந்திலும் ஆகாஷும்.

“இதைப்பத்தி நாம பேசவேண்டாம்”, என்று கறாராக மறுத்துவிட்டாள். யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

குழந்தையை கவனிப்பதும், நேரத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

ஆகாஷும் செந்திலும் தாங்களாவது போய் வரலாம் என்று கிளம்ப……..

“ஏன்? நண்பனோட தங்கச்சி கல்யாணத்துக்கு அவசியம் போகணுமா? நானும் அவன் தங்கச்சி தான்! என்னை கவனிங்க!”, என்றாள் செந்திலைப் பார்த்து.

ஆகாஷைப் பார்த்து அதுக்கும் மேலே, “அவங்க பொண்ணு நானே போகலை! உங்களுக்கு என்ன வந்தது! குட்டியை பகைச்சிக்கனும்னா ஆட்டோட உறவு கொண்டாடிக்கங்க!”, என்றாள்.

“என்னைப் போகவேண்டம்னு சொல்ற சரி, செந்திலை ஏன் போகவேண்டாம்னு சொல்ற, அசோக்கும் அவனும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரிண்ட்ஸ்”, என்றான் ஆகாஷ்.

“அச்சோ! அப்படியா!”, என்று போலியாக ஆச்சர்யப்பட்டு, “நீங்க இப்போ சொல்லலைன்னா அவங்க விஷயம் எனக்குத் தெரியவே தெரியாது! அவங்க ஃப்ரிண்ட்ஸா”, என்று அவனிடம் திருப்பி கேட்டாள்.

செந்திலும் ஆகாஷும் முழித்தனர்.

நேரத்தைக் கவனித்து கொண்டே இருந்தாள்……

“என்ன விஷயம்?”,

“கல்யாணம் முடிஞ்சிருக்குமா?”,

“முடிஞ்சிருக்கும்! ஏன் கேட்கற?”,

“எனக்கு வீட்டுக்குப் போகணும், அதான்,”, என்றாள்.

“வீட்டுக்கா?”, என்றான் ஆகாஷ்.

“ம்”, என்று தலையாட்டினாள்.

மீண்டும் ஆரம்பித்து இடத்திற்கே வந்துவிட்டது போல உணர்ந்தான் ஆகாஷ்.

செந்தில் ஏதோ அவளிடம் பேச வர, “அவளுக்கு என்ன பிரியமோ செய்யட்டும் விடு!”, என்றுவிட்டான் ஆகாஷ்.

கனி கிளம்ப குழந்தையைப் பார்க்க, அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அப்போது தான் “நை, நை” என்று அழுதுகொண்டே இருந்த குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தான். “நீங்க போங்க அக்கா! தூங்கற குழந்தையை எழுப்ப வேண்டாம். அவன் எழுந்த உடனே நான் அவனை உங்க கிட்ட கூட்டிட்டு வர்றேன்!”, என்றாள் ராஜி.

யோசித்தவள் அதுவும் சரிதான் என்பது போல முடிவெடுத்து, “போகலாமா”, என்றாள் செந்திலையும் ஆகாஷையும் பார்த்து.

ஒன்றும் பேசாமல் கிளம்பினர்.

வீட்டில் இறங்கியவள் வீடு பூட்டியிருக்கவும், “போய் சாவி வாங்கிட்டு வர்றீங்களா அண்ணா”, என்றாள் செந்திலைப் பார்த்து.

அவன் ஆகாஷை பார்க்க, “போ!”, என்பதாக தலையசைத்தான்.

செந்தில் மண்டபத்திற்கு போகவும் அப்போதுதான் தாலி கட்டி முடிந்திருந்தது.

அசோக்கிடம் போய், “வீட்டுச் சாவி”, கேட்டான் செந்தில்.

“எதுக்குடா?”, என்றவனிடம்……….

“கனி கேட்கறா”, என்றான் செந்தில்.

அவள் வீடு வந்துவிட்டாள் என்பது நிம்மதியாக இருந்தது அசோகிற்கு. இங்கே கொஞ்சம் வேலை முடிந்ததுமே போய் சமாதனப்படுத்திகொள்ளலாம் என்று நினைத்தவன் சாவியை செந்திலிடம் கொடுத்தான்.

அவன் சாவியை கொண்டுவந்ததும் உள்ளே சென்றவள், “ஒரு டென் மினிட்ஸ் உட்காருங்க”, என்று சொல்லி அவளின் ரூமிற்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

“இவ எதுக்குடா கதவை சாத்துறா! நேத்து நைட் ரொம்ப உளறிட்டே இருந்தா”, என்று பதட்டப்பட்ட ஆகாஷ், செந்தில், “ஒண்ணும் பண்ணமாட்டாடா”, என்று சொல்லியும் கேட்க்காமல் படபடவென்று கதவை தட்டினான்.

கதவை திறந்தவள், “என்ன”, என்றாள்.

“எதுக்கு கதவை தாழ் போட்ட”, என்றான் பதட்டமாக.

“ஏன்? நான் ஏதாவது செஞ்சிக்குவேன்னு பயந்துடீங்களா! என் பையன் இருக்கான் எனக்கு……. போங்க! போய் உட்காருங்க!”, என்று அதட்டியவள்…..

“உங்களுக்கு என் மேல அக்கறை இருக்குன்னு தெரியும்! அதை எப்போ பார்த்தாலும் காட்டாதீங்க!”, என்றாள் எரிச்சலாக.

“இது அக்கறை இல்லை கனி……. காதல்…….”,

“ம், மண்ணாங்கட்டி! எனக்கு காதல் தெரியாது! உங்களுக்கு தான் தெரியும்! அது ஏன்னும் சொல்லிட்டேன்! சும்மா என் வாயைப் புடுங்காதீங்க”, என்றாள்.

இவள் ஏதாவது செந்தில் முன்னால் உளறி வைத்துவிட்டால் என்னச் செய்வது என்று பயந்து வந்து அமர்ந்து கொண்டான்.  

அவன் வந்து உட்காரவும், “அவ உன்னை திட்டுனதை நான் பார்க்கவே இல்லை”, என்றான் செந்தில்.

அவனை முறைத்தான் ஆகாஷ்…….

“என்னை முறைச்சு என்ன பண்றது?”, என்று செந்தில் முணுமுணுத்தான்.

“டேய்! ஓவரா சீன் போடாத! எல்லாம் வை ப்ளட்? சேம் ப்ளட் தான்! என்னவோ ராஜி உன்னை அதட்டவே அதட்டாத மாதிரி சீன் போடற! போடா! போடா!”,

“குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஓட்டலை”,

“தெரியாத்தனமா காலையில ஒரு பழமொழி சொன்னேன்! இப்போ என்னடான்னா ஆளாளுக்கு என்னை பார்த்து பழமொழி சொல்றீங்க! என் நேரம்!”, என்று நொந்துப்போனான் ஆகாஷ்.

கனி வர அரைமணிநேரம் ஆனது. அவளுடன் இரண்டு பெட்டிகள், நான்கைந்து ஷோல்டர் பேகுகள் இருந்தது.

அவள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்து வைக்க, செந்திலும் ஆகாஷும் அதிர்ந்தனர்.

“எங்கப் போற கனி?”, என்றான் செந்தில்.

“எங்கயோப் போறேன்! நான் போற இடத்துக்கு உங்களால கொண்டுப் போய் விட முடியுமா? முடியாதா?”, என்றாள் செந்திலைப் பார்த்து.

“சண்டை வந்தா வீட்டை விட்டு போயிடுவியா! இது என்ன பழக்கம்!”, என்று ஆகாஷ் அதட்ட……..

“நீங்க இதுல தலையிடாதீங்க”, என்றாள் கடுமையாய். “எவ்வளவோ எனக்காக செஞ்சிட்டீங்க! இது ஒண்ணையும் எனக்கு செஞ்சுக் குடுத்துடுங்க!”,

“எங்கப் போகப்போற?”,

“இனிமே தான் யோசிக்கனும்!”, என்றாள் திமிராக.

டென்ஷனான ஆகாஷ், “ஏண்டி என் உயிரை எடுக்கற! இப்படி தான் முதல்ல ஒரு தடவை கோவிச்சிகிட்டு உன் புருஷன் வீட்டுக்குப் போறேன்னு போன! அங்க வந்தது பிரச்சனை! இப்போ எங்கப் போகப் போற! சொல்லி தொலை!”, என்றான் ஆத்திரத்தின் உச்சமாக.

“போக இடமில்ல! எங்க போறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!”, என்று பதிலுக்கு அவளும் கத்தினாள்……

“அப்புறம், எங்க ரோட்ல போய் நிக்கப்போறியா”,

“ஏன்? உங்க வீட்டுக்கு என்னை நீங்க கூட்டிட்டுப் போகமாட்டீங்களா!”,  

இதுவரை டென்சனோடு பார்த்துக்கொண்டிருந்த செந்திலின் முகத்தில் புன்னகை பூத்தது. ஆனால் அவள் சொல்ல வருவது ஆகாஷிற்கு புரியவேயில்லை…… 

அப்போதும் கோபமாக, “நீ வந்துட்டு தான் வேற வேலைப் பார்ப்ப”, என்றான்.

“நீங்க இப்போ கூப்பிட்டீங்களா! கூப்பிட்டு தான் பாருங்களேன், நான் வர்றனா? இல்லையான்னு?”,

“இதுக்கு மேல என்ன சொல்லுவா! நம்ம பயபுள்ள இப்படி சொதப்புறானே!”, என்று செந்தில் நினைக்க…..  

ஆகாஷ் அவனின் உணர்வுகளை கண்ணில் தேக்கி, “நீ எனக்கு அந்த வரத்தை குடுக்கமாட்டியான்னு  தான் நான் தவமிருக்கிறேன்”, என்றான் அவளின் கண்களையே பார்த்தவாறு……

அவனின் யாசிக்கும் பார்வை அவளை அசைக்க….. அவனின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டு…….. “கையை நீட்டுங்க”, என்றாள் கனி.

புரியாமல் ஆகாஷ் கையை நீட்ட……… அதில் ஒரு தட்டு தட்டியவள், “வரத்தை குடுத்துட்டேன்! வெச்சிக்கோங்க!”, என்றாள்……

பார்பதற்க்கே கவிதையாய் இருந்தது அந்த காட்சி….

“பின்றாங்கடா! பின்றாங்கடா! ரெண்டு பேரும்”, என்று மனதிற்குள் சந்தோஷப்பட்ட  செந்தில்….. முகம் கொள்ளாப் புன்னகையுடன் வேகமாக அவளின் பைகளை தூக்கிகொண்டு காரில் வைக்கப் போனான்.

“நீ நிஜமா தான் சொல்றியா”, என்றான் ஆகாஷ் மறுபடியும் கனியிடம் சட்டென்று இந்த திருப்பத்தை எதிர்பார்க்காமல்.

“டேய் மரமண்டை! இதுக்கு மேல எப்படி சொல்வாங்க!”, என்றாள் இப்போது அவள் சலிப்பாக……

“இதை நீ சந்தோஷமா தான் செய்யறியா”, என்றான் மறுபடியும்.

கனி அவனையேப் பார்க்க………….

“எனக்கு உண்மையான பதில் வேணும்!”, என்றான்.

“எனக்கு இதுல சந்தோஷம்ன்னு நிச்சயம் சொல்ல முடியாது…….. சொல்லப் போனா எனக்கு இதுல அதிக உடன்பாடு கூட இல்லைதான்…….”,

“இது கண்டிப்பா காதலோ…….. ஆசையோ……. ஈர்ப்போ……..”, கிடையாது.

“இப்போ! இந்த நிமிஷம்! எனக்கு உன்னை விட்டா யாருமில்லாத மாதிரி இருக்கு! இது உணர்வு சரியா தப்பா தெரியலை! ஏன் வாழ்க்கைகூட இவ்வளவு போராட்டம்ன்னு தோணுது”,  

“உங்ககூட போயிட்டா என் போராட்டம் எல்லாம் முடிஞ்சிடும் போலத் தோணுது….. அதான் வர்றேன்! இது தான் உண்மை! இதுல உங்ககிட்ட மறைக்க எதுவுமில்லை!”,

“ஆனா இதுல எனக்கு வருத்தமில்லை போதுமா! சொல்லப்போனா இந்த முடிவை நான் எடுத்ததுக்கு அப்புறம் எனக்குள்ள ஒரு நிம்மதி வந்திருக்கு!”,

“எப்போ எடுத்த இந்த முடிவை”,

“உங்ககிட்ட பேச ஆரம்பிச்ச இந்த நிமிஷத்துல……….. இதுக்கு மேல ஏதாவது தோண்டித் தோண்டி கேட்டிங்க…….. குடுத்த வரத்தை வாபஸ் வாங்கிடுவேன்”, என்றாள் செல்ல மிரட்டலாக…….

இப்போதுதான் சற்று புன்னகை ஒட்டியது ஆகாஷின் மனதிற்குள்…….

அவன் முகம் புன்னகையைக் காட்ட…..

“இப்போ கூட ஒண்ணுமில்லை! யோசிச்சிக்கோங்க! நான் ஒரு பெரிய இம்சை! வரம்….., கிரம்……., அது…. இதுன்னு…….. உளறி வேலில போற ஓணானை எடுத்து வேட்டிகுள்ள விட்டுக்காதீங்க, அப்புறம் குத்துதே குடையுதேன்னா நான் பொறுப்பில்லை”, என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி……

“ஏய்! என்ன நீ? இவ்வளவு அசிங்கமா பேசற!”, என்றான் சிரிப்புடன்.

“நினைப்பு தான்! இது பழமொழின்னு உங்களுக்கு தெரியாது பாருங்க!”, என்றாள் நக்கலாக……..

“காலையில இருந்து பழமொழி கேட்டு நொந்துப் போயிருக்கேன்! ஆனா இந்த பழமொழி எனக்குப் பிடிச்சிருக்கு! உன் இம்சைக்குத் தான் நான் காத்திருக்கேன்”, என்றான் காதலுடன்.

பதிலுக்கு அவள் பார்த்த பார்வையில்…….. நிச்சயம் அவள் சொன்ன மாதிரி காதலோ…. ஆசையோ…. ஈர்ப்போ….. இல்லை தான்!

ஆனால் ஒரு சொந்தம் இருந்தது!

  

Advertisement