Advertisement

அத்தியாயம் பதினான்கு:

ஆகாஷின் கைகளில் கனி தொய்ந்தது சில நொடிகளே உடனேயே இருக்கும் நிலை உணர்ந்தவள், அவளின் இடையில் இருந்த அவனின் கைகளை பற்றி விலக்க முற்பட்டாள்.

இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உணராமல் நடந்துக்கொண்டு இருந்தவள் இப்போது குழந்தையின் பத்திரத்தை அறிந்தப் பிறகு அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.

ஆகாஷோ இப்போது அவளுக்கு நேர் மாறான மனநிலையில் இருந்தான். குமரேசனை பிடித்து விட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்ட உடனே இத்தனை நாட்கள் இருந்த டென்சன் வடிந்து உற்சாகமான மனநிலைக்கு மாறினான்.   

அவளின் இடுப்பை சுற்றி இருந்த அவனின் கைகளை விலக்க, கனி ஆகாஷின் கைகளின் மேல் அவளின் கையை வைக்க……. அவளின் கைகளின் மென்மை ஆகாஷை ஆகர்ஷித்தது. அவளின் வெற்று இடை பகுதியிலும் அவனின் கை அழுத்தமாக பதிந்து அவளை அசைய விடாமல் செய்திருந்தது.

அந்த கையை இன்னும் அவளின் இடுப்பில் அழுத்த அவனின் மனம் துடித்தாலும் தனியாக இருக்கும்போது கை உரசியதற்கே அப்படி அறைந்தாள். இப்போது எல்லோர் முன்னிலையிலும் அடித்து விட்டால்.  இருக்கும் சூழல் உணர்ந்து மெதுவாக அவளை விட்டான்.

மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “நீ ரொம்ப சாஃப்ட்!”, என்றான்.

என்ன சூழலில் என்னப் பேசுகிறான் என்று எரிச்சலாக வர, “உன் மண்டையையும் உடைக்கட்டுமா?”,

அவளைப் பார்த்து கண்ணடித்தவன், “ட்ரை பண்ணிப் பாரேன்”, என்றான்.

“இப்படி பேசிட்டே தான் இருப்பியா? என் குழந்தையை காட்டுவியா? மாட்டியா?”,

“வா போகலாம்”, என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

வேகமாக அம்மாவிடம் சொல்லிக் கிளம்பினாள்.

எல்லோர் கவனமும் மண்டை உடைந்த ரத்னதிடம் இருத்தது. யாரோ ஒருவர் அவனை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல அவனை எழுப்பிக்கொண்டு இருந்தார்.

செந்திலும் அசோக்கும் அவனை மிரட்டிய மிரட்டலில் அவன் பயந்து செய்ததை ஒப்புக்கொண்டு இருந்தான். கனியை கவர்வதற்காக மட்டுமே இதை செய்ததாகவும் மற்றபடி குழந்தைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று.

மாற்றி மாற்றி மண்டபத்தில் இருந்த அத்தனை ஜனமும் அவனை வசைபாடியது. மாப்பிள்ளைக்கும் அவனின் பெற்றோர்களுக்கும் இது பெரும் தலைகுனிவே.  

ஆகாஷுடன் வந்தவள் சில அடிகளே வைத்திருப்பாள், அவசரமாக தன் தந்தையிடம் சென்று, “இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுப்பா! இந்த மாதிரி ஒரு வீட்ல நமக்கு எந்த உறவும் வேண்டாம்”, என்றாள்.

அவள் பேசியதை கேட்ட மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, “எங்கப் பெரிய பையனுக்காக எங்க சின்னப் பையனை தண்டிச்சிடாதம்மா! நாங்க அவனை வீட்டை விட்டு ஒதுக்கிர்றோம்! அவனுக்காக நாங்க மன்னிப்பு கேட்கிறோம்! கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்!”, என்றனர்.

“ம்கூம்! அதெல்லாம் முடியாது!”, என்றாள் கறாராக.

கனியின் அன்னையும் தந்தையும் கையை பிசைந்தனர். கனியின் வார்த்தையை மீறி சம்மந்தம் செய்யவும் முடியாது. அதே சமயம் ப்ரியாவின் விருப்பத்தையும் மதிக்க வேண்டி இருந்தது. அவளுக்கு அந்த மாப்பிள்ளை ரொம்ப இஷ்டம் என்பது அவளின் செய்கையில் நன்கு தெரிந்தது.

கடத்தப்பட்ட மாப்பிள்ளை வந்த இந்த பதினைந்து நிமிடமாக அவளாக அவனருகில் போய் நின்றவள் தான்…… இன்னும் இடத்தை விட்டு அசையவில்லை. ப்ரியாவின் மனது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

ப்ரியா அந்த மாப்பிள்ளை பையனைப் பார்த்து கண்களாலேயே ஏதோ சொல்ல, அவன் கனியின் அருகில் வந்து, “இல்லைங்க அண்ணி! இங்க நடந்தது எங்க யாருக்குமே தெரியாது! எங்க குடும்பத்துல யாரும் அப்படி கிடையாது! இவன் ஏதோ தப்பிப் போயிட்டான்!”,

“இனிமே இவன் நிழல் கூட நானும் ப்ரியாவும் இருக்குற இடம் பக்கம் விழாம பார்த்துக்கறேன். இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ எங்க கன்செர்ன் என்னை ஸ்வீடன் அனுப்ப போறாங்க! நான் ப்ரியாவையும் கூட்டிட்டு போயிடுவேன்! நான் அவளை நல்லாப் பார்த்துக்கறேன்!”,

“எனக்கு அண்ணன்னு ஒருத்தன் இல்லைன்னு நினைச்சுக்குங்க”, என்றான்.

“இத்தனை வருஷம் உன்கூட பொறந்து வளர்ந்த உன் அண்ணனையே நிமிஷத்துல தூக்கிப் போட்டுட்ட, எங்க பொண்ணை எப்படி நல்லாப் பார்த்துக்குவ? நாளைக்கு அவளையும் விட்டுட்டன்னா?”, என்றாள்.

மண்டபமே, “ங்கே”, என்று கனியை பார்த்தது.

உறவுகள் எல்லோரும் அவளையே பார்ப்பதை அறிந்த ஆகாஷ் நொந்து கொண்டான்.

அவள் மேலே பேச விழையும் போது கனியின் அம்மா முன்னே வந்து, “கனி இங்க நாங்க பார்த்துக்கறோம்! நீ போய் முதல்ல குழந்தையைப் பாரு!”, என்று அவளை கிளப்ப முற்பட்டார்.   

அவள் அசையாமல், “கல்யாணம் நடக்கக் கூடாது”, என்று நிற்க……

“இவளை அழைச்சிட்டு போங்க தம்பி!”, என்றார் ஆகாஷைப் பார்த்து பரிதாபமாக.

அவள் கையை பிடித்து இழுத்துப் போனான்.

போய் காரைத் திறந்து அவளை உட்கார வைத்து, “நான் வர்ற வரைக்கும் இறங்காத!”, என்று சொல்லி மறுபடியும் கனியின் பெற்றோரிடம் வந்தவன்……..

“உங்களுக்கு மாப்பிள்ளை நல்லவர்ன்னு பட்டா கல்யாணம் பண்ணிவைங்க”,

“அவ சொல்றான்னு பார்க்க வேண்டாம், இந்த காலத்துல அண்ணன் தம்பி உறவு ஈசியா பிச்சிக்கக் கூடியது தான். மாப்பிள்ளை அண்ணன் தேவையில்லைன்னு உறுதி குடுத்தார்னா, ப்ரியாக்கும் இஷ்டம்னா பண்ணி வைங்க, நான் அவளை பார்த்துக்கறேன்”,

“நைட் அங்க எங்க மாமா வீட்லயே இருக்கட்டும், இங்க வந்தாலோ இல்லை உங்க வீட்டுக்கு வந்தாலோ கல்யாணம் வேண்டாம்னு ஆர்பாட்டம் பண்ணுவா! நாளைக்கு காலையில கூட்டிட்டு வர்றேன்!”, என்று சொல்லி சென்றான்.

அவளை மீறி திருமணம் செய்வது கனியின் பெற்றோருக்கு வருத்தம் தான். என்றாலும் இன்னொரு மகளின் உணர்வையும் மதிக்க வேண்டி இருக்கிறதே……. அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்து இருக்கிறதே.

முன்னம் ரத்னம் கனியை பெண் கேட்ட போது அக்காவிற்கு விருப்பமில்லை என்றால் தன் திருமணம் கூட வேண்டாம் என்று சொல்லியிருந்த ப்ரியா….. இப்போது இந்த மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடமாய் நின்றாள்.

மாப்பிள்ளையின் பெற்றோர்களும் காலில் விழாதக் குறையாக தங்களின் மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டவர்கள், அவர்களுக்கு வேண்டுமென்றால் அவனை போலீசில் சொல்வது என்றாலும் சொல்லுங்கள் என்றனர்.

அசோக் தான் அந்த வீட்டில் சம்மந்தம் செய்யப் போகிறோம், வேண்டாம் விட்டு விடலாம், அவனை மட்டும் ஒதுக்கி விடலாம் என்றான்.

இத்தனை களேபாரங்களும் முடிந்தப் பிறகு திருமண வேலைகளும் சடங்குகளும் திரும்ப ஆரம்பித்தன.

அண்ணாமலையின் வீட்டிற்கு கனி வந்து குழந்தையைப் பார்த்து…… அதை கையில் வாங்கிய பிறகு தான் மார்பில் வலியையே உணர்ந்தாள். மதியத்திலிருந்து தாய்பால் கொடுக்காததினால் பால் கட்டி வலியை ஏற்படுத்தி இருந்தது.

அவளின் கைகளில் வந்தவுடன் குழந்தையும் தன் தாயை உணர்ந்து அவளின் மார்பில் முகத்தை முட்டியது.

அவ்வளவு நேரமாக தெரியாத வலி அப்போது தெரிந்தது. அவளுக்கு கூடவே  காய்ச்சலும் வர ஆரம்பித்தது.

அதிகம் யாரிடமும் தன் உணர்வுகளை பகிராதவள் கனி. யாரிடம் சொல்லமுடியும் இந்த வலியை. அம்மாவிடம் சொல்லலாம், கணவனிடம் சொல்லலாம்.

கணவன் இல்லை. அம்மா இன்னொரு மகளின் வாழ்க்கை முக்கியம் என்று போய்விட்டார். யாரிடம் சொல்வது?

அப்போதும் வலியை வெளிக்காட்டாமல், கண்களில் நீர் திரையிட……… வெளிவர துடித்த அழுகையை அடக்கியபடி, “ரொம்ப அழுதானா”, என்றாள் கனி.

“அழாத! ஏற்கனவே ரொம்ப அழுதுட்ட! குழந்தை பத்திரமா கிடைச்சிட்டான் தானே!”, என்று சமாதானப்படுத்தினான் ஆகாஷ். அவனின் வார்த்தைகளை காதில் வாங்காமல் தன் குழந்தை என்ன செய்தான் என்பதிலேயே கவனமாக இருந்தாள் கனி.  

“பசிக்கு அழுதான்மா! கொஞ்சமா பசும்பால் சங்கடையில ஊத்தினேன்! அப்புறம் தூளி கட்டி ஆட்டினேன்! தூங்கிட்டான்!”, என்றார்.

“ரொம்ப சின்ன குழந்தையில்லை, என்னை தேடியிருக்க மாட்டான்”, என்றாள் கனி.

“உன்கிட்ட பால் குடிக்கற குழந்தை கண்டிப்பா உன்னை தேடுவான்மா”  என்றாள் அவளை புரிந்தவறாக தேவிகா.

 “ரொம்ப நன்றிம்மா”, என்று தேவிகாவைப் பார்த்து சொன்னவள்,

“என்னை வீட்ல விட்டுடறீங்களா”, என்றாள் ஆகாஷைப் பார்த்து.

அவன் பதில் சொல்லும் முன்பே பதில் சொன்ன தேவிகா…… “புள்ளப் பாரு பாலுக்கு தவிக்குது! முதல்ல அதைக் கவனி! அப்புறம் போகலாம்!”, என்றார்.

குழந்தை மீண்டும் மீண்டும் அவளின் மார்பை முட்ட…….. ஆகாஷ் வேறு பார்த்துக்கொண்டிருந்ததால் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

“நீ வாம்மா!”, என்றுக் கனியை அழைத்துக்கொண்டு போய் அவளுக்கு தனியாக ஒரு ரூமைக் கொடுத்த தேவிகா………. “என்ன தேவைன்னாலும் கேளும்மா! கூச்சப்படாத!”, என்றார்.

“சரி மா”, என்றவள், அவரிடம் குழந்தையை விட்டு பாத்ரூம் சென்று கட்டியிருந்த பாலை முடிந்தவரையில் வெளியேற்றினாள். வலி உயிர் போனது. குழந்தையின் முகம் எல்லாவற்றையும் தாங்கச் செய்தது.  

என்னதான் தாங்கினாலும் வலியில் அவளையும் மீறி ஒரு கேவல் வெடித்தது. அதை அடக்கி முகத்தை கழுவினாள்.

பிறகு உடம்பை சுத்தப் படுத்தி வந்து குழந்தையை வாங்கி அதன் பிறகே பால் கொடுத்தாள்.

மனதின் வலியும் உடலின் வலியுமாக சேர்ந்து அவளுக்கு மிகுந்த சோர்வை கொடுத்தது. என்ன தான் தைரியம் போல காட்டிக்கொண்டாலும் நடந்த நிகழ்வுகளில் ஓய்ந்துப் போயிருந்தாள்.

வீட்டில் இருந்தால் அவ்வளவாக தெரிந்திருக்கதோ என்னவோ? இங்கே புது இடத்தில் இருக்கவும், என்னவோ தானும் தன் குழந்தையும் தனியாகி விட்டது போன்ற ஒரு உணர்வு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

கண்ணீர் பெருகியது……

அதுவும் மண்டபத்தில் தான் திருமணத்தை நிறுத்த சொல்லியும் யாரும் அதற்கான முயற்சியை எடுத்த மாதிரி அவளுக்கு தெரியவில்லை.

“இவன் வேறு நடுவில் சென்று நாட்டாமை செய்துவிட்டு வந்திருக்கிறான். எப்படியும் திருமணத்தை நடத்தச் சொல்லியிருப்பான்”, என்பது ஆகாஷை பற்றிய கனியின் யூகம்.

ஆனால் அவன் சொன்னால் இவர்கள் கேட்டுவிடுவார்களா? 

“என் குழந்தையை தூக்கிச் சென்றிருக்கிறான், அவர்களின் வீட்டில் ஒருவன்…….. ஒன்றும் ஆகவில்லை என்பது வேறு! ஏதாவது ஆகியிருந்தால்?”, நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை அவளால்.

“என்னை விட என் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சம்பந்தம் முக்கியமாக போய்விட்டது. என் உணர்வுகளுக்கு அவர்கள் என்றுமே மதிப்புக் கொடுப்பது இல்லை!”, என்பது போலவே நினைக்க ஆரம்பித்தாள்.

“எத்தனை தடவை எனக்கு நடந்த கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேன். வர்ற மாப்பிள்ளையை எல்லாம் தட்டி விடுற, இந்த மாப்பிள்ளை நல்ல வசதி! வேண்டாம்னு சொல்லாதன்னு அதையும் இதையும் சொல்லி வற்புறுத்தி கல்யாணம் செஞ்சி வெச்சாங்க”,

“இப்போ என்ன ஆச்சு? நானும் இவனும் தனியா நிக்கறோம்! இவங்க சொன்ன அந்த வசதி வாய்ப்பே எங்க வாழ்க்கைக்கு எமனா போயிடுச்சு”, 

கணவன் இறந்த போது கூட உணராத தனிமையை இப்போது உணர்ந்தாள்.     

நினைவுகளின் தாக்கம் உடலையும் பாதிக்க…… காய்ச்சலும் அதிகமாக ஆரம்பித்தது.

நிறைய நேரமாகியும் அவள் வெளியே வராததால் ஆகாஷ், “என்ன அக்கா பண்றா இவ? இன்னும் காணோம்!”, என்றான்.

“புள்ளைக்கு பால் குடுக்குது ஆகாஷ்!”, என்றவர், உள்ளே சென்று பார்த்தார். பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே பிள்ளை உறங்கியிருக்க, அவளும் படுத்து உறங்கியிருந்தாள்.

“தூங்குது தம்பி”, என்று அவர் வெளியே வந்து சொல்லவும்……

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க அக்கா”, என்றான், அண்ணாமலையும் தேவிகாவும் அவர்களுக்காக சாப்பிடாமல் காத்திருப்பதை உணர்ந்து.

“இல்லை ஆகாஷ், அவ எழுந்துக்கட்டும்!”,

“அவ எப்போ எழறாளோ? மதியம் இருந்து ரொம்ப அழுதுட்டே இருந்தா! அவ கண்ணெல்லாம் வலியே எடுத்திருக்கும். நீங்க சாப்பிட்டிட்டு படுங்க! நான் அவ முழிச்சதுக்கு அப்புறம் சாப்பிடுக்கறேன்!”, என்றான்.

 தேவிகாவும் ஒரு பேஷன்ட் என்பதால் அவரும் அண்ணாமலையும் உணவு உண்டு ஆகாஷிற்கும் கனிக்கும் தேவையானதை எடுத்து வைத்து உறங்க சென்றவர்.

“எதுனாலும் உடனே எழுப்பு ஆகாஷ்! யோசிக்காத!”, என்றார். 

“சரி அக்கா!”, என்றான்.

அவன் டீவீ போட்டுக்கொண்டு அமர்ந்து விட்டான். அவர்கள் உறங்க சென்றுவிட்டார்கள். மணி பத்திலிருந்து…….. பதினொன்றாகி….. பண்ணிரண்டாகி… ஒன்றாகி…… ரெண்டானது…..

நடுவில் செந்தில் வேறு வந்தான். இவர்களின் நலனைக் கேட்டு காலையில் வருவதாக சொல்லி சென்றுவிட்டான். 

அவள் எழும் வழியாக காணோம்.

அரைமணிக்கொரு தடவை உள்ளே சென்று அவளையும் குழந்தையும் பார்த்து விட்டு தான் வந்தான்.

குழந்தை முழித்துக்கொண்டு சிணுங்க ஆரம்பித்தது. அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்தான் ஆகாஷ்.

குழந்தையின் சிணுங்கல் அழுகையாக மாறத்ததுவங்கவும் அதன் சத்தத்தில் கனி அசைய ஆரம்பித்தாள்.

ஆகாஷிற்கு நந்தனையும் அக்ஷராவையும் பார்த்துக்கொண்ட பழக்கம் இருந்ததால் குழந்தையை லாவகமாக கையில் தூக்கி தட்டிக் கொடுத்தான்.

கையில் தூக்கவும் அந்த இதத்திற்கு குழந்தையின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அதற்குள் கண்களை திறந்திருந்தாள் கனி, கண்கள் நன்கு சிவந்து, முகமெல்லாம் வீங்கி இருந்தது. காய்ச்சலும் அழுகையும் சேர்ந்து இந்த எஃபக்டை கொடுத்திருந்தது.

அவளின் நிலைப் பார்த்து பயந்து, “என்ன கனி பண்ணுது”, என்றான்.

ஆகாஷ் மட்டுமே குழந்தையுடன் இருக்கவும் எழ முற்பட்டாள், சோர்வு அதிகமாக இருக்க மிகவும் சிரமப்பட்டே எழுந்தாள்.

“மணி என்ன?”,  

“ரெண்டு மணி………”,

“ஐயோ! நான் வீட்டுக்கு போகணுமே!”,

“பிரச்சனையில்லை! நான் உங்க வீட்ல சொல்லிட்டேன்!”, என்று அவளின் நெற்றியை தொட்டுப் பார்க்க அதிர்ந்தான்.

அனலாய் கொதித்தது……

“நீங்க சொன்னீங்கன்னு அவங்க என்னை இங்கயே விட்டுடாங்களா! என்னைத் தேடி யாரும் வரலையா?”,

ஆகாஷ் அவளின் கேள்விக்கு பதிலை தவிர்த்து, “கனி! உனக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு”, என்றான்.

“ம்”, என்று அவள் சொல்லும்போதே சோர்வில் கண் மூடியது.

குழந்தை இப்போது பசியில் அழ ஆரம்பித்தது.

“இவ்வளவு காய்ச்சலா இருக்கு, ஃபீட் பண்ணலாமா”, என்றான்.

“தெரியலை!”, என்றாள் கவலையாக…… நேற்று அரை நாள் பால் கொடுக்காமல் அனுபவித்த வலியே இன்னும் இறங்கவில்லை.

அவனுக்கு அப்போது தேவிகாவை எழுப்ப வேண்டும் என்பது போல தோன்றவில்லை. நேரம் பார்க்காது அவனின் அக்கா அனிதாவிற்கு அழைத்தான்.

இந்த நேரத்தில் அவனின் ஃபோன் என்றதும் பதட்டமாக அனிதா எடுத்து……

“என்னடா”, என்றாள் பயத்தோடு.

“கனிக்கு ரொம்பக் காய்ச்சல்! குழந்தைக்கு அப்படியே ஃபீட் பண்ணலாமா?”, என்றான்.

“பண்ணலாம் தப்பில்லை! ஆமா நீ எங்க அவளோட இருக்க!”,

“நாங்க இப்போ தேவிகா அக்கா வீட்ல இருக்கோம்”,

என்ன ஏதென்று துருவவில்லை அனிதா…….. “அவளுக்கு ஆர்டினரி பாரசிடமால் மட்டும் குடு! ஃபீட் பண்றா, ஏதாவது மாத்திரையை குடுத்துடாத! காலையில டாக்டர்கிட்ட காமிச்சிடு!”, என்றாள்.

“ம்! சரி!”, என்று போனை வைத்தவன்……

“முதல்ல குழந்தைக்கு பால் குடு! நான் தேவிகா அக்கா கிட்ட மாத்திரை இருக்கான்னு கேக்கறேன்!”, என்றான்.

அவள் பால் கொடுக்க…….. அவன் தேவிக்காவை எழுப்பி மாத்திரை கேட்டான். அதன் பின்பு அங்கு அனைவருக்குமே தூங்கா இரவாகிப்போனது.  

உடல் அனலாய் காய்ச்சலில் கொதித்தாலும் அதன் பிறகு கனி உறங்கவேயில்லை.

“நீ தூங்கும்மா! குழந்தையும் தூங்கறான்! அவன் முழிச்சா நான் உன்னை எழுப்பி விடறேன்!”, என்றார் தேவிகா.

“இல்லைம்மா, தூக்கம் வரலை”, என்றாள்.

அவள் அவ்வளவு காய்ச்சலோடு இருக்கும் போது அவருக்கும் போய் உறங்க மனம் வரவில்லை.

ஆகாஷும் உறங்கவில்லை. அவர்கள் இருவரும் சாப்பிடவுமில்லை என்றுணர்ந்த தேவிகா டீ போட்டு எடுத்து வந்தார்.

மறுக்காமல் இருவரும் வாங்கி குடித்தனர். டீ குடித்ததும் சற்று தெம்பாக உணர்ந்தாள் கனி.

மீண்டும் ஆகாஷிடம் கேட்டாள், “என்னைத் தேடி எங்க வீட்ல இருந்து யாருமே வரலையா?”,

“கல்யாண வேலைல இருப்பாங்க. அதுவுமில்லாம நான் பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கேன், அதனால வராம இருந்திருப்பாங்க. செந்தில் இங்கே வந்தப்போவே மணி பன்னிரெண்டு……”,

“மாப்பிள்ளை வந்ததுக்கு பிறகு தானே சமையல் வேலையே ஆரம்பிச்சாங்க. அதனால பந்தி போடறதுக்கே ரொம்ப நேரமாகிடுச்சு போல. அவன் இங்க வந்தப்போ தான் அது முடிஞ்சுதுன்னு சொன்னான்”.

“செந்தில் அண்ணா உங்களுக்காகவும் அசோக் அண்ணாவுக்காகவும் வந்திருப்பாங்க, எனக்காக வந்திருக்க மாட்டாங்க, அவங்க கூட எங்க அண்ணா வந்தானா”, என்றாள்.

யாரும் வராதது அவளின் மனதை பாதித்து இருப்பது புரிந்தது.

“யாருக்குமே நான் தேவையில்லாம போயிட்டேன் இல்லை”, என்று மெதுவாக முணுமுணுத்தாள்.

“ப்ச்! அப்படி ஏன் நினைக்கிற? கல்யாண வேலை இருக்கும்”,

“என்ன பெரிய கல்யாண வேலை! இந்த மாப்பிள்ளை ப்ரியாக்கு பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணி வெக்கனும்னு சொல்றவங்க, எனக்கு என் கணவரை கல்யாணதப்போ பிடிக்கலைன்னு சொன்னேன். என் பேச்சுக்கு யார் மதிப்பு குடுத்தா?”,

“படிச்சிருக்கன்ற திமிர்ல எந்த மாப்பிள்ளையையும் நான் பிடிக்கலேன்னு சொல்றேன், அழகா இருந்தா அழகான மாப்பிள்ளை கிடைக்கும்னு யார் சொன்னா? அப்படி, இப்படி எத்தனை விதமா கன்வின்ஸ் பண்ணினாங்க. இப்போ யார் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறது! நான் தானே!”,

“பொண்ணோட உணர்வுக்கு மதிப்பு குடுக்கனும்ற எண்ணம் அப்போ எங்கப் போச்சு”,

“ஒரு பத்து நிமிஷம் என் காணாம போன குழந்தையை வந்து அவங்களால பார்க்க முடியலை இல்லை…..”,

“நான் தான் உன்னைப் பார்த்துக்கறேன் காலைல கூட்டிட்டு வர்றேன்னு சொன்னேன்”,

“நீங்க ஆயிரம் சொல்வீங்க அவங்களுக்கு எங்கப் போச்சு புத்தி”,  

“நான் ஒரு கிறுக்கச்சி……… பெரிய வீர வசனம் பேசினேன்! நான் என்ன அனாதையா? எனக்கு அப்பா இல்லையா? அம்மா இல்லையா? கூடப்பொறந்தவங்க இல்லையான்னு? எங்க வீட்டுக்கு பஞ்சாயத்து பேச வந்த ஆளுங்ககிட்ட பேசினேன்”,

“ஆனா யாருமே இல்லைன்னு நிரூபிச்சிட்டாங்க! ஒரு வேலை நீ வரலைன்னா என் குழந்தை தொலைஞ்சு தானே போயிருப்பான்”, என்றாள்.

கண்ணீரெல்லாம் நின்றிருந்தது. இப்போது அழுகை எல்லாம் வரவில்லை. பேச்சில் ஆவேசமும் இல்லை. ஒரு மாதிரி விரக்தியில் இருந்தாள்.

“யாரு நீ எனக்கு? சொல்லு யாரு நீ எனக்கு? எனக்கு நீ ஸ்பெஷல் தான்! இல்லைன்னு சொல்லலை! ஆனா அது அவங்களுக்கு எப்படி தெரியும், எங்கம்மா உங்களைப் பார்த்து அவளைக் கூட்டிட்டு போங்க தம்பின்னு சொல்றாங்க! ஏன், அவங்க இன்னொரு பொண்ணு கல்யாணத்தை நான் கெடுத்துடக் கூடாதுன்னு”, என்றாள்.

அவள் எதிரில் இருக்கும் தேவிகாவிடமோ ஆகாஷிடமோ பேசுவது போல இல்லை அவளுக்கு அவளே பேசுவது போல இருந்தது.

மணியும் அதிகாலை நான்கு தான் என்றது. அவளின் மனதின் சங்கடங்கள் புலம்பலாக மாறி…… உளறலாக வடிவெடுத்துக்கொண்டிருந்தது.

“ஆமா, எப்படி நீ எனக்கு ஒவ்வொரு முறை ஆபத்துன்னோ ஒரு தேவைன்னோ வரும்போது கரக்டா வர்ற………. ஒருவேலை நீதான் இதெல்லாம் செய்யறியா?”, என்றாள் உளறலிலும் உச்சமாக….

“இவ இப்படியே விட்டா தேற மாட்டா!”, என்றுணர்ந்தவன்……

“எழுந்திரு நீ”, என்று அவளருகில் சென்று அதட்டினான்.

புரியாமல் மலங்க மலங்க விழித்தவளிடம்……… “போ! போய் தூங்கு! குழந்தை எழுந்தா நான் உன்னை எழுப்பறேன். அக்கா கூட இருக்காங்க!”, என்றான்.

“இல்லை! எனக்கு தூக்கம் வரலை!”,

“நீ போய்ப் படு! அது தானா வரும்!”, என்று அதட்டி அவளை எழுப்பினான்.  

அவனின் அதட்டல் வேலை செய்தது.

அவனின் சொல் கேட்டு போய் படுத்துக்கொண்டாள்.

“அதையும் இதையும் போட்டு குழப்பாம தூங்கு”,

“யாரும் என் குழந்தையைப் பார்க்க வரலை”,

“நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்! அதான் வந்திருக்க மாட்டாங்க!”,

“நீ யாரு எனக்கு? நீ சொன்னா அவங்க வரமாட்டாங்களா?”,

“சும்மா நீ யாரு? நீ யாருன்னு கேட்ட? அடி தான் விழும்!”, என்றான் குழந்தையை மிரட்டுவது போல……

“குழந்தை அழுவான்”,

“நான் இருக்கேன் உனக்கு! நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்! தூங்கு!”, என்றான் இதமாக…..

அது சற்று வேலை செய்ய உறக்கம் அவளைத் தழுவியது.   

எப்படி? எப்படி இவளை சாமாளிக்கப் போகிறோம்! என்ன முடிவெடுப்பாள்? மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்பாளா?

Advertisement