Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

கனி கால்கள் வேரோட அரை மயக்க நிலையில் இருக்க…….. யாரும் கேட்கும் கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

என்னக் கேட்கிறார்கள் என்றுக் கூட புரியவில்லை மலங்க மலங்க விழித்தாள். அவளின் நினைவு முழுக்க அவளின் மகனே இருந்தான்.

மாப்பிள்ளையைக் காணோம் என்ற சலசலப்பு வேறு….. எதற்கு கவலைப்படுவது என்றே கனியின் பெற்றோர்களுக்கு தெரியவில்லை, குழந்தை தொலைந்துப் போன கவலை ஒரு புறம்….. மாப்பிள்ளை இல்லாமல் திருமணம் எப்படி நடக்கும் என்பது ஒரு புறம்……

திருமண வேலைகளில் மும்முரமாக இருந்த செந்திலும் அசோக்கும் செய்தி கேள்விப்பட்டு அரக்கப் பறக்க வந்தனர். செந்தில் உடனே அண்ணாமலைக்கு செய்தி தெரிவித்தான்.

தெரிவித்து உடனே ஆகாஷிற்கு அழைத்தான். அவனுடைய தொலைபேசி உபயோகத்தில் இருந்தது.

“காலையிலயே கிளம்பறேன்னு சொன்னான், இங்க வந்திருப்பான்னு பார்த்தா, எங்க இருக்கான் தெரியலையே!”,

செந்தில் அவனை அழைக்கும் போது வெண்ணந்தூரை நெருங்கி இருந்தான் ஆகாஷ். 

அசோக் அவனை திருமணத்திற்கு அவனின் அம்மாவும் அப்பாவும் சொல்லியிருந்தததால் நேரிலேயே சென்று அழைத்திருந்தான்.

அதனால் ஆகாஷும் திருமணத்திற்கு வந்துக் கொண்டிருந்தான். அதுவும் ஆஸ்திரேலியன் ரிடர்னாக இல்லாமல் பக்கா சென்னை ஆளாக வந்துக் கொண்டிருந்தான்.

“எப்படி”, என்றால் அவனின் வண்டியை பின்தொடர்ந்து இன்னும் இரண்டு வண்டிகள். அவனின் வண்டியிலேயே அவனின் கன்செர்னில் வேலை பார்க்கும் நம்பிக்கையான, அவனுக்காக எதையும் செய்யத் துணியும் இளவயது பையன்கள் ஐந்து பேர் இருந்தனர்.

பின் வரும் இரண்டு வண்டிகளிலும் அடியாட்கள் அதுவும் பெரிய பெரிய உருவத்துடன் நீண்ட தலைமுடியுடன் பார்க்கக்கவே பயங்கரமாக இருந்தார்கள்.

அண்ணாமலை மூலமாகவும் செந்தில் மூலமாகவும் தெரிய வந்திருந்த குமரேசனின் செய்கைகள்  அவனுக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தன. அவன் எதற்கும் துணிவான் என்றே தோன்றியது.

எதற்கும் இருக்கட்டும் என்று சென்னையில் இருந்து ஆட்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். 

அவன் வரவுமே அவனுக்கு தகவல் வந்துவிட்டது. கனிமொழியின் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அவனை அழைத்தனர்.

“சார்! இங்க மண்டபத்துக்கு வெளில ஒரு குழந்தையை தூக்கிட்டு ஒரு அம்மா அவசரமாப் போறாங்க! பார்க்க சந்தேகமா இருக்கு! அது நம்ம மேடத்தோட குழந்தையான்னு எங்களுக்கு ஒரு சந்தேகம்”, என்றனர்.

“நீங்க எதுக்கும் அந்த அம்மா பின்னாடி போங்க! நான் குழந்தை இருக்கா இல்லையான்னு பார்த்துச் சொல்றேன்”, என்று கனிக்கு அழைத்தான்.

அவள் செல்லை வீட்டிலேயே விட்டு விட்டு வந்திருந்தாள். அவளை இரண்டு மூன்று முறை அழைத்து சலித்தவன், பிறகு செந்திலை அழைத்தான். அவன் இங்கே இருந்து அழைக்க செந்தில் அங்கே இருந்து அழைத்துக்கொண்டிருந்தான். அதனால் எங்கேஜ்டாக இருந்தது.

ஒரு வழியாக லைன் கிடைக்கவும் செந்தில் சொன்ன முதல் வார்த்தை, “குழந்தையை காணவில்லை”, என்று.

அப்படியே லைனை கட் செய்து பாதுகாப்பிற்கு இருந்த ஆட்களை அழைத்து, “நம்ம குழந்தை தான்……. அந்த பொம்பளை யாருக்கும் தெரியாம குழந்தையை தூக்கிட்டு போறா! குழந்தை பத்திரம்! எப்படியாவது குழந்தையை அவகிட்ட இருந்து சேஃபா வாங்குங்க”,

“குழந்தையை உங்க கைக்கு கொண்டு வந்துட்டு அதுக்கு அப்புறமா அந்த பொம்பளையையும் கூட்டிக்கிட்டு எங்க மாமனார் வீட்டுக்கு வந்துடுங்க!”, என்றான்.

அதன் பிறகு செந்திலை அழைத்தான்.

“குழந்தையை காணோம்ங்கிறேன் நீ போனை வெச்சிட்ட”, என்று செந்தில் சலிக்க…..

“கட்டாயிடிச்சு! எவ்வளவு ஜாக்கிரத்தை சொன்னேன் கனியைப் பார்த்துக்கோன்னு. எப்படிடா இவ்வளவு அசால்டா விட்ட!”, என்று அவனிடம் ஏறினான் ஆகாஷ்.

“அவளை மண்டபத்துல விட்டுட்டு, இத்தனை பேர் இருக்காங்க பார்த்துக்குவாங்கன்னு இப்போ தான் ஒரு வேலையா நானும் அசோக்கும் கிளம்பினோம்! ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும் அதுக்குள்ள இப்படி! நீ எங்க இருக்க?”, 

“பக்கத்துல வந்துட்டோம்! கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவேன்…….”,

“மாப்பிள்ளையை வேறக் காணோம்”, என்றான் செந்தில்.

“என்ன மாப்பிள்ளையைக் காணோமா”,

“ம், குழந்தையையும் மாப்பிள்ளையும் சேர்ந்து கடத்தியிருக்காங்களா, இல்லை மாப்பிள்ளை பையன் குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டானா, ஒண்ணுமே தெரியலை, தலை சுத்துது, பயமாயிருக்கு குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு”, என்றான் கவலையாக.

கனியின் பாதுகாப்பிற்கு இருந்த ஆட்கள் குழந்தையின் பின் சென்றதால் அவர்களுக்கும் மாப்பிள்ளையைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

ஆகாஷிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நிமிடம் குழந்தையைப் கைப்பற்றி இருந்தனர் அந்த பெண்ணையும் பிடித்து இருந்தனர்.

 தேவிகாவிற்கு அழைத்தவன், அங்கே இவர்கள் வருவார்கள் குழந்தையை ஒரு அரை நாள் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினான்.

தேவிகாவிடம் குழந்தையை ஒப்படைக்கும் வரை காத்திருந்தவன், அதன் பிறகு அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரிக்க சொன்னான்.

இந்த வேலைகள் எல்லாம் நடந்துக் கொண்டிருக்கும் போதே அவன் மண்டபத்தை அடைந்திருந்தான். 

அங்கே கனியை சுற்றி அவளின் அம்மா தங்கைகள் என்று அமர்ந்திருக்க அவள் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தாள்.

வெளியில் தெருவில் இறங்கி குழந்தையை தேடி ஓடப்போனவளை இழுத்துப் பிடித்து அமர்த்தி வைத்திருந்தனர். வேறு சில ஆட்கள் தேடப் போயிருந்தனர். அசோக்கும் போயிருந்தான்.   

செந்திலும் அண்ணாமலையும் அங்கிருந்தவர்கள், “போலீஸ்க்குப் போயிடலாமா”, என்றனர்.

“போகலாம்! போகலாம்!”, என்றவன்……… “அந்த மாப்பிள்ளைப் பையன் போட்டோ இருந்தாக் குடுங்க!”, என்றான்.

அபோதுதான் ஆகாஷை பார்த்தாள் கனி. அவனைப் பார்த்ததும் யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் கனி பார்க்கவேயில்லை……. அவனருகில் வேகமாக ஓடி வந்தவள், “என் குழந்தையைக் காணோம்”, என்றாள் தேம்பிக்கொண்டே.

அவளின் அழுகை மனதைப் பிசைந்தது என்றாலும் ஆகாஷ் முகத்தில் இளக்கம் காட்டவில்லை.

“எங்க தொலைச்ச? எப்படி காணாமப் போனான்? அவனைப் பார்த்துக்கறது விட்டா உனக்கென்ன வேலை? பெருசா எல்லாம் தெரியும்ன்ற மாதிரிப் பேசற! எல்லாம் நான் பார்த்துக்குவேன் நீ கிளம்பு என்னை சொன்ன! போன் பண்ணினா வைடா போனைன்ற…….. இப்போ வந்துக் காணோம்னா?”, என்றான் கடுப்பாக.

ஒரு கல்யாண மண்டபம் அத்தனை பேர் சூழ்ந்திருக்கிறார்கள் தங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அவளின் மூளைக்கு எட்டவேயில்லை.

ஆகாஷின் கைகளை பற்றிக்கொண்டாள், “நீ என்னை எவ்வளவு வேணா திட்டு! அடிக்க கூட செஞ்சிக்கோ! என் குழந்தையை கண்டுபிடிச்சுக் குடு!”, என்றாள் அழுகையோடே.

எல்லோரும் பார்க்கிறார்கள் என்றுணர்ந்த ஆகாஷ் அவளின் பிடியில் இருந்து மெதுவாக கையை விடுவித்தவன், கனியின் அம்மாவை கண்களால் அழைக்க, அவர் வந்து கனியை அழைத்து சென்று அமரவைத்தார், “கண்டுபிடிச்சிடலாம்”, என்று சமாதானப்படுத்தினார்.

அதற்குள் யாரிவன் என்ற சலசலப்புகள் எழ, கனியின் அம்மா யோசிக்கவே இல்லை. “நாங்க கனிக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை! ப்ரியா கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம்னு இருந்தோம்! இவளை இப்படியே விட முடியாது இல்லையா! இவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணுமே”, என்று பக்கத்தில் இருந்த உறவு பெண்மணியிடம் சொல்ல…….

மற்றவர்களிடம் பரப்பும் வேலையை அவர் செவ்வனே செய்தார் .

அதற்குள் மாப்பிள்ளையின் போட்டோ வர, ஆகாஷின் கண்ணசைவில் வெளியே இருந்த ஆட்கள் உள்ளே வந்தனர்.

அவர்களின் தோற்றங்களை பார்த்தவர்கள் பார்த்தபடி நின்றனர். “நைட்க்குள்ள இவன் மண்டபத்துக்கு வரணும்”, என்று போட்டோவை கொடுத்தான்.

“யார் மேல தல சந்தேகம்! அங்க இருந்து ஆரம்பிக்கிறோம்!”, என்றான் அதில் இருந்த ஒருவன்.

“குமரேசன்! அவன் பேர் மட்டும் தான் தெரியும்! அவன் ஊர் தெரியும்! ஆளு எப்படி இருப்பானு எங்க யாருக்கும் தெரியாது!”, என்றான் ஆகாஷ்.

“அவனை தெரிஞ்சவன் யாருன்னு சொல்லுங்க தல, மத்ததை நாங்க பார்த்துக்கறோம்!”, என்றனர்.

அப்போதுதான் குழந்தையை தேடிச்சென்ற அசோக் கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் வந்தான். அவனைப் பார்த்ததும் ஆகாஷ், “அன்னைக்குப் பஞ்சாயத்து பண்ண வந்த பரதேசிங்கள்ள ஒரு ரெண்டு மூணு பேரை இவங்களுக்கு காட்டு அசோக்! மத்ததை இவங்க பார்த்துக்குவாங்க!”, என்று அசோக்கை அவர்களுடன் அனுப்பி வைத்தான்.

“குழந்தை”, என்று மறுபடியும் வந்து நின்றாள் கனிமொழி.

“தேடச் சொல்லியிருக்கேன்! கிடைச்சிடுவான்”, என்றான் ஆகாஷ்.

“நாம போகறதுக்குள்ள அவனை ஏதாவது பண்ணிட்டா! என்னையே கொல்ல வந்தாங்க தானே!”, என்றாள் கனி பயத்துடன்.

“இந்த அறிவெல்லாம் இப்போ வந்து என்னப் பண்ண? எல்லாம் நான் பார்த்துக்குவேன்னல்ல! போ! போய் ரோடு ரோடா சுத்து! தேடு!”, என்று எரிந்து விழுந்தான்.

இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள் கனி.

அதற்குள் அவளின் தங்கை வந்து, “வா அக்கா! கண்டுபிடிச்சிடுவாங்க!”, என்று சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போனாள்.

அவனின் குழந்தையை பற்றி அதிகம் கண்டுகொள்ளாத தோரணையை பார்த்த செந்திலும் அண்ணாமலையும் அவனருகில் வந்து, “குழந்தை”, என்று மெதுவாக கேட்டனர்.

“பத்திரமா இருக்கு! பிடிச்சிட்டோம்! கனிக்கு இப்போ தெரிய வேண்டாம்! அவளை சுத்தியிருக்கிற ஆபத்து அவளுக்கு தெரியலை! கொஞ்ச நேரம் கஷ்டப்படட்டும்! அவளுக்கு சொல்ல வேண்டாம்!”, என்றான் தயவு தாட்சண்யமின்றி…

“யாரு பண்ணா”,

“தெரியலை! இப்போதான் விசாரிச்சிட்டு இருக்காங்க! தேவிகா அக்காகிட்ட தான் குழந்தை இருக்கு”, என்றவன் அண்ணாமலையைப் பார்த்து……

“நீங்க வீட்டுக்குப் போயிட்டு, என்ன ஏதுன்னு பார்த்துட்டு சொல்லுங்க!”, என்று அவரை அனுப்பினான்.

திரும்ப திரும்ப ஆகாஷிடமே வருகிறோம் என்ற உணர்வு சற்றுமின்றி…….. “கண்டுபிடிச்சிடுவீங்கள்ள”, என்று வந்து நின்றாள் கனிமொழி.

இவ்வளவு நேரமாக நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் அண்ணன் ரத்னம், இப்போது கனியின் அருகில் வந்து…… “நமக்கு தெரிஞ்சவங்க நிறையப் பேர் இருக்காங்க! நான் அவங்க கிட்ட தேட சொல்லியிருக்கேன்! இன்னும் அரை மணி நேரத்துல குழந்தை உங்க கையில இருப்பான் பாருங்க”, என்று வந்து நின்றான்.

கனி அனிச்சை செயலாக ஆகாஷின் பின் ஒண்டினாள்.

அவன் கனியைப் பார்த்த பார்வையே ஆகாஷிற்கு பிடிக்கவில்லை…..

“யாரு நீ?”, என்றான் ஆகாஷ் எடுத்த எடுப்பிலேயே……..

“நான் மாப்பிள்ளையோட அண்ணன்!”, என்றான் ரத்னம்.

“எங்கக் குழந்தையை நாங்க தேடிக்குவோம்! நீ ஒண்ணும் புடுங்க வேண்டாம்! போ! போய் உன் தம்பியை தேடுற வழியை பாரு!”, என்றான் கடுமையாக.

ஏற்கனவே அவன் கனியை திருமணம் செய்ய முயன்று கொண்டிருந்தான் என்று தெரியும். அதனால் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தான்.

ரத்னம் ஒன்றும் செய்ய இயலாதவனாக திரும்பினான்.

குழந்தையைக் கடத்தும் திட்டமே ரத்தினத்தினதுதான். குழந்தையை கடத்துவது மாதிரி கடத்தி சிறிது நேரத்தில் கண்டுபிடிப்பது மாதிரி கண்டுபிடித்து கனியின் மனதில் இடம் பிடிக்க நினைத்திருந்தான் அந்த முட்டாள்.

அவன் வைத்த பெண்மணி தான் குழந்தையை தூக்கிக்கொண்டு போனது.

ஆனால் இன்னும் குழந்தையையும் அந்த பெண்மணியையும் கண்டுப்பிடித்து விட்ட விவரம் அவனுக்குத் தெரியாது. அதுவுமில்லாமல் இப்போது அவனின் தம்பி வேறு காணாமல் போயிருக்கவும் அதுவும் வேறு அவனை குழப்பியது.

அவன் தெரிந்தோ தெரியாமலோ கனிக்கு நன்மை தான் செய்திருக்கிறான். இவனின் திட்டம் குழந்தையை கடத்தி மீண்டும் கண்டுபிடிப்பது போல செய்வது தான். குழந்தைக்கு சிறு தீங்கும் விளைவிக்க நினைக்கவில்லை.

ஆனால் குழந்தையை அதே நேரத்தில் கடத்த குமரேசன் வேறு ஆட்களை அனுப்பி இருந்தான். அவர்கள் வரும் நேரம் குழந்தை ஏற்கனவே காணாமல் போய் இருக்க மண்டபத்தின் வெளியே நின்று போன் பேசிக்கொண்டு இருந்த மாப்பிள்ளையை தூக்கிச் சென்றனர்.

குமரேசனின் நோக்கம் சொத்தை எழுதி கனி கொடுப்பாளா என்று கேட்க வேண்டியது இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவது என்பதே.

ரத்னம் தீட்டிய திட்டத்தால் குமரேசனின் திட்டம் மாறி விட்டது.

இப்போது மாப்பிள்ளையை கடத்தி வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பதே அவனின் எண்ணமாக இருந்தது.

ஆகாஷ் திட்டினாலும் ரத்னம் தைரியமாக இருந்தான். “எப்படியும் சற்று நேரம் கழித்து நான் தானே குழந்தையை தேடிக்கொடுக்கப் போகிறேன்”, என்று. முன்பே கனியின் அருகில் வர துடித்தான். அவனின் தம்பி காணாமல் போனது ஒரு புறம், ஆகாஷின் அருகில் இருந்த அடியாட்கள் ஒரு புறம் என்று தயங்க வைத்தது.

முயன்று கனியின் அருகில் வந்தால் ஆகாஷ் அவனை துரத்தி விட்டான்.

ஒரு ஓரமாக போய் அமர்ந்து கொண்டான். தம்பியை தேடும் எண்ணம் இல்லையென்பதை விட தேடும் வழி அவனுக்குத் தெரியாது. போலீசிற்கு போகலாம் என்றால் அவன் மாட்டிக்கொண்டால், அதனால் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அவன் உறவு வகையில் இருந்த ஆண்கள் எல்லோரும் மாப்பிள்ளையை தேடி ஆளுக்கு ஒரு பக்கம் போயிருக்க… வீட்டு பெண்களுடன் இவன் மட்டும் மண்டபத்தில் இருந்தான்.

கனியின் தங்கையான கல்யாணப் பெண்ணையும் பார்வையிட்டான் ஆகாஷ். அவள் அழுகையை அடக்கிக்கொண்டு அமர்ந்திருப்பது புரிந்தது.    

திடீரென்று ஞாபகம் வந்தவனாக, “உன் போன் எங்க?”, என்றான் கனியிடம் ஆகாஷ்.

“வீட்ல”,

“யாராவது உன்னை தொடர்பு கொள்ளனும்னு நினைச்சா போன் தான் பண்ணுவாங்க! முதல்ல உன் போனை யாரையாவது கொண்டு வரச் சொல்லு!”, என்று அவன் சொல்லும்போதே கனியின் அப்பா அதை எடுக்கக் கிளம்பி சென்றார்.

அவர் அந்த புறம் செல்லவும், அண்ணாமலை ஆகாஷை அழைத்தவர், “குழந்தையை கடத்த சொன்னவன் ரத்னம்! மாப்பிள்ளையோட அண்ணன்! ஒரு ஒரு மணிநேரம் குழந்தையை வெச்சிருந்துட்டு கூப்பிட சொல்லியிருக்கான்! அவன் வந்து கண்டு பிடிக்கிற மாதிரி கண்டுபிடிச்சு கொடுக்க!”, என்றார்.

“இந்த விஷயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்! அவன் எந்த அளவுக்கு போறான்னு பார்க்கிறேன்!”, என்று போனை வைத்தான் ஆகாஷ்.

அவனின் பேச்சும் பார்வையும் சென்ற திசையை பார்த்த செந்தில், “அவனா”, என்று ரத்னத்தை பார்த்து ஆவேசப்பட்டு அடிக்கக் கிளம்ப…..

“விடுடா! எங்கப் போயிடுவான்! பார்த்துக்கலாம் விடு! அவன் எதுவரைக்கும் போறான்னு நான் பார்க்கணும்!”, என்று செந்திலை அடக்கி உட்கார வைத்தான் ஆகாஷ்.

பிறகு கல்யாணப்பெண்ணை தனியாக அழைத்துப் போன ஆகாஷ், அவளிடம் உண்மையைக் கூறினான். “குழந்தையை கடத்த சொன்னவன் அந்த ரத்னம். உன் மாப்பிள்ளையோட அண்ணன். என்ன மாப்பிள்ளையைத் தேடலாமா? இல்லை அப்படியே விட்டுடலாமா?”, என்றான்.

அதிர்ச்சியான ப்ரியா அவனை பரிதாபமாக பார்க்க……….

“உனக்கு அவனைப் பிடிச்சிருந்தா அவனையே கல்யாணம் பண்ணி வெக்கிறேன்! இல்லை இப்படி இருக்கிற அண்ணனோட தம்பி எனக்கு வேண்டாம்னு நீ நினைச்சன்னா அவனை தேடுறதையே விட்டுடலாம்!”,

“எனக்கு அவரைத் தெரியும்! அவர் இந்த மாதிரி கீழ்த்தரமான காரியம் எல்லாம் செய்ய மாட்டார்!”,

“உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா! இந்த கல்யாணம் நடக்கனுமா? வேண்டாமா? அதை மட்டும் சொல்லு”,

“கனிக்கு அவ குழந்தையை அவரோட அண்ணா தான் கடத்தினாங்கன்னு தெரிஞ்சா இந்த கல்யாணம் நடக்க விடவே மாட்டா! முதல்ல இருந்தே அவளுக்கு அவரோட அண்ணனால இந்த சம்பந்தம் பிடிக்கலை! அவ விடமாட்டா!”, என்றாள் கண்ணீரோடு ப்ரியா.

“உனக்கு அவரைப் பிடிக்குமா இல்லை”,

“பிடிக்கும்! அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்! ஆனா இப்படி ஆகிடுச்சே! இனிமே எப்படி கல்யாணம் நடக்கும்”, என்றாள் தழுதழுத்த குரலில். 

“நான் பார்த்துக்கறேன்! இந்த கல்யாணம் நடக்கும்! தைரியமா இரு! வா!”, என்றான். 

அதற்குள் கனியின் மொபைல் வந்திருந்தது. அதை எடுத்து பார்த்தால் சுமார் எட்டு மிஸ்டு கால்கள்…… மூன்று முன்பு ஆகாஷ் அழைத்தது……. ஐந்து ஒரே நம்பரில் இருந்து. யார் நம்பர் என்று கேட்டால் கனிக்கு தெரியவில்லை.

எல்லோரும் தங்களையே பார்த்துகொண்டிருப்பதால் தனியாக கனியை அழைத்து சென்றனர் ஆகாஷும் செந்திலும்.

“நான் அந்த நம்பருக்கு போன் பண்ணி தர்றேன்! பேசு தைரியமா பேசு! குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாத! நாம பயப்படறோம்னு தெரிஞ்சா இன்னும் பயமுறுத்துவாங்க! என்ன சொன்னாலும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லு!”, 

ஆகாஷ் அந்த நம்பருக்கு அழைத்தவன், அதை ஸ்பீக்கரில் போட்டு, அதை ரெகார்ட் செய்யவும் வழி செய்து, “பேசு”, என்றான்.

அந்தப் புறம் போன் எடுத்தவுடனேயே, இவளின் ஹலோவிற்காக அந்த புறம் காத்திருந்தது.

“ஹலோ!”, என்று கனி சொன்னதுமே…….

“மாப்பிள்ளை பையன் உயிரோட வேணும்னா, இந்த கல்யாணம் நடக்கணும்னா, முப்பது வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு இன்னும் ஒரு மணிநேரத்துல என் கைக்கு கிடைக்கணும்!”, என்றது அக்குரல்.

“என் குழந்தை”, என்றாள் கனி.

“குழந்தையா?”, என்றவனின் குரல் உடனே மாறி…… “முதல்ல நீ குடுத்தனுப்பு! அப்புறம் குழந்தையை பத்திப் பேசலாம்!”, என்றது.

“நீ என்ன சொன்னாலும் செய்யறேன்! என் குழந்தையை ஒண்ணும் பண்ணிடாத!”, என்றாள் கனி.

“என்ன சொன்னாலும் செய்வேன்னா என்கூட படுக்குறது கூடவா?”, என்றது அந்த குரல்.

ஆகாஷின் முகம் ரத்தமென கோபத்தால் சிவந்தது.

குழந்தையின் பயத்தையும் மீறி இயற்கையாக இருந்த கனியின் கோபம் எட்டி பார்த்தது, “யார்டா நீ”, என்றாள்.

“என்ன ரோஷம் வருதோ! எல்லாம் உன் சின்ன மாமன் தான் புள்ள! நீயும் சும்மா கும்முன்னு இருக்க! சொல்லப்போனா உன்னை மாதிரி ஒரு அழகியை நான் வேற எங்கயும் பார்த்தது இல்லை. என்ன எங்க அண்ணனுக்கு உன் கூட வாழ குடுத்து வைக்கலை……”,

“குடுத்து வைக்கலை என்ன? குடுத்து வைக்கலை? நான் தான்….. அவனை நான் தாண்டி போட்டேன்…..”,

“கருவாப்பைய! அவனுக்கு என்னடி தெரியும்! ஒண்ணும் தெரியாது! உன்கூட வாழ்ந்த பதினஞ்சு நாள்லயே, உன்கூட எங்க இருந்தான்! ஊரை சுத்திட்டு தானே இருந்தான்! ஆனாலும் பயபுள்ள திறமைசாலி தான்! நானே எதிர்பார்க்கலை, கச்சிதமா புள்ளையை கொடுத்துட்டான்”,

கனி கண்களை மூடி அவனின் பேச்சை சகித்தாள்.

“அவனுக்கு இத்தனை சொத்து! இவ்வளவு அழகான பொண்டாட்டியா! எல்லாம் எங்களுக்கு வரவேண்டிய சொத்து! நாங்க கஷ்டத்துல இருக்கும் போது உதவற மாதிரி உதவி எல்லாத்தையும் அவன் அப்பன் வாங்குனான்! அதாண்டி அவனைப் போட்டேன்!”,

“அப்புறம் உன்னை விரட்டி விட்டுட்டு சொத்தை எடுத்துக்கலாம்னு நினைச்சப்போ, அந்த கிழவன் எல்லா சொத்தையும் உன்பேர்ல எழுதிவெச்சிட்டு மண்டையப் போட்டுட்டான்”,

“உன்னை போடலாம்னு வந்தப்போ! எவனோ ஒரு கிறுக்கு பய நடுவுல பூந்து ஒரு கோடி, ரெண்டு கோடின்னு பேரம் பேசறான்”,

“அதான் அவனையும் போட்டேன்”, என்றான்.

ஆகாஷ் இறந்து விட்டதாக அவன் நினைத்துக்கொண்டிருப்பது புரிந்தது.

“எத்தனை பேரை போடறது! அதான் உன்னை கல்யாணம் கட்டலாம்னு கேட்டேன்! முடியாதுன்னுட்ட சரி போகுது விடு! சொத்தையாவது குடு!”,

“உன்னை கட்றதா? வெச்சிகிறதான்னு? அப்புறம் முடிவு பண்றேன்!”, என்றான்.

ஆகாஷின் முகம் பாறை போல இறுகியது.

அவனை கொல்ல வேண்டும் போன்ற ஆத்திரம் கனியிடம் தோன்றிய போதும் குழந்தைக்காக அமைதியாக அவனின் வார்த்தைகளை சகித்தவள்…… என்ன பதில் சொல்வது என்று ஆகாஷை பார்க்க…….

அவனே, “நான் யார்கிட்ட குடுக்கனும்னு இப்போ கூப்பிடறேன்!”, என்று சொல்லி போனை வைத்தான்.

அவனின் பேச்சை கேட்டிருந்த ஆகாஷ் கொதி நிலையில் இருந்தான். கனி முகத்தை மூடி அமர்ந்து விட்டாள்.

மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்தது இது, இப்போது நேரம் ஆறரையை நெருங்கி இருந்தது. கொஞ்சமாக இருந்த உறவினர்களின் வருகை அதிகரிக்க துவங்கி இருந்தது.

போனை வைத்த உடனே அவனின் ஆட்களுக்கு அழைத்த ஆகாஷ், “இந்த நம்பர் எங்க இருந்து கூப்பிட்டதுன்னு பாருங்க! அவன் அங்க தான் இருப்பான்!”, என்றான்.

“உங்களால் முடியுமா இல்லை போலீஸ்ல சொல்லிடலாமா?”,

“என்ன தல இப்படி கேட்டுட்ட! எங்களால் முடியாதது எதுவும் இல்லை! சமையத்துல போலிஸ் அண்ணாச்சிங்களே நம்ம கிட்ட வருவாங்க! நான் வேற ஊரு! முடியுமா முடியாதான்னு நினைக்காத! இன்னும் ஒரு மணிநேரத்துல மாப்பிள்ளை அங்க இருப்பான்!”, என்றான் அவன்.

“நீ ப்ரீயா உடு தல! மேட்டரை முடிச்சிட்டு கூப்பிடறேன்!”, என்றான் எதிரில் இருந்தவன்.

“மாப்பிள்ளை மட்டும் பத்திரமா கிடைச்சா போதும்! கூட இருக்கறவன் என்ன ஆனாலும் பிரச்சனையில்லை பார்த்துக்கலாம்!”, என்றான் ஆகாஷ்.

“அவனை கொன்று விடுங்கள்”, என்ற மறைமுக செய்திதான் அதில் இருந்தது.

“இப்போ வேணாம் தல! முதல்ல மாப்பிள்ளையை இட்டாருவோம்! நீ உன் வ்வூட்ல எல்லாம் கூட்டிகினு சென்னை போயிடு! ஒரு ரெண்டு மூணு நாளு கப்சிப் ஆகட்டும்! அப்புறம் அவனை கண்டுகிடலாம்!”,  

“அப்புறம் எங்கயாவது அவன் அனாதை பொணமா கிடைப்பான்! இல்லைன்னா எங்கயாவது வண்டிக்கு அடில செத்துக் கிடப்பான்! நாங்க பாத்துக்கறோம்!”, என்றான் உறுதியோடு.

நொடியில் முடிவை மாற்றிய ஆகாஷ், “இல்லை! அப்படி அவன் என்ன ஏதுன்னு தெரியாம சாகக்கூடாது. எனக்கு வேண்டியவரை கொன்னிருக்கான்! என்னை கத்தியால குத்தியிருக்கான்! எங்க வீட்டு மாப்பிள்ளையை தூக்கியிருக்கான்! என் வீட்டம்மா கிட்ட கலீஜா பேசியிருக்கிறான்!”,

“இதுகெல்லாம் வருத்தப்பட்டு வருத்தப்பட்டு சாகணும்! ஏன் பொறந்தோம்ன்னு இருக்கனும்? எப்போ சாவோம்னு இருக்கனும்? என்னால தான் சாகறான்னு அவனுக்கு தெரியணும்! அப்புறம் தான் அவனுக்கு சாவு வரணும்!”, என்றான் ஆகாஷ்.

“நீ சொல்டல்ல! அப்படியே நடக்கும் வுடு!”, என்று போனை வைத்தான்.

சொன்ன மாதிரி ஒரு மணிநேரத்தில் மாப்பிள்ளை பையன் மண்டபம் வந்தான் அசோக்கோடு……..

“அந்த குமரேசன்”, என்று ஆகாஷ் கேட்க…..

“தெரியலை! எங்கயோ வண்டில தூக்கிட்டு போனாங்க!”, என்றான்.

“இவர் வந்திட்டார்! குழந்தை எங்கண்ணா?”, என்று கனி தவிப்போடு அசோக்கிடம் கேட்க…..

அதுவரை பொறுமையாக இருந்த செந்தில், ரத்னத்திடம் வந்து, “எங்கடா குழந்தை? அரை மணிநேரத்துல கண்டுபிடிச்சு கொடுக்கறேன்னு சொன்ன!”, என்றான்.

“இருங்க கிடைச்சிடுச்சான்னு கேட்கறேன்”,

“கிடைக்காம எங்கடா போகும்! குழந்தையை தூக்க சொன்னவனே நீதானே!”, என்று விஷயத்தை போட்டுடைக்க….

“என்ன? என் குழந்தை எங்க?”, என்று கனி கோபமாக அவனை நோக்கி வேகமான எட்டுக்கள் எடுத்து வைத்து அவனை நெருங்க…….

அவள் இருக்கும் ஆத்திரத்தில் அவனை கொன்றாலும் கொன்றுவிடுவாள் என்று அவளைப் பற்றி தெரிந்த ஆகாஷ், அதையும் விட வேகமாக அவளை நெருங்கி அவளின் இடையில் கையைக் கொடுத்து அவளை அப்படியே தூக்கி தூர நிறுத்தி அவனின் பிடியிலேயே வைத்துக்கொண்டான்.

செந்தில் அவனை ஓங்கி ஒரு அறைவிட்டான். “எங்க குழந்தையை தூக்குற அளவுக்கு உனக்கு தைரியமாடா”, என்று. 

அசோக் வந்து அவனை பிடித்து நிறுத்தினான்.

அப்போதும் கனி அடங்கவில்லை, “என் குழந்தையை கடத்திட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி உட்கார்ந்து இருந்தியாடா நீ”, என்று கத்தினாள்.

“ஐயோ! இவங்க பொய் சொல்றாங்க! எனக்கு ஒண்ணுமே தெரியாது! நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்கன்ற பொறாமையில பேசறாங்க!”,

“என்ன நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேணா, என்ன நினைப்புடா உனக்கு”, என்று ஆகாஷின் கைகளில் இருந்து கனி திமிறி விடுபட முயன்றாள்.

ஆகாஷ் பிடியை தளர்த்தவேயில்லை.

“என்னை விடுங்க”, என்று ஆகாஷை நோக்கி கத்தியவள்…….

“எங்கடா என் குழந்தை, என் குழந்தை மேல சின்ன கீறல் இருந்தா கூட செத்தடா நீ”,  என்று சொல்லிக்கொண்டே கையில் அகப்பட்டதை தூக்கி வீச….. சரியாக அது ரத்னத்தின் தலையை குறிபார்த்தது… அவன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இந்தக் கல்யாணம் நடக்குமா என்று பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். 

உறவுகள் எல்லோரும் அவளை எப்படி அடக்குவது என்று பயத்தோடு பார்த்தனர்.

அவளின் திமிறல் அதிகமாகவும், “குழந்தை நம்மகிட்ட பத்திரமா இருக்கு”, என்ற ஆகாஷின் வார்த்தைகள் கனியின் காதில் சென்றடைய…… அப்படியே அவனின் பிடியில் தொய்ந்து அடங்கினாள்.

 

Advertisement