Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே கனிமொழி ஆகாஷை அழைத்தாள்…..

ஆகாஷ் எடுக்கவும், “எங்க இருக்கீங்க”, என்றாள்.

“சென்னை போய்கிட்டு இருக்கேன்”,

“ஒஹ்! வெச்சிடறேன்”, என்றவள் வேறு ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.

மறுபடியும் ஆகாஷ் போன் செய்ய எடுக்கவே இல்லை…..

இவனும் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தான். கோபம் வர ஆரம்பித்தது. ஒரு முப்பது காலுக்கும் மேலேயே இருக்கும், அத்தனைக்கும் அவள் எடுக்கவே இல்லை. கோபம் ஏற ஆரம்பித்தது. அதன் பிறகு போன் ஸ்விச் ஆஃப் என்று வந்தது. இப்போது அவனின் கோபம் எகிறியே விட்டது.

இவ்வளவு நேரமாக அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், சக்தியின் ரூபமாய் நின்று போராடுகிறாள், எல்லாம் மறந்துபோவிட்டது ஆகாஷிற்கு. ஆத்திரம் கண்ணை மறைத்தது. 

உடனேயே செந்திலிடம் அசோக் நம்பர் வாங்கி போன் செய்தான்…..

“அசோக் எங்க இருக்கீங்க…………”,

“வீட்ல தான் இருக்கேன்”,

“கனிகிட்ட கொஞ்சம் போன் குடுக்கறீங்களா”, என்றான்.

அசோக் கனியிடம் போன் கொடுக்க……

“நான் யாரோடயும் பேசலை”, என்றாள்.

அதை அப்படியே வரி மாறாமல் கனி முறைக்க முறைக்க ஆகாஷிடம் சொன்னான்.

“இப்போ அவ போன் வாங்கலைன்னா சென்னை போயிட்டு இருக்கிற கார் அப்படியே வெண்ணந்தூர்க்கு திரும்பிடும்ன்னு சொல்லுங்க”, என்றான். 

அதை அப்படியே அசோக் கனியிடம் சொல்ல  அவன் சொன்னதை செய்வான் என்றுணர்ந்தவள் வேறுவழியில்லாமல் போனை வாங்கினாள்…….

“என்னதாண்டி உனக்கு பிரச்சனை”, என்றான் கோபமாக.

அவனின் கோபத்தை பார்த்த செந்தில், ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி அவன் பேசட்டும் என்பது போல காரை விட்டு இறங்கி அவர்கள் பேச்சு காதில் விழாத தூரத்தில் நின்று கொண்டான்.

“என்ன டி யா”,

“ஆமாண்டி! பின்ன டி போடாமா கொஞ்சுவாங்களா! ஒருத்தன் இத்தனை தடவை போன் பண்றானே எடுக்கனும்ன்ற அறிவு வேண்டாம்! என்னை என்ன வேலையில்லாதவன்னு நினைச்சியா உன் பின்னாடியே சுத்திட்டு இருக்குறதுக்கு!”,

“நான் ஆஸ்திரேலியன் ரிடர்ன் உங்க அளவுக்கு இறங்க மாட்டேன் அமைதியா போயிடுவேன் நினைச்சியா…….. நான் பக்கா சென்னை லோக்கல் பையன்! சும்மா இன்னாத்துக்கு இன்னாத்துக்குன்னு பார்த்தா நீ எனக்கு இந்த காட்டு காட்டுவியா!”,

“நானும் உன் உணர்வுகளுக்கு மரியாதை குடுக்கனும்னு தான் அமைதியா வந்தேன்! ஆனா நீ என்னை பேச வைக்கிற! எத்தனை போன் பண்றேன் எடுக்கமாடேங்ற! அசோகிட்ட போன் பண்ணினாலும் பேச மாட்டேங்கற!”,

“என்னை என்னன்னு நினைச்ச நீ……… இவ்வளவு நாளா ஆஸ்திரேலியன் ரிடர்னா இருந்துட்டேன்! இனிமே நான் சென்னை பாய் தாண்டி…….. இறங்கி வேலை செஞ்சேன்னு வெச்சுக்கோ, உங்க வீட்ல இருக்க மாட்ட, என் வீட்ல என் பொண்டாட்டியா தான் இருப்ப…… இன்னும் அசிங்கமா கூடப் பேசுவேன், வேண்டாம்னு பார்க்கிறேன்…… சும்மா உன் பின்னாடி வர்றேன்னு ஆடிப்பாக்கிறியா நீ……!”,

பதிலுக்கு கனியும் அவனின் கோபத்திற்கு இணையாக கத்தினாள்.  

“ஏய்! என்ன அசிங்கமா பேசுவேன்னு பயமுறுத்தி பார்க்கிறியா? நீ ஆஸ்திரேலியன் ரிடர்ன் இருந்தா என்ன? சென்னை லோக்கல் பாயா இருந்தா எனக்கென்ன? உன்னை  யாரு என் பின்னாடி சுத்த சொன்னா? நானா சொன்னேன்!”,

“தோ பார்! உன் பின்னாடி சுத்துறதும் சுத்தாததும் என் இஷ்டம்! அதைப் பத்தி நீ பேச வேண்டிய அவசியம் கிடையாது! எதுக்கு போன் பண்ணின சொல்லு!”,

“உன்னை  சென்னை போகச் சொல்ல தான் போன் பண்ணினேன்! அதான் நீயே  போயிட்ட அதான் வெச்சிட்டேன்!”,

“என்னை எதுக்கு நீ சென்னை போகச் சொல்ற?”,

“என் வாழ்க்கையில இனிமே தலையிட வேண்டாம்னு சொல்றதுக்கு தான்!”, என்றாள்.

“அப்போ அதை நல்ல விதமா சொல்லி வெச்சிருக்க வேண்டியது தானே! அப்புறம் ஏண்டி அவ்வளவு டென்சன் ஆகி போனை வெச்ச!”,

ஏன் வைத்தாள் அவளுக்கே தெரியாது……… அவனை சென்னை போகச் சொல்லி தான் போன் செய்தாள். ஆனால் அவனாக சென்னை போய்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதும், ஒரு ஏமாற்றம். அதான் போனை வைத்தாள். அந்த ஏமாற்றம் தந்த வலி தான் அவனின் போனை எடுக்க விடாமல் செய்தது.

ஆனால் ஆகாஷ் இப்படி பேசுவான் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“எனக்கு தெரியும் நீ ஏன் வெச்சேன்னு! நீ என்னை வேண்டாம்னு சொல்லி ஊருக்கு போன்னு சொல்றதுக்காக போன் பண்ணின! ஆனா நானே கிளம்பிட்டேன்னு தெரிஞ்சதும் உன்னால தாங்க முடியலை! அதான் போனை  எடுக்கலை! என்ன கரக்டா?”, என்றான்.

அது உண்மையாகவே இருந்தாலும் அவள் அதற்கெல்லாம் அசருபவளா என்ன?

“இருக்கலாம்! அப்படி கூட இருக்கலாம்! இப்போ அதுக்கு என்ன? எனக்கு உன்கிட்ட வேண்டியது நட்பு மட்டும் தான்! முடிஞ்சா அதைக்கொடு! இல்லைனா அது கூட தேவையில்லை……”,  

“வேற எதுவும் இல்லை! அதுக்கு மேல எந்த உறவும் உன்கிட்ட எனக்கு வேண்டாம்!”, என்றாள்.

“உனக்கு என்கிட்டே கண்டிப்பா நட்பு கிடைக்கும். ஆனா நட்பு மட்டுமே கிடைக்காது! அதையும் மீறி தான் நம் உறவு இருக்கும்…… இருக்கனும்”,

“எவனோ தண்ணி வாங்கிகுடுத்து, நாலு பேரை அனுப்பினா? நீ என்னவோ  நான் யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்…. மாட்டேன்னு….. அந்தக் கூவு கூவுற?”,

“உன் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கனும்னுதான் அமைதியா இருந்தேன்! சொத்து குடுக்க இஷ்டமில்லைனா, இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு போ! அதுக்காக நான் அறிவரசுவோட பொண்டாட்டின்னு கூவுவியா நீ!  என்ன தைரியம்டி உனக்கு! அறிவரசுன்றது உன்னோட இறந்த காலம் தான்! அவன் எப்பவுமே இனிமே உன் எதிர்காலம் ஆகமுடியாது!”,

“அதை நீ சொல்லாத!”,  

“நான் சொல்லாம! நான் தான்! நான் மாட்டும் தான் சொல்வேன்! ஞாபகம் வெச்சிக்கோ!”, என்றான் கோபமாக…..

இவ்வளவு நேரமாக கோபமாக பதிலளித்துக்கொண்டிருந்த கனி இப்போது தணிந்தாள்.

“ப்ளீஸ்! புரிஞ்சிக்கோங்க! நீங்க ஒரு எலிஜிபில் பேச்சிலர். என்னை மாதிரி ஒரு பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்! நான் கல்யாணம் ஆகி கணவனை இழந்தவ! இந்த மாதிரி ஒரு கல்யாணத்தை இந்த சமூகம் ஏத்துகிட்டாலும் அதை விமர்சிக்கும்”,  

“நீங்க ஏதோ தியாகம் பண்ணி எனக்கு வாழ்க்கை குடுத்த மாதிரி பேசும்! அப்படி ஒரு நிலைமைல நான் இல்லை. நான் ஏதோ எதுக்கோ அலையிரவ மாதிரி, வாய்ப்பு கிடைச்ச உடனே உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லும்! இந்த மாதிரி ஒரு  நிலைமையெல்லாம் எனக்குத் தேவையேயில்லை!”, என்றாள்.

“அப்போ உனக்கு சமூக அங்கீகாரம் மட்டும் தான் பிரச்சனையா! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”,

“ப்ச்! சமூக அங்கீகாரம் பிரச்சனை தான்! ஆனா அது மட்டுமே பிரச்சனை கிடையாது! எனக்கு உன்னைப் பிடிக்கும் தான்! ஆனா கல்யாணத்துக்கான பிடித்தம் இது கிடையாது! எனக்கு உன்னை அந்த மாதிரி பிடிச்சதுன்னா சமூகமாவது ஒண்ணாவது அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்”,

“ஆனா இது அது இல்லை! எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கவும் இஷ்டம் இல்லை! அதை சொல்லத் தான் கூப்பிட்டேன்! அப்படியே உன்னை ஊருக்குப் போக சொல்லவும்! நான் வெச்சிடறேன்!”, என்று வைக்கப் போனாள்…..

“ப்ச்!”, என்று அவளை மாதிரியே சொன்னவன்…….. “உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. எனக்கு உன்கிட்ட இதைப் பத்தி பேசி பேசி சலிச்சுப் போச்சு! அத்தனை தடவை இதைபத்தி பேசிட்டோம். இனிமே இந்த பேச்சேக் கிடையாது! செயல் தான்! நமக்குள்ள இந்த கல்யாண வேண்டாம்னு சொல்ற பேச்சே நீ பேசாத!”,

“அதை சொல்றதுக்காக என்னை கூப்பிட்டு இப்படி கொல்லாத! எனக்கு என்ன செய்யனும்னு தோணுதோ அதை தான் செய்வேன்! அன்போர்ச்சுநேட்லி எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் தோணுது!”,

“ஒரு தடவை நான் என் லைஃப்ல மிஸ் பண்ணிட்டேன்! இனிமே அந்த மாதிரி நடக்கவே நடக்காது!”, என்று அவனையறியாமல் சொல்லி வைத்துவிட்டான்.

அவன் பேசி வைத்ததும் கனிக்கு மிகுந்த கோபம்……. எத்தனை தடவை எத்தனை விதமா சொன்னாலும் பிடிவாதமா இருக்கானே! இவனை எப்படி தள்ளி வைக்க என்று யோசிக்க ஆரம்பித்து அவன் பேசிய பேச்சுக்களை அசைபோட ஆரம்பித்தாள்.

அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ஒரு தடவை என் லைஃப்ல மிஸ் பண்ணிட்டேன் இனிமே அந்த மாதிரி நடக்கவே நடக்காது……..   

இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் கனியின் நினைவுகளில் சற்று பின் போக…. “யாரை மிஸ் பண்ணினான்!”, என்ற கேள்வி ஓட ஆரம்பித்தது. 

“ஏதாவது காதல் தோல்வியா? இவனைக் கூட யாராவது ஒரு பெண் வேண்டாம் என்று சொல்வாளா?”, என்று நினைத்தாள். அதைத்தான் தானும் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் நில்லாமல்.    

இத்தனை நாளாக செய்யாத ஒன்றை செய்தாள். அசோக்கை அழைத்து, “அண்ணா! எனக்கு ஆகாஷ் செந்திலண்ணா ஃபிரன்ட்ன்னு தெரியும். அவங்க மில் ஓனர்ன்னு தெரியும்! வேற எதுவும் தெரியாது! யார் அவங்க?”, என்றாள்.

“உனக்கு தெரியாதா?”, என்றான் அசோக்.

“இல்லண்ணா எனக்கு தெரியாது”,

“ஆகாஷ்! அண்ணாமலையோட ரெண்டாவது மனைவியோட தம்பி!”, என்றான்.

“செந்திலண்ணா மாமனார் தானே அண்ணாமலை”,

“ம்! ராஜி யோட அப்பா!”, என்றவன், ஆகாஷை பற்றிய விவரங்களை சொன்னான்.

“எப்படி? எப்படி? அவங்க அக்கா இப்படி ஒரு வாழ்க்கை அமைச்சுக்க ஒத்துகிட்டாங்க”,

“அது அவனைத் தான் கேட்கணும்! எப்படி ஒத்துக்கிட்டான்னு? நிறையப் பிரச்சனை! ராஜியோட அம்மா கூட சமாதான மாகிட்டாங்க! ஆனா ராஜி அதை ஒத்துக்கவேயில்லை! அவங்க அப்பா கூட அவ பேசமாட்டா……….. ஆகாஷ் அக்காகிட்டையும் பேச மாட்டா!”,

“அப்புறம் எப்படி ஆகாஷ் கிட்ட மட்டும் பேசறா”,

“அது அவளைத் தான் கேட்கணும்”,

“அப்போ இந்த ஆகாஷ் ராஜிக்கு பார்த்த மாப்பிள்ளையா?”,

“ம், ஆனா அவளுக்கு செந்திலை தான் பிடிச்சு இருந்தது! செந்தில் அவளை காப்பாத்த போய் கைல அடிப்பட்டு ஹாஸ்பிடல்ல இருந்தான்! அப்போ இந்த கல்யாண பேச்சு எடுத்ததும் செந்தில் கிட்ட வந்தா……… அவனும் இவன் பணக்காரன் உன்னை நல்லா வெச்சிருப்பான்னு சொன்னான். அவளுக்கு கோபம் வந்து வீட்டை விட்டு, செந்திலை விட்டுப் போயிட்டா!”,

“அப்புறம் அவளைத் தேடி நாலு நாள் அலைஞ்ஜோம்……. நாலு நாளுக்கு அப்புறம் அவளை கண்டுபிடிச்சு அவ இருக்கிற இடத்துக்கு போனதுக்கு பிறகும் அவ வரலை. செந்தில் அவளைக் கல்யாணம் செஞ்சு அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனதுக்கு அப்புறம் தான் வந்தா……. இன்னுமும் அவன் கை அவ்வளவு சரி வராது”,

“அப்புறம் ஆகாஷ் செந்தில்க்கு நிறைய  ஹெல்ப் பண்ணினான்! அவன் கை கொஞ்சம் சரியாகறதுக்கு ஹெல்ப் பண்ணினான், அதுல அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல நட்பு உருவாச்சு! அப்புறம் மில்லோட பொறுப்பை ஆகாஷ் அவன்கிட்ட கொடுத்தான்”, 

“ஆகாஷ் எதுக்கு செந்திலண்ணாக்கு ஹெல்ப் பண்ணனும்”,

“அதை அவன்கிட்டத் தான் கேட்கனும்”, என்றான் அசோக்.

“என்ன நீ எதைக் கேட்டாலும் அவங்க அவங்க கிட்டத் தான் கேட்கனும்னு சொல்ற”, என்றாள் கோபமாக கனி.

“தெரிஞ்சாத் தானே சொல்ல முடியும் கனி”, என்றான் பரிதாபமாக.    

“ராஜியும் செந்திலும் காதல் கல்யாணமா”,

“ம்!  ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டாங்க! அப்புறம் அவங்கப்பா ரிசெப்சன் வெச்சார்”,

இன்னும் சுத்தி சுத்தி நிறைய கேள்விகள் கேட்டாள். அப்படி சுத்தி சுத்தி கேட்டப் பிறகும் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

ராஜி செந்திலை விரும்பி திருமணம் செய்துக்கொண்டிருகிறாள். இப்போதும் அவர்கள் மிகவும் மனமொத்த தம்பதிகள். அவளே தன் கண்களால் அவர்களின் காதலை பார்த்தாலே அவளின் வீட்டிற்கு வந்த போது.

“யாரை ஆகாஷ் மிஸ் செய்தான்? ராஜியையா? அவளை ஆகாஷ் விரும்பியிருக்க கூடும் என்று கனியால் எண்ண முடியவில்லை. அவனின் பெர்சனாலிட்டி என்ன? அவனின் வசதி வாய்ப்பென்ன? அவனின் படிப்பென்ன?”, இப்படி பல “என்ன”க்கள்.

ராஜியை அவனின் பக்கத்தில் அவளால் நிறுத்த முடியவில்லை. ராஜியைப் பற்றி அவளுக்கு என்னத் தெரியும்! ஒன்றும் தெரியாது! அவளின் தோற்றம் மட்டும் தானே தெரியும்.

அழகி என்று சொல்லமுடியாவிட்டாலும் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருப்பாள் ராஜி. ஆனால் ஆகாஷின் தோற்றத்திற்கு முன்னால் கம்பீரத்திற்கு முன்னால் அவள் மிகவும் கம்மி தான்.

“அவளைப் போயா ஆகாஷ் விரும்பி இருப்பான்! சே! சே! இருக்காது!”,

“ஆனால் அன்று அவள் ஒரு வார்த்தை ஊருக்குப் போகவேண்டாம், என்றவுடனே கேட்டானே! அப்படியும் இருக்குமோ!”, என்றும் தோன்றியது.

மிகவும் குழம்பிப் போனாள்…….

அவளுக்கு தெரிந்துக் கொண்டே ஆக வேண்டி இருந்தது. இல்லையென்றால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது. இதை சொல்லக் கூடியவன் ஆகாஷ் ஒருவனே. வேறு வழியில்லாமல் ஆகாஷை அழைத்தவள்…………,

அவன், “இப்போ என்ன?”, என்றவுடனே…….

“நீங்க யாரை மிஸ் பண்ணுனீங்க?”,

“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற”,

“எனக்கு தெரியணும்”,

“எனக்கு அதை சொல்ல விருப்பம் இல்லை”,

“இல்லை! எனக்கு தெரியணும்”,

“அதெல்லாம் சொல்ல முடியாதுன்னா விட்டுடு”,

“நீங்க மிஸ் பண்ணினது ராஜியையா”, என்றாள்.

பெரிய கண்டுபிடிப்பு என்று நினைத்தவன்……. செந்தில் பக்கத்தில் இருந்ததால், “எதையாவது உளறி வெக்காதா”, என்று மட்டும் சொன்னான்.

“எனக்கு தெரியணும் அது ராஜி தானே”, என்றாள் மறுபடியும்.

“சொல்லு செந்தில்!”, என்றான் ஆகாஷ் வேண்டுமென்றே……. பக்கத்தில் செந்தில் இருப்பதை கனிக்கு உணர்த்திவிடும் பொருட்டு……..

“என்ன ஆகாஷ்”, என்றான் செந்தில்.

அவன் பேசியது கனிக்கும் கேட்டது.

“இல்லை! நீ கூப்பிட்ட மாதிரி இருந்தது”, என்றான்.

“இல்லை! நான் கூப்பிடலை!”, என்று செந்தில் வண்டி ஓட்டுவதில் கவனமாக.

“என்கிட்டே கேட்ட மாதிரி யார் கிட்டயும் கேட்டிடாத! அவளுக்கு மட்டும் தெரிஞ்சது, வீடு பூந்து அடிப்பா!”, என்றான் தாழ்ந்த குரலில்.

என்னவோ இந்த பதில் அவளுக்கு சொல்லாமல் சொல்லியது. அவன் ராஜியை தான் மிஸ் செய்தேன் என்று சொன்னான் என்று.

“ஒஹ்! அதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல”, என்றாள் நக்கலாக.  

“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற! நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னா உனக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கேன்! நீதான் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க! உன்கிட்ட நான் ஏன் சொல்லணும்? நம்ம கல்யாணம் முடிஞ்சபிறகு சொல்றேன்”, என்றான்.

“சொல்லு! எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்!”,

“உன் மூஞ்சி! வைடாபோனை!”, என்று ஆத்திரம் மிகுதியில் கத்தி போனை வைத்தாள்  கனி.

“அறிவுகெட்டவன், என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப அதையே பேசறான். அவன் முதல் தடவை என்கிட்டே பேசினப்போவே அவன் மண்டையை உடைச்சிருக்கணும், அடுத்த தடவை என்கிட்டே பேசட்டும், அவனை ஏதாவது செய்யலை, நான் கனியில்லை”, என்று பொங்கினாள்.

அங்கே ஆகாஷ், “எங்க போனாலும் விடமாட்டேன் உன்னை! எவ்வளவு தூரம் தான் விலகி போவேன்னு நான் பார்க்கிறேன்!”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.

“என்னதாண்டா பிரச்சனை ஓடுது”, என்றான் செந்தில்.

அவனிடம் கனி ராஜியை பற்றி கேட்டால் என்றா சொல்ல முடியும், “நான் அவளை விட்டு விலகி போறதாம்”, என்றான் ஆகாஷ்.  

“அவ என்ன நடந்தாலும் ஆரம்பிச்ச எடத்துகே வந்து நிக்கறா! இந்த இம்சைக்குத் தான் சொன்னேன் பேசாம அவளை தூக்கிடலாம்னு! ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்லேயே அசோக்கும் அவங்கப்பாவும் அவகிட்ட தண்ணி குடிச்சாங்க!”,

“அவ ஒத்துக்குவான்னு எனக்கு தோணலை! ஏதாவது ஒண்ணு சட்டு புட்டுன்னு முடிவெடு! சும்மா அவ உணர்வுக்கு மதிப்பு குடுக்கறேன் வெங்காயத்தை குடுக்கறேன்னுட்டு இருக்காத! அவ மனசு மாறுவான்னா எவ்வளவு நாள் வேணா காத்திருக்கலாம்!”,

“ஆனா அவ மாறமாட்டா! நிஜமாவே உன்னை பிடிச்சிருந்தாலும் ஒத்துக்க மாட்டா!”,

“உன்னால அவளை அங்க வெச்சிட்டு எவ்வளவு நாள் பாதுகாப்பு கொடுக்க முடியும்! ஏதாவது ஒரு பிரச்சனை அவளை சுத்தி முளைச்சிட்டே இருக்கு! யோசி!”, என்றான் செந்தில்.

“சீக்கிரமே ஏதோ ஒண்ணு செய்யறேன்! அந்த குமரேசன் யாரு என்னன்னு மாமா கிட்ட விசாரிக்க சொல்லியிருக்கேன்! அது என்ன ஏதுன்னு பார்த்துட்டு ஒரு முடிவு எடுத்துடலாம்! அதுக்குள்ள கனி தங்கச்சி கல்யாணமும் கிட்ட வந்துடும், இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு”,

“இப்போ நான் கனிக்கு பிரஷர் குடுத்தா அவங்கப்பா அம்மா எதைன்னு பார்ப்பாங்க! அவ தங்கச்சி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷம் முடிவெடுத்துடலாம்!”,

இந்த பேச்சிற்கு பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் எண்ணத்தில் உழல அதற்குள் ஆகாஷின் வீடு வந்திருந்தது.

அங்கே அனிதாவைப் பார்த்தப் பிறகு தான் ஆகாஷிற்கு உரைத்தது தான் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெண்ணந்தூர் கிளம்பினோம், அதன் பிறகு அவளுடன் பேசக்கூட இல்லை, அவளாக கூப்பிட்டப் போதும் இருந்த டென்சனில் போனை எடுக்கவில்லை என்று.

“சாரி”, என்றான் அவளைப் பார்த்தவுடனே…..

அனிதா பதில் எதுவும் பேசவில்லை, அக்ஷியை கையில் வைத்துக்கொண்டு இருந்தவள் அப்படியே திரும்பி போகப்போக….

செந்தில் அக்ஷியை வாங்கிக்கொண்டான்.

ஆகாஷ் அவளிடம் என்ன விளக்கம் சொல்லியும் சமாதானமாகவில்லை.

“ரெண்டு நாள் தானே அனி ஆனது! அதான் சாரி சொல்றேன் இல்லை”, என்று அவளின் பின்னாடியே சுத்தினான்.  

“சொல்லாம கொள்ளாம அவசரம் போன சரி! அதுக்கப்புறம் ஒரு போன் பண்ண கூடவா முடியாது! நீ என்ன காரணம் சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்”, என்று முறுக்கிக் கொண்டாள்.

நந்தன் வேறு, “ஏன் மாமா என்னை விட்டுட்டுப் போனீங்க?, நீங்க தேவிகா பெரியம்மா வீட்டுக்குப் போனீங்கன்னு அம்மா சொன்னாங்க, என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் இல்லை! நான் அப்பாகூட இருந்திருப்பேன்! எனக்கு லீவ் தானே!”, என்று சிணுங்கினான்.

“சாரி டா! நெக்ஸ்ட் டைம் போகும்போது உனக்கு ஸ்கூல் இருந்தா கூட மாமா லீவ் போட்டுட்டு கூட்டிட்டுப் போறேன்”, என்று சமாதானப்படுத்தினான்.

செந்திலிடம் கனியின் பத்திரத்தை பற்றி பலமுறை சொல்லி அனுப்பினான்.

அவர்கள் சொன்ன மாதிரி குத்தகைக்காரர்கள் அடுத்த நாளே பணத்தை கொண்டுவந்தும் கொடுத்தனர்.

அவர்கள் கொண்டு வந்து கொடுத்ததை அசோக் மூலமாக தான் ஆகாஷிற்கு சொன்னாள். ஆகாஷ் பேச முயன்ற போது, “எனக்கு பேச விருப்பமில்லைன்னு சொல்லுங்க அண்ணா!”, என்று தயவு தாட்சண்யமின்றி சொன்னாள்.

ஆகாஷும் வற்புறுத்தவில்லை, மீண்டும் அவனாகவும் பேச முயற்சி செய்யவில்லை.   

அதன் பிறகு பதினைந்து நாட்கள் மீண்டும் தீயாய் வேலை செய்தான் செந்தில். அவனுடன் அண்ணாமலையும் சேர்ந்து உதவியதால் அந்த குமரேசன் யார்? என்ன? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வந்தது.  

எல்லாம் அதிர்ச்சி தகவல்களே………

ஆகாஷிடம் உடனே செந்தில் தெரிவித்தான்.

அவனைப் பற்றிய தகவல்கள் மட்டுமே அவர்களால் சேகரிக்க முடிந்தது. ஆனால் அவனை நேரில் அவர்களால் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவனை பார்த்துவிடவேண்டும் என்று அவர்கள் முயன்றும் அவன் அவர்களின் கண்களுக்கு சிக்கவேயில்லை.

ஆகாஷ் அவர்களிடம் அவனின் புகைப்படத்தை அனுப்புங்கள் என்றான்.

அன்றைக்கு கனியை கொல்ல வந்தவன் இவனாக இருப்பானோ என்று அவனுக்கு மிகவும் சந்தேகமாக இருந்தது. குத்தியவன் முகம் ஆகாஷிற்கு நன்கு நினைவில் இருந்ததால் அவனின் புகைப்படத்தை பார்க்க விரும்பினான். 

அவர்களும் அவனின் அடையாள அட்டை, ரேசன் கார்டு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க………. ரேசன் கார்ட் கிடைத்தது. ஆனால் ரேஷன் கார்டிலும் அவனின் புகைப்படம் இல்லை, அவனின் தந்தையின் புகைப்படம் தான் இருந்தது.

இந்த தேடுதல் வேட்டையும் ஒரு பத்து நாள் தொடர்ந்தது.

திருமண நாளும் நெருங்கியது. அன்றைய கனியுடனான சண்டைக்கு பிறகு ஆகாஷ் கனியுடன் பேசவில்லை அவளும் பேசவில்லை. அவளைப் பற்றிய செய்திகள் செந்தில் மூலமாக ஆகாஷிற்கு தெரிந்தாலும் கனி ஆகாஷை பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கவேயில்லை. 

மனதை எதிலும் அலைபாயவிடாமல் யாரிடமும் செல்ல விடாமல் அமைதியாக இருந்தாள் கனிமொழி.

பேச்சையும் குறைத்துகொண்டால் அவசியமான பேச்சை மட்டுமே அனைவரிடமும் பேசினாள்.

தன் குழந்தை மட்டுமே உலகம் என்று  வாழப் பழகினாள்.

அவளுடைய அன்னையும் கல்யாண வேலைகள் அணிவகுத்து நின்றாலும் கனியிடம் நிறைய நேரத்தை செலவழித்தார். அவளுடைய அமைதி அவருக்கு கனி இயல்பாக இல்லை என்று காட்டியது.

“என்ன கண்ணு உனக்கு பிரச்சனை?”,

“உனக்கு அந்த பையனை பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கோ கண்ணு, நாங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்”, என்றார்.

“அம்மா ப்ளீஸ்! எனக்கு கல்யாணம் வேண்டாம், அதைப் பத்தி பேசாத”, என்றாள்  கெஞ்சுதலாக.

“எத்தனை நாள் கண்ணு நீ இப்படி தனியா இருக்க முடியும்! இப்போ நல்லா இருக்கும் கண்ணு! ஆனா நாள் ஆக ஆக மனசு ஒரு துணையை தேடும்”,

“என் பையன் இருக்கான்மா எனக்கு”,

“அவனுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் நீ சொல்றது சரி! அப்புறம் தனியா உணருவ கண்ணு!”,

“அம்மா! நான் அப்படி எல்லாம் எதுவும் உணர மாட்டேன்”,

“ஏன் கண்ணு? செத்துப்போன மாப்பிள்ளையை உனக்கு அவ்வளவு பிடிச்சு இருந்ததா!”,

“தெரியலைம்மா! நான் அவர் கூட இருந்ததே பதினைஞ்சு நாள்! அதுல நாங்க பேசிக்கிட்டது ரொம்ப கம்மி. அதனால் எனக்கு அவரை அவ்வளவு பிடிச்சதா இல்லையா தெரியலை. ஆனா அவர்தான் என் கணவர்ன்னு என் மனசுல பதிஞ்சு இருக்குமா”,

“கணவனை இழந்தவங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலைம்மா. ஆனா எனக்கு என்னவோ அது தப்பா தோணுதும்மா…… இன்னொரு கல்யாணத்தைப் பத்தி எனக்கு நினைக்க விருப்பமேயில்லை, இனிமே அதைப் பத்தி பேசாதீங்க”,

“நீ எப்பவும் ஏதாவது யோசனையாவே இருக்கியே கண்ணு! எனக்கு அது ரொம்ப கவலையைக் குடுக்குது”,

“இப்படியே இருக்க முடியாது இல்லையாம்மா! ஏதாவது வேலை செய்யனும்! பணம் இருந்தாலும் நான் சோம்பி மூலையில உட்கார முடியாது. வருமானம் வருதுன்றதுக்காக நான் எந்த வேலையும் செய்யாம இருக்க எனக்கு விருப்பம் இல்லைம்மா. இப்படியே வேலையில்லாம இருந்தா கண்டதையும் நினைக்க தோனிட்டா……… அதான் என்ன செய்யலாம் ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்ம்மா”,

“இப்பவே யோசிக்காத கண்ணு! பையனுக்கு ஒருவயசு ஆகட்டும்! அதுவரை அவனை கவனி! அப்புறம் யோசிப்பியாம்! இப்போ ப்ரியா கல்யாண வேலையை பாரு!”, என்று மனசை திசை திருப்பினார்.

ப்ரியாவின் கல்யாண  நாள் நெருங்கி வர…….. அடுத்த நாள் காலை திருமணம் என்ற நிலையில் பெண்வீடும் மாப்பிள்ளை வீடும் மண்டபத்தில் இருக்க…….

கனி அவளின் குழந்தையை அங்கே ஒரு தூளி கட்டி தூங்க வைத்துவிட்டு ஒரு வேலையாக ஒரு நிமிஷம் நகர்ந்த நிமிடத்தில் குழந்தை காணாமல் போனது.

அதை தேட ஆரம்பிக்கும்போது தான் கல்யாண மாப்பிள்ளை மண்டபத்தில் இல்லாதது தெரியவந்தது.

இருவரும் சேர்ந்துக் காணமல் போயிருக்கிறார்களா? இல்லை தனித்தனியாக காணாமல் போயிருக்கிறார்களா? இல்லை கல்யாண மாப்பிள்ளை குழந்தையை கடத்தி விட்டானா? புரியாமல் மண்டபம் அல்லோல கல்லோலப் பட…..

கால்கள் வேரோட கண்கள் சொருக அரைமயக்க நிலைக்கு போனாள் கனிமொழி.    

 

Advertisement