Advertisement

அத்தியாயம் பதினொன்று:

கனிமொழி வீட்டில் இருந்து கிளம்பி வரும்பொழுது, “என்மேல கோபமா நான் ரொம்ப அதிகப்ரசிங்கித்தனமா நடந்துக்கிட்டேனா”, என்றாள் ராஜி ஆகாஷைப் பார்த்து……

ஆகாஷ் அதற்கு பதில் சொல்லும் முன்பே, “செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, அப்புறம் என்னக் கேள்வி”, என்று செந்தில் சத்தம் போட……

“விடு! அவளை எதுக்கு இப்போ திட்டுற! சொல்லிட்டா! இனிமே என்ன செய்ய முடியும்! பாப்போம், அவங்க அப்பா அம்மா என்ன முடிவு எடுக்கறாங்கன்னு…….”,

“கனிக்கு கோபம் போல”, என்றான் செந்தில்.

“வந்தா வந்துட்டு போகுது! மயிலே மயிலேன்னா இறகு போடாதுங்க, சில சமயம் பிச்சும் எடுக்கணும்”, என்றாள் பெரிய மனுஷி போல ராஜி…….

வந்ததே கோபம் செந்திலுக்கு, “என்னத்தைப் பிச்சு எடுக்கணும்…… நீ கொஞ்சம் வாயை மூடுறியா! ஓவராப் பேசற நீ!”, என்று செந்தில் அவளை திட்ட…….

அவனின் குரலில் கோபத்தை உணர்ந்தவள், முகம் சுருங்கி போனவளாக, “சாரி”, என்றாள்.

“என்கிட்டே நீ சாரி சொன்னாலும் ஒண்ணுமில்லை! சொல்லாட்டாலும் ஒண்ணுமில்லை! ஆனாலும் நீ இன்னைக்கு பண்ணினது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை! நீ இந்த விஷயத்துல எதுக்கு தேவையில்லாம இன்வால்வ் ஆகுற! நாங்க இத்தனைப் பேர் இருக்கோம், ஏதாவது செய்யணும்னா எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானே”,

“இன்னைக்கு அவ என்ன சொன்னா உன்னை ம்யூசியத்தில வைக்க வேண்டிய ஆளுன்னு சொல்றா! நீ அந்த அளவுக்கு அவளைக் கோபப்படுத்தி இருக்க! அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதுக்கு முன்னாடி நம்ம அதுல தலையிடலாமா இல்லையான்னு யோசிக்கணும்”,

ஆகாஷ் ஏதோ பேச வர வேண்டாம்……… “ஆகாஷ்! அவ ரொம்ப எல்லை மீறுரா என்னைப் பேச விடு”, என்றான்.

செந்தில் திட்ட திட்ட ராஜியின் கண்களில் இருந்து நீர் வர ஆரம்பித்தது, எதுவும் செந்திலை அசைக்கவில்லை.

“நீ யாரு கனியோட வாழ்க்கையில தலையிடறதுக்கு, நம்ம எல்லை என்னன்னு புரிஞ்சு நடந்துக்கணும்”,

“உன்னை யாரவது ஏதாவது பேசுனா என்னால அதைத் தாங்க முடியாது. இன்னைக்கு உன்னை அவ பேசினதும் எனக்கு நிறையக் கோபம் வந்துச்சு. ஆகாஷ்காகவும் அசோக்காகவும் தான் பொறுத்துக்கிட்டேன். அதுவுமில்லமா நீ பண்ணினது என்னை பொருத்தவரைக்கும் பெரிய தப்பு”,

ராஜி தலை குனிந்து அமர்ந்திருக்க, ஆகாஷ் காரை நிறுத்தி இருந்தான்.

“புரிஞ்சிக்கோ ராஜி! எனக்கு நீ ரொம்ப முக்கியம். உன்னை யாராவது ஒரு வார்த்தை சொன்னா அதை என்னால தாங்கவே முடியாது. மறுபடியும் என்னால அவங்க கிட்ட ஒரு சுமுகமான உறவு வெச்சிக்க முடியாது…..”,

“உன்னால எனக்கு  மத்தவங்களோட சண்டை வந்துடும் போல……”,

“நீயும் ஆகாஷும் நல்ல நண்பர்கள்ன்னு எனக்குத் தெரியும். ஆனா கனிக்குத் தெரியாது. அவளுக்கு ஆகாஷைப் பத்தியும் தெரியாது, உன்னைப் பத்தியும் தெரியாது. நான் இப்படி பேசறது உனக்கு கஷ்டமா இருக்கலாம், ஆனா நம்ம பேசறதுக்கு முன்னாடி யார் என்ன எப்படி எடுத்துக்குவாங்கன்னு நாலையும் யோசிச்சுத் தான் செய்யனும்”.

“இனிமே எனக்குத் தெரியாம நீ இந்த விஷயத்துல எதுவும் செய்யக் கூடாது”, என்றான் செந்தில்.

“ம்”, என்று தலையசைத்து, “சாரி”, என்று மறுபடியும் சொன்னவள் அவன் தோளிலேயே சாய்ந்து முகத்தை அதில் புதைத்து கொண்டாள்.

“விடுடா! நீ சொன்னாக் கேட்பா! ரொம்ப காய்ச்சாத! மெதுவா சொல்லு!”, என்று சொல்லி வண்டியை எடுத்தான் ஆகாஷ்.

செந்தில் என்னவோ ராஜியைத் திட்டினான் தான். அதற்கு ராஜியும் அழுதாள் தான். ஆனால் என்னவோ அவர்களின் காதலைப் பார்த்து ஆகாஷிற்கு பொறாமையாக இருந்தது.

ராஜி ஒரு வார்த்தை கூட செந்திலிடம் சண்டை பிடிக்கவேயில்லை, அவன் சொல்லவும் அப்படியே ஏற்றுக்கொண்டாள்…..

“இந்த புருஷனும் பொண்டாட்டியும் ஓவர் தான்பா”, என்று தோன்றியது.   

அடுத்த நாள் காலையிலேயே கனிமொழியின் வீட்டில் பிரச்சனை ஆரம்பமாகியது. ஒரு பதினோரு மணிவாக்கில் கனியின் கணவனின் உறவினர்களில் இருந்த மூத்த தலைகள் அவளின் வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் கனியின் கணவனின் சித்தப்பா மகன் சார்பில் பஞ்சாயத்து பேச வந்தனர்.

“உங்க சார்புலையும் நாலு பேரை கூப்டுக்கங்க”, என்றனர். பேசிய தோரணையை பார்த்தாலே இவர்கள் பிரச்சனை செய்ய வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

ஏற்கனவே பயத்தில் இருந்த கனியின் தந்தை அத்தனைப் பேரை பார்த்ததும் இன்னும் பயந்து விட்டார். உடனே அவரும் அவரின் பங்காளிகளை அழைத்தார்.

நேற்று செந்திலும் ஆகாஷும் தான் குத்தகைகாரர்களிடம் பேசியதால் அவர்களுக்கு தகவல் கொடுத்தான் அசோக்.

செந்தில் உடனே அண்ணாமலையிடம் விவரம் தெரிவித்தான். அவர்கள் எல்லோரும் ஒரே சமூகம் என்பதால் அவர் அதில் ஒரு பெரிய மனிதர் என்பதால், அவர் ஊருக்குள் இருந்த பஞ்சாயத்து தலைவர் இன்னும் சில பெரிய மனிதர்கள் என்று அழைத்துக்கொண்டு வந்தார்.

வீடே அமளி துமளி பட்டது.

ஆகாஷிற்கு இதெல்லாம் புதிது……. எல்லோரையும் பார்வையால் ஆராய்ந்தான். எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்தது. கனியை தேடினான் அவள் தென்படவில்லை.  

அதற்குள் ஒரு பெருசு, “மருமகளையும் கூப்பிடுங்க, அவ தானே முடிவெடுக்கணும்”, என்றார்.

கனியை அவளின் தந்தை அழைக்க அவள் வந்து நின்றாள், கூடவே அவளின் அம்மாவும் வந்தார்.

அவளின் முகத்தில் பயமிருந்தால், “நான் இருக்கிறேன்”, என்று சொல்ல ஆகாஷ் அவளின் முகத்தைப் பார்க்க அதில் பயமோ பதட்டமோ இல்லை. மாறாக ஒரு தெனாவெட்டு தெரிந்தது, “யாரு வேணா வாங்கடா! எதுன்னாலும் பார்த்துக்கலாம்!”, என்பது போல.

அது தானே கனியாவது பயமாவது என்று அவளை ரசித்தான் ஆகாஷ். கனி மறந்தும் ஆகாஷின் புறம் பார்வையை செலுத்தவில்லை.    

கனியின் கணவரின் உறவுகளில் ஒரு தலை பேச ஆரம்பித்தது. “நேத்து போய் குத்தகைகாரங்களைஎல்லாம் மிரட்டிட்டு வந்திருக்கீங்க போல! அவங்க எல்லாம் வந்து எங்ககிட்ட முறையிட்டாங்க”, என்றார்.

அசோக் ஏதோ பேச வர, “அவங்க பேசிமுடிக்கட்டும்”, என்றான் செந்தில். 

“அவங்க காலம் காலமா நம்ம நிலத்தை பார்த்துக்கறாங்க”, என்றார்….

“எப்படி? பணமே குடுக்காமையா!”, என்றாள் கனி.

“இரும்மா நான் பேசி முடிச்சிடறேன்”, என்றார்.

“இல்லைங்க மாமா! நீங்க பேசி முடிச்சீடீங்கன்னா அப்புறம் நீங்க எதெல்லாம் சொன்னிங்கன்னே எனக்கு மறந்துடும்! அப்புறம் நீங்க சொல்றது சரி, நான் சொல்றது தப்புன்ற மாதிரி ஆகிடும். எதுன்னாலும் அப்பப்போ தீர்த்துக்கணும்”, என்றாள்.

இதற்கு என்ன சொல்வது என்பது பெரிசு முழித்து, பின்பு பேச ஆரம்பித்தது. அவளிடம் இப்படி ஒரு நிமிர்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.

அவளின் தந்தையிடம் சொன்னால் அவளின் தந்தை ஏதாவது பிரச்சனை செய்துவிட்டால் என்ன செய்வது. அதனால் பெண்பிள்ளை இவள் என்ன பிரச்சனை செய்துவிட போகிறாள் என்று நினைத்து தான் அவளை கூப்பிட்டனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை கனியைப் பற்றி………… 

“நம்ம கிட்ட அவ்வளவு வருஷமா குத்தகைக்கு இருக்காங்க, அவங்களை மிரட்டுனது தப்புதானேம்மா….”,

“இத்தனை வருஷமா நம்ம கிட்ட பண்ணையம் பண்ணி கரக்டா பணத்தை குடுத்துட்டு இருந்தவங்க, இப்போ நான் வந்தவுடனே பணத்தை குடுக்க மாட்டேன்னு சொல்றதும் தப்பு தானுங்களே”, என்றாள்.

“எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேமா, நாங்க பேசியிருப்போம் இல்லை”,

“நீங்க பேசியிருப்பீங்க! கட்டாயம் எனக்கு வாங்கி குடுத்து இருப்பீங்க! ஆனா நான் ஒவ்வொரு தடவையும் உங்ககிட்ட வந்து நிக்க முடியாதுங்களே! உங்களுக்கு குடும்பம் உங்க தொழில்ன்னு எத்தனையோ இருக்கு! எத்தனை தடவை நான் உங்ககிட்ட வந்து நின்னு வாங்கிகுடுங்க வாங்கிகுடுங்கன்னு சொல்ல முடியும்”,

“நான் தான் இதுக்கு உரிமைப்பட்டவன்றப்போ, நான் கேட்டா அவங்க குடுக்கறது தானே முறை”, என்றாள்.

“நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான்மா! அவங்க குடுக்கலைன்றப்போ ஏதாவது சுமுகமா பேசி தீத்துக்க வேண்டியது தானே”,

“ம்கூம்! அப்படி எனக்கு பணிஞ்சு போகனும்னு அவசியமேயில்லை. நான் எப்படி வாங்கனுமோ அப்படி வாங்கிக்குவேன்”, என்றாள்.

“என்னம்மா ஒத்தை பொண்ணு நீ! இப்படி பேசற!”, என்றார் அந்த பெரியவர்.

“என்ன மாமா ஒத்தை பொண்ணு! எங்கப்பா இல்லை! எனக்கு கூட பொறந்தவங்க இல்லை! நான் தனி கிடையாது! அப்படியே எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீங்க வர மாட்டீங்க!”, என்றாள் அவரையே பார்த்து.

இப்படி பேசுபவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினார். இந்த பெண் மிகுந்த புத்திசாலி இவளை நாம் சொல்லி செய்ய வைப்பது என்பது இயலாத காரியம் என்று தெரிய ஆரம்பித்தது.

அவர் அமைதி காக்க, “யார் அவரோட சித்தப்பா பையன்? எங்க பணத்தை அவர்கிட்ட கொடுக்கணும்னு சொன்னது. இங்க இருக்காங்களா?”, என்றாள்.

“இல்லைம்மா! குமரேசு இங்க வரலை! ஆனா அவன்தான் எங்களை உன் கிட்ட பேசச் சொல்லி அனுப்பினான்”, என்றார்.

“என்ன பேசச்சொல்லி…”,

“சொத்துல அவனுக்கும் பங்கு வேணும்னு! எப்படி இருந்தாலும் அவன் உன் மாமனாருக்கு தம்பி பையன்! அவர் பையன் இறந்துட்டதால அவனும் அவருக்கு வாரிசுன்னு சொல்றான்! அவனுக்கு உரிமை இருக்குன்னு சொல்றான்”.

“இந்த பேச்செல்லாம் செல்லுமா? யார் யாருக்கு வாரிசு? என் கணவர் இறந்துட்டதால யாரும் என் மாமனாருக்கு வாரிசு ஆக தேவையில்லை. என் மகன் இருக்கான் அவங்க குடும்பத்துக்கு வாரிசா!”,

“நீ பேசுறது சரி தான்மா! ஆனா அது நீ அவரோட மருமகளா இருக்கிற வரைக்கும் தான். உனக்கும் சின்ன வயசு நாளைக்கே நீ யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டன்னா”,

இதுவரை ஆகாஷோ செந்திலோ அசோக்கோ அவளின் அப்பாவோ அவளின் பேச்சில் தலையிடாமல் இருந்தவர்கள், இப்போது அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவளையேப் பார்த்தனர்.

“பண்ணிகிட்டா மட்டும் என் பையன் என் கணவருக்கு பொறந்தவன் இல்லைன்னு ஆகிடுமா!”, என்றாள் சற்றும் அசராமல் அதே சமயம் கோபமாக.

இப்படிப் பட்ட வார்த்தை பிரயோகங்களை கனியிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.  

அவர்கள் அதிர்ச்சியில் இருக்க…….. “இதெல்லாம் அவனோட சொத்து, அவனோட உரிமை! அதை யாருக்காகவும் எதுக்காகவும் நான் விட்டு குடுக்க மாட்டேன்!”, என்றாள் தெளிவாக       

“ஏன் இவ்வளவு பிரச்சனை? இவ்வளவு சங்கடம்? சொத்துல அவனுக்கும் உரிமை இருக்குன்றான் நீயும் சின்ன பொண்ணு உன் வாழ்க்கையும் இப்படியே விட முடியாது! நீ நம்ம பையன் குமரேசனை கல்யாணம் பண்ணிகிட்டா எல்லா பிரச்சனையும் சுமுகமா முடிஞ்சிடும்!”, என்று ஒரு குண்டை தூக்கி போட்டது ஒரு பெருசு.

குண்டூசி விழுந்தாலும் கேட்க்க கூடிய அளவு நிஷப்தமானது அந்த இடம்…….

செந்தில் அவசரமாக ஆகாஷைப் பார்த்தான். அவன் ஏதாவது இதை கேட்டு டென்ஷன் ஆகிவிட்டானோ என்று. அது மாதிரியெல்லாம் அவனின் முகத்தில் ஒன்றுமில்லை

“எத்தனை பேர்னாலும் வாங்கடா! எது வேணுன்னாலும் பேசுங்கடா! gunன்னும் என்னுதுதான்! பொண்ணும் என்னுதுதான்!“, என்பது போல பார்த்திருந்தான்.

இவ்வளவு நேரமாக சமாளித்துக்கொண்டிருந்த கனியின் முகம் அதிர்ச்சியை காட்டியது.

எதற்காவது தன்னுடைய ஆதரவை வேண்டுவாளா என்று ஆகாஷ் கனியையேப் பார்த்திருக்க அவள் அப்போதும் அவனை பார்த்தாள் இல்லை…. 

இத்தனை போராட்டமா ஒரு பெண்ணுக்கு! இவர்கள் எல்லோரும் மனிதர்களா இல்லை வேறு எதுவுமா! இத்தனை பேருடைய சப்போர்ட் இருக்கும் போதே இவ்வளவு மன உளைச்சலை ஒரு பெண்ணுக்கு கொடுக்கிறார்கள், இன்னும் யாரும் இல்லை என்ற நிலை இருந்தால் இவர்கள் எல்லாம் என்னச் செய்ய மாட்டார்கள்…

எங்கோ அவனின் கண்ணுக்கு தெரியாமல் கஷ்டங்கள் அனுபவிக்கும் பெண்களை நினைத்து மருகியது நெஞ்சம்.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி! என!

சொன்ன மகாகவியின் பாரதியின் கூற்று எங்கே போயிற்று…..

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுப் பொய்யாகி……….

கஷ்டங்கள் அவர்களை ஆள்வதும் சட்டங்கள் இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருப்பதும் என்றே பல பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற கூற்றே மெய்யாகி போனது.    

பெண்கள் ஆண்களுக்கு அறிவில் இளைப்பில்லை தான்! ஆனால் அதை ஒத்துகொள்வோர் எத்தனை பேர்!  

“என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா!”, என்று வெடித்தாள் கனிமொழி.

“இதுல என்னம்மா தப்பு இருக்கு! நீயும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் போற…..”, என்று அவர் சொல்லும்போதே இடைமறித்தாள்……

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு யார் உங்களுக்கு சொன்னா”, என்று…..

“வெச்சானுங்கடா எனக்கு ஆப்பு”, என்று மனதிற்குள்ளேயே நொந்து கொண்டான் ஆகாஷ். 

“இப்போவே பேசிக்கறாங்க உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி குடுக்க போற மாப்பிள்ளை வீட்டில அவங்க அண்ணனுக்கே கேட்டாங்கன்னு! நீ பாட்டுக்கு பொசுக்குன்னு யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டன்னா என்ன ஆகுறது? யார் சொத்தை யார் அனுபவிக்கிறது? யாரோ அனுபவிக்கறதுக்கு எங்க பையனே அனுபவிச்சிட்டு போகட்டும்”,

“இந்த கேவலமான யோசனை யாரோடது?”,

“குமரேசு தான் பேசச்சொல்லி சொல்லிவிட்டான்”, 

அதற்குள் கனியின் தந்தை, “நாங்க ஒண்ணும் மாப்பிள்ளையோட அண்ணனுக்கு எங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தர்றோம்னு சொல்லலையே”, என்றார்.

“இப்போதைக்கு சொல்லாம இருக்கலாம். பின்னால வேற யாருக்காவது கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்…. எதுவேணா நடக்கலாம்! யாருக் கண்டா….. இத்தனை ஆம்பிளைங்க இருக்காங்க யாரையும் பேச விடாம இது இப்போவே இந்த பேச்சு பேசுது…….  பின்னால எப்படி இருக்குமோ என்னவோ….”, என்று அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே…….

“என் தங்கச்சியை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்க! யாரும் ஊர் போய் சேரமாட்டீங்க”, என்று முன்னால் வந்து நின்றான் அசோக்.

“தேவையில்லாததை பேசாதப்பா”, என்று அங்கிருந்த மற்றொரு பெருசு பேசியவரை  அடக்கினார்.  

“ஒண்ணு எங்க குமரேசனை கல்யாணம் பண்ணிக்கோ! இல்லை சொத்தை விட்டுகுடு! உனக்கு நாங்க ஏதாவது பார்த்து செய்ய சொல்றோம்!”, என்றார்.

“எதுவும் முடியாது”, என்றாள், “அவனைக் கல்யாணமும் பண்ண முடியாது! சொத்தையும் தர முடியாது!”, என்றாள்.

 “அதான் எங்க பொண்ணு சொல்லுதில்லை! இதுதான் எங்க முடிவு!”, என்று முன் வந்து பேசினார் அண்ணாமலை….

“இப்படி சொன்னா எப்படி? அப்போ யாரையாவது கல்யாணம் பண்ணி சொத்து எங்க குடும்பத்தை விட்டு போய் எவனோ அனுபவிக்கிறதை நாங்க வேடிக்கை பார்க்கணுமா! அதெல்லாம் முடியாது! எங்க பையனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்”, என்றனர்.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!

பாரதி இங்கும் ஆகாஷின் நினைவில் வந்தார்.

ஆளாளுக்குப் பேசினர், அவர்கள் புறமும் பேசினர். இவர்கள் புறமும் பேசினர். இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் கை கலப்பில் முடிந்திருக்கும்.

அதற்குள் கனி நிறுத்துங்க, “நான் யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டா தானே உங்க குடும்பத்தை விட்டு சொத்து போயிடும், நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”, என்றுக் கத்தினாள்.

எல்லோரும் அவளைப் பார்க்க………   

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு யார் சொன்னா உங்களுக்கு? நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்! நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா யாருக்கோ சொத்து போகும்னு தானே உங்க சொந்தக்காரனை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க! நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!”,

“இந்த சொத்து என் பையனோட உரிமை! அந்த உரிமையை யாருக்கும்  நான் விட்டுத்தர மாட்டேன்! நான் அறிவரசனோட மனைவி! என் பையன் அறிவரசனோட மகன்! இந்த அடையாளம் எங்களுக்கு போதும், இது மாறாது!”,  என்றாள் ஆவேசமாக.

“உங்களால என்ன முடியுமோ பார்த்துக்கங்க!  நான் கல்யாணமும் அவனை பண்ணிக்க மாட்டேன்! சொத்தையும் தரமாட்டேன்……..”,

எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல அவள் நின்றாள்.

எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா…..

 

இது பாரதியார் ஒரு கவிதை புனையும் படி கேட்க பாரதிதாசன் இயற்றிய பாடல், இப்போது அது ஆகாஷின் ஞாபகத்திற்கு வந்தது.

“தனியா இருக்குற பொண்ணு என்ன செஞ்சிட முடியும்ன்னு……… தைரியமா, சொல்ல போறது சரியா இல்லையான்னு கூட யோசிக்காம வந்துடீங்க! உங்களுக்கு எல்லாம் அசிங்கம்மா இல்லை!”,

“கல்யாணம் பேசறாங்கலாம் கல்யாணம்! எவன்டா அந்த குமரேசு? முதல்ல அவனை தைரியமா நேர்ல வர சொல்லுங்க! பின்னாடி நின்னுட்டே அத்தனை வேலையையும் செய்யறான்”,

“எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை! அன்னைக்கு ஊருக்கு வந்தப்போ என்ன கொல்ல முயற்சி நடந்தப்போ கூட நான் ஒருத்தர் பின்னாடி ஒளிஞ்சிக்கிடேன்னா உயிருக்கு பயந்து இல்லை! என் வயத்துல இருக்குற குழந்தைக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு தான்”,

“என் உயிர் போறதுக்கு முன்னாடி எதிர்ல இருக்குறவன் உயிர் நிச்சயமா போகும்! என் கணவரை ஏமாத்தி கொன்ன மாதிரி என்னை கொல்லலாம்னு யாரும் நினைச்சிட்டு இருக்க வேண்டாம்”,  

“கடவுள் நிச்சயம் என் பக்கம் இருக்கார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! என்னை சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க! எனக்கு ஒண்ணும் ஆகாது! ஆகவும் விடமாட்டாங்க!”,

இது தனக்கான வார்த்தை என்று ஆகாஷிற்கு புரிந்தது.  

“உறவுக்காரங்களா எப்போ வேணா என் வீட்டுக்கு வாங்க! போங்க! ஆனா இனிமே பஞ்சாயத்து பண்றேன்னு யாரும் இங்க வரக்கூடாது! அப்படி பண்ணு இப்படி பண்ணுன்னு சொல்லல் கூடாது! எவனுக்காவது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்க……”,

“நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது! உங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்கன்னு ஞாபகத்துல வெச்சிப் பேசுங்க”,

“என்னமா மிரட்ரியா”,

“புரிஞ்சிடுச்சா! ரொம்ப சந்தோஷம்! எங்க புரியாம போனா செயல்ல தான் காட்ட வேண்டி வருமோன்னு நினைச்சேன்”, என்றாள்.

சக்தியின் ரூபமாய் தான் நின்றாள்…..

அத்தனை ஆண்களையும் ஒற்றை பெண்ணாய் எதிர்கொண்டாள்…….

அதற்கு மேல் வார்த்தையை விடும் அளவுக்கு அங்கு எவருக்கும் துணிவு இருக்கவில்லை.  

கை தட்ட வேண்டும் என்பது போல ஆகாஷின் கைகள் பரபரத்தது.   

“கிளம்புங்க! கடவுள் கிட்ட வேண்டிக்கறேன், என் நிலைமை உங்க வீட்டு பொண்ணுங்க யாருக்கும் வந்துடக் கூடாதுன்னு”,

“வர வைக்கிற ஆசை யாருக்கு இருந்தாலும் வாங்க பார்த்துக்கலாம்!”, என்றாள்.

அவள் சொல்லவும் அசோக்கும் செந்திலும் அவளின் புறம் சென்று நின்றனர்….

அதை பார்த்த ஒரு பெருசு சட்டென்று இறங்கி வந்தது. “ஏதோ யோசனை சொல்லலாம்னு வந்தோம், அதுக்கு எதுக்குமா இவ்வளவு கோபம். நீயும் எங்க வீட்டு மருமகதான்மா! சின்ன பொண்ணு எதுவும் தெரியாதுன்னு யோசனை சொல்ல வந்தோம்! அவ்வளவு தான்… கோவம் வேண்டாம்மா”, என்று அவளை சமாதானப்படுத்தினர். 

“நீங்க சொன்னதுக்கு பேர் யோசனையா”,

“விடும்மா! விடும்மா!”, என்று மேலும் ரெண்டொரு வார்த்தைகள் பேசி சென்றனர்.   

மிரட்ட வந்தவர்கள் மிரட்டலுக்கு பயந்து திரும்ப சென்றனர் என்பதே உண்மை.

வெளியே பேசிக்கொண்டும் சென்றனர்…….. “நான் அப்பவே சொன்னேன், அந்த குமரேசு பையன் சொல்றான்னு ரொம்ப துள்ளாதீங்கன்னு! யாரு கேட்டா? அவன் தண்ணிய வாங்கி குடுத்து ஏத்துன ஏத்துல பஞ்சாயத்து பண்றேன்னு வந்து அசிங்கப்பட்டது தான் மிச்சம்”,

“ஊருக்குள்ள ஒரு பொம்பளை புள்ளைய மிரட்ட இத்தனை பேர் கிளம்பி வந்து அவகிட்ட பயந்து திரும்பறோம்னு நினைச்சா எவனாவது மதிப்பானா நம்ம”,

“அட நீ என்ன அண்ணே இப்படி பேசுற! அது யாரு நம்ம மருமக பொண்ணு! நம்ம வீட்டுக்கு வந்து நம்ம குல வாரிசை சுமந்திருச்சு இல்லை, அதுதான் இந்த போடு போடுது”, என்றார் ஒருவர்.

“ஆன் இப்போ பேசு வக்கனையா!  இங்க நடந்ததை வெளில சொல்லிடாதீங்க நமக்குள்ளயே இருக்கட்டும், இல்லை வெச்சிருக்குற மீசைக்கு அர்த்தமில்லாம போயிடும்”, என்று ஒருவர் புலம்பிக்கொண்டே செல்ல பின் தொடர்ந்தனர் மற்றவர்கள்.

அவர்கள் கிளம்பவும் ஆகாஷின் கண்ணசைவில் அண்ணாமலை அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

கிளம்பும்முன் கனியின் தந்தையிடம், “எதுக்கும் பயந்துக்காதீங்க! நாங்க உங்க கூட இருக்கோம்! எதாவதுன்னா ஒரு போன் பண்ணுங்க, அடுத்த நிமிஷம் இங்க இருப்போம்”, என்று சொல்லி சென்றார் அண்ணாமலை. 

ஆகாஷ் அங்கே இருப்பது தெரிந்தாலும் கனி ஆகாஷை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அவள் பாட்டிற்க்கு உள்ளே சென்றாள்.

“சும்மாவே திரும்பி பார்க்க மாட்டா! இதுல நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!…… மாட்டேன்!……… மாட்டேன்னு!…… பத்து தரம் அறிக்கை விட்டிருக்கா! இனிமே பார்ப்பா! ரொம்பக் கஷ்டம்!…….”, என்று புலம்பினான் ஆகாஷ்.

ஆகாஷ் செந்திலை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

“என்னடா டென்சன் ஆகிட்டியா! கனி பேசினதைப் பார்த்து!”,

“யப்பா! ஒரு தெலுகு மூவி பார்த்த எஃபக்ட்! அப்படியே அவ பேச பேச விசிலடிக்கணும் போல இருந்தது! சும்மா கலக்கிட்டா!”,

“என்னடா இவன் இவ்வளவு ஜாலியா இருக்கான், ஒரு வேளை விரக்தில ஒரு வழி ஆகிட்டானா”, என்று கவலைப்பட்ட செந்தில்…….. அவனை தைரியமாக்கும் பொருட்டு…….   

 “என்னடா அவ இப்படிச் சொல்லிட்டா! பொண்ணைத் தூக்கிடலாமா!”, என்றான் செந்தில்.

“டேய்! நீ அவளுக்கு அண்ணன்! அவ அண்ணன் மாதிரி பேசுடா!”, என்றான் ஆகாஷ்.

“எப்படி பேசுறது? அவ தான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளே?”,

“அவ தானே யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா! அவளை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு சொல்லலையே?”,

“என்னடா சொல்ற? புரியலையே”,

“என்ன புரியலை? அவளா எனக்கு தாலி கட்டி புருஷன் ஆகிக்க போறா…. நான் தான் அவளுக்கு தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கிக்கப் போறேன்! பார்த்துக்கலாம் விடு!”,

“இத்தனை பேரையும் எதிர்த்து தனியா போராடரா! நம்ம அதை கண்டிப்பா மதிக்கணும்! முதல்ல அவ தங்கச்சி கல்யாணம் முடியட்டும்! அப்புறம் என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்! சரி, வண்டிய எடு!”,

“எங்க விடுறது”,

“சென்னைக்கு”,

“என்ன? சென்னைக்கா!!!!!!!!”,

“ஆமாம்! சென்னைக்கு போய் வேலையை பார்க்குறேன்! நான் கன்செர்ன் போயே ரொம்ப நாள் ஆச்சு! வண்டியை நீயே ஒட்டு! இனிமே நான் என்னை ஜாக்கிரதையா பார்த்துக்கணும்! இவ பேசுற பேச்சுக்கு எங்க போனாலும் வம்பு இழுக்குரா! அதை எல்லாம் எதிர் கொள்றது நான் என் உடம்பை சீக்கிரம் தேத்தனும்!”, என்று புன்னகைத்தான்.

“நீ…….. நீ ஒண்ணும் அப்செட் இல்லையே”,

“இல்லவே இல்லை! எனக்கு அவளை இன்னும் இன்னும் பிடிக்குது! அவ தைரியம், அவ போராட்ட குணம், எல்லாம் ரொம்பப் பிடிக்குது! அவச் சொன்ன மாதிரி நான் அவ கல்யாணத்துக்கு முன்னமே அவளைப் பார்த்திருக்கலாம்! விடு!”, என்றவன்,

“என்ன சென்னை வர்றியா! இல்லை டிரைவர் சொல்றியா!”, என்றான் ஆகாஷ்.

“நானே வர்றேன்”, என்றான் செந்தில்.

ராஜியிடம் சொல்லிவிட்டு வண்டி சென்னையை நோக்கி சீறிப்பாய்ந்தது.

 

Advertisement