Advertisement

அத்தியாயம் பத்து:

ராஜியின் பளிச் புன்னகை கனியைக் கவர்ந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள்.

“எனக்கு ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசை அக்கா! இவங்க உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாங்க!”, என்று செந்திலை காட்டியவள்…… “ஆனா சந்தர்ப்பம் அமையலை”, என்றாள்.   

கனிக்கு என்னப் பேசுவது என்று தெரியவில்லை, பதிலுக்கு புன்னகைத்தவள், “நான் அக்காவா”, என்று மட்டும் நினைத்தாள்.

அப்போது பார்த்து கனியின் சிறிய தங்கை லக்ஷ்மி வந்தாள். அவள் ராஜியிடம், “நீ…..”, என்று பேச ஆர்வம் காட்ட,

கனியிடம் ராஜி சொன்னாள்…….. “நானும் இவளும் ஒரே ஸ்கூல், ஒரே ஸ்டாண்டர்ட் செக்ஷன் தான் வேற”, என்று……..

“ஒஹ்! அவ்வளவு வயதில் சிறியவளா!”, என்று கனிக்கு தோன்றியது. இவ்வளவு சிறிய பெண்ணுக்கு ஆகாஷ் அவ்வளவு முக்கியத்துவம் குடுக்கிறானா என்று இருந்தது. 

ராஜியிடம், “என்ன சாப்பிடறீங்கம்மா எல்லோரும்…….. டீ போடட்டா இல்லை காபி போடட்டா……….”, என்று கனியின் அம்மா கேட்க……

“இப்போ தான் சாப்பிட்டிட்டு வந்தோம், கொஞ்ச நேரம் போகட்டும்மா”, என்றாள் ராஜி. வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை.

கனி ஆகாஷைப் பார்க்க………. அவன் இவள் புறம் திரும்பக் கூட இல்லை செல் போனில் ஏதோ நோண்டிக்கொண்டு இருந்தான். “ம்! கோபமா!”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு குழந்தையை தூக்கி வர சென்றாள் கனி.  

அவள் குழந்தைக்கு பசியாற்றி எடுத்து வரும் வரை ராஜியிடம் லக்ஷ்மி பேசிக்கொண்டு இருந்தாள்.

கனி குழந்தையை தூக்கி வந்ததும் ஆர்வமாக கையில் வாங்கினாள் ராஜி. “உங்களை  மாதிரியே இவனும் ரொம்ப அழகு”, என்றாள்.

கனி இதற்கும் புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்தாள்……

“பேர் வெச்சாச்சா! என்ன பேர் செலக்ட் பண்ணியிருக்கீங்க!”, என்றாள் ஆர்வமாக ராஜி.

பேர் என்றதும் கனியின் பார்வை ஆகாஷை தீண்ட…… அவன் அப்போதும் தலை நிமிர்ந்தான் இல்லை. “ரொம்ப கோபம் போல! தலை தூக்கி என்னைப் பார்க்க மாட்டங்களோ! போறாங்க!”, என்று நினைத்தாள்.

அவளின் கணவன் வீட்டுக் கதையை சொல்வாள் என்று ஆகாஷ் காதை மூடிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்க……. கனி அப்படி எதுவும் சொல்லவில்லை. “இன்னும் செலக்ட் பண்ணலை இனிமே தான் பண்ணனும்”, என்றாள்.

ராஜி செந்திலைப் பார்க்க அவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு நகை டப்பாவை எடுத்தான்.

டப்பா தான் சிறியதாய் இருந்தது உள்ளே இருந்த நகைகளோ பல……

குழந்தை கையில் இருந்ததால் கனியின் அம்மாவை அழைத்த ராஜி…… “இதெல்லாம் இவனுக்கு போடுங்கம்மா!”, என்று சொல்ல, நகை டப்பாவை செந்தில் அவரின் கையில் கொடுத்தான்.

அவர் என்ன இருக்கிறது என்று பார்க்க எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி இருந்தது. அவர் கையில் எடுக்க அசோக் அதைப் பிரித்தான், குழந்தைக்கு என்பதால் எல்லாம் மெல்லியதாக இருந்தது, இருந்தாலும் அறுந்து போகாத வகையில் மொத்தமாக இருந்தது.

ஒரு கழுத்தில் போடும் செயின் இருந்தது, இரண்டு தட்டு வளையல் இருந்தது, ஒரு அரைஞான் கொடி இருந்தது, ஒரு மோதிரம் இருந்தது.

“எதுக்கு  இத்தனை”, என்று கனி சொல்ல…….. ராஜி காதில் வாங்கவே இல்லை, “போடுங்கம்மா”, என்றாள்.

கனியின் அம்மாவோ கனியின் சம்மததிற்காக அவள் முகம் பார்க்க…… அசோக் போடட்டும் என்பது போல பார்க்க……… ஆகாஷ் இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல இன்னும் போனையே நோண்டிக்கொண்டு இருந்தான்.

கனி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க…….. “அக்கா இதெல்லாம் திடீர்ன்னு என்ன எதுக்குன்னு நீங்க யோசிக்க வேண்டாம், அசோக் அண்ணா தங்கச்சி இவருக்கும்  தங்கச்சி தான். அந்த முறை தான் இது, வேற எந்த நோக்கமும் இதுல இல்லை, வேற யாரும் இதுல சம்மந்தப்படலை”,

“நாம திரும்ப செஞ்சுக்கலாம்”, என்று அசோக் தாழ்ந்தக் குரலில் சொன்னான்.

சற்றே முகம் தெளிந்த கனி “போடுங்கம்மா”, என்றாள். சொன்னவுடன் அவளின் அம்மா குழந்தைக்கு நகைகள் போட செந்தில் உதவினான். அவர்கள் அதில் கவனமாய் இருந்தாலும் ராஜியின் கண்கள் அவ்வப்போது கனியையும் ஆகாஷையும் கவனிக்க தவறவில்லை.

கனி அதிகம் யாரின் கவனத்தையும் கவராமல் இயல்பு போல ஆகாஷின் அருகில் வந்தவள், அவன் வந்ததிலிருந்து தலை நிமிராமல் போனையே பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காமல், “எனக்கு ஒரு போன் பண்ணனும்”, என்று அவனின் போனிற்காக கையை நீட்டினாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்தான்…….. பார்க்கும் போதே அவன் கையில் இருந்த போனை பறித்தாள்.

அதை வாங்கியவள், அவன் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று பார்க்க…. அதில் ஏதோ கேம் இருந்தது, விளையாடிக் கொண்டிருந்திருப்பான் போல. அங்கிருந்த மேஜை மேல் அந்த போனை வைத்துவிட்டு, “கிளம்பற வரைக்கும் அதை எடுக்கக் கூடாது”, என்று மிரட்டலாக சொல்லிவிட்டு நகர்ந்து நின்றாள்.

பார்த்த ராஜிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சட்டென்று சிரித்துவிட்டாள். “எவ்வளவு உரிமையாக இவனோடப் பழகுகிறாங்க, அப்புறம் எதுக்கு நம்ம பயபுள்ள இந்த பயம் பயந்துக்குது தெரியலையே…….”, 

செந்திலும் அசோக்கும் இவள் சிரிக்கவும் என்ன என்பது போல பார்க்க….. “அழகா இருக்கான் இல்லை”, என்று குழந்தையைப் பார்த்து சொல்லி பேச்சை மாற்றினாள்.

“குழந்தைங்கன்னா ரொம்ப ஆசை போல, நீயும் ஒன்னை பெத்துக்கம்மா”, என்றார் பெரியவராக கனியின் அம்மா.

யாரும் கவனிக்காத போது ராஜி செந்திலை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி, “பெத்துக்கலாமா”, என்பது போல கண்ணடிக்க….. யாராவது பார்த்து விடுவார்களோ என்று செந்தில்தான் பதறிப் போய் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அவள் குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் போது குழந்தை அவளின் மடியில் ஈரம் செய்துவிட, “சாரி! சாரி!”, என்று பதறினாள் கனி……. “டையப்பர் போடணும்னு நினைச்சேன்! மறந்துட்டேன்!”, என்றாள்.

“அச்சோ! என்ன அக்கா நீங்க! இது ஒரு விஷயமா! குழந்தைங்கன்னா அப்படிதான்!”, என்று அவள் சொல்லும்போதே……

“வாம்மா தண்ணி போட்டு துடைச்சிக்கலாம்”, என்று கனியின் அம்மா அவளை உள்ளே அழைத்து போனார்.

குழந்தைக்கு துணி மாற்றி வர கனியும் உள்ளே போனாள்.

ஆகாஷ் செந்தில் அசோக் மூவரும் தனித்து விடப்பட குத்தகைக் காரர்களை என்ன செய்யலாம் என்று பேச ஆரம்பித்தனர். பேசும்போதே கனியின் அப்பாவும் வர அவரும் இணைந்து கொண்டார்.

குத்தகைக்காரர்களை அசோக்கும் அவன் தந்தையும் போய் பார்ப்பது என்று முடிவாயிற்று. செந்திலும் ஆகாஷும் அவர்களின் கூடவே கிளம்பினர். செந்தில் அசோக்கும் உயிர் நண்பர்கள் என்பதால் அவர்களுடன் வந்த ஆகாஷிற்கு ஏன் அக்கறை என்றெல்லாம் கனியின் தந்தை யோசிக்கவில்லை. ஏதோ நண்பன் கூட வருகிறான் என்றே நினைத்தார். 

மாலை மணி ஆறு என்க…….. நேரம் கடத்தாமல் அப்போதே கிளம்பினர். ராஜியிடம் சொல்லலாம் என்றாள் அவள் கனியின் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

செந்தில் அழைத்தவுடன், என்ன விஷயம் என்று தெரியாமலேயே, “நீங்க போங்க”, என்றாள்.

அவளிடம் சொல்லி புரியவைக்க முடியாது வேண்டுமென்றால் போனில் அழைத்து விவரம் கேட்கட்டும் என்று விட்டு ஆண்கள் அனைவரும் கனியின் தங்கை லட்சுமியிடம், “வெளியே போய்விட்டு வந்துவிடுகிறோம்”, என்று சொல்லி கிளம்பினர். வீட்டுப் பெண்கள் யாரிடமும் எங்கேப் போகிறோம் என்று தெரிவிக்கவில்லை.

ஆகாஷ் வெளியே வரவும் அவனை நோக்கி அவன் வைத்த ஆட்கள் இரண்டு பேரும் வர அவர்களையும் கூட அழைத்துக்கொண்டான். அவன் அவர்களை அழைக்கவும் தான் அசோகிற்க்கும் அவனின் தந்தைக்கும் இவர்கள் அவன் வைத்த ஆட்கள் என்பதே புரிந்தது.

அசோக்கின் தந்தைக்கு என்ன நடக்கிறது தங்களைச் சுற்றி என்றுப் புரியவில்லை. 

செந்தில் இதை அசோக்கிடம் கூட சொல்லியிருக்கவில்லை. கனியின் நிலங்கள் இருக்கும் இடம் அசோகிற்கு தான் தெரியும் என்பதால் முதலில் அதை எல்லாம் காட்டினான். அங்கிருந்த நிலத்தின் மதிப்புகளைக் கேட்டு அதை கணக்கிட்ட ஆகாஷிற்கு இது பெரிய சொத்து என்பது புரிந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் சொத்துப் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்பதும் புரிந்தது. பின்பு குத்தகைக்காரர்கள் வீட்டிற்கு போகும் போது மணி எட்டை தொட்டிருந்தது. அப்படியும் விடாமல் அசோக்கும் அவன் தந்தையும் மட்டும் போய் முதலில் அவர்களிடம் பேசினர்.

பேசியதற்கு எல்லாம் ஒன்றுப் போல அவர்கள் எல்லோரும், “அவரின் சித்தப்பா மகன் சொத்து அவரது என்கிறான்……… நீங்களும் உங்களது மகளது என்று சொல்கிறீர்கள், முதலில் நீங்கள் பைசல் பண்ணுங்கள் பிறகு பேசலாம்”, என்றனர்.

அவர்கள் பேசும்வரை அமைதியாக இருந்த செந்திலும் ஆகாஷும் அவர்கள் எல்லோரையும் பார்த்து வந்தப் பின்னர் எல்லோருடைய வீட்டிற்கும் திரும்ப சென்றனர்.

இப்போது பேசியது செந்தில்……. ஆகாஷ் முன்னிற்க அவனின் இருபுறமும் அந்த செக்யூரிட்டி ஆட்கள் நின்றனர். அவர்களின் தோரணையே வெட்டவா குத்தவா என்பது போல இருந்தது.

“சொத்தோட உரிமைக்காரங்க கனிமொழி தான்! நாளைக்கு ஒரு நாள் டைம்! நாளைக்குள்ள பணம் அவங்க கைக்கு வரணும். இல்லைனா அதுக்கு அடுத்த நாள் இருந்து நிலத்துகுள்ள காலை எவனும் வைக்க முடியாது. நிலத்துகுள்ள மட்டுமில்ல பணத்தை குடுக்காம உங்க வீட்டுக்குள்ளேயும் வைக்க முடியாது. நடுத்தெருவுல நிக்கற நிலைமைக்கு போக விருப்பப்பட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”, 

“எவனுக்கு தைரியம் இருக்கோ எதுத்து நில்லுங்க்டா பார்க்கலாம்”, என்றான் செந்தில்.

இப்போது முன் அந்த அசோக், “ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லைன்னு அவளை ஏமாத்தலாம்ன்னு நினைக்காதீங்க…….. பொறந்தவங்க நாங்க இருக்கோம்டா”, என்றான்.

ஆகாஷ் வாயைத்திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் வெறும் பார்வையாளன் மட்டுமல்ல அவனுடைய சொல்லும் செயலும் செந்திலின் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்படி ஒன்றும் பெரிய பின்புலம் கனிமொழியின் வீட்டினருக்கு இல்லை என்பதால் தான் பிரச்சனையில் தாங்கள் பணம் கொடுக்காமல் விடலாம் என்று குத்தகைக்காரர்கள் நினைத்திருக்க…….. இப்படி இத்தனை பேர் குதித்து மிரட்டுவர் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

கனியின் அப்பா தான் சற்று பயந்தார், ஏதாவது பிரச்சனை ஆகிவிடப்போகிறது என்று. செந்தில் அதற்கும் அவரிடம், “அப்பா! நான் இருக்கேன்! நான் பார்த்துக்கறேன்!”, என்று ஒரே வார்த்தையில் அடக்கினான்.

இருந்தாலும் அவரின் முகத்தில் இருந்த கலக்கம் மறையவில்லை. அவர்களை வீட்டுக்கு விட வந்த போது நேரம் பதினொன்றை நெருங்கி இருந்தது. அவர்கள் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதுமே கனியின் அம்மா வெளியே வந்தார்.

“ராஜி இருக்காளாமா இல்லை கிளம்பிட்டாளா?”, என்றான் செந்தில்.

“இருக்கா செந்தில், உள்ள வா!”, என்றவர்…….

“நீங்களும் வாங்க தம்பி”, என்றார் ஆகாஷைப் பார்த்து.

“இதேடா”, என்பது போல ஆகாஷும் செந்திலும் பார்த்துக்கொண்டனர். இந்த ராஜி ஏதோ செய்திருக்கிறாள் என்பது அவரது உபசரிப்பிலேயே இருவருக்கும் புரிந்தது.

உள்ளே சென்றதும் ராஜியின் அருகில் செந்தில் மெதுவான குரலில், “இங்க இன்னும் என்னப் பண்ணிட்டு இருக்க? நான் வரலைன்னா கிளம்ப வேண்டியதுதானே. மணி பாரு பதினொன்னு……….”,

“நான் இங்க செந்தில் அண்ணாவோட அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன். டைம் போனதே தெரியலை! அப்புறம் பார்த்தா டைம் ஒன்பதரை ஆகிடுச்சு! இனிமே எப்படி தனியாப் போறது நீ வரட்டும்னு உட்கார்ந்துட்டேன்! வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்!”, என்றாள்.

“சரி! சரி! கிளம்பு!”, என்று அவன் அவசரப்படுத்த……

“எங்க கிளம்பறது இங்க நமக்கு டிஃபன் ரெடி பண்ணியிருக்காங்க”, என்றாள்.

“எதுக்கு இப்போ நீ எல்லோருக்கும் சிரமம் குடுத்த! நீ கிளம்பியிருந்தா நாங்களும் வாசலோட கிளம்பியிருப்போம்!”, என்றான்.

“ஏய் அடங்கு! சும்மா ஓவரா சீன் போடாத! வந்ததுல இருந்து கேள்வியா கேட்டு தள்ளுற! உனக்கு போறதுன்னா போ! நான் வந்துக்கறேன்!”, என்றவள்……

“அப்புறம் இந்த விருந்து உனக்கில்லை, ஆகாஷுக்கு! அதனால அமைதியா இரு”, என்றாள்.

“அவனுக்கு எதுக்கு விருந்து”,

“அவங்க தானே கனியை காப்பாத்தினாங்க! நான் சொல்லிட்டேன்!”, என்றாள்.

“ஏன் சொன்ன?”,

“மறைக்கப்படற உதவிகள் அதனோட முக்கியத்துவத்தை பெறாது புரிஞ்சுதா”, என்றாள்.

அந்த நேரம் கனியின் அம்மாவும் அசோக்கிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். “எவ்வளவு பெரிய விஷயத்தை எங்ககிட்ட மறைச்சிருக்க நீ! கனிக்கு வந்த ஆபத்தை பத்தி எங்ககிட்ட சொல்லவேயில்லை. இந்த தம்பி தான் காப்பாத்தியிருக்கு! அவளுக்கு பதிலா அது காயம் பட்டிருக்கு! ஆசுபத்திரில பத்து நாள் இருந்திருக்கு……  அதையும் நீ சொல்லை!”, என்று அவனைத் திட்டிக்கொண்டு இருந்தார்.

கனியின் அப்பா என்ன? என்ன? என்று விவரம் கேட்க, அவருக்கும் விஷயம் சொல்ல பட்டது.

அப்போதுதான் கனி அவளின் அம்மாவிடம் அவ்வளவு திட்டு வாங்கியிருந்தாள் விஷயத்தை மறைத்ததற்காக……

“நீ கூட எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டியே செந்திலு, இவ்வளவு பிரச்சனை ஏற்கனவே நடந்திருக்குன்னு தெரிஞ்சா நான் அந்த குத்தகைக்காரங்க கிட்ட பேசவே ஒத்துக்கிட்டு இருக்க மாட்டேன்”, என்றார் கனியின் அப்பா.

அவரிடம், “நீங்க பயந்துடுவீங்கன்னு தான் பா சொல்லலை”, என்று செந்தில் சொன்னாலும்…….

“எல்லாம் உன்னால தான், உன்னை யாரு உளற சொன்னது”,  என்று ராஜியை பார்த்து முறைத்தான்.

இதெற்கெல்லாம் அசருபவளா ராஜி, “போடா டேய்! போடா!”, என்று உதட்டை மட்டும் அசைத்து காண்பித்தாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷ், “ரொம்ப மரியாதையா திட்டுறா போல உன்னை”, என்று நக்கலடிக்க,

“வந்தியா உன் ஆளு எங்கன்னு தேடு! அவளை லுக்கு விடு! அதைவிட்டுட்டு அவ என்னைத் திட்டுறதை ரசிச்சுப் பார்க்கற நீ!”, என்று பல்லைக் கடித்தான்.

அதற்கு ஆகாஷ் பதில் கொடுக்குமுன் கனியின் அன்னையும் தந்தையும் அவனருகில் வந்தார்கள். அவனின் கையைப் பிடித்துக்கொண்ட கனியின் தந்தை, “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை தம்பி!”, என்றார் தழுதழுத்த குரலில்.

“காப்பாதேண்டா!”, என்பது போல செந்திலை ஆகாஷ் ஒரு பார்வை பார்க்க…….. ராஜி பதிலுக்கு செந்திலை பார்த்தாள், “நீ இதுல தலையிடாதே”, என்பது போல.

செந்தில் நொந்து விட்டான். “ஒருத்தர் இருந்தாலே என்னால சமாளிக்க முடியாது, இதுல ரெண்டு பேரும் என்னை மாத்தி மாத்தி கொல்றாங்கடா! கடவுளே என்னை மட்டும் காப்பாத்துறா”, என்று மறுபடியும் ஒரு வேண்டுதலை வைத்தவன், ஆகாஷின் புறமும் திரும்பவில்லை, ராஜியின் புறமும் திரும்பவில்லை. 

கிட்டத் தட்ட பத்து நிமிடங்கள் நன்றி நவிலல் படலம் நடக்க…….. ஆகாஷ் பரிதாபமாக நின்றிருந்தான்.

குழந்தையை உறங்க வைத்துவிட்டு வந்த கனி இந்த சீனைப் பார்த்தவள், “அப்பா விடுங்க! எல்லோரும் பசியா இருப்பாங்க! சாப்பிடட்டும்!”, என்று காப்பாற்றி விட்டாள்.

அந்த இரவு நேரத்தில் மிகவும் சுவையான விருந்தை தயாரித்திருந்தார் கனியின் அம்மா! “எதுக்கு அம்மா உங்களுக்கு சிரமம்”, என்று செந்தில் சொல்ல….

“எங்களுக்காக நீ எவ்வளவு செய்யறே, அது முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமேயில்லை! வீட்ல நாலு பொம்பளைங்க இருக்கோம் இதைக் கூட செய்ய மாட்டோமா!”, என்றார்.

“எங்கம்மா ப்ரியாவும் லக்ஷ்மியும்…….”,

“தூங்கிட்டாங்க”,

பிறகு ஆகாஷையும் செந்திலையும் அமர வைத்து பரிமாறினார். கனி இதில் எதுவும் தலையிடவில்லை. “அம்மா! ராஜியையும் உட்காரச் சொல்லுங்க! அவங்களுக்கு லேட் ஆகுது!”, என்று மட்டும் சொன்னாள்.

கனியின் அன்னையும் தந்தையும் தன்னையே கவனிப்பது ஆகாஷிற்கு புரிந்ததால் கனியைப் பார்ப்பதை தவிர்த்தான். அவனின் ஒற்றை பார்வை காட்டிக்கொடுத்து விடுமே அவளின் மேல் அவனுக்கு உள்ள காதலை. அதனால் தவிர்த்தான். அவனுக்கு தெரியாது ராஜி அந்த விஷயத்தையும் கனியின் அம்மாவிடம் சொல்லியிருந்தாள் என்று.                                  

 ராஜியாவது எடுத்த விஷயத்தை முடிக்காமல் விடுவதாவது…. “நீ என்ன ஆகாஷை வேண்டாம் என்று சொல்வது, உங்களின் கல்யாணத்தை நடத்திக் காட்டுகிறேனா இல்லையா பார்!”, என்று அவள் மனதிற்குள் கனியைப் பார்த்து சூளுரைத்திருந்தது செந்திலுக்கு கூடத் தெரியாது.

ஆனால் ராஜி தன் அம்மாவிடம் எல்லா விஷயத்தையும் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து பிரித்து திரித்து வைத்ததைப் பார்த்தப் பின்பு…… இவள் ஆகாஷின் சார்பாய் பேசுகிறாள் என்ற அளவிற்கு கூட புரியாத முட்டாளா என்ன கனி!

அவ்வளவு கோபத்தில் இருந்தாள் ராஜி மேல். அவளின் அம்மா சற்று நேரம் அந்த புறம் நகர்ந்ததும் செந்திலைப் பார்த்து…….. “எப்படி அண்ணா இவளை வெச்சி சமாளிக்கறீங்க நீங்க?”, என்றாள்.

“ஏன்?”, என்பது போலப் பார்க்க……..

“இவ எல்லாம் ம்யூசியத்தில வெக்க வேண்டிய ஆளு! சான்சே இல்லை! ஒன்னை பாக்கி விடலை!”, என்றாள் காட்டமாக.

ராஜியை பற்றி கனி இப்படி பேசியதும் அதிர்ந்தே போய்விட்டனர் செந்திலும் ஆகாஷும். அசோக் என்னடா புது வம்பு இது என்பது போல பார்த்திருந்தான்.  

“இந்த லூசு என்ன உங்ககிட்ட உளறிச்சின்னு தெரியாது!”, என்று ஆகாஷை காட்டியவள்……….

“அதை நீங்க இவகிட்ட என்ன சொன்னீங்கன்னு தெரியலை! இவ எல்லாத்தையும் எங்கம்மாகிட்ட உளறி வெச்சிருக்கா! இவங்க முதல் நாள் என்னை பார்த்ததுல இருந்து…. கத்தி குத்து வாங்குனதுல இருந்து…….. நேத்து அர்த்த ராத்திரில சென்னைல இருந்து என்னைப் பார்க்க வந்தது வரை சொல்லிட்டா!”, என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

“அது மட்டுமா இவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு! கல்யாணம் பண்ண கேட்கறாங்கன்னு அதையும் சொல்லிட்டா! ஒன்னையும் பாக்கி விடலை! இதுல எப்போக் கல்யாணம் பண்ணி குடுக்கறீங்கன்னு கேட்கறா! எங்கம்மா என்னைப் பின்னிப் பெடலெடுத்துட்டாங்க…….. என்ன இவ்வளவு விஷயத்தை மறைச்சிட்டேன்னு! நான் அடி வாங்கம்மா தப்பிச்சது பெரிய விஷயம்”,   

“நானும் சொல்லாத சொல்லாதன்னு வித விதமா ஆக்ஷன் பண்ணினேன்! எதையும் கண்டுக்கலை! வேணும்னே சொல்லிட்டே இருக்கா!”, என்றாள்.

ஆகாஷும் செந்திலும் பரிதாபமாக அமர்ந்திருந்தனர். இவ்வளவு நடந்திருக்கிறதா என்று வாயை பிளந்து கேட்டுகொண்டிருந்தான் அசோக்.   

“ஆமா! வேணும்னு தான் சொன்னேன்! இவங்க உங்களுக்காக கத்திக்குத்து வாங்கியிருகாங்க! ஏன்? உங்கக்கிட்ட அடிக் கூட வாங்கியிருக்காங்க! இதெல்லாம் உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிய வேண்டாமா……”,

“இப்போவே ஒருத்தன் பொண்ணை கேட்டுட்டு வந்து நிக்கிறான்! நாளைக்கு வேற ஒருத்தன் வரமாட்டான்னு என்ன நிச்சயம்! நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்வீங்க! உங்க பேச்சைக் கேட்காம யாருக்காவது வாக்கு குடுத்துட்டா? நாங்க தலைல துண்டைப் போட்டுட்டு போறதா! அதான் சொன்னேன்!”, என்றாள் படபடவென்று.

“இவ பேசுற பேச்சுக்கு நான் தான் தலைல துண்டை போட்டுட்டு போகணும் போல இருக்கே!”, என்று தன் மனைவியின் வீர தீர சாகசங்களை எண்ணி செந்தில் நொந்து கொண்டிருக்க……..

“அவ அடிச்சது என்னவோ ஒரு தடவை தான்! அதைச் சொல்லியே சொல்லியே புருஷனும் பொண்டாட்டியும் என் மானத்தை வாங்கறாங்களே!”, என்று மனதிற்குள்ளேயே ரத்தக் கண்ணீர் வடித்தான் ஆகாஷ்.         

ஆகாஷைப் பார்த்து முறைத்த கனி……. “நான் அடிச்சதை ஊர் முழுசும் டமாரம் அடிச்சீங்களா”, என்று சண்டைக்கு போக……

அவன் ராஜியை பார்த்து முறைத்தான்.

“இங்க என்ன லுக்கு! ஊர் முழுசும் தெரியற மாதிரி அவங்க கன்னத்துல கோலம் போட்டது நீங்க தான் அக்கா!”, என்றவள்……..

“ஆமாம்! அவ்வளவு அடி வாங்குற அளவுக்கு நீங்க என்னப் பண்ணுனீங்க?”, எனவும் பதறிப் போனான் ஆகாஷ்.

“இல்லை! நான் எதுவும் சொல்லலை!”, என்று அலறிக் கனியைப் பார்த்தான். அவள் முறைத்த முறைப்பில், “நிஜமாவே நான் சொல்லலை கனி! நம்பு!”, என்று அவன் கெஞ்சவும்…..

“ஏய்! அடங்கவே மாட்டியாடி நீ!”, என்று செந்தில் ராஜியிடம் மெதுவான குரலில் கோபப்பட……

அவளும் மெதுவான குரலில் அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள், “ஏதோ நம்மளால முடிஞ்சது!”, என்று சொல்லி ஒரு மயக்கும் புன்னகையை செந்திலை நோக்கி வீசினாள் ராஜி.

“மோகினி பிசாசு”, என்று அவளை வசைப்பாடினான்.

“இருடா! மோகினி பிசாசு என்ன பண்ணும்ன்னு உனக்கு காட்டறேன்”,

“என்ன பண்ணும்”,

“என்ன பண்ணுமா? அங்கங்க கடிச்சு உன் ரத்தத்தை உறியறேன்”, என்றாள். 

“எங்க? எங்க?”, என்றான் செந்திலும் விடாமல்.

“இந்த கலையெல்லாம் சொல்லித் தெரியறதில்லை”, என்று ராஜி சொல்லி கண்ணடிக்கவும்…..

நிஜமாகவே செந்திலுக்கு தான் மிகவும் வெட்கமாக போய்விட்டது. இதற்கு மேலும் பேசினால் இவள் நம் மானத்தை கப்பல், பிளைட் என்று மட்டும் இல்லை….. ட்ரெயின், பஸ்….. ஏன் சைக்கிளில் கூட  ஏற்றி விடுவாள் என்று கப்பென்று வாயை மூடி கொண்டான் செந்தில்.

அதைப் பார்த்து ராஜி சிரித்தாள். இருவரும் யாருக்கும் கேட்காமல் பேசியது, செந்தில் மௌனியானது, செந்திலைப் பார்த்து காதலோடு ராஜி சிரித்த இந்த சிரிப்பு என்ற அனைத்துமே அங்கிருந்த ஆகாஷ், கனி, அசோக் என்று அத்துணை பேரையும் கவர்ந்தது.  

அவர்களின் காதல் கனியை விழியகற்றாமல் பார்க்க வைத்தது மட்டுமல்ல…… சில மணிநேரங்கள் இவர்களோடு இருந்தால் எல்லோருக்கும் காதலிக்கத் தோன்ற வைப்பார்கள் போல என்றெண்ணி கனியின் கண்களுக்குள் கனவு வர……..

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்

ஆடும் விழியிலே………

ஆடும் விழியிலே……..

கீதம் பாடும் மொழியிலே……

என்று ஆகாஷ் கனியையே பார்த்திருந்தான்.

ஆகாஷ் கனியைப் பார்ப்பதை கனியின் பெற்றோர் கவலையுடன் பார்த்திருந்தனர். எல்லாம் கை மீறுகிறதோ என்று தோன்றியது.

காண்பது எல்லாம் காட்சிப் பிழையல்ல……….  

மூன்று பெண்களை பெற்றவர்கள், திருமணமாகி பதினைந்து நாட்களில் இவள் திரும்ப வந்துவிட்டாள். இவளையும் கரை சேர்க்க வேண்டும், மற்ற இரு பெண்களையும் சேர்க்க வேண்டும்.

இவன் வயதுப் பையன்கள் இப்படி இருக்க தங்கைகளின் வாழ்க்கையின் பின்னோடு அலையும் இவனையும் கரை சேர்க்க வேண்டும் என்று அசோக்கையும் பார்த்தனர்.

இவ்வளவு நேரமாக கனியின் பெற்றோர்கள் கண்டுக்கொள்ளக் கூடாதே என்று தான் கனியைப் பார்ப்பதை தவிர்த்து இருந்தான் ஆகாஷ். இப்போது அவனையும் மீறி பார்த்தவன்….. சட்டென்று நிலை உணர்ந்து கனியின் பெற்றோரைப் பார்க்க அவர்களின் கவலை தோய்ந்த முகமே தெரிந்தது.

எழுந்து அவர்களின் அருகில் வந்தவன், “பயப்படாதீங்க! உங்களை மீறி எதுவும் நடக்காது!”, என்று சொன்னான்.

“இவ ஒத்துக்குவான்னு நீங்க நினைக்கறீங்களா தம்பி! இவ ஒத்துக்க மாட்டா! ரெண்டு வருஷமா வந்த வரனை எல்லாம் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லி எல்லாத்தையும் தள்ளினா!”,

“பிடிச்சாத் தான் பிடிக்குதுன்னு சொல்ல முடியும்! பிடிக்கலைனா பிடிக்கலைன்னு தானே சொல்லணும்!”, என்றாள் கனி முறைப்போடு..

“இவ இப்படி தான் தம்பி பேசுவா! இப்படி பிடிவாதம் பிடிச்சதால தான் அவங்கப்பாவும் வர்ற மாப்பிள்ளையை எல்லாம் வேண்டாம்னு சொல்றான்னு பிடிவாதமா இந்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சார். அவர் அல்பாயுசுல இவளை விட்டுட்டுப் போயிட்டார். நீங்க கொஞ்சம் பொறுங்க தம்பி, ப்ரியா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பேசலாம்!”, என்று அவனுக்கு சாதகமான பதிலையே சொன்னார்.

கனியின் அப்பாவும் அம்மாவும் இவ்வளவு நேரம் உள்ளே அதைப் பற்றி தான் பேசினர் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.    

“நாங்க கிளம்பறோம்”, என்று ஆகாஷ் விடை பெற….. விஷயத்தை அவர்களின் பெற்றோர்கள் வரை தெரியப்படுத்திவிட்ட திருப்தியோடு ராஜி கிளம்பினாள்.    

Advertisement