அத்தியாயம் ஒன்று:

ஆஹா இன்ப நிலாவினிலே

ஓஹோ ஜகமே ஆடிடுதே

ஆடிடுதே விளையாடிடுதே

ஆஆஆஆஆஆ……….  ஆஆஆஆஆஆ………. 

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே

தவழும் நிலவின் அலைதனிலே……. சுவைதனிலே………

என்று கண்டசாலா லீலாவின் குரலில் ஒலித்த மாயா பஜார் படத்தின் பாடலை கேட்டுகொண்டே படுத்திருந்தான் ஆகாஷ். அவன் மேல் ஏறி படுத்திருந்தான் நந்தன்……… மணி நேரம் இரவு பன்னிரெண்டு என்றது. 

இரவில் எப்பொழுதும் இந்த மாதிரி அரத பழைய பாடல்களை கேட்டுக்கொண்டு தூக்கம் வரும்வரை படுத்திருப்பான் ஆகாஷ். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் ரசித்துக் கேட்பான் அந்த பாடல்களை.

தூக்கம் வரும் நேரம் அவனுக்கே தெரியாது. நிம்மதியான தூக்கம் அவனை விட்டு மிக தொலைவில் சென்று நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நெஞ்சில் நந்தன் கணக்க அவனை விலக்கி படுக்க வைத்தான். நந்தன் அவனுடைய அக்கா அனிதாவின் மகன். அவளுடைய முதல் கணவனுக்கு பிறந்தவன்.

இப்போது அவன் கணவன் உயிருடன் இல்லை. திருமணமான இரண்டே மாதத்தில் ஒரு விபத்தில் உயிரிழந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவளுக்கு மறுபடியும் ஒரு திருமணமானது. யாருக்கும் பிடித்தமில்லாத திருமணம் ஏனென்றால் திருமணமான ஒருவருடன் மறுதிருமணம். அவர்களுக்கு எட்டு மாதமேயான அக்ஷரா என்ற மகள் இருந்தாள்.

அனிதாவின் கணவர் அண்ணாமலை வசிப்பது அவருடைய முதல் மனைவி தேவிகாவுடன். மாதமொருமுறை இங்கே வந்து போவார்.      

அவன் படுக்க வைத்து ஓரிரண்டு நிமிடங்களிலேயே நந்தன் மீண்டும் அவன் மேல் ஏறி படுத்துக்கொண்டான்.

தனியாக தான் எப்பொழுதும் நந்தன் படுப்பான். இன்றென்னவோ, “நான் உங்க கூட படுத்துக்கறேன் மாமா!”, என்று வந்தவன் அவன் மேலே மேலே ஏறி படுத்துக்கொண்டான்.

அவன் விலக்கி விலக்கி படுக்க வைத்தாலும் மீண்டும் அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

நந்தன் இப்படித்தான் சில சமயம் ரொம்பவும் மெசுர்ட்டாக அவனுடைய வயதுக்கும் மீறி நடந்து கொள்ளுவான்….. சில சமயம் அவனின் வயதை விடவும் சிறுபையனாக நடந்து கொள்வான். பத்து முடிந்து பதினொன்று பிறக்க போகிறது. “இன்னும் நான் இவனை அதிகம் கவனிக்க வேண்டும்”, என்று ஆகாஷ் கண்மூடி எண்ணிக்கொண்டு இருக்கும்போதே……

அடுத்த பாடல் ஆரம்பித்தது……

வதனமே சந்த்ர பிம்பமே

மதன சரோஜமே

வதனமே சந்திர பிம்பமோ……. என்று தியாகராஜ பாகவதர் குரலில் இரண்டு வரிகள் தான் ஓடியது   

அதற்குள் பாடல் நிறுத்தப்பட, கண் திறந்து பார்த்தான்.

அனிதா தான் நிறுத்திக்கொண்டு இருந்தாள்…….

“நீ இன்னும் தூங்கலையா”, என்றான் ஆகாஷ்.

“அக்ஷி கண்முழிச்சா…….. அவளை தூங்க வெச்சிட்டு வர்றேன், நீ ஏன் இன்னும் தூங்கலைன்னு நான் உன்கிட்ட கேட்க வந்தா நீ என்கிட்டே கேட்கறியா…….. இது என்ன நந்து உன்மேலே இப்படி தூங்கறான்”, என்று அவனை விலக்கி படுக்க வைத்தாள்.

“விடு! இருந்துட்டு போறான்!”, என்று அவன் சொல்லும்போதே நந்தன் மீண்டும் ஏறி அவன் மேல் ஏறி படுத்துக்கொண்டான்.

“இதென்ன இவன் இப்படி பண்றான்”,

‘என்னவோ இன்னைக்கு அவன் என்னை தேடுறான்! விடு அவனை!”, என்றான் ஆகாஷ்.

“அப்பா தவறி எட்டு மாசம் ஆகிடுச்சு”,

எதற்கு சொல்கிறாள் இதை அவள் என்பது போல பார்க்க…..

“இப்ப உனக்கு பொண்ணு பார்த்தோம்னா கல்யாணம் வெக்கும் போது ஒரு வருஷமாகிடும்………. பொண்ணு பார்க்கலாமா”, என்றாள்.

அவள் தனது திருமணத்தை பற்றி பேசுகிறாள் என்று புரிந்தவன்……. “பார்க்கலாம்! பார்க்கலாம்! அவசரப்படாத! நான் சொல்றேன்!”, என்றான்.

அவனும் திருமணம் செய்துகொள்ளும் நினைப்பில் தான் இருந்தான். அவ்வப்போது வரும் ராஜியின் நினைவுகளை தவிர்க்க திருமணம் அவசியம் என்று தோன்றியது. திருமணமான பெண் தன் நினைவுகளில் வருவதை பெரும் குற்றமாக உணர்ந்தான்.

ஒரு காலத்தில் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதன் விளைவு அவள் நினைவுகள் அவனை ஆக்ரமித்தன. அதில் கொஞ்சமும் அவனுக்கு இஷ்டமில்லை. அதை தவிர்ப்பதற்காகவாவது மனைவி என்று தனக்கு ஒருவள் வரவேண்டும் என்று நினைத்தான்.         

“இன்னும் தள்ளிப்போடாதடா”, என்றாள் அக்கறையாக அனிதா……..  

“ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு பேசும் விஷயமா இது”,

“என்ன பண்றது? பகல்ல நீ ரொம்ப பிசி! அதுவுமில்லாம இந்த பேச்சை எடுத்தாலே ஓடிடற! நான் என்ன பண்ணட்டும்?”,        

“நீ ஒண்ணும் பண்ணாத……. அக்ஷியை மட்டும் பாரு. எல்லாம் நான் பார்த்துக்கறேன்”,

“என்னவோ பண்ணு! ஆனா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ தள்ளி போடாத….. அதது நடக்க வேண்டிய நேரத்துல நடந்துடனும்……… நான் பண்ணின தப்பை வாழ்க்கையில நீயும் பண்ணிடாத”, என்றாள்.

“என்ன தப்பு”, என்று ஆகாஷும் கேட்கவில்லை, அனிதாவும் சொல்லவில்லை.  

“காலையில நான் வெண்ணந்தூர் போறேன்”, என்றான்.

“என்ன திடீர்ன்னு”,

“செந்தில் நம்ம மில்லு கணக்கு பார்க்க ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கான். வந்தே ஆகணும்னு கட்டாயப் படுத்தறான். ஒரு தரம் பார்த்துடுன்றான். நானும் அவன் கிட்ட பொறுப்பை கொடுத்ததுல இருந்து பார்க்கவேயில்லை. இப்போ இங்க வேலை கொஞ்சம் கம்மியா இருக்கு அதான் போயிட்டு வந்துடலாம்னு பார்க்கறேன்”,

“எதுல போற?”,

“கார்ல”,

“எதுக்கு ஆகாஷ்? ட்ரெயின்ல இல்லை பஸ்ல போகலாமே! ஒவ்வொரு தடவையும் உன்னை கார்ல அனுப்பிட்டு நீ போய் சேர்ற வரைக்கும் எனக்கு டென்சன்”,

“போ அனி! பஸ் ட்ரெயின்னு என்னால எதுக்கும் வெயிட் பண்ண முடியாது! ஒரு அழுத்து அழுத்துனன்னா ஐஞ்சு மணி நேரத்துல அங்க ரீச் ஆகிடுவேன். இங்கிருக்கிற சென்னைல இருந்து சேலம்ல இருக்கிற வெண்ணந்தூர் போக என்ன பயம்…..”,  

“அதுதான் என் பயமே நீ ரொம்ப ஃபாஸ்ட்…….”,

“சரி! மெதுவாவே போறேன்”,

“எப்போ வருவ”,

“ஒரு நாள் தான் நாளன்னைக்கு வந்துடுவேன்”,

“நந்து கிட்ட சொல்லிட்டியா”,

“ம்கூம்! வர்றேன்னு அடம் பிடிப்பான். அவசர வேலைன்னு கிளம்பிட்டேன்னு சொல்லு புரிஞ்சிக்குவான். காலையில அஞ்சு மணிக்கே கிளம்பலாம்னு இருக்கேன்”,

“அப்போ எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சு இருக்க, தூங்கு முதல்ல!”, என்று சொல்லி சென்றாள் அனிதா……

அவள் சென்றும் தூக்கம் வரவில்லை. எழுந்து பிரிட்ஜை திறந்தவன், அதில் இருந்த கூல் பீரை தொண்டைக்குள் இறக்கினான். ஹப்பா! நந்தன் கண்களில் இதை மறைக்க தினமும் அவன் படும் பாடு…….. இல்லையென்றால் என்ன ஜூஸ் இது என்று கேள்வி கேட்டு துளைத்துவிடுவான்.  

ஒன்றோடு நிற்காமல் மூன்று நான்கு உள்ளே போன பிறகே தூக்கம் எட்டி பார்த்தது.

காலையில் அவன் எழுந்து ரெடியாகி வெளியே வந்த போது அனிதா காஃபியுடன் நின்றிருந்தாள்.

“வெளில குடிச்சிக்க மாட்டேனா! இதுக்காக நீ எழுந்தியா”, என்றான் கரிசனமாக. அவனின் அக்கா மேல் அவனுக்கு நிறைய பாசம் என்று சொல்வதைவிட அளவிட முடியாத பாசம் என்றே சொல்லலாம். 

எத்தகையை பாசம் என்றால் வாழ்க்கையில் அவள் தவறிய போதும் அவளுக்கு துணை போய்………. என்ன வந்தாலும் சரி என்று அதை சரிபடுத்த துணிந்த பாசம்.  

“பரவாயில்லை! நான் அப்புறம் கூட தூங்கிக்குவேன், குடி! என்று அனிதா கொடுக்க…..

“உனக்கு” என்று அவளின் கைகளை பார்த்தவன் அவளுக்கு அவள் கலந்து கொள்ளாததை பார்த்து…… அதில் பாதி ஷேர் செய்து அவளுக்கு கொடுத்தான். 

அவனின் செய்கையில் நெகிழ்ந்தவள், “இதையெல்லாம் விட்டுடு”, என்றாள் சீரியசாக.

அவளுடைய சீரியஸ்னஸ் பார்த்து, “ஏன்”, என்றான் ஒற்றை வார்த்தையில்…….

“உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்…….. கல்யாணத்துக்கு பிறகு எப்பவுமே உன் ஃபர்ஸ்ட் ப்ரீஃபறன்ஸ் உன் மனைவியா தான் இருக்கணும். நீ இந்த மாதிரி என்னை கவனிச்சா அப்புறம் உன் மனைவிக்கு கோபம் வரும்பா”.

“அம்மாவோட மகன் ஷேர் பண்ற அன்பையே சில பொண்ணுங்களால பொறுத்துக்க முடியாதுன்றப்போ, அக்காவை நீ இப்படி பார்த்துகிட்டா சொல்லவே வேண்டாம் அப்புறம் தனிக்குடித்தனம் தான்”, என்று விளையாட்டுபோல சொன்னாலும் உண்மையை சொன்னாள்.

“என் மனைவி இப்படியெல்லாம் இருக்க மாட்டா”, என்றான்.

“என்னவோ பொண்ணு பார்த்துட்ட மாதிரி சொல்லுற”,

“என்னவோ என் உள் மனசு சொல்லுது! பார்ப்போம்!”, என்று கிளம்பினான்.  

அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்து நேரம் பார்த்த போது ஐந்து மணி ஒன்றோ இரண்டோ நிமிடங்கள் என்றது…..

தன் தம்பியின் நேரம் தவறாமை குறித்து எப்போதுமே அனிதாவுக்கு மிகுந்த பெருமை உண்டு. சொன்னால் சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் செய்வான். நிமிஷம் கூட தவறமாட்டான். நேரம் தவறாமை அவனுடைய முக்கிய பாலிசிகளில் ஒன்று. 

ஆகாஷ் சொன்ன மாதிரியே ஐந்தே மணி நேரத்தில் சேலத்தை தொட்டவன்….. ராசிபுரதிற்கும் நாமக்கல்லுக்கும் இடையில் இருந்த அவனின் மில்லின் நுழைவாயிலில் அவன் காரை நுழைத்த போது மேலும் அரைமணி நேரம் ஆகியிருந்தது.

வேகம்! வேகம்! வேகம்! அவ்வளவு வேகம்! எதை துரத்துகிறோம் என்று தெரியாமலேயே எதையோ துரத்துவது போல வந்து சேர்ந்தான்.

அந்த மில் அவனுடையது… அதன் வொர்கிங் பார்ட்னர் செந்தில்…. ஆகாஷிற்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும் இப்போதைக்கு அவனுடன் அதிக தொடர்பில் உள்ள நண்பன்…….. ராஜியின் கணவன்……. அனிதாவின் கணவர், அண்ணாமலையின் மருமகன்.

மில்லில் நுழைந்ததுமே காரை விட்டு இறங்கும் முன்னே செந்திலை அழைத்தான், “நான் வந்துடண்டா”, என்று……..

“ஆகாஷ்! இங்க கொஞ்சம் பேங்க் வேலையா வந்தேன். நீ எப்படியும் வர பன்னண்டு மணி ஆகிடும்னு நினைச்சேன். நீ அதுக்குள்ள வந்துட்ட! நான் வர எப்படியும் அரைமணிநேரம் ஆகிடும்டா! என்ன பண்றது?”,

“நீ முடிச்சிட்டு வாடா! நான் இருக்கேன்!”, என்றபடி காரை விட்டு இறங்கினான். ஒரு சிலருக்கே அவன் முதலாளி என்பது தெரியும். அவனின் தந்தையை தான் எல்லோருக்கும் தெரியும். அவர்தான் இப்போது இல்லையே. நிறைய பேருக்கு அவன் முதலாளி என்பதே தெரியாது.

போன முறை வந்த போதே செந்தில் தொழிலாளர்களுடன் ஒரு மீட்டிங் அரேஞ் செய்வதாக கூறினான். நேரமின்மை காரணமாக ஆகாஷ் தான் மறுத்து சென்றுவிட்டான்.

அதனால் இப்போது அவனை அங்கே கவனிப்பார் யாருமில்லை. யாரோ பையர் போல என்று நினைத்துவிட்டனர்.

அவன் செந்திலின் ரூமிற்கு போகலாம் என்று போக……. அங்கே அவனின் ரூமிற்கு முன்னே இருந்த கம்ப்யூட்டரில் தலையை புதைத்து உட்கார்ந்திருந்தாள் ஒரு பெண்.

முகம் மட்டுமே தெரியவில்லை. ஒரு பெண் உட்கார்ந்து இருக்கிறாள் என்பது வரை தான் தெரிந்தது.

அங்கே இருக்கும் அட்டன்டரும் இல்லை. இவ்வளவு அருகில் தலையை புதைத்து என்ன செய்கிறாள் என்று தோன்றியது.

அவள் பேசிக்கொண்டு வேறு இருந்தாள்….. யாருடன் பேசுகிறாள் என்று அவன் பார்க்க……… அங்கே அவளை தவிர யாரும் இல்லை. ஒரு வேலை போன் பேசுகிறாளோ என்று நினைப்பதற்கும் வழியில்லாமல் அவளின் போனும் மேஜை மேல் இருந்தது.

என்னவோ அந்த முகம் தெரியாத் பெண் என்ன செய்கிறாள் என்று பார்க்கும் ஆர்வம் தோன்ற அப்படியே நின்றான்.

“கனி! உனக்கு இது தேவையா……… தேவையான்னு கேட்கறேன். அக்கௌன்டன்ட் லீவ் போட்டா உனக்கு என்ன வந்தது! நான் செய்யறேன்னு ஏன் செந்தில் அண்ணா கிட்ட சொன்ன! ஒண்ணும் புரியலை! ஒரு மண்ணும் புரியலை!”,

“என்ன கணக்கோ என்னவோ? வெளில யார்கிட்டயும் சொல்லிடாத நீ  எம் எஸ் சி மேத்ஸ். இதுல பீ எட் வேற படிச்சிருக்கன்னு! கேவலம்!……… இது டேலி ஆகவே மாட்டேங்குது. என்ன மாட்டேங்குது? உன்னால முடியலைன்னு சொல்லு”, என்று கம்ப்யூட்டரில் தலையை புதைத்தவள் எடுக்காமல் பேசிக்கொண்டு இருந்தாள்.

குரலின் இனிமை அவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தது.

“ஏதாவது பண்ணுடி! அண்ணா இப்போ வந்துடுவாங்க! முடிச்சிட்டியான்னு கேட்பாங்க…….. அப்போவே சொன்னாங்க, அந்த அக்கௌன்டன்ட்க்கு  லீவ் குடுக்க வேண்டாம்! இந்த வொர்க்கை அர்ஜெண்டா முடிக்கணும்னு. அவன் ஏதோ புலம்புனான்னு நான் பார்த்துக்கறேன்னு நீ லீவ் கொடுத்துட்ட……. இப்போ என்ன பண்ண போற…… ஏதாவது பண்ணுடி”, என்று புலம்பினாள்.

“செந்தில் அண்ணாவா????? யாருடா அது செந்திலுக்கு நமக்கு தெரியாம ஒரு தங்கச்சி”, என்று அவன் நினைக்கும் போதே……..

“லூசு! லூசு!”, என்று அவள் திட்ட அவள் தன்னை தான் திட்டுகிறாளோ என்று அவன் அவசரமாக அவளை பார்க்க, அவள் அவளையே திட்டிக் கொண்டு இருந்தாள் போலும்……….

“ஒரு வேலைக்கும் நீ லாயக்கில்லை”, என்று மிகவும் கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

பொறுக்க முடியாமல், “நான் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா”, என்றான்.

“யாருடா அது? என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது”, என்று தலையை கம்ப்யூட்டரில் இருந்து நிமிர்த்தி பார்க்க…….. அவளின் முகம் தெரிந்தது.

“முகமா அது! சந்த்ர பிம்பம்! அழகி நீ பேரழகி!”, என்று சொல்லும்படி இருந்தது அவளின் முகம். ஆகாஷ் சற்று ஆர்வத்துடனே பார்த்தான். அவ்வளவு அழகான  முகத்தில் ஏதோ குறைவது போல தோன்றியது…..

அது என்ன என்று அவன் யோசிக்கும் முன்னேயே தலையை மட்டும் நீட்டி அவனை பார்த்தவள்…….. “ஹலோ! யார் சார் நீங்க? இப்படி அனுமதியில்லாம எல்லாம் இங்க வரக்கூடாது……….. எதுக்கு வந்தீங்க? சாரை பார்க்கவா! சார் வர இன்னும் லேட் ஆகும்! இந்த ஆறுமுகம் எங்கப் போனான்”, என்றவள்………. “ஆறுமுகம்”, என்று ஒரு கத்துக் கத்தினாள்.

“ஷ்! யப்பா! ஏன் இப்படிக் கத்தறா!”, என்று ஆகாஷிற்கு தோன்றியது, ஆனால் அதற்கு கூட அந்த ஆறுமுகம் வரவில்லை.

அவள் கத்திய கத்தலில் ஆகாஷே, “என்ன பண்ணனும் சொல்லுங்க”, என்றான்.

“வெளில வெயிட் பண்ணுங்க”, என்றாள்.  

“பண்றேன்!”, என்று திரும்பியவன்…….. “அந்த அக்கௌன்ட்ஸ் என்னால டேலி பண்ணமுடியுதான்னு பார்க்கட்டுமா? எனக்கு கொஞ்சம் அக்கௌன்ட்ஸ் தெரியும்!”, என்றான்.

“எப்போ வந்தீங்க”, என்றாள்.

“நீங்க உங்களை திட்டிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்”, என்றான் ஒரு புன்னகையுடன்.

உதட்டை சுளித்தவள்……..என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாற…..

அதை விடுத்து, “நான் பார்க்கட்டுமா”, என்றான்……

அவனின் தோற்றமே மிகுந்த மரியாதையுடன் இருக்க……. அவளுக்கு அவனை அங்கே கம்ப்யூட்டரில் விட எந்த பயமும் வரவில்லை.

“சரி! பாருங்க”, என்றாள்.

“நகருங்க”, என்று அவளின் சேர் அருகில் அவன் போகப்போக……. அவள் அந்த சேரை விட்டு எழுந்திருக்காமல், “இருங்க”, என்றவள்…… மானிட்டரை அப்படியே திருப்பி கீ போர்டையும் நீட்டினாள்.

“எதுக்கு இவ்வளவு சிரமம்! நீங்க இந்த பக்கம் வந்து உட்காரலாமே!”, என்று சொல்லிய படியே அந்த கணக்கை பார்க்க ஆரம்பித்தான் ஆகாஷ்.

அவளிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை.

அவள் என்னவென்று விளக்க தேவையில்லாமல் கணக்கு புரிய……. அது பெரிய வேலையே இல்லை……… மிகச் சிறிய வேலையே பத்து நிமிடத்தில் முடித்தான். அது வரையிலும் அவள் இவனின் முகத்தை தான் பார்த்திருந்தாள். ஆகாஷ் அதை கவனிக்கவில்லை, அவன் கணக்கை மட்டுமே கவனித்து கொண்டிருந்தான்……..

முடித்தவன்…. நிமிர்ந்து, “முடிஞ்சிடுச்சு”, என்று புன்னகை புரிய…….

“தேங்க்ஸ்”, என்றவள்………. “ஆமாம்! நீங்க யாரு? எதுக்கு சாரை பார்க்க வந்திருக்கீங்க?”, என்றாள்.

“நீங்க”, என்றான் அவளை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன்…..

“நான் உங்களை கேட்டா நீங்க என்னை கேக்கறீங்களா? இது எங்க இடம்! நீங்க தான் இங்க வந்திருக்கீங்க! முதல்ல நீங்க சொல்லுங்க!”, என்றாள் அதட்டலாக…

“நீங்க யாருன்னு தெரியாம! நான் எப்படிங்க விஷயத்தை சொல்ல முடியும்! விஷயம் ரொம்ப கான்பிடேன்சியல்”, என்றான்.

“என்னது இந்த ஓட்டை மில்லுல உருப்படியா இருக்கறதே இந்த கனிமொழி மட்டும் தான்! அவகிட்ட நீங்க விஷயத்தை சொல்ல மாட்டீங்களா?”,

“என்ன?…….. ஓட்டை மில்லா”,

“ஒஹ்! ரகசியத்தை சொல்லிட்டனா!”, என்று அலட்சியமாக சொன்னவள்……. “எங்க மில்லுங்க நாங்க எப்படி வேணா சொல்லுவோம்”, என்றாள்.

“எப்படி இப்படி பொறுப்பில்லாம பேசறவங்களை எல்லாம் உங்க முதலாளி வேலைக்கு வெச்சிருக்கார்”, என்றவனிடம்,

“ஏன்னா எங்க முதலாளி புத்திசாலி! உங்களை மாதிரி இல்லை!”, என்று வாயடித்தாள்.

“ஒஹ்! அப்போ என்னை முட்டாள்ன்றீங்க”,

“அதை நான் வேற என் வாயால சொல்லனுமா”, என்றாள் அலட்சியமாக.

யாரும் ஆகாஷிடம் இப்படி பேசியதேயில்லை. மிகுந்த மரியாதையை கொடுக்கும்படி இருக்கும் அவனுடைய தோற்றம். அதிலும் அவன் அழகன், கம்பீரமானவன் வேறு. செல்வ செழிப்பு அவன் தோற்றத்திலேயே தெரியும்.

எல்லோரும் மரியாதையுடன் தான் பேசுவர். இந்த பெண் ஏன் யார் என்னவென்று தெரியாமலேயே இவ்வளவு அலட்சியமாக பேசுகிறது என்று ஆகாஷிற்கு சற்று கோபமே வந்தது.

“யாரு என்னன்னு தெரியாம இப்படி தான் மரியாதையில்லாம பேசுவீங்களா”,

“நீங்க யாரா இருந்தா எனக்கென்னங்க……. என் வாயி நான் பேசுறேன்! உங்களை யாரு கேட்க சொன்னா! இதுக்கு தான் உங்களை நான் வெளிய வெயிட் பண்ண சொன்னேன்”,

“உங்களுக்கு ஹெல்ப் பண்ண தானெங்க நான் இருந்தேன்”.

“கேட்டனா? நான் கேட்டனா? நீங்க ஹெல்ப் பண்ணுங்கன்னு…….. நீங்களா வந்தீங்க நீங்களா ஹெல்ப் பண்ணுனீங்க……… அதுக்கு நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறீங்க”.

“தேவைதாங்க தாங்க எனக்கு”, என்று அவன் சலிக்கும் போதே அவசரமாக செந்தில் உள்ளே நுழைந்தான்……..

“சாரி! சாரி! லேட் பண்ணிட்டனா! உள்ளே போய் உட்கார வேண்டியது தானே! என்ன கனி சாரை இங்கயே உட்கார வெச்சிருக்க”, என்றான்.

செந்தில் உள்ளே நுழைந்த பிறகும் அந்த கனிமொழி எழுந்திருக்கவேயில்லை….

செந்திலிடம் உட்கார்ந்தபடியே, “சார் யாரு”, என்றாள்.

“நம்ம பாஸ் கனி! சென்னைல இருந்து வந்திருக்காரு!”, என்று அவன் சொல்ல…… அவள் முகத்தில் ஒரு சிறு வியப்பு அவ்வளவே. ஆனால் தான் பேசியதற்கு ஒரு பயம் பதட்டம் எதுவும் இருந்த மாதிரி தெரியவில்லை.

அவன் பாஸ் என்று தெரிந்த பிறகு தான் அவள் எழுந்திருக்க முற்பட்டாள். அவள் எழ முயல்வதை பார்த்ததும் அவளை மிகவும் நெருங்கி இருந்த டேபிளை, “இரு”, என்று சற்று நகர்த்தி விட்டான் செந்தில்.

“பார்த்து எந்திரின்னு எத்தனை தடவை சொல்றது”, என்று சொன்ன செந்தில்……… ஆகாஷ் எதற்கு இவ்வளவு கரிசனம் என்று நினைக்கும்போதே…….. 

“இது கனிமொழி! என் ஃப்ரிண்ட் அசோக்கோட தங்கச்சி”, என்று அவனிடம் செந்தில் அவளை அறிமுகப்படுத்தினான்.  

அதன் பிறகு எழுந்தவள், “வெல்கம் சார்”, என்றாள். அப்போதும் அவள் பேசியதற்கு சாரி கேட்கவில்லை.

ஆகாஷ் அவளையே பார்ப்பதை உணர்ந்தவள்……. “நீங்க யாருன்னு முன்னமே சொல்லியிருந்தா பேச்சுக்களை தவிர்த்திருக்கலாம்”, என்றாள் என்னவோ தப்பெல்லாம் அவனது போல……….

“என்ன பேசுன சார்கிட்ட. எதுவும் வம்பு பண்ணலையே”, என்றான் அவளைப் பற்றி தெரிந்தவனாக செந்தில்.

“சும்மா பேசிட்டு தான் இருந்தேன்! அது வம்பா இல்லையான்னு சார் தான் சொல்லணும்”, என்றாள்.

அதை கவனிக்கும் மனநிலையிலேயே இல்லை ஆகாஷ்……. அவனை வாயடைக்க வைத்தது அவளின் தோற்றம்….. அவளின் மிகப்பெரிய வயிறு காட்டிக்கொடுத்தது அவள் கர்ப்பிணி என்று…..  

அதுவுமில்லாமல் அவளின் முகத்தில் குறைந்தது எது என்றும் நன்கு தெரிந்தது……… அது பொட்டு……

கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியும் வெளியே தான் இருந்தது……   

அவளின் நிலையை அது அவனுக்கு படம்பிடித்துக் காட்ட அவள் கைம்பெண் என்று அவனுக்கு புரிந்தது.

ஏதோ தனக்கே ஏதோ நேர்ந்துவிட்டது போல ஒரு தவிப்பு அவனுள் எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அவளின் நிலை அவளின் பார்வையில் எங்கும் வெளிப்படவில்லை…….. அவளிடம் இருந்த நிமிர்வு அவனை நேர் பார்வை பார்க்க வைத்தது.   

அந்த பொட்டில்லாத அழகு முகத்தில் பொட்டு வைக்க அவனின் கை துடித்தது என்றே சொல்ல வேண்டும்.