Advertisement

வண்ணம் கூட்ட வா

“ஆனந்த் எந்திரி செல்லம் சீக்கிரம் எந்திரிங்க குட்டி”
ம்ம்ம்கூகூம்

“தங்கம்ல்ல இன்னைக்கு நாம பாட்டிய பார்க்க போகணும் சீக்கிரம் எழுங்க தங்கம்” என ஆர்த்தி கொஞ்சி கெஞ்சி தன் ஏழு வயது மகன் ஆனந்தை எழுப்ப
மெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தவன் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு

“ம்மா நாம பாட்டிய பாக்க போறோமா”

“ஆமாடா செல்லம் இன்னைக்கு உங்கப்பா பிறந்தநாள் நம்ம போய் பாட்டிய பாத்துட்டு அங்க போய் அப்பா பிறந்தநாள கொண்டாடலாம். அப்படியே உன்னோட நண்பர்களோட இன்னைக்கு அங்கயே விளையாடலாம்” என

“ஐ ஜாலி ஜாலி” என்று சப்தமிட்டுக் கொண்டே குதிக்க
“வாங்க வாங்க குளிச்சுட்டு கிளம்பலாம்”

அவனை குளிக்க வைத்து தயார் செய்தவள் அவனுக்கு குடிக்க பால் கொடுத்து கிளம்பி அன்பு இல்லத்திற்கு வந்தாள்.

அங்கே அவர்களுக்காக அன்பு இல்ல நிர்வாகி சீதா அம்மா காத்திருக்க அவர்கள் உள்ளே வரவுமே,

“வாம்மா ஆர்த்தி” என்றவர்

“அடடே வாங்க ஆனந்த் குட்டி. பாட்டிய பாக்க நீங்களே வந்துட்டிங்களா” என பேசிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றவர் முதலில் பிரார்த்தனை முடித்துவிட்டு அதன்பின் காலை உணவை பரிமாற அனைவரும் பசியாறினர்.

அங்கே இருந்த குழந்தைகளோடு ஆனந்த் விளையாட சென்றுவிட அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

அது ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரி.
அன்று தான் முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் வருகை நாள்.

அந்த கல்லூரியில் முதல் வருடம் முதல் நாள் கல்லூரிக்கு வருகை தரும் புதிய மாணவர்களை அங்கிருந்த மற்ற மாணவர்கள் வரவேற்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

கௌதம் கடைசி ஆண்டு கணினி அறிவியலில் பொறியியல் மாணவன். கல்லூரியில் அவர்கள் துறையின் தலைவன் அவன்.

முதல் நாள் எல்லோரும் போல் கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயத்துடனே காலடி எடுத்து வைத்தவள் தான் ஆர்த்தியும்.

அவள் உள்ளே நுழையும்போது அவளை வரவேற்று பூங்கொத்து கொடுத்த வரவேற்றவன் கௌதம் தான்.
முதல் சந்திப்பிலேயே அவர்களுக்குள் நட்பு துளிர்விட்டது. இரண்டு வருடங்கள் அவர்கள் நட்பு ஆல விருட்சமாக வளர்ந்தது. தற்போது முதுகலையும் கௌதம் அதே கல்லூரியில் தான் பயில்கிறான்.

இரண்டு வருட நட்பில் கௌமிற்கு ஆர்த்தியை மிகவும் பிடித்துவிட அவள் மேல் காதல் கொண்டவன் அவள் கல்லூரி முடித்த பிறகு அவள் பிறந்த நாளன்றே தன் காதலை வெளிப்படுத்த ஆர்த்திக்கும் பிடித்து இருந்ததால் ஒத்துக் கொண்டாள்.

ஆர்த்திக்கு ஆசிரிய பணி மேல் அலாதி பிரியம் என்பதால் அவள் மேற்படிப்பு முடிக்கும் வரை காத்தருந்தவன் தானும் ஒரு நல்ல வேலையில் திடமாக அமர்ந்தான்.

இதோ இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து இரு வீட்டினர் சம்மதத்துடன் கௌதம் ஆர்த்தி கோலாகலமாக திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிற்று.
கொஞ்ச நாள் தனியாக இருக்கட்டும் என்று கௌதமின் பெற்றோர்களே அவர்களை அடுத்த தெருவிலே தனிக்குடித்தனம் வைத்திருந்தனர்.

“ஆரும்மா”

“இதோ வர்றேன்ங்க”

“நேரம் ஆகிருச்சும்மா கிளம்புறேன் நீ இன்னைக்கு சமைக்க வேண்டாம். சாயந்திரம் சீக்கிரமா வந்துறேன் வெளிய போய் படம் பார்த்துட்டு அப்படியே சாப்பிட்டு வந்துருலாம்” என்று சொல்லிக் கிளம்ப

“ஒரு நிமிஷம் இருங்க” என்றவள் உள்ளே சென்று தலைக்கவசத்தை எடுத்து வந்து தர

“இதுக்குத் தான் என் குட்டிம்மா வேணும் எல்லாத்துலையும் சரியா இருக்குறது, பத்திரமா இரும்மா” என்று கூறி அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி அதை பெற்றுக் கொண்டவன் தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

அவன் கிளம்பிச் சென்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை.

அவனது அலைபேசியிலிருந்து அழைப்பு வரவும்,
“என்னங்க அதுக்குள்ள அலுவலகம் போய்ட்டிங்களா?” என்றுக் கேட்க

“ஹலோ இங்க ஒருத்தவங்களுக்கு விபத்து ஆயிருச்சுங்க. அவங்க போன்ல இந்த எண் அவசரம்னு போட்டு இருக்குதுங்க. உங்களுக்கு இவங்க தெரிஞ்சவங்களா” என மறுமுனையில் சொன்னதில் அவளுக்கு மயக்கம் வருவது போல் உலகமே சுற்றியது.

ஆர்த்தி பிறகு கொஞ்சம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

“இது என்னோட கணவரோடது. அவருக்கு ஒண்ணும் ஆகலையில்ல”

“ஒண்ணும் இல்லைம்மா சின்ன அடிதான். நீங்க கொஞ்சம் அரசு மருத்துவமனைக்கு வாங்க” எனவும்

“இதோ நான் சீக்கிரம் வந்துறேன்ங்க. நான் வர்றவரைக்கும் கொஞ்சம் அவர பாத்துக்கங்க” என்று கோரிக்கை வைத்தவள் வேகமாக மருத்துமனை நோக்கிச் சென்றாள்.

போகும் வழியிலே கௌதமோட பெற்றோருக்கும் அழைத்து கூறி அவர்களையும் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றாள்.

மருத்துமனை உள்ளே சென்றவர்கள் வெளிநோயாளிகள் விபத்து சிகிச்சை பிரிவிற்கு சென்று கௌதம் எண்ணிற்கு அழைத்து “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கௌதம் விபத்துனு கால் வந்துச்சு. அவங்க எங்க இருக்காங்க” என்று விசாரிக்க

“நீங்க கொஞ்சம் அவசரசிகிச்சை பக்கம் வாங்க” எனவும்
அங்கே சென்றவர்கள் கௌதமை பற்றி கேட்கவும்

“சாரிங்க சம்பவ இடத்துலே உயிர் போயிருச்சு. லாரி உடம்புமேலே ஏறி சிதைஞ்சு போச்சு” என

“கௌதம்ம்ம்ம் இப்படி பாதியிலே எங்களவிட்டு போயிட்டியேடா” என அவனின் அம்மா சத்தம் போட்டுக் கதற

ஆர்த்தியோ மயங்கி சரிந்தாள்.
அதற்கு பிறகு நடந்ததெல்லாம் அவளுக்கு கெட்டகனவுபோல் இருந்தது.

பிரேத பரிசோதனை முடிந்து ஒரு பொட்டலமாக சுற்றிக்கொடுக்க அதை வாங்கிக்கொண்டு வீடுவந்தவர்கள் அவன் உடலுக்கு இறுதி சடங்கைச் செய்ய
கௌதமின் உறவினர்கள் “இவ வந்த நேரம் தான் இப்படி ஆகிருச்சு”

“ம்ம இதுக்கு தான் சொல்றது ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணனும்னு” என்ற ஒருவர் சொல்ல
என்று சொல்லி புலம்ப

ஆனால் அவள் செவிகளில் இது எதுவுமே விழவில்லை.
ஆனாலும் ஆர்த்தியின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராமல் இறுகிபோய் கிடக்கிறாள்.
அவளுடைய நினைவுகள் எல்லாம் கௌதம் உயிரோடு இல்லை என்று கேட்டதிலேயே நின்றுவிட்டது.
அவளுடைய உணவு உறக்கம் எல்லாம் பிறர் உதவியில் தான் இருக்கிறாள்.

ஆர்த்தியின் பெற்றோர் அவளை தங்கள் வீட்டுக்கு அழைத்துப்பார்க்க, அவள் சிறிதுகூட அசையாமல் இருக்கவும் அவர்களாலும் என்ன செய்ய முடியும் கொஞ்சநாள் கழித்து பார்த்துக்கலாம் என்று தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.

தங்களுடைய ஒரு மகனும் தங்களை விட்டுச் சென்றுவிட்டதால் கௌதமின் பெற்றோர் தான் அவளுடன் தங்கியிருக்கின்றனர்.

இதோ கௌதம் இறந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.
வீட்டு வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளிவர வாசலில் இரு பெண்மணிகள் ஒரு குழந்தையோடு நின்றிருக்க

“யாருங்க நீங்க உங்களுக்கு யாரு வேணும்?”

“இது கௌதம் வீடு தானே” என்று இழுக்க

“ஆமாங்க கௌதம்; வீடு இது தான் நான் கௌதமோட அம்மா தான். உள்ள வாங்க” என அழைத்துச் சென்றவர்
“நீங்க?” எனக் கேட்க

“நான் அன்பு இல்லம் நிர்வாகி சீதா”

“ம்ம் நீங்க தான் அவங்களா உங்கள பத்தி கௌதம் சொல்லியிருக்கான். அவனுக்கு உதவிமனப்பான்மை அதிகம். ஆனா அவன் விதி இரண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல இறந்துட்டான்” என அழ

“தெரியும்ங்க. கௌதம் இறக்குறதுக்கு முன்னாடி தன்னோட கண்ணை தானம் பண்ணறதுக்கு எழுதியிருக்கிறார். அது இப்ப எங்க ஆசிரமத்து குழந்தை ஆனந்துக்கு வச்சிருக்கோம்”

“ஆனந்த் பிறவியிலே கண் பார்வை இல்லாத குழந்தை. மூணு வயசாகுது. கௌதம் கண்ண ஆனந்த்ககு தான் வச்சிருக்காங்க. இவன் தான் ஆனந்த்” என அறிமுகப்படுத்த

கௌதமின் பெற்றோருக்கு தன் மகனை நினைத்து அந்த நிலையிலும் பெருமையாக கண்களில் ஆனந்த கண்ணீர் வர

அங்கே இருந்த ஆர்த்தி அப்படியே ஆனந்தை அணைத்துக்கொண்டு கதற ஆரம்பித்துவிட்டாள்.
இத்தனைநாள் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தாமல் இருந்தவள் இன்று ஒட்டுமொத்தமாக கண்ணீர் வற்றும் வரை அழ ஆனந்த் தன் பிஞ்சுவிரல்களால் அவள் கண்ணீரை துடைத்துவிட அவளுடைய அழுகை மேலும் அதிகரித்தது.

குழந்தை அவளை பார்த்து தானும் அழ ஆரம்பிக்க
அங்கு இருந்த ஆனந்தை பார்த்துக்கொள்பவர் “ஆனந்த் அழ கூடாது செல்லம் ” என கொஞ்சி வெளியே தூக்கிச்செல்ல முயல அவளோ ஆர்த்தியை விட்டு செல்ல மறுக்க

“ஆனந்த்க்கு இப்ப தான் அறுவை சிகிச்சை பண்ணியிருக்காங்க, அதனால அவன் அழக்கூடாதும்மா” என்று நிர்வாகி சீதாம்மா விளக்க
தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்த்தி ஆனந்தை அவர்களிடம் தந்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆனந்த் வந்து சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.

அன்று ஆர்த்தியின் பெற்றோர்களும் அண்ணனும் வந்து இருக்க

“ஆர்த்திம்மா நீ எங்க கூட வந்துடா நாங்க உன்ன நல்லா பாத்துக்கிறோம்” என்று அவள் அண்ணன் அரவிந்த் சொல்ல

“இல்லண்ணா நான் எங்கயும் வரல”

“இல்லடா நீ இனி இங்க இருக்க வேணாம் எங்க கூட வந்துருமா” என்று ஆர்த்தியின் அம்மா கெஞ்ச
“இல்லம்மா நான் எங்கயும் வர மாட்டேன். இது தான் என் வீடு. நான் இங்க தான் இருப்பேன்”

கௌதமின் பெற்றோர் “இல்லம்மா நீ உங்க அப்பா வீட்டுக்கே போயிரும்மா. அது தான் சரி. நீ எங்க மருமக இல்லமா. எங்க பொண்ணு. எங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா இப்படியே விட்டுறோவோம்மா என்ன. கொஞ்ச நாள் கழிச்சு வேற நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுப்போம். அதனால நீ உங்க வீட்டுக்கு போயிரும்மா”

“அப்படி சொல்லதிங்க அத்தை. என் கௌதம் எப்பவும் இங்க தான் இருக்காங்க. என் கூடவே தான் இருப்பாங்க”
“நான் ஆனந்தை தத்து எடுத்துக்கலாம்னு இருக்கேன்” என அறிவிக்க

கௌதமின் அம்மா தான் “என்ன ஆர்த்தி இப்படி சொல்ற. நம்ம வேணும்னா அந்த குழந்தைக்கு எல்லா உதவியும் பண்ணலாம். நீ வாழ வேண்டிய பொண்ணும்மா. கௌதம் உன்னோட கடந்த காலம் தான். உனக்கு என்ன வயசாயிருச்சு. ம்ம் வெறும் இருபத்திமூணு தான். வாழ்க்கை இனிமேல் தான் உனக்கு ஆரம்பிக்கவே போகுது. நீ கௌதம மறந்துடு. உனக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமையுனும்டா நாங்க தான் உங்க வீட்டுல இருந்து வர சொன்னோம் நீ போயிரும்மா” என கெஞ்ச

“அத்தை கௌதம் எப்பவும் நம்மகூட தான் இருப்பாங்க. அவங்க அதுக்கு தான் நம்மள பாத்துக்கிட்டே இருக்கனும்னு ஆனந்த்கிட்ட அவரு கண்ண குடுத்துட்டு போயிருக்காரு. இனி எனக்கு ஆனந்த் தான் எல்லாம்” என்றவள் உறுதியாக சொல்லி தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

கொஞ்ச நாள் சென்று பேசினால் சிறிது சிறிதாக அவள் மனதை மாற்றிவிடலாம் என்று எண்ணி செயல்பட்டனர்.
ஆனால் அவளை கொஞ்சம் கூட மாற்ற முடியவில்லை. ஆர்த்தி தான் அவர்களை மாற்றியிருந்தாள்.
வாரந்தோறும் சென்று ஆனந்தையும் பார்த்து வருபவள் அரசு வேலைக்கு முயற்சி செய்ய முழுதாக இரண்டு வருடங்கள் ஓடி தற்போது அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக வேலை செய்கிறாள்.

ஒரு வருடத்திற்கு முன் தான் ஆர்த்தியின் பிடிவாதத்தாலும் ஆனந்தின் மழலைக்குரலுக்கு மயங்கி, ஆர்த்தி மற்றும் ஆனந்த் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பால் அவர்களுக்கிடையேயான அன்பால், பாசத்தால் அவனை ஆர்த்தி தத்து எடுக்க சம்மதித்தனர்.

இதோ ஆனந்தை தன் மகனாக தத்து எடுத்துக்கொண்டவள், கௌதமின் தாய் தந்தையரை தன் பெற்றோர்களாக ஏற்றுக்கொண்டு ஒன்றாக வாழ்கின்றனர்.

அவர்கள் இப்போது இராமேஸ்வரத்திற்கு கௌதமின் பிறந்த நாளிற்கு திதி கொடுக்க சென்றிருந்தனர்.
தன் நினைவளிலிருந்து மீள முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்ட, விளையாடிக் களைத்த ஆனந்த் அவள் அருகே ஓடி வந்து

“அம்மாஆஆ” என கத்திக் கொண்டே வந்தவன் அவள் மடியில் ஏறி அமர முயன்றவன் தன் தாயின் கண்களில் கண்ணீரை கண்டவன்

“என்னம்மா ஆச்சு அழற” என்று உதடு பிதுக்கி தானும் அழ தயாராக

தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள் ஆனந்திடம் “ஒன்னுமில்ல செல்லம் கண்ணுல ஏதோ விழுந்துருச்சு” என கூறவும்

அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு மடியில் ஏறி நின்றவன்
ப்பூப்பூூ என ஊதி,

“போயிருச்சாம்மா”

“அம்மாக்கு சரியாயிருச்சு செல்லம் நீங்க வாங்க” என்று அழைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தவள்

அவனை அங்கே குழந்தைகளை பார்த்துக்கொள்பவரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சீதாம்மாவின் அறைக்குச் சென்றாள்.

“வாம்மா வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க, எப்ப இராமேஸ்வரத்திலிருந்து வருவாங்க” என சீதாம்மா கேட்க
“நல்லா இருக்காங்கம்மா. அப்படியே காசி போயிட்டு வர ஒரு வாரம் ஆகும்ம்மா” என

“ஆர்த்தி நான் சொல்றேனு தப்பா நினைக்காதம்மா. ஆனந்த் சின்ன குழந்தை. ஆன வளர வளர அப்ப அவனுக்கு அப்பானு ஒருத்தர் தேவை. அப்ப என்ன செய்ய முடியும். உனக்கும் ஆனந்த்க்கும் இருக்குற அன்பால் நீ நல்லா இருக்கணும்னு தான் உனக்கு ஆனந்த குடுத்தோம். இப்ப ஒரு நல்ல பையன் வந்துருக்கான்ம்மா. உன்னையும் ஆனந்தையும் நல்லா பாத்துப்பான். நீயேன் அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கக்கூடாதும்மா. கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா ஆர்த்தி” என்று பேச

“இல்ல சரிவராதும்மா”

“ஏன் சரிவராது ஆர்த்தி?”

“எப்படி சொல்றதும்மா உங்ககிட்ட. ம்ம் கௌதம் இறந்த பின்னாடி வண்ணமிழந்த என்னோட வாழ்க்கையில் வண்ணத்ததைக் கூட்ட ஆனந்த் தான் வானவில்லாக வந்தான். என் வாழ்க்கை கௌதம்ல தொடங்கி ஆனந்த் அப்படிங்கிற இடத்துல தான் முடியுது”

“இதுல வேற யாருக்கும் பங்கு இல்ல. என்ன மன்னிச்சுருங்கம்மா. என்னோட வாழ்க்கை ஆனந்த் மட்டும் தான்” என்று திடமான குரலில் கூறியவள் ஆனந்தை தேடிச் சென்றாள்.

அவள் குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வரவும் இவ்வளவு நேரம் தன் தாயை பார்க்காததால் இப்போது பார்த்தவுடன் ஆனந்த்,

“அம்மா” என்று ஓடி வந்து அவள் கால்களை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

Advertisement