Advertisement

வானம் – 16
“உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க… இப்ப வந்திடறேன்னு வண்டியை எடுத்திட்டுப் போயிட்டு நைட்டு அவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்ற… சாயந்திரம் தன்யாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயி டாக்டர் கிட்டப் போகலாம்னா வண்டி இல்ல… இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்…” கொஞ்சம் கோபமாவே சொன்னான் பரத்.
“ஏன், எனக்கு எங்கயும் போக வேண்டாமா… எனக்கும் வண்டி வாங்கிக் கொடு…” என்றவனை கடுப்புடன் பார்த்தான்.
“நீ என்ன வேலைக்கா போற… இப்பதான் காலு கொஞ்சம் சரியாச்சு… அதுக்குள்ள கிளப்புக்குப் போறது, குடிக்கறதுன்னு தொடங்கியாச்சு… இதுக்கு நான் வண்டி வாங்கித் தரணுமா…”
“ஆமா, நீதான அந்த வீட்டை வித்த… அங்க இருந்தா நான் நடந்தே கிளப்புக்குப் போயிருப்பேன்… இப்ப இவ்ளோ தூரம் நடந்து போக முடியுமா…” என்றான் அவனும் விடாமல்.
“ச்சே… இவனெல்லாம் என்ன மனுஷன்…” என்று பரத்துக்குத் தோன்ற அமைதியாய் தம்பியைப் பார்த்தான்.
நந்தினி அவர்களைப் பார்த்துக் கொண்டே மகனை பள்ளிக்கு தயாராக்கிக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு துணியைக் காயப்போட்டு கொண்டிருந்த அனு அங்கே வர அமிர்தவள்ளி பிள்ளைகளைத் திட்டினார்.
“காலைல எதுக்குடா இப்படி கத்திட்டு கிடக்கறீங்க…”
“அம்மா, அவன்கிட்ட சொல்லி வைங்க… இனி இவன் என் பைக்கை எடுத்திட்டு போகக் கூடாது…”
“எனக்கும் அவனை பைக் வாங்கித் தர சொல்லும்மா…” என்றான் இளையவன். ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அன்னை முழித்தார். உடம்புக்கு முடியாமல் படுத்திருந்த தன்யா அவர்களின் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். அவளைக் கண்டதும் தம்பிக்கு பாவமாய் இருக்க அமைதியாகி விட்டான்.
“பாருங்க… ரெண்டு பேரும் கத்தி முடியாம படுத்திருந்த புள்ளைய எழுப்பி விட்டுட்டீங்க…” என்று சொல்ல அவள் இருமிக் கொண்டே அன்னையிடம் சென்றாள். அந்த சம்பவம் பரத்தின் மனதில் ஒரு நீற்றலை உண்டாக்கி இருந்தது.
பிறகு அடுத்து வந்த நாட்களில் அவனே தம்பியை அழைத்துக் கொண்டு கிளப்புக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்தான். வார விடுமுறை நாளில் மட்டும் தம்பி மது அருந்த பரத் இங்கே வந்ததில் இருந்து அதிசயமாய் குடிக்காமல் இருந்தான்.
அவனுடன் பணி செய்யும் நண்பர்கள் பாமிலி டூர் ஏற்பாடு செய்ய பரத்தும் வீட்டில் எல்லாரையும் மூகாம்பிகை, தர்மசாலா, உடுப்பி, மைசூர் என்று அழைத்துச் சென்றான்.
டிராவலர் வண்டியில் ஆறுமாத கர்ப்பிணியான அனு மகளை மடியில் அமர வைத்துக் கஷ்டப்பட நந்தினியும், அமிர்தவள்ளியும் கண்டு கொள்ளவே இல்லை. சில சமயம் பரத் மகளைத் தன்னிடம் அமர்த்திக் கொண்டான்.
அவர்களுக்கு அடிக்கடி அடம் பிடித்து அழும் அஸ்வினை சமாதானப்படுத்தவும் அவனை கவனிக்கவுமே சரியாக இருந்தது.
அனு அவர்களை சிரமப்படுத்த விரும்பாமல் தன் மடியிலேயே மகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்டாள். மூன்று நாள் வண்டியில் மாறி, மாறி செய்த பயணமும், சுற்றி அடித்ததும் முடியாமல் அலுத்துக் களைத்துப் போனாள். ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தனர்.
அனுவின் காலில் நீர் கோர்த்து வீங்கி அவள் கஷ்டப்படவும் சுடு தண்ணீரில் ஒத்தடம் கொடுத்து இரவு அவள் உறங்கும் வரை காலைப் பிடித்து விட்டான் பரத்.
நாட்கள் பிரச்சனை இல்லாமல் நகர அனுவுக்கு எட்டாவது மாதம் தொடங்கி இருந்தது.
அனு, மகளை உறங்க வைக்க அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் பரத்.
“என்னங்க, அப்பா போன் பண்ணினார்… ரெண்டாவது பிரசவம் அங்க பாக்குறேன்னு சொல்லி இருந்தாங்கல்ல… நாம எப்ப வர்றோம்னு கேட்டார்…”
“ம்ம்… இப்ப உனக்கு எட்டு தொடங்கிருச்சே… இனி இந்த மாசம் முடிஞ்சு தான் போகணும்னு அம்மா சொன்னாங்க…”
“ஆமாங்க… இவளுக்கும் லீவு சொல்லணும்…”
“அதெல்லாம் பார்த்துக்கலாம்… நாளைக்கு உனக்கு செக்கப் போகணும்ல…” என்றான் பரத்.
“ஆமாங்க…” என்றவளுக்கு முகம் மலர்ந்தது.
அவளை நோக்கியவன், “அனு… டெலிவரிக்கு நிச்சயம் அங்க போகணுமா… நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் எப்படி இங்க இருப்பேன்…” என்றான் வருத்தத்துடன்.
“முதல் பிரசவத்துக்கே அங்க போகலைன்னு அத்தைக்கு வருத்தம் இருக்கு… இப்பவும் எப்படிங்க… எனக்கு மட்டும் உங்களை விட்டுட்டு அங்க மனசு ஒட்டுமா…” என்றவளின் முகமும் வருத்தத்தைக் காட்ட அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் பரத்.
மகள் உறங்கி இருக்க மடியில் கிடந்த வளர்ந்த குழந்தையின் தலையைக் கோதிக் கொடுத்தாள். தனது முகத்தை முட்டிக் கொண்டிருந்த அவளது நிறைந்த வயிற்றில் மென்மையாய் முத்தமிட்டான் பரத்.
சட்டென்று வயிற்றுக்குள் ஒரு இளக்கம் தெரிய, “என்னங்க குழந்தை உதைக்குது…” என்றாள் வயிற்றில் அந்த இடத்தில் கையை வைத்து அமர்த்திக் கொண்டு.
ஆவலுடன் எழுந்து அமர்ந்த பரத் அவளது வயிற்றை உன்னிப்பாய் கவனிக்க அவனது கையை எடுத்து தன் வயிற்றில் அசைவு உள்ள இடத்தில் வைக்க அவன் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அங்கே நீவிக் கொடுக்கவும் சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு பிறகு மீண்டும் உதைத்து அசைந்தது.
“ஹாஹா… அனு… நம்ம புள்ளை பெரிய புட்பால் பிளேயர் போலருக்கு… இந்த உதை உதைக்கிறான்…” உற்சாகமாய் கூறிய கணவனின் வார்த்தையைக் கேட்டு சிரித்தாள்.
அவர்களின் தனிமையான நேரத்தில் பரத் மிகவும் பாசக்கார புருஷனாகவே இருந்தான். அதற்கு சரி சமமாய் முன் கோபமும் இருந்தது. இப்போது வாங்கிய கடனை எப்படியோ வட்டிக்கு வாங்கி சமாளித்து வந்தான்.
ஒன்பதாம் மாதம் தொடங்கியதும் அனுவை அவள் வீட்டில் கொண்டு போய் விடக் கிளம்பினர். மதியம் எல்லாருக்கும் ட்ரெயினில் சாப்பிட அனுவே தக்காளி சோறு செய்ய தனித் தனி இலைகளில் பாக் பண்ணி எடுத்து வைத்தான் பரத்.
பரத்தின் தம்பி தவிர மற்றவர்கள் எல்லாரும் அவளுடன் கிளம்பி இருந்தனர். தன்யா அனுவை விட்டு இருக்க மாட்டாள் என்பதால் ஒரு மாதம் ஸ்கூலுக்கு லீவு சொல்லி இருந்தனர். காலையில் ரயிலில் கிளம்பினாலும் அனுவின் வீட்டை அடையும்போது மாலையாகி விட்டது. அமிர்தவள்ளியின் நாத்தனார் வீடு என்ற சந்தோஷமும் சேர்ந்து கொள்ள அவர் அங்கே செல்கையில் சற்று குஷியாகி விடுவார்.
அன்று முழுதும் கதைகள் பேசி இரவு உணவு முடிந்து மீண்டும் பேசிக் கொண்டிருந்தனர். அனு சலிப்பாக இருந்ததால் நேரமே உறங்கி விட்டாள். அடுத்தநாள் வீட்டில் விருந்து மணக்க நன்றாக சாப்பிட்டு மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பினர்.
“நாளைக்கே இங்கே டாக்டர்கிட்ட செக்கப் போயிடு அனு… பத்திரமா இரு… தனுவைப் பார்த்துக்க…” என்ற பரத்துக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் அவளைப் பிரிவது சங்கடமாய் இருந்தது. தன்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்து கிளம்பினர்.
மாலை வீட்டுக்கு சென்றதும் போன் செய்து நல்லபடியாய் வந்து சேர்ந்தோம் என்று தகவல் சொன்னான் பரத்.
அன்று இரவு உணவு முடிந்ததும் ஒரு மாதிரி அவஸ்தையாய் உணர்ந்தாள் அனு. ஒருவேளை நீண்ட தூரம் பயணம் செய்தது காரணமாய் இருக்குமோ என்று சீரகம் காய்ச்சிய தண்ணீர் கொடுத்தார் சித்தி.
குடித்தும் வயிற்றைப் பிரட்டுவது போலவே இருந்தது. சற்று நேரம் நடந்தவளுக்கு இடுப்பிலிருந்து வயிற்றுக்குள் சுளீர் என்று ஒரு வலி வரவும், “அம்மா…” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டாள் அனு.
“பாத்ரூம் சென்றவளுக்கு சிறிதாய் தீட்டுப் படவே சித்தியிடம் விஷயத்தை சொல்ல அவள் தந்தை அந்த இரவு நேரத்தில் உடனே டாக்ஸியை அழைத்து வர ஹாஸ்பிடல் கிளம்பினர்.
விடிந்தால் தீபாவளி என்பதால் இரவு யாரும் டியூட்டியில் இருக்கவில்லை. இவர்கள் செல்ல நினைத்த கிளினிக்கில் டாக்டர் இல்லை. வேறு ஆசுபத்திரி ஒன்றில் கேட்க அங்கும் டாக்டர் இல்லை… முன் பரிசோதனை செய்யாமல் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார் அந்த நர்ஸ். நல்லவேளையாக அருகிலேயே நிறைய கிளினிக் இருந்ததால் மற்றொரு கிளினிக்கிற்கு சென்றனர்.
அங்கேயும் டாக்டர் இல்லாவிட்டாலும் ஆசுபத்திரிக்குப் பின்னால் தான் அவர் வீடு என்பதால் அவசரம் என்றால் அழைத்துக் கொள்ளலாம் என்றனர்.
அனுவின் தந்தை போலீசில் இருப்பதாக சொல்லவும் உடனே அட்மிஷன் போட்டு விட்டனர். அந்த ஹாஸ்பிட்டல் டாக்டரின் தந்தை டிஎஸ்பி யாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அந்த ஆசுபத்திரியில் காவல் துறையினருக்கு சற்று சலுகை இருந்தது.
ஒருவழியாய் அனுவை அனுமதித்து பரிசோதித்த நர்ஸ் உடனே டாக்டரை அழைத்தாள். அறையில் வலியில் கதறிக் கொண்டிருந்தாள் அனு. வெளியே நின்ற அவளது தந்தையின் கண்கள் அந்தக் குரலில் தன்னிச்சையாய் கலங்க தவிப்போடு  மனதுக்குள் இறைவனை வேண்டியபடி நின்றனர் இருவரும். சிறிது நேரத்தில் அனுவின் அலறல் நின்றது. 
குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்க சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர், “தீபாவளி ரிலீஸா உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கான் சார்… சந்தோசம் தானே, ரெண்டு பேரும் நல்லாருக்காங்க… கொஞ்ச நேரத்துல வார்டுக்கு வந்திருவாங்க, போயி பாருங்க…” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தார்.
அதைக் கேட்டதும் அனுவின் தந்தைக்கு சந்தோஷம் தாளவில்லை. அழகான விடியலில் நல்லபடியாய் மகனைப் பெற்றெடுத்தாள் அனு. விடியத் தொடங்கி விட்டதால் தீபாவளிக்கு அங்கங்கே வெடிச்சத்தம் கேட்கத் தொடங்க குழந்தையைக் கொண்டு வந்து காட்டிவிட்டு புன்னகைத்தாள் அந்த நர்ஸ்.
“உங்க பேரன் பிறக்கும்போதே குறும்புக்காரன்… குழந்தை பிறந்ததும் அழ மாட்டேங்கறான்னு தலைக்கு மேல பிடிச்சு குலுக்கினா அவன் சல்லுன்னு என் மேலயே மூத்திரம் அடிச்சுட்டான்…” அவள் சொன்னதைக் கேட்டு குழந்தையைப் பார்த்த இருவரின் மனமும் நிறைந்தது.
அடுத்த நாள் விடிந்தும் விடியாத நேரத்தில் பரத்துக்கு தொலைபேசியில் அழைக்க அந்த நேரத்தில் இவரது அழைப்பைக் கண்டு அவன் சற்று பயந்து போனான்.
“சாயந்திரம் தானே வந்தோம்… இப்ப எதுக்கு இந்நேரத்துல கூப்பிடறார்…” என யோசித்துக் கொண்டே எடுத்தான்.
“ஒண்ணுமில்ல பரத்… நல்ல விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்… உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்…” என்றதும் அவன் சந்தோஷத்தில் திகைத்துப் போனான்.
“என்ன சொல்லறிங்க மாமா… நேத்து சாயந்திரம் தானே அவளை விட்டுட்டு இங்க வந்தோம்… அதுக்குள்ள குழந்தை பிறந்திடுச்சா… ரெண்டு பேரும் நல்லாருக்காங்களா…” என்றவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
“நல்லாருக்காங்க… இப்ப தான் வார்டுக்கு மாத்தினாங்க… பையன் உங்க ஜாடை தான்… அனுவுக்கு நேத்து நைட்டு பன்னெண்டு மணிக்கு வலி வந்து ஹாஸ்பிடல் சேர்த்திட்டோம்… காலைல ரெண்டரை மணிக்கு குழந்தை பிறந்திடுச்சு… சரி, அந்த நேரத்துல உங்களைக் கூப்பிட வேண்டாம்னு தான் இப்ப கூப்பிட்டேன்…”
“நான் அடுத்த வண்டிலேயே கிளம்பி வரேன் மாமா…” அவன் பேசும்போதே விஷயத்தைப் புரிந்து கொண்ட அமிர்தவள்ளி, சந்தோஷத்துடன் “குழந்தை என்ன வெயிட் கேளு…” என்று சொல்ல, “மூணு கிலோ… எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லபடியா குழந்தை பிறந்துட்டான்…” என்றார்.
கேட்ட நந்தினியும் பரத்தின் தம்பியும் சந்தோஷப்பட்டனர். அதற்குப் பிறகு பரத்தால் அங்கே இருக்க முடியவில்லை. அடுத்த வண்டியிலேயே அன்னையுடன் மகனைக் காணக் கிளம்பினான்.  
காலையில் அனுவின் தம்பி, தன்யாவுடன் குழந்தையைக் காண ஆவலுடன் வந்திருந்தான். எழுந்ததும் அருகில் அன்னையைக் காணாமல் அழுத தன்யாவை அவன்தான் அழைத்து வந்திருந்தான்.
“தனுக்குட்டி… உனக்கு தம்பிப் பாப்பா பிறந்திருக்கான்…” என்றதும் அவளுக்கும் சந்தோஷமாக வீட்டுக்கு செல்ல மாட்டேன்.. அம்மாட்ட தான் இருப்பேன்…” என்று அடம் பிடித்து குழந்தையை சுற்றி வந்து வேடிக்கை பார்த்தாள்.
தீபாவளிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுத்து நர்ஸ்களுக்கு அன்பளிப்பு கொடுத்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார் அனுவின் தந்தை. வீட்டுக்கு அருகிலும் எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுத்தனர். ஒரு மாதிரி கொண்டாட்டமாய் உணர்ந்தனர்.
மதியம் பரத்தும், அன்னையும் வந்து விட குழந்தையைக் கண்டதும் சந்தோஷித்தனர். மனைவியை அன்போடு நோக்கியவன் அவள் கைகளில் தட்டிக் கொடுத்தான்.
“ரொம்ப சிரமப்பட்டியா அனு…”
“ம்ம்… தனுவுக்கு இந்த அளவுக்கு வலி இல்லங்க… இவன் கொஞ்சம் என்னைப் படுத்தி எடுத்திட்டான்…” என்றவளின் முகத்தில் வலியை விட தாய்மையின் பெருமிதமே தெரிந்தது. அனுவுக்கு குடும்பப் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்ததால் ஒரு வாரம் ஆசுபத்திரியில் இருந்துவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
பரத்தும், அமிர்தவள்ளியும் நான்கு நாட்கள் இருந்துவிட்டு ஊருக்குத் திரும்பி விட்டனர். பரத்தின் தம்பி வண்டி வாங்கித்தா என்று அடிக்கடி வீட்டில் நச்சரித்து சண்டை போடத் தொடங்க பரத்துக்கு எரிச்சலாக வந்தது.
வாங்கிய கடனை அடைக்கவே வழி இல்லாமல் இருக்க இப்போது அனுவின் பிரசவம், குழந்தைக்கு செலவு என வந்திருக்க, வேலைக்குப் போகாமல் சும்மா கிளப்புக்கு செல்பவனுக்கு வண்டி வேண்டும் என்பதோடு இவன் வண்டியை சொல்லாமல் எடுத்துச் செல்வது கடுப்பை அதிகம் ஆக்கியது.
அடுத்து குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வீட்டில் எல்லாருமாய் கலந்து கொண்டனர்.
மகனுக்கு தினேஷ் என்று எல்லாருமாய் ஒரு பெயரை முடிவு செய்தனர். பரீட்சை என்பதால் நிகழ்ச்சி முடிந்து தன்யாவையும் அவர்களுடன் அனுப்பி வைத்தாள் அனு.
அவளைப் புறப்பட்டு சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பை நந்தினி பார்த்துக் கொண்டாள். ஆனாலும் வந்த இரண்டே நாளில் குழந்தை அன்னையைத் தேடத் தொடங்கி விட்டாள். அந்த சமயத்தில் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்யவே பரத்துக்கு ஒரு எண்ணம் வந்தது.
“அம்மா, இனி வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டாம்… நீங்க வேணும்னா நம்ம சொந்த வீட்டுக்கே திரும்ப போயிக்கங்க… தம்பிக்கு கிளப்புக்கு நடந்தே போயிக்கலாம்… இப்படி என்னால பைக்குக்கு டிரைவரா அவனைக் கூட்டிட்டு போயிட்டு வந்திட்டு இருக்க முடியாது… ” அமிர்தவள்ளிக்கும் சொந்த வீட்டுக்கு செல்லும் ஆசை இருந்ததோ, இல்லை மூத்த மகன் சொல்லுவது சரியென்று தோன்றியதோ சம்மதமாய் தலையாட்டினார்.
“சரிப்பா, அனு வந்ததும் நாங்க அங்க போயிக்கறோம்…” என்று சொல்ல நந்தினி, தம்பிக்கும் சம்மதமே.
அனுவுக்கு பிரசவ பத்தியம் தொடர்ந்து கொண்டிருக்க 56 நாளிலேயே இங்கே பார்த்துக் கொள்வதாய் சொல்லி மனைவியை அழைத்து வந்தான் பரத். அவர்கள் அங்கிருந்து சொந்த வீட்டுக்கு மாறப் போவதை அறிந்த அனு “என்னாச்சு, எதுவும் பிரச்சனை இல்லையே…” என்று விசாரிக்க தம்பியைப் பற்றிக் கூறினான் பரத்.
“இத்தன வருஷம் நாம கூட தானே இருந்தோம்… அந்த ஏரியா தான் அவங்களுக்கும் பழக்கம்… அம்மாவோட சொந்தம் எல்லாம் சுத்தியும் இருக்காங்க… அவங்களுக்கும் அங்க போக விருப்பம் இருக்கவும் தானே அம்மா ஓகே சொன்னாங்க…” என்றான் பரத்.
அவள் வந்து ஒரு மாதத்திலேயே பரத் வாங்கிய சில பொருட்களை விட்டுவிட்டு அவர்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
அதற்குள் அனுவுக்கு மூன்று மாதம் முடிந்திருக்க குழந்தையைக் குளிக்க வைப்பதில் இருந்து வீட்டு வேலை எல்லாமே இவளே செய்ய வேண்டி வந்தது. பரத் உதவி செய்ய சமாளித்துக் கொண்டாள்.
இவர்கள் மட்டுமான வாழ்க்கை உண்மையில் ஒரு புது உலகத்தைக் காட்டியது. எத்தனை பிரச்சனை இருந்தாலும் கடன் இருந்தாலும் ஒருவர் மீது மற்றவர் கொண்டிருந்த அன்பும் புரிதலும் நம்பிக்கையைக் கொடுத்தது.
வாழ்க்கை சட்டென்று அழகானது போல் ஒரு உற்சாகம் தோன்றியது. அனு குழந்தைகளுடன் தனியே இருப்பாள் என்பதால் பரத் ஆபீஸ் முடிந்து மாலையில் வேறு எங்கும் செல்லாமல் வீட்டுக்கு வந்து விடுவான்.
குழந்தைகளுடன் அவன் விளையாட அனு சமைத்து விடுவாள். காலையில் மகளைப் பள்ளிக்கு கொண்டு போய் விடுவது மதியம் அழைத்து வருவது என்று அவர்களுக்கான உலகத்தில் சந்தோஷமாய் வாழ்க்கை நகர்ந்தது.
“அனு…”
“நாளைக்கு சினிமாக்குப் போகலாமா…”
“இப்ப எப்படிங்க… தினேஷ் அழுவானோ, என்னமோ…”
“அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என்ற பரத் அன்று குடும்பத்தோடு சினிமாவுக்கு செல்ல தினேஷ் அழாமல் கண்ணை உருட்டிக் கொண்டு சத்தம் வந்த திசையையும், வண்ணத் திரையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அனு இந்தப் பையன் எப்படி சினிமா பார்க்கறான் பாரு…”
“ஆமாங்க, ஒவ்வொரு குழந்தைங்க எப்படி அழுவாங்க…” என்று அனுவும் சிரித்தாள். அவனால் அவளுக்கு அதிகம் பிரச்சனை இல்லை. பகலில் பரத் இல்லாத நேரத்தில் எதிர் வீட்டில் உள்ள அக்காவும், அவரது இரண்டு மகன்களும் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு தினேஷை மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி எடுத்துச் செல்லுவர்.
நாட்கள் அழகாய் நகர்ந்தால் கண் பட்டு விடுமென்றோ என்னவோ குடும்பத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அமிர்தவள்ளியின் அன்னை சில மாதமாய் முடியாமல் இருந்தவர் காலமானதாய் வீட்டுக்கு போன் வந்தது.

Advertisement