Advertisement

“எனக்கு ஒரு வண்டி வாங்கித் தா… என்னை அங்க விடு… இங்க விடு…” என்று எரிச்சலோடு நடந்து கொள்ளத் தொடங்கினான். அடிக்கடி பணம் கேட்டு அன்னையை நச்சரித்தான். பரத் வட்டி கட்ட வைத்திருந்த பணத்தைக் கூசாமல் குடிக்க எடுத்துவிட்டு எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஓரளவுக்கு கால் சரியான பின்னும் வேலைக்கு செல்வதை யோசிக்காமல் குடி, கிளப் என்று கிடந்தான்.
மும்பையில் இருந்து சுரேஷின் சகோதரிகள் வந்திருக்கவே அவர்களையும், அங்கிருந்த அண்ணன்களையும் அழைத்துக் கொண்டு குவார்ட்டர்சுக்கு வந்தான் சுரேஷ்.
அப்போதுதான் சகோதரன் மகனைக் காணும் அவர்கள் ஏதேதோ பரிசுகளை குழந்தைக்குக் கொடுக்க நந்தினிக்கு சற்று இளக்கம் வந்தது.
“நந்தினி, என்ன முடிவு பண்ணிருக்க… இப்படியே ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா இருந்தா சரியாகுமா… குழந்தையும் வளரத் தொடங்கிட்டான்… இப்ப சுரேஷ் இந்த ஊருல தான இருக்கான்… அப்புறம் என்ன பிரச்சனை…” என்று தன்மையாய் கேட்டனர்.
பரத்தும் நந்தினியிடம், “அவங்க இவ்வளவு சொல்லறாங்க… நாங்கல்லாம் இங்க தான இருக்கோம்… அஸ்வினுக்கும் அப்பாகூட இருக்கணும்னு ஆசை இருக்கும்… அவங்க வீட்ல இருக்கப் பிடிக்கலனா வாடகை வீடு கூட எடுத்துக்கலாம்… கொஞ்சம் யோசிச்சுப் பாரு…” என்றான்.
அனைவரின் பேச்சு வார்த்தையின் கூட்டு முயற்சியாக இறுதியில் நந்தினி சுரேஷுடன் அவன் வீட்டுக்கு செல்ல சம்மதித்தாள். 
அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் சுரேஷ் வந்து அழைத்துச் சென்றான். சுரேஷ் குடிப்பவன் தான் என்றாலும் பரத் போல ரகளை செய்பவன் இல்லை. குடித்தாலும் அமைதியாய் படுத்து உறங்கி விடுவான். நந்தினியை இதுவரை அடுத்ததோ, துன்புறுத்தியதோ எதுவும் இல்லை.
ஒருவழியாய் நந்தினியின் வாழ்க்கை மகனுடன் புருஷன் வீட்டில் தொடர வேலையை விடாமல் அங்கிருந்து மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வந்தாள். அஸ்வினுக்கு ஸ்கூலுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்தனர்.
சுரேஷின் மூத்த அண்ணனும் மனைவியும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர். அவர்களின் பிள்ளைகள் இருவரும் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு வீட்டின் ஒரு போர்ஷனை அவர்கள் ஒதுக்கிக் கொடுக்க ஒரே சமையல் அறையில் ஆளுக்கொரு பக்கமாய் சமைத்துக் கொண்டனர். சுரேஷின் வயதான அன்னையும் அவர்களுடன் இருந்தார்.
நந்தினி காலையில் கிளம்புவதற்குள் எழுந்து சமையலை முடித்து விடுவார் சுரேஷ். மாலையில் வீடு திரும்பும் முன் டின்னரை ரெடி பண்ணி வைத்திருப்பார். ஆனால் அவரது சமையலில் காரம் அதிகம், புளி அதிகம் என்று அதற்கும் நந்தினி குறை கண்டு பிடித்தாள். ஆனால் நேரமே எழுந்து சமைக்கவும் மாட்டாள்.
அஸ்வினுக்கு வேண்டியது போல் எல்லாம் சுரேஷுக்கு செய்யத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது போல் ஒரு சமையலைப் பண்ணி வைத்து விடுவார். அஸ்வினும் இத்தனை நாள் இருந்த வீடு மாறி தந்தை வீட்டில் ஒட்டிக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டான்.
மாலையில் ஸ்கூல் விட்டு குழந்தை வந்தவுடன் அவனுக்கு சாப்பிடக் கொடுக்க, வேண்டியதை செய்து கொடுக்க அண்ணன் மனைவியிடம் சொல்லி இருக்கலாம்… ஆனால் இவள் எதுவும் சொல்லுவாளோ என நினைத்து அவர் எதற்கும் வராமல் ஒதுங்கிக் கொண்டார். சுரேஷின் அன்னைக்கு வயதானதால் சரியாக கவனிக்க முடியாது.
சுதந்திரமாய் தன் வீட்டில் இருந்து பழகிய நந்தினிக்கு பொறுப்புகளை சுமக்கப் பிடிக்காமல் மனம் ஒப்பவில்லை. மீண்டும் கணவனிடம் சிடுசிடுப்பைக் காட்டினாள்.
இருவருக்கும் பொதுவாகமே புரிதல் குறைவு என்பதால் அவரும் திருப்பி எதுவும் சொல்ல சண்டை வரத் தொடங்க ஒரு மாதத்தில் கோவித்துக் கொண்டு மீண்டும் பெட்டியை எடுத்துக் கொண்டு மகனுடன் தாய் வீடு வந்துவிட்டாள்.
அவள் இல்லாத சமயத்தில் அமிர்தவள்ளியிடம் நல்ல மாற்றம் இருந்தது. மருமகளிடம் நெருக்கம் காட்டினார். பேத்தியை நல்லபடியாய் கவனித்துக் கொண்டார். இவர்கள் செக்கப் செல்லும்போது “அனுவை எங்காச்சும் அப்படியே அழைச்சிட்டுப் போ…” என்றுகூட சொன்னார்.
பரத்தின் தம்பிக்கு கூட கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஆனால் மறுபடி இவள் திரும்ப வந்ததும் அவன் கோபமாய் பேசினான். “புருஷன் வீட்டுல இருக்க முடியலேன்னா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துகிட்ட… அட்ஜஸ்ட் பண்ணி இருக்க வேண்டியது தான…” என்றான்.
“நீ ஒண்ணும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்… என்னால அந்த வீட்டுல இருக்க முடியாது… வீடா அது, எப்பப் பார்த்தாலும் அந்தக் கிழவி லொக்கு லொக்குன்னு இருமிட்டே இருக்கும்… இந்தாளு என்னடான்னா சமைக்கறேன்னு இருக்குற மிளகாத்தூள் எல்லாம் குழம்புல போட்டு வச்சிருவான்… அஸ்வின் ஸ்கூல் விட்டு வந்தா கவனிக்கக் கூட அங்க ஆளில்லை… அந்த அண்ணன் பொண்டாட்டி சாயந்திரம் ஆனா எங்காச்சும் கிளம்பிருவா… என்னால எல்லாம் அங்க அட்ஜஸ்ட் பண்ண முடியாது… நான் இங்க இருக்கறதுல உனக்கென்ன பிரச்சனை…” என்றாள் கோபத்துடன்.
“நீ இப்படி இங்க வந்து உக்கார்ந்துகிட்டா நாளைக்கு என்னை யாரு கல்யாணம் பண்ணிக்குவா…”
“ஏன், இப்ப மட்டும் அப்படியே கியூல பொண்ணுங்க நின்னுட்டு இருந்தாங்களா… வேல, வெட்டின்னு எதுக்கும் போகாம அம்மா பென்ஷன்ல சாப்பிடற நீயெல்லாம் எனக்கு சொல்ல வந்துட்ட…” என்றாள் கடுப்புடன். அதைக் கேட்டதும் தம்பி கோபத்துடன் அவளை அறைய அன்னை ஓடி வந்தார்.
“டேய், என்னடா இது, எதுக்கு அவளை அடிக்கற… அவளுக்கு விருப்பமில்ல வந்துட்டா… அவளை வற்புறுத்தி புருஷன் வீட்டுக்கு அனுப்பி மனசு தாங்காம எதுவும் பண்ணிகிட்டா என்ன பண்ணுறது… எனக்குதான பொண்ணு போச்சு… நீ உன் வேலைய பார்த்துட்டு போ…” என்று மகளை அழைத்துச் செல்ல அனு விக்கித்து பார்த்து நின்றாள். அவனை முறைத்துக் கொண்டே நந்தினி உள்ளே சென்றாள். பரத் வந்ததும் விஷயத்தை சொல்ல அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாய் இருந்தான்.
அடுத்த நாள் மாலையில் பரத்தின் தம்பி சீக்கிரம் வந்து விடுவதாக சொல்லி பைக்கை எடுத்துச் சென்றான்.
உறங்கி எழுந்து வந்த தன்யா சோர்வுடன் அனுவை அணைத்துக் கொள்ள உடம்பு சுட்டது.
“தனும்மா, காய்ச்சல் அடிக்குதே… மருந்து குடிச்சா சரியாகிடும்… தரட்டுமா…” என்று அவளை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள். குழந்தை காய்ச்சலில் சிவந்த உதடை பல்லைக் கடித்து இறுக்கமாய் மூடி வைத்திருக்க, கெஞ்சிக் கொஞ்சி ஒருவழியாய் மருந்தைக் கொடுத்தாள். தன்யாவுக்கு மருந்து, மாத்திரை என்றாலே அலர்ஜி. முழுங்கிய உடனே இருமிய தன்யா சிறிது நேரத்தில் அப்படியே மருந்தை வாந்தி எடுத்தாள்.
அடுத்த பிளாட்டில் இருந்த நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த பரத் கீழே வர, “தனுக்கு காய்ச்சல் அடிக்குதுங்க.. டாக்டர்கிட்டப் போகணும்…” என்றாள் அனு.
சோர்ந்து முகமெல்லாம் மேலும் சிவந்து கண்களில் நீருடன் அன்னை மடியில் அமர்ந்திருந்த மகளைத் தொட்டுப் பார்த்தவன், “நல்லா சுடுதே… தம்பி வேற வண்டியை எடுத்திட்டுப் போயிட்டான்… அவன் வந்ததும் போகலாம்…” என்றான் பரத்.
இவர்கள் கிளம்பி காத்திருக்க, “இதோ இப்போ வந்திடறேன்…” என்று பைக்கை எடுத்துச் சென்றவனைக் காணவே இல்லை.
“என்னங்க, டைம் ஆச்சு… கிளினிக் அடைச்சிருவாங்க…” அனு சொல்ல பரத் என்ன செய்வதென்று யோசித்தான்.
அவன் தம்பியிடம் மொபைலும் இல்லை… எனவே கிளப்பில் இருக்கும் தம்பியின் நண்பனுக்கு போன் செய்து கேட்க, ஏதோ கல்யாண வீட்டில் இருப்பதாகக் கூறினான்.
“உடனே அங்க போயிட்டு என்னைக் கூப்பிடு… பொண்ணுக்கு காய்ச்சல், கிளினிக் அடைக்க முன்னாடி போகணும்… இவன் பைக் எடுத்திட்டுப் போயிட்டான்…” கோபத்துடன் விஷயத்தை சொல்ல அவன் சொல்லுவதாகக் கூறினான்.
மேலும் சிறிது நேரம் காத்திருந்தும் அவன் வருவதாக இல்லை. எனவே ஒரு ஆட்டோவை அழைத்து கிளினிக்கிற்கு கிளம்பினர். சரியாய் டாக்டர் கிளம்பும் நேரத்தில் செல்லவே அவர் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்தார்.
குழந்தைக்கு முடியாத நேரத்தில் ஒரு அவசியத்துக்கு கூட வண்டி இல்லாமல் தம்பி வண்டியை எடுத்துச் சென்றது அவனுக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. கல்யாண வீட்டுக்கு சென்றால் நிச்சயம் தண்ணி அடித்துதான் வருவான் என பரத்துக்குத் தெரியும்.
கடுப்புடன் அவன் வரவுக்குக் காத்திருக்க இரவு பதினொரு மணிக்கு மேல் வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் நுழைந்தவனைக் கோபமாய் பார்த்தான் பரத்.
எதுவும் அத்தனை
சுலபமில்லை இங்கே…
வார்த்தையில்
வசப்படும் வானம்
வாழ்க்கையில் உடனே
வசப்படுவதில்லை…
விதை போல தான்
விழ வேண்டும்…
வீழ்வதற்கு அல்ல
முளைத்து எழுவதற்கு…
கண்ணைத் தொடும்
வானத்தை கைகளும்
தொடும் காலம் வரும்…
அன்று நிச்சயம்
வானம் வசப்படும்…

Advertisement