Advertisement

வானம் – 15
பரத் எந்தப் பக்கம் சென்றாலும் விதி விரட்டி அடித்து கோல் போட்டது. எத்தனை பிரச்சனை கொடுத்தாலும் இவன் சலிக்காமல் சமாளிக்கிறானே என மேலும் மேலும் பிரச்சனைகளைக் கூட்டிக் கொடுத்தது.
சனிக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டான். மாதாமாதம் அவனது நட்சத்திர நாளுக்கு கோவிலில் பூஜைக்கு கொடுத்தான். ஆனாலும் அவனது சனி தோஷம் வதைத்து எடுத்தது. விதிக்கும், வாழ்வுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பரத்.
ஒரு காலே அவ்வளவுதான் இனி நடக்க முடியாது என்ற நிலையில் மொத்தமாய் பதினைந்து நாட்கள் தம்பியை ஆசுபத்திரியில் வைத்திருந்து முறிந்து தொங்கிய காலுக்கு தகடு வைத்து ஆப்பரேஷன் செய்து தொடையில் இருந்து தசையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவனது காலை ஒரு விதத்தில் சரியாக்க முயன்றிருந்தனர்.
ஆறு மாத பெட் ரெஸ்ட் வேண்டும், விடாமல் மெடிசின் எடுத்துக் கொள்ள வேண்டும், வாரம் இருமுறை செக்கப் வரவேண்டும், காலை கீழே தொங்க விடாமல் அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பல வேண்டும்களை சொல்லி லட்சங்களை விழுங்கிக் கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்பினர்.
தம்பியின் நல்ல காலமோ, இல்லை அண்ணனுக்கு கடன் சேர வேண்டுமென்ற கஷ்டகாலமோ அவசரத்துக்கு வேண்டிய பணம் நண்பர்கள் வட்டிக்கு வாங்கிக் கொடுத்தனர்.
நிறைய மருந்துகள், பரிசோதனைகள் அங்கே தங்கிய செலவு, உணவு என பணம் தண்ணியாய் செலவாகியது. வீட்டை விற்று பணத்தைத் திருப்பிக் கட்டியதை விட மேலும் இப்போது கடனாகி இருந்தது.
“தம்பிக்கு காலு போனா அவன் வாழ்க்கையே வீணாப் போயிரும்… நீதான் எப்படியாச்சும் பணத்தை ரெடி பண்ணி அவனைப் பழைய போல நடக்க வைக்கணும்…” என்ற அன்னையின் கண்ணீரை அவனால் புறந்தள்ள முடியவில்லை.
தம்பிக்கு துணையாய் ஹாஸ்பிடலில் நிற்க அவன் காலைப் பிடித்துக் கொண்டு தூக்க என மூன்று பேர் வேண்டிவர அவன் வயதை ஒத்த மாமன் மகன்கள் இருவர் பரத்துக்கு உதவிக்கு வந்தனர். தம்பி ஹாஸ்பிடலில் இருக்கும்போது வேறொரு சங்கடமான விஷயமும் நடந்தது.
அவனை ஹாஸ்பிடலில் சேர்த்து மூன்றாவது நாள். பரத் பணத்துக்கும் ஹாஸ்பிடலுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அனு அவனிடம் தயக்கத்துடன் கூறினாள்.
“பரத், எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு… செக் பண்ணனும்…” என்றதும் அவனுக்கு இந்த நேரத்தில் ரெண்டாவது குழந்தையா என்று கவலைப்படதான் முடிந்தது. இந்த ஓட்டத்துக்கு நடுவில் குழந்தையின் வரவை சந்தோஷமாய் எதிர்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. அனுவின் டெஸ்ட் ரிப்போர்ட் பாஸிடிவ் வரவும் யோசித்தவன் அனுவிடம் தயக்கத்துடன் கேட்டான்.
“அனு… இந்த சூழ்நிலைல நமக்கு குழந்தை தேவையா…”
அவனது கேள்வியை அவள் எதிர்பார்த்தாளோ, அல்லது அவளும் அதையே யோசித்தாளோ பரத்தின் கேள்வி அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. அமைதியாய் நின்றாள்.
“அனு… தம்பிக்கு ஹாஸ்பிடலுக்கு ஓடிட்டு இருக்கற இந்த நேரத்துல உன்னை கவனிக்கறது கஷ்டம்… முதல் குழந்தைக்கே மாசம் ஒரு விலை கூடின ஊசி போட வேண்டி வந்துச்சு… மாச செக்கப்பும் இருக்கு… அதனால…” என்றவன் வருத்தமாய் நிறுத்திவிட்டு அவளை நோக்கினான்.
“ம்ம்… புரியுதுங்க, உங்க விருப்பம் போல செய்யுங்க…” என்றவள் அதற்கு மேல் அதைப்பற்றி பேச விரும்பாமல் உள்ளே சென்று விட்டாள்.
பரத்தின் நண்பன் ஒருவன் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தான். அவனிடம் விஷயத்தை சொல்லி கர்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை வாங்கி வந்து அனுவிடம் கொடுத்தான். வீட்டில் எல்லாரும் வருத்தத்தில் இருந்ததால் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
ஆனால் நண்பன் கொடுத்த மாத்திரையைக் குடித்தும் அனுவுக்கு எந்த மாற்றமும் இல்லாததால் குழம்பினர்.
“மாத்திரை குடிச்சு ரெண்டு நாளாகியும் ஒண்ணும் ஆகல, இப்ப என்னங்க பண்ணறது…” என்றாள் அனு கவலையுடன்.
“எதுக்கும் டாக்டரைப் பார்த்துடலாம்…” என்ற பரத் அன்றே லேடி டாக்டரிடம் அழைத்துச் செல்ல, பரிசோதித்தவரிடம் வீட்டு சூழ்நிலையை சொல்லி மாத்திரை போட்டதைப் பற்றியும் கூற திட்டினார்.
“முறையான பரிசோதனை இல்லாம எதுக்கு நீங்களே மாத்திரை போடறீங்க… இப்ப இந்தக் குழந்தை இருக்கட்டும்னு விடவும் முடியாது… ஒருவேளை ஊனமாப் பிறக்கவும் சான்ஸ் இருக்கு…” என்று அவர் சொல்ல இருவரும் கலங்கினர்.
பிறகு அவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அடுத்த நாளே அபார்ஷனுக்கு ஏற்பாடு செய்தார் டாக்டர்.
ஆசுபத்திரிக்கு கிளம்பிய அனுவுக்கு மனம் தவித்தது.
என்னதான் குடும்ப சூழ்நிலை காரணமாய் அபார்ஷனுக்கு சம்மதித்தாலும் அவளது உதிரத்தில் உதித்த கருவைக் களைய மனம் வலித்தது. கண்ணீருடன் கிளம்பிய மனைவியை மனதில் தாங்கிய வேதனையுடன் அழைத்துச் சென்றான் பரத். அபார்ஷன் முடிந்து அனுவை அங்கேயே ஓய்வெடுக்கும்படி டாக்டர் கூறினார்.
பகலில் நந்தினி துணையிருக்க இரவில் பரத் வந்துவிட்டான். அடுத்தநாள் வயிற்றில் இருந்த சுமையைக் குறைத்துவிட்டு மனதில் நிறைந்த சுமையுடன் இருவரும் வீடு திரும்பினர்.
புதிய வீட்டில் நிறைய மன சங்கடத்துடன் அவர்களின் வாழ்க்கை தொடங்கியது. தம்பி வீட்டுக்கு வந்துவிட உறவுகள் அடிக்கடி வந்து கண்டு சென்றனர். அவனது உடல்நிலை தேற நல்ல உணவுகள் கொடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லவே முட்டை, பால், பழம் மீன் என்று கவனித்துக் கொண்டனர்.
நந்தினியின் கணவன் சுரேஷ் விவரம் அறிந்து மச்சானைப் பார்க்க வந்திருந்தான். என்ன தோன்றியதோ நந்தினி சற்று நன்றாகப் பேசவே அடுத்த வாரமும் வந்தான்.
வாரம் இருமுறை தம்பியை ஆசுபத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவை ஏற்பாடு பண்ணி இருந்தான் பரத். முன்னரே பரிச்சயமுள்ள ஆட்டோ டிரைவரும், மாமன் மகனும் அவனை இருபுறமும் தோளோடு தாங்கிக் கொள்ள, பரத் ஆப்பரேஷன் செய்த காலை கீழே தொங்காமல் பிடித்துக் கொண்டு வருவான். ஆசுபத்திரிக்கு அழைத்து சென்று வருவர். மிகவும் கஷ்டமாய் கழிந்த காலம் அது.
அனு அந்த வீட்டில் இருந்து மீண்டும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு செல்ல நந்தினியும் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
மூன்று மாதத்திற்குப் பிறகு பரத்துக்கு கவர்ன்மென்ட்   குவார்ட்டர்ஸ் கிடைக்கவே அங்கே செல்லத் தீர்மானித்தனர். இப்போது வாங்கிய வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அனைவரும் குடும்பத்துடன் குவார்ட்டர்ஸ்க்கு மாறினர். அங்கே சென்று மூன்று மாதம் கழித்து பரத்தின் தம்பியை நடக்க முயற்சிக்குமாறு டாக்டர் கூற மெல்ல வீட்டுக்குள் நடக்க முயன்றான். உண்டு, படுத்து வெறுமனே நேரத்தைக் கழித்ததால் நன்றாய் உடம்பு போட்டிருந்தது.
தன்யாவுக்கு மூன்றரை வயது ஆகியிருக்க அருகிருந்த ஸ்கூலில் சேர்த்தனர். அஸ்வின் இங்கிருந்து ஆட்டோவில் பழைய ஸ்கூலுக்கு சென்று வந்தான். பரத்தின் தம்பி மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தான். ஆபீஸ் போய் வரவும், மகளை ஸ்கூலில் விடவும் வண்டி இல்லாமல் சிரமமாய் இருக்கவே ஒரு செகனண்டு பைக்கை பரத் வாங்கினான்.
தம்பி ஒரு காலை சாய்த்து தாங்கித் தாங்கி நடப்பதைக் காண கஷ்டமாக இருந்தது. அதுவும் அந்தக் கால் சற்று சூம்பி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் தோல் வித்தியாசமாய் தெரிந்தது. எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்ததால் போகப் போக தம்பி சிடுசிடுத்தான்.
எனவே அவனையும் பைக்கில் அழைத்துக் கொண்டு பழைய  கிளப்புக்கு அண்ணனும், தம்பியும் செல்லத் தொடங்கினர். மாலை சென்றால் இரவு வரை இருந்துவிட்டே வருவார்கள். சில சமயம் இருவரும் குடித்துவிட்டு வந்தனர். “கொஞ்சம் சரியானதும் ரெண்டும் செட்டு சேர்ந்து தண்ணி அடிச்சு வருதுங்களே…” அமிர்தவள்ளி புலம்பினார்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பரத் அனுவை நேசிப்பதில் குறை வைக்கவில்லை. வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் அவளுடன் இருக்கும் சமயத்தில் அன்பை வெளிப்படுத்தத் தவறவில்லை. அந்த சமயத்தில் மீண்டும் அனு கர்ப்பமானாள். பரத்துடன் ஆசுபத்திரிக்கு போகும் சில நேரம் பீச்சுக்கு அழைத்துச் செல்வான். ஐஸ்க்ரீம், கட்லட், ஆரஞ்சு ஜூஸ் என்று அவளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுப்பான். அவனுடன் இருக்கும் சமயத்தில் மனதில் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தாள் அனு.
பரத் வண்டியை எடுத்து வேறு எங்கும் கிளம்பினால் தம்பிக்கு கிளப்புக்கு செல்ல முடியாமல் கோபம் வந்தது. அதுவுமில்லாமல் அவனிடம் யாரோ, “வீடும் போச்சு, காலும் போச்சு… உன் அக்காவும் வீட்டோட இருக்கா.. உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகறது கஷ்டம் தான்..”. என்று அவனது நண்பர்களோ, உறவுகளோ சொல்லி விட்டார்கள் போல. அதற்குப் பிறகு எதற்கெடுத்தாலும் வீட்டில் சண்டை போடத் தொடங்கினான்.

Advertisement