Advertisement

வானம் – 14
இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள். மகனிடம், அதை வாங்கி வா… இதை வாங்கி  வா… என்று சொல்ல வேண்டியே ஒரு வாரத்தில் மௌனத்தை முடித்துக் கொண்டவர், மருமகளிடம் அவள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லி மௌனத்தை தொடர்ந்தார்.
பரத் மனைவியிடம், “அவங்க பேசலைன்னு நீ பீல் பண்ண வேண்டாம்… உனக்கு என்ன சொல்லணுமோ சொல்லு… அவங்க பேசினாப் பேசட்டும்… இல்லேன்னா விட்டுடு…” என்று முன்னமே சொல்லி இருந்தான். எனவே அனு பேசாமல் இருக்காமல் தானாக சென்று பேசினாள்.
“அத்தை நான் சப்பாத்தி பிசையறேன்… நான் தண்ணி எடுக்கிறேன்…” என்று தானாகவே கேட்டு செய்தாள்.
பரத் அலுவலகத்தில் இருந்து வந்தாலும் தம்பியுடன் கிளப்புக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவான். அனுவுக்கு அவர்கள் பேசாதது கஷ்டமாக இருந்தாலும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பாள். அஸ்வினுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பாள். அவர்கள் மெல்ல சரியாகி ஒரு மாதத்தில் இயல்பாய் பேசத் தொடங்கினார்.
மகன் பள்ளிக்கு செல்லத் தொடங்கியதால் நந்தினி அதிக நேரமும் சும்மாவே இருந்தாள். வேலைக்குப் போனால் என்னவென்று தோணவே தம்பியிடம் கூறினாள்.
“பரத், எனக்கு ஏதாவது வேலை சரி பண்ணிக் கொடு… அஸ்வின் தேவைக்காச்சும் அந்தப் வருமானத்தை யூஸ் பண்ணுவேன்ல…” என்றாள் நந்தினி.
“சரி பார்க்கறேன்…” என்ற பரத் நண்பர்களிடம் சொல்லி வைத்தான். ஒரு மெடிக்கல் ஷாப்பில் ஆள் வேண்டுமென்று கூறிய நண்பன் ஒருவன் பரத்தை நந்தினியுடன் சென்று பார்க்குமாறு கூறினான்.
நந்தினி லாப் டெக்னிஷியன் கோர்ஸ் படித்திருந்தாள். ஆனாலும் முடிக்காததால் சர்டிபிகேட் இல்லாமல் அந்த வேலைக்குப் போக முடியவில்லை. மெடிக்கல் ஷாப்பில் அவசரமாய் ஆள் வேண்டுமென்பதால் முன் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இவளை சேர்த்துக் கொண்டனர். 
காலை ஒன்பதரைக்கு கிளம்பினால் மாலை ஏழு மணிக்கு தான் நந்தினி வீட்டுக்கு வருவாள். அஸ்வினை அமிர்தவள்ளியும், அனுவும் பார்த்துக் கொண்டனர். அவனுக்கும் அன்னை வேண்டும் என்றெல்லாம் இல்லை.
நந்தினியும் தினமும் குழந்தைகளுக்கு பாரபட்சம் இன்றி பழங்கள் வாங்கி வருவது, காய்கறி வாங்கி வருவது என்று செலவுகளைப் பகிர்ந்து கொண்டாள். குழந்தைகளிடம் வேறுபாடு காட்டாமல் நன்றாகவே செய்வாள்.
அனுவும் காலையில் இரண்டு மணி நேரம் அடுத்த தெருவில் இருந்த கம்ப்யூட்டர் கிளாசுக்கு சென்று கொண்டிருந்தாள்.
வட்டிக்குக் கடன் கொடுத்த பைனான்சியர்கள் வட்டி கட்டாத காரணத்தால் பரத்தின் அலுவலகத்திலும், வீட்டிலும் அடிக்கடி வரத் தொடங்கினர். அவர்களை சமாளித்து அனுப்பியவன் வேறு பைனான்ஸில் வட்டிக்குப் பணம் வாங்கி வட்டியைக் கட்டத் தொடங்கினான்.
அவர்கள் ஏச்சும், பேச்சும் சகிக்க முடியாமல் மன உளைச்சல் தாளாமல் மீண்டும் குடிக்கத் தொடங்கி இருந்தான். அனு கேள்வி கேட்டால் நிறைய கோபப்பட்டான். அவனது கோபம் தாங்காமல் அனு வருந்தினாள்.
ஒரு நாள் மாலையில் அனு அஸ்வினை ஹாலில் அமர வைத்து A B C D சொல்லிக் கொடுக்க வாசலில் நிழலாடியது.
எழுந்து வந்தவள் யாரோ நிற்பதைக் கண்டதும், “யாரு, என்ன வேணும்…” என்றாள்.
“இது பரத்சந்தர் வீடு தானே… அவர் இருக்காரா…”
“அவர் வீடுதான், வெளில போயிருக்கார்… நீங்க…”
“நான் பாலாஜி பைனான்ஸ்ல இருந்து வரேன்… ஆபீசுக்குப் போனா லீவ்னு சொன்னாங்க… அதான் இங்க வந்தேன்…” பைனான்ஸ் என்றதும் அவளுக்கு திக்கென்று இருக்க, அதற்குள் பேச்சுக் குரல் கேட்டு அமிர்தவள்ளி வந்திருந்தார்.
“என்ன வேணும், எதுக்கு என் மகனைக் கேக்கறீங்க…”
“அவர் நாலு மாசமா வட்டி கட்டவே இல்லை… அதான் கையோட வீட்டுல போயி வாங்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பிருக்காங்க… அவர் எப்ப வருவார்…”
“அவன் எப்ப வருவான்னு தெரியாது… எதுவா இருந்தாலும் அவன் வந்தபிறகு பேசிக்கங்க…” என்றுவிட்டு, “அனு… உள்ள போ…” என்று மருமகளை அழைத்துச் சென்றார்.
சட்டென்று அவர்கள் உள்ளே செல்லவும் அவருக்குக் கோபம் வந்தது. அங்கே நிற்காமல் கிளம்பினார். கொஞ்ச நாளாகவே வீட்டுக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து செல்ல பரத்தின் கடன் சுமை வீட்டினருக்கும் தெரியத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பரத்தின் தம்பி அண்ணனைத் தேடினான்.
“அம்மா, அண்ணன் எங்கே… இன்னும் வீட்டுக்கு வரலியா…”
“என்னடா, என்னைக் கேக்கற… நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத் தான கிளப்புக்கு கிளம்பினிங்க…”
“ஆமா, நான் என் பிரண்டு கூட போயிட்டேன்… அண்ணனைத் தேடி ஏதோ பைனான்ஸ்காரங்க வந்ததா சொன்னாங்க… கசகசன்னு ஏதோ பேச்சு வார்த்தையாகி அடிதடி வரைக்கும் போயிருச்சு போலருக்கு… கிளப்புல உள்ள பிரண்ட்ஸ் தான் அவங்கள சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பிருக்காங்க…” அவன் சொல்லவும் கலங்கினார்.
“ஓ… என்னடா, அடிதடின்னு எல்லாம் சொல்லி வயித்துல புளியைக் கரைக்குற… இப்ப உன் அண்ணன் எங்கே…” அவர் கேட்க, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அனுவின் உள்ளம் பயத்தில் கலங்கியது.
அவளை நோக்கியவன், “பயப்படாதீங்க அண்ணி… நான் போயி பார்த்திட்டு வரேன்…” என்றவன் மீண்டும் கிளம்ப முழு போதையில் நண்பனுடன் வந்திறங்கினான் பரத். முகம், கண்கள் எல்லாம் சிவந்து உடை கசங்கி அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. தள்ளாடியபடி இறங்கியவனை தம்பி சென்று அழைத்து வந்தான்.
“அன்னையைக் கண்டதும் சற்று ஸ்டடியாக முயன்றவன், “மம்மீ… சாப்..ட்டாச்சா…” குழறலாய் கேட்க, அனு எதுவும் பேசாமல் தவிப்புடன் நின்றாள். அதென்னவோ தண்ணி உள்ளே சென்றால் பரத்துக்கு பேச்சில் ஆங்கிலம் கலந்துவிட அனு என்ன சொன்னாலும், செய்தாலும் கோபப்படுவான்.
அறைக்கு சென்றவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டு ஒரு லுங்கியைக் கட்டி வந்தான். நிதானமாகக் காட்டிக் கொள்ள மிகவும் முயன்றாலும் நடையும், பேச்சும் காட்டிக் கொடுத்தது. நல்லவேளையாக குழந்தைகள் உறங்கி இருந்தனர். அவனைக் கண்டு நந்தினி முகம் சுளித்தாள்.
“ச்ச்சே… இவனுங்க தொல்லை தாங்க முடியலை… வீட்ல நிம்மதியா இருக்க முடியுதா… தினம் தண்ணியப் போட்டு வந்துட்டு…” முனங்கிக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.
சாப்பிட அமர்ந்தவனுக்கு அனு தட்டை வைக்க, “அனுக்குட்டி, சாப்பிட்டியா…” என்று கேட்க, “ம்ம்… நீங்க சாப்பிடுங்க…” என்றபடி கண்ணில் நிறைந்த நீரை உள்ளே இழுத்துக் கொண்டு பரிமாறினாள். அருகில் பரத்தின் தம்பியும் சாப்பிட அமர்ந்திருக்க அவனுக்கும் பரிமாறினாள்.
ஏதேதோ பேசி, உளறிக் கொண்டே ஒருவழியாய் சாப்பிட்டு எழுந்தான் பரத். அவன் வந்தவுடனேயே யாரும் ஏதும் பேச வேண்டாமென்று தம்பி சொல்லி வைத்திருந்தான்.
டீவி ஓடிக் கொண்டிருக்க தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த அன்னையின் அருகில் அமர்ந்தவன் மடியில் தலை வைத்துக் கொண்டான்.
“மம்மி… சாப்…டிங்களா…”
“ம்ம்… சாப்பிட்டேன், சொன்னேன்ல…”
“எங்க, தனு, அஸ்வின் எல்லாம் தூங்கி..யாச்சா…”
“ம்ம்… சாப்பிட்டு தூங்கிட்டாங்க…” என்றவர் அவன் தலை முடியைக் கோதிக் கொடுக்க சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் சட்டென்று எழுந்து அழத் தொடங்கினான்.
“அண்ணா, என்னாச்சு… எதுக்கு அழறே…” அருகிலிருந்த தம்பி சொல்ல பதறிப் போன அமிர்தவள்ளியும், “டேய் பரத்… என்னாச்சு டா உனக்கு… எதுக்கு அழறே…” என்று பதற கண்ணீருடன் பார்த்து நின்றாள் அனு.
“எ..என்னால சுத்தமா முடியலம்மா… யாருக்கும் பதில் சொல்ல முடியல… எப்படி இந்த கடன் எல்லாம் அடைக்கப் போறன்னு தெரியல… மேல மேல அதிகம் தான் ஆகுதே ஒழிய தீர மாட்…டேங்குது…” முகத்தைப் பொத்தியபடி அழுது கொண்டே அவன் சொல்ல கேட்டவர்களுக்கே கஷ்டமாய் இருந்தது.
“எல்லாம் சரியாகிடும் டா… அழாத…” அமிர்தவள்ளி சொல்ல மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தவன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.
“எப்படி மா, சரியாகும்… வட்டி கட்டறதுக்கே பைனான்ஸ்ல வட்டிக்கு பணத்தை வாங்கி தான் கட்டறேன்… ஒவ்வொருத்தனும் கேக்குற கேள்விய தாங்க முடியல…”
“டேய்… எப்படி இவ்வளவு கடன் ஆச்சு…”
“என்னமா, தெரியாத போல கேக்கறிங்க… அக்கா கல்யாணத்துல இருந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் இங்கே கடன் வாங்கிட்டு தானே காரியம் நடக்குது… அதை அடைக்கலேன்னா அதிகம் தான ஆகும்… அனு கொண்டு வந்த நகை எல்லாம் போயிருச்சு… இனி எதை வச்சு சமாளிக்கறதுன்னு தெரியல… வீடு, ஆபீஸ் னு தேடி வந்தவங்க இப்ப வழில கூட நின்னு அசிங்கமா பேசிட்டுப் போறானுங்க… எப்படி தீர்க்கப் போறேன்னு தெரியல… கான்சர் மாதிரி கடனும் பெருகிப் பெருகி என்னையே அழிச்சிரும் போல… நான் சாகறதைத் தவிர வேற வழி தெரியலை…” என்று அழுதவனைக் கண்டு அனுவுக்கு கோபமும் வருத்தமும் தோன்ற கண் கலங்கினாள்.
அவன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தார் அமிர்தவள்ளி. நந்தினியும் எதுவும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க பரத்தின் தம்பி தான் சட்டென்று கூறினான்.
“அண்ணா, உன்னை இழந்துட்டு எங்களுக்கு எதுவும் தேவை இல்லை… பேசாம இந்த வீட்டை வித்து உன் கடனை அடைக்கப் பாரு…” அவன் சொல்லவும் அமிர்தவள்ளியும் நந்தினியும் சற்று அதிர்ச்சியுடன் இளையவனைப் பார்த்தனர்.
“என்னடா சொல்லற, வீட்டை விக்கறதா…”
“ம்ம்… அண்ணன் இப்படி கலங்கி நிக்கறதைப் பார்த்துட்டு எப்படிம்மா சும்மா இருக்க முடியும்… நம்மளுக்கு செய்து தான அவனுக்கு கடன் வந்துச்சு… தாங்க முடியாம அவன் ஏதாச்சும் செய்துகிட்டா என்ன பண்ணறது… அவனை விட இந்த வீடொண்ணும் பெருசில்ல…” என்றான் தம்பி.
அவன் சொன்னதைக் கேட்டு பரத்தும், அனுவும் திகைப்புடன் நோக்க அமிர்தவள்ளி, நந்தினியும் யோசித்தனர்.
“வீட்டை வித்தா எங்க போறது…” என யோசித்தவருக்கு மகனின் வார்த்தையும், கலக்கமும் பயத்தைக் கொடுத்தது.  ஏனென்றால் சில நாள் முன்பு தான் அருகில் ஒரு குடும்பம் கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை பண்ணி இருந்தது.
“பரத், இந்த வீட்டை வித்துட்டு கொஞ்சம் அவுட்டர்ல சின்னதா ஒரு வீடு எடுத்துக்கலாம்… எங்களுக்கு உன்னை விட இந்த வீடு பெருசில்லை… நீ முடிஞ்சவரை கடனை அடைச்சிடு…” அன்னை சொல்ல நந்தினியும் சம்மதித்தாள்.
அனுவுக்கு இதெல்லாம் புதிதாய் அதிர்ச்சியாய் இருந்தது. பரத் எப்போதும் எதற்கும் புலம்பிக் கொண்டிருக்க மாட்டான். இத்தனை கடன் இருப்பது கூட இவர்களாகத் தெரிந்து கொண்டது தான். வீட்டினருக்கு செய்ய வேண்டிய எந்த செலவையும் தவிர்க்க முடியவில்லை. அனுவும் யாருக்கும் செய்ய வேண்டாம் என்று கணவனிடம் சொன்னதில்லை. ஆனால் இந்த நேரத்தில் மகனின் பிரச்சனையைப் புரிந்து கொண்டு அவனது குடும்பம் இப்படி ஒரு முடிவெடுத்தது அவளுக்கு வியப்பாய் இருந்தது. என்ன இருந்தாலும் அவன் மீது அன்பு கொண்டவர்கள் என்ற நம்பிக்கை வந்தது.
பரத்துக்கே அன்னை வீட்டை விற்க சம்மதம் சொன்னது கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஒருவேளை தான் ஏதாவது செய்து கொள்வோம் எனப் பயந்து சம்மதம் சொன்னார்களோ… என்று கூட நினைத்தான். அவர்கள் தீர்மானம் கொஞ்சம் சமாதானத்தைக் கொடுத்தது.
அடுத்த நாளே தெரிந்த புரோக்கர்களிடம் சொல்லி வைத்தான். கொஞ்சம் சின்ன பட்ஜெட்டில் வீடு பார்க்கவும் சொன்னான். ஒருவேளை சரியாய் அந்த சமயத்தில் அமையாமல் போனால் என்ன செய்வது என நினைத்தவன் முன்னேற்பாடாய் பாமிலி குவார்ட்டர்ஸ்க்கு எழுதிக் கொடுக்கவும் செய்தான்.
அருகில் இருந்தவர்களின் சொந்தக்காரர் ஒருவரே வீட்டை வாங்கிக் கொள்வதாக சொல்ல அவர் கொடுத்த முன்தொகையை வாங்கி லோனில் இருந்த வீட்டை மீட்டான். ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து ஒரு மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்யுமாறு அவர் கேட்க முனைப்புடன் வீடு பார்க்கத் தொடங்கினர். வீட்டை விற்ற பணம் பாதிக் கடன் கூட அடைக்கப் போதவில்லை. இருந்தாலும் பிரச்சனை இருந்த கடனை எல்லாம் சற்று அடைத்து முடிக்க கையில் சின்னத் தொகையே மிச்சமிருந்தது.
கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸ் கிடைக்கும் முன் சின்னதாய் ஒரு வீடு சரியாக அங்கே மாற முடிவு செய்தனர். தன்னை நம்பி வீட்டை விற்றவர்களுக்கு பணம் போதவில்லை என்று சொல்ல முடியாமல் வீட்டை வாங்கப் போதாத தொகையை பைனான்சில் மீண்டும் வட்டிக்கு வாங்கினான் பரத்.
வீட்டை வாங்கியவர்களின் பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி  இருந்தனர். அவர்கள் கல்யாணத்தை இந்த வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டி இவர்கள் காலி செய்ததும் பெயின்ட் அடித்து இங்கே வரவேண்டும் என்று சொல்லவே புரட்டாசி மாசம் எப்படி வீடு மாறுவது என யோசித்தாலும் அவர்கள் அவசரத்துக்கு வேறு வழியின்றி மாற சம்மதித்தனர்.
இவர்களின் வீடு இருந்தது மெயின் ஏரியா… கொஞ்ச தூரம் நடந்தால் பஸ் ஸ்டாப். ஆனால் இப்போது வாங்கிய வீடு கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. பஸ் ஸ்டாப்பில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.
முன்பு இருந்தது கான்க்ரீட் வீடு… இப்போது வாங்கியது இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட சிறிய ஓட்டு வீடு. முன்னில் பின்னில் இருந்த காலி இடத்தில் தென்னை மரங்களும் பூச்செடிகளும் நிறைய இருந்தது. அவர்களும் புதியதாய் கட்டிய வீட்டை கடனுக்காக விற்றிருந்தனர். புதிய வீடு என்பதால் நீட்டாக இருக்கவே அனைவருக்கும் பிடித்து விட்டது.
நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி, அன்றே வீடு மாற முடிவு செய்ததும் உறவுகளை எல்லாம் விசேஷத்துக்கு வருமாறு அழைத்தார் அமிர்தவள்ளி.
புதிய வீட்டுக்கு பெயின்ட் அடித்து பழைய வீட்டு சாமான்களை எல்லாம் கட்டி வைத்தனர். அடுத்த நாள் காலையில் பால் காய்ச்சுவது என்பதால் அமிர்தவள்ளியின் தங்கை, தம்பி என்று சில குடும்பங்கள் அந்த வீட்டில் இறுதி நாளைக் கழிப்பதற்கும், புதிய வீடு பால் காய்ச்சுவதற்கும் கணக்காக வீட்டுக்கு வந்து விட்டனர்.
எல்லாரும் பேசிக் கொண்டே அலமாரியில் இருந்த துணிகளை எல்லாம் மூட்டை கட்டி சாமான்களை எல்லாம் கட்டி வைக்க உதவி செய்தனர். அடுத்தநாள் கொண்டு செல்வதற்கான பொருட்களை எல்லாம் தயாராய் வைத்திருந்தனர்.
விடியற்காலையில் பரத்தின் மாமாவின் ஆட்டோவில் கிளம்பினர். அவர் ஒரு பிளைவுட் கம்பெனியில் டிரைவர் என்பதால் அங்கிருந்து மூன்று சக்கர கூட்ஸ் ஆட்டோவை ஷிப்டிங் வேலைக்குக் கொண்டு வந்திருந்தார். இவர்களின் நண்பர்களும் பொருட்களை மாற்ற உதவிக்கு வந்திருந்தனர்.
அதிகாலையில் நல்லபடியாய் கணபதி ஹோமம் முடித்து பாலைக் காய்ச்சினர். அனைவருக்கும் அதில் காபி போட்டுக் கொடுத்து டிபனுக்கு உப்புமா செய்யத் தொடங்கினர். அமிர்தவள்ளிக்கு அந்த வீட்டை விற்றதில் வருத்தம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. வந்திருந்த தன் உறவுகளுடன் சந்தோஷமாய் பேசி சிரித்துக் கொண்டே டிபனுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆண்கள் பழைய வீட்டில் இருந்து பொருட்களை இங்கே கொண்டு வருவதற்காய் வண்டியில் கிளம்பினர். சின்ன வண்டி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய முறை சென்று பொருட்களைக் கொண்டு வர வேண்டி வந்தது.
நண்பர்களுடன் ஜாலியாக சிரிப்பும் பேச்சுமாய் சின்னவன் மாறி மாறி அங்கிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வர பெரியவனும் நண்பர்களும் இங்கிருந்து அதை இறக்கி வைத்து வீட்டுக்குள் கொண்டு வைத்தனர். நந்தினியும், அனுவும் அந்தப் பொருட்களை வேண்டிய இடத்தில் வைத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாய் எல்லாப் பொருட்களையும் இறக்கி விட்டு ட்ரீட் கொடுப்பதற்காய் சின்னவன், நண்பர்கள் மாமாவுடன் பழைய வீட்டுக்கு கிளம்பினான். அங்கே அவனது நண்பர்களுக்கு பாட்டில் வாங்கி வைத்திருந்தான்.
“சீக்கிரம் வந்திடுங்க…” பரத் தம்பியிடம் சொல்ல, சந்தோஷமாய் வண்டியில் கிளம்ப வளைவில் திரும்பிய சில நிமிடத்தில் பெரிதாய் ஏதோ சத்தம் கேட்டது. முன்னிலேயே நின்று கொண்டிருந்த பரத்திடம் யாரோ ஓடி வந்து, “பரத், வண்டி கமுந்திருச்சு… சீக்கிரம் ஓடிவாங்க…” என்று சொல்லியபடி ஓட பதறியவன் நண்பர்களுடன் அங்கே ஓடினான். விஷயம் தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் பதறத் தொடங்க, அமிர்தவள்ளி கதறத் தொடங்கினார்.
வண்டி ஓட்டிய பரத்தின் மாமா பேசிக் கொண்டே கவனிக்காமல் வளைவில் எதிரே வந்த பைக்கைத் தட்டாமல் இருப்பதற்காய் வண்டியை வளைக்க மண் ரோட்டில் பாலன்ஸ் இல்லாமல் தடுமாறவே பின்னில் இருந்தவர்கள் கீழே குதித்து விட்டனர். ஆனால் பரத்தின் தம்பியின் கால் குதிக்க முயல்கையில் பாதம் வண்டியின் அடியில் மாட்டிக் கொள்ள பாதம் முறிந்து தொங்கியது.
வாழ்க்கையிலே
சோதனைகள் தாராளம்…
சோதனைகள் மட்டுமே
வாழ்க்கையானால்…
வாழ்வதா மீள்வதா
எனப் புரியாத புதிரை
விடாது துரத்தும்
விதிப் பலன்களாய்
நாளைய விடியல்…

Advertisement