Advertisement

“ஏய் அனு, என்னடி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க…” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் பிளேடைப் பிடித்திருந்த கையைப் பிடித்து மாற்ற, அனு சற்று அழுத்தமாய் மணிக்கட்டில் பிளேடைப் பதிந்திருந்ததால் அது சர்ரக்… என்று கிழித்துக் கொண்டு வந்தது. அவள் அவனை பயப்படுத்த நினைத்து அப்படி செய்ய, அவன் அவள் கையை மாற்ற முயன்றதில் விதி விளையாடி இருந்தது.
அமர்ந்திருந்த குழந்தையின் மேலும் சுவர், படுக்கையிலும் ரத்தம் தெறித்து, வெட்டுப்பட்டு திறந்து கொண்ட நரம்பின் வழியே பைப்பைத் திறந்தது போல் குபுகுபுவென்று அவளது இள ரத்தம் வேகமாய் வெளியேறத் தொடங்க குழந்தை பயந்து போய் அலற, பதறிப் போனான் பரத்.
“ஐயோ, என்னடி பண்ணி வச்சிருக்க…” என்றவன் கதறிக் கொண்டே அவள் கையின் வெட்டுப்பட்ட இடத்தில் அமர்த்திப் பிடிக்க அவனது விரல் உள்ளே இறங்கிப் போகவும் அவனுக்கு இதயமே நின்றது போல் ஆனது. “அம்மா… அக்கா… இங்க வாங்க…” என்று அலறிவிட்டு வேகமாய் அங்கிருந்த லுங்கி ஒன்றை எடுத்து கையில் சுற்ற அதையும் வேகமாய் நனைத்தபடி ரத்தம் வெளியேறத் தொடங்க அமிர்தவள்ளி, நந்தினி ஓடி வந்தனர்.
“ஐயோ, என்னாச்சுடா…” பதறியவர்கள் குழந்தையை எடுத்துக் கொள்ள, “க…கை முறிஞ்சிருச்சு மா… ஹா..ஸ்பிடல் போகணும்…” தவிப்பில் பரத்துக்கு வார்த்தை வரவில்லை. சும்மா பயப்படுத்துவதற்கு செய்த செயல் விபரீதமாகிப் போன கலவரத்தில் அனுவும் வெளிறிப் போய் பயந்து நின்று கொண்டிருந்தாள்.
அவள் கையைத் தூக்கிப் பிடித்தபடி இவர்கள் வெளியே வர, அதிர்ஷ்டவசமாய் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருக்கவும் வேகமாய் ஆசுபத்திரிக்கு விரைந்தனர்.
அங்கே முதலுதவி செய்ய அழைத்துச் சென்றவர்கள் வெறுமனே காட்டன் துணியை சுற்றி பேண்டேஜ் போட்டுவிட அதற்குள் கையைத் தூக்கி வைத்திருந்ததால் ரத்தம் உறையத் தொடங்க கட்டியாய் கொப்பளித்து வந்தது.
டாக்டர் வந்து விசாரித்துவிட்டு கை எப்படி முறிந்தது என்று கேட்க, கையில் பிளேடை வைத்திருக்கும்போது குழந்தை பிடித்து இழுத்து விட்டதாக சொல்லி சமாளித்தான் பரத்.
அரசு ஆசுபத்திரி என்பதால் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல நேரமாகும் என்று அவர்கள் சொல்லவே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பரத். அதற்குள் நந்தினியும், பரத்தின் அத்தையும் அங்கே வந்தனர்.
பாத்ரூம் செல்லவேண்டுமென்று அனு சொல்ல முறைப்புடன் நந்தினி அழைத்துச் சென்றாள். சூழ்நிலை கருதி யாரும் பேசிக் கொள்ளாவிட்டாலும் நந்தினியின் கணிப்பில் அனுதான் ஏதோ செய்திருக்கிறாள் என்று நினைத்திருக்க கோபமாய் இருந்தாள்.
பாத்ரூமில் அனு தெரியாமல் கட்டுப் போட்டிருந்த கையைக் கீழே இறக்க கட்டி கட்டியாய் ரத்தம் அந்தக் கட்டை நனைத்து வெளியேறத் தொடங்கவும் பயந்து போய் கையைத் தூக்கிக் கொண்டாள்.
இத்தனை ரத்தத்தைப் பார்த்தும் அவளுக்கு எப்படி மயக்கம் வராமல் இருந்ததோ. பயந்து போன நந்தினி உதவி செய்ய இருவரும் திரும்பினர். அதற்குள் பரத் சித்தி மகனை அழைத்து டாக்டரிடம் சிபாரிசுக்கு சொல்ல, பெரிய ஹாஸ்பிடலில் சிஸ்டம் எஞ்சினியராய் இருந்தவன் அவனது டாக்டர் மூலம் இங்கே அழைத்து பேச வைத்தான்.
அடுத்து அனுவுக்கு ஆப்பரேஷனுக்கு அனஸ்தீஷியா கொடுக்க வேண்டும் என்று சொல்லி, “இந்த மருந்துகளை எல்லாம் வாங்கிட்டு வந்திருங்க…” என்று ஒரு லிஸ்டைக் கொடுக்க பரத் வாங்கி வந்தான்.
அனுவை ஆப்பரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுத்து கையில் அறுந்து கிடந்த நரம்புகளை இணைத்து தையல் போட்டனர். இரண்டு டாக்டர்கள் எதையோ பேசிக் கொள்ளுவதும், ஹிந்திப் பாட்டை முணுமுணுப்பதும் எல்லாம் அரை மயக்கத்தில் இருந்த அனுவுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆப்பரேஷன் முடிந்து தோளோடு இணைத்த பெரிய கட்டுடன் நார்மல் வார்டுக்கு அழைத்து வந்தனர்.
பால் குடிக்கும் குழந்தை தன்யா அன்னையைக் காண வேண்டி அழ அமிர்தவள்ளி நேரத்துக்கு சாப்பிடக் கொடுத்து எப்படியோ சமாளித்துக் கொண்டார். நந்தினியும், பரத்தும் மாறி மாறி உடன் இருக்க நான்கு நாட்கள் ஆசுபத்திரியில் இருந்தனர். வாரம் ஒருமுறை பரிசோதனைக்கு வர சொல்லி வீட்டுக்கு அனுப்பினர். இந்த நாட்களில் மார்பில் தேங்கி நின்ற தாய்ப்பாலின் சுமை கையின் காயத்தை விட வலிக்க மகளை நினைத்துக் கண்ணீர் விட்டாள் அனு. முதலில் கோபமாய் இருந்த நந்தினி பிறகு விஷயத்தைப் புரிந்து கொண்டு நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.
பால் கட்டிக் கொண்டு வலியில் துடித்தவளை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பாலைப் பீய்ச்சி வெளியேற்றினாள். ஒரு வழியாய் ஆசுபத்திரி வாசம் முடிந்து வீட்டுக்கு வந்தவளை அமிர்தவள்ளியின் கோபமான முகம் வரவேற்றது.
தன்னிடம் எதுவும் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவரின் கோபம் அவளுக்கு புரியவே செய்தது. அத்தை, மாமாவின் முகத்திலும் யோசனை இருந்தது.
பரத்தின் குடி காரணமாய் அனுவே கையை முறித்து தற்கொலைக்கு முயன்றது போல் அங்கே ஒரு பேச்சு வந்திருந்தது. ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட மகளை அமர்ந்தபடி அணைத்துக் கொண்டாள் அனு.
“என்னடா பண்ணி வச்சிங்க… நான் எதோ கொடுமை பண்ணி இவ கையை முறிச்சுகிட்டான்னு நாளைக்குப் போலீஸ் என்னை சொல்லறதுக்கா…” மகனிடம் சிடுசிடுத்தார்.
“அம்மா, ஏதோ அபத்தத்துல இப்படி நடந்திருச்சு…” அவனது சமாதானம் அவரால் ஏற்க முடியவில்லை.
அதற்குப் பின் அவளது காரியங்கள் எல்லாவற்றையும் குளிக்க வைப்பதில் இருந்து பரத் தான் பார்த்துக் கொண்டான். உண்மையில் மிகவும் பதறிப் போயிருந்தான். இடது கையில் கட்டோடு இருந்தவளை வாராவாரம் ஆசுபத்திரிக்கு பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றான். ஒருவிதத்தில் அனுவுக்கு அவனது கவனிப்பும் பரிவும் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.
செக்கப் செல்லும்போது அவனோடு தனியாக வெளியே போவதால் சந்தோஷமாய் உணர்ந்தாள். அவனும் தன்னால் தான் இப்படி ஆனது என்ற குற்றவுணர்வுடன் அவளை நன்றாக கவனித்துக் கொண்டான். ஒரு வாரத்துக்குப் பிறகு அமிர்தவள்ளியும் சற்று இறங்கி வந்தார். இப்படி ஒரு சம்பவம் நடக்கவும் மீண்டும் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றனர்.
“உங்க பையனோட ஜாதகத்துல இப்ப பெரிய கண்டம் இருக்கு… உயிருக்கே கூட ஆபத்து வரவும் சான்ஸ் இருக்கு… உங்க மருமகளோட ஜாதகத்துல தீர்க்க சுமங்கலி யோகம் இருக்கறதால அது உங்க பிள்ளையைக் காப்பாத்தும்… ஆனாலும் உங்க பையனோட தோஷத்தால பொண்டாட்டி உயிருக்கோ, இல்ல உடம்புல ஏதாவது ஊனம் ஆகறதுக்கோ வாய்ப்பு இருக்கு…” என்று ஜோசியர் சொல்லவும்,  “இப்படில்லாம், நடக்கணும்னு விதி போலருக்கு… நல்லவேள, அனு உயிருக்கு ஆபத்தில்லாம போச்சே…” என்று மகளிடம் சொல்லி சமாதானப்பட்டுக் கொண்டார் அமிர்தவள்ளி.
இறுதியில் அவர் கூறிய, “அம்மா, உங்க ரத்த சொந்தத்துல ஒரு உயிர்பலி நடக்க போகுது…” என்ற ஜோசியரின் வார்த்தை அடுத்த வாரமே பலித்தது.
அவரது மூத்த அண்ணன் ஒருவர் பாம்பு கடித்து இறந்து போனதாய் போன் வரவும் கலங்கி பதறத் தொடங்கினார்.
அவர்களின் வீடு நாப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இவர்களின் வீடு டவுனில் இருக்க சுற்றிலும் இரண்டு அண்ணன், ஒரு தம்பி, தங்கை குடும்பம் அருகருகே இருந்தனர். விவரம் தெரிந்து எல்லாரும் பரத்தின் வீட்டுக்கு வந்து விட எல்லாரையும் துக்க வீட்டுக்கு அழைத்துச் செல்வது பரத்தின் தலையில் விழுந்தது. ஒரு பெரிய வண்டியை அழைத்து அனைவருடனும் மாமா வீட்டுக்கு சென்று சேர்ந்தனர்.
அந்த மாமா உடன் பிறப்புகளுடன் நெருக்கம் இல்லாததால் அத்தை அழுது மயங்கிக் கிடக்க பிள்ளைகள் இளையவர்கள் என்பதால் செலவு எல்லாம் பரத் தலையில் விழுந்தது.
“என்னமா, எல்லாம் என்னால செய்ய முடியுமா…” என்று பரத் கேட்டாலும், அவங்களுக்கு வேற யாரிருக்கா… நாம தானே செய்யணும்…” என்று வாயை அடைத்து விடுவார் அன்னை. உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்க, நண்பர்களிடம் கடன் வாங்கி அவரது பதினாறு நாள் வரைக்குமான செலவுகளை பரத் தான் செய்தான். அதென்னவோ, அந்தக் குடும்பத்தில் நல்லது, கெட்டது எல்லாவற்றிக்கும் பரத் செலவு செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டனர்.
இரண்டு நாள் துக்கத்தில் கழிய மற்ற நாட்கள் எதோ விருந்துக்கு வந்தது போல் உண்டு உறங்கி கதை பேசிக் கழிந்தது. அங்கிருந்து அனுவை அழைத்துக் கொண்டு அடுத்த வாரம் செக்கப் சென்று வந்தான் பரத்.
ஒரு மாதம் கழிந்து கட்டைப் பிரிக்க அனுவின் விரல்கள் சரியாய் அசைக்க முடியாமல் ரப்பர் போல இருந்தது. வாரம் ஒருமுறை பிசியோதெரபி டாக்டரைப் பார்க்க சொன்னார்கள். அவர் சொன்னதுபோல் விரலை அசைக்க முயன்றும் ஒரு விரலைத் தவிர மற்ற விரல்களை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. விரல்களை ஒன்று சேர்க்கவும் முடியவில்லை. கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிலிருந்த பகுதி சதை இன்றி சூம்பிப் போயிருக்க விரல்களில் சுரணை குறைவாக இருந்தது.
வினாக்களில் சில நேரம்
விடைகள் ஒளிந்திருக்கும்…
வேதனையில் சில் நேரம்
விருப்பங்கள் நிறைந்திருக்கும்…
ஒன்றை நினைத்து வைத்த
புள்ளிகளில் விளைந்ததோ
நினைக்காத புதுக்கோலம்…
அபத்தங்களே சில நேரம்
அபஸ்வரங்களாய் வாழ்வில்
தொடர்ந்து வரும்…

Advertisement