Advertisement

வானம் – 12
அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லாததால் கடிதம் மூலமாகவே தகவல் பரிமாற்றம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அனுவின் தந்தையிடமிருந்து கடிதம் வரும். எல்லாரின் நலனையும் விசாரித்து எழுதி இருப்பார்.
பொதுவாக யாரிடமும் குறை கண்டு பிடித்துப் பழக்கம் இல்லாத அனுவுக்கு வீட்டில் நடப்பதை எல்லாம் தந்தையிடம் சொல்லவும் பிடிக்கவில்லை. சொன்னாலும் அவர் வருத்தப்பட்டு பரத்திடம் கேட்டால் அவன் ஒரு முன்கோபி. எதையாவது வார்த்தையை விட்டு விட்டால் இருக்கும் சொந்தமும் விலகிப் போய் விடுமோ என்ற பயமே அனுவுக்கு இருந்தது. அதுவும் இல்லாமல் பரத்தின் கோபத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
முடிந்தவரையில் பரத் குடும்பத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லாமல் தானே சமாளிக்கவே நினைத்தாள். அவள் நினைத்தபடியே நண்பன் ஷாஜியின் கல்யாணத்துக்கு சென்ற பரத் மீண்டும் வெற்றிகரமாய் ரெண்டாவது இன்னிங்க்சை தொடங்கி இருந்தான்.. இப்போது ஒன்லி பீர் மட்டுமே என்று தன்னைத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
சுரேஷ் நந்தினியை மும்பை வருமாறு அழைக்க, “என்னால அங்க வந்து தனியா அஸ்வினைப் பார்த்துக்க முடியாது… இங்கயே இருக்கேன்…” என்று மறுத்து விட்டாள் நந்தினி.
நந்தினிக்கு மும்பை செல்ல சுத்தமாய் விருப்பமில்லை. நேரத்துக்கு சாப்பாடு, சுதந்திரம், சுற்றிலும் சொந்தங்கள் என்று இங்கேயே இருந்துவிடத் தோன்றியது. அங்கே சென்றால் வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மகனையும் பார்க்க வேண்டும்… அதும் இல்லாமல் அவளுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எல்லாம் பெரிதாய் விருப்பமும் இருக்கவில்லை.
கணவன் மேல் பெரிதாய் அன்பும் இல்லை… பேருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டனரே தவிர குடும்பமாய் வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லை. தான் மும்பை சென்று விட்டால் அனுவுக்கு அந்த வீட்டில் அவளை விட அதிகாரம் கூடி விடுமோ என்று கூட யோசித்தாள்.
“பரத், நான் கரஸ்ல டிகிரி பண்ணலாம்னு இருக்கேன்… அதைப் பத்தி விசாரிச்சு புக் எல்லாம் வாங்கிக் கொடு…” நந்தினி சொல்லவும், “சரி, நல்ல விஷயம் தானே…” என்று யூனிவர்சிடிக்கு சென்று பீஸ் கட்டி புத்தகம் வாங்கிக் கொடுத்தான் பரத். கழுத்தில் புதிய தங்க சங்கிலி பளபளக்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து அப்ளிகேஷனில் ஒட்டிக் கொடுத்தாள் நந்தினி.
வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள், பணத்துக்கு கஷ்டம் வரவும் அமிர்தவள்ளியும், நந்தினியும் அனைவரின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஜோசியராய் சென்று பார்க்கத் தொடங்கி இருந்தனர்.
குடும்பத்துக்கே தோஷம் இருக்கிறது… குலதெய்வத்துக்கு ஒழுங்காய் பூஜை செய்யாததால் தெய்வ குத்தம் இருக்கிறது… பரத்துக்கும் நேரம் சரியில்லை, அவனுக்கு 19 வருட சனி நடந்து கொண்டிருக்கிறது… பொருள் இழப்பு, கடன் தொல்லை, ஆரோக்கியம் கெடுதல், மனநிம்மதி இல்லாமல் போவது போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் என்றெல்லாம் பயமுறுத்தி அதற்கு ஏதேதோ பரிகாரங்களையும் வார வாரம் ஒரு கோவிலில் சென்று செய்யுமாறு சொல்லி அனுப்பினர். பரத்துக்கும் பொதுவே ஜோசியத்தில் எல்லாம் அதிக நம்பிக்கை இருந்ததால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த அவனும் அன்னை சொன்னது போல செய்யத் தொடங்கினான்.
அன்று ஒரு கோவிலுக்கு சென்று ஏதோ ஒரு பரிகாரத்தை செய்ய சொல்ல பரத்தும், அவன் தம்பியும் அங்கே சென்றிருந்தனர். அது ஊருக்கு வெளியே சற்று ஒதுக்குப் புறமாய் மந்திர தந்திரங்கள் எல்லாம் செய்யும் கோவில். அவர்களை மாலை நேரத்தில் வர சொல்லி இருந்தனர்.
பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அண்ணனும், தம்பியும் கிளம்பி இருந்தனர்.
நந்தினியிடம், “ம்மா… கேக் வேணும்…” மகன் மழலையில் சொல்ல, “என் செல்லத்துக்கு கேக் வேணுமா… வாங்கிக்கலாம்… அம்மா, இப்ப வந்திடறேன்…” என்றவள், “அம்மா… அஸ்வினுக்கு கேக் வேணுமாம்… நீயும் ஏதோ வாங்கணும், கடைக்குப் போகணும்னு சொன்னியே… வா… போயிட்டு வந்துடலாம்…” என்று சொல்ல அவர்கள் கிளம்பியதைக் கண்ட தன்யாவும் பாட்டியிடம் தாவினாள்.
உஷ்ண காலமாதலால் குழந்தைக்கு வெறும் ஜட்டி மட்டுமே போட்டிருக்கவும், “இருங்க அத்தை, டிரஸ் எடுத்திட்டு வரேன்…” என்று அனு சொல்ல, “பரவால்ல விடு… இங்க பக்கத்துல இருக்கற கடை தானே… இருட்டு நேரத்துல யாரு பார்க்கப் போறா…” என்று சொல்லிவிட்டார் அமிர்தவள்ளி.
அமிர்தவள்ளி தன்யாவைத் தூக்கிக் கொள்ள அஸ்வினின் கையை நந்தினி பிடித்துக் கொண்டு கடைக்குக் கிளம்பினர். உடன் அவளது மாமன் மகள் பிரியாவும் சேர்ந்து கொள்ள வீட்டிலிருந்து இறங்கி சிறிது நடக்கவும் கரண்ட் ஆப் ஆகிவிட்டது.
“அட கரண்டு போயிருச்சே…” என்ற நந்தினி, “சரி, எப்பவும் போற ரோடு தானே…” என்று சொல்ல நடக்கத் தொடங்கினர்.
இருட்டில் பேசிக் கொண்டே நடக்கையில் சட்டென்று ஒரு பைக் அவர்களைக் கடந்தது. சென்ற பைக் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி அவர்களை உரசியபடி வர சட்டென்று அமிர்தவள்ளி விலகி ஓரமாக செல்லவும் நந்தினியின் முகத்தில் வண்டியிலிருந்தவன் அறைய, வலியில் “ஆ…” என்றபடி அவள் கழுத்தைத் தூக்கவும் சட்டென்று கழுத்தில் கிடந்த ஆறு பவன் சங்கிலியை அப்படியே லாவகமாய் அவிழ்த்து எடுத்துக் கொண்டு வண்டி இருட்டில் பாய்ந்து மறைந்தது.
என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன்னரே கழுத்தில் கிடந்த சங்கிலி பறிபோயிருந்தது.
“ஐயோ… என் சங்கிலி…” நந்தினி பதற, அமிர்தவள்ளியும், “அச்சோ, செயின் போச்சே…” என்று கத்தினார்.
அவன் அடித்தது அப்போதும் வலித்துக் கொண்டிருக்க கன்னத்தைப் பிடித்தபடி நின்றாள். அவர்களின் சத்தம் கேட்டு அடுத்த வீட்டினர் வெளியே எட்டிப் பார்க்க விஷயத்தை சொல்லவும் கூட்டம் கூட என்ன, எப்படி என்று சிறிது நேரம் விசாரித்துக் கொண்டிருந்தனர். உடை அணியாமல் இருந்த தன்யாவின் கழுத்திலும் அப்போது செயின் இருந்தது.
“நல்லவேளை, குழந்தையின் கழுத்தில் உள்ள செயினை இழுத்திருந்தால் குழந்தையே போயிருப்பாள்…” என்று சமாதானம் செய்ய ஒரு வழியைக் கண்டு பிடித்து கலக்கத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.
கோவிலில் சகோதரர்கள் இருவரும் பரிகார பூஜை செய்து கொண்டிருக்க இங்கே நகை பறிகொடுக்கப் பட்டிருந்தது.
அடுத்த நாள் பரத்தும் நந்தினியும் காவல் நிலையத்தில் சென்று நகை பறிபோனதைப் பற்றி புகார் கொடுக்க அவர்கள் விசாரிப்பதாய் சொன்னார்கள்.
“ஆறு பவன் சங்கிலியா…” என அக்கம் பக்கம் உள்ளவர்களும், உறவுகளும் விஷயம் தெரிந்து துக்கம் விசாரிப்பது போல் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். அநியாயமாய் நகை பறிபோனதை நினைத்து நந்தினிக்கு மனசே ஆறவில்லை. அவள் முன்பு போட்டிருந்த சங்கிலியைக் கொடுத்து மாற்றியதால் வேறு செயின் இல்லை. அனு அவளது சங்கிலியைக் கொடுத்து போட்டு கொள்ள சொன்னாள்.
அறையில் அனு துவைத்த துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருக்க தன்யா கட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
“அனுக்குட்டி…” சட்டென்று காதோரம் உரசிய மீசையும் கிசுகிசுப்பான குரலும் கணவன் என்பதை சொல்ல கூச்சத்துடன் நெளிந்து கொண்டே, “ம்ம்…” என்றாள்.
“அனு, அடுத்த மாசம் சந்தோஷ் மேரேஜ் வருதுல்ல…”
“ம்ம்… அதுக்கென்ன…”
“அதுக்கு ஒண்ணும் இல்ல… நாளைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் டூர் போகலாம்னு இருக்கோம்…” பரத் சொல்லவும் அவளது முகம் சுருங்கியது.
“அவங்க போகட்டும், நீங்க போக வேண்டாம்…”
“ஏன், நான் போனா என்ன… நான் போவேன்…”
“வேண்டாம் பரத், அங்க போனா நீங்க தண்ணி போட்டு ரகளை பண்ணிட்டு இருப்பீங்க… பியர்ல இருந்து பிரமோஷன் கொடுத்துருவிங்க, எனக்கு பயமாருக்கு போக வேண்டாம்…”
“என்னடி, எப்பப் பார்த்தாலும் தண்ணி போடறேன்னு சொல்லிட்டு இருக்க… அதெல்லாம் நான் பார்த்துப்பேன்…”
“மனசுக்கு என்னமோ சரியில்லைன்னு தோணுதுங்க… ப்ளீஸ் சொன்னாப் புரிஞ்சுக்கங்க… போக வேண்டாம்…”
“நீ சொன்னா நான் போகாம இருக்கணுமா… நான் போவேன்… உன் பேச்சைக் கேட்டு என்னால ஆட முடியாது…”
அவன் சொன்னதைக் கேட்டதும் முன்னமே மனதை அரித்துக் கொண்டிருந்த பயம் மேலும் அதிகமாக, “ஓ… நான் இவ்வளவு சொல்லியும் போவீங்களா… நான் செத்துட்டா…” மனதுக்குள் இருந்த இயலாமையும் அவனைப் போக விடக் கூடாது என்ற எண்ணமும் அவளை சொல்ல வைத்தது.
அதைக் கேட்டு கடுப்பானவன், “யாரோட சாவையும் யாருக்கும் பிடிச்சு வைக்க முடியாது… செத்தா சாவு…” என்று சொல்லிவிட்டு அலமாரியில் டிரஸ்ஸை எடுக்க அவளது பொறுமை கை விட்டுப் போனது.
“நீங்க எப்படிப் போறிங்கன்னு நானும் பார்க்கறேன்…” என்றவள் பரத் ஷேவ் பண்ணிவிட்டு வைத்திருந்த பிளேடைக் கையில் எடுத்துக் கொள்ள குழந்தை எதுவும் புரியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் செத்தா நீங்க எப்படிப் போவிங்கன்னு பார்க்கலாம்…” என்றவள் மணிக்கட்டில் பிளேடை வைக்க, திரும்பிப் பார்த்த பரத் அதிர்ந்தான்.

Advertisement