Advertisement

“என்ன பரத், பட்டாசு கைல வச்சு வெடிப்பாங்களா… கவனமா இருக்கக் கூடாதா…” என்று கரிசனத்துடன் கேட்டுவிட்டு,  “பாங்குல இருந்து உன்னைக் கேட்டுட்டு வந்திருந்தாங்க… லோனுக்கு அஞ்சாறு மாசமா டியூ கட்டலையாமே… நீ போயி பார்க்கலன்னா ரெக்கவரி நோடீஸ் அனுப்பப் போறதா சொன்னாங்க…” என்றான்.
“ம்ம்… நடுவுல வேற செலவு வந்திருச்சு மது அண்ணா…”
“சரி… நாளைக்கே பாங்கு மானேஜரைப் போயி பாரு… நோட்டீஸ் அனுப்பினா உன் சம்பளத்துல பிடிக்க சொல்லிருவாங்க…”
“ம்ம்… சரி, நான் பேசிக்கறேன்…” என்றான் பரத்.
“அனு, ஒருநாள் வீட்டுக்கு வாங்க… ரம்யா கூட உன்னைப் பார்க்கனும்னு சொல்லிட்டு இருந்தா…”
“ம்ம்… வரோம் மதுண்ணா…” அவள் புன்னகையுடன் கூற, அமிர்தவள்ளியின் முகம் அதை ரசிக்கவில்லை என்றது.
மதுவும், பரத்தும் தந்தையை இழந்து வாரிசு அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்… மது வயதில் நான்கைந்து வருட சீனியர், அதோடு வேலையிலும் இரண்டு வருட சீனியர்… இருவரும் நல்ல நண்பர்களும் கூட. பரத்தின் கல்யாணம் முடிந்த பத்தாம் நாள் தான் மதுவின் கல்யாணம் முடிந்தது. அனுவும், பரத்தும் கல்யாணத்துக்கு அவர்கள் வீட்டுக்கு சென்று வந்திருந்தனர். பரத், அனு ஹனிமூன் டூருக்கும் மதுவும், மனைவியோடு வந்திருந்தார்.
அடுத்தநாள் அனுவின் நகை ஒன்றை அடமானம் வைத்து பாங்குக்கு சென்று அடைக்க வேண்டிய வட்டித் தொகையில் பாதியை அடைத்து சமாளித்தான் பரத்.
தன்யா இரண்டு நாளாய் இருமிக் கொண்டே இருக்க மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அன்று காய்ச்சலும் இருக்கவே டாக்டரைக் காண்பித்து மருந்து வாங்கி வந்தனர்.
அஸ்வின் அளவுக்கு அதிகமாகவே எல்லாம் சாப்பிடுவான்… ஆனால் தன்யா எதையுமே சாப்பிட மாட்டாள். ஸ்பெஷலாக ஏதாவது செய்தாலும் எல்லாரும் சாப்பிடும்போது அவள் வேண்டாம் என்று மறுத்தால் அதையும் அஸ்வினுக்கு கொடுத்து விடுவார் அமிர்தவள்ளி. பிறகு சிறிது நேரம் கழித்து தன்யா கேட்கும்போது இருக்காது. அவளுக்காய் எடுத்து வைக்கவும் அனுவால் முடியவில்லை.
அனு ஒருமாதிரி தர்மசங்கடமாய் உணர்ந்தாள். ஜூஸ் கொடுத்தாலும், தன்யா உடனே வேண்டாமேன்றுவிட்டு அது தீர்ந்த பிறகு தான் கேட்பாள். அஸ்வின் எந்தப் பொருளைக் கண்டாலும் தீரும் வரை கேட்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். நோய் வந்து சக்கையான அவனது உடலுக்கு அது தேவையாய் இருந்ததோ என்னவோ.
கொடுக்கும்போது சாப்பிடாமல் பிறகு கேட்கும் மகளை நினைத்து அனுவுக்கு கோபமாய் வந்தது. அவள் வேண்டுமென்று அழும்போது இல்லை என்று சொன்னாலும் புரிந்து கொள்ளத் தெரியாது. நந்தினியும், அமிர்தவள்ளியும் அவளைப் பற்றி யோசிக்கவும் இல்லை. எதுவாக இருந்தாலும் அஸ்வினுக்கு தான் முதலில். அவன் அழுதால் நிறுத்த மாட்டான் என்பதால் கேட்டதும் கொடுத்து விடுவார்கள். தன்யா மிகவும் ஒல்லியாக பொம்மை போல குட்டியாய் இருப்பதைக் கண்டு ஒரு தாயாய் அனுவின் மனம் வருந்தியது. அவளுக்காய் எதுவும் ஸ்பெஷலாய் கொடுக்கவும் அந்த வீட்டில் முடியவில்லை.
இரண்டு வாரம் ஓடியிருந்தது. நந்தினிக்கு மீண்டும் மும்பை செல்லும் எண்ணமே இருக்கவில்லை… புருஷனைப் பற்றி யோசிப்பது கூடக் கிடையாது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலையில் எழுந்து வந்த பரத் அனு நீட்டிய தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டு செய்தித் தாளுடன் அமர்ந்தான். அஸ்வினுடன் அமர்ந்திருந்த நந்தினி தம்பியிடம், “பரத்… எனக்கு நகைக்கடைக்குப் போகணும்… போயிட்டு வரலாமா…” என்றதும் நிமிர்ந்தான்.
“எதுக்கு…”
“என்னோட பழைய செயின் அஸ்வினோட தங்க அரைஞான் (பரத் வாங்கிக் கொடுத்தது) எல்லாம் போட்டு பெருசா ஒரு செயின் வாங்கலாம்னு யோசிக்கறேன்…” என்றாள் நந்தினி.
“ஓ…” என்றவன் யோசித்துவிட்டு, “சரி, டிபன் சாப்பிட்டுப் போயிட்டு வந்திடலாம்… ஈவனிங் ஷாஜி வீட்டுக்குப் போகணும்…” என்றான் பரத்.
பரத்தின் நண்பன் ஷாஜிக்கு நாளை மறுநாள் கல்யாணம் என்பதால் அவன் வீட்டுக்கு செல்வதாகக் கூறினான்.
அதைக் கேட்டதும் அனுவின் முகம் வாட எண்ணங்கள் ஏதேதோ சொல்ல வயிற்றைக் கலக்கியது. அன்று செய்த சத்தியத்துக்குப் பிறகு இரண்டு வாரமாய் பரத் தண்ணித் தொட்டியைத் தேடிப் போகாமல் இருக்க இப்போது அந்த சத்தியத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது.
“சரி, சாப்பிட்டு ரெடியாகிடறேன்…” நந்தினி உற்சாகமாய் சொல்ல அதேபோல் டிபன் முடிந்து மாமாவின் வண்டியில் அக்காவுடன் நகைக் கடைக்கு சென்றான் பரத்.
நந்தினியின் விருப்பப்படி ஆறு பவனில் பெரிய ஒரு முறுக்கு சங்கிலியை வாங்கிக் கொடுத்தான். குழந்தைகளுக்கு பழங்கள் வாங்கிக் கொண்டு இருவரும் திரும்பினர். மதிய உணவு முடிந்து அறைக்கு சென்ற பரத், ஷாஜி, காமிரா கேட்டிருக்கவே அறையில் தனது காமிராவை எடுத்து பரிசோதித்துக் கொண்டிருந்தான் பரத்.
அனுவின் மனதில் பரத்தைப் பற்றிய கலக்கமே இருக்க, அவனிடம், “என்னங்க, இன்னைக்கு நீங்க ஷாஜி வீட்டுக்குப் போகனுமா… நாளைக்குப் பார்ட்டிக்குப் போனாப் போதாதா…” என்று கேட்க சிடுசிடுத்தான்.
“எல்லாம் எனக்குத் தெரியும்… நான் எங்காச்சும் வெளிய கிளம்பறேன்னு சொன்னாலே மூஞ்சத் தூக்கி வச்சுப்பயே..” என்றதும் வாடிய முகத்துடன் வெளியே சென்று விட்டாள்.
நந்தினி ஆவலுடன் அனுவிடம் செயினைப் போட்டுக் காட்ட, “அழகா இருக்குக்கா… கழுத்து நிறைஞ்ச போல இருக்கு…” என்றாள் உண்மையான சந்தோஷத்துடன்.
பரத்தின் தம்பி வழக்கம் போல் கிளப்புக்கு சென்றிருக்க, அன்னையிடம் நந்தினி செயின் வாங்கிய கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். பரத் காமிராவை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட நந்தினி, “பரத்… என்னையும் அஸ்வினையும் ஒரு போட்டோ எடேன்…” என்று சொல்ல அவன் எடுத்துப் பார்த்தான்.
அஸ்வினை அவர்கள் கட்டிலில் அமர்த்தி போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, “அனு, நீயும் வா… தன்யாவோட போட்டோ எடுத்துக்க…” நந்தினி சொல்ல அனு வரவில்லை.
“ஆமா, அது தான் குறைச்சல்… இப்ப ஷாஜி வீட்டுக்குப் போகலேன்னா என்ன… மறுபடி தண்ணியைப் போட்டுட்டு வந்திருவாரோ…” மனதுக்குள் கணவனைப் பற்றி யோசித்து புலம்பிக் கொண்டிருந்தாள் அனு.
“என்ன அனு, கூப்பிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு வராம இருக்க… உங்க ரூம்ல நின்னு நாங்க போட்டோ எடுத்தது பிடிக்கலையா… இல்ல, என் பையனை உன் கட்டில்ல உக்கார வச்சது பிடிக்கலையா… ஆசையா போட்டோ எடுத்திட்டு இருக்கோம்… நீ வராம இங்கயே இருக்க…” நந்தினி படபடவென்று கேட்க அவள் அதிர்ந்து போனாள்.
“அய்யோ, அக்கா… நான் எதோ யோசனைல நின்னுட்டு இருந்தேன்… நான் அப்படில்லாம் நினைக்கலக்கா…” என்றாள் அனு கண்ணீருடன்.
“இல்ல, உனக்கு நாங்க இந்த வீட்ல இருக்கறதே பிடிக்கல… உன் கட்டில்ல என் பையன் உக்கார்ந்தா அழுக்கெல்லாம் ஆயிடாது… நான் வேணும்னா துவைச்சுக் கொடுத்துடறேன்…” என்று சொல்லிக் கொண்டே போக அனு யோசிக்கக் கூட மறந்து திகைத்து பார்த்து நின்றாள்.
நந்தினியின் சத்தத்தைக் கேட்டு குழந்தைகள் திகைத்துப் பார்க்க பரத்தும் அங்கே வந்தான்.
“என்ன இங்க பிரச்சனை, எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் சொல்லி சண்ட போட்டுட்டு…” அவன் கேட்க, நந்தினி,
“அவளுக்கு நீ என்னைக் கடைக்கு கூட்டிட்டுப் போனதும் பிடிக்கல… இப்ப உங்க ரூமுல நின்னு எங்களை போட்டோ எடுத்தும் பிடிக்கல…” என்றாள் சீறலுடன்.
“ஐயோ இல்லங்க, நான் அதெல்லாம யோசிக்கவே இல்ல…” அனு மறுக்க, “என்ன அனு இது…” என்ற அமிர்தவள்ளி, “சரி விடு நந்தினி…” என்றார் மகளிடம்.
“நந்தினி, அவ அப்படில்லாம் யோசிச்சிருக்க மாட்டா… நீயே எதையாச்சும் கற்பனை பண்ணிக்காத…” பரத் நந்தினியிடம் சொல்ல, “ம்ம்… அதானே, பொண்டாட்டிய விட்டுக் கொடுக்க மாட்டியே…” என்றுவிட்டு நந்தினி முறைப்புடன் சென்று விட அனுவுக்கு கலக்கமாய் இருந்தது.
“ச்சே… எப்பவும் ஏதாச்சும் பிரச்சனை, நான் கிளம்பறேன்…” சொல்லிவிட்டு பரத் கிளம்பிவிட்டான்.
அமைதியாய் மகளுடன் அறைக்கு சென்றவளுக்கு மனசு விட்டு அழ வேண்டும் போல இருந்தது. ஏனோ, என்றோ இறந்து போன அன்னையை இப்போது மனம் மிகவும் தேடியது. மடியில் கிடந்தது கதற வேண்டும் போலத் தோன்றியது. மனதில் உள்ளதை சொல்லக் கூட யாருமில்லாத அநாதை போல மனசு கிடந்தது பரிதவித்தது.பரத்தைப் பற்றிய கவலை ஒரு புறம் சேர்ந்து கொள்ள அழுது கொண்டே மகளுடன் படுத்திருந்தவள் தன்யா அவளது கண்ணைத் துடைத்து விட்டு அணைத்துக் கொள்ளவும் அப்படியே உறங்கிப் போனாள்.
  
 

Advertisement