Advertisement

வானம் – 11
அன்று தீபாவளி.
ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் இருக்க மதிய சமையலை தடபுடலாய்த் தயார் செய்து காலையில் வெளியே சென்ற அண்ணன், தம்பியின் வரவுக்காய் காத்திருந்தனர் பெண்கள்.
அனு நடக்கத் தொடங்கியிருந்த தன்யாவுக்கு புதிய உடுப்பு அணிவித்து அழகாய் புறப்பட வைத்து கணவனுக்காய் காத்திருந்தாள். நேரம் செல்லச் செல்ல மனதுக்குள் ஒரு பதைபதைப்பு கூடிக் கொண்டே இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.
புதுவருடத்தைக் கொண்டாடுவதற்காய் நண்பர்களைத் தேடி கிளப்புக்கு சென்ற சகோதரர்கள் இருவரும் அடுத்த நாள் காலையில் தான் வீட்டுக்கு வந்தார்கள். அதும் நிற்க முடியாத தள்ளாட்டத்துடன். அவர்களின் பொழுது ஜாலியாய் நகர வீட்டிலிருந்த பெண்களுக்கு அச்சமே அதிகமானது.
அடுத்து பொங்கல் அன்றும் அப்படிதான். மதிய உணவு முடிந்து கிளம்பினால் அடுத்த நாள் காலையில் தான் ஆட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். இன்று தீபாவளியும் அப்படிதான் இருக்குமோ எனக் கலக்கத்துடன் சாப்பிடாமல் காத்திருந்தனர் அனுவும், அமிர்தவள்ளியும்.
அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை… நண்பனுடன் பைக்கில் வந்து இறங்கினான் பரத்சந்தர்.
“ஹேய் தனுக்…குத்தி…” குழறலாய் வார்த்தை வர அனு எதுவும் பேசாமல் கோபத்துடன் உள்ளே செல்ல,
“ச்செல்..லம்… ப..பத்தாஸ் வெடிக்கலாம்… வா…” என்று மகளை எடுத்துக் கொள்ள அதைக் கேட்டவள் திரும்பி வந்து மகளைப் பறித்துக் கொண்டாள்.
கசங்கிய உடையும் சிவந்த கண்களில் நிறைந்திருந்த போதையும், இரவு முழுதும் உறங்காத சோர்வும் சேர்ந்து கணவனைக் காணவே மனம் வலித்தது அவளுக்கு.
தோளைக் குலுக்கிக் கொண்ட பரத், தள்ளாடியபடி சென்று பட்டாசு இருந்த கவரை எடுக்க அமிர்தவள்ளி திட்டினார்.
“டேய், முதல்ல குளிச்சு சாப்பிட வா… இப்ப பட்டாசு வெடிக்காம தான்…” அவர் மகனை சத்தம் போட, “ஓ..க்கே மம்மி… ஒரே ஒரு வெடி மட்டும்… ம்ம்ம்…” என்று தலையைத் தலையை ஆட்டியவனைக் காணப் பத்திக் கொண்டு வந்தாலும் அமைதியாய் நின்றிருந்தாள் அனுபமா. மனதுக்குள் சொல்ல முடியாத வேதனை கண்ணில் முணுக்கென்று கண்ணீரை உற்பத்தி செய்ய, அவளை நோக்கி சிரித்த பரத், “ஹேய், அனுக்குத்தி, வதியா… பட்டாசு வெடிக்கலாம்…” என்று கேட்க அவள் முறைத்தாள்.
“என்னடி, முறைக்கிற… மூதேவி…” சொன்னவன் கையை ஓங்க, அமிர்தவள்ளி அதட்டினார்.
“டேய்… போதும், உள்ள போ… குளிச்சிட்டு வா…” என்று சொல்ல, “ஐ லவ் மம்மி… மம்மி சொன்னா, நான் கேப்பேன்… இவ எது…க்கு முறைக்கிறா… இடியட், போடி…” என்றவன் நாக்கைக் கடித்து ஒரு விரலை அவளை நோக்கி நீட்டி மிரட்ட அனுவுக்கு அழுகையாய் வந்தது. அணுகுண்டு ஒன்றை எடுத்துக் கொண்டவன் ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே தீப்பெட்டியுடன் வெளியே வந்தான்.
“என்னங்க, அப்புறம் வெடிக்கலாம்… முதல்ல உள்ள வாங்க…” அனு சொல்ல, “நீ போடி… நான் வெடிச்..சிட்டு தான் வருவேன்…” என்று திரியைக் கிள்ள,
“அத்தை, சொல்லுங்க… அவர் அணுகுண்டை எடுத்து கைல வச்சிட்டு இருக்கார்… எனக்கு பயமாருக்கு…” என்று உள்ளே சென்ற அத்தையிடம் அனு பதறினாள்.
அவர் வேகமாய் வெளியே வரவும் பரத் இடது கையில் வைத்தபடி அணுகுண்டைப் பற்ற வைத்து எறியவும் சரியாய் இருக்க அது “டம்ம்…” என்ற சத்தத்துடன் அவன் கையிலேயே வெடித்திருக்க புகைக்கு நடுவே கையிலிருந்து ரத்தம் ஒழுகியது.
அவனது போதை எல்லாம் கலைந்திருக்க கையை உதறிக் கொண்டு நின்றான். அங்கே நின்று கொண்டிருந்த அவன் நண்பன் ஓடிவர அனு கதறிக் கொண்டே ஓடிவந்தாள். கை முழுதும் பட்டாசு மருந்து இருக்க அதையும் மீறி ஆட்காட்டி விரல் நகம் பெயர்ந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
“ஐயோ, என்னங்க இது… சொல்ல சொல்லக் கேட்காம இப்படிப் பண்ணிட்டீங்க…” என்றபடி அனு அழத் தொடங்க, “ஐயோ பரத்… என்னடா பண்ணி வச்சிருக்க…” என்று அமிர்தவள்ளியும் கதற ஓடி வந்து பார்த்த நந்தினிக்கும் பக்கென்று இருந்தது.
சீக்கிரம் பரத் கையில் துணியை சுற்றி அந்த நண்பன் வண்டியை எடுக்க இடது கையை மேலே தூக்கிப் பிடித்தபடி பரத் அமர ஆசுபத்திரிக்கு விரைந்தனர்.
அவர்கள் சென்று சில நிமிடத்தில் பரத்தின் தம்பி அவனது நண்பனின் வண்டியில் வலது கையை மேலே தூக்கியபடி கட்டுப் போட்டு வந்தான்.
அவனும் அதே போல கையில் வைத்து பட்டாசை வெடிக்க அவனது இடது கை விரலில் காயமாகி இருந்தது. அதைக் கேட்டதும் அந்த சூழலிலும் சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் நின்றனர். சிறிது நேரத்தில் பரத்தும் கட்டுடன் வர இருவரும் ஆளுக்கொரு கையில் கட்டுடன் அமர்ந்திருந்தனர்.
“நல்ல நாளும் அதுவுமா ரெண்டு பிசாசுகளும் இப்படி குடிச்சு, கையில பட்டாசை வெடிச்சு, கட்டுப் போட்டுட்டு உக்கார்த்திருக்கீங்க… எத்தனை சொன்னாலும் புத்தியே வர்றதில்லை…” அன்னை புலம்பிக் கொண்டே அவர்களுக்கு சாப்பாடு போட அனு அமைதியாய் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“சரி விடுங்கம்மா… இப்ப சாப்பிடறதா, வேண்டாமா…” என்று பரத் குரலை உயர்த்த, “செய்யறதெல்லாம் செய்துட்டு எதுவும் சொன்னா மட்டும் கோபம் வந்திடும்… உங்கப்பனை மாதிரி நீங்களும் இப்படி குடிச்சே அழிஞ்சு போயிடாதீங்க…” புலம்பிக் கொண்டே பரிமாறிவிட்டு நகர பரத் இடதுகையை தூக்கிப் பிடித்தபடி சாப்பிட, தம்பி ஸ்பூனில் சாப்பிட்டான்.
“என்னங்க, குடிச்சா தான் நீங்க நீங்களாவே இல்லியே… அப்புறமும் எதுக்கு அதைக் குடிக்கறீங்க… உங்களுக்கு எதுவும் ஆனா நாங்க என்ன பண்ணுவோம்… ஏன் இப்படிப் பண்ணறிங்க… நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா… தன்யா பயந்து அழுதுட்டே இருந்தா…” அன்று இரவு அனு பரத்திடம் அழுதபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
“சரி விடு அனு… வீட்ல எப்பவும் ஏதோ ஒரு பிரச்னை… கடன்காரங்க தொல்லை… பிரண்ட்ஸ் கூட இருந்தா, தண்ணியடிச்சா கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் மறந்திருது…”
“அதுக்காக, உங்களை நம்பி இருக்கற எங்களையும் நீங்க மறந்துட்டா எப்படிங்க…” கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
“ப்பா…” என்று அழைத்துக் கொண்டே அவன் மேல் அமர்ந்திருந்த தன்யா அவனது கையைப் பற்றி “உஸ்.. உஸ்…” என்று ஊதிக் கொடுக்க, மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் பரத். அனுவையும் மறு கையால் இழுத்து தன்னோடு சேர்த்துக் கொள்ள திமிறினாள்.
“ப்ச்… விடுங்க… செய்யறதெல்லாம் செய்துட்டு இப்ப என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கு… ஒரு நல்ல நாள் கூட இங்க சந்தோஷமா இருக்க முடியுதா… எப்பவும் நீங்க குடிச்சிட்டு வருவிங்களோ… ரகளை பண்ணுவிங்களோன்னு பயந்துட்டே இருக்க வேண்டிருக்கு…” அவள் அவன் கையை விடுவிக்க முயல அவன் இறுக்கினான்.
“சரி போதும், விடுடி… அதையே சொல்லிட்டு இருக்காத…”
“ஹூக்கும்… எவ்ளோ சொன்னாலும் நீங்க அதையே செய்யலாம்… நான் சொல்லக் கூடாதா…”
“சரி, இனி குடிக்கலை… போதுமா…” சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட துடைத்துக் கொண்டாள் அனு.
“ம்ம்… போதாது.. இதோட எத்தனை தடவை இப்படி சொல்லிட்டீங்க… என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணுங்க…”
“இம்சை பண்ணாத… சரி, உன் மேல சத்தியமா குடிக்கல…”
“ம்ம்… என் மேல சத்தியம் பண்ணிட்டு குடிச்சா எனக்கு ஏதாச்சும் ஆயிடும்… தெரியும்ல…”
“சரிடி, விடு… இனி குடிக்கல…” என்றவன் அவளை மீண்டும் தன்னருகில் இழுக்க அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் தன்யா உறங்கத் தொடங்கி இருக்க அவளைத் தொட்டிலில் கிடத்திவிட்டு வந்தவளை இழுத்து வேகமாய் அணைத்து முத்தமிட, “மெதுவா.. கைல எங்காச்சும் இடிச்சுக்காதிங்க…” என்றவளைப் புன்னகையுடன் நோக்கியவன், “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்று விட்டு அவளைக் கட்டிலில் தள்ள அவனது விருப்பத்துக்கு சந்தோஷமாகவே ஒத்துழைத்தாள் அனு. அவன் திருப்தியுடன் உறங்கத் தொடங்க அவள் மனதிலும் சற்று நம்பிக்கை வந்திருந்தது.
“கடவுளே… இவர் சொன்ன வாக்கை நீதான் காப்பாத்த வைக்கணும்…” என்ற வேண்டுதலுடன் படுக்க, உறக்கத்திலும் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் பரத்.
எத்தனை கோபம் இருந்தாலும், குடித்தாலும் அனு மீது பரத் கொண்டிருந்த ஈடுபாடும், அன்பும் அவளது கோபத்தைக் கரைக்கும் நிவாரணியாய் இருந்தது.
காலையில் சாதாரணமாய் எழுந்தவன் அன்று அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தான். கையில் மருந்து போட்டு அண்ணன் தம்பி இருவரும் நான்கு நாட்கள் நல்ல பிள்ளைகளாய் ஓய்வெடுத்துக் கொண்டனர்.
அலுவகலத்தில் பரத்தோடு வேலை செய்யும் மது மாலை அவனைக் காண வந்திருந்தார். அவருக்கு டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரித்தனர்.

Advertisement