Advertisement

வானம் – 10
அனுவுக்கு சுகப்பிரசவம் ஆதலால் இரண்டாவது நாளே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். மருமகளின் பத்தியத்துக்கு எந்தக் குறையும் வைக்காமல் அமிர்தவல்லி நன்றாகவே கவனித்துக் கொண்டார். அனுவின் அப்பாவும், சித்தியும் அனு வீட்டுக்கு வந்த மறுநாளே பெயர் சூட்டு விழாவுக்கு வருவதாக சொல்லி கிளம்பி விட்டனர்.
அஸ்வினுக்கு பத்து மாதம் ஆகியிருந்தது. டாக்டரிடம் எத்தனை காட்டியும் அவனது காதுவலி சரியாகாமல் அழுகையும் பிடிவாதமும் அதிகம் ஆகிக் கொண்டே இருந்தது. எப்போதும் விடாமல் அழுது கொண்டிருக்கும் குழந்தையைக் காணவே கஷ்டமாக இருக்கும்.
குழந்தைக்குப் பெயர் சூட்டுவதோடு காது குத்தும் விழாவும் ஒன்றாகவே முடிவு செய்ய ஊரிலிருந்து அனுவின் தம்பியும் மாமன் முறைக்காய் பெற்றோர்களுடன் வந்திருந்தான்.
“குழந்தையை தாய் மாமன் மடில வைச்சு காதுல பேரை சொல்ல சொல்லுங்க…” பெரியவர் ஒருவர் சொல்லவும், ஆதவனின் காதில் குழந்தையின் பெயரை அனுபமா சொல்லிக் கொடுக்க அவன் குழந்தையின் ஒரு காதில் வெற்றிலையை வைத்து மூடிக் கொண்டு மறுகாதில் “தன்யா…” என்று அக்கா மகளின் பெயரைக் கூறினான்.
அடுத்து உறவினர்கள் குழந்தைக்கு பரிசு கொடுக்க அனுவின் தந்தையும் குழந்தை கழுத்தில் தங்க சங்கிலியைப் போட்டு விட்டார். பூவாய் சிரிக்கும் மகளின் அழகைக் கண்டு அனுவின் மனம் அன்னையாய் பெருமிதத்தில் பொங்கியது.
மதிய உணவு முடிந்து சுற்றத்தினர் கிளம்ப பரத்தின் உறவினர்கள் அங்கேயே இருந்தனர். அனுவின் குடும்பமும் ஆதவனுக்கு பரீட்சை இருப்பதாய் சொல்லி அடுத்த நாளே ஊருக்குக் கிளம்பினர். மூன்று மாதம் முடிந்ததும் அவளை வீட்டுக்கு அழைத்து வருமாறு பரத்திடம் சொல்லி சென்றார் அனுவின் சித்தி.
அஸ்வின் அப்போதும் அழுது கொண்டே தான் இருந்தான். டாக்டர் கொடுத்த மருந்தைக் கொடுத்தாலும் சரியாகாமல் மூச்சு விடாமல் குழந்தை அழுது கொண்டிருந்தான்.
அவனைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து நடந்தபடி இருந்தாள் நந்தினி.
“டாக்டரைக் காட்டியும் குழந்தைக்கு சரியாக மாட்டேங்குதே… மருந்தெல்லாம் குடிக்கறானா…” பரத் கேட்க, “அதெல்லாம் சரியா தான் குடிக்கறான்… ஏன் சரியாக மாட்டேங்குதுன்னு தெரியல…” என்றாள் அவள் கவலையுடன்.
“வேற டாக்டரைப் பார்க்கலாமா…”
“இவரே பெரிய டாக்டர்தான், சைல்டு ஸ்பெஷலிஸ்ட் வேற… நாளைக்கும் சரியாகலைன்னா பார்க்கலாம்…” என்றாள்.
அனுவுக்கு வேண்டிய பத்திய உணவுகளை அறையில் கொடுத்துவிட்டு வந்த அமிர்தவள்ளி, “நந்தினி, குழந்த தூங்கிட்டான் பாரு… தொட்டில்ல போட்டு வா… சாப்பிடலாம்…” என்று அழைக்க தொட்டிலில் கிடத்திவிட்டு சென்றாள். தன்யாவுக்கு ஒருமாதமே ஆகி இருந்ததால் அனு அமிர்தவள்ளியின் அறையில் தான் இருந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு களைப்பில் சீக்கிரமே படுத்தனர்.
அடுத்த அறையில் நல்ல உறக்கத்தில் இருந்த பரத்துக்கு சட்டென்று ஏதோ தோன்ற எழுந்து அமர்ந்தான். கடிகாரம் மணி இரண்டு என்று கூற அடுத்த அறையில் யாரோ அனத்துவது போல் தோன்றவும் வேகமாய் எழுந்தான்.
அனுவும், அம்மா, அக்காவுடன் அவர்கள் அறையில் படுத்திருப்பதால் பரத் அடிக்கடி அவர்களை வந்து எட்டிப் பார்ப்பான்… அருகில் அனு இல்லாமல் அவனுக்கு சரியாய் உறக்கம் வருவேனா என்றது. குழந்தை போர்வையை முகத்தில் மூடி இருப்பாளோ, உறக்கத்தில் அனு கவனிக்காமல் விடுவாளோ என்றெல்லாம் மனதுக்குள் பயம் தோன்ற வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்தவன் அதிர்ந்து போனான். அஸ்வின் தொட்டிலில் தலை தொங்கி பிட்ஸ் வந்தது போல் கண்கள் மேலே சொருக, கை கால்கள் வெட்டிக் கொண்டிருந்தது.
“ஐயோ… அஸ்வின்…” பதட்டத்துடன் அலறிக் கொண்டே பரத் குழந்தையைத் தூக்கவும் சத்தம் கேட்டு அசந்து உறங்கிக் கொண்டிருந்த நந்தினியும், மற்றவர்களும் எழுந்துவிட்டனர். தலை சாய்ந்து துவளத் தொடங்கிய குழந்தையைக் கண்டு பயந்து அவர்கள் கதறத் தொடங்கினர். அதற்குள் சத்தம் கேட்டு பின் வீட்டில் இருந்த மாமா, அத்தை பாட்டியும் அங்கே வந்திருக்க மாமா நான்கு தெரு தள்ளியிருந்த அவரது முதலாளி வீட்டுக்கு சென்று காரை எடுத்து வருகிறேன் என ஓடினார்.
பரத் வேகமாய் அதே உடையுடன் ரோட்டுக்கு ஓட நந்தினியும் பின்னில் ஓடினாள். வீட்டில் ஒரு பைக் கூட இல்லாத நிலையில் இரவு நேரத்தில் வண்டி கிடைப்பது சாத்தியமில்லை என்பதால் மெயின் ரோட்டுக்கு குழந்தையுடன் ஓடினான்.
வீட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. அங்கே இவர்கள் செல்லும்போது போலீஸ் ஜீப் ஒன்று நிற்க ரோந்துப் பணியில் இருந்தவர்கள் இவர்களைக் கண்டதும் அருகில் வந்தனர்.
கையில் குழந்தையுடன் நின்ற பரத்திடம் என்னவென்று விசாரிக்க, “சார், குழந்தைக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு… இப்ப திடீர்னு பிட்ஸ் வந்திருச்சு… ஹாஸ்பிடல் போகணும், வீட்டுகிட்ட வண்டி கிடைக்காதுன்னு இங்க எடுத்திட்டு ஓடி வந்தோம்…” என்றான் பரத்.
நந்தினியின் அழுகையும், குழந்தையின் நிலையும் கண்ட போலீஸார், “குழந்தைக்கு ரொம்ப முடியலை போலருக்கே… நாங்க ஹாஸ்பிடல்ல விடறோம், ஜீப்புல ஏறுங்க…” என்றனர்.
அதற்குள் அவர்களின் மாமா காரில் ஹாரன் அடித்துக் கொண்டே வர, “மாமா கார் எடுக்கப் போயிருந்தார்… நாங்க அதுலயே ஹாஸ்பிடல் போயிக்கறோம் சார்… ரொம்ப தேங்க்ஸ்…” என்றவர் காரில் ஏறி ஹாஸ்பிடல் விரைந்தனர்.
“அச்சோ… என்னாச்சோ தெரியலையே… குழந்தைக்கு இப்படி ஆகிருச்சே…” அனு வீட்டில் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவள் மனதில் நிறைமாத கர்ப்பவதியாய் இருக்கும்போது மனம் நொந்து தான் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதது தான் நினைவில் வந்தது.
“கடவுளே… கர்பிணி சாபம் பொல்லாததுன்னு பெரியவங்க  சொல்லுவாங்க… நான் எந்த சாபமும் கொடுக்கலை… ஆனாலும் என் வயித்துல உள்ள குழந்தை சபிச்சிருக்குமோ… அஸ்வினுக்கு எதுவும் ஆகிடக் கூடாது… காப்பாத்து முருகா…” கண்ணீருடன் வேண்டிக் கொண்டிருந்தாள்.
இரவு நேரம் ஆதலால் மருத்துவமனை பரபரப்பின்றி அமைதியாய் இருக்க நேராய் குழந்தைகள் வார்டுக்கு சென்றனர். அங்கே இரவு நேரமாதலால் மெயின் டாக்டர் இல்லை. அப்போதுதான் MBBS முடிந்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்த இளம் பெண் டாக்டர் ஒருவர் தான் டியூட்டியில் இருந்தார்.
குழந்தையைப் பரிசோதித்து பழைய டாக்டர் ரெக்கார்டைப் பார்த்து ஏதேதோ டெஸ்ட் எடுத்தனர். ரிசல்ட் வந்தால் தான் சரியான மருந்தைக் கொடுக்க முடியுமென்றும், ஒரு நாள் கழித்தே ரிசல்ட் வருமென்றும் டாக்டர் சொல்ல குழந்தையின் நிலை மேலும் பயத்தைக் கொடுத்தது.
கண்கள் மேலே சொருகி, கை கால்கள் அசைவின்றி தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
“டாக்டர், உடனே ஏதாச்சும் பண்ணுங்க… எங்களுக்கு பயமாருக்கு…” பரத் சொல்ல நிலைமையின் தீவிரம் உணர்ந்த அந்தப் பெண் டாக்டரும் துணிந்து ஒரு பரிசோதனை செய்ய முன் வந்தார்.
குழந்தையின் முதுகெலும்பில் ஊசியை செலுத்தி அதில் உள்ள திரவத்தை எடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியபோது நந்தினி கதறி விட்டாள். அதற்குள் வேறு ஒரு ஆட்டோவில் பரத்தின் அத்தை, அம்மா, தம்பி மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
இன்னும் ஒரு வயது கூட ஆகாத குழந்தையின் முதுகுத் தண்டுவடத்தில் ஊசி குத்துவதா என்று அதிர்ச்சியுடன் அவர்கள் அழத் தொடங்க பரத் அவர்களை சமாதானப் படுத்தினான். எந்த சிகிச்சையும் கொடுக்காமல் டெஸ்ட் ரிசல்ட்டுக்காய் காத்திருப்பதை விட இந்த முயற்சி செய்யலாம் என்று சொல்ல வேறு வழியில்லாமல் சம்மதித்தனர்.
முதுகுத்தண்டில் இருந்து எடுத்த திரவத்தைப் பார்த்த அந்த டாக்டர் பெண் அது பழுப்பு கலரில் இருக்கவே “அனேகமா மூளைக்காய்ச்சல் (MENINGITIS) ஆக இருக்கலாம்… வைரஸ் கிருமிகளால மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போயிடும்…  இப்படியே விட்டா உயிருக்கே ஆபத்து… கை, கால், கண், காது செயலிழக்கவும் வாய்ப்பு அதிகம்…” என்று சொல்லி துணிச்சலுடன் அந்த நோய்க்கான மருந்தை ரிசல்ட் வரும் முன்னே அஸ்வினுக்கு கொடுத்தார். அவர் ஊசி போட்டு சில நிமிடங்களில் வலிப்பு நிற்கவும் தான் எல்லாருக்கும் சற்று நிம்மதியானது.
அன்று முழுதும் ICU வில் இருக்க அடுத்த நாள் காலையில் மெல்ல கண் விழித்த அஸ்வின் நந்தினி, பரத்தை சோர்ந்த கண்களுடன் நோக்க அவர்கள் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது.
டியூட்டிக்கு வந்த மெயின் டாக்டரும் அந்த இளம் டாக்டரை வெகுவே பாராட்டினார். ரிசல்ட்டுக்காய் காத்திருக்காமல் அவர் பரிசோதித்து இதுதான் என்று தீர்மானித்து சிகிச்சையைத் தொடங்கியதால் மட்டுமே அஸ்வின் உயிர் பிழைத்தான்… என்று சொல்லவும் அந்தப் பெண்ணிடம் நன்றி கூறினர். அந்த சிகிச்சையைத் தொடருமாறு டாக்டரும் சொல்லி செல்ல ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை முதுகுத் தண்டில் ஊசி மூலம் அந்த மருந்தை குழந்தைக்கு செலுத்தினர். ஒவ்வொரு முறை அவனுக்கு ஊசி குத்தும்போதும் பெற்றவளின் மனம் பதறியது. அன்று மாலையில் நார்மல் வார்டுக்கு மாற்றினர்.
மாலையில் வந்த பரிசோதனை முடிவும் மூளைக்காய்ச்சல் தான் என்பதை உறுதி செய்யவே அந்த இளம் டாக்டருக்கு தான் ஒரு குழந்தையைக் காப்பாற்றிய சந்தோஷம். அஸ்வின் அங்கே இருக்கும் வரையில் அவருக்கு செல்லமாகிப் போனான். நோய் குணமாகும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டனர்.
மருந்து செலவு ஒரு பெரிய தொகை வந்திருக்க பரத்துக்கு கடன் சுமை ஏறிக் கொண்டே போனது. நந்தினி முழுநேரமும் ஆசுபத்திரியில் இருக்க காலையில் வீட்டுக்கு வந்து துவைத்து, சமைத்து மதிய உணவுடன் அமிர்தவள்ளி மருத்துவமனைக்கு சென்று விடுவார்.
பரத், வீடு ஆசுபத்திரி என்று அல்லாடிக் கொண்டிருந்தான்.
அனுவையும், குழந்தையும் அந்த நேரத்தில் யாருக்கும் கவனிக்க நேரமுமில்லை, முடியவுமில்லை. பிரசவம் முடிந்து ஒரு மாதமே ஆகியிருந்ததால் அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், உணவுகள் எதுவும் தொடங்கி இருக்கவில்லை. பரத்தின் இன்னொரு அத்தையும், மாமாவும் பிள்ளைகளுடன் உதவி செய்வதாய் வீட்டில் வந்து அமர்ந்து கொள்ள அரிசி, மளிகை சாதனங்களும் கரைந்து கொண்டிருந்தது. யாரையும் வேண்டாமென்று விலக்கவும் முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் பரத் பணத்துக்கு தவித்துக் கொண்டிருந்தான்.
நந்தினியின் கல்யாணத்துக்கு வாங்கிய கடன் அப்போதே புற்றுநோய் போல பெருகிக் கொண்டிருந்தது. கடனை அடைக்க முடியாமல் வட்டி கட்ட மட்டுமே அனுவின் நகைகள் ஒவ்வொன்றாய் அடகு கடைக்கு செல்லத் தொடங்கியது. நந்தினியின் நகைகள் பாதியை அவளது நாத்தனாரின் புது வீடு கட்டும் செலவுக்கு கொடுத்திருந்தாள். மீதியை மட்டுமே இங்கே கொண்டு வந்திருக்க அஸ்வின் பிறந்த சமயத்தில் குழந்தையின் விசேஷத்துக்கு அவளிடம் நகையை வாங்கியே பரத் செலவு செய்தான்.
அஸ்வின் நன்றாகத் தாய்ப்பால் குடிப்பான்… கொடுக்கும் உணவுகளை மறுக்காமல் சாப்பிடுவான் என்பதால் அவனுக்கு உடலில் நல்ல எதிர்ப்பு சக்தி இருந்தது. அதனால் உடலில் எந்த பாதிப்பும் நேராமல் ஒரு வழியாய் பதினெட்டு நாட்கள் ஆசுபத்திரி வாசம் முடித்து வீட்டுக்கு வந்தனர். அஸ்வினை முடியாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பது அறிந்து அவனது தந்தை பதினைந்து நாட்கள் கழித்து மும்பையில் இருந்து வந்து சேர்ந்திருந்தார்.
அடிக்கடி மருந்து, ஊசி பரத் வாங்கிக் கொடுப்பதை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தவர், டிஸ்சார்ஜ் ஆனதும், “கவர்ன்மென்ட் ஆசுபத்திரில எல்லாம் ப்ரீ தானே…” என்று சொல்ல பரத் கடுப்பானான்.
“சிகிச்சை மட்டும் தான் ப்ரீ… இதுக்கான மருந்து, மாத்திரை எல்லாம் நாம தான் வாங்கிக் கொடுக்கணும்…” நந்தினி கடுப்புடன் சொல்ல வாயை மூடிக் கொண்டாலும் அஞ்சு பைசா செலவுக்கென்று கொடுக்கவே இல்லை.
அவரும் வீட்டில் வந்து அமர்ந்து கொள்ள செலவு இன்னும் கூடியது. குழந்தையை நலம் விசாரிக்க அவரது சொந்தங்களும், இவர்களின் சொந்தங்களுமாய் அடிக்கடி வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செலவைக் கூட்டினர்.
“அம்மா, அனுவுக்கு கொடுக்க வேண்டிய பிரசவ மருந்தெல்லாம் இன்னும் கொடுக்கத் தொடங்கலையே…” நடுவில் ஒருமுறை பரத் அன்னையிடம் கேட்டிருந்தான்.
“ம்ம்… ஆசுபத்திரிக்கு ஓடிட்டு இருக்கும்போது என்னடா பண்ணறது… கொடுத்துக்கலாம்…” என்று சொல்லியிருந்தார்.
“பரத், இன்னும் அனுவுக்கு மருந்து கொடுக்காம லேட் பண்ணக் கூடாது…” பரத்தின் அத்தை சொல்ல அஸ்வின் வீட்டுக்கு வந்ததும் அனுவுக்கு பிரசவ லேகியம், கஷாயம் என்று மருந்தைக் கொடுக்கத் தொடங்கினர்.
ஆனாலும் அஸ்வின் அடிக்கடி அழுதான். எல்லாவற்றிற்கும் பிடிவாதம் பிடித்தான். உடம்பில் உள்ள சத்தெல்லாம் கரைந்து விட்டதோ என்னவோ நிறைய சாப்பிட்டான்…
சில நாள் இருந்துவிட்டு அஸ்வினின் தந்தை மும்பை கிளம்பி விட்டார். குழந்தை, மனைவியை அழைத்துச் செல்வதாகக் கூற நந்தினி மறுத்து விட்டாள்.
“உடம்புக்கு முடியாத குழந்தையை வச்சிட்டு என்னால அங்க தனியா எதுவும் பண்ண முடியாது… நான் இங்கயே இருக்கிறேன்…” என்று சொல்ல அவர் கிளம்பி விட்டார். ஆனாலும் மனைவி, குழந்தைக்காய் செலவுக்கென்று ஐந்து பைசா கொடுக்கவில்லை.
குழந்தைக்கு முடியாததை சாக்கிட்டு எப்போதும் அவனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள் நந்தினி. பரத்தின் அன்னை தனியே பணி எடுப்பது பொறுக்காமல் அனு மெல்ல உதவி செய்யத் தொடங்கினாள்.
அவர்களின் முதல் கல்யாண நாள் வரவே ஒரு காட்டன் புடவையை வாங்கிக் கொடுத்தான் பரத். தீபாவளிக்கு ஆபீசில் கிடைக்கும் அட்வான்ஸ் பணத்தில் பரத்தும், அனுவும் கடைக்கு சென்று எல்லாருக்கும் டிரஸ் எடுத்து வந்தனர். அனுவுக்கு என்று தனியாக அவன் எதையும் இதுவரை பரிசாகக் கொடுத்ததில்லை. தனக்கு தனியே எதுவும் செய்ய வேண்டுமென்று அவளும் நினைத்ததில்லை. எல்லாருக்கும் ஒரே போல தான் அவளுக்கும் செய்தான்.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது எல்லாருமாய் ஒரு சினிமாவுக்கு சென்று வந்தனர். பிறகு அதுவும் இல்லை. எங்கும் அவளைத் தனியே அழைத்துப் போகவும் முடியாது. அவர்களுக்கென்று எந்த பிரைவசியும் கிடையாது.
தன்யாவுக்கு ஆறு மாதம் ஆனபோது குருவாயூரில் முதன்முறை சோறு கொடுக்க வேண்டுமென்று குடும்பத்துடன் கிளம்பினர். அனுவின் குடும்பத்தினர் நேராக குருவாயூர் வருவதாக சொல்லி விட இங்கிருந்து பரத்தின் சித்தி குடும்பம், மாமா குடும்பம். இவர்கள் குடும்பம் என்று எல்லாரையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்று அன்னை சொல்ல, தவிர்க்க முடியாமல் பிஎப் பணத்தை எடுத்து அவர்களை அழைத்துச் சென்றான் பரத்.
லாட்ஜ் வாடகை, சாப்பாட்டு செலவு, வண்டி செலவு என்று அதற்கும் ஒரு தொகை செலவானது. கடன் ஏறிக் கொண்டே இருக்க தீர்க்க வழி தெரியாமல் புதுப் புது ஆட்களிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி வட்டி கட்டிக் கொண்டிருந்தான் பரத். அனுவின் நகைகளும் மேக்ஸிமம் கரைந்திருந்தது.
கடன் பிரச்சனையோடு பரத்தின் குடியும் அதிகமாயிருந்தது. நண்பர்களின் கல்யாணம், வீட்டு விசேஷம் என்று எந்த நிகழ்ச்சி வந்தாலும் குடித்து அங்கேயே கிடந்தான். பரத்தின் தம்பியும் அவனுக்கு போட்டியாய் சிறந்த குடிமகனாய் வளர்ந்து கொண்டிருந்தான்.
சில சமயம் தண்ணி போட்டு மற்றவர்களுடன் வம்பிழுத்து கை கலக்கவும் செய்தனர். எந்த ஒரு நல்ல, துக்க நிகழ்ச்சி வந்தாலும் அனுவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. அவள் எதுவும் சொன்னாலும் பரத் காதில் வாங்கிக் கொள்வதில்லை. வாரத்தில் சனி, ஞாயிறும், விசேஷ நாளும் தவிர மற்ற நாட்களில் அவன் சரியாகவே இருக்க விடுமுறை நாட்களை வெறுப்புடன் பார்த்தாள் அனு.
தினமும் மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணனும், தம்பியும் அருகிலுள்ள கிளப்புக்கு கிளம்பி விடுவார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்த பரத் அனுவைப் பற்றி யோசிக்கத் தவறினான். வாழ்க்கை அதன் போக்கில் கடந்து கொண்டிருந்தது.
இன்பமோ துன்பமோ
வாழ்வில் எல்லாம்
சில காலம் தான்…
எதிர்பார்ப்பைக் குறைத்து
நடப்பதை எதிர்கொண்டால்
ஏமாற்றம் என்பதொன்றும்
பெரிதாய் தெரிவதில்லை…
வருவதை எதிர்கொண்டு
கடந்து வாழ்வதே
வாழ்க்கை நியதி…
 

Advertisement