Advertisement

 

வானம் – 1

 

“பிருந்தாவனம்”

 

கறுப்பு கிரானைட் கல்லில் தங்கக்கலரில் மின்னிய வீட்டுப் பெயரை ஆசையோடு தடவிக் கொண்டே துணியால் துடைத்துவிட்டாள் அனுபமா. வாசல் தெளித்து சின்னதாய் கோலமிட்டு புன்னகையுடன் முன்னில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

 

“என் துளசிக்குட்டி பெருசா வளர்ந்துட்டாளே…. நிறையப் பூ எல்லாம் விட்டு தளதளன்னு பார்க்க என் கண்ணே பட்டிரும்போல இருக்கடி செல்லம்……..” சந்தோஷத்துடன் பூந்தொட்டியில் இருந்த துளசிச் செடியிடம் கூறியவள், மற்ற செடிகளையும் தண்ணீர் விட்டு செல்லம் கொஞ்சிவிட்டு வாசல் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.   

மாடியில் அவரவர் அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகள் தன்யாவையும் மகன் தினேஷையும் எழுப்பிவிட்டு கீழே தங்கள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் பரத்சந்தரிடம், “என்னங்க! டைம் ஆச்சு எழுந்திருங்க!” என்றுவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.  

 

பரபரவென்று காலை டிபன், மதிய உணவுகளைத் தயாரித்துக் கொண்டே அங்கு வந்த கணவனுக்கு காபியை கொடுத்தாள்.

 

“பரத்…. மோட்டார் போட்டு விடுங்க…. தண்ணி வரலை……” என்றவள் அவசரமாய் பாத்திரங்களைக் கழுவி வைத்துக்கொண்டே அடுப்பைக் கவனித்தாள். மோட்டார் போட்டு விட்டு மனைவிக்கு அருகில் வந்த பரத் காபி குடித்துக்கொண்டு அவளையே பார்த்தான்.

 

அவன் பார்வையை உணர்ந்தவள் சிறு புன்னகையுடன், “போதும் பொண்டாட்டியை ரசிச்சது…. பிள்ளைங்க வந்துடப் போறாங்க…. அந்த வாட்டர் பாட்டில்ல தண்ணிய நிறைச்சிடுங்க…… நான் குளிச்சிட்டு வந்திடறேன்…..”

 

சொல்லிக் கொண்டே அடுப்பு மேடையை சுத்தம் செய்தவளைப் பின்னிலிருந்து அணைத்தவன், “நானும் வரட்டுமா…….” என்றான் காதில் கிசுகிசுப்பாய்.

 

“ஹஹா போங்க… டைம் இல்லாத நேரத்துல ரொமான்ஸ் பண்ணிட்டு….” சிணுங்கியவள், “அம்மா….” மகளின் குரல் கேட்கவும் கணவனை அவசரமாய் விலக்கினாள்.

மகள் தன்யா பிளஸ் ஒன் படிக்கிறாள். அவள் கையில் லஞ்ச்பாக்சைக் கொடுத்தவள், “தன்யா…. டேபிள்ள இட்லி இருக்கு…. எடுத்து சாப்பிட்டுக்கடி…. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, என்னங்க… தினேஷ் வந்தா டிபன் சாப்பிட சொல்லுங்க… நான் குளிச்சிட்டு வந்திடறேன்…..” என்று பரபரப்போடு குளியலறைக்கு விரைந்தாள்.

 

குளித்து முடித்து வரவும் ஆறாவது படிக்கும் மகன் தினேஷ் ஸ்கூலுக்கு செல்ல தயாராக நின்றான். தன்யாவும் தினேஷும் வேறு வேறு பள்ளியில் படித்தனர். தன்யாவுக்கு ஸ்கூல்பஸ் சீக்கிரமே வந்துவிடும்…. தினேஷ் ஆட்டோவில் சென்று வந்தான். அவனுக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டு, வேகமாய் புறப்பட்டு வந்தாள். அதற்குள் அவளது லஞ்ச்பாக்சை கட்டி வைத்த பரத், காலை உணவு சாப்பிட தட்டை எடுத்து வைத்தான்.

 

“அனு… வா சாப்பிடு…… டைம் ஆச்சு….” என்ற கணவனிடம், “இல்லங்க…. எனக்கு வேண்டாம்… நீங்க சாப்பிடுங்க….” சொல்லிக்கொண்டே பாகில் எல்லாவற்றையும் எடுத்துவைக்க, அவளைப் பிடித்து இழுத்துச் சென்று மேசை முன்பு அமர்த்தியவன், “டைம் ஆனா பரவால்ல… முதல்ல சாப்பிடு…..” என்று ஆணையிட, அதற்குமேல் அவனிடம் தர்க்கம் செய்தால் கோபப்படுவான் என நினைத்தவள் அவசரமாய் சாப்பிட்டாள்.

 

அவனும் சாப்பிட்டு முடித்து புறப்பட்டு வர, இருவரும் பைக்கில் கிளம்பினர். எதிர்வீட்டு பத்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க, கை ஆட்டிய குழந்தைக்கு டாட்டா சொல்லிவிட்டு பைக்கில் பறந்தனர். 

 

அவர்கள் செல்வதையே பார்த்து நின்ற பத்மாவுக்கு  ஆச்சர்யமாய் இருந்தது. பரத்சந்தர், அனுபமா குடும்பம் இந்தக் காலனிக்கு புதியதாய் வீடு கட்டிவந்து ஆறுமாதம் இருக்கும்…. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட ஏதாவது வாக்குவாதமோ சண்டை போட்டோ கேட்டதில்லை. முன்னில் உள்ள வீட்டில் சத்தமாய் சிரித்தால் கூட இவர்கள் வீட்டுக்கு நன்றாகவே கேக்கும்…. ஆனால் ஒருநாள் கூட சிரிப்பு சத்தமின்றி வேறு கேட்டதில்லை.

 

இருவருக்குள்ளும் இருந்த அன்னியோன்யமும் புரிதலும் அவளுக்கு வியப்பாய் இருந்தது. பத்மாவுக்கு கல்யாணமாகி மூன்று வருடமே ஆகியிருந்தது. இரண்டுவயதில் குழந்தையும் ஆகிவிட்டாலும் எப்போதும் அவளுக்கும் கணவன் சங்கருக்கும் ஏழாம் பொருத்தம் தான்…. எந்தவிஷயம் பேசினாலும் கருத்துவேறுபாடு வந்து வார்த்தை தடித்து சண்டையாய் வெடித்து கோவித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் புறப்படும் வகையில் வந்து நிற்கும்…. அதை நினைக்கும் போது முன்வீட்டில் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்கும் தம்பதியர் பரத், அனுபமாவைக் காணும்போது அவள் அதிசயிப்பதில் தவறில்லையே.  

 

“இவர்களுக்குள் சண்டையே வராதா…. இந்த அனுக்கா வேலைக்கும் போய்க் கொண்டு குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார்… முகத்தில் எப்போதும் சிரிப்புதான்…. அவர் ஏதாவது ஒன்று சொல்வதற்குள் பரத் அண்ணா முடித்துவிடுகிறார்….. எப்படித்தான் இப்படி சொக்குபொடி போட்டது போல மனைவியை சுற்றி வருகிறாரோ….. இங்கே சின்னசின்ன விஷயத்துக்கு கூட என் புருஷனைத் தொங்க வேண்டியிருக்கிறது, எதற்கெடுத்தாலும் குத்தம்…. தொட்டதுக்கெல்லாம் சண்டை…. கோவித்து அம்மா வீட்டுக்குப் போவது… இது எதுவும் அவர்கள் வீட்டில் நிகழாதா…” அனுவைக் காணும் போதெல்லாம் இந்த எண்ணம் அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.

 

அவர்களின் ஒற்றுமையும் அன்னியோன்யமும் சிறிது பொறாமையைக் கூட கொடுத்தது. இதைப் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அனுவிடம் பேசவேண்டும் என நினைத்துக் கொண்டாள் பத்மா.

 

குழந்தை அழத் தொடங்கவும் சமாதானப் படுத்திக் கொண்டே உள்ளே சென்றவள் நியூஸ் பேப்பரில் உள்ள எழுத்துகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எதோ தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும் எரிச்சலானாள்.

 

“என்னங்க…. பாப்பாவைப் பார்த்துக்குங்க…. சமையல் முடிக்கணும்….” சொல்லிவிட்டு குழந்தையை அவனிடம் கொடுக்க, “எனக்கு வேலை இருக்கு பத்மா…. குளிச்சு கிளம்பனும்….” சொல்லிக்கொண்டே எழுந்தவனை,

 

“இத்தனை நேரம் கிளம்பணும்னு தோணலை…. ஏதாவது வேலை சொன்னாத் தோணிடுமே…..”

கடுப்புடன் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

 

விட்டுக் கொடுக்கத்

தெரியாததாலேயே

விரிசல் விடும் உறவுகள்…..

பிடிவாதத்தாலே

பிளவுபடும் உள்ளங்கள்….

புரிதல் கொண்ட உள்ளம்

மட்டுமே ஒன்றுபடுகிறது…..

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமதமாய் எழுந்து குழந்தையுடன் வாசலுக்கு வந்த பத்மா, காலையிலேயே பரத்தும் அனுபமாவும் பூச்செடிகளுக்கருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயித்தாள்.

 

பழுக்கத் தொடங்கிய இலைகளை அகற்றிவிட்டு புதிய மண்ணைக் கொண்டு வந்து நிரப்பி, படர்ந்திருந்த பூசணிச் செடிக்கு பந்தல் போட்டு மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் குழந்தை சஞ்சனா, “மாம்மா…. அத்…தை….” என்று அழைக்க திரும்பிப் பார்த்து புன்னகைத்தனர்.

 

“என்னக்கா…. காலைலயே தோட்டவேலை போலிருக்கு…..”

 

“ஆமா பத்மா…… இந்த செடிக்கு ஒரு பந்தல் போட்டு கொடுக்க வந்தோம்….. நீ இப்போதான் எழுந்தியா…. இனிதான் டிபனா….” கேட்டுக் கொண்டே அவளிடம்  வந்தாள் அனுபமா.

“ம்ம்… ஆமாக்கா….. எப்படிக்கா…. இப்படி எல்லா வேலையும் சமாளிக்கறிங்க……”

 

“ஹஹா…. பழகிடுச்சு மா….. நாமதான் எல்லாம் பார்க்கணும்னு ஒரு நிலைவந்தா கண்டிப்பா பழகிடும்….”

 

“ஓ…” என்றவள், “உங்ககிட்டே நிறைய பேசணும்கா….. நீங்க ப்ரீயா இருக்கும்போது வரேன்……”

 

“ம்ம்… சரி மா….. நான் போயி டிபன் பண்ணறேன்…..” என்றவள் பக்கெட்டில் இருந்த தண்ணீரை செடிக்கு ஊற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். மதியம் வரை வீட்டுவேலை சரியாய் இருக்க, மதிய உணவு முடிந்து பரத் ஒரு நண்பரைக் காண வெளியே கிளம்பவும், அவனை வழியனுப்ப வெளியே வந்தவள் வாசலில் நின்று கொண்டிருந்த பத்மாவைக் கண்டதும் நின்றாள்.

 

“அக்கா….. உங்களுக்கு பால்கொழுக்கட்டை செய்யத் தெரியுமா…..” கேட்டுக் கொண்டே அவளிடம் வந்தாள்.

 

“ம்ம் தெரியும் பத்மா…. செய்யப்போறியா.. உள்ள வாம்மா…”

 

“ம்…. எப்படி செய்யறதுன்னு சொல்லுங்கக்கா….. சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பத்மா.

 

அவளுக்கு செய்முறை சொல்லிவிட்டு, “ஈசிதான்… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…. நல்லாருக்கும்….” 

 

“ம்ம்… சரிக்கா நான் இன்னைக்கே செய்து பார்த்திடறேன்…”

“சரி பத்மா…. வேலையெல்லாம் முடிஞ்சுதா…. பாப்பா தூங்குறாளா…..”

 

“ஆமாக்கா… அப்பாவும் பிள்ளையும் தூங்குறாங்க…..”

 

ஹாலில் அமர்ந்து வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டியவள், “உங்க பூஜா ரூம் ரொம்ப அழகாருக்கு….. நல்லா பிளான் பண்ணி கட்டியிருக்கீங்க….. கிட்சனும் ரொம்ப வசதியாருக்கு….. எங்க வீட்ல கிட்சன்ல பாத்திரம் தேய்க்கவே ரொம்ப கஷ்டம்க்கா….. திண்டு உயரமா வச்சிட்டாங்க……” என்றாள் பத்மா.

 

“ஓ… அப்படியா……” என்றவள் ஏதோ கேட்க தயங்கிக் கொண்டே யோசனையாய் பார்த்தாள்.

 

“என்ன பத்மா…. என்கிட்டே ஏதோ கேட்கணும்னு நினைக்கறே போலருக்கு……”

 

“அதுவந்து… ஒண்ணுமில்லைக்கா… நீங்க லவ் மேரேஜா…”

 

“ஹஹா… ஏன் பத்மா உனக்கு இப்படி ஒரு சந்தேகம்…..” என்றாள் சிரிப்புடன்.

 

“உங்களைப் பார்த்தா எனக்கு அப்படிதான் தோணுது…. சொல்லுங்கக்கா…..” என்றாள் ஆவலுடன்.

 

“லவ் மேரேஜா…. அரேஞ்டு மேரேஜான்னு கேட்டா ரெண்டும்னு தான் சொல்லணும்….. அவர் என் மாமன் மகன்….. நான் பிறந்ததும் என் மாமா இவதான் என் மருமகள்ன்னு சொல்லுவாராம்…. பெருசாகி எங்களுக்கும் விருப்பம் இருந்ததால கல்யாணம் நடந்துச்சு……. அதனால ரெண்டும்தான் சொல்லணும்…” என்று சிரித்தாள் அனுபமா.

 

“ஓ… சூப்பர்க்கா…. அதனால தான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கறீங்க போலருக்கு….. நான் எப்பவும் நினைச்சுக்குவேன்….. எப்படி இவங்க சண்டையே போடாம எப்பவும் சந்தோஷமா இருக்காங்கன்னு…..”

 

“ம்ம்….. சண்டை இல்லாம புரிதல் இல்லை பத்மா…. எங்களுக்குள்ளயும் எத்தனயோ சண்டை வந்திருக்கு….. வயசு ஏறும்போது புரிதலும் கூடும்னு நினைக்கறேன்….. இந்த சந்தோஷத்துக்குப் பின்னால நான் பல வலிகளைக் கடந்து வந்திருக்கேன்…..” என்ற அனுவின் கண்களில் சிறு வலி தெரிந்தது.

 

“என்னக்கா சொல்லறீங்க…. உங்களைப் பார்க்கும்போது சிலநேரம் எனக்கு பொறாமையா கூடத் தோணும்…. உங்களுக்கும் வலி இருக்குன்னு சொல்லறீங்க…..” ஆச்சர்யமாய் கேட்டாள் பத்மா.

 

“பத்மா… வாழ்க்கை எல்லாருக்கும் நினைச்ச போல இருந்திடறதில்லை….. சில ஏற்றங்கள், பல இறக்கங்கள்னு மேடு பள்ளமாத்தான் இருக்கு…. அதை சமநோக்கோட பயணிச்சா, வாழ்க்கை என்னன்னு வசப்படும்…. அதுக்கு நிறைய அனுபவங்களைக் கடந்து வரணும்…. நானும் பல வலிகளைக் கடந்துதான் இங்க வந்திருக்கேன்……” என்றாள் அனுபமா.

அவள் சொல்வதை திகைப்புடன் கேட்ட பத்மா, “அக்கா… நீங்க சொல்லுறதைக் கேக்கும்போது எனக்கு அதிசயமா இருக்கு….” என்றவளை சிரிப்புடன் நோக்கினாள் அனுபமா.

 

“ஹஹா…. நம்ம கிட்ட பொறுமையும், முயற்சியும் இருந்தா வாழ்க்கையும் கண்டிப்பா ஒருநாள் வசப்படும்…. எனக்கும் அப்படித்தான்…. போகப் போக நீயும் இதைப் புரிஞ்சுக்குவே…” என்று கூற, “ம்ம்… உங்களை மாதிரி இருக்கணும்னு எனக்கும் ஆசையாருக்கு…. சரிக்கா….. பாப்பா எழுந்திருவா…. நான் அப்புறம் வரேன்…”

 

சொல்லிக் கொண்டு எழுந்தவளை தலையாட்டி அனுப்பிவிட்டு ஒரு புத்தகத்துடன் அமர்ந்தாள் அனுபமா.

 

புத்தகத்தில் பார்வை பதியாமல் எண்ணங்கள் இறந்தகாலத்துக்கு செல்ல பழைய நினைவுகள் மனதை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கின. அவள் தலைக்குப் பின்னால் காலச்சக்கரம் பின்னோக்கி சுழலத் தொடங்கியது.

 

அனுபமா பெயருக்கு ஏற்றார்போல அன்பும் அறிவும் அழகும் நிறைந்தவள். அவளது அன்னை அனுவுக்கு மூன்று வயது இருக்கும்போதே மூளை கட்டியால் அவதிப்பட்டு இறந்து போனார். மனைவியின் நினைவில் தவித்த தந்தைக்கு குழந்தையைக் காரணம் காட்டி அன்னையின் தங்கையையே இரண்டாம் தாரமாய் மணமுடித்து வைத்தனர்.  

சித்தி சாரதா நல்ல சுபாவம் கொண்டவர்…. அவருக்கும் ஒரு ஆண்வாரிசு பிறந்தாலும் இரண்டு பேரையும் ஒருபோலவே கவனித்துக் கொண்டார். தம்பி ஆதவனை அவளுக்கு மிகவும் பிடித்தாலும் தாய்ப்பாசத்தை சித்தியிடம் உணர முடியவில்லை. அன்பான சிறு தலை கோதலுக்காய் அவள் பிஞ்சு நெஞ்சம் எத்தனையோ முறை  ஏங்கியிருக்கிறது.

 

நிறைய படிப்பாள்…. வகுப்பில் முதலிடம்…. டான்சில் ஈடுபாடு அதிகம்…. சிறுவயதிலேயே அவளது அழகான முகத்தைக் கண்டால் யாருக்கும் ஒரு மரியாதை தோன்றும். மற்ற பிள்ளைகளின் வீட்டில் உதாரணப்படுத்தி சொல்லுமளவு நல்ல சுபாவம். மிகவும் அமைதியானவள். சத்தம் போட்டுப் பேசவோ, யாரிடமும் சண்டை போடவோ தெரியாது…. எதற்கும் மனதில் ஒரு பயம்….

 

காலம் யாருக்கும் நிற்காமல் ஓட, கிடைத்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டு அவளும் பெரியவளானாள். அவள் பிறந்த சமயத்தில் அன்னையும் மாமாவும் தங்கள் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் ஆனதும் சம்மந்தம் பேச வேண்டும் என்று கூறியதை வீட்டில் பெரியவர்கள் பேசிக் கேட்டிருந்தவளுக்கு மாமன் மகனைக் காண ஆசையாய் இருந்தது.

 

சிறுவயதில் பார்த்திருந்தாலும் அப்போது இதைப் பற்றிப் புரியாததால் எதுவும் தோன்றவில்லை. மாமாவுக்கு சென்னையில் அரசாங்க வேலையாதலால் அவர்கள் அங்கே இருந்தனர்.

இன்றுபோல் நினைத்த மாத்திரத்தில் பார்த்துக் கொள்ளும் வசதியில்லை. அவர்கள் பார்த்துக் கொள்ளும் நாளும் வந்தது. அனுவின் தாய்மாமன் மாரடைப்பில் காலமானார் என்ற செய்தியைத் தாங்கி வந்திருந்த தந்திக்குறிப்பு இவர்களைக் குடும்பத்துடன் அங்கே கிளம்ப வைத்தது.

 

மாமன் இறந்துவிட்டாரே….. மாமாவின் மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகவில்லை… இரண்டாவது பையனைத்தான் இவளுக்குப் பேசியது… மூன்றாவது மகன் இவள் வயதை ஒத்தவனாதலால் படித்துக் கொண்டிருந்தான்…. அவர்கள் குடும்பத்தை நினைத்து கவலையாய் இருந்தது. நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தாள்.

 

இவர்களை சுமந்திருந்த கார் சென்னையை அடைந்து மாமன் வீடு போயி சேரும்முன் அவரது உடல் தகனத்திற்காய் கொண்டு செல்லப்பட்டிருந்தது. குட்டி ஜன்னல் வழியே யாரோ தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் மெல்ல நிமிர்ந்தாள். ஒரு வாலிபன் மொட்டைத் தலையுடன் அவள் அழுவதை கலங்கிய கண்ணுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

வாசலிலே வானவில்

வாஎன்றால் வந்திடுமோ…..

வானம் போல காத்துநின்றால்

வருத்தமும்தான் கடந்துபோகும்

வாழ்வில் மிச்சம் சந்தோஷமாய்….

Advertisement