Advertisement

9
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
இன்றோடு கண்ணன் மறைந்து பதினாறு நாட்களாகிவிட்டது.அவர் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாய் அவரது வாரிசுகள் இல்லையென்றாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் அவரின் ஞாபகத்தை மனிதர்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டே இருந்தன என்பதே நிஜம்.
“அட கண்ணனா,அவரு நல்ல மனுசனாச்சே.தூக்கத்துலயே போயிட்டாப்ல.நல்ல சாவு தான்”என்று சொல்லாத ஆள் இல்லை.
சொந்தபந்தங்களுக்குள் இன்னொருவிதமாய்’அண்ணன் தங்கச்சிங்க சொத்துக்காக கொன்னுட்டாங்கய்யா’என்றும் பேச்சு நிலவத்தான் செய்கிறது.
சில நேரம் இது தான் நடந்தது என்று உறுதியாக நம்மால் சொல்லமுடிவதில்லை.யூகங்களின் அடிப்படையிலையே பல விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம்.அந்த யூகத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்ள பெரும்பாலும் முயல்வதில்லை.அது போலத்தான் கண்ணனின் இறப்பையும் மூன்றாம் மனிதராய் நாம் யூகத்தின் அடிப்படையிலையே விட்டுவிடுவோம்.
அவர் இருந்திருந்தால் அரசுவின் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ! ஆனால் இப்போது   மிகவும் சோர்ந்து போயிருந்தான்.
சும்மா(அமைதியாய்) இருந்தவனை,’திருமணம் அது இதென்று கூறி ஒருத்தியை தன் வாழ்வில் இணைத்துவிட்டு,இப்படி நிராதரவாய் விட்டுப் போனதை எண்ணி அவன் வருத்தப்படாமல் இல்லை..
போனவரை திட்டி ஒரு பயனும் இல்லை.இனி அடுத்து என்னவென்பதை பார்ப்போம் என்று நினைக்கையிலையே’திட்டமிட்டதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?’என்று சோர்ந்து போய்விடுவான்,
திருமண நாளன்று’அடுத்து இப்படித்தான் செயலாற்ற வேண்டும்’என்று நிறைய எதிர்கால திட்டத்தை வகுத்திருந்தான்.அதில் எல்லாம் கண்ணனும் ஒரு அங்கமாய் இருந்ததால்,அத்தனை திட்டமும் இப்போது சொதப்பல்களாகி விட,நாளையை பற்றிய சிந்தனையை விட,’இன்று’ பற்றி மட்டும் சிந்திப்போம் என்று உறுதியாய் ஒரு முடிவுக்கு அவன் வர கிட்டத்தட்ட பதிமூன்று நாட்கள் வேண்டியிருந்தது.
இந்த இடைப்பட்ட நாட்களில் பிரவீன் மட்டும் உடன் இல்லையென்றால் என்னவாகியிருப்பானோ! நேரத்திற்கு உணவு கொடுத்து நண்பனது மனநிலையை மாற்ற வேண்டுமென்று ஏதாவது செய்துகொண்டேயிருப்பான்.
பிரவீனிற்கு இருக்கும் வருத்தமெல்லாம்’ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வேணியை மீண்டும் மில்லில் கொண்டு போய்விட்டுவிட்டு வந்துவிட்டானே’என்று தான்..
இன்று கண்ணனுக்கு காரியம் செய்வதற்காய்,இருவரும் தனிப்பட்ட முறையில் செல்வதென்று ஏற்பாடு.
செல்வதற்கு முன் மனதிலிருப்பதை கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்தான்.
“வேணிக்கு போன் பண்ணி பேசினியா அரசு”
“இல்லடா..மேனேஜர் அண்ணே,கல்யாணம் ஆனத சொன்னவுடனே,முதல் வேலையா போனெல்லாம் பண்ணி தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.அவ போனும் வார்டன் ரூம்ல தான் இருக்கு”
“அப்போ நேர்ல போய் பேசிட்டு வரலாம்லடா.உன்னை நம்பி தானே அம்மா,அப்பா எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கு”கவலையாய் கேட்க,
“அதெல்லாம் ஒருத்தரையும் விட்டுட்டு வரலை.எல்லார் கூடவும் பேசிட்டு தான் இருக்கா.மில்லுல கொண்டு போய் விடற முன்னாடி,அவங்க அம்மாவை நேர்லையே போய் பார்த்து,நடந்ததையெல்லாம் ஒண்ணு விடாம(?) சொல்லிட்டேன்.கொஞ்ச நாளைக்கு மில்லுலையே இருக்கட்டும்,அது தான் பாதுகாப்புன்னு பேசி முடிவு பண்ணி தான் கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்.
அவ அம்மாவுக்கு,பொண்ணுன்னா உசுரு போல.வேணியை ஒரு வார்த்தை கோபப்பட்டு பேசலை.மகளோட கண்ணீரை பார்த்துட்டு இவங்களும் கூட சேர்ந்து அழுகை.இப்படிப்பட்டவங்கள விட்டுட்டு எப்படித்தான் ‘இவன் மட்டும் போதும்’னு என்கூட மனசார வர முடிஞ்சுதோ”-வேணியை சேர்த்து திட்ட,  
“டேய்,கூட்டிட்டு வந்ததே நீ தான்டா,உன்னையே ஏன்டா நீ மோசமா பேசற”என்றதும்,
“ப்ச்ச்..”என்று சலித்துக்கொண்டான்.
“இது என்ன வாழ்க்கைடா பிரவீன்.நேத்து பார்த்தவர் இன்னைக்கு இல்லைன்னு இன்னமுமே என்னால நம்ப முடியல.சும்மா இருந்தவனை அதையும் இதையும் சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சாச்சு.இப்போ அந்த பிள்ளையை வைச்சு சோறு போடற அளவுக்காவது என்கிட்டே காசு இருக்கா.இதையெல்லாம் நினைச்சாலே வெறுப்பா இருக்குடா”
“நீயே இப்படி பேசலாமா அரசு.ஹோட்டல்ல தான் வேலை செய்யணும்னு இல்லையே..இப்போ தான் பார்ட் டைம்ல கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்க்கறியே! ரொம்ப பணம் சம்பாதிக்கலைன்னாலும்,ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கற தானே.
இப்படியே ஒரு ஒன்றரை மாசம் சமாளிச்சுட்டா,எப்படியாவது நல்ல கம்பெனில,நல்ல வேலைல உட்கார்ந்து நிறைய சம்பாரிப்போம்டா.நம்பிக்கையோட இரு.அதை விட்டுட்டு கல்யாணம் நடந்துட்டதுனாலையே உனக்கு பெருசா நட்டம் வந்துட்ட மாதிரி பேசாதே!
அதென்னவோ கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்த  உடனையே,ஆம்பளைக்கு வருமானம் பத்தாம போயிடுது.பொண்ணு என்னவோ ஆணையை(யானை) முழுங்கற மாதிரி,’வருமானமே பத்தல.உங்கப்பா வீட்டுல வாங்கிட்டு வா’ன்னு கேட்க ஆரம்பிச்சிடறானுங்க”பேச்சோடு பேச்சாக தன் அக்கா கணவனையும் திட்டித் தீர்க்க..அரசுவுக்கும் அப்போது தான் தானும் அப்படித்தான் நினைக்கிறோமோ என்று தோன்றியது.
உடனே தலையை ஆட்டி,”நானெல்லாம் அப்படியில்ல’தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
“கல்யாணம் ஆகிட்டா பொறுப்பு கூடுதில்லடா பிரவீன்.அந்த பிள்ள ஆசையா ஏதாவது கேட்டுச்சுன்னு வைச்சுக்க! வாங்கிக் கொடுக்க காசில்லைன்னா,அப்போ எனக்கு எப்படியிருக்கும்.அதை விட,’என்கிட்டே காசில்ல’-ன்னு எப்படி அந்தப்பிள்ளைகிட்ட சொல்ல முடியும்.அசிங்கமா இருக்காது? அதான் தெளிவா ஒரு முடிவு பண்ணி,கொண்டு போய்விட்டுட்டு வந்துட்டேன்.எப்படியும் முதல் மாசம் சம்பளம் வாங்கின உடனையே கூட்டிட்டு வந்துடுவேன்.அதுவரைக்கும் அங்கேயே இருக்கட்டும்.அது தான் நல்லது..
நானும் என்னவென்னவோ கனவு கண்டேன்டா பிரவீன்!! அண்ணாச்சியும்,’நீ அப்படி வருவ,இப்படி வருவ,நா உன்ன பெரிய ஆளாக்குவேன் பாரு’அப்படி இப்படின்னு நிறைய சொல்லிப்போட்டு,இப்படி ஒரேயடியா போயிட்டாரேடா”-என்று புலம்ப ஆரம்பித்தான்.
இப்படித்தான் எது பேச ஆரம்பித்தாலும் இறுதியில் கண்ணனிடம் தான் வந்து நிற்பான்.பெற்றவர்களை கூட இவ்வளவு தூரம் நினைத்திருப்பானா தெரியாது.கண்ணன் போனது இவனுக்கு பாதி உயிர் போனாற்போல புலம்பிக்கொண்டேயிருந்தான்..
பிரவீனிற்கு ஒரு பக்கம் வருத்தமாய் இருந்தாலும்,இன்னொரு பக்கம் எரிச்சலாகவேயிருக்க,”டேய் இவர் நினைப்புல  உன்ன பெத்தவங்கள மறந்துட்டியே.இன்னைக்கு காசு அனுப்பிவிடற நாள்.கைல காசிருக்கா என்ன?”பேச்சை மாற்ற,
“அதெல்லாம் அனுப்பிட்டு தான்,கைல காசில்லாம இப்படி வந்து புலம்பிட்டு இருக்கேன்”எனவும்,அந்த கணம்  தான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
ஏனென்றால் பணம் பணமென்று நச்சரிக்கும் பெற்றவர்கள் தனக்கு வாய்க்கவில்லை..
‘உடம்ப கெடுத்துக்காம படி ராசா.எவ்வளவு வேணாலும் நான் அனுப்பறேன்’என்று சொல்லும் பெற்றவர்கள் கிடைப்பது வரமே..இந்த நினைப்பே அவனுக்கு உற்சாக டானிக்காக இருக்க,அரசுவையும் திதி கொடுக்க கிளப்பிவிட்டான்.
இருவரும் கிளம்பி வரும் போது,”வேணியையும் கூட்டிட்டு போலாம்டா அரசு”என்றதும் மறுபேச்சு பேசாமல் உடனே ஒத்துக்கொண்டான். 
இருவரும் அவள் வேலை செய்யும் கம்பெனியின் முன் பைக்கை நிறுத்தி இறங்க,வாட்ச்மேன் ஐயா,அரசுவை பார்த்ததும் கை காட்டினார்.
பதிலுக்கு வணக்கத்தை வைக்க,”புதுமாப்பிள்ளை சம்சாரத்தை பார்க்க வந்தியாக்கும்”நக்கல் சிரிப்பு அவரிடம்!
அரசுவிற்கு கோபம் வந்துவிட,பிரவீனோ நமுட்டு சிரிப்போடு திரும்பிக்கொண்டான்.
ஊரில் உள்ள பாதி பேருக்கு இவன் வேணியை திருமணம் செய்தது வெட்ட வெளிச்சமாயிருந்தது.அதில் கண்ணன் தான் சேர்த்து வைத்தார் என்பது மட்டும் இன்னும் யாருக்கும் தெரியாமலிருக்க,பார்ப்போர் எல்லாம்’புதுமாப்பிள்ளை’என்று கிண்டல் செய்ய தொடங்கியிருந்தனர்.
இப்போது இவரும் தன் வேலையை காட்ட,”அண்ணே,கொஞ்சம் வெளிவேலையா வேணியை கூட்டிட்டு போகணும்.மேனேஜர்கிட்ட போன்ல பேசிட்டேன்.நீங்க போய்,நான் வந்த விபரத்த சொல்லி கூட்டிட்டு வரிங்களா”எனவும்,உடனே சென்று கையோடு வேணியையும் அழைத்து வந்தார்.
உடன் ரஞ்சிதாவும் வந்திருக்க,’இவர் தான் உன்னோட ஆளா அம்சு’கேட்டுக்கொண்டே பார்த்தவள்,சில நாள் தாடி மறைத்திருந்த முகத்தை பார்த்ததும் அவளுக்கு கொஞ்சம் ‘ஷாக்’ தான்.
“அண்ணே நீங்க தானா,இவளோட அவரு”கிண்டலாக கேட்க,
வந்த கோபத்தை அடக்கி,”நீயுமாம்மா..முடியலம்மா.விட்டுடுங்கம்மா”பாவமாய் சொல்ல,வேணி புரியாமல் பார்த்தாள்.
அதிலையே அவளுக்கு விஷயம் தெரியாதென்று ரஞ்சிக்கு புரிந்து போக,”அண்ணன் தான் ஒரு ஒன்றரை வருஷம்,நம்ம கம்பெனில அக்கவுண்ட்ஸ் பார்த்துட்டு இருந்தார்..நீ இங்க வந்து சேர்றதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் எம்பிஏ படிக்க போறேன்னு வேலையை விட்டுட்டார்”எனவும் அதிசயமாய் பார்த்தாள்.
அம்மணிக்கு இதுவரை ஐயா என்ன படிக்கிறார்,எங்கெங்கு வேலை செய்கிறார்,எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதெல்லாம் தெரியாது.
‘இனி தெரிஞ்சு வைச்சுக்கணும்’முடிவு செய்தவள்,எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க,அரசு ஏற்கனவே போன் செய்து சொன்னதால்,ஆட்டோவும் வந்துவிட,
“நான் சாயங்காலம் கொண்டு வந்து விடறேன்மா”என்றவன்,கண்ணசைவில் வேணியை ஆட்டோவில் ஏற சொல்ல,அவன் விழி பார்த்து,செயலாற்ற தொடங்கினாள்.
பிரவீன் பைக்கில் முன்னே செல்லவும்,இருவரும் ஆளுக்கொரு ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே திதி கொடுக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.
‘எதற்காக அழைத்து வந்தான்’என்பதே இங்கு வந்த பின்னர் தான் அவளுக்கு புரியவே செய்ய,அவனாக சொல்லாமல் தானாக எதையும் கேட்பதில்லை என்ற முடிவோடு,அவன் போக்கிற்கே செல்ல முடிவெடுத்தாள் அம்சவேணி.
தன்னிடமிருந்த துணிப்பையை வேணியிடம் கொடுத்துவிட்டு நண்பனுடன் திதி கொடுக்குமிடத்திற்கு வந்தான் அரசு.
ஆற்றுப்படுகையில் கண்ணனின் புகைப்படத்தை வைத்து திதி கொடுத்து காரியங்களை முடித்த அரசு,மொட்டையடித்திருந்தான்.பிரவீன் இதில் தலையிடவில்லை.
தன் வீட்டில் தானும் ‘முறை’செய்யலாமா என்று கேட்க,’செய்யவே கூடாது’என்று எச்சரித்து அனுப்பியிருந்ததால்,இவன் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வரும் வரையில் மண்டபத்தின் ஓரத்திலிருந்த மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் வேணி.
மொட்டைத்தலையுடன் வந்த அரசுவை முதலில் அவளுக்கு அடையாளமே தெரியவில்லை.
சற்று ஊன்றி பார்த்த பிறகு,தன் கணவன் தான் என்று புரிய,’என் அரசன் அழகன் தான்’கொஞ்சிக்கொண்டாள்.
‘எந்த இடத்தில வந்து என்ன செஞ்சிட்டு இருக்க’மனசாட்சி எச்சரிக்க,இன்னும் உற்றுப்பார்க்க தொடங்கிய கண்ணை வேறுபக்கம் திருப்பவே அவளுக்கு கடினமாயிருந்தது.
அவளைப் பொறுத்தவரை அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்துவிட்டது.அம்மாவும் ஆரம்பத்தில் பயங்கரமாய் கோபப்பட்டு,ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினாலும்,நான்கு நாட்கள் முன்பு வந்த சமயம் நன்றாகவே பேச,இவளுக்கு பெரும் நிம்மதி.
அழுகையின் சுவடும் இந்த சில தினங்களில் காணாமல் போயிருக்க,தனக்கு திருமணம் செய்து வைத்தவர் மறைந்துவிட்டார் என்ற வருத்தத்தை தவிர பெரிதாய் அவள் எதற்கும் கவலைப்படவில்லை.
புதுமணப்பெண்ணின் அடையாளமாய் கழுத்தில் தாலி.புத்தம் புதிய மஞ்சள் சுரிதார்.அம்மா சென்றமுறை வந்த போது வலுக்கட்டாயமாக போட்டுவிட்ட டாலர் வைத்த சின்ன தங்க சங்கிலி என்று எளிமையான அலங்காரத்திலும் அழகாகவே இருந்தாள்.
‘விஷயம்’இதுதான் என்று கூறி அரசு அழைத்திருந்தால்,இப்படி பரபரப்பாய் அலங்கரித்துக்கொண்டு வந்திருக்க மாட்டேனே’என்று பொருமிக்கொண்டிருந்தாள்.
‘எந்த காரியத்திற்கு எப்படி வந்திருக்கிறோம்’என்பதே மனதை உறுத்த,இப்போது புதிதாய் அரசுவை மனதில் திட்ட ஆரம்பித்திருந்தாள்.
“முன்கூட்டியே சொன்னா,வாய்ல இருக்க முத்தா உதிர்ந்து போயிரும்”வாய்விட்டே முணுமுணுக்க,பிரவீனுக்கு அரைகுறையாய் கேட்க,
“என்னமா தங்கச்சி,எதுவும் வேணுமா”பாசமாய் கேட்டு வைக்க,
“அதுண்ணா,அவர் தலைக்கு சந்தனம் தடவலையே! லேசா காதோரம்  ரத்தம் வேற வந்துட்டு இருக்கு”என்று வாய்க்கு வந்த உண்மையை சொல்லி வைக்க,அப்போது தான் அரசுவும் காதோரம் தொட்டுப் பார்த்தான்.லேசாய் ரத்தம் கசிந்திருந்தது.
‘குனிஞ்ச தலை நிமிரலை..எப்படி இதை பார்த்திருப்பா’தன் கையிலிருந்த ரத்தத்தையும்,அவளையும் மாற்றி மாற்றி பார்த்தவன்,மேற்கொண்டு யோசிக்க சோம்பேறித்தனப்பட்டு தோளைக்குளுக்கிக்கொண்டு கடைக்கு சென்றான். 
பிரவீன் இதையெல்லாம் கவனிக்காதவனாய்,இருவருக்குமிடையில் சமரசம் செய்யும் பொருட்டு,”பொருளாதாரம் சரியில்லாத நிலையில உன்னை கட்டிக்கிட்டு,உன்னை சந்தோஷமா வைச்சுக்க முடியாதோன்னு என் நண்பன் பயப்படறான் வேணி!! அவனும் படிச்சுக்கிட்டே முடிஞ்ச அளவுக்கு சம்பாதிக்கறான் தான்மா.இப்போ இருக்க விலைவாசிக்கு அதெல்லாம் பத்துறது இல்ல.
எனக்கு தெரிஞ்சு மச்சான் சோம்பிக்கிடந்தது என்னவோ இந்த பதினைஞ்சு நாளா தான்.ஏனோதானோன்னு அப்படியும் வேலை செஞ்சுட்டு தான் இருக்கான்.ஓய்வில்லாத வாழ்க்கைமா அவனுது.
சில நேரம் எனக்கே அவனைப் பார்த்தா பாவமா இருக்கும்.எப்படியாவது நேர்மையான வழில வாழ்க்கைல முன்னேறிடணும்னு,அவனும் முயற்சி பண்றான்.ஆனா கடவுள் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு தடங்கல் பண்ணிட்டே இருக்கான்..”பெருமூச்சுடன் நண்பனின் நிலையை எடுத்து சொல்ல,
“அவரும் இதையெல்லாம் எடுத்து சொல்லி தான் என்னை மறுபடியும் வேலைக்கு கொண்டு வந்து விட்டார்-ண்ணா.இப்போ ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவின்னு தான் மறுக்காம,நானும் வந்துட்டேன்.வேலை கிடைச்சதும் என்னை கூப்பிட்டுக்கறேன்னு சொல்லியிருக்கார்-ண்ணா.எனக்கு அவர்மேல நம்பிக்கையிருக்கு”எனவும் பிரவீனிற்கு கொஞ்சம் மனம் சமன்பட்டது.
ஏதோவொரு விதத்தில் இருவரும் பிணைப்பில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக,இனி பரிட்சையில் கவனம் செலுத்த வேண்டுமென்று முடிவு செய்துவிட்டான்.
இதுநாள் வரைக்குமே,’அவசரப்பட்டு இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டோமோ’என்று எண்ணி குழம்பிக்கொண்டிருந்தான்.அரசுவின் செயலும் கண்ணனின் மறைவும் அவனை இப்படி சிந்திக்க தூண்டியிருந்தது.இப்போது வேணியின் பேச்சிலிருந்த உறுதி,இவனுக்கு பெரும் நிம்மதி கொடுக்க,
“குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்மா.பத்திரமா இரு.ஆள் நடமாட்டம் இருக்க பகுதின்னாலும் கொஞ்சம் எச்சரிக்கையோட இரு.நான் இங்க எதிர்த்தாப்ல இருக்க கடைக்கு தான் போறேன்.கவனமா இரு”என்று திரும்ப திரும்ப எச்சரித்துவிட்டு போக,தன்னிடம் எதுவுமே சொல்லாமல் சென்ற கணவனை எண்ணி சிரித்துக்கொண்டாள்.
‘மாறும்.எல்லாம் ஒருநாள் மாறும்’-தீர்க்கமாய் நம்பினாள்.

Advertisement