Advertisement

8
கண்ணனின் இறப்பை பற்றி கேள்விப்பட்ட ஆச்சிக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.துக்க வீட்டிற்கு சென்று வந்தது தான்! கண்ணனின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.எரித்துவிட்டார்கள் என்று சொல்லவும், வீட்டிற்கு வந்து தலைமுழுகியவர் தான்! அப்படியே படுத்துக்கொண்டார்.
நேற்று ‘அரசு’வைப்பற்றி நம்பிக்கையாய் பேசிய பேச்சிற்கு எதிராய் நடப்பதெல்லாம் இருப்பது போல தோன்றியது.
‘இனி யாரிடம் போய் எப்படி விசாரிப்பது,என்னவென்று விசாரிப்பது’-தன்னுடைய இத்தனை வயதில் நீலாவின் வாழ்க்கை கெட்டுப்போய்விட்டது என்று கதறிய நாளைக்கு பிறகு,இன்று   தான் அதிக சோர்வாக உணர்ந்தார்.பேத்தியைப் பற்றி நினைத்தாலே அடிவயிறு கலங்குவதை அவரால் தடுக்க முடியவில்லை.அப்படியே சுருண்டு போய் படுத்துக்கொண்டார்.
அவரின் பேத்தியோ அதெல்லாம் உணராமல் கொஞ்சம் நிம்மதியாகவே வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கியிருந்தாள்.
நேற்று புதுவீட்டில் பால் காய்ச்சவில்லை.மூன்று நேரமும் ஹோட்டல் உணவு தான் என்பதால் அடுப்படி பக்கமே செல்லவில்லை.
நேற்றைய பொழுது கலக்கமாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல அரசுவுடன் இருப்பது அவளுக்கு இனம் புரியாத இன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்க,அதுவும் கணவனின் சிறுவயது வாழ்க்கையயை அவன் மூலமாக கேட்டு,அவனது வாழ்க்கையின் சில கொள்கைகளையெல்லாம் புரிந்த பின் ‘தன் தேர்வு சரி தான்’என்று முதல் முறை தயக்கமில்லாமல் ஒத்துக்கொண்டாள்.
அரசுவின் பேச்சு வார்த்தைகள் என்னவோ’ரூம் மேட்ஸ்’எப்படி ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து வாழ்வது என்பது போலத்தான் இருந்தது. பாவம் வேணி தான் அதை உணரவில்லை..மற்றபடி அரசுவிற்கு இயல்பாய் வேறெந்த ஆசைகளும் உதிக்கவில்லை என்பதே உண்மை.
நேற்றைய இரவை ஆளுக்கொரு அறையில் கழித்தாகிவிட்டது.
நேரமாகவே எழுந்து என்ன சாதிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் உறங்கிக்கொண்டிருந்த அரசு காலையில் வீட்டில் பாத்திரம் உருட்டும் சத்தத்தில் தான் விழித்தான்.
எழுந்தவுடன் ‘தேவி’தரிசனம் தான்.
‘அம்சவேணி அம்சமா தான் இருக்கா’மனதில் கவுன்ட்டர் கொடுத்தவன்,திருமணம் முடிந்து முழுதாய் கடந்த,இந்த ஒருநாளில் இப்போது தான் அவளை கொஞ்சம் கவனித்து பார்க்கவே செய்தான்.
அது கூட இந்த போனிற்கு பிடிக்கவில்லை.விடாமல் அடிக்க,அம்சவேணிக்கும் கேட்க,திரும்பியவள் கணவன் எழுந்துவிட்டதை உணர்ந்து பாலை ஆற்றிக்கொண்டு அவன் பின்னாடி போனாள்.
பிரவீன் தான் அழைத்திருந்தான்.
“டேய் அரசு..கண்ணன்-ண்ணா…கண்ணன்-ண்ணா”என்று தயக்கமாக இழுக்க,
“அண்ணனுக்கு என்னடா ஆச்சு”பதறிப்போய் கேட்டான்.
“அண்ணா தவறிட்டார்டா”
“என்னடா என்ன சொல்ற.எனக்கு தெளிவா கேட்கல..மறுபடி சொல்லு”என்று மீண்டும் கேட்டான்.
அவன் சொன்னது தெளிவாக கேட்டது தான்.மனமோ’தவறாக கேட்டிருக்கும்’என்றே மீண்டும் அப்படி கேட்க சொன்னது.
“அண்ணா தவறிட்டாராம்டா.காலைல ஆறு மணிக்கு தான் வீட்டுல இருக்கவங்களுக்கு விஷயம் தெரியுமாம்.ஏழு மணிக்கெல்லாம் கொண்டு போய் எரிச்சுட்டாங்களாம்டா”என்றதும் அவனது கைகள் நடுங்க ஆரம்பிக்க,தன்னுடைய இரண்டு கைகளாலும் போனை பிடித்துக்கொண்டான்.
“பிரவீன்,அண்ணனும் நீயும் கூட்டு சேர்ந்துக்கிட்டு தானே,இப்படி பொய் சொல்லி விளையாடறிங்க”நம்பிக்கையில்லாமல் தான் கேட்டான்.
எல்லாம் விளையாட்டாக இருக்கும் என்ற சின்ன நப்பாசையில் மீண்டும் மீண்டும்’புத்தி பேதலித்தவன்’போல கேட்க,பிரவீனிற்கு கோபம் வந்துவிட்டது.
“டேய் எருமை! எதுல எல்லாம் விளையாடுவாங்கன்னு புரியாதா உனக்கு! உண்மையத்தான் சொல்றேன்.நா இப்போ நேரா உன்னோட வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.நீ ரெடியா இரு.இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்.அதுக்குள்ள போய் தொலைச்சிடாத”கிட்டத்தட்ட தன் இயல்புக்கும் மீறி கத்திவிட்டு,அதே வேகத்துடன் பைக்கை எடுத்தான்.
அவனுக்கும் வேதனை இருக்கும் தானே.கல்லூரி விட்டால் நேராய் போய் நிற்பது ’கண்ணன்’ கடை தான்.இந்த மூன்று வருடங்களில் அவர் தனக்கு செய்த உதவிகளை நினைத்துப் பார்த்தவனுக்கு நெஞ்சம் கலங்கியது.
தனக்கே இப்படியிருக்கையில்..’பன்னிரெண்டு வருடத்திற்கும் மேலாக’உடனிருந்தவன் அரசு..கிட்டத்தட்ட கண்ணனின் வளர்ப்புப்பிள்ளை அரசு தான் என்ற அளவுக்கு ஒட்டுதலுடன் இருந்தவர்கள் எனும் போது,தன் நண்பனின் நிலை எப்படியிருக்கும் என்று அவனுக்கு புரியாமலில்லை.
கலக்கத்துடனையே அரசுவை பார்க்க வந்து கொண்டிருந்தான்.
பிரவீனிடம் பேசி முடித்த அரசு அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.அவனது பேச்சின் சாரம்சம் ஓரளவிற்கு புரிந்த வேணியோ பெரும் விரக்தி நிலைமையில் தான் இருந்தாள்.
டம்ளரை அருகே வைத்துவிட்டு அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள்.
கண்ணனும் அரசுவும் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்று நேற்று தான் கதை கதையாய் அரசு சொல்லியிருந்தான்.
‘என்னுடைய ராசியினால் தான் இப்படியாகிவிட்டதோ’என்றெல்லாம் எண்ணி கலங்கியவள்,
‘இவங்களும் அப்படி தான் நினைப்பாங்களோ’-அவனுக்கும் சேர்த்து தானே சிந்தித்து கலங்கினாள்.
இதையெல்லாம் அரசு உணரவேயில்லை..ஏன் இப்படியெல்லாம் நடந்தது என்பதிலையே சுழன்று கொண்டிருந்தான்.
அவன் திடகாத்திரமான ஆண் மகன் தான்.ஆனால் எதற்கும் கலங்காத கல் மனம் கொண்டவன் அல்ல.ஈர மனம் கொண்டவன்.அதனாலையே அவனது கண்களும் இப்போது கலங்க..ஒருக்கட்டத்தில் கையால் முகத்தை மூடி சிறுபிள்ளை போல தேம்பித்தேம்பி அழவே ஆரம்பித்துவிட்டான்.
தன்னிலையே நின்றுவிட்ட வேணி,அரசுவின் இச்செய்கையால் திகைத்து தான் போனாள்.
முதலில் சில வினாடிகள் அருகில் சென்று ஆறுதல்படுத்த வேண்டுமென்று கூட தோன்றவில்லை..தாலியே கட்டியிருந்தாலும்,அவன் அவளுக்கு இந்நொடி அந்நியனே..
 பின் எந்த அர்த்தத்தில் அல்லது பந்தத்தில் அவனை கட்டிக்கொண்டாள்..ஒருவேளை இயல்பான பெண்ணின் கூச்சத்தினால் தான் இப்போது அவனிடம் நெருங்க தயங்கி அல்லது பயந்து நிற்கிறாளோ? அவளன்றி வேறு யாரும் அறியார்.
அவனை விட்டு தள்ளி நின்று வேதனையுடன் வேடிக்கை பார்த்தது சில நொடிகள் தாம்.பின் முயன்று தைரியத்தை வரவழைத்து,”என்ன ஆச்சுங்க”தயங்கி அவனை தொட்டவளின் கையை பட்டென்று தட்டிவிட்டான் அரசு.அவ்வளவு தான்.அவ்வளவே தான்..வேணிக்கு மற்ற கவலைகள் பின்னோக்கிப்போக,அவனின் இந்த புறக்கணிப்பே பெரிதாகிவிட,மீண்டும் தன் டேமை திறந்துவிட்டாள்.
அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.கண்ணை அவசரமாய் துடைத்தவன்,தன்னுடைய பைக் சாவியை தேட,அப்போது தான்,இன்னும் பிரவீனிடம் தான் தன்னுடைய பைக் இருக்கிறது என்பதை உணர்ந்தான்.
மீண்டும் வீட்டுக்குள் வந்து உட்காரும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை.வாசல் படியிலையே அமர்ந்துவிட்டான்.பைக் சத்தம் கேட்டவுடனையே,விழுக்கென்று நிமிர்ந்தவன்  அருகில் வந்த பிரவீனை,’என்னடா நடந்துச்சு’ உலுக்கவே ஆரம்பித்துவிட்டான்.
பிரவீனிற்கு அரசுவை கட்டுக்குள் கொண்டு வருவதே பெரும்பாடாகிவிட்டது.
“அரசு..டேய் தமிழ்”கோபமாய் கத்தவும் தான் இயல்பு நிலைக்கே வந்தான்.
“எப்படிடா,நேத்து நல்லா தானே இருந்தார் மனுஷன்.அதுக்குள்ள எப்படிடா”
“எனக்கும் எதுவும் தெளிவா தெரியலை.என்னென்னவோ சொல்றாங்க.இப்போதைக்கு நாம போய் தலையை காட்டிட்டு வந்துடலாம்.அங்க போய் நீ வாய திறக்கவே கூடாது.போறோம்.நாலு நிமிஷம் நிற்கறோம்.அப்படியே வந்துடறோம்.என்ன புரியுதா”எனவும் ஒன்றும் புரியாமலே தலையாட்டிவிட்டு பைக்கை எடுக்க,பிரவீனும் அந்த சூழ்நிலையில் அம்சவேணியை மறந்துவிட,அவசரமாய் நண்பனுடன் பைக்கில் ஏறிக்கொண்டான்.
அரை மணி நேரப்பயணத்தில் அவரது வீடும் வந்துவிட,துக்க வீட்டிற்கு அறிகுறியாய் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருக்க,மறுபுறம் காலை உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.
அரசுவிற்கு தாங்கவேயில்லை.என்ன மனிதர்கள் இவர்கள்.உயிர் உடலை விட்டு பிரிந்த உடன் அவசரம் அவசரமாய் எரியூட்ட வேண்டுமென்று யார் சொன்னது? வெறும் உயிரில்லா உடலைக்கூட கண்ணில் காண முடியவில்லையே’துக்கம் தொண்டையை அடைக்க எதையும் வெளிப்படையாய் பேசிவிட முடியாது என்பதால்,அவனும் பிரவீனும்,ஒரு ஓரமாய் நின்றவர்கள்,மாலையிடப்பட்டிருந்த கண்ணனின் புகைப்படத்திற்கு வாங்கி வந்த மாலையை போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டனர்.
அப்போது தான் கடையில் வேலை செய்யும் சதானந்தன் எதிர்வர,”எப்படிண்ணே ஆச்சு”என்ற நண்பர்களை தள்ளிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தார்.அவரும் தனிக்கட்டை.
குளிக்காமல் வீட்டிற்குள் போகக் கூடாது என்பதால்,இருவரும் வெளியே அமர,சதானந்தானோ நேரடியாய் விஷயத்திற்கு வந்தார்.
“அண்ணாச்சியோட அண்ணன்,தங்கச்சிகளுக்குள்ள சின்ன பிரச்சனையாம் அரசு.அண்ணாச்சி அவரோட சொத்தையெல்லாம் வித்து கண்டபடி செலவு பண்றதா சொல்லி சண்டை போட்டுட்டு இருந்தானுவ.அதிலும் அவரோட ஆசைநாயகிகளுக்கு அள்ளிக்கொடுக்கறதா பேச்சு வேற..கொழுந்தியா மகனுக்கு வேற நிறைய சொத்து எழுதி வைச்சுட்டாராம்.நாலஞ்சு நாளைக்கு முன்னாடி கூட ஏதோ ஒரு நிலத்தை வித்திருக்கார் மனுஷன்.அதுல வந்த காசு என்னாச்சுன்னு ஒருத்தருக்கும் விளங்கலியாம்.
இப்படியே போனா எல்லாத்தையும் வித்துப்போடுவாரு.நமக்கு ஒண்ணும் இருக்காதுன்னு ராவோடு ராவா தூக்க மாத்திரைய கலந்து கொடுத்துட்டதா பேச்சு இருக்கு.உண்மையான்னு தெரியல.வெளில நெஞ்சு வலி வந்து இறந்துட்டதா சொல்லிக்கறாங்க.
இவங்க சமூகத்தில செத்த உடம்ப ரொம்ப நேரம் வச்சிருக்க மாட்டாங்களே! அவசர அவசரமா கொண்டு போய் எரிச்சுட்டதினால,எது உண்மை எது பொய்னு எடுத்து கேட்க யாராலையும் முடியல.
அவரு கொழுந்தியா மகனுக்கே இப்போதான் தகவல் சொன்னாங்கன்னா பார்த்துக்க..அவனுக்கும் வர முடியாதாம்.இடையில விட்டுட்டு வந்தா கோடிக்கணக்கா நஷ்ட ஈடு கட்டணுமாம்.எல்லாத்தையும் நீங்களே பாருங்கன்னு அவனும் பொட்டப்பிள்ளை மாதிரி அழுகறான்.இனி என்னத்த செய்ய? அதான் செய்ய வேண்டியவங்களுக்கு சிறப்பா அண்ணாச்சி செஞ்சுட்டு போயிட்டாரே”பெருமூச்சு அவரிடம்!!
நண்பர்கள் இருவரும் அதிர்ந்து போயிருந்தார்கள்.எது உண்மை எது பொய்யென்று பிரித்தறிய அவர்களால் முடியவில்லை.பிரித்தறிந்து பொருள் கண்டாலும் பலனில்லை.
போன உயிர் திரும்பி வரப்போவதும் இல்லை.
‘குற்றம்,நடந்தது என்ன’என்று விசாரிக்கப் போனால்,
“பணத்துக்காக தான் இப்படி பண்ணுறானுங்கப்பா.குழைக்கிற நாய்க்கு நாலு எலும்பை தூக்கி வீசுங்க”என்று தான் சொல்வார்கள்.
தேவையா இவர்களுக்கு?
அமைதியாய் இருவரும் கிளம்ப…அரசுவிற்கு ஒரே கவலை தான்..
ஊரெல்லாம் ‘கண்ணனின் வளர்ப்பு மகன்’அரசு’ தான் போலவே’ என்ற கிண்டல் உண்டு.அப்போதெல்லாம் தன்னையும் அறியாமல் அரசுவின் முகம் பிரகாசமடையும்..
ஆனால் இப்போதோ இருளடைந்தது.ஒரு வார்த்தை கூட அவர் இறந்ததை சொல்லியிருக்கவில்லை..எங்கேயோ இருந்த கொழுந்தியா மகனுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்கள்..ஆனால் எனக்கு??
என்ன தான் உறவாக உயிராக பழகினாலும்,தான் ரத்த சொந்தமில்லையே..உரிமை எடுத்து,’என்னடா பண்ணிங்க’சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியவில்லையே?
இயலாமையில் நெஞ்சு அடைக்க..பிரவீனை இறக்கிவிட்டு,தன் வீட்டிற்கு வந்தவன்,முதல் வேலையாய் வெளியிலிருந்த குளியலறையில் குளித்துவிட்டு,முன்னேற்பாடாய் வேணி கதவில் போட்டிருந்த உடைகளை அணிந்துகொண்டு,தலையை துவட்டிக்கொண்டே நுழைந்தவன்,
எதிர்ப்பட்ட வேணியிடம்,”நீ கொஞ்ச நாளைக்கு ஹாஸ்டல்-க்கே போயிடறியா”கேட்க,துக்கத்தில் வேணிக்கு தொண்டையை அடைக்க..கண்ணீருக்கு ஆணை போட்டவாறே..
“சரி”என்று சம்மதமாய் தலையசைத்தாள்.
வேறேதும் கேட்க அவளுக்கு தோன்றவில்லை.எதுவும் சொல்ல அவனுக்குமே தோன்றவில்லை..
வாழ்ந்து பார்த்தவர்களுக்கு வாழ்க்கை கசக்கலாம்.வாழவே ஆரம்பிக்காத நிலையில் வாழ்க்கையே கசந்தால் என்ன செய்ய முடியும்?

Advertisement