Advertisement

7
வேணியிடம்,தன்னிலையை பற்றி புரிய வைத்த அரசுவிற்கு,சிறிது நேரம்,தூங்கினால் தெம்பாக இருக்குமென்று தோன்றியது.நேற்றிலிருந்து நிறைய எதிர்பாரா தொடர் சம்பவங்களினால் சோர்ந்து போயிருந்தான்.எதிர்காலத்தை பற்றிய கவலையிலையே கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
பசியென்ற உணர்வு கூட அவனுக்கு இல்லை.
“நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.நீயும் தூங்கறதுன்னா தூங்கு”என்றதும் அவள் தலையாட்ட,அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
வீட்டை சுற்றிப்பார்க்கலாம் என்று எண்ணியவள்,ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள்.அந்த வீட்டை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இரண்டு படுக்கையறை,விசாலமான நடுக்கூடம்,சமையலறை,வெளியே குளியலறை,கழிவறை என்று தனித்தனியாக இருந்தது.
ஒரு சுற்று சுற்றியவளுக்கு கண்ணனை பற்றி நினைத்தால் கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது.ஒருவரை நம்பி ஐந்து வருடத்திற்கு ஒரு வீட்டை கொடுக்க வேண்டுமென்றால் எவ்வளவு நல்ல மனது இருக்க வேண்டும்.
ஏமாற்றிவிடுவான் என்ற எண்ணமே இல்லாமல் எல்லாம் கொடுத்திருக்கிறார் என்றால்,தன் கணவன் எந்த அளவுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்ற உண்மை உரைக்க,கொஞ்சம் சந்தோஷமாகவே உணர்ந்தாள். 
அதே எண்ணத்துடன் கொஞ்சம் தயங்கியே அவனிருந்த அறைக்குள் நுழைய,ஒரு போர்வையை தரையில் விரித்து அதில் தூங்கிக்கொண்டிருந்தான்.கட்டில் இருந்தது தான்.அடுத்தவரின் பொருளை உபயோகிப்பதே பாவம்.இதில் தேவைக்காக அன்றி சொகுசுக்காக உபயோகிப்பது அதைவிட பாவம் என்ற கொள்கையுடையவனாயிற்றே!!
இதை அவள் அறியவில்லை.
அவளுக்கும் இந்த பஞ்சு மெத்தை எல்லாம் பழக்கமில்லை.கீழே படுத்தால் தான் அவளுக்கு உறக்கமே வரும்.ஹாஸ்டலில் கூட கீழே ஒரு சின்ன பெட் போடப்பட்டு அதில் தான் எல்லாருமே உறங்குவார்கள் என்பதால் அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
தற்போதைய சூழலில் அவளுக்கு உறக்கமும் வரவில்லை.என்ன தான் தாலிகட்டிய கணவன் தான் என்றாலும் அவனுடன் ஒன்றாய் இருக்கவே பயப்பட்டாள்.மனதில் எஞ்சியிருக்கும் பயத்தின் விளைவே இது!!
அறையிலிருந்து முன் வைத்த காலை அப்படியே பின் வைத்து, வெளியே வந்தவள்,நினைவு வந்தவளாக திருமணப் பதிவு ரசீது வைக்கப்பட்டிருந்த பையை எடுத்து பார்க்க,அதில் சில ரூபாய் கட்டுகள் இருக்க,ரசீதை மட்டும் எடுத்துக்கொண்டு,பணப்பையை அப்படியே பத்திரமாய் அரசுவின் பக்கத்தில் போய் வைத்துவிட்டாள்.
திருமண ரசீதை,தன்னிடமிருந்த போனில் போட்டோ எடுத்தவள்,அதை நீலவேணியின் நம்பருக்கு அனுப்பிவிட்டு,அவருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு போனை வைத்துவிட்டாள்.கொஞ்சம் மனம் படபடப்பாக இருக்கவே..போனை விட்டு சற்று தூரம் தள்ளி வந்து நின்றுகொண்டாள்.
கண்ணில் மீண்டும் நீர் வர ஆரம்பித்துவிட்டது.நேற்று இரவும் நீலவேணியும்,ஆச்சியும் தூங்கிய பின்பு காலிலிருந்த கொலுசை கழட்டி அன்ன நடையிட்டு,வீட்டிலிருந்த சில துணிகளை,சான்றிதல்கள்,பாஸ்புக் போன்ற தேவையானவைகளை எடுத்துக்கொண்டு வெளிவருவதற்குள் எத்தனை முறை பயந்து பயந்து பிழைத்தாள் என்று சொல்ல முடியாது.
அன்று ஏனோ இருவருமே விழிக்கவில்லை என்பது வேணிக்கு சாதகமாக போய்விட,பிரவீனின் பாதுகாப்பில் வீட்டை விட்டு வந்துவிட்டாள்.
ஏதோ அவளின் நல்ல நேரம்.அரசுவும்,அவனுடன் இருப்பவர்களும் நல்லவர்களே!இதுவே கெட்டவர்களாய் இருந்தால்,இந்நேரம் வேணி சீரழிந்து போயிருப்பாள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எதையும் விசாரிக்காமல் ‘வெறும் பார்வை மட்டும் போதுமே’ என்று யாரும் ரிஸ்க் எடுத்துவிடாதீர்கள்.ஒரு சின்ன சறுக்கல் வாழ்க்கையையே அழித்துவிடும்.
இங்கே நீலவேணியின் வீட்டில்,வீடே நிசப்தமாய் இருந்தது.ஆச்சி மட்டும் அழுது கொண்டிருந்தார்.நீலாவின் கண்களில் மருந்துக்கு கூட அழுகையில்லை.இந்த சில மணி நேரங்களில் கண்ணீர் வற்றிப்போயிருந்தது என்பதே நிஜம்.கல் மனம் கொண்டவரின் நெஞ்சமும் மகளுக்காய் பதறிக்கொண்டிருந்தது.
‘அவள் தானே நீலாவின் வாழ்க்கையே..புரிந்துகொள்ளாமல் எப்படித்தான் செல்ல முடிந்ததோ’ என்பதே ஆச்சியின் கவலை. விடாமல் வேணியை திட்டிக்கொண்டிருந்தார்.
நீலாவால் பொறுக்க முடியவில்லை.
“ஏய் கிழவி,வாய மூடிட்டு சும்மா இருக்கியா? இல்லையா? நானே எம்மவ எங்க போய் என்ன கஷ்டப்படுறாளோன்னு மனசு வெந்து நொந்துட்டு இருக்கேன்.நீ அவ நல்லா இருக்க மாட்டான்னு சாபம் கொடுத்துட்டு இருக்க! அவ வீட்ட விட்டு வெளில போனது இங்க இருக்க யார் காதுக்கும் போவக் கூடாது.
எது நடந்தாலும் இனி அது அவ விதி.தலையெழுத்து போல நடக்கட்டும்.எவளும் கேட்டா நான் கூட்டிட்டு போயிட்டேன்னு சொல்லு.
நேத்து எவனும் அவ போறத பார்த்திருந்தா இந்நேரம் வந்து சொல்லியிருப்பாங்க.அதனால நீ வாய மூடிட்டு இரு..புரியுதா”ஆத்திரமாய் அவரை வைது அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் சமயத்தில் தான்,அவரது போனிற்கு அழைப்பு வந்து நிற்க,அம்சாவின் எண்ணை பார்த்ததும்,என்னவோ ஏதோ என்று உடனே அழைத்துவிட்டார்.வேணி தான் எடுக்கவில்லை.
போனை சைலெண்டில் போட்டுவிட்டு அதை பார்த்துக்கொண்டே அழுது கொண்டிருந்தாள்.
இரண்டு முறையும் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் பயந்து போனார் நீலா..அந்த நேரம் தான் மெசேஜ் வந்ததை எடுத்துப் பார்த்தவர் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி.
“என்னடி நீலா..என்ன வந்திருக்கு?”ஆச்சியும் பதறியபடி அருகில் வர,
விரக்தியுடன்,”பிடிச்சவனோட போறேன்னு எழுதி வைச்சிட்டு போனாளே!! அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம்.கல்யாண ரசீதை அனுப்பியிருக்கா”என்றவர் இன்னொரு மெசேஜ் வர,அதையும் பார்த்தார்.
அவரது பெண் மணக்கோலத்தில் இருந்தாள்.
வெறுமை சூழ்ந்தது அவரது மனதில்..!!
ஆச்சி தான் போட்டோவை பார்த்துவிட்டு,”அட இவன தான் கூட்டிட்டு போனாளா! நம்ம கண்ணன் கடைல வேலை செய்யறவன் தான்டி நீலா..”எனவும் அவருக்கு வெறுத்தே போயிற்று.
மகளுக்கு அரசு உத்தியோகத்தில் மாப்பிள்ளை பார்க்க,தன்னை போலவே எச்சில் இலை எடுப்பவனை மணம் முடித்திருக்கிறாள் என்று நினைத்தாலே,அவருக்கு நெஞ்சில் லேசாய் வலி எடுத்தது.நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
இவ்வளவு நேரம் அம்சாவை திட்டிக்கொண்டே இருந்த ஆச்சிக்கு இப்போது கொஞ்சம் சந்தோஷம் தான்.
நீலாவின் நிலையை உணராமலையே,”இந்த பையன் நல்ல பையன் தான்டி நீலா.வேல செஞ்சுக்கிட்டே படிச்சிக்கிட்டு இருக்கான்.ரொம்ப வருஷமா கண்ணனோட தான் இருக்கான்.ரொம்பவும் நல்ல பேரு தான் இவனுக்கு.உம்மவ நல்லவனா தான் பிடிச்சிருக்காடி நீலா”சந்தோஷமாய் சொல்ல,அதை ஏற்கும் நிலையில் எல்லாம் இல்லை.
“நீலா,நாம போய் இந்த கண்ணன் பையல விசாரிச்சோம்னா எங்க இருக்கான்னு தெரிஞ்சு போயிடும்.கூப்பிட்டு வந்து எல்லா முறையும் செஞ்சுடுவோம்டி.தனியா இருந்தா தவிச்சுப் போயிடுவா”என்று அடுக்கிக்கொண்டே போக,
“ஏய் கிழவி,இம்புட்டு நேரம் நீ அவளை எம்புட்டு ஏசிக்கிட்டு இருந்த,இப்போ உடனே கூட்டிக்கிட்டு வரலாம்னு சொல்ற..அதெல்லாம் முடியாது.பட்டு அழுந்தட்டும்.அப்போ தான் வாழ்க்கை என்னன்னு புரியும்.
ஒத்த வார்த்த,ஒத்த வார்த்த எங்கிட்ட சொல்லியிருந்தான்னா, நானே நாளையும் விசாரிச்சு நல்லபடியா நகை நட்டெல்லாம் போட்டு,சீரும் சிறப்புமா செஞ்சு வைச்சிருப்பேனே..இப்போ இப்படி அசிங்கம் பண்ணிட்டு போயிட்டாளே.அவ நல்லா…”என்றவர் சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டார்.
“இல்ல,எம்மவ நல்லாயிருக்கணும்.எங்க இருந்தாலும் நல்லாயிருக்கணும்.நல்லா தான் இருப்பா”திரும்ப திரும்ப அதையே சொன்னார்.
மகளின் நிலை தாய்க்கும் வலியை கொடுக்க,”எம்பேத்தி நல்லா தான்டி வாழ்வா.நீ இத்தன வருஷம் பட்ட பாட்டை அந்த ஆண்டவன் பார்த்துக்கிட்டு தான இருக்கான்.அதான் உம்மவ மனசுக்கு பிடிச்சவனையே கட்டி வச்சிருக்கான்.நீ கவலைப்படாத.நாமளே வேணா போய் பார்ப்போம்.அப்படி இல்லைன்னா இந்த கண்ணன் மூலமா விஷயத்தை தெரிஞ்சுக்குவோம்.நீ கவலைப்படாத ஆத்தா”என்றெல்லாம் மடியில் போட்டு ஆறுதல் சொன்னார்..எத்தனை வயதானாலும்,எப்படியெல்லாம் ஏசினாலும்,தாய் தாய் தான்.
மனம் கொஞ்சம் சமன்பட்டார் போலிருந்தது நீலவேணிக்கு.இத்தனை நேரமும் இந்த கலவரத்தை இரு பெண்மணிகளும் யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.ஏன் நீலவேணி கணவனிடமும் கூட சொல்லவில்லை.
‘ஒன்றுக்கு ரெண்டாய் ஊரில் பரப்பிவிட்டுடுவான் பாவி’மனதினுள் வைதுகொண்டார்.
தான் பார்த்த மாப்பிள்ளையின் அப்பா,அடிக்கடி தன் கணவருக்கு குடிக்க பணம் தருவதை உணர்ந்தேயிருந்தார்..உண்மை தெரிந்தால்,அதுவும் தானே தன் மகளுக்கு ஆதரவென்று தெரிந்தால்,பிரச்சனை பெரிதாகக் கூடும் என்று உணர்ந்தேயிருந்தார்.
மனதில் தெளிவு பிறக்க,”கெழவி..நான் ஊருக்கு போறேன்.கண்ணன் கிட்ட எல்லாத்தையும் காதும் காதும் வைச்ச மாதிரி பேசி,விஷயத்தை வாங்கிடு.நான் பார்த்த மாப்பிள்ளை தம்பி ரொம்ப நல்லவர்..சொன்னா புரிஞ்சுப்பார்..அவருக்குன்னு எவளாவது பொறந்திருப்பா.நம்ம வேணிக்கு தான் கொடுத்து வைக்கல”பெருமூச்சுவிட்டவர்,
“சம்பந்தி வீட்டுல தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க.நானும் வேற பொண்ணுக்கு சீரா சிலதை கொடுக்கறேன்னு வாக்கு கொடுத்திட்டேன்.நல்லவேளை எல்லாம் பேச்சு வார்த்தையில தான் இருந்துச்சு. 
அதனால பெருசா பிரச்சனை வராதுன்னு தான் நினைக்கறேன்.ரொம்ப முடியாத பட்சத்தில வேணி ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டான்னு உண்மையையே சொல்லிடறேன். அடுத்து எது நடந்தாலும் அது அவங்கவங்க தலைவிதி”என்றவருக்கு இப்போது மகளின் வாழ்க்கையே பெரிதாக பட்டது.
மாஜி மாப்பிள்ளையின் வீட்டில்,திருமண பேச்சு தடைபட்டு,அதை அவமானகரமாய் உணர்ந்து,தன் மகளை எதுவும் செய்துவிடுவார்களோ என்றும் பயந்தார்.சிறிது நாட்களுக்கு மகளை தொடர்புகொள்ளாதிருப்பது நல்லதென்றே அவருக்கு தோன்றியது.இடையில் என்ன நடந்தாலும் அது அவளது விதி..என்று எண்ணி சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும்,பெற்ற வயிறு கலங்கவே செய்தது.கலக்கத்துடனையே ஊர் போய் புறப்பட்டார்..
இதை தான் ‘பெத்த மனம் பித்து,பிள்ளை மனம் கல்லு’என்று சொன்னார்களோ!!!  
மகளை வழியனுப்பிய கையோடு கண்ணனை பார்க்க,ஆச்சி செல்ல,கடை அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து,வீட்டுக்கு சென்று போய் பார்க்க,அங்கு வீடும் பூட்டியிருந்தது..கடை திறந்தால் தகவல் வந்துவிடும் என்று அடிக்கொருமுறை அவரும் கடைக்கு போய் பார்க்க,இரவு வரை கடை திறக்கவில்லை.
பாட்டிக்கும் மனதில் கலக்கம் சூழ்ந்துகொள்ள..எப்படியோ அந்த இரவை கழித்து மறுநாள் விடிந்ததும் கடைப்பக்கம் செல்ல..அப்போதும் திறந்திருக்கவில்லை..
காலை எட்டு மணிக்கு செய்தி வந்தது.
‘கண்ணன் இறந்துவிட்டார்’என..!!
என்ன சொல்ல!! இது தான் வாழ்க்கை..நேற்று பார்த்தவர் இன்றில்லை.இன்று பார்ப்பவர் நாளை இருப்பாரா என்பது உறுதியுமில்லை.நிலையில்லாத வாழ்க்கையடா இந்த மனித வாழ்க்கை.
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

Advertisement