Advertisement

****
சில வருடங்களுக்கு பிறகு……
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.அதே போல் காலம் ஒருவரின் வாழ்க்கையை ஒரே சீராய் கொண்டு செல்வதுமில்லை.ஏமாற்றமே வாழ்வாக இருப்பதுமில்லை.வெற்றியே வாழ்வாக இருப்பதுமில்லை.சந்தோஷம்,துக்கம்,வெற்றி,தோல்வி,ஏமாற்றம்,
துரோகம் என்ற அனைத்துமே வாழ்வில் இடம்பெறத்தான் செய்கின்றன.
நிலையானதென்று இவ்வுலகில் எதுவுமேயில்லை.
அரசு-வேணியின் வாழ்க்கையும் இப்படித்தான் நகர்ந்தது.
இன்று மிகவும் சோகமான நாள் அரசுவிற்கு!!மூன்று வருடங்களுக்கு முன் கடந்து சென்ற நாளை அவனால் மறக்கவே முடியாது.இப்போது நினைத்தாலும் வலிக்கத்தான் செய்கிறது.
திருமணமான சில வருடங்களில் ஒருமுறை கூட தன் தாய் தந்தையை காண வேணியை அவன் அழைத்து செல்லவேயில்லை.பொருளாதார சிக்கல்கள் வந்த சமயத்திலும் அவர்களுக்கு பணம் அனுப்புவதும்,மளிகைக் கடைக்காரரின் மூலம் அவர்களின் நலம் அறிவதும்,அவ்வப்போது சொந்த பெற்றோரையே மறைவாய்,ஒரு ஓரமாய் நின்று பார்த்து செல்வதுமாக இருந்த சமயத்தில் வேணி தான் திடீரென்று அடம்பிடித்தாள்.
“அத்த,மாமாவ பார்த்துட்டு வரலாங்க.ஏனோ மனசு கெடந்து அடிச்சுக்குதுங்க”என்றவளோ ஒன்பது மாத சிசுவை தாங்கியிருந்தாள்.
திருமணமாகிவிட்ட நான்கு வருடங்களில் ஒருமுறை கூட மாமனார்,மாமியாரை பார்க்காதது அவளது மனதை உறுத்த,அதன் விளைவு தான், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாய் அவள் மனம் சொல்லிக்கொண்டேயிருக்க,விடாமல் நச்சரித்து கணவனை இழுத்துக்கொண்டு மாமனார் இருக்கும் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
மனைவி ஆசைப்பட்டதை கேட்கும் முன்னே செய்து பழக்கப்பட்டவனுக்கு,இப்போது அவள் கேட்டதை செய்யவே பெரும் தயக்கம் தான்.
ஆனால் அவன் மனசாட்சியுமே உறுத்த,வேறு வழியில்லாமல் தான் கூட்டிக்கொண்டே போனான்..அதுவும் தன்னுடைய சொந்தக் காரில்!!
மனைவி கர்ப்பமானது உறுதியான உடனேயே,மறுவிலைக்கு வந்த காரின் தரத்தை பரிசோதனை செய்து,எல்லாம் நன்றாக இருக்கவே வாங்கிவிட்டான்.லோன் போட்டு புதுக்காரையே வாங்கியிருக்கலாம் தான்.ஆனால் அதில் கொண்டு போய் மொத்த பணத்தையும் போட அவன் மனம் சம்மதிக்கவில்லை.
செக்அப் போகும் போது மட்டும் தான் காரை எடுப்பான்.மற்ற சமயங்களில் பொத்திப்பொத்தி பாதுகாத்து வைப்பதை வேணி கூட கிண்டலடித்திருக்கிறாள்..
அவனும் சிரிக்காமல்,”என்னைப் பொருத்தவரை எனக்கு கிடைச்சது,என்கிட்ட இருப்பது எல்லாமே பொக்கிஷம் தான்…உன்னைப் போல”என்று இடைசொறுகளையும் சாமர்த்தியமாய் செய்ய,அதற்கு மேல் அவள் ஏன் கிண்டல் செய்யப் போகிறாள்!!
அந்தக் காரிலையே இருவரும் சென்று வீட்டின் முன் இறங்க,அரசுவின் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.அவ்வப்போது எட்டிநின்று பார்த்துவிட்டு செல்லும் மகனை அவர் மட்டும் உணராதிருப்பாரா!!!
கணவனுக்காக மகனிடம் நின்று பேசுவதைக் கூட தவிர்த்து வந்திருந்தார்..இன்று காணவுமே அவருக்கு சந்தோஷம் பொறுக்கவில்லை.
“வாய்யா,உள்ள வாய்யா சாமி..ஆத்தால பார்க்க இவ்வளவு நாளாச்சாய்யா”முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டே அழைக்க,அரசுவிற்கும் அழுகை வந்தது தான்.கட்டுப்படுத்திக்கொண்டான்.
“அம்மா..இது வேணி”என்று அறிமுகப்படுத்தி வைக்க,
“தெரியும் ராசா.காசிப்பைய செல்லுல போட்டோ காட்டினான்.என் மருமவ அம்சவேணி,அம்சமா தான் இருக்காய்யா”மகனைப் போலவே தாயும் பேச,ஆச்சர்யப்பட்டுப் போனாள் வேணி.
கணவன் அடிக்கடி இப்படி சொல்லி தான் கொஞ்சுவான்.
அளவுகடந்த மகிழ்ச்சியில் அவளும் அவரை பார்த்து சிரிக்கவும்,”உள்ள வா ராசாத்தி.ஈருயிரா இருக்க.ரொம்ப நேரம் நிக்க வேணாம்”என்றவர் வீட்டின் முன் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு,உள்ளே தண்ணீர் எடுக்கப் போக,சத்தம் கேட்டு எழுந்து வந்த அரசுவின் அப்பா,
“எவன்டி வந்திருக்கான்”அவரின் ஒரே கத்தலில் சுற்றியுள்ளவர்கள் கூடி விட்டார்கள்.
“அரசு தான்யா வந்திருக்கான்”உள்ளப்பூரிப்பில் சொன்னது தான் தாமதம்.
வெளியில் வந்ததும் முதலில் பார்த்தது காரைத்தான்..
அவரது மனைவி கணவரின் பார்வையை உணர்ந்துகொண்டு,”நம்ம மவன் கார் தான்யா”மகிழ்ச்சியுடன் சொல்ல,காரையும்,மகனையும்,மருமகளையும் சுற்றி சுற்றி பார்த்தவர்,திடீரென்று பயங்கரமாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
அது சந்தோஷ சிரிப்பல்ல..அகோர சிரிப்பு!!
அரசுவிற்கும்,அவனது அம்மாவிற்கும் எங்கோ பொறி தட்ட,பழனியம்மாள் அவசரமாய் மகனை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்தார்.
வேணியோ அவரின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் விழித்து நின்று,அவரின் கால் ஊனத்தில் பரிதாப்பட்டு எழுந்து நின்றிருந்தாள்.
“பாவம்”என்ற நினைப்புடன் இருந்தவளுக்கு,வேறெதுவும் தோன்றவில்லை.
அரசுவிற்கும் எதுவோ புரியவர,அவசரமாய்”கார்ல போய் உட்கார் வேணி.நா வந்திடறேன்”என்று சொன்னது தான் தாமதம்..
மிகவும் மோசமாய் வார்த்தைகளை வெளிவிட்டார்.
“ஏன்டா மவனே,இவளைக் கட்டிக்கிட்டதுக்கு அப்புறமா தான் காசு பணம் உனக்கு நிறைய சேருதாமே..இதுவரைக்கும் எத்தனை பேர் கூட அனுப்பியிருக்க?”-கொஞ்சம் கூட கூசாமல் அவர் கேட்டதில்..
“அப்பா?”அவனது அதட்டலில் கொஞ்சம் கூட அசராமல்,
“ஐயோ,கடவளே”என்று காதைப் பொத்திக்கொண்ட மருமகளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தபடியே,
“இது யாரோட பிள்ளைன்னு உனக்கு ஞாபகமிருக்கா..இல்ல பத்தோட பதினொன்னு மறந்து போச்சா?”என்றவர்,ஏதோ நகைச்சுவை சொல்லிவிட்டது போல சிரித்தவர்,
“ஏன்யா இப்படி பேசித்தொலையற”மனைவியின் அழுகையும் அவரை இன்னும் வெறிகூட்ட,திரும்பி சென்றவர்,கொஞ்சம் கூட மனித தன்மையே இல்லாமல் அவரது ‘கால் ஸ்டிக்’ எடுத்து வேணியின் வயிற்றில் அடிக்க வர,பழனியம்மாள் தான் சுதாரித்து,மருமகளை காப்பாற்றி தான் வயிற்றில் அடிவாங்கினாலும்,லேசாய் வேணிக்கும் அடிபட்டுவிட்டது.
“ஐயோ..அம்மா”வேணியின் அலறலில்,வினாடிப்போழுதில் சுதாரித்த அரசு,,வேணி கீழே விழும் முன் தாங்கிப்பிடித்தவன் நொடி கூட தாமதம் செய்யாமல்,அவளை தூக்கிக்கொண்டு காருக்குள் செல்ல..சுற்றியிருந்த சிலர் இவனுக்கு உதவ முன் வந்து,ஒருவர் காரை எடுக்க,பெண்ணொருவர் வேணியின் தலைமாட்டில் அமர்ந்து தாங்கிக்கொள்ளவும்,அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான்.
கார் அசூர வேகத்தில் சென்றாலும்,பல்லைக் கடித்துக்கொண்டு வேதனையை சகித்துக்கொள்ளும் மனைவியை காணவே முடியவில்லை அவனால்!!
இதில் பனிக்குடம் வேறு உடைந்து அவளது ஆடை..இவனது ஆடையெல்லாம் ஈரமாகிவிட,..அந்தப் பெண் தான் ஆறுதல் சொன்னாள்.
“நம்ம குலசாமி கைவிடாது அரசு.நம்பிக்கையோட வாப்பா”என்றெல்லாம் ஆறுதல்படுத்த அவசரமாய் சாமிக்கு வேண்டுதல் வைத்தான்..
அருகிலிருந்த மருத்துவமனைக்கே செல்ல..மெல்ல வலியுடன் கணவனின் கைபிடித்த வேணி…”மாமா…பாப்பா வெளில வந்துட்டா மாமா”கண்ணீர்க்குரலில் சொல்ல..அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
பரிதாபமாய்,அருகிலிருந்த பெண்ணை பார்க்க,அதற்குள் மருத்துவமனை வந்துவிட்டதால்…ஆண்களோடு அவனும் மருத்துவரை அழைத்து செல்ல இறங்க,அந்தப் பெண்..காரின் மறுபுறம் வந்து..வெளியே வந்திருந்த பிள்ளையை முழுவதுமாய் வெளியே எடுத்த நேரத்தில்..நர்ஸ் வந்திருக்க..அவரின் உதவியோடு அடுத்து எல்லாமே துரிதமாய் நடந்துவிட்டது தான். 
அழகான பெண் குழந்தையை சுத்தம் செய்து அவன் கைகளில் கொடுக்க..தன் மகளின் பிஞ்சு ஸ்பரிசத்தில் பூரித்துப் போனான்.
அத்தனை வலியிலும்,மயக்கமடையாமல் ஒரு தைரியத்துடன் இருந்த வேணி,கணவனை பார்த்து,மகளையும் கைகளால் தொட்டு உணர்ந்த பின்னரே,சோர்வில் கண்ணயர்ந்தாள்..
நர்ஸ் குழந்தையை வாங்கிக்கொள்ளவும்,வெளியே வந்தவன்,தன்னுடன் வந்தவர்களுக்கு நன்றி சொல்லி,கைசெலவுக்கு பணமும் கொடுத்தான்.
தெய்வம் போல் உதவிய பெண்ணிடம்,நன்றி சொல்ல வர,அவரோ தயங்கிக்கொண்டு..”அரசு..நல்ல சேதி சொல்றப்போ இத சொல்லக் கூடாது தான்..எனக்கு இப்போ தான் போன் வந்துச்சு..உங்கப்பாரு,ஆத்தாவை கொன்னு போட்டாராம் அரசு”அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டே சொல்ல…
“என்னக்கா சொல்றீங்க”அதிர்ந்து தான் போனான்.
“ஆமாய்யா..சரக்கு பாட்டிலை உடைச்சு வயித்தில குத்திப் போட்டாராம்.உன்ற அம்மையும்,வலில அவர் கைல இருக்க குச்சியை பிடிச்சு இழுக்கவும்..அவரும் கீழ விழுந்து ரொம்ப முடியாம இருக்காராம்..இரத்தம் நிறைய போயிருக்கு.பொழைக்க வாய்ப்பில்லைன்னு சொல்லியிருக்காங்க”படபடவென்று சொல்ல..அங்கிருந்த சேரில் அமர்ந்தவன் தான்.
கலங்கிய கண்ணை துடைத்துக்கொண்டேயிருந்தான்.
இப்படியொரு முடிவுகிட்ட தான் அவசர அவசரமாய் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தேனா!-கலங்கியவன்,சில நிமிடங்களிலையே தன்னை திடப்படுத்திக்கொண்டான்.
“அக்கா,எனக்காக இன்னும் கொஞ்ச நேரம் வேணிய பார்த்துக்க முடியுமா? நான் எங்க அத்தைய வர சொல்லியிருக்கேன்.இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”-முன்பே தெரிந்தவர் என்பதால் நம்பிக்கையோடு உதவி கேட்கவும்,
“நான் இருக்கேன் தம்பி.நீ போய் காரியத்த முடிச்சிட்டு வா”எனவும் நர்சிடம் பேசிவிட்டு,மருத்துவரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு விரைந்தான்.
வீட்டின் முன் போலிஸ் ஜீப் நின்றிருந்தது..
பழனியம்மாளின் உடல் வெள்ளைத்துணியால் மூடப்பட்டு,ஆம்புலன்சில் எடுத்து செல்ல,தானும் உடன் சென்றவன்,திரும்பி வரும்போது..போஸ்ட்மார்ட்டம் செய்யப்பதட தன் பெற்றோர் இருவரின் உயிரில்லா உடலுடன் தான் வந்தான்…
தகப்பனும் உயிர்விட்டிருந்தார்…இதற்கா இத்தனை ஆட்டம்..!!என்ன சொல்ல!!
நேரடியாக சுடுகாட்டிற்கே சென்று,இருவரையும் எரியூட்டிவிட்டு ,சொந்தபந்தங்களின் ஆறுதல்களை எல்லாம் அமைதியாய் கேட்டுக்கொண்டவனின் காதுபடவே சிலர்,”ரெண்டு உயிரை கோரமா பறிச்சிட்டு,இவனுக்கு பிள்ளை பிறந்திருக்குய்யா.இனி என்ன நடக்குமா”என்று சம்மந்தமேயில்லாத அந்த பிஞ்சின் மீதும் பழி போட்டார்கள்.
அத்தனையும் காதுகொடுத்து கேட்டுவிட்டு,அவர்களின் பேச்சுக்களையும் சேர்த்து தலைமுழுகிவிட்டு மருத்துவமனைக்கு வந்தான்.
நீலவேணியும் மருமகனை எதிர்கொண்டவர்,”இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்க சொல்லியிருக்காங்க தம்பி”விபரம் சொன்னவர்,தயங்கியபடியே,”வெளில நிக்கற பொண்ணு ஏதேதோ சொன்னாப்டி”கேட்கவும்,
“ரெண்டு பேரும் ஒண்ணா போய் சேர்ந்துட்டாங்க”என்றவனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை.
முன்பிருந்த நீலவேணி என்றால் மற்றவற்றையெல்லாம் புறந்தள்ளி,,”என் மகளை வயிற்றில் அடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாயா”என்று கேள்விகேட்டிருப்பார்.
ஆனால் இப்போது அப்படியில்லை.சென்ற வருடம் நேர்ந்த தாயின் மரணமும்,கணவனை துரத்திவிட்டு,தனியாய்..தெம்பாய் மகளுக்காகவே வாழும் வாழ்க்கையும்  அவரது வாயை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதனாலையே மருமகனுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு மகளின் அருகிலையே அமர்ந்துவிட்டார்.
அவருக்கு பேத்தியின் பூ முகத்தை பார்த்தே இரவெல்லாம் போனது.மகளிடம் கூட அவ்வளவாய் பேசவில்லை.. ஒவ்வொருமுறையும் பேத்தியை பார்க்க பார்க்க, மனம் ஆனந்தம் அடையும் விந்தை புரியாமல் பார்த்துக்கொண்டேயிருந்தார்..அவருக்கு மட்டும் இப்படியல்ல..அரசுவிற்கும்..வேணிக்கும் கூட அப்படியொரு ஜாலத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவர்களது மகள்..
சிப்பி இமை மூடியிருக்கும் அழகே அழகு தான்..
கடந்து போன அந்த ஒருநாள் சோகத்தையும்,அழகுப்புதையலையும் ஒன்றாய் கொடுத்துவிட்டு சென்றுவிட..வேணிக்கு நான்காம் நாள் தான் விஷயமே சொல்லப்பட்டது.
“நா நெனைச்ச மாதிரியே நடந்துடுச்சே”-என்று அவள் சிறிது நேரம் அழ,பதிலுக்கு மகளும் அழ..பிறகெங்கு இவர்களுக்கு அந்த சோகத்தை நினைத்து வருந்த நேரமிருக்கும்..
அவர்களது மகள் சோகத்தையும் கடக்க வைத்துவிட்டாள்.
***** நினைவிலிருந்து வெளியே வந்த அரசு,தன்னருகே புலம்பிக் கொண்டிருந்த நண்பனை எப்படி வீடுகொண்டு போய் சேர்ப்பதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அவனது புலம்பல்களையும் தாங்க முடியவில்லை.
“டேய் மாப்ள..என்னால உன்னோட கஷ்டமான நேரத்துல கூட இருக்க முடியலையேடா.எல்லாம் எங்கப்பனால!! அவர் மட்டும்’ எச்சியில எடுக்கறதுக்கா எம்பிஏ படிச்ச’-ன்னு கேட்காம இருந்திருந்தா,நானும் உன்னோட பிசினஸ் பார்ட்னராவே இருந்திருப்பேன்டா.இப்போப் பாரு,எவனோ ஒருத்தன் கம்பெனி வளர்ச்சிக்காக நா பாடுபட வேண்டியிருக்கு”
நாலு பெக் உள்ளே போனாலும்,வார்த்தையில் அப்படியொரு தெளிவு.
நண்பனுடன் சேர்ந்து கல்லூரியில் கேண்டின் நடத்த ஆரம்பித்து முதல் இரண்டு மாதங்கள் தான் உடனிருந்தான்.அதற்கு மேல் அந்த வேலையை செய்ய அவனது அப்பா சம்மதிக்கவில்லை.
பையன் நாகரீகமாய் ‘கோட்’..’டை’யெல்லாம் கட்டி வலம் வர வேண்டுமென்று விரும்பினார்.அவரது கட்டாயத்தின் பேரில்..அரசுவிடம் விஷயத்தை சொல்ல,அவனே ரஞ்சிதா வேலை பார்த்துக்கொண்டிருந்த மில்லில்,அசிஸ்டன்ட் மேனேஜர் பொறுப்பு வாங்கிக் கொடுக்க,இப்போது மேனேஜர் ஆகிவிட்டான்.நல்ல சம்பளமும் கைக்கு கிடைக்க,அவனது குடும்பமே சந்தோஷப்பட்டது.
அங்கு வேலைக்கு சென்றதால் அவனுக்கு கிடைத்த ஒரேயொரு பெரிய நன்மை,காதல் பயிரை அதிகமாய் வளர்த்தது தான்..ஒரு வருடம் முழுதாய்,தினமும் ரஞ்சியை சைட் அடித்துக்கொண்டே வேலை பார்த்தவன்,அவள் காண்ட்ராக்ட் முடிந்து வெளியே வந்ததும்,பெற்றோரின் சம்மதத்தில் திருமணம் செய்துகொண்டான்..அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்து ஆறு மாதமாகிவிட்டது.
மனைவியை பிரசவத்திற்கு கூட எங்கும் அனுப்பாமல்,தானே கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டவன்,மனைவியை பற்றியும் புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பிக்க,தாங்க முடியவில்லை அரசுவிற்கு!!
“முடியல விட்றா.என்னோட சோகக்கதையை விட நீ பெருசா சொல்லிக்கிட்டுப் போற”-அரசு கெஞ்சிய போதும் விடவில்லை.
“என் பொண்டாட்டி இருக்காளே..அவ ஒரு ராட்சசிடா..இன்னைக்கு என் தங்கச்சி மவளுக்கு பிறந்தநாள்னு சந்தோஷத்துல ஒரே ஒரு பெக் அடிச்சிட்டு ரூம்-க்கு போனேன்டா!!போடா வெளியன்னு துரத்தி விட்டா..அதான் இன்னும் மூணு ரவுண்டு சேர்த்து குடிச்சு,என்னோட சோகத்தை தணிச்சுக்கிட்டு இருக்கேன்”என்றெல்லாம் உளறியவன்..
“இனியாக்குட்டி தூங்கிடுச்சாடா..நா ஒரேயொரு தடவை பார்த்துட்டு வரட்டுமா”என்று தடுமாறி எழுந்தவனை,கெஸ்ட் ரூம்-க்குள் வைத்து அடைத்துவிட்டு வெளியே வந்தான்..
இன்று அவர்களது செல்லப் புதல்வி இனியாவின் பிறந்தநாளையொட்டி தான் பிரவீன் தன் குடும்பத்துடன் அரசுவின் வீட்டிற்கு வந்திருக்க.வந்த இடத்தில் குடித்துவிட்டு அசிங்கம் செய்தால்,எந்த மனைவிக்கு தான் பிடிக்கும்..நாளை அவனுக்கு அடி உறுதி!!!!
ரஞ்சிதா இருந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற அரசு,”பாப்பாவை தூக்கறேன்-ம்மா..பிரவீன் தூங்கிட்டான்.நீயும் நிம்மதியா தூங்கு”என்றவன் பக்கத்திலையே இருந்த மனைவியை கண்டுகொள்ளவில்லை..
மனைவி இல்லாமல் கூட உறக்கம் வரும் அவனிற்கு..!!ஆனால் மகள் இல்லாமல் உறக்கமே வராது..
“அண்ணே உங்க பொண்டாட்டி இங்க தான் இருக்கா..!!உங்க கண்ணுக்கு தெரியலையா..”வேண்டுமென்றே கோர்த்துவிட..
கொஞ்சமும் அசராமல்,”பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறீங்க.எல்லா கதையும் நிம்மதியா பேசிட்டு தூங்குங்க”என்றுவிட்டு செல்ல,
“நான் தான் சொன்னேன்ல..என் வீட்டுக்காரு ரொம்ப நல்லவர்னு…!!”கடுப்பாய் வேணி சொல்வது அரசுவிற்கு கேட்டது தான்..ஆனால் காது கேளாதவன் போல் சென்றுவிட்டான்.. 
“என்னடி ரெண்டு பேருக்கும் டிஷ்யூம்..டிஷ்யூமா”-இனியா பேசுவது போன்று ரஞ்சியும் பேசிக்காட்ட,சிரித்தவள்,
“அதெல்லாம் இல்லப்பா.இன்னைக்கு அத்தை மாமா நினைவு நாள் இல்லையா..அதான் சோகமா இருக்கார்..இனியாவை நெஞ்சு மேல போட்டுப் படுத்தா..சோகமெல்லாம் பறந்து போயிடுமாம்..ம்ம்ம்”தன் பெண்ணிடமே பொறாமைப்பட்டு பெருமூச்சுவிட,
“அதெல்லாம் இருக்கது தான்! கண்டுக்காத..நாம சொந்தமா பொட்டிக் வைக்கலாம்னு சொன்னேனே.அண்ணன்கிட்ட கேட்டியா”
“அவர் என்னோட விருப்பம்னு சொல்லிட்டார் ரஞ்சி”
“அப்போ சீக்கிரம் நாம வேலையை ஆரம்பிச்சிடலாம்.கதைல வர்ற மாதிரி,நாமளும் பெரிய ஆளாகி அவார்ட் எல்லாம் வாங்கறோம்”எனவும்,
“அதென்னவோ சில நேரம் கதைல வர்றது நிஜத்தில நடக்கவும் செய்யுது ரஞ்சி.அதுவும் உன் விஷயத்தில அப்படியே நடந்துச்சு பாரேன்”எனவும் வெட்கம் வந்துவிட்டது ரஞ்சிக்கு!!
“பார்ற வெட்கத்த!”தோழியை கலாய்த்தவள்,
“அதுவும் மேனஜர் ஆனவுடனே அண்ணன் உன்கிட்ட ரொமான்ஸ் பண்ணாராமே..ப்ச்ச்..சீன்ல நா இல்லாம போயிட்டனே”வருத்தப்படுவது போல நடிக்க,
“போதும்..ரொம்ப ஓட்டாதடி..இன்னும் ஒரு வாரத்தில பொட்டிக் நடத்தற இடத்துக்கு அட்வான்ஸ் போட்டுட்டு வந்துடலாம்.அண்ணாகிட்ட சொல்லிடு”என்றவள் மேற்கொண்டு பேசாமல் படுத்துவிட்டாள்.இல்லையென்றால் பழைய காதல்கதையை எல்லாம் சொல்லி கிண்டலடிப்பாளே..!!
தோழியின் பின்வாங்களில் சத்தமாய் சிரித்தவள்,தூங்கிக் கொண்டிருந்த மாதவ் கண்ணாவை ஒருமுறை பார்த்து,நெற்றில் முத்தமிட்டுவிட்டு தனதறைக்கு வந்தாள்.
நெஞ்சில் குழந்தையை போட்டு தட்டிக்கொடுத்துக்கொண்டு படுத்திருந்த கணவனின் அருகில் சென்றவள்,”இன்னும் தூங்கலையா மாமா? பழசையே நினைச்சுக்கிட்டு இருந்தா,எப்படிங்க..?”-கவலைப்பட்டவளை..
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.நீ தூங்கு.பாப்பா காலையில நேரத்துலையே முழிச்சிடுவா..உனக்கு தான் சிரமம்..சீக்கிரம் தூங்கு”என்று படுத்த,
“ஆமா,எப்போ பாரு..பொண்ணு..பொண்ணு..பொண்ணுன்னுட்டே இருங்க”என்றவளும் அன்றைய அலைச்சலில் உறங்கிவிட,சிணுங்கிய மகளை தட்டிக்கொடுத்தபடியே,தன் வாழ்வின் நடந்த சம்பவங்களைஎல்லாம் நினைத்துப் பார்த்தான்.
வாழ்வில் நடக்கும் எல்லா செயலுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்தது. எல்லாமே தொடர்வினையாய் நடப்பதை உணர்ந்தான்..வாழ்க்கையே தொடர்கதை தானே..அதற்கு இதுதான் முற்றுப்புள்ளி என்று சொல்ல முடியாதே..
ஒருவரின் மரணம் கூட முடிவென்று சொல்ல முடியாது.அந்த மரணமுமே இன்னொருவரின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கி..அதுவும் ஓர் தொடர்கதையாய் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்..இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியே இல்லை போலவே..என்று என்னென்னவோ எண்ணியவன்…மாமியார் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதால்..கூடுதலாக சமையல் மேற்பார்வை வேலையையும் தானே செய்ய வேண்டும் என்ற நினைவு வர,உறங்க முயற்சி செய்தான்..
ஆனாலும் உறங்க முடியவில்லை..
‘கண்ணன் ரெஸ்டாரன்ட்’- புதிதாய் ஆரம்பிக்கப் போகும் ஹோட்டலில் என்னென்ன செய்யலாம் என்ற எண்ணம் திசைமாற..ஒருக்கட்டத்தில் தூங்குவது அவசியமென்று உணர்ந்து..மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு குழந்தையாய் உறங்கிப்போனான்.
கணவனின் தொடுதலில் விழித்தவள்,தன் கையைப்பிடித்தபடி தூங்குவது கணவனின் தினப்படி வாடிக்கை என்பதால்,அவளும் அலட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு அவனை பார்த்தாள்..
தாங்கள் இருவரும் பார்த்த முதல் நாளை நினைத்து சிரித்துக் கொண்டாள்..அவனது பார்வைக்கு அப்படியொரு சக்தி..அந்த பார்வை காதல் பார்வையோ..இல்லை பெண்ணை ரசிக்கும் உல்லாசப் பார்வையோ..கண்ணால் ஆசையை கடத்தியது மெய்யே!! இன்று வரையிலும் பிரத்யேகமாய் தன்னை பார்க்கும் அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள்….
இரவென்றும் பாராமல் மெல்லிய ஒலியில் அவளுக்கு பிடித்த பாட்டை ஹம் செய்து கொண்டே இருக்க,
 
“ம்மா..தூங்கு..தூங்கு”என்ற அதட்டலில் தான் அடங்கினாள்.
“என்னோட அம்மா மாதிரியே என்னை அதட்டறது”சத்தமில்லாமல் செல்லமாய் மகளை திட்டினாள்..சத்தமாய் திட்டினால் முழித்துக்கொண்டு,அப்பாவை எழுப்பி,அம்மாவை திட்டு வாங்க வைத்துவிடுவாளே..!!
மகளதிகாரம் தான் இங்கேயும்..!!!     
நெஞ்சம் நிறைந்த நேசமும்,நியாயமான ஆசையும்,நேர்மையான வழியும்,யாரையும் முன்னேற்றப்பதைக்கு அழைத்து செல்லும்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
எங்கோ ஏதோவொரு வாய்ப்பு உங்களுக்காக காத்துக்கிடக்கும்…!!!

Advertisement