Advertisement

21
இன்று அதிகாலையிலே பூஜை என்பதால்,அனைவரும் கல்லூரிக்கு நேரத்திலையே வந்துவிட்டனர்.நேரத்தில் பூஜை முடித்துவிட்டு,காலை எட்டு மணியிலிருந்தே கேண்டினை நடத்த திட்டமிட்டுவிட்டார்கள்.
பூஜை முடியவும்,கல்லூரி முதல்வர் ராஜா,”நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா வருவீங்க-ப்பா.தன்னம்பிக்கையும் உழைப்பும் தான் மூலதனம்.இது ஆரம்பம் மட்டும் தான்.இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.என்னால முடிஞ்ச சப்போர்ட் எப்பவும் நான் கொடுப்பேன்”என்றார்.
“ரொம்ப நன்றி சார்.முதல் சாப்பாடு உங்களுக்கு தான்..வாங்க”என்று பரிமாறப் போக,
“இருப்பா..பணம் கட்டிட்டு வர்றேன்”என்று தானே எழுந்து சென்றார்.
அரசுவும்,பிரவீனும் எவ்வளவு கெஞ்சியும் அவர் மசியவில்லை..பில் போடும் செக்ஷனில் அமர்ந்திருந்தது வேணியே தான்..சம்பளத்திற்கு ஆள் போடும் அளவிற்கு வரவில்லையே..அம்மாவிடம் திட்டுவாங்கி,டேலி வகுப்பு போனதால்,கணினி பற்றிய அடிப்படை அறிவு அவளுக்கு இருந்தது.
அரசுவும் சாப்ட்வேர்-ஐ எப்படி கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்க…முதலில் பணத்தை வாங்கிக் கொண்டாள்..நீலவேணிக்கு அதில் பெருமை..பெண் தான் தொழிலை தொடங்கி வைத்தாள் என்று ஊரெல்லாம் பெருமையாக பேச திட்டமிட்டிருந்தார்.
மகளின் திருமணத்தை எப்படி மறைத்து வைத்திருந்தும்,ஆரம்பத்திலையே கசிந்துவிட்டது..பலரின் ஏளனப்பார்வை தாங்கியவர்,மகளிடம் இன்னும் அதுபற்றி மூச்சுவிடவில்லை.
“நீ நல்லா வாழ்ந்து காட்டணும்டி வேணி”என்று மட்டும் அடிக்கடி சொல்வார்.அவளும் தலையாட்டிக் கொள்வாள்.
மகளுக்கு பணம் கொடுத்து உதவிய கையோடு,சமையலுக்கு உதவியாய் வந்துவிட்டார்.மாத சம்பளத்திற்கு தான்!!! 
அவரது ஸ்பெஷல் உப்புமாவையே கல்லூரி முதல்வர் வாங்கியிருக்க,திக் திக்கென்றது அவருக்கு!!
அரசுவுக்கும் தான்..எவ்வளவோ சுவையான உணவிருக்க,உப்புமாவை ராஜா வாங்கவும்,”கொஞ்சம் கேசரி வைக்கட்டுமா சார்”என்று கேட்டுப் பார்த்தான்.
“சுகர் பேஷன்ட்-ப்பா.உப்புமாவே அமிர்தமா இருக்கு”என்று அவர் சாப்பிட,நீலவேணிக்கோ மிகவும் சந்தோஷம்..
எப்பவோ,இப்டி உப்புமா கடைய வைச்சு மரியாதையான பொழப்பு பொழைச்சிருக்கலாம்..ஆரம்ப காலத்தில தைரியம் இல்லாம,மிரட்டலுக்கு அடிபணிஞ்சு,மோசம் போனது தான் மிச்சம்..
அந்த ஊரைவிட்டு,புருஷனை விட்டு,பத்து வயசுப்பிள்ளையோட ஓடி வந்த பின்னாடி தானே,நிம்மதியா இருந்துச்சு..எப்படியோ திரும்பவும் வந்து சேர்ந்துட்டான் குடிகார நாய்…இப்பவும் அவனை துரத்திவிட்டு தானே மக வீட்டுப்பக்கம் ஓடி வந்திருக்கேன்…தேடித்தேடி அப்படியே செத்து ஒழியட்டும் மூதேவி..!!-கணவனை திட்டிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்தவர்,
‘நல்ல நாள் அதுவுமா,அந்த ஆளை எதுக்கு நினைச்சுக்கிட்டு!’சேலையை உதறிக்கொண்டவர்,பார்வையும் கவனத்தையும் கேண்ட்டின் அமைப்பில் வைத்தார்.
கண்ணன் கடையில் வேலை பார்த்த ஐந்து பேருமே இங்கிருந்தனர்.அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்..
என்னவோ தாங்களே சொந்தமாய் கடையை திறந்துவிட்டது போல பூரித்து தான் கிடந்தார்கள்.வேலை எங்கே வேண்டுமானாலும் கிடைக்கும்.சம்பளமும் அதிகமாய் கிடைக்கும்.மரியாதை கிடைக்க வேண்டுமல்லவா!!!
“அண்ணா,அக்கா”-மரியாதையான விளிப்பு கொடுக்கும் சந்தோஷமே தனி தான்..
இவர்களுக்கு சமைப்பது தான் வேலை என்பதால்,இனி இங்கிருக்க தேவையில்லை..சமையல் வேலை எல்லாம் அரசுவின் வீட்டின் பின்புறமே நடக்கிறது.அங்கிருந்து நேரத்திற்கு உணவை ஏற்றிக்கொண்டு வரும் பொறுப்பு பிரவீனுடையது.
கேண்டினில் பில்லை கொடுத்தால்,உணவை பரிமாறி எடுத்துக்கொடுப்பதற்கு அரசுவோடு,இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்.வேணியோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் களம் இறங்கியிருந்தார்கள்…
ராஜா சுவைத்து உண்டவர்,”எல்லா டிஷ்-உம் உணவு தரக்கட்டுப்பாடு அமைப்போட விதிகளுக்கு உட்பட்டதா பார்த்துக்க அரசு.உடலுக்கு கேடு தர்ற பொருளை விற்க கூடாதுன்னு செக்ரட்டரி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார்.எல்லாத்தையும் சரியா பார்த்து நடத்துங்க”எனவும்,
“நிச்சயமா சார்”என்றவன்,பிரவீனுக்கு கண் காட்ட,
“சார்..உள்ள வாங்க”என்று அழைத்துப் போனான்..
“என்னப்பா..பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ரொம்ப அழகா செட் பண்ணியிருக்கீங்க”என்றவர் ஆறு பேர் மட்டும் அமரக் கூடிய அந்த தனி கேபினை ஆர்வமாக பார்த்தார்..இதைப்பற்றி யாருமே சொல்லியிருக்கவில்லை.
“இது உங்களுக்கான ஸ்பெஷல் ரூம் சார்..ஸ்டாப்’க்கு எல்லாம் அந்த கேபின்.ஸ்டுடென்ட்ஸ் மட்டும் எங்க கண்பார்வைல உட்கார்ந்திருப்பாங்க..அவங்களுக்கு மட்டும் நோ ப்ரைவசி”எனவும் அவனை தட்டிக் கொடுத்துவிட்டு தன்னுடைய அறையிருக்கும் ‘ஏ’ பிளாக் நோக்கி நடந்தார்.
நண்பனின் ஆசையை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்..
இனி தன் கனவில்..’நீயும் அவனை கைவிட்டுட்டியே ராசு’என்று கண்ணன் சொல்ல மாட்டான் என்று சந்தோஷப்பட்டார்..ஆரம்ப காலத்தில் அவருமே கண்ணனுடன் அரசுவை பற்றி பேசியதை மறந்து தான் விட்டிருந்தார்..
ஆனால் அவரது உள்ளுணர்வா,இல்லை அவர் மனைவி நம்புவது போல கண்ணனின் ஆத்மாவா, எதுவோ ஒன்று,அடிக்கடி கனவில் இந்த விஷயத்தை பற்றி சொல்லிக்கொண்டேயிருக்க,அதற்கு பிறகு தான் அரசுவை அழைத்து பேசிவிட வேண்டும் என்று நினைத்தார்..
எது எப்படியோ நண்பர்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள்..அது போதும் எனக்கு!!-சந்தோஷத்துடன் சென்றார்..
எட்டு மணி தொடங்கியதில் இருந்து அவர்களுக்கு வேலை ஆரம்பித்துவிட்டது…பொதுவாக அவர்கள் படிக்கும் காலத்தில் காலை நேரத்தில் அவ்வளவாய் கூட்டம் இருக்காது..
ஆனால் இன்று உணவை ருசி பார்ப்பதற்கென்றே சிலர் வர,சிலர் ‘மேற்கத்திய உணவு இல்லையே!’என்று திரும்பவும் செய்தனர்..
ஒன்பதரைக்கெல்லாம் அந்த இடமே காலியாக இருக்க…வேணி அரசுவிடம்,”நீங்க சொன்னது சரியாத்தான் இருக்குங்க..ஒருத்தரைக் கூட காணோமே..ப்ரீயா வேலை பார்க்கலாம் போல”ஆச்சர்யப்பட்டுக்கொண்டாள்.
“பேரெண்ட்ஸ் மீட்டிங் இருக்கற நாள் மட்டும் கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும் வேணி.மத்த நாளெல்லாம் அந்தந்த நேரத்துக்கு மட்டும் தான் வேலை இருக்கும்”
“ம்ம்..பசங்க நிறைய பேர் ஸ்நேக்ஸ் ஐடெம்,கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் கேட்டாங்களே..அத ஏன் நீங்க நாம விற்கக் கூடாது?”கேட்டவளிடம்..
“வேணி..அதுக்குன்னு தனியா உள்ள ஒரு கேண்டின் இருக்கு..அங்க அது மட்டும் தான் இருக்கும்.இங்க இது மட்டும் தான் இருக்கும்..ஒருத்தரோட வியாபாரத்தில இன்னொருத்தர் தலையிடக் கூடாதுன்னு முன்னாடியே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க”என்றெல்லாம் சொல்ல..எல்லாமே அவளுக்கு புதிதாயும் ஆச்சர்யமாகவும் தான் இருந்தது..
நாமளும் காலேஜ் படிச்சிருக்கலாம்..ஆசையுடன் அவள் விழிகள் கல்லூரி வளாகத்தை இங்கிருந்தே பார்வையிட…அரசு மற்றவர்கள் இருப்பதையெல்லாம் மறந்துவிட்டு,அவள் தோளில் கைபோட்டவன்,”என்ன படிக்கிறியா..இங்கேயே அட்மிஷன் போடலாமா”எனவும்,அம்மாவை பார்த்தவள்,அவரின் முறைப்பில் அதிர்ந்து,
“இல்ல,இல்ல..நா கொஞ்ச நாள் கழிச்சு கரஸ்ல படிக்கிறேன்”என்றாள்.
அந்த கொஞ்ச நாள் கணக்கு,குழந்தை பெற்றுக்கொள்ளும் நாள் கணக்கு என்று அரசுவிற்கு தான் தெரியுமே…!!
“பிள்ளை பெத்துக்கறத பத்தி யோசிக்காதன்னு சொன்னேன்”என்றவன்,
“அடப்பாவிங்களா..அப்போ அந்த அளவுக்கு ராசியாகிட்டிங்களாடா”பிரவீனின் அலறலில்,கணவனின் கைபிடியிலிருந்து நழுவி உள்ளே சென்றுவிட்டாள்.
“டேய்,மறுபடியும் ஆரம்பிக்காத பிளீஸ்..!!!கல்யாணம் கட்டிக்கிட்டு,எவனும் பிரம்மச்சாரியா வாழ மாட்டான்..அதுலயும் உன்னையும் என்னையும் மாதிரி ஆளுங்க பிரம்மாச்சாரியா வாழவே மாட்டோம்..!!!போ..போய் மார்னிங் பிரேக்டைம்-க்கு என்ன புதுசு புதுசா செய்யலாம்னு யோசி”எனவும்,
“உன்னோட என்னைய எதுக்கு கூட்டு சேர்க்கிற..நானெல்லாம் பத்து வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணிப்பனாக்கும்”என்றான் அவசரப்பட்டு..!!
“அப்போ யாரோ இன்னும் ஒரு வருஷம் போகட்டும்,உடனே கல்யாணத்தை வைச்சிடணும்னு யார்கிட்டவோ சொன்னதா,யாரோ சொன்னாங்க”எனவும் அதிர்ந்து தான் போனான்.
“உனக்கு,உனக்கு எப்படிடா தெரிஞ்சுது”
“ர….ஞ்…சி…தா “ராகம் போட்டு சொல்ல…யாருக்கும் தெரியாமல் ரூட் விட்ட கதை நண்பனிற்கு தெரிந்துவிட்டதை எண்ணி,வெட்கப்பட்டான்..
“அடேய்,அடேய்..நீ வெட்கப்படாத..என்னை விட மோசமாயிருக்கு”நண்பனை கலாய்க்க,
“எந்த ரஞ்சிதா மாமா”என்றபடி ஆஜரானாள் வேணி.
“சந்தேகமே வேணாம்.உனக்கு தெரிஞ்ச ரஞ்சிதா தான்”
“நிஜமாவேவா..!!அந்தக் கழுதை ஒரு வார்த்தை கூட சொல்லலை”கோபப்பட்டவளை பார்த்து சிரித்தவன்,
“நீ கடைசி வரைக்கும் சொல்லலையாம்.அதான் என் தங்கச்சியும் கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேன்னு சொல்லுச்சு”எனவும் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
மாலை ஆறரை மணிக்கு வீடு சென்று சேரும் வரை அவளின் அமைதி தொடர,அன்றைய நாளின் சந்தோஷத்தால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டான்.வீடு வந்து சேர்ந்த பின்னரே அவளின் அமைதி புரிய,காபி கோப்பையை அவளிடம் நீட்டியபடியே..”என்ன வேணி..என்ன ஆச்சு”என்று கேட்டது தான் தாமதம்.
அழுக ஆரம்பித்துவிட்டாள்.   
“வேணி,என்னம்மா,எதுக்கு அழற..”திரும்ப திரும்ப கேட்ட போதிலும் அவளிடம் பதிலில்லை.
விசும்பிக்கொண்டே இருந்தாள்.
அவனுக்கு தாங்கவில்லை.
அவளை இழுத்து தன்மேல் சாய்த்துக்கொண்டவன்,”அத்தை எதுவும் சொல்லிட்டாங்களா வேணி”பொறுமையாய் கேட்க,பதிலில்லை.
“இப்போ சொல்லப் போறியா,இல்லையா”அதட்டவும்,பயக்கவெல்லாம் இல்லை.
மனதில் உள்ளதை கொட்ட வேண்டுமென்ற உத்வேகம் தான் பிறந்தது.
“ரஞ்சி கூட என்ன புரிஞ்சுக்காம,இப்படி சொல்லிட்டாளே”எனவும் அவனுக்கு எங்கோ மணியடித்தது.
“அவங்க லவ் மேட்டர சொல்லலைன்னா,இவ்வளவு அழுகை.எனக்கே ஒரு வாரத்துக்கு முன்ன தான் தெரியும் வேணி.அதுக்கு முதல் வாரந்தான்,இவனுமே ரஞ்சிக்கிட்ட சம்மதம் வாங்கியிருக்கான்.ரஞ்சியும் உன்னை நேர்ல பார்க்கும் போது சொல்லலாம்னு நினைச்சிருக்கும்”சமாதானம் செய்ய முனைய அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளும் நிலையிலையே அவள் இல்லை.
“எல்லாருக்கும் நான் பண்ணது தப்பா தான் தெரியுது.ஆனா என்னோட மனசு ஒவ்வொருநாளும் துடிச்ச துடிப்பு தெரியல..நாந்தான் யார்கிட்டவும் காட்டிக்கலையே.எப்படி காட்ட முடியும்..நிறைவேறுமா..நிறைவேறாதா..
இவர் நம்மள நிமிர்ந்தாவது பார்ப்பாரா? ஒத்த வார்த்த பேசிட மாட்டாரான்னு நான் ஏங்குனது யாருக்கு தெரியும்? யாருக்குமே தெரியாது.எல்லாத்தையும் மனசிலையே போட்டு புதைச்சு வைச்சிருந்தேன்..எல்லாத்தையும் எந்த நம்பிக்கையில வெளில சொல்றதுன்னே தெரியல..
என்னோடது ஒருதலைக் காதல் தான்..என்னோட காதல் உங்க காதுக்கு எட்டவே இல்லைன்னு எனக்கு தெரியும்.மனசு பூரா வலியிருந்தாலும்,வெளில காட்டிக்காம,ஒரு உறுதியோட தான் இருந்தேன்..
இதுவரைக்கும் உங்ககிட்ட கூட சொன்னதில்ல..மாப்பிள்ளை போட்டோன்னு அம்மா காமிச்சப்போ..ஒரு நிமிஷம்’னாலும்..’நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சேன்னு நான் நினைச்சது உண்மை..அந்த அளவுக்கு கற்பனைலயே உங்ககூட வாழ்ந்துட்டு இருந்தேன்..”எனவும் திகைத்துப் போனான்.
அவளோ அதை உணராமல்,”ஆசை ஆசையா ரெண்டு குழந்தைங்கன்னு நாம வாழற வாழ்க்கையைப் பத்தி பெரிய கற்பனைக் கோட்டையே கட்டி வைச்சிருந்தேன்.கவர்மென்ட் மாப்பிள்ளைன்னு அவனோட காசுக்காக,என்னோட கற்பனைக் கோட்டையை உடைச்சிட்டு என்னால அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல முடியலைங்க..
இத்தனைக்கும் எனக்கு உங்கபடிப்பு,குணம்,சம்பாத்தியம் எதுவுமே தெரியாது..யார்கிட்டவாவது என்னோட மனசை பத்தி சொன்னா,உங்களைப் பத்தி சொல்லணுமே! எதுவுமே தெரியாதுன்னு சொன்னா சிரிப்பாங்களே! அதவிட உங்களோட கற்பனைநியிலையே நா வாழ்ந்துட்டு இருக்கேன்னு சொன்னா,என்னை அசிங்கமா பார்ப்பாங்களே…
எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டு இன்னொருத்தன கட்டியிருந்தா,என்னோட மனசே என்னை கொன்னுடுமே! அது தான்..அதனால தான் அடுத்து என்ன நடந்தாலும்..ஏன் என் உயிரே போனாலும் பரவாயில்ல..நீங்க எப்படியிருந்தாலும் பரவாயில்லன்னு ஒரு நொடி தான் யோசிச்சேன்..உங்ககூட வந்துட்டேன்..
கல்யாணம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி தாங்க எனக்கு எதார்த்தம் புரிஞ்சுது..அப்போ ஏன் இப்படியெல்லாம் ‘எப்படியோ அவங்களோட வாழ்ந்தா போதும்’னு நினைச்சேன்னு பலமுறை யோசிச்சிருக்கேன்..விபரீதமா ஏதாவது நடந்திருந்தா,உயிரே போயிருக்குமேன்னு நினைச்சிருக்கேன்..
இப்படி என்னோட சிந்தனைகளுக்கெல்லாம் காரணமான உங்களுக்கு எதுவுமே என்னைப்பற்றி தோணியிருக்காதில்லைங்க “எனவும் அவன் முகம் வேதனையை பிரதிபலித்தது.
ஒரே ஒருநாள்,அதுவும் சில நிமிடங்கள் ஆர்வமாய் பார்த்தது ஒரு பெண்ணின் மனதில் எத்தகைய தாக்கத்தை கொடுத்திருக்கிறது-இதுவரை வேணி இவ்வளவு தீவிரமாய் இருந்திருப்பாள் என்றே அவன் எண்ணவில்லை.
அவளின் கேள்விக்கு அமைதியாகவும் இருக்க முடியவில்லை..
“பார்த்த முதல் தடவையிலையே எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுப் போச்சு வேணி”என்று சொன்னதுமே அவள் முகம் மலர்ந்து போனது.
அதில் முகம் மென்மையுற,’என்கிட்ட இவளுக்கு காதல் தான் வேணும்.வேற எதுவும் வேணாம்னு நிரூபிக்கறாளே’ கொஞ்சிக்கொண்டவன்,
“அந்த ஒருநாளைக்கு அப்புறம் அடிக்கடி உன்ன நினைச்சுக்குவேன் தான்.ஆனால் உன்னளவுக்கு தீவிரம் எனக்கு இருந்ததில்ல.அப்போதான் வேலையை விட்டுட்டு,எம்பிஏ சேர்ந்திருந்தேன்.மறுபடி முதல்ல இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம்..என்னைக்குமே நான் எந்த வேலையையும் குறைச்சு நினைச்சதில்ல.
படிச்சவன்னு நினைச்சா தானே வேலை தேடி அலையணும்.படிக்கதவனா கிடைச்ச வேலையை நிம்மதியா செய்வோமே..இந்த எண்ணம் தான் எனக்கு எப்பவுமே இருந்துச்சு..அதனாலையே படிப்பு முடியற வரைக்கும் காதல்,கல்யாணம் பற்றி எல்லாம் யோசிக்கக் கூடாதுன்னு எனக்கு நானே தடை போட்டுக்கிட்டேன்.
வாரவாரம் நீ கடைக்கு வரும் போதெல்லாம் தேவையில்லாம மனசை அலைபாய விடக் கூடாதுன்னு தான் அந்த நேரம்,நான் வெளியவே வரமாட்டேன்..உனக்கான பார்சலை கட்டிக் கொடுத்துட்டு உள்ளவே இருந்துக்குவேன்..அப்படியிருந்தும் உன்னோட மனசில பல தாக்கம் இருக்குன்னு எனக்கு புரியாம போச்சு.
ஒருவேளை இந்த மாதிரி எதுவும் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா..ஓடி ஒளியாம நேரடியாவே உன்னை சைட் அடிச்சிருப்பேன்”எனவும் அவள் முகத்திலும் புன்னகை..!!
“உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி,மனசு விட்டுப் பேசி..எனக்காக காத்திருக்க சொல்லி,என்னோட நிலைமையை உனக்கு புரிய வைச்சிருக்கணும்.நீயும் என்ன செஞ்சாவது எனக்காக காத்துக்கிட்டு இருந்திருப்ப!எல்லாம் என்னோட கொள்கையால தான் இப்படி ஆகிடுச்சு..
இதுவரை போனது போகட்டும்..!!இனிமேல் திகட்ட திகட்ட காதல் பண்ணுவோம்..இப்போ தான் புல் லைசென்ஸ் கிடைச்சாச்சே..யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.இன்னும் மூணு வருஷத்துக்கு என்ஜாய் பண்ணுவோம்”எனவும் கடைசி வார்த்தையில் அவளுக்கு அதிர்ந்தது..
“மூணு வருஷமா..இதென்ன புதுக் கணக்கு?”
“நீ டிகிரி வாங்கப் போற அந்த மூணு வருஷமும்,குழந்தைன்ற பேச்சுக்கே இடமில்லைன்னு அர்த்தம்.நாளைக்கே காலேஜ்ல அப்ப்ளிகேஷன் வாங்கப் போறேன்.உனக்கு எந்த கோர்ஸ் சேர ஐடியா”என்றெல்லாம் கேட்க,அவளுக்கு தலை சுற்றிப் போயிற்று.
“அய்யே.அதெல்லாம் வேண்டாம்”என்று எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தாள்.கணவனை கவிழ்க்க அத்தனை வேலையையும் பார்த்தாள்..எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு,இறுதியில் அவன் தன் நிலையிலையே நிற்க..
இறுதியாய்..பி.ஏ தமிழ் படிக்க அவள் ஒத்துக்கொண்டாள்.
“உனக்கு தமிழ்-ன்னா ரொம்ப பிடிக்குமோ வேணி?”
“யாருக்கு தான் தமிழை பிடிக்காது..அதுவும் இந்த தமிழை ரொம்ப பிடிக்கும்”-முதல் தடவையாய் அவனது பெயரையும் அவள் சொல்ல…
“புருஷன் பேரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு உங்கம்மா சொல்லிக் கொடுக்கலையா உனக்கு!!!”சிரித்தபடி கேட்க..
“நா அப்படி தான் சொல்வேன்”சட்டமாய் சொன்னவள்,திரும்ப திரும்ப பேரை சொல்லி அவனை நிறைய காதலிக்க வைத்தாள்.
தனிப்பட்ட முறையில் யாரும் பாசம் காட்டி,அதை அனுபவித்தேயிரத அரசுவிற்கு,மனைவியின் பேச்சு கொஞ்சல் எல்லாமே முழுவதுமாய் அவளிடம் சரணடையத்தான் வைத்தது.
இப்படியான சின்ன சின்ன சண்டைகளுடன்…நிறைய எதிர்கால கனவுகளுடனும்.. அவளது படிப்பும்,அவனது தொழிலும்,காலமும் வேகமாய் சென்றது..    

Advertisement