Advertisement

19
விடிந்தும் விடியாத பொழுதில் வந்து நின்ற மாமியாரை பார்ப்பதும்,மனைவியை முறைப்பதுமாய் இருந்தான் அரசு.
டீயை குடித்துக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தால்,வேணிக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும்,இன்னொருபக்கம் கலக்கமாகவும் இருந்தது.
நகையை பற்றி சொன்னதிலிருந்து உறங்கியிருக்கவே மாட்டார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்..
ஒரு ரூபாயையும் அனாவசியமாய்(கணவர் கணக்கு தனி) செலவளிக்காமல் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்து,பெண்ணிற்கு அழகு பார்க்க ,வர் எடுத்த நகைகள்!!!
அவர்கள் பிரிவில் யாரும் இவ்வளவு நகை போடவே மாட்டார்கள்.
‘பொண்ணு குடுக்கறதே பெருசு.இதுல உனக்கு நகையெல்லாம் வேணுமாக்கும்’நொடித்துக்கொள்வார்கள்.
இவர் தான் மகள் பெரிதாய் வாழ வேண்டுமென்று இருபது சவரன் நகை எடுத்து வைத்திருந்தார்.கணவருக்கு இதுநாள் வரை அந்த நகைகளையெல்லாம் கண்ணில் காட்டியதே இல்லை.வாங்கிய உடனே வங்கியில் கொண்டு போய் வைத்துவிடுவார்.மகள் தன் கையை மீறிப் போய்விடுவாள் என்ற எண்ணமே அவருக்கு வரவில்லை என்பதால் தான் அவள் பெயரிலையே அடகு வைத்தார்.
ஆனால் மகள் தன்னை மீறி திருமணம் செய்து கொண்டதும் இல்லாமல்,இப்போது தன் உழைப்பையே ஒன்றுமில்லாமல் செய்ய பார்த்தால் அவர் சும்மா விடுவாரா?
டீ குடித்த உடனே ஆரம்பித்துவிட்டார்.
“அம்சு ஏதோ சொல்லுச்சு.அதெல்லாம் சரிப்பட்டு வருமான்னு யோசிங்க”பட்டென்று சொல்லவும்,இவனுக்கு முகம் சுருங்கிவிட்டது.
இன்னும் இந்த விஷயத்தை நெருங்கிய நண்பனான பிரவீனிடம் கூட சொல்லவில்லை.மனைவியிடம் சொன்னதை இப்போது பெரும் குற்றமாய் கருதினான்.மாமியாரின் வரவு அவனை அப்படி நினைக்க வைத்தது.என்ன செய்ய!!!
இவன் அமைதியைக் கண்டு கோபமுற்றாலும்,வேகமாய் பேசிவிட முடியாதே! மருமகனாயிற்றே!!
“என்ன தொழில் செய்யலாம்னு இருக்கீங்க?”என்று ஆரம்பித்தார்.மகள் இன்ன தொழில் என்று விவரமாய் சொல்லியிருக்கவில்லை.
மொட்டையாய்,”அவங்க தொழில் செய்ய போறாங்கம்மா.நான் நகையை அடகு வைக்கப் போறேன்”என்று தான் சொன்னாள்.
இவனுக்கு சொல்ல மனமில்லை என்றாலும்,அவரின் வயதிற்கு மதிப்பு கொடுத்து விவரம் சொன்னான்.
“நான் படிச்ச காலேஜ்ல கேண்டின் நடத்த அனுமதி கிடைச்சிருக்கு.பாதிக்கும் மேல பணத்தை புரட்டியாச்சு”என்றவன் கண்ணனை பற்றி சொல்லவில்லை.
அது தேவையில்லாத யூகங்களுக்கு வழி வகுக்கும்.எப்படி இவனுக்கு பணம் கொடுத்தார் என்று ஆரம்பித்து,அவரது இறப்பில் சந்தேகம் தூண்டுவதாய் முடியும்.அதனாலையே சொல்லவில்லை.மனைவியும் சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்பினான்.
நீலவேணி சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.மனதில் பல கணக்குகள் ஓடிக் கொண்டிருந்தது.
மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு தானே! அந்த தொழிலை முறையாக செய்தால் நட்டம் வருவதற்கே வாய்ப்பில்லை.போட்ட முதலீட்டையும் அன்றாடு எடுத்துவிடலாம் என்றெல்லாம் பலவாறு கணக்கு போட்டவர்,”மிச்சப் பணத்துக்கு என்ன செய்யலாம்னு இருக்கீங்க”என்றார்.
“தெரிஞ்சவங்ககிட்ட வட்டிக்கு கேட்கலாம்னு இருக்கேன்”
“எவ்வளவு வேணும்?”-இவரே கேட்க,மதிப்பை சொன்னான்.
“மொத்தத்தையும் நானே தர்றேன்”என்று சொன்னதும் அரசுவிற்கு மட்டுமல்ல,வேணிக்குமே ஆச்சர்யம் தான்.
“அவ்வளவு பணத்துக்கு என்னம்மா பண்ணுவ?”கலக்கத்துடன் வேணி கேட்கவும்,
“கவர்மென்ட் மாப்பிள்ளை இருக்காரே”என்று ஆரம்பிக்கவுமே மகள் முறைத்தாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,”அந்த தம்பியோட இடத்துப்பக்கம் நான் கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டிருந்தேன்.அந்த தம்பி வீடு கட்டனும்னாலும் பாதை போட நம்மகிட்ட தான் இடம் வாங்கியாகணும்.அதுக்காக தான் முதல்ல என்னை பார்க்கவே வந்திருந்தாங்க…
ஆனா எனக்கு பொண்ணு இருக்கது தெரிஞ்சதும்,உன்னை கல்யாணம் பண்ணி, ஓசிலேயே அந்த இடத்தை வளைச்சுப் போட்டுடலாம்னு பார்த்தாங்க.நடக்கலை.இப்போ இடத்தையாவது விலைக்கு கொடுங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க..நானும் கொடுத்துடலாமான்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்”என்றவரை சந்தேகமாக பார்த்தாள் வேணி.
கணவன் இருப்பதையும் பொருட்படுத்தாமல்,”நிஜமாவே அந்த நிலம் நம்மளுது தானாம்மா?”கேட்டவள்,தாயின் உக்கிரமான முறைப்பில் அடங்கிப் போனாள்.
“கொழுப்புடி உனக்கு! நோகாம வளர்ந்துட்டில்ல!! அந்த கொழுப்பு தான் இப்படி பேச வைக்குது! அடுத்தவன் சொத்துக்கு நா ஆசைப்படறவளா இருந்திருந்தா,இந்நேரம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்டி”-மேலும் பேசப் போனவர் மருமகன் இருப்பதையுணர்ந்து அமைதியாகிவிட்டார்.
எந்த நினைப்பில் இப்படி கூறினார் என்பது வேணிக்கும் புரிய,கணவனுக்கு தெரிந்தால் அவமானமல்லவா!! என்ற நினைப்பே அவளை குறுக வைக்க,எல்லாம் தெரிந்து வைத்திருந்தவனோ,அவர்களின் பேச்சே புரியாதது போல அமர்ந்திருந்தான்.
மகளின் அமைதி நீலவேணிக்கு என்னவோ செய்தது…
வேண்டுமென்றே,”அந்த நிலத்துக்காக தான் வேணிய கல்யாணம் பண்ண கேட்டாங்க தம்பி.நானுமே ஆரம்பத்துல எம்பொண்ணு அழகுல மயங்கி தான்,கவர்மென்ட் மாப்பிள்ளையே பொண்ணு கேட்டு வரார்னு நினைச்சி ஏமாந்துட்டேன் தம்பி…”வேண்டுமென்றே பெருமூச்சுவிட,
“இப்போ உன்னை இதெல்லாம் விளக்கமா கேட்டாங்களா-ம்மா?”ஆத்திரமாய் கேட்க,வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார்.
“எல்லாம் தம்பிக்கு தெரியணுமில்ல..அந்தக் கிழவன் வேற,’உம்மவ ஒண்ணும் சீமை சித்திராங்கி இல்ல..சொல்லி வைன்னு வேற சொன்னான்”வேண்டுமென்றே சொல்ல,கணவன் முன் தன் அழகை பற்றி பேசுவது பிடிக்காததால்,வேகமாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
நடப்பவை அத்தனையும் பார்த்த அரசுவிற்கு சிரிப்பாய் இருந்தது..எதற்காக பேச வந்துவிட்டு,இப்போது எதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்?-மாமியாரின் குணம் ஏதோ பிடிபட,சிரிப்பை வெளிக்காட்டாமல் உணர்வுகளை துடைத்த முகமாய் அமர்ந்திருந்தான்.
நீலவேணியும் இப்போது நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“அந்த இடத்தை வித்து நான் பணம் தர்றேன் தம்பி.சும்மா எல்லாம் கொடுக்க மாட்டேன்.வட்டிக்கு தான் கொடுப்பேன்.அதுவும் பத்து வட்டிக்கு!!”முடிக்கும் முன்னே,பட்டென்று கதவை திறந்து வெளியே வந்தவள்,
“ஏம்மா,இது உனக்கே ஓவரா தெரியல.யார்கிட்ட வந்து வட்டி பேரம் பேசிட்டு இருக்க! உம்மவளுக்கு தானே எல்லாம் செய்யப் போற! பொறவு எதுக்கு நீ இப்படியெல்லாம் வட்டி,குட்டின்னு பேசிட்டு இருக்க!!”
“வாய் ரொம்ப நீளுதுடி.அறுக்க போறேன் பாரு!!”-புருஷன் பக்கத்துல இருக்க திமிர் வாய்க்குள்ளையே திட்டியவர்,
“நான் சொன்னது சொன்னது தான்.விருப்பம்னா வாங்கிக்கங்க.இல்லைன்னா எப்படியோ போங்க”எனவும்,இதுவரை அமைதியாய் இருந்த அரசு,வாயை திறந்தான்.
“சரிங்கத்தை.நா வாங்கிக்கறேன்”என்றவனை..
“அதெல்லாம் வேண்டாம் மாமா.இவ்வளவு வட்டி இவங்களுக்கு கொடுக்கறதுக்கு,வேற எவன்கிட்டவாவது வாங்கிக்கலாம்”என்று தடுத்தாள்.
சிறுசிரிப்புடன் அவளை அடக்கியவன்,”எப்படியும் யார்கிட்டவோ வட்டிக்கு வாங்கி தான் ஆகணும் வேணி.அதுக்கு உங்கம்மாகிட்டவே வாங்கிக்கலாம்.அவங்க பணத்தை வாங்கி,யாருக்கு கொடுக்கப் போறாங்க.உனக்கு தானே கொடுக்கப் போறாங்க”என்ற மருமகனை மாமியார் மெச்சிக் கொண்டார்.
“பார்றா வெவரத்த!”மெல்லிய குரலில் பாராட்டிவிட்டு,
“வேணி..இதுக்கு மேல உழைக்க என்னோட உடம்பில தெம்பு இல்ல.அந்த நிலத்த வித்து வர்ற பணத்தை நாலு பேருக்கு வட்டிக்கு விட்டு,ரெண்டு வேலை கஞ்சின்னாலும் நிம்மதியா குடிக்கணும்னு தான் முன்னவே நினைச்சிட்டு இருந்தேன்.
உன்னோட பாட்டி வேற உன் பக்கத்துலையே வந்து இருக்கணும்னு சொல்லிட்டு இருக்கு.நானுமே இங்க பக்கத்துல ஏதாவது வீடு வாடகைக்கு கிடைச்சா,இங்கேயே வந்துடலாம்னு இருக்கேன்.இனி உங்களுக்கு உதவியா இருக்கும்ல..”என்றெல்லாம் சொல்ல,தகப்பனின் நினைவில் இவளுக்கு முகம் கருத்தது..
‘அந்தாளை என்ன பண்ண உத்தேசமாம்’கண்ணாலே அம்மாவிடம் கேட்க,அவர் மகளின் பார்வையை தட்டிக்கழித்தார்…
ஒருவழியாய் நிலம் விற்க ஏற்பாடு செய்ய மருமகனையும் துணைக்கு அழைக்க,அவனும் நாளை வருவதாய் சம்மதம் சொல்லவும்,எப்படியோ மகள் வாழ்க்கையில் முன்னேறிவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றார்.
நீலவேணி நல்லதாய் வழிகாட்டிவிட்டு போன பின்னரும்,அம்சவேணிக்கு கலக்கமாகத்தான் இருந்தது.
அவளின் சோகம் எதற்கென்றே இவனுக்கு புரியவில்லை.
“என்னாச்சு வேணி.சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில ஏன் இப்படி அழுகாச்சி மூஞ்சியா உட்கார்ந்திருக்க”சீண்டியபடியே அவளின் மடியில் படுத்துக்கொண்டான்.
அவளோ சம்பந்தமேயில்லாமல்,”நா உங்களை கல்யாணம் பண்ணிக்காம இருந்தேன்னா,உங்களுக்கு தேவையில்லாத கஷ்டம் வந்திருக்காதில்லங்க.உங்க விருப்பப்படி ஏதோவொரு வேலைல சேர்ந்திருப்பீங்க தானே.! இப்போ என்னால பத்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டியதாகிடுச்சே”-கவலைப்பட்டவளை ஆதூரமாய் பார்த்தான்.
கொஞ்சம் வெகுளி தான்..இல்லையென்றால் இப்படியெல்லாம் யோசிப்பாளா!!
“கடனை நினைச்சு கவலைப்படறியா வேணி? அதுக்கெல்லாம் அவசியமேயில்ல.உங்கம்மா-கிட்ட பணம் வாங்கப்போற தைரியத்துல பேசறேன்னு நினைக்காத! கடனில்லாம எந்த மனுஷனுமே வாழ முடியாது.அதுலயும் நானெல்லாம் கடன்லையே பிறந்து,கடன்லையே வளர்ந்தவன்..
கண்ணன் அண்ணாச்சி செஞ்ச வேலைக்கு தான் கூலின்னு ரொம்ப கட்அண்ட் ரைட்டா இருப்பார்..ஓசில எல்லாம் கிடைச்சா மதிப்பு தெரியாதாமே!! அப்போ இருந்தே கடனை வாங்கவும் கத்துக்கிட்டேன்.முறையா திருப்பிக் கொடுக்கவும் கத்துக்கிட்டேன்.அதனால நீ கவலைப்படறத விடு”என்றாலும் அவளுக்கு தெளிவு வரவில்லை.
யாருக்காவது நூறு ரூபாய் கடன் கொடுத்து,அது திருப்பி கொடுக்கவில்லை என்றால் கேவலகேவலமாய் பேசும் தாயின் முகம் மின்னி மறைய,இன்னும் சோர்ந்து போனாள்.
அவள் இப்படி இருப்பது அரசுவிற்கு பிடிக்கவில்லை.
எல்லாம் கூடி வந்த வேளையில் எதற்காக இந்த சோக முகம் என்று புரியாவிட்டாலும்,அவளை அப்படியே விட்டுவிட அவனால் முடியவில்லை.
“ஏன் வேணி.உன்னோட அம்மா,உன்னை அழகில்லைன்னு சொன்னதுக்கா,இவ்வளவு பீல் ஆகுற?”வேண்டுமென்றே கேட்க,பொங்கிவிட்டாள்.
“அம்மா தான் அப்படி சொல்றாங்கன்னா,நீங்களுமா? போங்க,போங்க..”சிணுங்கியபடியே மடியிலிருந்தவனை,நகர்த்தப் பார்த்தாள்.
முடிந்தால் தானே..இன்னும் ஆழ ஆழ புதைந்தான்..
“என்னோட அம்சு..அம்சமா தான் இருக்கா..அவங்க பேச்சையெல்லாம் கண்டுக்காதே”-அவளிடம் மயங்கிப்போனவனாய் பேச..அவளால் அவளையே கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது,கணவனை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
அவனது காதலில் மயங்கிக் கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு,”நா எதுவுமே அதிகப்படியா முயற்சி எடுக்காம,எல்லாமே கூடி வந்தது இது தான் முதல்முறை வேணி.அதுவே எனக்கு சந்தோஷத்தையும்,இன்னொரு பக்கம் பயத்தையும் கொடுக்குது.முயற்சியே செய்யாம ஒரு விஷயம் ஈசியா கிடைக்கும் போது,அது கைநழுவி போயிடக் கூடாதேன்னு தவிச்சிட்டு இருக்கேன்”என்றவன் இப்போது இவளுக்கு சிறுவனாகத் தெரிய,இயல்பாகவே தாயாக மாறிப் போனாள்.
“முயற்சி செய்யாம எதுவுமே கிடைச்சிடாதுங்க.இனிமேல் தான் எல்லாமே ஆரம்பமாகப் போகுது.ஒவ்வொரு நாளும் புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கப் போறோம்.அதனால கவலைப்படாம இருங்க.நல்ல நாளாப் பார்த்து வேலையை தொடங்கிடலாம்..பிரவீன் அண்ணாவையும் கூப்பிட்டுக்கங்க.நமக்கு ரொம்ப உதவியா இருப்பார்”என்று அறிவார்த்தமாய் பேச…அவனுக்கு நெஞ்சம் நிறைந்து போனது.
அவளிடம் அவனுக்கு இருந்தது ஒரே ஒரு குறை தான்.செலவாளியோ என்று பயந்திருந்தான்..அதுவும் ஆரம்ப நாட்களில் தான்.  நாள் ஆக ஆக,தன்னுடைய சின்ன சின்ன ஆசைகளை,தன்னுடைய சம்பாத்தியத்தில் நிறைவேற்றிய கதையெல்லாம் அவள் அப்பாவியாய் சொன்ன போது,அந்த குறையும் மறைந்துவிட்டது.
இப்போது பிரவீனையும் ‘கூட்டு’ சேர்ந்துகொள்ள சொல்லவும்..தன் மனைவி ஒன்றும் பேராசைப்பட்டவள் அல்ல என்று முழுதாக புரிந்துவிட..ஆழ்ந்து அவளின் இதழில் முத்தமிட்டான்..திடீரென்ற அவனின் செய்கையில் திகைத்தாலும்,இயல்பாய் அவனுடன் ஒன்றிப் போனாள்.
20
வேணி பூவை கட்டுவதும்,வாசலில் கணவன் வருகிறானா என்று பார்ப்பதுமாய் இருந்தாள்.
இன்று நிலக்கிரயம் செய்கிறார்கள்.கிடைக்கும் பணத்தை நாளைக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு அப்படியே பூஜை போட திட்டமிட்டிருந்தார்கள்.
நிலத்தை விற்பதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.அவர்களாக கேட்ட போது ஒரு விலையும்,இப்போது தங்களது அவசரத்திற்கு விற்க கேட்கும் போது ஒரு விலையும் சொன்னார்கள்.
முதலில் தானே பார்த்துக்கொள்ள முடிவு செய்து நீலவேணி பேசிப்பார்க்க,இவரை ஏமாற்றத்தான் நினைத்தார்கள்.அவரோ அசைந்து கொடுக்காமல்,மருமகனையும் பிரச்சனையில் இழுத்துவிட்டு,”உங்களுக்கு பணம் வேணும்னா நீங்களே இதை பாருங்க.நான் கையெழுத்து போட மட்டும் வர்றேன்”என்று சாமர்த்தியமாய் விலகிக் கொண்டார்.
அரசுவிற்கு தான் தலையை பிய்த்துக்கொண்டது.அந்த அளவிற்கு முதல் பதினைந்து நாட்கள் இழுத்து அடித்தார்கள்..இவனும் வேறு வழியில்லாமல் இடைத்தரகர்கள் மூலமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது போல ‘காய்’ நகர்த்தி செல்ல,அவர்களும் இடம் கைவிட்டுப் போய்விடுமோ என்று பயந்து முன்பு சொன்ன விலைக்கே ஒப்புக்கொண்டுவிட்டார்கள்…
அதன் பின்பாவது காரியம் வேகமாக நடந்ததா..இல்லை! நல்ல நாளில் வாங்க வேண்டுமென்றார்கள்..வளர்பிறையில் தான் வாங்குவோம் என்று நாளை தள்ளிப்போட்டுக்கொண்டே போய்..இதோ இன்று தான் எல்லாம் கூடி வந்து பணமும் கைக்கு வந்திருக்கிறது.
இந்த இடைப்பட்ட நாட்களில் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை.
பல தடைகள்..!!!
இந்த ஒருமாதமாக வேலைக்கு செல்லாமல் தொழில் விஷயமாக சுற்றிக் கொண்டிருந்ததில்,கையிலிருந்த பணம் வேறு கரைந்து கொண்டிருந்தது.கடைசி நேரத்தில் நிலத்தை விற்க முடியாமல் போய்விட்டால் முதலுக்கே மோசமாக போய்விடுமே என்ற எதிர்மறை எண்ணம் வேறு நிம்மதியாய் இருக்க விடவில்லை..
எப்படியோ வேணி அருகில் இருக்கப் போய் சமாளித்தான்.அவள் இல்லையேல் அவனுக்கு ‘எதுக்கு இவ்வளவு சிரமப்படணும்’ என்றே தோன்றியிருக்கும்..மேற்கொண்டு வேறு வேலைக்கு முயற்சி செய்திருப்பானே தவிர,இவ்வளவு தீவிரமாக இதில் இறங்கியிருக்க மாட்டான்.
பத்திரப்பதிவு அலுவகலத்திலிருந்து கிளம்பவே மதியம் மூன்று மணியாகிவிட்டதால்,மதிய உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு வர ஐந்தாகிவிட்டது.
முன்பே மனைவிக்கு அரசு தகவல் சொல்லிவிட்டதால்,அவளும் ஆர்வமாய் கணவனை எதிர்நோக்கி காத்திருக்க,அவனும் வந்துவிட்டான்.
உடன் தாயும் வந்திருக்க,இன்னும் மலர்ந்தவள்,அவர்களுக்கு டீ போட்டுக்கொடுத்துவிட்டு,தாயின் அருகில் அமர…அவள் கட்டிக் கொண்டிருந்த பூவின் வாசம் அரசுவிற்கு பலகதைகளை கூறியது.
அவனுக்கு மரிக்கொழுந்து மிகவும் பிடிக்கும் என்பதால் தேடிப்பிடித்து வாங்கி முல்லைப்பூவுடன் கட்டிவைப்பாள்..எவ்வளவு சோர்வுடன் வந்தாலும்,அந்த வாசனை அவனை புத்துணர்ச்சியாக்கிவிடும்..
அர்த்தத்துடன் மனைவியை பார்க்க,அவளும் அவன் பார்வைக்கு அவனுக்கு மேல் பதிலடி கொடுத்துவிட்டு,நல்லபிள்ளை போல் அம்மாவுடன் ஒட்டிக்கொண்டாள்.
அவர் அருகிலிருந்த மஞ்சப்பையில் கொஞ்சம் பணமிருக்க,அதை எடுத்துக்கொண்டு பீரோவில் வைத்து பூட்டிவிட்டு வந்தாள்..
நீலவேணியிடம் இன்று பலத்த அமைதி..ஏனென்று அரசுவிற்குமே புரியவில்லை.
“நா கிளம்பறேன் அம்சு.பணத்தை பத்திரமா வைச்சுக்கங்க.நாளைக்கு காலேஜ்-கே வந்திடறேன் மாப்பிள்ளை”என்றவர் மகளின் பேச்சையும் கேட்காமல் உடனே கிளம்பிவிட்டார்.
அவருக்கு மனது நிறைந்திருந்தது.
இன்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே மருமகனை அதட்டி உருட்டிக் கொண்டிருந்தார்.
அரசுவின் விருப்பப்படி பிரவீனும் இவர்களின் தொழிலில் கூட்டு சேர சம்மதித்திருக்க,அவனுமே வந்திருந்தான்.
இந்த சில நாட்களில் இவரின் சின்ன சின்ன செய்கையும் அவனுக்கு பெரும் கடுப்பை வரவழைக்க,இன்று பலரின் முன்னிலையில் ‘நான் தான் எல்லாம்’ என்பது போல நடந்துகொண்ட அவரின் செய்கை பிரவீனிற்கு தாங்க முடியாத எரிச்சலைக் கொடுத்தது.
ஒருக்கட்டத்தில் தாங்க முடியாமல் நண்பனிடம் பொரிந்து தள்ளிவிட்டான்.
“ஏன்டா அரசு.அந்த அம்மா உன்னை மதிக்கவே மாட்டேங்குது.ஆனா நீ அவங்க கூப்பிட்ட உடனே,அவங்க முன்ன போய் நிற்கற.காசுக்காக நீயும் இப்படி தன்மானம் இல்லாதவனா மாறிட்டியாடா.உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கவேயில்லை…”மிகவும் வேதனையோடு சொல்ல…அதே அளவுக்கு வேதனை அரசுவிற்கு இருந்தது தான்.
வேணியிடம் கூட இதுவரை’உன்னோட அம்மா என்கிட்ட நடந்துக்கற விதம் சரியில்லை’என்று சொல்லியிருக்கவில்லை.
மருமகனுக்கு பணம் கொடுக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவரை கர்வத்தின் உச்சிக்கு கொண்டு போய்விட்டது.
அரசுவிற்கும் இதே புரிந்தே இருந்ததால் சகித்துக் கொண்டிருந்தான் என்பதே உண்மை.
நண்பனின் குமுறலில் தன் உள்ளத்தை திறந்தான்.
“நான் பணத்தை வாங்கிட்டு வேணியை ஏமாத்திடுவேனோன்னு பயப்படறாங்கடா மாப்ள.அவங்களோட ஒவ்வொரு செய்கையும் எனக்கு அதைத்தான் உணர்த்துது.எனக்கு புரிஞ்சாலும்,என்னை நம்புங்கன்னு வாய் வார்த்தையால சொல்ல எனக்கு மனமில்ல.என்னோட செய்கையில அவங்க புரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்! 
அவங்க பேசறது கொஞ்சம் கஷ்டமா இருக்குது தான்..என்ன செய்ய! வேணியோட அம்மாவா போயிட்டாங்க..அதைவிட அவங்களோட ஒவ்வொரு நடவடிக்கையும்,பொண்ணு வாழ்க்கை கெட்டுப்போயிடக் கூடாதுன்னு எச்சரிக்கையா இருக்கதை தான் எனக்கு உணர்த்துது.அவங்க செய்கை தப்புன்னாலும்,அவங்களோட தாய்மை உணர்வை மதிக்கறேன்டா பிரவீன்..
எனக்கு இவ்வளவு செய்யணும்னு அவங்களுக்கு என்ன தலையெழுத்தா! எல்லாம் தன்னோட பொண்ணுக்காக பார்த்துப் பார்த்து செய்யறாங்க.நீ சொன்னியே..பணத்துக்காக மாமியார் கால்ல விழுந்து கிடக்கேன்னு!! 
பணத்துக்காக விழலை..அந்த பணத்தை சம்பாதிக்க அவங்க தனியாளா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க..அந்த உழைப்பை மதிக்கறேன்.அதனால தான் அந்த பணத்தை கொடுக்கற அவங்க மேல கோபப்பட முடியலை…எல்லாத்துக்கும் மேல வேணி…”என்ற போதே அரசுவின் குரல் குழைந்து வந்தது.
“வேணியை எனக்காக கொடுத்ததுக்கே அவங்க தொல்லையை தாங்கிக்கலாம்”என்றவனை ஆச்சர்யமாக பார்த்தவன்,சிறிது நேரத்தில் சிரிக்கவே ஆரம்பித்துவிட்டான்.
“ஆனாலும் நீ பொண்டாட்டி தாசன் ஆவன்னு நான் நம்பவே இல்லடா! ரொம்ப பயந்து போயிட்டேன்..இந்தப்பைய வேணா வேணாம்னு சொல்றானே..வலுக்கட்டாயமா பிடிச்சு உள்ள இழுத்து விட்டோமேன்னு பலநாள் சோறு தூக்கம் இல்லாம இருந்திருக்கேன்..இப்போ தான் எனக்கு சந்தோஷமாவே இருக்கு”என்றவன் பொதுஇடம் என்றும் பாராமல் நண்பனை கட்டிக்கொள்ள,அனைத்தையும் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நீலவேணிக்கு கண்ணில் நீர் நிறைந்து போயிற்று!!
இத்தனை நாளாய் பட்ட பாட்டிற்கு கடவுள் தனக்கு நல்லதொரு மருமகனை தான் கொடுத்திருக்கிறார் என்று எண்ணியவரின் மனது அந்தக்கணமே அமைதியாகிவிட்டது என்பதே உண்மை.
பிரவீன் முன்னெச்சரிக்கையாய்,அவர் இனி எது சொன்னாலும் அமைதியாய் போய்விட வேண்டும் என்று எண்ணியிருந்தவன்,அவரின் அமைதியில் குழம்பி,பின் தெளிந்து,’இனி இப்படியே இருக்கட்டும்’கடவுளிடம் வேண்டிக்கொண்டவன்,தன் நண்பனிடம் நாளை நேரத்திலையே சந்திப்பதாக உறுதி கூறிவிட்டு அங்கிருந்தே புறப்பட்டுவிட்டவன்,வேணியிடம் போனிலையே வீட்டிற்கு கிளம்புவதை சொல்லிவிட்டான்.
தாய் கிளம்பி சென்றதும்,வீட்டிற்குள் வந்தவள் தரையில் பாய் விரித்து படுத்துக்கிடந்தவனின் அருகே சென்று அமர்ந்தவள்,”நாளைக்கு பூஜைக்கு தேவையான பொருளை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் மாமா.நீங்க ஒருதரம் பார்த்துடறீங்களா?”கேட்கவும்,
“என் பொண்டாட்டி படிப்பை தவிர மத்ததில எல்லாம் ரொம்ப விவரம்னு எனக்கு தெரியும்.நீ சரியா தான் வாங்கியிருப்ப”சோர்வான நிலையிலும் மனைவியை கிண்டலடிக்க,
“உங்களுக்கு இதே வேலையாப் போச்சு.எப்போ பார்த்தாலும் படிப்பு..படிப்புன்னுட்டே இருக்கீங்க.வீட்டுல ஒருத்தர் படிச்சிருந்தா போதாதா?”சினுங்கியவளை சிரிப்புடன் பார்த்தவன்,
“எனக்கு என் பொண்டாட்டி எப்படி இருந்தாலும் பிடிக்கும் தான்.நமக்கு பிறக்கப் போற ஜூனியர்க்கு உன்னோட படிப்பு போதாது..கரஸ்ல ஏதோ ஒரு டிகிரியாவது நீ படிச்சே ஆகணும்.இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு.அதுவரைக்கும் ப்ரீயா இரு”என்றதும் குழந்தை என்ற நினைவில் அவள் முகம் கனிந்து போனது..
அவளிடம் பதிலில்லாமல் போக,முகத்தை பார்த்தவன்,அவள் கனவுலகில் ஆழ்ந்துவிட்டது புரிய,”இப்போதைக்கு குழந்தை பெத்துக்கற ஐடியா இல்லைன்னு உன்னோட அம்மாகிட்ட சொல்லிடு வேணி.போன முறை ஏதோ உன்னை திட்டன மாதிரி இருந்துச்சே?”கேட்கவும்,
“உடனே குழந்தை பெத்துக்கன்னு சொன்னாங்க.தள்ளிப்போடற எண்ணமிருந்தா,அடியோட விட்டுடறதாம்”கணவனை பார்த்துக்கொண்டே கூற,
“முதல்ல உனக்கு இருபத்தியொன்னு முடியட்டும்.இப்போதானே இருபது ஆரம்பிச்சிருக்கு.எனக்கும் இப்போதான் இருபத்தியாறே ஆகுது.அதுக்குள்ள குழந்தை பெத்துக்கற எண்ணம் எனக்கு இல்லை.கல்யாணம் தான் சீக்கிரம் பண்ணிட்டேன்.குழந்தையாவது ரெண்டு வருஷம் கழிச்சு பெத்துக்கலாம்..அவங்ககிட்ட நம்ம பிளான் எல்லாம் சொல்லணும்னு அவசியம் இல்லை..புரியுதா?”எனவும் சோகத்துடன் தலையாட்டினாள்.
அவனுக்கு அது வருத்தத்தை கொடுத்த போதிலும் குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவிலிருந்து அவன் மாறவில்லை.
பிள்ளை பெற்றுக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல.குழந்தை பிறந்த நொடி ஆரம்பித்து,தொடர்ச்சியாய் பல செலவுகள் அணிவகுத்துக்கொண்டே வரும்.
தான் தான் வேண்டாத பிள்ளையாக,விளையாட வேண்டிய வயதில் வேலைக்கு போய் சிரமப்பட்டுவிட்டோம்.தன் பிள்ளையாவது குழந்தை பருவத்தை ஆழ்ந்து அனுபவித்து வாழ வேண்டுமென்று நினைத்தான்.அதில் தவறேதும் இல்லையே..
ஆசைக்காக பிள்ளையை பெற்றுவிட்டு,அந்தப் பிள்ளை,அவஸ்தைபடுவதை பார்க்க அவன் விரும்பவில்லை.
தன் எண்ணத்தை மனைவியிடம் அவன் பகிர,அவள் மனம் கேளாமால்,”பணமில்லாமலும் சந்தோஷமா வாழ முடியும் மாமா.நானும் ஏழ்மைல வாழ்ந்தவ தான்.ஆனால் ஒருநாள் கூட அதுக்காக வருத்தப்பட்டதில்லை.என்னோட அம்மா அந்த அளவுக்கு பாசத்தை கொட்டி வளர்த்தாங்க..சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்தியும் வைச்சாங்க”என்று எதிர்வாதம் புரிய..
“அப்படி பாசமா வளர்த்தவங்களை விட்டுட்டு வர்ற அளவுக்கு காதல் பெருசாகிடுச்சுல்ல வேணி”என்றவனை என்ன செய்யவென்றே தெரியவில்லை.
தான் செய்தது தவறென்று அவளுக்கு தெரியும்..
‘ஆமாம்.நான் தப்பு தான் செஞ்சுட்டேன்’என்ற உண்மையை ஒத்துக்கொண்டு ஒரு வார்த்தை திருப்பி சொன்னால்,நிச்சயம் அது அவனுக்கு வருத்தத்தை தான் கொடுக்கும். இந்த பதில் எதிர்காலத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை உண்டு பண்ணலாம் என்பதாலையே அந்த கேள்விக்கு பதில் சொல்லவேமாட்டாள்.
இப்போது மீண்டும் அப்படியே கேட்க,பட்டென்று,”ஆமா..என் காதல் எனக்கு பெருசு தான்”உண்மையை சொல்லவும்..அந்த பதில் அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்ததால்,மகிழ்ச்சியாகவே அந்தப் பொழுது கழிந்தது.
சில நேரம் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் மனதில் வைத்துப் பேசினால் தான் சந்தோஷமாய் பிழைக்க முடிகிறதப்பா…..!!!!

Advertisement