Advertisement

18
கல்லூரிக்கு அரசு சென்றபோது,முதல்வரின் பிஏ,அவனை அமர சொல்லிவிட்டு,”சார் கேண்டின்ல சாப்பிட போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்”எனவும்,
“ஓகே மேம்”என்றவன் அவருக்காக காத்திருந்தான்.
சரியாய் ஒன்பது அடித்த போது அவர் தனது அறைக்குள் நுழைய,இவனை பார்த்தவர்,”உள்ள வா அரசு”என்றவர் முன்னே செல்ல,தயக்கத்துடனையே அவர் எதிரில் நின்றான்.
“உட்கார்-ப்பா”
“பரவாயில்ல சார்”
“நா சொல்றேன்.உட்கார்”அதட்டவும்,உடனே அமர்ந்துவிட்டான்.
“அம்சவேணி எப்படியிருக்காங்க?”-விசாரிக்கவும் அதிர்ந்து போனான்.
கல்லூரியில் இதுவரை யாருக்குமே தெரியாதே? ஒருவேளை ‘துக்க’வீட்டுக்கு போன சமயம்,யாரும் சொல்லியிருப்பாங்களோ?-குழப்பத்துடனையே அவரை பார்க்க,அவனது அதிர்ச்சியில் சிரித்தவர்,” உனக்கு கல்யாணம் ஆன உடனே எனக்கு நியூஸ் வந்துடுச்சு”எனவும் இன்னும் அதிர்ந்து போனவன்,
“பிரவீன் சொன்னானா சார்?”குழப்பத்துடன் கேட்டான்.
“உன்னோட நண்பன் இல்லப்பா.என்னோட நண்பன் சொன்னான்”
இன்னும் அவன் முகம் தெளியாதிருப்பதை உணர்ந்தவர்,”கண்ணன் சொன்னான்-ப்பா.உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டு நேரா இங்க தான் வந்தான்.மதிய வரைக்கும் என்கூட வாய் ஒட்டாம பேசிட்டு இருந்தான்.மறுநாளே அவன் நம்மள விட்டுட்டு போயிடுவான்னு எதிர்பார்க்கல”
கண்ணில் கைக்குட்டையை வைத்து நாசூக்காய் ஒற்றிக்கொண்டார்.
”உனக்கு படிப்பு முடியற வரைக்கும் இதையெல்லாம் பேச வேண்டாம்னு தான்,அமைதியா இருந்தேன்”என்றவர் சிறு இடைவெளிவிட,அரசுவும் மௌனமாகவே இருந்தான்.
கல்லூரி முதல்வரும்,கண்ணனும் நெருங்கிய நண்பர்கள் என்று அரசுவிற்கு நன்றாகவே தெரியும்.தாங்கள் கடை நடத்தும் இடத்தின் அருகில் இருக்கும் கல்லூரியை விட்டுவிட்டு சற்று தூரம் உள்ள இந்த கல்லூரியில் வந்து சேர்ந்ததற்கு காரணமே,இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் தான். 
ஸ்காலர்ஷிப்,வங்கியில் லோன் என்று அனைத்திற்கும் வழி காட்டியவர் இவரே.கண்ணன் சொன்னதால் தான் இதை செய்தார்.அவ்வளவு பிணைப்பு இருவருக்குமிடையில் இருந்தது.
ஒருவேளை கண்ணன் உயிருடன் இருந்திருந்தால்,முதல்வருக்கு தன் திருமணம் எப்படி தெரிந்தது என்று எண்ணியிருக்கவே மாட்டான்.
‘அண்ணாச்சி சொன்னாரா சார்’-வெட்கப்பட்டுக்கொண்டே கேட்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.இப்போது அப்படியில்லையே!!
அங்கிருந்த அமைதியை கல்லூரி முதல்வர் ராஜா தான் கலைத்தார்.
“உனக்கு கல்யாணம் பண்ணி வைச்ச கையோட,என்னை தான் வந்து பார்த்தான்.உன்னோட எதிர்காலத்துக்கு நல்லவொரு வழிசெஞ்சு கொடுக்கணும்னு சொன்னான்.அவனோட கடையை நீ பெருசுபடுத்தி நடத்தலாம்னு சொல்லிட்டு இருந்ததா சொன்னான்.ஆனால் அவனுக்கே அது சரிப்பட்டு வரும்னு தோணலை.
என்ன தான் உன்னை வொர்கிங் பார்ட்னர் போல சேர்த்துக்கிட்டாலும்,தன்னோட குடும்பத்து ஆளுங்க பிரச்சனை பண்ணுவாங்க.எனக்கு பின்னாடி கோர்ட்,கேஸ்னு அலையணும்.
அதுவும் இல்லைன்னா,என்னோட உடன்பிறப்புக்கள் கோவில் கோவிலா போய் அரசு நல்லாயிருக்கக் கூடாதுன்னு செய்வினை பண்ணிட்டு வருவாங்கன்னு எல்லாம் சொன்னான்”எனவும் இவனுக்கு கண் கலங்கிப் போயிற்று.தன்னைப் பற்றி யோசிக்காமல் போய்விட்டாரே என்று சிறுபிள்ளை போல் எண்ணியதெல்லாம் நினைத்து வெட்கமாக இருந்தது அவனுக்கு..
கடைசி நாள் கூட தன் எதிர்கால வாழ்க்கையை பற்றியே யோசித்திருக்கிறார் என்று எண்ணும் போது,எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.ஏதோ ஒரு நிறைவு..அவரது பாசத்தை அனுபவித்தவன் தான் என்றாலும்,பெற்றவர்களை விட,தன்னை பற்றி யோசித்த அந்த உள்ளத்தை எண்ணி எண்ணி பூரித்துப் போனான்..இன்னும் மிச்ச விஷயத்தை ராஜா சொல்லவில்லையே? சொல்லும்போது இன்னும் உணர்ச்சிவசப்பட்டுப்போவான்.
தான் அழைத்த விவரத்தை இப்போது நேரடியாகவே சொல்ல ஆரம்பித்தார்.
“நம்ம கேண்டின் இருக்கு இல்லையா அரசு.அது விலைக்கு வருது.நம்ம சிங்-னால அதை நடத்த முடியல.வயசாகிடுச்சு,வெளிநாட்டுல இருக்க பிள்ளை கூடவே போய் செட்டில் ஆகப் போறேன்னு சொல்றார்.உனக்கே தெரியும்.இந்த காலேஜ் மொத்த இடமும் அவர்கிட்ட இருந்து தான் வாங்கினோம்.அந்த கேண்டின் இருக்க இடத்தை மட்டும் தராம,கேண்டின் நடத்த அனுமதியும் நம்ம நிர்வாகத்துக்கிட்ட வாங்கிட்டார்.
இப்போ அந்த இடத்தை முழுவதுமாவே விற்கறதா சொல்றார்.நம்ம காலேஜ் ஓனர்,அதை வாங்க ரெடியா தான் இருக்கார்.அவர் தான் வாங்கவும் போறார்.இப்போ இந்த புது கேண்டின் காண்ட்ராக்ட் பேஸ்ல நடத்தலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.
நம்ம கேர்ல்ஸ் அண்ட் பாய்ஸ் ஹாஸ்டல் காண்ட்ராக்டர் ரெண்டு பேருமே போட்டி போடறாங்க.அவங்ககிட்ட கொடுத்தா,கேண்டின்ல அதிக விற்பனை ஆக வேண்டி,ஹாஸ்டல் ஃபுட் தரத்தை குறைக்க வாய்ப்பிருக்குன்னு யோசிக்கறாங்க..அதனால இந்த காண்ட்ராக்டை நான், உனக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்”எனவும் அதிர்ந்தே போனான்.
இப்படியொரு விஷயத்தை அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவேயில்லை.
“சார்..இதெப்படி சாத்தியம்?”என்றான் புரியாமல்!!
எத்தனையோ பேர் போட்டி போடுவார்களே? நேரடியாக எனக்கே கொடுக்க வேண்டுமென்றால்?-விஷயத்தை ஜீரணிக்கவே அவனுக்கு நேரம் பிடித்தது.
“நான் இருக்கும் போது எல்லாமே சாத்தியம் தான் அரசு.இது இன்னைக்கு முடிவு பண்ணதில்ல.உன்னோட கல்யாண நாள் அன்னைக்கு நானும் கண்ணனும் சேர்ந்து முடிவு பண்ணது!! முன்னாடி ஒருநாள் எதார்த்தமா பேசினதை ஞாபகத்துல வைச்சிட்டு என்கிட்ட வந்து கேட்டான்.
நானும் சரின்னு சொல்லிட்டேன்.அதுக்கான ஏற்பாடும் பண்ணிட்டேன்.இப்போ என்ன பிரச்சனைன்னா,நம்ம சிங்-க்கு அவரோட பொருட்களுக்கு பணம் கொடுக்கணும்.செட் ப்ராப்பர்ட்டி எல்லாம் ரொம்பவே நல்லா வைச்சிருக்கார்.அதோட இன்னுமே அதில சில மாற்றங்கள் செய்யணும்.
ஆபீஸ் ஸ்டாப்,ப்ரோபசர்ஸ் எல்லாம் தனியா உட்கார்ந்து சாப்பிடற மாதிரி கேபின் போடணும்.உணவு வகைகள்ல கூட மாற்றம் செய்யணும்.அதையெல்லாம் நான் உன்னோட பொறுப்பில விட்டுடறேன்.இப்போ என்னோட கேள்வி என்னன்னா,பணத்துக்கு என்ன பண்ண போற?”என்றவர்,எவ்வளவு தொகை என்பதையும் கூறினார்.
இன்னும் தான் சம்மதிக்கவேயில்லையே!இதில் பணம் புரட்ட வேண்டும் என்றால்?-எண்ணியவனுக்கு ஏனோ எதிர்மறையாக,
‘என்னால முடியாது சார்’என்று சொல்ல ‘நா’ எழவில்லை.
மாறாய்,”என்னால அவ்வளவு பணம் புரட்ட முடியும்னு நீங்க நம்பறிங்களா சார்?”பதிலுக்கு கேள்வி கேட்கவும்,
“எனக்கு உன்னோட நிலைமை தெரியும் அரசு.இந்த ஏற்பாட்டை நானும் கண்ணனும் பேசி முடிச்ச அப்போ,முழுப்பணத்தையும் தானே கொடுக்கறதா கண்ணன் ஏத்துக்கிட்டான்.அதுக்காக ஒரு லேண்ட் விற்க ஏற்பாடு பண்ண போறேன்னு சொன்னவன்,கொஞ்சம் பணமும் என்கிட்ட கொடுத்தான்.
அது வெறும் 25 பெர்சன்ட் தான்..என்னால முடிஞ்ச உதவியா,நானும் ஒரு 25 பெர்சன்ட் அமௌன்ட் கொடுக்கறேன்.இது உனக்காக மட்டும் இல்லப்பா.கடைசியா கண்ணன் என்கிட்ட கேட்ட விஷயம் இது! என்னால இதை அப்படியே விட்டுட முடியலை”
இப்போது வெளிப்படையாகவே கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டான்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சார்”உணர்ச்சிகரமாய் சொல்ல,
“நான் கொடுக்கற பணத்தை உன்னால முடிஞ்சப்போ நீ திருப்பிக் கொடுக்கறது தான்,எனக்கு நீ செலுத்தற நன்றிக்கடன் அரசு.அதுக்காக வட்டியெல்லாம் கேட்க மாட்டேன்..நீயும் கொடுக்கறேன்னு முட்டாள்த்தனமா பேசக் கூடாது”எனவும்,
“சரிங்க சார்.மீதிப் பணத்தை எப்போ கொடுக்கணும்”என்றான் புது உத்வேகத்துடன்!
எப்படியாவது பணத்தை புரட்டிவிட வேண்டும்..புரட்டி விடுவேன், என்ற நம்பிக்கையோடு கேட்க,”இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு அரசு.அதுக்குள்ள நீ பணம் கொடுத்திடணும்.அப்போ தான் மத்த விஷயங்களை நான் பார்க்க முடியும்.முடிஞ்ச அளவுக்கு நீ சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணு.இது போட்டி,பொறாமை உள்ள உலகம்.நீ முந்திக்க பார்”
“நிச்சயமா சார்”உறுதி கொடுத்துவிட்டு வந்தான்.
அவனுக்கு இன்று நடந்ததெல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.கண்ணன் உதவி கேட்டிருந்தால்,அதை செய்யவும் மனம் வேண்டுமல்லவா!
ராஜா நினைத்திருந்தால்,கண்ணன் கொடுத்த பணத்தை பற்றி பேசாமலே இருந்திருக்கலாம்.இல்லையேல் வேறு யாருக்காவது டெண்டரை கொடுக்க முயற்சித்திருக்கலாம்.ஆனால் எதிர்மறையாக அவர் எதுவுமே செய்யவில்லையே? உலகில் இவரை போல் நல்லவர்கள் இருக்கவும் தான் செய்கிறார்கள்.
 
யாரிடம் பணம் கேட்கலாம் என்ற எண்ணமிட்டபடியே வீடு வந்து சேர்ந்திருந்தான்.பெரிய தொகை கொடுக்கும் அளவிற்கு யாருமில்லை.ஆனால் சிறிய அளவில் கடன் கொடுக்க நிறைய பேர் இருந்தனர்.ஆனால் வட்டி அதிகமே? என்ன செய்வது?
யோசித்தபடியே வீட்டுக்குள் வர,அவன் வரவையறிந்து கதவை திறந்து வைத்திருந்தவள்,அவனின் முகக்குறிப்பை வைத்து,கவலையை உணர்ந்து,,ஏதும் கேட்காது,குடிக்க நீரை கொண்டுவந்து கொடுத்தாள்.
நீரைப் பருகியவன்,மனைவியிடம் ஒன்றையும் விட்டுவிடாமல் அப்படியே சொல்லிவிட்டான்.
“நிஜமாவாங்க”ஆச்சர்யப்பட்டவள்,
“நான் தான் சொன்னேன்ல-ங்க.கடவுள் இன்னொரு வழியை காட்டத்தான் இந்த வழியை அடைச்சிருக்கார்னு!!”என்றவளுக்கோ தாங்க முடியாத ஆனந்தம். 
“பணம் வேணும் வேணி.என்ன செய்யன்னு தெரியல?”
(வாசகர்களுக்கு என் விளக்கம்.நான் பொதுவாக பணமதிப்பு இன்னதென்று என் கதையில் குறிப்பிடுவதில்லை.பணமதிப்பு இன்று அதிகமாய் இருக்கும்,பிறிதொரு நாளில் நிச்சயம் குறைவாய் மாறிவிடும்.அதனால் இங்கும் எவ்வளவு தொகை என்பதை கூறவில்லை)
கணவனின் கேள்விக்கு அவளிடம் விடையிருந்தது.கட்ட வேண்டிய தொகையில் இருபது சதவீதம் அவளாலே கொடுக்க இயலும்.அவளிடம் நகை இருந்தது.இதுவரை ஒருதரம் கூட நகையை பற்றி பேசியதில்லை.அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.இப்போது சொல்லலாம் என்று பார்த்தால்,நீலவேணி கண்முன் வந்து பயம் காட்டினார்.
“பணம்,நகையெல்லாம் பிடுங்கிட்டு நட்டாத்துல விட்டுடுவான்டி”என்று சொல்வது போலிருக்க,சிறிது நேரம் தான் தயங்கினாள்.
ஆனால் அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியவில்லை.
‘அவங்க என்னை ஏமாத்த மாட்டாங்க.எனக்கு நான் தேர்ந்தெடுத்தவர் மேல நம்பிக்கையிருக்கு’அம்மாவிடம் மானசீகமாய் சொல்லிக் கொண்டவள்,
“என்னங்க,என்கிட்ட கொஞ்சம் நகை இருக்கு.ஆனால் அது இப்போ பேங்க்ல இருக்கு.ரொம்ப குறைவான தொகைக்கு என் பேர்ல தான் அடகு வைச்சிருக்கோம்.நாம வேணா,அதிகமான தொகைக்கே வைக்கலாமா?”எனவும் ஆச்சர்யப்பட்டுப் போனான்.
இதுவரை மனைவியிடம் நகை இருக்கிறதா..இல்லையா? என்றெல்லாம் அவன் யோசித்ததேயில்லை.அவன் பணம்,நகைஎ ன்று எதையுமே அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
‘நல்ல வாழ்க்கை துணையாய் இருந்தால் போதும்’-இதுவே அவனது நினைப்பாக இருந்தது.
வேணி இப்படி கேட்டதும்’ஏன் இவ்வளவு நாளா இதை சொல்லலை’என்றெல்லாம் அவனுக்கு கேட்க கூட தோன்றவில்லை.
அவளிடம்,”வேண்டாம்மா,நான் வேற வழில பார்த்துக்கறேன்”என்றான் அரைமனதாய்!
“ஏன் மாமா,என்கிட்ட வாங்கினா கவுரவ குறைச்சலா பார்க்கறிங்களா? இல்லை இவ்வளவு நாளா சொல்லாம,இப்போ சொல்றேன்னு கோபத்துல வேண்டாம்னு சொல்றிங்களா?”
“அப்படியெல்லாம் இல்ல வேணி.இது உன்னோட நகை தான்.ஆனால் உன்னோட உழைப்பில வந்தது இல்லையே! எப்படியும் அத்தை தான செஞ்சிருப்பாங்க?”
இதென்ன கேள்வி என்பது போல பார்த்தவள்,”பொண்ணுக்கு பிறந்த வீட்டுல இதையெல்லாம் செய்வாங்க தான மாமா”என்றாள்.
“கண்டிப்பா செய்வாங்க தான்.பொண்ணுக்கு நகை போட்டு அழகு பார்க்கணும்னு நினைப்பாங்க.இப்படி கல்யாணம் ஆன மூனே மாசத்துல அடகுக்கு போக விரும்ப மாட்டாங்க”எனவும்,அம்மாவுக்காக தான் யோசிக்கிறான் என்று புரிந்து போக,
“நான் அம்மாகிட்ட பேசறேன் மாமா.அவங்களும் சரின்னு தான் சொல்வாங்க.”என்றவள் நினைவு வந்தவளாய்,
“நம்ம கல்யாண நாளன்னைக்கு கண்ணன்-ண்ணா ஒரு பைல கொஞ்சம் பணம் கொடுத்துட்டு போனாங்களே.அது அப்படியே பீரோல தானே வச்சிருக்கீங்க மாமா.அதை எடுத்தும் யூஸ் பண்ணிக்கலாமா”என,
“அந்த பணத்தை எடுக்கற மாதிரி இருந்தா எப்போவோ எடுத்து செலவு பண்ணியிருப்பேன் வேணி.இது அவரோட பணம்.எனக்கு அதையெடுத்து செலவு செய்ய மனசேயில்ல..எதுக்காக நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு போனார்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியலை?”
“என்ன நீங்க கொடுத்தீங்களா?”
“ஆமா,நான் காலேஜ் பீஸ் கட்ட அவர்கிட்ட தான் கடன் வாங்கியிருந்தேன்.ஸ்காலர்ஷிப்,லோன் அமௌன்ட் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு காலேஜ் பீஸ் கட்ட வேண்டிய தேதி வந்துடும்.அதனால அண்ணாச்சிக்கிட்ட கடன் வாங்கி கட்டிட்டு,பணம் வர்றப்போ திருப்பி கொடுத்துடுவேன்.இந்த தடவை கொடுக்கவும்,மறந்துட்டு இங்கேயே வைச்சுட்டு போயிட்டார்”என்றான்.
‘இதென்ன மாதிரியான உறவுப்பிணைப்பு இவர்கள் இருவருக்கும்!! எத்தனை எத்தனை உதவிகள்..இதோ இப்போது இந்த பணத்தையும்,நகையையும் வைத்து பணத்தை கட்டிவிட்டால்,மிச்சமிருக்கும் இருபது சதவீத பணத்தை புரட்டுவது வெகு எளிதே..வட்டி அதிகமாயிருந்தாலும் சமாளித்துவிடலாம்…
எல்லாம் பார்த்துப் பார்த்து செய்ய,இவளுக்கும் கண் கலங்கிப் போயிற்று.
“அவர் உங்களுக்காக தான் கொடுத்துட்டு போயிருக்கார்.முன்னாடியே அவருக்கு எதுவும் தெரிஞ்சிருக்கும்.அதனால தான் எல்லா விதத்திலயும் உதவி செஞ்சுட்டுப் போயிருக்கார்..இந்த பணத்தையும் நாம எடுத்துக்கலாம் மாமா..நாமளும் ஒருநாள் நல்ல நிலைக்கு வரும் போது,இந்த பணத்தை யாரோட படிப்பு செலவுக்காவது கொடுத்திடலாம்”என்றெல்லாம் எடுத்து சொல்ல,அவளது இறுதி வாக்கியம் அவனுக்கு புதியதோர் உத்வேகத்தை கொடுத்தது.
இதுநாள் வரை அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்றெல்லாம் எண்ணியதில்லை.ஏனென்றால் அவனுக்கே பணத்திற்கு பஞ்சமென்ற நிலை! 
இப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி,தானும் யாருடைய படிப்பு செலவுக்கு உதவினால் என்ன?-நினைப்பே அவனுக்கு தித்திப்பைக் கொடுத்தது.
அதே உற்சாகத்துடன்,”நிச்சயமா வேணி.நாம உதவி செய்வோம்”என்றான்.
கணவனின் சந்தோஷத்தில் அவளுக்கும் அளவுக்கதிகமான மகிழ்ச்சியே!!
அதே மகிழ்ச்சியுடன்,அம்மாவிற்கு போன் செய்து விவரத்தை சொல்ல,
“முட்டாப்பைய பெத்த மவளே..அப்படி எதுவும் நகையை தூக்கி கொடுத்துடாதடி நான் நாளைக்கே அங்க வர்றேன்.அதுக்கு பொறவு பேசிக்கிடலாம்”எனவும் முகம் சுருங்கி போயிற்று.
ஆனால் மனதில் ஒரு திடம்.தாய் எவ்வளவு திட்டினாலும் சரி! நகையை கணவனின் தொழிலுக்கு கொடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.மனதில் பெரும் உறுதியே எடுத்துக்கொண்டாள். 

Advertisement