Advertisement

17
இரண்டு நாட்கள் கழித்து…..
இன்று வேலையில் சேர்வதற்கு வர சொல்லியிருந்ததால்,அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அரசு.பத்து மணிக்கு தான் வேலை தொடங்கும்.ஆனால் இவனிருக்குமிடத்திலிருந்து அலுவகத்திற்கு,இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால்,ஏழரை மணிக்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தான்.
“சாப்பாடு ரெடியாகிடுச்சா வேணி”அறையிலிருந்தே கேட்டவனுக்கு..
“நீங்க வாங்க.ரெடியாகிடுச்சு”என்று பதில் சொன்னவளின் குரலிலோ அவனுக்கு மேல் பதட்டம்.
முதல் நாள் வேலைக்கு செல்வது அவனா,அவளா?அந்த அளவுக்கு அலப்பறை செய்து கொண்டிருந்தாள்.நேரத்திலையே எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்துவிட்டாள்.கடந்த நான்கு நாட்களாக கணவனின் கைவண்ணத்தில் உண்டாகிவிட்டது.இன்றும் அப்படியிருக்க முடியாதில்லையா?
குழம்பை வலது கையில் ஊற்றி சுவை பார்த்தவள்,”அவங்க செய்யற அளவுக்கு ருசியா இல்லை”உதட்டைப் பிதுக்கிக்கொண்டு,உணவுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தாள்.
அவனும் வரவே,அவனுக்கு பரிமாறிவிட்டு,பூஜையறையில் விளக்கேற்றவும்,அரசுவும் கடவுளை கும்பிட்டுவிட்டு கிளம்பினான்.
இருவரிடமிருந்த ஊடல் எல்லாம்,இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் காணாமல் போயிருந்தது.புதுமண தம்பதியர் சமாதானம் ஆவதற்கு பெரிதாய் காரண காட்சிகள் வேண்டுமா என்ன? கண்களிரண்டும் கவ்விக்கொண்டால்,மற்றதெல்லாம் மறந்து தான் போகிறது இருவருக்கும்.
அரசு கூட கிண்டல் செய்வான்..
“என்னடி மாயாவி நீ”பாட்டாக பாட ஆரம்பித்துவிடுவான்.அதற்குமேல் அந்த பார்வையை தாங்கும் சக்தியே அவளுக்கிருக்காது.சிவந்து போன முகத்துடன் தலை தாழ்த்திக் கொள்வாள்.இல்லையேல் வேறுபக்கம் பார்ப்பது போல் நடிப்பாள். 
வேணியோ முணுமுணுப்பாய்,”நாந்தான் என்னடா மாயாவி நீன்னு சொல்லணும்”மெல்லிய குரலில் சொல்லும்போதே, அவனுக்கு போதையேறும்.
“எங்க,அதை சத்தமா சொல்லு பார்ப்போம்!!”என்றால் வாயை திறக்கவேமாட்டாள்.
வேண்டுமென்றே அருகில் நெருங்கி உரசிக்கொண்டு,,”அப்போ சொன்ன மாதிரி,முணுமுணுப்பாவே சொல்லு.நா அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்”என்றால்,பதில் பேசாது கட்டிக்கொள்வாள்.
ஏதோவொரு விதத்தில் இருவரும் கவரப்பட்டிருந்தார்கள். 
கடந்து சென்ற இந்த நான்கு நாட்களும், அவர்களை இன்னும் இறுகப் பிணைத்துவிட்டிருந்தது.
வேலைக்கு செல்லும் முன் மீண்டுமொருமுறை மனைவியிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்ப,சரியாக அந்நேரம் போன் அடித்தது.
“ப்ரின்சி சார் காலிங்”என்று வர,
‘இவர் எதுக்கு இந்நேரத்துக்கு கூப்பிடறார்.ரிசல்ட் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே.பேப்பர் கரெக்ஷன்ல,இல்ல என்னோட ஐடெண்டில எதுவும் மிஸ்டேக்ஸ் வந்திருக்குமா’நொடியில் குழம்பிப் போனான்.
ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை,முதலாம் ஆண்டு மாணவனுக்கு கடைசி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடாமல்,’அது பிரச்சனை,இது பிரச்சனை’என்று பல்கலைகழகத்திலிருந்து இழுத்து அடித்தார்கள்.
தனக்கும் அப்படி நடந்துவிட்டால்,யோசித்த மறுநொடியே,’பேசினா தெரிஞ்சுட்டுப் போகுது’-உடனே அழைப்பை எடுத்தான்.
“சொல்லுங்க சார்”
“அரசு,நீ இன்னைக்கு காலேஜ் வாப்பா.மார்னிங் ஒன்பது மணிக்கு நான் ப்ரீ.அதுக்கு அப்புறம் எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு.நீ சீக்கிரமா வந்துடு.நா என்னோட பிஏகிட்ட அப்பாயின்மென்ட் கொடுக்க சொல்லிடறேன்”எனவும்,
‘எதற்கு வர சொல்கிறார்’என்று புரியாமல்,”சார்..இன்னைக்கு பர்ஸ்ட் டே வேலைக்கு போறேன்.இன்னொரு நாள் வரட்டுமா?”-ரொம்பவே தயங்கிய குரலில் தான் கேட்டான்.
“கங்கிராட்ஸ் அரசு”என்றவர்,
“நா கண்ணன் பத்தி பேசணும்-ப்பா.அதுவும் இன்னைக்கே பேசணும்”எனவும்,என்ன பதில் சொல்வதென்று சில வினாடி தயங்கியவன்,  
“நா வந்துடறேன் சார்”என்று சொல்லிவிட்டான்.
அவனது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஆச்சர்யம்,
“என்னங்க? ஆபிஸ்ல இன்னைக்கு சரியா பத்து மணிக்கு வந்துடனும்.ஒரு நிமிஷம் தாமதமானாலும் வேலைக்கு எடுத்துக்க மாட்டோம்.அடுத்த கேண்டிடேட்-க்கு வாய்ப்பு கொடுத்துடுவோம்-னு சொன்னதா சொன்னிங்களே.இப்போ காலேஜ் போயிட்டு போக முடியுமா?”
“அதே கேள்வி தான் எனக்கும்”என்றவன் ஷூவை கழட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து அமர்ந்தான்.
“வேலை முக்கியமா?..கல்லூரி முதல்வரை சந்திப்பது முக்கியமா?”-தீவிரமாக யோசித்தான்.
ஒருமுடிவுக்கு வர முடியாத நிலையில்,கண்ணனை மனதில் கொண்டு வந்தான்.
“நா செத்துட்ட உடனே நீயும் என்னை மதிக்கமாட்டேங்கற பார்த்தியா?”-கேட்பது போலிருந்தது அவனுக்கு!!
அவ்வளவு தான்.மற்றதெல்லாம் பின்னுக்கு போய்விட்டது.
நல்ல சம்பளம்.நல்ல வேலை தான்.இன்னொருமுறை இதுபோல் அதிர்ஷ்டம் கிட்டுமா என்று தெரியவில்லை.ஆனால் இப்போது கல்லூரி செல்லாமல்,வேலைக்கு சென்றால்,காலம் முழுவதும் இந்த நினைப்பு மனதை அரிக்க செய்யும் என்பதால்,வேறு வழியில்லாமல் கல்லூரிக்கே செல்ல முடிவெடுத்து,”நா காலேஜ் போயிட்டு வர்றேன் வேணி”எனவும் அதிர்ந்து போனாள்.
‘நல்ல வேலை.நல்ல சம்பளம்.இப்படி முடிவெடுத்துட்டாங்களே? அதவிட அம்மாக்கு என்ன பதில் சொல்லப் போறேன்?’-பயம் பதற்றம் பற்றிக்கொள்ள,
மறந்தும் அவளால்,”நீங்க வேலைக்கே போங்களேன்”என்று சொல்ல முடியவில்லை.
“சரிங்க”ஒற்றை பதிலில் அவன் ஆச்சர்யமாக தான் பார்த்தான்.
உதட்டில் சிறு புன்னகையுடன்,அவள் நெற்றியில் முத்தமிட்டு,”வாழ்க்கைல நிறைய பார்த்துட்டேன் வேணி.படிப்பு,நிலையான வருமானம்,இப்படி எதுவுமே இல்லாத போதும் கூட,நா என்னோட நம்பிக்கையை கைவிட்டதில்ல.
காரணம் அண்ணாச்சி தான்.இப்போ அவர் பேரை சொல்லி,பேசக் கூப்பிடும் போது என்னால போகாம இருக்க முடியாது..என்ன…இந்த வேலை தான் போச்சு! ஆனா இது போல நல்ல வேலைல சேர என்னால முடியும்.எனக்கு தகுதி இருக்கு.என்ன கொஞ்ச நாள் ஆகலாம்..எல்லாம் நன்மைக்கே”புன்னகையுடன் சொல்ல,
“கடவுள் நமக்காக வேற நல்லவொரு வழியை காட்ட நினைக்கறார் போல!அதனால தான் இந்த வேலைல சேர வேணாம்னு சொல்லிட்டார்.நீங்க போயிட்டு வாங்க”கவலை விடுத்து சொல்லவும்,கிளம்பி சென்றான்.
அவன் மனதில் வருத்தம் இருந்தது தான்.இந்த நான்கு நாட்களில், கிடைக்கும் வருமானத்தை வைத்து எப்படியெல்லாம் வாழ்வை நடத்தலாம் என்று பெரிய திட்டமே போட்டிருந்தான்.
இப்போது எல்லாம் கானல் நீராக,’திட்டமிடலுக்கும் எனக்கும் நெடுந்தூரம் போல!! கடைசி நேரத்துல எல்லாமே தரைமட்டமாகிடுதே’என்ற கவலையில்,
‘இனி திட்டமே போடக் கூடாதுப்பா சாமி’வருத்தத்துடன் முடிவு செய்தான்.ஆனால் அப்படி இருக்க முடியாதில்லையா? வாழ்வில் ஜெயிப்பதற்கு திட்டமிடல் அவசியம்.
இருமுறை அவனது திட்டமிடல் தோற்றுவிட்டது.ஆனால் மூன்றாம் முறை…? பார்ப்போம் எப்படியிருக்கும் என்று..!!!!!

Advertisement