Advertisement

16
காலைப்பொழுதில் விடியல் ஆரம்பித்து,நேரம் பத்தாகியிருந்தது.வெகு நேரமாய்,மூடியிருந்த கதவை பார்ப்பதும்,மணியை பார்ப்பதுமாய் அமர்ந்திருந்தான் அரசு.
ஒருக்கட்டத்தில் பொறுக்க முடியாமல்,”வேணி.நீ இப்போ வெளில வரப்போறியா? இல்லையா?.நீ உள்ள போய் இருபது நிமிஷம் ஆச்சு.இப்போ நீ கதவை திறக்கலை…”சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் போதே,கதவை திறந்த வேணி,
சேலையை சரி செய்துகொண்டே,”புடவை கட்ட நேரமாகிடுச்சு.சாரி”சின்னப்புன்னகையில் மன்னிப்பு வேண்ட,புதுமாப்பிள்ளைக்கு அந்த மன்னிப்பே என்னவோ செய்தது.
“சரி.போகலாம் வா”எனவும்,ஓர் ஆர்வத்தில் முந்திக்கொண்டு வேணி சொல்ல..அவளின் பின்னே பார்த்தவனோ அதிர்ந்து போனான்.
“ஏய் வேணி..என்னதிது”எனவும் திரும்பியவள்,
“என்னங்க?”புரியாமல் வினவினாள்.
“யார்டி உனக்கு இப்படியெல்லாம் பிளவுஸ் தைச்சு கொடுக்கறது?”அடக்கப்பட்ட ஆத்திரத்திம் அவனிடம்!!
“நான் தான் தைச்சேன் மாமா”எச்சில் விழுங்கியபடி சொல்ல,முறைத்தவன் எதுவும் சொல்லாமல் வெளியே போகும் முடிவை கைவிட்டு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அவளுக்கும் அவனின் கோபம் ஏனென்று புரியவே செய்தது.முதுகுப்புறம் பாதிக்கு மேல் தெரியுமாறு இருக்கும் அந்த பிளவுஸ் அவளுக்கு   மிகவும் பிடித்த ஒன்று.இப்போது பலரும் அப்படி தானே அணிகிறார்கள்..ஆனால் அரசுவுக்கு அதெல்லாம் பிடிக்காதென்பது இவளுக்கு எப்படி தெரியும்?
அவனருகே வந்தவள்,சமாதானமாய்,”நா இனிமேல் இது மாதிரி போடலை”எனவும் விழுக்கென்று நிமிர்ந்தவள்,
“அப்போ இதுக்கு முன்னாடி இப்படித்தான் போட்டுட்டு இருந்த?”அதிகாரமாய் கேட்க..
“எப்போவோ ஒருதடவை தான் சேலையே கட்டுவேன்..அதுவும் ஒரு மணி நேரத்துக்கு மேல கட்டினதில்ல”மழுப்பலாய் பதில் சொல்ல,
“அப்போ அப்படி தான் போட்டிருக்க.கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி செய்வியா?போடற உனக்கு கூச்சமாயில்லைன்னாலும்,பார்க்கறவன் கண்ணுக்கு அது எப்படியிருக்கும் தெரியுமா?”எனவும்,
‘கணவனுக்கு எப்படியிருந்திருக்கும்’ஆர்வம் மேலோங்க..
“எப்படியிருக்குமாம்?”அப்பாவியாய் கேட்டுவிட்டவள்,ஓரக்கண்ணால் பார்க்க…
‘கண்ட்ரோல் அரசு.ட்ராக் மாத்தறா..’முயன்று மனைவியை முறைத்தவாறே,
“எனக்கு எப்படியிருந்ததா..?அப்படியே குளுகுளுன்னு இருந்துச்சு”எரிந்து விழுந்தவன்,
“என் பொண்டாட்டிய நாலு பேர் இப்படி பார்த்தா எனக்கு அப்படியே சந்தோஷமா இருக்குமாக்கும்..!!லூசு மாதிரி கேட்கறா பாரு கேள்வி..அடக்க ஒடுக்கமா ட்ரெஸ் போடறத விட்டுட்டு,’அவன்  இப்படி பார்க்கறான்,அப்படி பார்க்கறான்’-னு கண்ணை கசக்க வேண்டியது!! இனிமேல் இப்படி போடறத பார்த்தேன்..என்ன செய்வேன்னே தெரியாது?”கோபத்தில் பொரிந்துவிட்டு திரும்பி படுத்துவிட்டான்.
“அதான் இனி அப்படி போட மாட்டேன்னு சொல்றேன்ல”கொஞ்சும் குரலில் சொல்ல திரும்பவேயில்லை அரசு.
‘வெளில போகலாமான்னு எவ்வளவு ஆசையாய் கூப்பிட்டாங்க.எல்லாத்தையும் கெடுத்திட்டியே பாவி’ தன்னையே திட்டிக்கொண்டு,கணவன் அருகில் சென்று பார்க்க,அவனோ நன்றாக உறங்கிவிட்டான்.
இவளுக்கும் கண்ணெல்லாம் எரிவது போலிருக்க,வேறு வழியில்லாமல் தானும் படுத்து தூங்கிவிட்டாள்..நேற்று இரவு  வரை தான் கணவன் அருகில் இருக்கவே வெட்கம்.ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ்!!
ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.கண் விழித்த அரசுவிற்கு,முதலில் பட்டது இன்னும் அதே புடவையை தான் கட்டியிருக்கிறாள் என்பதே..ஆனால் கோபம் வராமல் மோகம் தான் வந்தது.
தன்னை ஈர்க்கும் முதுகில் ஆழமாய் முத்தமிட,ஈர இதழ்களின் ஸ்பரிசத்தால்,கூசி சிலிர்த்து நகர்ந்தாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவன் மீண்டும் மீண்டும் அழுத்தமாய் தன் தீண்டலை தொடர,முழுதாய் விழித்துக்கொண்டவள்,அவனை நோக்கி திரும்பவும்,பேசவிடவில்லை அவன்.
அவளை எப்போதும் ஈர்க்கும் அந்த கண்கள் பேசிய மொழிகளெல்லாம் அவளுக்கு புதுக்கவிதையாய் இனிக்க,தானும் இணைந்து இலக்கணமில்லா இக்கவிதைக்கு இனிமை சேர்த்தாள்.
 
இனிய பொழுதாய் நேரங்கள் கடக்க,அவனுடைய நெஞ்சில் அடைக்கலமாகிவிட்டவளுக்கு,’நீளும் பாதை எப்படியிருந்தாலும் கணவனுடன் இருந்தால்,தன்னம்பிக்கையோடு கடக்கலாம்என்றே தோன்றியது.
தன்னுடைய உணர்வுகளையும் மதித்து,புரிதலோடு தன்னை போற்றும் தன்னவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று.
‘தன்னுடைய தேர்வு சரி தான்’இம்முறையும் ஒத்துக்கொண்டாள்.
தன்னுடைய உடையை பற்றி பேசியது மட்டும் சிணுக்கம் கொடுக்க,முதலில் தான் வளர்ந்த சூழ்நிலையை தெளிவுபடுத்த நினைத்தாள்.
கண் மூடி இருந்தவனின்,நெற்றியில் முத்தமிட்டவள்,எழுந்து சென்று குளித்துவிட்டு சமையல் வேலையை ஆரம்பித்தாள்.
அவனும் குளித்துவிட்டு வர,மலர்ச்சியோடு அவனோடு உண்டவள்,வலுக்கட்டாயமாய் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு,”இனி இந்த மாதிரி டிசைன் வைச்ச பிளவுஸ் எல்லாம் போடக் கூடாதா?”எனவும் முறைத்தவன்,
“என்ன முதல்ல இருந்து ஆரம்பிக்கறியா? என்னைப்பொறுத்தவரை நான் சொன்னதில தப்பில்லை. இந்த மாதிரி உடம்பை காட்டற துணி போடறது உனக்கும் நல்லதில்லை.எங்கிருந்து இந்த மாதிரி போட கத்துக்கிட்ட நீ?”கோபப்பட,
அவளோ நிதானமாய்,”எங்க பக்கம் பொம்பளைங்க இப்படி தான் போடுவாங்க”என்றவள் மனதிற்குள்,
‘என்னோட அம்மாவே இப்படி தான் போடுவாங்க’என்று சொல்லிக்கொண்டாள்.
அவன் முறைக்கவும்,”உண்மைய தானுங்க சொல்றேன்.எங்கப்பக்கத்துல எல்லாரும் இப்படித்தான் போடுவாங்க.இதை எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை..என்னோட அம்மா சர்க்கஸ் கம்பெனில தான் வேலை செய்யறாங்கன்னு உங்களுக்கு தெரியும் தானே”எனவும்..
அவரைப்பற்றி முன்பே விசாரித்திருந்தால்,சிலர் சொன்ன பிற கருத்துக்களை எல்லாம் காற்றில்விட்டுவிட்டு,மனைவியை மட்டுமே கருத்தில் கொண்டு,அவரை கண்டுகொள்ளாமல் விட்டான்.
அவளின் கேள்விக்கு,”தெரியும்”ஒரே வார்த்தையில் முடித்தும் கொண்டான்.
“அங்க டான்ஸ் தான் முக்கியமான பொழுதுபோக்கே”
“அயிட்டம் டான்ஸ்னு சொல்லு”தன்னையும் அறியாமல் வாயைவிட்டுவிட்டவன்,அவளின் கலங்கிய கண்ணில் சுதாரித்தவன்,
“சாரிம்மா.டக்குன்னு வாயில வந்துடுச்சு”-மனிப்பு வேண்ட,
‘அடிக்கடி இப்படி பண்ணறாங்க’-தோன்றினாலும்,அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல்,
”எல்லாரும் அப்டி தான் சொல்றாங்க.அப்படி நினைச்சு தான் எங்க ஆளுங்களை கண்ட இடத்தில தொட்டு’ரேட் எவ்வளவு’-ன்னு கூசாம கேட்கறாங்க.இதே கேள்வியை அவங்க பொண்டாட்டி,பிள்ளைங்ககிட்ட கேட்டா சும்மா இருப்பாங்களாமா?”கலங்கிய குரலில் கேட்டாலும்,கேள்வியின் தீர்க்கம் புரிய ,தான் இதில் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதிகாத்தான்.
அவளுக்கோ இத்தனை நாள் மனதிலிருந்ததை யாரிடமாவது கொட்டிவிடும் வேகம்.
“நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கணும்,போற்றனும் இப்படி என்னென்னவோ நேரத்துக்கு தகுந்த மாதிரி பெரியாளுங்க எல்லாம் சொல்றாங்க.ஆனா ஒருத்தருக்கு கூட அந்த கலைகளை வளர்க்கற மனுஷங்களோட அத்தியாய தேவைகளை நிறைவேத்தணும்னு தோணலை.எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்னு தோணலை.அஞ்சுக்கும் பத்துக்கும் அடுத்தவன் முன்னாடி உடம்ப காட்டவேண்டிய நிலைமை!
இந்த வாரம் ஷோ இருந்தா,அடுத்த வாரம் இருக்காது.அப்போ வயித்துப்பாட்டுக்கு என்ன பண்ணுறதாம்?”என்று கேட்டவள்,அதற்காக சில பெண்களை விலைமாதுவாக பயன்படுத்துவதை சொல்லக் கூட அவளின் நா கூசியது.
அவளது பேச்சிலே அதை புரிந்துகொண்டவன்,”எல்லாம் ஒருநாள் மாறும்..விடு.இப்போ ஓரளவுக்கு எல்லாருக்கும் படிப்பறிவு இருக்கு.பெண்கள் முன்னேற்றத்துக்கு,சுயதொழில் செய்றதுக்கு நிறைய உதவிகள் கிடைக்குது.அதை எடுத்து சொல்ல தான் சரியான ஆட்கள் இன்னும் இல்லை.
இப்போ பல பேர் இந்த நாட்டுப்புற கலைகளை வளர்க்க,சில ஏற்பாடுகளை செஞ்சுட்டு தான் இருக்காங்க.மாற்றம் ஒரு நாள்ல வந்துடாது.மெல்ல மெல்ல தான் வரும்.நீ இதைப்பத்தி ரொம்ப யோசிக்காத.நா ஏதோ தெரியாம வாயவிட்டுட்டேன்னு சொல்றத விட,இந்த மாதிரி பேசறது எங்க குப்பத்து ஆளுங்களோட வழக்கம்.
என்ன தான் எம்பிஏ படிச்சு முடிச்சிருந்தாலும்,அடிப்படைல நானும் சேரி தான்.பேச்சும் அப்படி தான் இருக்கும்..சில நேரம் என்னையும் மீறி,வார்த்தையை விடுவேன்.எங்கப்பன் கிட்டயிருந்து இது மட்டும் சரியா வந்திருக்கு”என்றவன்,
“நானும் உன்னை மாதிரி ஒரு சூழல்ல இருந்து வந்தவன் தான்.பெரிய அப்பாட்டக்கரெல்லாம் இல்ல”எனவும் அவளிடம்  சிலநொடி மௌனம்.
கணவனின் இயல்பான பேச்சில் கவரப்பட்டவளின் நெஞ்சம் ஆறுதல் அடைய,கொஞ்சம் தெளிந்தவள்“என்னோட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க-ங்க.அதனால தான் இந்த நிழல் கூட என்மேல படக்கூடாதுன்னு பாட்டி வீட்டுல விட்டு வளர்த்தாங்க.அப்படியிருந்தும்,அப்போ அப்போ போகும் போது,சர்க்கஸ் கம்பெனில இருக்க ஆளுங்க செய்யற மேக்கப் எல்லாம் ரொம்ப விரும்பி பார்ப்பேன்.
அந்தக் காலத்து நடிகர்கள் தொடங்கி இந்தக்காலத்து நடிகர்கள் மாதிரி எல்லாம் சூப்பரா நடிப்பாங்க.அவங்க டிரெசிங் சென்ஸ் கூட ரொம்ப அழகா இருக்கும்.சில நேரம் அவங்க சேலை கட்டுற விதம் எல்லாம் ரொம்ப கிளாமரா இருக்கும்..இப்டி பார்த்து பார்த்தே எனக்கு இதில எல்லாம் கொஞ்சம் ஈடுபாடு அதிகம் வந்துடுச்சு”
“ம்ம்ம்ம்.எனக்கு புரியுது வேணி.உன்னோட இந்த ஆர்வத்துக்கு பேசன் டிசைனிங்,மாடலிங் மாதிரி படிச்சா,நல்ல நிலைக்கு வருவ.ஆனா பாரு.எனக்கு இந்த அரைகுறை ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு வெளில சுத்தறது பிடிக்காது.அதனால என்னால ஒண்ணுமே பண்ண முடியாது”-அவளின் சுருங்கிப் போன முகத்தில் மனம் நோக,
“வேணும்னா பார்லர் வைச்சு கொடுக்க முயற்சி பண்றேன்.அதுவும் இப்போ இல்ல.முதல்ல நா முன்னுக்கு வரணும்.அப்போ தான் நம்மளோட வாழ்க்கை தரம் முன்னுக்கு வரும்.என்ன நா சொல்ல வர்றது புரியுதா?”
“நா உங்ககிட்ட சொந்தமா தொழில் பண்ண ஏற்பாடு பண்ணி தாங்கன்னு கேட்கவேயில்லையே?”
“அப்போ உனக்கு அந்த ஆசையில்லைன்னா விட்டுடு”என்றதற்கு பதில் இல்லை.
“வேணி,நீ ஒண்ணை நல்லா  புரிஞ்சுக்கணும்.நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு எவ்வளவோ காரணம் இருந்தாலும்,முக்கியமான ஒண்ணு! நீ வசதியில்லாத வீட்டு பொண்ணுன்னு தான்.இதே நீ கொஞ்சம் வசதியாயிருந்து,எனக்கு போன் பண்ணி’எனக்கு கல்யாணம்’-ன்னு சொல்லியிருந்தா,அட்சதையை போட்டு ஆசீர்வாதம் பண்ண தான் வந்திருப்பேன்.ஏன்னா என்னோட கொள்கையே,ஏழ்மை நிலையை உணர்ந்த பொண்ணை கட்டிக்கறது தான்!! 
எனக்கு எப்படியும் ஓரளவுக்கு நான் முன்னுக்கு வந்துடுவேன்னு தெரியும்.முன்ன இருந்தே,நாம வசதியில பின்தங்கியிருக்க பொண்ணை கல்யாணம் பண்ணா,நம்ம மூலமா ‘அந்த பொண்ணோட’குடும்பமும் முன்னேறட்டும்னு ஒரு எண்ணம்.எனக்கு உழைப்பு ரொம்ப பிடிக்கும்.அதவிட வாழ்க்கையில முன்னேறனும்னு உத்வேகத்தோட உழைக்கிறவங்கள ரொம்ப பிடிக்கும்.
அதுக்காக நா உன்னை வேலைக்கு போக சொல்றேன்னு எல்லாம் நினைச்சிடாத.உனக்கு பிடிச்சிருந்தா,இதை செய்னு தான் சொல்ல வரேன்.  அதோட இந்த மாதிரி ஆடைக்குறைப்பு செய்யறது ஆபாசத்துக்கு தான் வழிவகுக்குமே தவற,அழகியிலா பார்க்கப்படாது”என்று எங்கு சுற்றினாலும்,இறுதியில் அவளின் உடையை பற்றி குறை சொல்ல,திருமண வாழ்வை ஆரம்பித்த முதல்நாளே,கணவனிடம் இப்படிப்பட்ட பாடங்களை கேட்டால்,எந்த மனைவிக்கு தான் பயம் வராது?
எதையுமே மெல்ல மெல்ல தான் மனதில் இறக்க வேண்டும்.அதுவும் குடும்ப விஷயங்களை ஆரம்பத்திலையே விளக்குகிறேன் பேர்வழி என்று ஒரே நாளில் பேசினால்’ரம்பம் போடறானே’என்று எண்ண தோன்றும்..இல்லையேல் கணவனை பற்றிய பயம் தோன்றும்.அரிதாய் ‘அவங்க சொல்றதும் சரிதானே’என்றும் தோன்ற வாய்ப்பிருக்கிறது தான்.
ஆனால் வேணிக்கு பயம் தான் வர,வழக்கம் போல் அழுக ஆரம்பித்துவிட்டாள்.
அதிலையே இவனுக்கு கடுப்பு!! எத்தனை முறை தான் அவளது அழுகையும் பார்ப்பான்!..
“உனக்கு எத்தனை வாட்டி தான் சொல்றது வேணி.இப்படி கண்ணை கசக்கிக்கிட்டே இருந்தா,எனக்கு எரிச்சல் தான் வருது”
அந்த எரிச்சல் அவளுக்கும் தொற்றிக்கொண்டது.ஆனால் முழுதாய் வெளிக்காட்ட முடியாதே!!
“எனக்கும் தான் அழுகணும்னு ஆசையா!உங்க சத்தம் கூடினாலே,அதுவாவே வந்துடுது.தொடைக்க தொடைக்க நிக்கவே மாட்டேங்குது”என்றவள் சொன்னதும் உண்மையென்பது போலாய்,துடைத்துக்கொண்டேயிருக்க,
“சரியான அழுமூஞ்சிக்கிட்ட மாட்டிக்கிட்டனா?”அவளிடமே அப்பாவியாய் கேள்வி கேட்டான்.
அவள் அழுகையை நிறுத்துவது போலில்லை.அதென்னவோ அவள் அழுதால் சத்தமெல்லாம் வருவதில்லை.கண்ணீர் மட்டும் டேமை முழு வேகத்தில் திறந்துவிட்டார் போல் கொட்டிக்கொண்டேயிருக்கும்.
ஒருக்கட்டத்தில் அவளாகவே நிறுத்திவிட்டு,முகம் கழுவிவிட்டு வந்தாள்.
“ஏன் வேணி.நான் சொல்றதுல உனக்கு தப்பு இருக்க மாதிரி தோணுதா?” 
இதற்கும் பதிலில்லை.
முயன்று கோபத்தை கட்டுப்படுத்தியவன்,”என்னைப் பொறுத்தவரை நான் சொன்னதில எந்த தப்புமே இல்ல வேணி.நீ வீட்டுக்குள்ள எந்த மாதிரி வேணா ட்ரெஸ் போட்டுக்கோ.உன்னை நான் எதுவுமே சொல்லப் போறதில்லை.உண்மையை சொல்லப் போனா எனக்கு சந்தோஷமா தான் இருக்கும்”திடீரென்று கண்ணடிக்கவும்…பார்வையை தழைத்துக்கொண்டாள்.
ஆனால் உடனே மிகவும் கோபமாய்,”என் பொண்டாட்டிய அடுத்தவன் தப்பான பார்வை பார்க்கறத என்னால சகிச்சிட்டு இருக்க முடியாது.இதுக்கு மேல உன்னோட இஷ்டம்”என்றவன் எழுந்து சென்றுவிட,அமைதியாய் யோசித்தவளுக்கோ..
“அந்த துணியெல்லாம் எவ்வளவு விலை தெரியுமா..அதெல்லாம் விட,திரும்ப இந்த சேலைக்கு மேட்சா,இதே டிசைன்ல பிளவுஸ் கிடைக்குமா?”என்றே எண்ணிக்கொண்டிருந்தாள் அசட்டுப்பெண்.
அரசுவிடம் மட்டும் கேட்டிருந்தால்,என்னென்னவோ நடந்திருக்கும்.நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை..
யார் யாருக்கோ என்னவென்னவோ ஆசை! இவளுக்கோ இந்த ஆசை..அவனுடைய எண்ணம் சரியெனும் போது விட்டுக்கொடுத்துத்தானே ஆக வேண்டும்.முரட்டுப்பிடிவாதம் பிடித்தால்,வாழ்க்கையை வாழவே இயலாதே? 

Advertisement