Advertisement

15
‘பார்வை ஒன்றே போதும்.வேறெதுவும் இக்கணம் வேண்டாம்’என்றிருக்க இருவருக்குமே ஆசை தான்.ஆனால் வயிற்றுப்பிழைப்புக்கு வழி செய்ய வேண்டுமே!
கடிகார முள்ளின் சத்தம் அரசுவை நிதானத்துக்கு கொண்டு வர,”ஹையோ,நேரமாச்சு”பரபரப்புடன் எழுந்தவன்,மதிய உணவையும் உண்டுவிட்டு கிளம்ப ஏதுவாய் தட்டை எடுக்க,இம்முறை சிறு முறைப்போடு பிடுங்கி,அவளே காலையில் சமைத்த பிரியாணியை சூடுபடுத்தி அவனுக்கு பரிமாறினாள்.
“இங்க நீ மட்டும் தான் தனியா இருக்கணும்.கஷ்டமா இருக்குமே? டீவி எதுவும் ரெடி பண்ணி தரவா?”அக்கறையுடன் வினவ,
“அதெல்லாம் எதுக்கு?வீண் செலவு தானே.என்னோட லேப்டாப் இருக்கு.அம்மா போன வாரந்தான் சரி செஞ்சு கொடுத்தாங்க.போனும் இருக்கு.நெட் கனெக்ஷனும் இருக்கு.எனக்கு பொழுதெல்லாம் போயிடும்”எனவும்,
பண வசதியில்லாதவர்களும் கணினியை பயன்படுத்த உதவிய,நம் அரசை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான்.
தான் பள்ளிப்படிப்பை முடித்த போது,அவ்வளவாய் தனக்கு கணினி அறிவுயில்லை என்பதையும் ஒத்துக்கொண்டான்.
அரசுப்பள்ளியில் கம்பியூட்டர் இருக்கும் தான்.அதை அவ்வளவாய் பயன்படுத்த முடியாது.வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தவிட்டாலே அதிசயம்..இப்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது என்று எண்ணியபடியே உணவை முடித்தவன்,இன்டர்வியூ செல்லுவதற்கு ஏதுவாய் கோட், ’டை’ அணிந்து புறப்பட,இதுவரை சாதாரண டி-ஷர்ட் பேன்ட் என்றே பார்த்துப் பழக்கப்பட்டவளுக்கு இன்று கணவனின் உடை தேர்வு’ராயல் லுக்’கொடுப்பதை உணர்ந்து பெருமைப்பட்டுக்கொண்டாள்.
“பத்திரமா இருந்துக்கோ.புதுஇடம் எங்கேயும் போயிடாத.ஏதாவது அவசரம்னா போன் பண்ணு”சொல்லிவிட்டு அவன் கிளம்ப,அவன் ரோட்டை கடக்கும் வரையிலுமே பார்த்தபடி இருந்தாள்.
‘எதுவோ ஓர் நிறைவு’வார்த்தையில் வடிக்க தெரியவில்லை.
வீட்டுனுள் வந்தவள்,அடுப்படியை சுத்தம் செய்து,தானும் உண்டுவிட்டு போனை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அவளுக்கு மிகவும் பிடிப்பது’முக அலங்காரம்’ தான்.அதுபற்றிய விடியோக்களை பார்க்க ஆரம்பித்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
ரஞ்சி கூட முன்பு கிண்டல் செய்வாள்.
“கதைல எல்லாம் விதவிதமா மேக்-அப் போட்டா,கலர் கலரா ட்ரெஸ் போட்டு மினுக்கிக்கிட்டா,அவங்களை வில்லின்னு தான் சொல்றாங்க.அப்போ நீயும் வில்லியாடி”கேட்டு தோழியிடம் மொத்து வாங்குவாள்.
“எனக்கு பிடிக்குது,நான் செய்யறேன்,அடுத்தவங்க என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்.நானொண்ணும் அடுத்துவங்க காசில இதையெல்லாம் வாங்கலையே.நா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச காசு..எனக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்ணுவேன்.போடி”அலட்சியமாக சொல்லிவிடுவாள்.
ஒருவர் எப்படியிருந்தாலும் அவரைப்பற்றி விமர்சிக்க நமக்கென்ன உரிமையிருக்கிறது?
அவங்ககிட்ட இருக்கு வாங்கறாங்க? அவங்களுக்கு பிடிச்சிருக்கு.அவங்க செய்யறாங்க..இதை நமக்கு லாபமோ நஷ்டமோ இல்லையே..அப்படியிருக்கும் போது நாம நம்ம வழிய பார்த்துப் போயிட்டே இருப்போமே!!! –இது தான் வேணியின் எண்ணமாகயிருக்க,இணையத்தில் உலாப்போக ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் ஹிந்தி சீரியல்,அவர்களின் உடையலங்காரம் என்று பார்த்துப்பார்த்து பொழுதை நெட்டித்தள்ளியவள்,கண் எறிவது போலிருக்க,அதை மூடி வைத்துவிட்டு,வெளியே வந்தாள்.
வீட்டை சுற்றி சிறிது காலியிடமிருக்க,உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையிலையே,பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பாட்டி கையசைக்கவும்,இவளும் புன்னகையுடனே கையசைத்துவிட்டு,வீட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றாள்.
அவரது வீட்டில் திண்ணை போன்ற அமைப்பு இருக்க,பெரும்பாலும் வெளியில் தான் அமர்ந்திருப்பார்.
அவரருகில் போய் அமர்ந்தவுடனே,”என்னம்மா,புதுசா குடி வந்திருக்கிங்களா,கண்ணனுக்கு சொந்தக்காரவங்களா?”அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுக்க,
“ஆமாம் பாட்டி”எல்லாவற்றிற்கும் ஒற்றை பதிலில் பதிலளித்துவிட்டாள்.
அவரோ அக்கம்பக்கம் பார்த்துவிட்டு,”நீங்க ரெண்டு பேரும் சின்னஞ்சிறுசுக! கொஞ்சம் பார்த்து சூதானமா இருந்துக்கோங்க.எப்பவுமே கைல எலுமிச்சை பழத்த வைச்சிக்க.வீட்டு முன்னாடியும் கட்டி வைச்சுக்க”என்றெல்லாம் சொல்ல,
“இதெல்லாம் எதுக்கு பாட்டி”புரியாமல் வினவவும்,
“சொல்லக் கூடாது தான்.இருந்தாலும் உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்.கண்ணன் பொண்டாட்டி துளசி இருக்கால்ல.அவ கார் விபத்துல தான் போய் சேர்ந்துட்டா.
அவளுக்கு பிள்ளை வேற இல்லையா..?அந்த ஆசையை மனசில வைச்சுக்கிட்டு இன்னமும்,ஆவியாவே சுத்திக்கிட்டு இருக்கா..நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி குடியிருந்த பொண்ணுக்கும்,இவ ஆவி அடிச்சு குழந்தை கருவிலையே அழிஞ்சு போயிடுச்சு.அடுத்தடுத்து வந்த யாருக்குமே குழந்தை நிற்கலையாக்கும்”அடுக்கடுக்காய் சொல்ல பயந்துவிட்டாள்.
“இதெல்லாம் உண்மையா பாட்டி.எனக்கு விளையாட்டு காட்டி பேசறீங்க தானே?”நெஞ்சு படபடக்க கேட்கவும்,
“நானு இருவது வயசு கொமரி.உங்கூட விளையாடறேன்..”நொடித்துக்கொண்டவர்,
“கண்ணம்பையன் இதெல்லாம் சொல்லலையா? அவனே செத்துப் போயிட்டான்.உங்ககிட்ட எப்படி சொல்லியிருப்பான்”-அவரே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொள்ள,வேணிக்கு திரும்ப அந்த வீட்டிற்குள் செல்லவே மனமில்லை..
வேணி தன் வீட்டு வாசலையே பார்ப்பதை உணர்ந்த பாட்டியும்,”சித்த இரு வாரேன்”என்று உள்ளே சென்றவர் திரும்பி வந்த போது,அவர் கையில் எலுமிச்சை பழம் இருக்க,
“இந்தா,இத வைச்சிக்க,எந்த தீய சக்தியும் அண்டாது”என்றவர்,பலத்தை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு,
“பழம் கொஞ்சம் பெருசாவேயிருக்கு.இதுக்கு பத்து ரூபா கொடுத்துடு என்ன?”என்று கூற,
‘அடக்கெழவி.பத்து ரூபா பழத்த வாங்க வைக்க தான்,பேய்க்கதை சொன்னியா?’வியந்து போய் பார்த்தாலும்,
“அவங்க வர லேட்டாகும் பாட்டி.நாளைக்கு காசு கொண்டு வந்து கொடுக்கறேன்”என்றவள் உடனடியாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்து, தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
‘இனி அந்த வீட்டுப் பக்கம் திரும்பி பார்க்கவே கூடாது சாமி’கதவை திறந்துவிட்டு நுழைந்து தண்ணீரை குடித்தவளுக்கு,இப்போது புதிதாய் ஓர் பயம்.
“ஒருவேளை கெழவி சொன்னது உண்மையாவே இருந்தா?”பயம் மனதைப் பிடித்து ஆட்ட,பாட்டி கொடுத்த பழத்தை எடுத்து,தன் கையில் வைத்து இறுக மூடிக்கொண்டு,இஷ்ட தெய்வத்தின் பேரையே சொல்லிக்கொண்டிருந்தவள்,மறந்தும் கணவனுக்கு அழைக்கவில்லை.
கணவனுக்கு அழைத்துவிடுவோம் என்று தோன்றும் நேரமெல்லாம் ‘இண்டர்வியூ நேரத்துல அவங்களை தொந்தரவு செய்யக் கூடாது’என்று நினைவுப்படுத்திக்கொண்டு அமைதிகாத்தவள்,இப்போது மணியை பார்க்க..
அது’7’என்று காட்ட அதிர்ந்து தான் போனாள்.
‘ஹையோ..சாப்பாடு எதுவும் செய்யலியே..மாவு கூட ஆட்டி வைக்காம போயிட்டோமே’தன்னையே நொந்துகொண்டு,சமையலறையில் சென்று என்ன இருக்கிறது என்று ஒவ்வொன்றாய் ஆராய..ஒரு மாதத்திற்கு தேவையான அளவு பொருட்கள் இருக்கவும்’என் அரசன்,எல்லாத்துலையும் வெல்லக்கட்டி தான்’கொஞ்சியவாறே,சப்பாத்தி மாவை எடுத்து பூரிக்கிழங்கு தயார் செய்து வைத்தாள்.
அதற்குள் மணி எட்டாகிவிட,இனியும் அழைக்காமல் இருக்க முடியாதென்பதால் கணவனுக்கு அழைக்க,”இங்க வீட்டுப்பக்கம் வந்துட்டேன்.உனக்கு ஏதாவது வாங்கணுமா”பொதுவாய் கேட்க,
“இல்ல,இல்ல.நீங்க வாங்க”என்றுவிட்டு போனை அணைத்தவள்,கையோடு எலுமிச்சையை எடுத்துக்கொண்டே வாசல் பக்கம் போய் அமர்ந்தாள்.
பைக் நிறுத்தும் சத்தம் கேட்க,ஜன்னலை திறந்து,’அரசு’தான் என்று உறுதி செய்துகொண்டே,கதவை அவன் தட்டும் முன்னரே திறந்து அவனை சிரித்த முகத்துடன் வரவேற்க,அவனோ சோர்ந்து போய் வந்தான்.
சேரில் பைலை வைத்துவிட்டு அப்படியே அவன் அமர்ந்துவிட,பைலை எடுத்து பத்திரப்படுத்தியவள்,
“டீ குடிக்கறீங்களா?”எனக்கேட்டாள்.
“வேண்டாம்.பசிக்குது.சாப்பிடணும்.என்ன சமைக்கலாம்?”
“நானே செஞ்சுட்டேன்.நீங்க கை கழுவிட்டு வாங்க”எனவும்,சுத்தமாகிவிட்டு வந்தவன்,அவசரமாய் சாப்பிட,அவளுக்கு பரிதாபமாய் இருந்தது..
அவள் பார்வையை உணர்ந்து,’என்ன’என்று புருவம் அசைத்து வினவவும்,
‘ரொம்ப அலைச்சலா?”-வருத்தத்துடன் கேட்க,
புன்னகையுடனே,”அலைச்சல் தான்.என்ன செய்ய?வேலை கிடைச்சுடுச்சே..சம்பளம் வேற அதிகமா தர்றேன்னு சொல்லியிருக்காங்க. இங்க பக்கத்துல இருக்க பிரான்ச்ல வேகன்சி இல்லையாம்.தூரமா தான் அந்த ஆபிஸ் இருக்கு. இங்க இருந்து ரெண்டு மணி நேரம் போகணும்.வர்றதுக்கும் ரெண்டு மணி நேரம் ஆகும்..முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு,அங்கேயே ஆபிஸ் பக்கத்துலையே வீடு பார்த்து போயிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.நீ என்ன சொல்ற?”
“உங்களுக்கு எது வசதியாயிருக்கோ,அப்படியே செஞ்சுக்கலாம்”
“அங்கேயே வீடு பார்க்கறது வசதி தான்.ஆனால் இது கண்ணன்-ண்ணா பார்த்து நமக்கு கொடுத்த வீடு.இங்க இருந்து  காலேஜ் பக்கம்னு நினைச்சு இங்க தங்க சொன்னாரா..இல்ல வேற எதுவுமான்னு எனக்கு புரில! அதுவும் அஞ்சு வருஷத்துக்கு இங்கேயே இருக்கற மாதிரி வேற எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்தாரா! இப்போ அவர் இல்லாத நிலமையில,அவர் பேச்சை மதிக்காம எப்படி போறதுன்னு கவலையாவும் இருக்கு.பார்ப்போம்..நாளைக்கு பொழுது எப்படி இருக்குன்னு யாருக்கு தெரியும்?”
“அதுவும் சரிதான்”-உடனே ஒத்துக்கொண்டவள்,தானும் வயிற்றை நிரப்பிவிட்டு வர,இப்போது புதிதாய் தயக்கம் அவளுள்..ஒரே அறையா..இல்லை தனித்தனியாகவா?
புதிதாய் தோன்றிய கேள்வியில் உள்ளம் படபடக்க,அவன் அறைக்குள் சென்று வருவதையே பார்த்துக்கொண்டிருந்தவள்..அவன் பழைய பொருட்களிருந்த அறைக்குள் செல்லவும்,இவளுக்கு என்னவோ போல் ஆயிற்று.
‘எனக்கு தான் இப்படியெல்லாம் தோணுதா? அவங்களுக்கு அப்படி எதுவுமே தோணலையா.நான் தான் தப்பா இருக்கேனா’என்றெல்லாம் எண்ணி ரொம்ப குழம்பிக்கொண்டிருந்த வேளையில் தான்,அவளுக்கு பாட்டி சொன்ன ‘பேய்க்கதை’நினைவிற்கு வந்தது..அவ்வளவு தான்’மற்றது’எல்லாம் பின்னிற்கு செல்ல..
அப்போதும் கொஞ்சம் தயங்கியவாறே,அவனிருந்த அறை வாயிலில் நின்றுவிட்டாள்.உள்ளே செல்ல தயக்கமாயிருந்தது.
அவன் தான் கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்து,”என்னம்மா..எதுவும் வேணுமா?”டிரேட்மார்க் டயலாகை எடுத்துவிட,தன் கையிலிருந்த எலுமிச்சையை விரித்து காட்டினாள்.
அவனுக்கோ புரியவில்லை.
“என்ன,ஜூஸ் குடிக்கணுமா.போட்டு தரவா”அக்கறையாய் கேட்டு பாயிலிருந்து எழுந்திரித்து வேறுவிட்டான்.
இவளுக்கு தான் ‘ஹையோ’என்றிருந்தது.
“இது புதுசா கல்யாணமானவங்க வைச்சுக்கணுமாம்”மொட்டையாய் சொல்ல..அவனுக்கோ அவள் சொல்ல வந்தது சரியாய்’வேறு வேறு’ அர்த்தத்தை உண்டு பண்ண..
‘வாழ்க்கையை ஆரம்பிப்போம்னு சிம்பாலிக்கா சொல்றாளோ’-அவளே வாய்விட்டு சொன்னது போல சங்கடம் கொண்டான். 
தொண்டையில் வேறு இந்நேரம் ‘கிச் கிச்’-ஆகி,பேச முடியாமல் நின்றான்.
அவனிடமிருந்து பதில் இல்லாமல் போகவே,அவன் முகத்தைப் பார்த்து ஒன்றும் புரிந்துகொள்ள முடியாததால்,”பக்கத்து வீட்டுப் பாட்டி தான் கொடுத்தாங்க”என்று ஆரம்பித்து முழுக்கதையும் சொல்லிவிட,
‘உஃப்.இதத்தான் சொல்ல வந்தாளா?’நிம்மதி பெருமூச்சோடு,ஏமாற்றமும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்க,
“அவங்க சும்மா சொல்லியிருப்பாங்க வேணி.அண்ணி ரொம்ப நல்லவங்க.யாருக்கும் கெட்டதே நினைக்க மாட்டாங்க.இங்க முன்னாடி தங்கியிருந்தவங்க கொஞ்சம் கேர்லேசா இருந்து தான் கர்ப்பம் கலைஞ்சு போச்சு.அதை மாமனார் மாமியார்கிட்ட சொன்னா,பெரிய பிரச்சனை வரும்னு,பேய்க்கதை கட்டிவிட்டுட்டாங்க.அந்த நேரம் அண்ணாச்சிக்கு பயங்கற கோபம்.ஆனாலும் அவங்களை எதுவும் சொல்லாம,அமைதியா இருந்துட்டார்.
’இந்தப் பொய்யால அவங்க வீட்டுல பிரச்சனை வராதுன்னா,என் பொண்டாட்டி பேயாவே இருந்துட்டு போகட்டும்’-ன்னு சொன்னார்.அவ்வளவு நல்ல மனுஷன் அவர்”எனவும்,
‘எவ்வளவு நல்ல மனுஷனா இருந்தா இப்படி யோசிச்சு,அமைதியா இருந்திருக்க முடியும்’வியந்து போனாள்.
அரசு இவ்வளவு சொன்ன பின்னரும்,அவளுக்கு கொஞ்சம் பயமாவேயிருக்க,’எனக்கு கொஞ்சம் பயமாவேயிருக்கு’பாவமாய் சொல்ல,
“சரி..இங்கேயே தூங்கு”என்று சொல்லி முடித்திருக்கலாம்.ஆனால் அவனுக்கு’பேய்க்கதை’-க்கு முடிவு கட்டிவிட வேண்டுமென்ற வேகம்.
“வேணி,இந்த வீட்டுல துளசி அக்கா பேயா இருக்காங்கன்னே வைச்சுக்குவோம்”-அரண்டு போனவளாய்,
“பேய் இல்லைன்னு நீங்க இப்போ தான சொன்னிங்க”அழும் குரலில் கேட்க,
“முழுசா சொல்றத கேளு.எனக்கு பேய் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் உனக்காக இதை சொல்றேன்.எந்தவொரு மனுஷனுக்கும் தான் செத்த பிறகு ஆவியா அலையணும்னு ஆசையாவா இருக்கும்? பதில் சொல்லு”
“இருக்காது தான்?” 
“அப்போ அவங்க ஏதோ ஒரு காரனத்தினால ஆவியா சுத்த வேண்டி விதியிருந்தா,அதுக்கு அவங்க என்ன பண்ண முடியும்.அடுத்தவங்களை கஷ்டபடுத்தி,அது மூலமா சந்தோஷப்படணும்னு நினைப்பாங்களா?”எனவும்,அவளுக்கு பேய்ப்படத்தில்,பேய் கேரக்டர் சந்தோஷமாய் சிரிப்பதெல்லாம் கண்ணுக்கு வர,பயந்த முகத்துடன்..
“தெரியலையே”பாவமாய் சொல்ல..வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“மத்தவங்க எப்படியோ,துளசி அண்ணி சந்தோஷப்பட மாட்டாங்க.அடுத்தவங்களுக்கு ஒரு சின்ன பிரச்சனைன்னா கூட ஓடி உதவி பண்ற குணம் அவங்களுக்கு!! அவங்களுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்.அப்போ அவங்க எப்படி கருவிலேயே ஒரு குழந்தையை அழிப்பாங்க சொல்லு.. 
குழந்தை இல்லைன்னா அதோட வேதனை எப்படி இருக்கும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். ஒருவேளை இந்த ‘ஆவி’கான்செப்ட் மட்டும் உண்மையா இருந்தா.,துளசி அண்ணியே,அந்த குழந்தையை கலைய விடாம பத்திரமா காப்பாத்திக் கொடுத்திருப்பாங்க.
இது எல்லாத்தையும் விட..ஆவியா சுத்தறவங்களோட சூழ்நிலையில இருந்து யோசிச்சு பாரேன்.’இவங்கள மாதிரி நம்மளால வாழ முடியலையே.ஆசையா சாப்பிட முடியலையே..சொந்த பந்தங்களோட பேச முடியலையே..’இப்படி எத்தனை விதமான ஏக்கங்கள் அவங்களுக்கு இருக்கும்..
அது எவ்வளவு கஷ்டமான விஷயம் யோசிச்சு பாரு.இந்த உலகத்துல நீ நான் இருக்க மாதிரி கண்ணுக்கு தெரியாத ஆவி இருந்தா இருந்துட்டு தான் போகட்டுமே..அத நினைச்சு நாம ஏன் பயப்படணும்.
எந்தவொரு விஷயத்தையும் திருப்பி திருப்பி யோசிச்சுட்டே இருந்தா,பொய்யான விஷயம் கூட உண்மையா தான் தெரியும்..ஸோ பயமில்லாம இரு.எதுவாயிருந்தாலும் எதிர்கொள்ற தைரியத்த வளர்த்துக்கோ..என்ன நான் சொன்னது புரிஞ்சுதா?”நீண்டதாய் தனக்கு தெரிந்த முறையில் விளக்கி கூற..
எது புரிந்ததோ இல்லையோ..பேய் பயம் போனதோ இல்லையோ..கணவனுக்கு துளிசி அண்ணி மேல் உள்ள பாசம் மட்டும் தெளிவாகப் புரிய,”உங்க துளசி அண்ணி,யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டங்கன்னு தெளிவா புரிஞ்சுது”என்றாள்.
“அப்போ?”கேள்வியாய் பக்கத்து அறையையும் பார்க்க,
“ரொம்பத்தான்”முணுமுணுப்புடன்,கொஞ்சம் கொஞ்சலான முறைப்போடு பக்கத்து அறையில் புகுந்து கொண்டாள்..
கணவன் மனைவி இருவருக்குமே தூக்கம் என்பது தூரப் போனாலும்,இனம்புரியாத உணர்வுடனே மெல்ல மெல்ல நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்கள்.
அதிகாலை 2 மணியிருக்கும்.
ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்க,’பட்’என்று விழித்தான் அரசு.
மெல்ல அந்த சத்தம் அருகில் கேட்க,எழுந்து சென்று கதவுப்பக்கம் போக,ஏதோ பேச்சு சத்தம்..
உன்னிப்பாக கேட்ட பொழுது தான்,அது பக்கத்து வீட்டின் முன் ‘குடுகுடுப்பைக்காரன்’ குறி சொல்லும் சத்தம் என்றே புரிந்தது.
“ஹப்பா.இது தானா..இவளுக்கு பேய்க்கதை விளக்கம் கொடுத்து நானே பயந்து போயிட்டேன்”முணுமுணுத்தவன்,அறைக்கு செல்ல முனைய,
திடீரென்று,’அவளுக்கும் இந்த சத்தம் கேட்டிருந்தா,பயந்து போயிருப்பாளே?என்னன்னு போய் பார்த்துடுவோம்’என்று தோன்ற அடுத்த அறைக்கு செல்ல,திறந்திருந்த கதவின் வழியாய் பார்த்தவனுக்கோ,சிரிப்புடன் பரிதாபமும் எழுந்தது.
வேணி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் கூட தனியாக தூங்கியதில்லை.திருமணமான அன்று கூட அவள் அறையிலும்,அவன் ஹாலிலும் தான் தூங்கினார்கள்.அதிலும் நேற்றைய ‘பேய்க்கதை’ கணவன் கூறிய விளக்கங்களை எல்லாம் பின்தள்ளி பூதாகரமாய் தோன்ற,கனவிலும் பேய் பயமுறுத்த,எல்லாவற்றிற்கும் மேலாய் குடுகுடுப்புக்காரனின் பேச்சு சத்தத்தால் நாய் வேறு குழைத்துக் கொண்டிருந்தது.
இது போதாதா? அம்மணி நடுங்கிவிட்டாள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாய்,ஏதோவொரு உருவம் தன் அறையை கடந்து செல்வது,தன் மூடிய கண் வழியாக உணர முடிய,மறந்தும் கண்ணை திறந்து பார்க்கவில்லை.ஒருவேளை பார்த்திருந்தால்,அது கணவனென்று தெரிந்திருக்குமே..?  
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்-மெய்பித்துக் கொண்டிருந்தாள் வேணி.
இப்போது அரசுவின் காலடிசத்தம் வேறு கேட்க,’போச்சு போச்சு.இது பேயே தான்’அரண்டு போனாலும்,ஏதோவொரு தைரியத்தில் கண்ணை மெதுவாய் திறந்து பார்த்தவள்,உடனே மூடிக்கொண்டாள்.
உடனே மறுபடி கண்ணை திறந்தவள் தான் மூடவேயில்லை.
“நீங்க தானா?”ஆசுவாசப்பட்டவளாய்,இறுக்கம் தளர்ந்து அமர,வாய்விட்டே சிரித்துவிட்டான்.
அந்த சிரிப்பு,இவளுக்கு அழுகையை தான் கொடுத்தது.
“என்னைப் பார்த்தா,உங்களுக்கு சிரிப்பு வருதா?”சிறுபிள்ளையாய் அழவே ஆரம்பித்துவிட்டாள்.
“அட,இதுக்கெல்லாம் அழுவியா? பயமாயிருந்திருந்தா,என்னை கூப்பிட்டிருக்க வேண்டியது தானே? அதுவும் இல்லைன்னா,பயமாயிருக்கு..இங்கவே தூங்கவான்னு கேட்டா,வேணாம்னா சொல்லிடப் போறேன்”இயல்பாய் சொல்லிவிட்டு,தன் படுக்கையை எடுத்து வருவதற்காய் நகரப் போனவனை அவளின் முணுமுணுப்பு தடுத்துவிட்டது.
“நா ரூம் பக்கம் வந்தாலே,என்னவோ மாதிரி நினைச்சு பார்க்கறது.அப்புறம் எப்படி திரும்ப திரும்ப அசிங்கமா வந்து நிற்கறதாம்”எனவும்,அரசுவிற்கும் தனது செயல்களின் தாக்கம் புரிய..
“சாரிம்மா.நான் பண்ணது தப்பு தான்..”இயல்பாய் மன்னிப்பு கேட்கவும்,கண்ணீரை துடைத்துவிட்டு அவனை ஆச்சர்யமாக பார்க்க..அந்த பார்வை அவனை ஏதேதோ செய்தது.
அவளுக்கு நேரெதிராய் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவன்,”நான் என்ன மாதிரி நினைச்சனாம்?”குறுகுறுப்புடன் கேட்க,மேலும் கண்ணை விரித்தவள்,
போகும் பாதை ஆபத்தானதென்று புரிய,”எனக்கு தெரியலை”என்றவள் திரும்பி கண்ணை மூடி படுத்துக்கொண்டாள்.
அவனின் சிரிப்பு சத்தம் இப்போது அதிகமாகவே கேட்க,காதை பொத்திக்கொண்டவள் நாணம் மிக…எழவும் முடியாமல்,அப்படியே படுத்திருக்கவும் முடியாமல் தடுமாறினாள்.
அவளின் அவஸ்தை அவனுக்கும் புரிந்து தானிருந்தது.
வேண்டுமென்றே விளக்கமாய்,”நா ‘அந்த’ மாதிரி தான் நினைச்சேன்..நீ திரும்பி போகவும்,ரொம்ப ஏமாந்துட்டேன்”எனவும் படக்கென்று எழுந்து அமர்ந்தாள்..
“எதுவும் நமக்குள்ள தப்பில்ல வேணி..அதுவும் எதிர்பார்ப்பு உனக்கிருந்தாலும்,எனக்கிருந்தாலும் தப்பேயில்ல”என்று நிதானமாய் பேசிக்கொண்டிருந்தவனின் முகம் பார்க்கக் கூட முடியவில்லை.
தலை தாழ்த்திக் கொண்டவளின் இமைகள்,புரியாத உணர்வை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர் சொரிய..அதற்கு மேல் தூர நிற்க அரசுவால் முடியவில்லை.
அவள் முகத்தை ஏந்தி கண்ணீரை துடைத்தவன்..’அது தான் நல்ல வேலையே கிடைச்சிருச்சே.இனியும் தயங்கி ஒதுங்கி நின்னு,என் பொண்டாட்டிக்கிட்ட இருந்தே ஒழுக்கம் பாதுகாத்து என்ன சாதிக்கப் போறேனாம்.இவ ஒருத்திய வைச்சு என்னால சோறு போட முடியாதா? இல்ல இவளை நல்லா தான் பார்த்துக்க முடியாதா?’எண்ணம் தோன்றிய போதே,அவனது கைகள் அவளது இடைய இறுக்கி..முகத்தை அருகில் கொண்டு வந்திருந்தது.
கூச்சத்தில் கண் திறக்க முடியாமல் அவளிருந்த போதிலும்,தன் கொள்கை பற்றிய பாடத்தை நடத்தினான்.
“வேணி..ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்கறவன் நான்.அதிலும் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு நினைப்பேன்..இப்போ உனக்கு தான் முன்னுரிமை கொடுக்கறேன்”தாராளக்காரனாய் பேசி,
“கண்ணை திறந்து பாரு வேணி”கொஞ்சம் குரலில் கட்டளையிட..தயங்கி தயங்கியே கண்ணை திறந்தவள்..அருகிலிருந்த அவன் முகம் பார்க்க கூசி,மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள..இன்னும் அழுத்தமாய் இடைய இறுக அனைத்தவனின் பிடியில் இம்சையாயிருந்தாலும் விழி திறக்க மறுத்து மறுகி அவள் நிற்க..
கொஞ்சமும் தயங்காமல்,”நீ தான் ஆரம்பிக்கணும்”என்றவனோ அவளின் சிவந்த அதரத்தை வருட..தாங்க முடியாமல் விழி திறந்துவிட்டவள்,அவனின் கண்ணை பார்த்தவள் தான்..அவன் பார்வையிலிருந்து அவளால் விலகவே முடியவில்லை.
எப்போதும் அவளை பித்தம்கொள்ள செய்யும் பார்வை..
பலநாள் தூக்கத்தில்’எதற்கடா என்னை இப்படி இம்சிக்கிறாய்’என்று கண்ணீர் விட வைத்த பார்வை..
ஒருகணம் கூட கண் இமைக்கவில்லை.. 
இயல்பாய்,மிக இயல்பாய் அவளின் முகம் அவனருகில் வர…அவனும் அவளின் பார்வையில் ஈர்க்கப்பட்டவனாய் அவள் முகத்தை பற்றிக்கொண்டான்..
இங்கு யார் முதலில் இதழ் பதித்தார்கள் என்று சொல்லவே முடியாது…காந்த சக்தி ஒன்றையொன்றை ஈர்ப்பது போல..இருவரின் இதழ்களும் ஒன்றையொன்று ஈர்க்க..முத்த சாகரத்தில் போனார்கள் இருவரும்..!!!
அதுநாள் வரை பெண் வாசனையையே நுகர்ந்திராதவன்..அவளின் வாசனையோடு..தலையில் சூடியிருந்த முல்லைப்பூவின் நறுமணமும்..மரிக்கொழுந்தின் மனம் மயக்கும் வாசமும் சேர்ந்து கொண்டு அவனை பித்தம் கொள்ள செய்ய..முழுதாய் அவளுள் ஆழ்ந்து போனான்
இளமை தீ..இருவரையும் எரிக்காமல்,அழகிய ஜோதியாய் சுடர்விட செய்தது..
உயிரில் இனித்தது இவ்வுறவு……….

Advertisement