Advertisement

14
கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த போது பத்து மணியிருக்கும்.பொருட்களை இறக்கி வைத்துவிட்டு,ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு நகர,வேணியும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு அவன் பின்னாடியே நடந்தாள்.
வீட்டை திறந்தவுடன்,’பிரியாணி’வாசனை குப்பென்று வர,
“ஐயோ,வேற யாரும் இங்க இருக்காங்களா”பேகை பயந்து போய் கீழே போட்டுவிட்டு,அவனை ஒண்டியவாறே கேட்க,
“ம்ம்.பேய் சோறாக்கி வைச்சு சாப்பிடுதாம்”நக்கல் அடித்தான்.
அதை கூட புரிந்துகொள்ளாமல்,”நிஜமாவேவா..பேயா”அரண்டு போய் அவன் கைகளை பிடித்துக் கொண்டவள்,கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்.
“ஹ ஹா”சத்தம் போட்டு சிரித்தவன்,
“பிரியாணி நான் தான் செஞ்சு வைச்சுட்டு வந்தேன்.பேயெல்லாம் செய்யல”எனவும் அசடு வழிந்தபடி கண்ணை திறக்க,அவனது பார்வை தனது கையில் படர்ந்திருக்கும்,அவளது கையில் படர,உணர்ந்தவளாய் பட்டென்று கையை உதறிவிட்டு,
“சாரி”என்றாள்.
‘அதெதுக்காம்’கேட்க நினைத்தும் கேட்கவில்லை அரசு.
அவனிடம் பதிலேதும் இல்லாமல் போகவே,அவளாகவே அடுப்படிக்குள் நுழைந்து தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கப் போக,அங்கோ முன்பிருந்த பழைய பொருட்களெல்லாம் அகற்றப்பட்டு,வேணிக்கு சீர் கொடுத்த பாத்திரங்களோடு,உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் பலவும் இருக்க,
புரியாத தத்தியாய்,”இதெல்லாம் யாருங்க செட் பண்ணது?”என கேட்கவேறு செய்தாள்.
“வேற யாரு செய்வா,நாந்தான் செஞ்சேன்”-எனவும் அவளுக்கோ ஆச்சர்யம்.
“அப்போ காலைல நேரத்துலையே வந்துட்டீங்களா?”
“இல்ல.நேத்து மதியம் எக்ஸாம் முடிஞ்சவுடனே,ரூமை காலி பண்ணிட்டு இங்க வந்துட்டேன்”
“ஹோ,அப்போ பிரவீன் அண்ணா?”
“அவனும் நேத்து நைட்டே ரூம் காலி பண்ணிட்டு ஊருக்கு போயிட்டான்.எக்ஸாம் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான் இனி வருவான்.வேலை கிடைக்கற வரைக்கும் இங்கேயே பக்கத்துல ரூமெடுத்து தங்க சொல்லியிருக்கேன்”
“ஊருக்குப் போறத அண்ணா என்கிட்ட சொல்லவேயில்ல.அவங்களுக்கு என்மேல எதுவும் கோபமா?”
“அதெல்லாம் இல்ல.அவன் வார்டன்-க்கு போன் பண்ணி பேசலாம்னு தான் சொன்னான்.நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”என்றவன் மேற்கொண்டு கேள்வி கேட்பதற்குள் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
ஏனென்றால் நேற்று பிரவீனை போன் செய்யவிடாமல் செய்தது அரசுவே தான்.
பரீட்சை முடிந்தவுடன்,மூட்டை முடிச்சை கட்டியவனை,”டேய் மாப்ள.பொண்டாட்டிய பார்க்கணும்னு எவ்வளவு அவசரமா கிளம்பற.கல்யாணத்தப்போ மட்டும் எப்படி மூஞ்சிய தூக்கி வைச்சிருந்த”பிரவீன் கேட்க,அரசு பதிலே சொல்லவில்லை.
என்ன சொன்னாலும் கலாய்ப்பானே..இந்த ஒருமாதமாய் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போதும் விடாமல்,”டேய் அரசு,வெட்கப்படறியா”என்றவன் அவன் முன் போய் நிற்க…நிஜமாகவே வெட்கப்பட்டுக்கொண்டு தானிருந்தான் அரசு.
பிரவீனிற்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை.
“நீ வெட்கப்படும் போது இன்னும் அழகா இருக்கடா மாப்ள”கட்டியணைத்தவன்,தன் கண்ணிலிருந்து இல்லாத மையை எடுத்து அவன் கன்னத்தில் திருஷ்டி பொட்டாய் வைக்க,
சிரிப்புடன்,”அடி வாங்கப் போறடா”அவனை தள்ளிவிட்டு வேலைகளை பார்த்தான்.
“கல்யாணமே வேண்டாம்,வேண்டாம்னு சொல்றவனை நம்பவே கூடாது.சாமியார்ப் பசங்க தான் பயங்கற கேடியா இருக்கானுங்க!அதுலயும் நீ பயங்கற கேடிடா”விடாமல் பேச,
“சரிடா நான் போகலை.அவளை பார்க்கலை.நான் இங்கேயே இருக்கேன்.அவ அங்கேயே இருக்கட்டும்.போதுமா”கோபப்பட்டு அப்படியே அமர்ந்துகொண்டான்.
“சரி சரி,கிளம்பு..கிளம்பு.காத்து வரட்டும்”-நக்கலடித்துவிட்டு,இப்போது தானும் நண்பனுக்கு உதவி செய்தான்.
‘வேண்டாமல் கட்டிக்கொண்டாலும்,கட்டிக்கொண்ட பின் வேண்டியவளாகித்தானே ஆகணும்’மனதிற்குள் தான் சொல்லிக்கொண்டான்.
தனக்கே தனக்கென்று புதிய உறவு,அரசுவையும் நெகிழ வைத்திருந்தது.
இதற்கு முன்பு ஒருநாள் சோகமாக இருந்தவனிடம்,”கண்ணன்-ண்ணா, ‘தான்’ போயிடுவோம்னு தெரிஞ்சு தான் என்னவோ,அவசர அவசரமா உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கார்டா!அவர் உன்னை மகனா நினைச்சு,தன்னோட கடமையை முடிச்சிட்டு தான் போயிருக்கார்.நீயும் தங்கச்சியை ’வேண்டாத இம்சை’ன்னு எல்லாம் நினைக்கறதை விடு.இது அவர் அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை.நீ நல்லா வாழ்வடா”பிரவீன் எடுத்துக் கூற,அதையே மனதில் உருப்போட்டுக்கொண்டான்.
‘தனக்கென அவர் கொடுத்துவிட்டுப் போன உறவு’என்ற எண்ணமே..வேணியின் மேல் சலனத்தை தாண்டிய உறுதியான பந்தத்தை மனதில் ஏற்படுத்த,அதற்கு பின் தான் முழுமனதோடு மனைவியை பார்க்கவே ஆரம்பித்தான்.
இதோ இன்று அவன் மனமும் முழு மனதோடு அவளை ஏற்றுக்கொண்டுவிட்டது..அதை வேணியிடம் மட்டும் அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
சில விஷயங்களை சொல்லவும்,தகுதி வேண்டுமென்று நினைப்பவன்.
இப்போது ஏனோ’அந்த வேலை,இந்த வேலை’என்று பலவற்றையும் செய்து பிழைப்பு ஓடுகிறது..அப்படியே தேங்கிய குட்டையாக இருந்துவிடக் கூடாது.
முதலில்’நல்ல வேலை’வாய்ப்பு ஒன்றை கையில் வைத்துக்கொண்டே மனதை வெளிப்படுத்த வேண்டுமென்று முன்பே முடிவு செய்திருந்தமையால்..பிரவீனைப் பற்றிய கேள்விக்கு மழுப்பிவிட்டு வந்தான்.
ஏதோ விடலைப் பையன் போல தான் நடந்துகொள்வது போல ஓர் மாயத்தோற்றம் அவனிற்கு!!
தப்பித்தவறி ‘எதுவும்’ நடந்துவிடுமோ என்றே பயமே அவனில் எஞ்சியிருந்தது..பாவம் அவனும் மனிதன் தானே.முற்றும் துறந்த முனிவன் இல்லையே..
இயற்கையாகவே ஆண்,பெண் பந்தம் கொடுத்த தாக்கத்தோடு,பிரவீன் வேறு ‘அப்படி,இப்படி’ பேசி..
‘மாமா,வேலை பார்க்காதடா’நண்பனிடம் மீண்டும் பலமுறை திட்டு வாங்கியும் அடங்காமல்,முழுதாய் குடும்பஸ்தன் ஆகும் ஆசையை வளர்த்துவிட்ட பின்னர் தான்  ஓய்ந்தான் அந்த நல்லவன். 
இதெல்லாம் தெரியாத வேணியோ,உடைமாற்றிவிட்டு வந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே,”பிரியாணிக்கு பதிலா புரோட்டா செஞ்சா நல்லாயிருந்திருக்கும்”-மெல்லிய குரலில் முணுமுணுக்க,அவனுக்கும் கேட்டுவிட்டது.
அவர்களது காதலின் அடையாள சின்னமே இந்த ‘புரோட்டா’ தானே-தன்னையே கிண்டலடித்து சிரித்துக்கொண்டான் அரசு.
சிரிப்பை அடக்கியவாறே,”புரோட்டா செய்யவெல்லாம் நேரமில்லை.இதையே அவசர அவசரமா செஞ்சுட்டு வந்தேன்.ஹோட்டல்லையே எல்லா நாளும் சாப்பிட்டா,நமக்கு கட்டுபடியாகாது”என்றவன்,இயல்பாய் அவனே தட்டை எடுத்துப்போடவும்,பதறிப்போன வேணி,அவசரமாய் தட்டைப் பிடுங்கவும்,
பாவம் அவனோ புரியாமல்,”ரொம்ப பசிக்குதா? முன்னாடியே சொல்லியிருந்தா வர்ற வழில ஏதாவது வாங்கி கொடுத்திருப்பேன்ல”அக்கறையாய் கேட்டுவிட்டு இன்னொரு தட்டை எடுத்து வர,
“ஐயோ,எனக்கு பசிக்கவெல்லாம் இல்ல.நானிருக்கும் போது,நீங்க எதுக்கு போட்டு சாப்பிடறீங்க.நானே போட்டுக்கொண்டு வர்றேன்.நீங்க வெளில போய் உட்காருங்க”என்றவளிடம்,
‘ஆணும் பெண்ணும் சமம் தான்’என்றெல்லாம் தன் கொள்கைகளை கூறத்தான் ஆசைப்பட்டான் அரசு.ஆனால் என்ன செய்ய? இயல்பாகவே தன்னை யாராவது கவனித்து,தனக்கு எதுவும் செய்தால் எப்படியிருக்கும் என்ற அடிமனதின் ஆசை காரணமாகவோ,இல்லை மனைவியின் அன்பை உணர்ந்தோ என்னவோ,அவளின் பேச்சை தட்டாமல்,அந்த பெரிய கிட்சனில் ஒரு ஓரமாய் அமர்ந்து,அவள் கொடுத்த உணவை உண்ண ஆரம்பித்தான்.
அவன் செய்தது தான்.எப்போதும் போல் ருசியாகவே இருந்தது.கூடவே ஒரு பெண்ணின் துணை,அதுவும் தன் வாழ்க்கைத்துணை அருகிலிருந்து பரிமாற,உணவின் சுவை இன்னுமே கூடித்தான் தெரிந்தது அரசுவிற்கு.
அவன் உண்டு முடிக்கவும்,அடுத்து இவளும் உண்டுவிட்டு வர,”ரெண்டு மணிக்கு எனக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு.நான் போகணும்.நீ பத்திரமா இருந்துக்குவ தானே”எனவும்,
“அப்போ எங்க மேனஜர் உங்களை வர சொல்லியிருந்தாரே?அந்த வேலைக்கு போகலையா?”கொஞ்சம் அதிர்ச்சியுடனையே கேட்க,
“ம்ஹூம்,போகலை.அங்க வேலை செஞ்சா, ’குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டின’ கதையாதான் இருக்கும்.முன்னுக்கு வரவே முடியாது.அதனால தான் முடிஞ்ச அளவுக்கு வேற இடத்துல ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.இந்த வாரத்துலையே அஞ்சு இடத்தில இண்டர்வியூக்கு போக போறேன்”என்றவனை இப்போது ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.
“முதல் இன்டர்வியூலையே வேலை கிடைக்காதா?”
“ம்ம்.கிடைச்சிடும் தான்.அந்த கம்பெனி நமக்கு எந்த அளவுக்கு செட் ஆகும்னு தெரியலையே.இந்த அஞ்சு கம்பெனில எந்த கம்பெனில வேலை செய்யற சூழ்நிலை,நம்ம வீட்டுக்கு வந்து போற டைம்,பிளஸ் வொர்க் லோட் லெவல்,அக்ரிமென்ட் டெர்ம்ஸ் எல்லாம் பார்த்துட்டு முடிவு செய்யணும்”என்றெல்லாம் சொல்ல,
“அக்ரிமென்ட் எல்லாம் கையெழுத்து போட வேண்டாம்”எனவும்,
“ஏன்? நீ கூட அக்ரிமென்ட் பேஸ்ல தானே வேலை பார்த்துட்டு இருந்த?”என்று மடக்கி கேட்க,
“நாங்க தான் அப்போ புத்தியில்லாம போய் ஸ்கீம்ல வேலைன்னு சேர்ந்துட்டோம்.நீங்க அப்படியா?நிறைய படிச்சிருக்கீங்க.உங்களுக்கே தெரியும்..இடைப்பட்ட காலத்தில எதுவும் பிரச்சனைன்னா,வெளில வர முடியாது.ரஞ்சி அப்படி தான் மாட்டிக்கிட்டு இருக்கா!அவளுக்கு மொத்தமா அஞ்சு வருஷ ஸ்கீம்ல போட்டுவிட்டுட்டாங்க.பாவம் அவளால வேற வேலைக்கு போக முடியாத நிலை.இன்னும் ஒரு வருஷம் இருக்கு..”தோழிக்காக பரிதாபப்பட,
“நீ எப்படி ரெண்டாவது தடவ அக்ரிமென்ட் டெர்ம்ஸ்-க்குள்ள சிக்காம தப்பிச்ச? “தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்க,
“ரெண்டு வருஷம் முடிஞ்ச உடனையே,அடுத்த அக்ரிமென்ட் போடணும்னு சொல்லும் போது ,உறுதியா வேணாம்னு அம்மா தான் சொன்னாங்க.பொண்ணுக்கு இடையில கல்யாணம் வைச்சா,தொடர்ந்து வர முடியாதுன்னு ரொம்ப கெஞ்சிக்கூத்தாடி மேனேஜரை சம்மதிக்க வைச்சாங்க”எனவும்,அரசுவிற்கு இப்பொழுது மனதில் ஒரு கேள்வி பிறக்க,கேட்க கூடாதென்று தான் நினைத்தான்.
ஆனால் கேட்டுவிட்டால் மனதின் பாரம் குறையும் என்றும் தோன்ற,இறுதியாய் கேட்டேவிட்டான்.
“அப்போ இந்த ஒன்பது மாசமாவே,நீ கல்யாணத்துக்கு ரெடியா தான் இருந்திருக்க..?ஒருவேளை உன்கிட்ட நான் பிடிகொடுக்காம இருந்திருந்தா,அந்த கவர்மென்ட் மாப்பிள்ளையை தானே கட்டியிருப்ப”எதார்த்தமாய் தான் கேட்க,அவளோ குதர்க்கமாய் புரிந்துகொண்டுவிட்டாள்.
இந்நேரம் பதில் சொல்லாமல் மௌனம் காத்தால்,மனதில் நெருஞ்சி முள்ளாக குத்திக்கொண்டிருக்கும் என்பதும் புரிய,
“ஆரம்பதிலயிருந்தே நீங்களே என்னை வந்து பார்த்து பேசுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.அது நடக்காதுன்னு உங்க நடவடிக்கை புரிய வைச்சதும்,நானாவே பேச பலமுறை முயற்சி செஞ்சேன்”என்றவளுக்கோ,அப்போது எப்படிப்பட்ட மனநிலையில் திரும்பினோம் என்று நினைத்தால் இப்போதும் வலி.
வலிகளை கடந்து வந்த பின்னும்,நினைக்கும் போது அந்த வலிகள் இப்போதும் புதிதாய் தான் தெரிய,அவனது கண்ணுக்கும் அவளது கலக்கம் புரிய,”போனது போகட்டும் விட்டுடு.எனக்கு படிப்ப தவிர அப்போ எதுவும் பெருசா படலை”-அவளை சமாதானம் செய்வதற்கென்று சொன்னதும் பிழையாய் போனது.
ஏற்கனவே அவளறிந்த விஷயம் தான்.மீண்டும் கணவன் வாய்படவே கேட்க,முகம் முழுதாய் சுருங்கி போயிற்று.
‘நான் மட்டும் தான் ஏங்கி,தவித்து,அழுது கரைந்தேனா?’-வெளியில் கேட்காமல் விட்டாலும்,மிச்சத்தை விடாமல் சொல்லி முடித்தாள்.
“ஒரு பேச்சுன்னு வந்துடுச்சு.முழுசாவே சொல்லிடறேன்-ங்க”என்றவள்,
“ஒவ்வொருதடவையும் மாப்பிள்ளை பார்க்கும் போதே,எனக்கு வேலை வைக்காம,அம்மாவே ஆயிரம் குறை சொல்லிடுவாங்க.கடைசியா எல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னது,அந்த கவர்மென்ட் மாப்பிள்ளைக்கு தான்.
அதுவரைக்கும்  எப்படியாவது உங்களோட பேசிடணும்னு தான் நினைச்சேன்.ஆனா தைரியம் வரலை!கடைசி முறை,வாழ்க்கையே போயிடுமோன்னு ஒரு பயம்.அதனால தான் பேசினேன்”-கொஞ்சம் நிறுத்தியவள் அவன் முகம் பார்க்காமல்,வெளியில் கதவை பார்த்துக்கொண்டே,
“ஒருவேளை உங்களை பார்க்காம இருந்திருந்தா,எங்கம்மா ஆசைப்படி அவங்க யார கைகாட்டினாலும்,கண்ண மூடிக்கிட்டு கழுத்தை நீட்டியிருப்பேன்”உணர்ச்சிகரமாய் சொல்ல,அரசு அமைதியாய் இருந்திருக்கலாம்.
எதார்த்தமாய் கேட்கிறேன் பேர்வழியென்று,”அந்த கவர்மென்ட் மாப்பிளையை சொட்டை மாப்பிள்ளைன்னு நீ வேண்டாம்னு சொன்னதா,உங்க பாட்டி சொன்னாங்களே..”எனக் கேட்டுவிட,
அதில்’நீ கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை நீட்டும் ரகமா?”என்ற கேள்வியும் தொக்கி நிற்க,வேணி ரொம்பவே காயப்பட்டுப்போனாள்.அரசு தான் அறியவில்லை.அவளும் அதை அறியவிடவில்லை.
‘உன் நினைப்புக்கெல்லாம் நான் பதில் சொல்லியே ஆகணுமா?’என்று முகத்தை திருப்பிக்கொண்டு மௌனமாய் கடந்து முடியவில்லை அவளால்!!
மௌனம் மிகப்பெரிய ஆயுதம் தான்.சில நேரம் தம்பதியரிடையே மிகப்பெரிய பிளவை உருவாக்கும் ஆயுதமும் இதுவே..(பல கதைகளை படித்து,புரிந்து கொண்டிருந்தாள்.ஹி ஹி ஹி).
எனவே தான் குரலை இயல்பாக்கிக்கொண்டு பதிலளிக்க முயன்றாள்.
“உங்கள மனசில வைச்சிட்டு பார்த்ததினால தான் குறையா தெரிஞ்சுது.மண்டைல முடியிருந்திருந்தாலும் வேற ஏதாவது குறை சொல்லி தட்டி கழிக்க முயற்சி பண்ணியிருப்பேன்”எனவும்,அவனுக்கு தான் இப்போது என்னென்னவோ ஆனது.
பெண்ணின் உணர்வுகள் மிக மெல்லிய நூலிழையால் பின்னப்பட்டதோ?-தன்னுடைய சில நேர கண் தீண்டல்,அவளிடம் எவ்வளவு தாக்கத்தை கொடுத்திருக்கிறது என்றெண்ணி ‘நல்ல மனிதனாய்’ கவலைப்பட்ட அதே வேளையில், ‘இயல்பான காதலனாய்’ ஆனந்தப்பட்டுக்கொண்டான்.
காதலிக்கப்படுவதும் சுகமே..தான் காதலிக்கப்பட்டதை காதலியின் குரலால் கேட்பது அதைவிட சுகமே! அனுபவித்துக்கொண்டிருந்தான் தமிழரசன்..பேச்சே எழாமல் வேணியை அவனையும் அறியாமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவனின் பார்வையின் தீண்டலை உணர்ந்தவுடன்,அவன் பேசிய மற்றவை அனைத்தையும் விரும்பியே மறந்தாள்.அவளின் நாணம் முன்னுக்கு வர,அவனின் பிழை பின்னுக்கு சென்றுவிட்டது.

Advertisement