Advertisement

13
அந்த இரவு நேரத்தில் வேணியும்,ரஞ்சியும் ஓய்ந்து போய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.
“இன்னைக்கு ரொம்ப வேலை வாங்கிட்டானுங்கடி வேணி.பன்னெண்டு மணி நேரமா வேலை செஞ்சு,முதுகே ஒடிஞ்சு போச்சுடி”என்றவளின் குரலில் அப்படியொரு சோர்வு.
வேணிக்கும் அடித்துப்போட்டது போலத்தான் இருந்தது.ஆனால் அவளோ அந்த வலியை பொருட்படுத்தாமல்,படுக்கைக்கு அருகிலிருந்த நோட்டை எடுத்து கிறுக்க ஆரம்பித்தாள்.
காலையிலிருந்து இந்த நான்கு வரிகள் தோன்றிக்கொண்டே இருக்க,அழகான கையெழுத்தில் நிறுத்தி நிறுத்தி எழுதியவள்,எட்டி எட்டிப் பார்த்த ரஞ்சியை கவனிக்கவில்லை.
மனதில் ஆசைகளை வெளிக்காட்டிக்கொள்ள
உகந்த நேரமில்லை..
பத்திரமாய் யாவையும் 
பதுக்கி வைத்துக் காத்திருக்கிறேன்,
என் பகலவனனின் வரவிற்காய்..!!
புதியதோர் உதயத்திற்காய்..!!!
“சூப்பர்டி வேணி”-ரஞ்சி கத்தவும்,
“ஐயோ போடி.எதுக்கு நீ இதையெல்லாம் எட்டிப் பார்க்கற”வெட்கப்பட்டவள் நோட்டை மூடி வைத்துவிட,
“நான் முழுசா படிச்சிட்டேனாக்கும்.என்ன எங்க அண்ணன் நினைப்பா?ம்ம்ம்.நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போயிடுவாரில்ல.எதையும் பத்திரமா பதுக்கி வைக்காம,எல்லாத்தையும் கொட்டிடு”கேலிச்சிரிப்போடு,கிண்டலடிக்க,அவள் மீண்டும் வெட்கப்படவும்,
“தயவு செஞ்சு வெட்கப்படாதடி.காண சகிக்கலை”என்றவள்,வேணியின் முகம் போன போக்கில்,
“சரிடி,சரிடி,அழகா தான் இருக்க.அழுகாத”சமாதானப்படுத்தியவள்,
பெருமூச்சுவிட்டு,”நானும் உன்ன மாதிரி எவனையாவது காதலிச்சு,அவன்கூடவே ஓடிப்போயிருக்கலாம்.இந்த வேலை கொடுமையிலிருந்து விடுதலை கிடைச்சிருக்கும்”-கவலைப்படுவது போலவே கூற,
“அப்படி எதுவும் கூறுகெட்டத்தனமா பண்ணிடாதடி”எனவும் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
அதை புரிந்துகொண்டவள்,”அந்த நேரம் நானும் கொஞ்சம் கூறுகெட்டத்தனமா தான் நடந்துக்கிட்டேன்னு எனக்கு நல்லாவே இப்போ தெரியுதுடி ரஞ்சி.நீயும் என்னை மாதிரி எதுவும் செஞ்சுடாத. என்னோட நல்ல நேரமோ என்னவோ,அவங்க நல்லவங்களா இருந்துட்டாங்க.எல்லாரும் அப்படி இருப்பாங்கன்னு சொல்லிட முடியாதில்ல.காலைல கூட நியூஸ் பேப்பர் படிச்சேன்.
’காதலனுடன் ஓடிப்போன பெண்,காதலனின் நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு,உறுப்புகள் கிழிக்கப்பட்டு கொலை’-ன்னு கொட்டை எழுத்தில போட்டிருந்தான்டி.படிச்சவுடனே நெஞ்சு பதறிப் போச்சு.என்னைக் காப்பாத்திக் கொடுத்த கடவுளுக்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும்.மாசமாசம் சாமிக்கு விரதமிருக்கதா வேண்டியிருக்கேன்”என்றதும்,
ஒரு நிமிடம், ‘வேணிக்கு அப்படி ஏதாவது ஆகியிருந்தால்’-கற்பனை செய்து பார்த்த ரஞ்சிக்கு உடம்பெல்லாம் கூசிவிட்டது.
“ம்ம்ம்..எல்லாம் நல்ல நேரந்தான்டி வேணி.இனியும் சூதானமா  இருந்துக்கோ”-எனவும் அவள் முகம் வாடுவதைக் கண்டு,
“இந்தக் கவிதை ஏதோ நல்லாத்தான்டி இருக்கு.நம்ம கதை படிக்கற பக்கத்துல கூட இந்த மாதிரி கவிதையெல்லாம் போட்டு,லைக்,கமெண்ட்ஸ் எல்லாம் அள்ளுறாங்களே.நாமளும் போடுவாமா வேணி..அப்டியே கொஞ்சம் கொஞ்சமா இப்படி எழுதி, ஒருநாள் நிறைய எழுத தோணும்டி.அப்புறம் நீயும் பெரிய ரைட்டர் தான்”ஆசைகாட்டிய தோழியை முறைத்தவள்,
“நான் என் புருஷனை நினைச்சு ஒரு கவிதை எழுதினா,நீ உடனே ஏகப்பட்ட கற்பனையை அவிழ்த்துவிடு என்ன?”கோபமாக பொரிந்துவிட்டு,நோட்டை எடுத்து தன்னுடைய பேக்கில் பத்திரப்படுத்தினாள்.
இன்றோடு கணவனை பார்த்து ஒரு மாதமாகிவிட்டது.கடைசியாய் பார்த்தபொழுது ,உணவு நேரத்தில் மௌனமாய் கழிந்த அந்த சில நிமிடங்கள்,இன்றும் மனதை தென்றலாய் வருட, கனவுகளுடனே மூட்டை முடிச்சுக்களை கட்டினாள்.நாள் முழுவதும் வேலை செய்த அலுப்பு கூட பின்னோக்கிப் போய்விட்டது.
ரஞ்சிக்கு தான் அவளின் பிரிவை தாங்க முடியவில்லை.
தாங்க முடியாமல் கேட்டேவிட்டாள்.
“என்ன விட்டுட்டு போறதுல உனக்கு வருத்தமாவேயில்லையாடி”
“வருத்தமில்லாம இருக்குமா? இந்த ரெண்டரை வருஷமா உன்கூடத்தானே அதிக நேரம் இருந்திருக்கேன்.இப்போ போறதா நினைச்சா தான் புதுப்புது யோசனையா வருது”என்றவளை புரியாமல் பார்த்தாள்.
“என்ன யோசனை?”
“அதுவா,அவங்களும் இங்க தான வேலைக்கு வரப் போறாங்க.அதனால இங்கேயே பக்கத்துல ஏதாவது வீடு பார்த்து வந்துட்டா,உன்னை அடிக்கடி பார்த்துக்கலாம்னு தோணுது.
இன்னொருபக்கம்,நானும் தொடர்ந்து இங்கேயே வேலைக்கு வந்தா,வேலை முடியற வரைக்கும் ஒண்ணாவே இருப்போம்னு ஆசையாவும் இருக்கு.ஆனா எங்க,எல்லாத்துக்கும் எங்கம்மா முட்டுக்கட்டை போடுது.
இனி நான் வேலைக்கே போகக் கூடாதாம்.புருஷன் சம்பாதனையில அழகா குடும்பம் நடத்தணுமாம்.ஆரம்பத்திலயிருந்தே வேலைக்கு போய் சம்பாதிச்சு கொடுத்து அவங்களுக்கு சொகம் காண்பிச்சா,கடைசி வரைக்கும் நம்மளை வேலைக்கு போயிக்கிட்டே இருக்க சொல்லுவாங்களாம்.
அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்கன்னு சொன்னா சம்பந்தமேயில்லாம,’பொண்டாட்டியை வைச்சு சோறு போட வக்கில்லாதவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கறான்’-னு ஆரம்பிச்சு ஒரே வசவு.காது கொடுத்து கேட்க முடியல.பாவம் அவர்!தப்பே பண்ணாம எங்கம்மா வாயில விழுந்து அரைபடராறு”கணவன் மேல் பரிதாபப்பட,
ரஞ்சி‘அடப்பாவிகளா’என்பது போலத்தான் பார்த்தாள்.
‘பொண்ண,இந்தம்மாவே கெடுத்துடும் போலிருக்கே.வாழ்க்கைல அந்த நிமிஷம் என்ன தேவையோ,எது நிறைவா இருக்கோ அதை செய்னு சொல்லாம,அப்படி இருக்கணும்,இப்படி இருக்கணும்னு திட்டம் போட்டு பொண்ணை கெடுக்கறது நல்லவா இருக்கு’-மனதிற்குள்ளே பேசியவள் தான்,வெளியில் எதுவும் சொல்லவில்லை.
என்னதான் தப்பு தவறு செய்தாலும்,அம்மாவும் மகளும் இன்று அடித்துக்கொள்வார்கள்!நாளை கூடிக்கொள்வார்கள்.இடையில் நியாயம் பேசுகிறேன் பேர்வழி என்று முன்னுக்கு போனால்,நம் மூக்கு தான் அறுபடும்-தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள்.
இருந்தாலும் மனது கேட்காமல்,”இனி எதுனாலும் முதல்ல அண்ணன்கிட்ட பேசி முடிவு பண்ணிட்டு,அம்மாகிட்ட சொல்லுடி.எல்லா ஆம்பளைங்களும் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி தனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு எதிர்பார்ப்பாங்களாம்.நேத்து படிச்ச கதைல கூட போட்டிருந்துச்சுடி”-மீண்டும் கதையை பற்றி பேச,வேணி கடுப்பாகிவிட்டாள்.
“உனக்கு எத்தன வாட்டிடி சொல்றது.இனிமேல் கதையை பத்தியே பேசாத”-எனவும்,நொடித்துக்கொண்டு படுத்துவிட்டவள்,நொடிகள் தாமதிக்காமல் உறங்கிவிட்டாள்.
அவ்வளவு அசதி அவளுக்கு.
மெல்லிய மூச்சு சத்தத்தில் தோழி உறங்கிவிட்டதை உணர்ந்த வேணி,அவளுக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு,தலையணையில் சாய்வாக அமர்ந்தாள்.
இவளது நினைப்பெல்லாம் அரசுவைப் பற்றியே தான்.தான் ‘நேரமையான ஒருவனை தான் விரும்பியிருக்கிறோம்’என்று எண்ணி எண்ணி பூரித்துக் கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு பின் அடுத்தடுத்து நடந்த எதுவுமே சரியில்லை தான்.
ஆனால் ஒருமுறை கூட,’எல்லாம் நீ வந்த ராசியினால தான்’என்று கூறவேயில்லை..
ஒருமுறை நீலவேணியே மகளை நோகும்படி பேசிவிட்டார்.
‘நீ வந்த ராசி தான் அவனுக்கு எச்சி இலையெடுக்கற வேலையும் போச்சு’என்று அரசுவை கேவலமாய் திட்டியிருக்கிறார்.
‘மகளை மயக்கிக் கூட்டிக்கொண்டு போய்விட்டான்’என்ற ஆத்திரம் அடங்கவில்லை அவருக்கு! அதனாலையே அடிக்கடி இப்படி திட்ட,வேறு யார் கணவனை திட்டினாலும் வேணி கோபப்பட்டிருப்பாள்.
ஆனால் தாய் பேசும்போது,அது அவளுக்கு அவ்வளவாய் உரைக்கவில்லை என்பதே நிஜம்.
‘அவங்கவாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கட்டும்.நாம நம்ம வேலையை பார்ப்போம்’என்று தீர்க்கமாய் முடிவு செய்திருந்ததால்,பிரச்சனை எதுவும் வரவில்லை.
எப்போதாவது,’உங்கப்பன்கிட்ட பேசறியா’வேண்டுமென்று நீலவேணி கேட்கும் போது மட்டும் எரிச்சலாய் வரும்.
‘அந்தாள நான் அப்பனாவே நினைக்கலை.நீ போனை வை’எரிச்சலில் கத்திவிட்டு வைத்துவிடுவாள்.
அந்த மனிதன் மேல் மட்டும் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதால்,முகத்தில் கூட விழித்துவிடக் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தவள்,எக்காரணத்தைக்கொண்டும் அம்மாவை பற்றி ஒரு வார்த்தை தரக்குறைவாக கணவனிடம் பேசிவிடக் கூடாதென்பதிலும்,விட்டுக்கொடுக்கவே கூடாதென்பதிலும் உறுதியாய் இருந்தாள்.
தன்னைப் பெற்று வளர்க்க அவர்பட்ட சிரமங்கள் இப்பொழுது அதிகமாய் கண்முன் வர,கடைசிவரை தன்னுடனே வைத்து கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ளவேண்டுமென்று ஆசையாய் இருந்தாலும்,நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதால்,தன் அவாவை யாரிடமும் இதுவரை வேணி சொன்னதேயில்லை.
இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவள்,எப்போது உறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
மறுநாள் பொழுதும் யாருக்கும் காத்திராமல் அழகாய் புரிந்துவிட,எட்டு மணி வேலைக்காக அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்த ரஞ்சிக்கு,சாவகாசமாய் உதவிக் கொண்டிருந்தாள் வேணி.
“ஒன்பது மணிக்கு இங்கிருந்து கிளம்பிடுவேன்டி ரஞ்சி.அடிக்கடி போன் பண்றேன்.நீயும் பேசணும் என்ன”
“ம்ம்ம்..ம்ம்ம்”என்றதற்கும் மேல் பதில் இல்லாமல் போக,ஒருக்கட்டத்தில் எரிச்சலாகி,
“என்னடி ம்ம்ம்-ன்னுட்டே இருக்க”கோபத்தில் கத்தியபடி,ரஞ்சியின் முகத்தை திருப்ப,அவளின் கலங்கியிருந்த கண்கள்,அவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று புரிய வைக்க,இப்போது கட்டுப்படுத்த வேண்டிய அவசியமேயில்லாமல் டேமை திறந்துவிட்டாள் வேணி.
கட்டிக்கொண்டு அழுத இருவரும் ஒருவாரு சமாதானமாகி,கையைப்பிடித்துக் கொண்டே எதுவும் பேச இயலாமல் அமர்ந்துவிட்டனர்.
கண்ணோடு கண்ணோக்கி மௌனமாய் பேசுவது காதலர்களுக்கு மட்டுமே உரித்தானதா என்ன? தூய உள்ளம் கொண்ட இரு மனங்களுக்கும் இது சாத்தியமே.எங்கோ பிறந்து,எப்படியோ வளர்ந்து,எந்தவிதமான எதிர்பார்ப்புமே இல்லாமல் அதீத பாசம் வைப்பது நட்பில் மட்டுமே சாத்தியமாகும்.
கணவன் மனைவிக்கு இடையே கூட இது சாத்தியமானதில்லை..’வேறுவித’ கொடுக்கல் வாங்கல்  இல்லாமல் இந்த உறவு நெடுநாள் நீடிக்காது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
நேரம் மணி எட்டைத்தொட மனமேயில்லாமல்,எதுவும் பேச முடியாமல் கண்ணைத்துடைத்துக்கொண்டே வேலைக்கு சென்றாள் ரஞ்சி.
வேணியும் மனதை தேற்றிக்கொண்டு,இங்கிருந்து கிளம்புவதற்கு முன் செய்ய வேண்டிய மிச்ச சொச்ச வேலைகளை செய்யலானாள்.
அவளுடைய போன் வார்டனிடமிருந்தது.அதை முதலில் வாங்கியவள்,தன் சம்பளப்பட்டுவாடாவையும் வாங்கிவிட்டு,தன்னுடைய +2 சான்றிதல்களையும் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு தயாராய் கணவனுக்கு அழைத்தாள்.
“அங்க தான் வந்துட்டு இருக்கேன்”என்றவன் உடனே வைத்துவிட,
கணவனின்’நேரம் தவறாமை’யை நினைத்து சிலாகித்துக்கொண்டாள்.
காதல் கொண்ட மனம்,சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதுபடுத்தி,கணவன் மேல் அதிக காதலை உண்டாக்க,மைவிழி தீட்டி மயக்கத்துடனையே கணவனை எதிர்பார்த்து தன் அறையிலையே காத்திருந்தாள்.
பதினைந்து நிமிடம் போயிருக்கும்.அவனிமிருந்து அழைப்பு வந்திருந்தது.
“வெளில நிற்கறேன்.வா”எனவும் துள்ளிக் குதித்துக்கொண்டு,தன்னுடைய ஒரேயொரு பேகை எடுத்துக்கொண்டு போனாள்.
மிச்சம் மீதி மூட்டைகளை எல்லாம் விவரமாய் செக்யூரிட்டி ரூமில் பழைய ‘பைல்’(தேவையற்றது) இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு,அவரின் அனுமதியோடு சாவியையும் எடுத்து வந்திருந்தாள். 
வேணியை கூட்டிச்செல்ல வந்திருந்த அரசு,இம்முறை விவரமாய் ஆட்டோவில் தான் வந்திருந்தான்.
முன்பே ‘எத்தனை மூட்டை.’என்று விவரமாய் கேட்டு வைத்திருந்தான்.
‘நாலே நாலு தான்’என்ற பதிலில் கவலை,எரிச்சல்,கோபம் எல்லாம் வந்தாலும்,அடக்கிக்கொண்டான்.
இப்போது அந்த நாலு பேகையும் காண,அது கொஞ்சம் அளவில் சிறியதாகவே இருக்கவே,கொஞ்சம் சமாதானப்பட்டு,அவளிடமிருந்த பைகளை தானே வாங்கி ஆட்டோவின் பின்புறம் அடுக்கி வைத்தவன்,
“போலாமா”எனவும்,சந்தோஷத்துடன் தலையசைத்தவள்…ஒருமுறை தான் வேலை செய்த இடத்தை பார்வையிட,இப்போது அரசுவிற்கு தான் சிரிப்பு வந்தது.
‘ரொம்ப பில்டப்பா இருக்கே’மனதில் தான் சொல்லிக்கொண்டான்.
வெளியில் சொல்லி அவள் கண்ணை கசக்கினால் யார் சமாதானம் செய்வதாம்?
ஒருவழியாக அவள் பார்வையிட்டு முடித்த பின்னர்,இருவரும் ஆட்டோவில் ஏற,அவள் தயங்கி தயங்கி,”எக்ஸாம் எப்படி பண்ணியிருக்கீங்க”என்று கேட்க,
“எப்பவும் போலதான்”என்றான்.
“எப்பவும் போல தான்னா?”
“ம்ம்ம்ம்.நல்லா பண்ணியிருக்கேன்.வழக்கம் போல யூனிவெர்சிட்டி பர்ஸ்ட் வந்துடுவேன்னு தான் நினைக்கறேன்”என்றதும் இவளுக்கு திக்கென்றானது.
“அவ்வளவு நல்லாவா படிப்பீங்க”-மனதிற்குள் கேட்க வேண்டியதை அவசரப்பட்டு வாய்விட்டு கேட்டதை,எண்ணி நொந்துகொண்டாள்.
‘என்னைய என்ன நினைச்சிருப்பாங்க’சங்கடத்துடன் கூடிய வெட்கத்துடன்,அவனின் பார்வையை தவிர்த்து வெளியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பிவிட,
“உன்னோட சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்ட தானே.எங்க இருக்கு?”
“ஹன்ட்பாக்ல தான்”என்றவள் அவசரப்பட்டு திறந்து காட்ட,உடனே அவன் கையிலேடுப்பான் என்று இவளுக்கு தான் தெரியாதே..பதறிப் போய்விட்டாள்.
“உங்க அளவுக்கு எல்லாம் படிப்பு வராது”கண்ணில் நீர்கோர்க்க..
‘இது வேற,ஆன்னா,ஊன்னா வந்துடுது’நொந்து கொண்டே நாசூக்காய் ஒற்றி எடுத்துக்கொண்டாள்.
அவளது மதிப்பெண்களை பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்தவன்,அவள் கண்களை துடைப்பதையுணர்ந்து,அவளின் எண்ணம் புரிந்தவனாய்,
“நான் படிப்பு வைச்செல்லாம் யாரையும் எடைபோட்டதில்லை.ஏதோ நானும் பேருக்கு ரெண்டு டிகிரி வாங்கி வச்சிருக்கேன்.மத்தபடி இதில பெருசா பெருமைப்பட்டுக்கறதுக்கு ஒண்ணுமேயில்ல.இன்னைக்கு நிலைமைக்கு நானும் இந்த சர்டிபிகேட்டை வைச்சு,’வேலை வேணும் சாமியோவ்’-னு பிச்சை எடுக்காத குறையா ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்க தான் வேணும்”-இலகுவாய் அதே நேரம் உண்மையை சொல்லிவிட,
படித்துப்பட்டம் பெற்றும் வேலையில்லாமல் சுற்றித்திரியும்’வேலையில்லா பட்டதாரிகள்’-இன் நிலைமையை அவனது பேச்சு பறைசாற்ற,வேணிக்கு இதுபற்றிய தெளிவெல்லாம் இல்லை என்பதால்,
‘என்ன பதில் சொல்வது’என்றே தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.
அரசுவிற்கு தான் மீண்டுமொருமுறை,’என்னோட நிலைமை இது தான்.உருப்படியா வேலைகூட இல்லாத என்னை நம்பி எதுக்கு வந்த?’கேட்க தோன்றியது..ஆனால் காலம்கடந்த பின்..கேட்கும் கேள்விகளால் ஒரு புண்ணியமும் இல்லை என்பதால் அமைதியாகிவிட்டான்.
பயணமும் நீண்டுகொண்டே போனது..அவர்களின் வாழ்க்கையைப் போல!!!!

Advertisement