Advertisement

12
உணவுப்பொருட்களை அரசு வாங்கி வந்த சமயம்,சரியாக நீலவேணியும் லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்க,கோபம் வந்தாலும்,’அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா செய்யட்டும்.நானா கேட்டா தான் அது தப்பு! தேவையில்லாம இதுக்கெல்லாம் கோவுச்சுக்கிட்டு முகத்தை திருப்பிக்கிடக் கூடாது’தெளிவாய் முடிவெடுத்த பின்னர் அவரை வரவேற்க,
“இந்த பொருளெல்லாம் எங்க வைக்கணும்னு நீங்க சொன்னா,அங்கேயே வைச்சிடலாம் தம்பி”-மிகவும் பணிவாக பேசிய இவர் தான்,மகளிடம் அப்படி எகிறியவர் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.
இந்தப் பணிவில் ஏமாந்து போன அரசுவும்,”உள்ள ஒரு ரூம் சும்மாதான் இருக்குதுங்க…..த்தை.அங்கேயே எல்லாத்தையும் வைச்சுட சொல்லுங்க.தேவைங்கும் போது எடுத்து ஒழுங்குப்படுத்திக்கிடலாம்”-சிரமப்பட்டு அத்தை என்ற வார்த்தையே உதிர்த்தான்.
புதிதாய் வந்த சொந்தத்தை ஏற்க அவனுக்கு இன்னமுமே தயக்கமாய் இருந்தது.
அவரோ அடமாய்,”அவங்களே நாம சொல்ற இடத்துல இறக்கி வீட்டை ஒழுங்குபடுத்திக் கொடுத்திடுவாங்க தம்பி.அதுக்கும் சேர்த்து தான் பணத்தை வாங்கியிருக்காங்க”எனவும் எதிர்த்து வாதிட மனமில்லாமல்,
“உங்க விருப்பபடியே செய்ங்க..த்தை”என்றவன்,தங்களை வீட்டினுள் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேணியை அழைத்து,பார்சலை கொடுத்தவன்,
“இதுல பாலும் இருக்கு..வந்தவங்களுக்கு சேர்த்து டீ போட்டுக் கொடு.நான் இவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்”எனவும் முகமலர தலையாட்டிவிட்டு,அம்மாவிடமும் கண்ணசைத்துவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
நீலவேணி தன் சக்திக்கு ஏற்றார் போல் சீர் செய்திருக்க,அதற்கே மலைத்தான் அரசு.
‘ரெண்டு பேர் குடித்தனம் பண்ண,இவ்வளவு ஏன் செலவு செய்யணும்.இதெல்லாம் தேவையில்லாத செலவு!என்னோட பணமாயிருந்தா என்ன?அவங்களோட பணமாயிருந்தா என்ன?எல்லாம் வேர்வை சிந்தி உழைச்ச காசு’அப்பட்டமாய் அவன் மனம் அடித்துக்கொண்டது.
வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேலையை பார்க்க,இடையில் வேணி டீ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள்.
முக்கால் மணி நேரத்தில் வீட்டை அழகாக செட் செய்து கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட,இப்போது ஓய்வாய் அமர்ந்தார்கள் மூவரும்!
மதிய உணவு வேளையும் வந்துவிட,மனைவியை தனியே அழைத்து,”உங்கம்மாவுக்கு சாப்பாடு போடு”எனவும் சந்தோஷமாய் நீலவேணிக்கு பரிமாறப் போய்விட்டாள்.
‘எதுக்கு அடிக்கடி இப்படி சிரிக்கறா?’நொடியில் மலரும் அவளின் முகம் அவனுக்கு எதுவோ புரியவும் வைத்து,புரியாமல் தலையை சொரியவும் வைக்க,அதை அப்படியே டீலில் விட்டுவிட்டு,மனைவியோடு சேர்ந்து தானும் மாமியாருக்கு பரிமாறினான்.
தமிழர் பாரம்பரிய விருந்தில்,முக்கனிகளில் ஏதோவொன்று இடம் பெற்றிருக்குமாம்.இவனும் அதுபடியே வாழைப்பழத்தை உரித்து வைத்து,நேர்த்தியாக சிறிய விருந்தையே படைக்க,நீலவேணி மருமகனை மெச்சிக்கொண்டார்.
ஒருவரின் சிறுசிறு நடத்தைகளை வைத்தே அவர்களின் ஒட்டுமொத்த குணத்தையும் சொல்லிவிடலாம்.அதே போல தான் நீலவேணிக்கும் மருமகனின் சிறுசிறு கவனிப்பு,அவனின் மேல் அலாதியான மரியாதையையும்,மகளின் தேர்வில் நம்பிக்கையும் கொடுக்க,உணவு அவர் தொண்டையில் தேவாமிர்தமாய் இறங்கியது.
அம்மா,மகளை தனித்திருக்க விட்டுவிட்டு சற்று நகர்ந்து எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தவனுக்கோ,தன் தாய் தகப்பனை பற்றிய எண்ணம் தான்.
ஒரே வேளையாவது இப்படி ஆசையாக உட்கார வைத்து,கண்நிறைய உணவு பரிமாற வேண்டுமென்பது அவனது நீண்டநாள் ஆசை.உடன் வைத்துக்கொள்ளவும் பேராசை தான்.
அவர்களுக்கு மாதாமாதம் தனியாக அனுப்பும் பணத்திற்கு பதிலாய் கூடவே வைத்து பார்த்துக்கொண்டால்,பாதிக்கும் மேலாய் செலவு மிச்சமாகும் தான்.ஆனால் என்ன செய்ய..!! இன்னமுமே தகப்பனைக் கண்டால் அரசுவிற்கு பயமே.
தன்னைப் பார்த்தவுடனையே,’கெட்ட கெட்ட’வார்த்தைகளால் திட்டும் அப்பாவை கண்டாலே கூசிப்போகும் இவனிற்கு!!-என்ன செய்ய அவன் வாங்கி வந்த வரம் அப்படி..
நினைத்துக் கொண்டிருக்கும் போதே எண்ணத்தின் நாயகனாய்,தகப்பன் அழைத்துவிட்டார்,
அவருக்கு இவன் தன் அலைபேசி என்னை கொடுக்கவில்லை என்பதால்,தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவும்,”ஹலோ”என்று தான் சொல்லியிருப்பான்.
“என்னடா மவனே.நீ யாரோ ஒரு பொண்ணு கூட சுத்தறியாம்.காசிப்பய சொன்னான்.அப்படி இப்படி அலைஞ்சு கண்ட கண்ட நோய வாங்கிக்காதடா.அதுக்காக ஒருத்திய மட்டும் கட்டிக்கிட்டு வாழாத.
எவ கூட வேணா போ.ஆனா எல்லாத்தையும் முறையாப் பண்ணு..தெரியலையா என்னைக் கேளு.நா சொல்றேன்.நா அந்தக்காலத்துல எப்படி இருந்தவன் தெரியுமா?…….”என்று ஆரம்பித்து,மகனிடம் பேசக் கூடாதவைகள் எல்லாம் பேசி,அசிங்கமான வார்த்தைகள் திட்டித்தீர்த்து அவராக சோர்ந்து போய் போனை வைக்கும் வரை,காதிலிருந்து போனை எடுக்கவேயில்லை அரசு.
வலித்தது.அவன் மனமெல்லாம் வலித்தது.
இதனால் தான்..இதனால் தான் திருமணம் முடிந்த பின்னரும் வீட்டிற்கு சொல்லவில்லை.நேராக போய் வீட்டில் நின்றிருந்தால்,மிகவும் கோரமுகம் காட்டி வேணியையும் தன்னையும் பேசுவார் என்பது தான் தெளிவாக தெரியுமே இவனுக்கு!!
அவர் பேசியதெல்லாம் இன்னுமுமே அவனுக்கு ஜீரணிக்கவில்லை.ஆசுவாசத்திற்காய் நெஞ்சை நீவிக்கொண்டான்.
எத்தனையோ பேர் பெற்றோர்களை ஆதரவற்றவர்களாய் தெருவில் நிறுத்த,கஷ்டப்பட்டாவது பெற்றோர்களை உடன் வைத்துப் பார்த்துக்கொள்ள நினைக்கும் அரசுவிற்கு அந்த கொடுப்பினை அமையாத நிலை..இல்லை இல்லை அவனது பெற்றோருக்கு தான் அந்த கொடுப்பினை வாய்க்கவில்லை.வாழத்தெரியாதவர்கள் பாவம்!!! 
மெதுவாய் தேறிக்கொண்டவன்,தன்னையே மனைவியும்,மாமியாரும் உற்றுப்பார்ப்பது உறுதியாக தெரிய,அவர்கள் பக்கம் திரும்பினான்.
போனை இவ்வளவு நேரம் காதில் வைத்து அதிகபட்சமாய் ஒரு’ம்ம்ம்’கூட சொல்லாமல் இருந்தால் யாருக்கு தான் சந்தேகம் வராது.வேணி குறுகுறுப்புடன் பார்க்க,நீலவேணிக்கு அந்த நாசூக்கு பார்க்கம் நிலை எல்லாம் இல்லை..தன் பெண்ணின் வாழக்கையப்பா!!!
பட்டென்று கேட்டுவிட்டார்..
”போன்ல யார் தம்பி?”
என்னவென்று சொல்லுவான்.உள்ளதை மறைத்து,”அப்பா தான்.கல்யாண விஷயம் கேள்விப்பட்டு ரொம்ப பேசறாங்க”எனவும்,
“பெத்தவங்க இல்லையா,இப்படி தெரியாம எல்லாம் செஞ்சா பேசத்தான் செய்வாங்க.நாம தான் பொறுமையா போகணும் தம்பி.இதுக்காகவெல்லாம் அப்பா அம்மாவை பகைச்சுக்காதீங்க.அவங்களை கூடிய சீக்கிரம் சமாதானப்படுத்தப் பாருங்க.பெத்தவங்க கண்ணீர் பிள்ளைங்களை பாடாப்படுத்தி வைச்சிடும் தம்பி”நிதர்சனத்தை கள்ளம் இல்லாமல் கூற,அதிலையே அவரின் நல்ல குணம் புரிபட,மறுத்துப் பேசாமால் மௌனமாய் அவரின் பேச்சை அங்கீகரித்தான்.
அவரும் உண்டு முடித்திருக்க,வேணி அவர்களின் பேச்சில் எல்லாம் தலையிடாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவள்,இலையை எடுத்துக்கொண்டு போய் பின்புறத்தில் போட்டுவிட்டு வந்தவள்,
“நீங்களும் சாப்பிடுங்க”கணவனை அழைக்க,
“கொஞ்சம் நேரம் போகட்டும்.நீ போய் சாப்பிடு”என்றான்.
அவளுக்கு அவனுடன் உண்ணவே ஆசையாயிருக்க,”எனக்கும் பசியில்ல”என்று அமர்ந்துவிட…நீலவேணி புறப்பட தயாரானவர்,
ஞாபகம் வந்தவராய்,”அம்சு சொல்லுச்சுங்க மாப்பிள்ளை.அவ வேல செய்யற இடத்திலையே நீங்களும் பெரிய பொறுப்பில உட்கார போறீங்களாம்.ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை”என்று வாழ்த்தையும் தெரிவிக்க…
‘இவளுக்கு யார் சொன்னது’-மனைவியை முறைத்தான்.அவள் அதை கண்டுகொள்ளாமல்,கிளம்பும் அம்மாவின் பின்னேயே முந்தானையை பிடிக்காத குறையாக செல்ல,இப்போது பயங்கர எரிச்சல் வந்தது அரசுவிற்கு!!
மரியாதைக்காக வேறு வழியில்லாமல் அவரை வழியனுப்ப வர,அவரோ அப்போதும் அமைதியாயிருக்காமல்,”நாளைக்கு தான அம்சு வேலைக்கு போறா”நாசூக்காய் கேட்க,
அவனோ புரிந்துகொள்ளாத தத்தியாய்(?)”சாயந்திரமே கொண்டு போய் விடணும்.நாளையிலிருந்து எனக்கு பரீட்சை ஆரம்பமாகுதுங்கத்தை.இனி தான் போய் படிக்கணும்.அடுத்த ஒரு மாசமும் என்னால எங்கேயும் அலைய முடியாது”என்று,
’இனி என்னை அலைய வைக்காதீங்க’மறைமுகமாய் கோரிக்கை வைத்த பின்னரே..மாமியார் கேட்டதில் உள்ள பின்னணியை புரிந்துகொண்டான்.
இப்போது அவருக்கு’அந்த’சப்ஜெக்ட் பின்னோக்கி போய்விட,”அப்போ நேரமாவே கிளம்புங்க தம்பி.படிப்பு தான் ரொம்ப முக்கியம்”அக்கறையாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சந்தோஷமாய் உள்ளே வந்த வேணியிடம்,”உனக்கு யார் நான் அங்க தான் வேலைக்கு வரப் போறேன்னு சொன்னது? உனக்கு இது முன்னாடியே தெரியுமோ? தெரிஞ்சு தான்  பிளான் போட்டு என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சியா”கோபமில்லாமல் அழுத்தமாய் வேண்டுமென்றே கேட்டான்.
“ஐயோ.எனக்கு நேத்து தான் தெரியும்..ரஞ்சி தான் சொன்னா..நான் கூட நீங்க சமையல்க்காரரா இருந்தாக் கூட ரொம்ப பிடிக்கும்னு தான் சொன்னேன்”அவசரமாய் சொன்னவள்,அதோடு நிறுத்திக்கொண்டாள்.
பெண்ணவளை தொற்றிக்கொண்டது வெட்கம்!!
அரசுவிற்கோ அவளின் பேச்சு,சிரிப்பையும்,புரியா உணர்வையும் ஒருங்கே கொடுக்க..பார்த்தபடி நின்றுவிட்டான்.
தன் கணவன் எப்படியிருந்தாலும் நேசிக்கும் பெண் கிடைப்பது வரமே..அன்று கூட சொன்னாளே..எதையுமே எதிர்பார்க்காமல் இயல்பாய் வந்த நேசமென்று…!! 
அந்த நேசம் இன்று தன்னையும் தொற்றிக்கொள்ள பார்ப்பதை உணர்ந்தேயிருந்தான்.அதற்கு தடையேதும் விதிக்கவில்லை அவன்!
இன்னும் தன்னை நேருக்கு நேர் பாராமல் அலைபாயும் அவள் கண்கள்..பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு!!
ஒருவேளை இப்போதே நேர்கொண்டு அரசுவை வேணி பார்த்திருந்தால்,அவள் ஆசைப்பட்டது போல,முதல் முறை எப்படி பார்த்தானோ..அது போலவே இன்றும் பார்ப்பதை உணர்ந்திருப்பாள்..ஆனால் அன்றுயில்லாத வெட்கம் இன்று அதிகமாய் தொற்றிக்கொண்டதே!!! என்ன செய்வாள் அவளும்!!
அமைதியாய் கடந்த அந்த சில மணித்துளிகளை கடக்க இருவருமே விரும்பவில்லை..ஆனால் நேரம் போய்க்கொண்டிருந்ததே..மனைவியை கொண்டு போய் விட்டுவிட்டு ரூமிற்கு போய் கொஞ்சமாவது படித்தால் தான் நன்றாக பரிட்சைஎழுத முடியும் என்பதால்,
“பசிக்குது..சாப்பிடலாம்”என்று அவளை அழைக்க,தயக்கத்துடனையே உணவைப் பரிமாறினாள்.
“ரெண்டு பேரும் ஒண்ணாவே சாப்பிடலாம்”என்றதும் அவளும் அவனோடு அமர,உண்டுகொண்டே தனது எதிர்கால திட்டத்தை அவளிடம் விளக்கினான்.
“எனக்கு சொந்தமா ஒரு ஹோட்டல் வைக்கணும்னு தான் ஆசை வேணி.கண்ணன் அண்ணாச்சியோட ஹோட்டலையே கொஞ்சம் பெருசா எடுத்து செய்ய நினைச்சிருந்தேன்.அதுக்குள்ள இப்படியெல்லாம் ஆகும்னு நினைக்கல”கலங்கியவன் உடனே தேற்றிக்கொண்டு,
“இனி கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா ஏதாவது ஒரு வேலைக்கு போகணும்.அதுக்குள்ள பேங்க்ல லோன் ஏற்பாடு பண்ணி,சொந்தமா ஹோட்டல் வைச்சிடணும்.இது தான் என்னோட ப்ளான்.இன்னும் நான் இதை பிரவீனுக்கு கூட சொல்லலை.உன்கிட்ட மட்டும் தான் சொல்றேன்.இதை நீ வெளில யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்னு நம்பறேன்”எனவும்,
“அம்மாகிட்டக் கூட சொல்லமாட்டேன்”அவளாகவே வாக்கு தந்துவிட,அவனுக்கும் அது தானே வேண்டும்.
அழகாய் புன்னகைத்தான்.அவனது கன்னக்குழி..அவளுக்கு என்னவென்னவோ ஆசைகளை உண்டாக்க,பார்வையை திருப்பிக்கொண்டவள்,உணவில் கவனமாயிருப்பது போல காட்டிக்கொண்டாள்.
காதலையும்,ஆசையையும் பிரதிபலிப்பது முதலில் கணவனாகவே இருக்க வேண்டுமென்று எண்ணினாள்.அதுவரை தன் உணர்வுகளை காட்டக் கூடாதென்று முடிவு செய்தவளுக்கு தெரியாதே..அவளின் முகம் அகத்தை அப்பட்டமாய் பிரதிபலிக்கிறதென்று!!
அவளின் விழி மயக்கம்,,அவனுக்குத்தான் ‘பல’ விஷயங்களை கற்றறிய தூண்டிவிட்டுவிட்டதே!!
எல்லாம் காதல்@ இளமை படுத்தும் பாடு..எவர் தப்பித்தார்..இவர்கள் தப்பிக்க!!!
 

Advertisement