Advertisement

11
தன்னிடம் தலையசைத்து விடைபெற்றுப்போகும் கணவனை பற்றி நினைத்துக்கொண்டே,செக்யூரிட்டியிடமிருக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் வேணி’.
ஒரு அறைக்கு இரண்டு பேர் தான் என்பதால்,ரஞ்சிதாவும்,வேணியும் அந்த சின்ன அறையை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தி வந்தனர்.
தோழியை கண்டவுடன்,ரஞ்சிதாவிற்கு எங்கிருந்து தான் பேச்செல்லாம் வருமோ..
“டி அம்சு,பிடிச்சாலும் பெரிய ஆளா தான் பிடிச்சுட்டடி”-வந்த உடனையே ஆரம்பித்த தோழியை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து,தலை முடியை வார ஆரம்பித்தாள்.
“முகத்தில பல்பு பலமா எரியுதே,செமத்தியான கவனிப்போ”கேட்டுக்கொண்டே அவள் துப்பட்டாவை பிடித்து இழுத்தாள்.
“இந்தா நீயே வைச்சுக்கோ”கழட்டிக் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்க,அதை தலையில் நன்றாக கட்டி முடிச்சிட்டுக்கொண்டவள்,
“கதைல எல்லாம் வருமே,கம்பெனி மொதலாளி வேலை செய்யற பொண்ணை பார்த்த உடனே காதல் வரும்னு! உனக்கும் கூட அந்த அதிர்ஷ்டம் வந்திருக்குடி”என்றவளை முறைத்தாள்.
“முழுசா சொல்றதுக்கு முன்னாடி என்ன மொறப்பு வேண்டி கிடக்கு”நொடித்தவள்,
“இன்னும் ரெண்டு மாசத்துல எங்கண்ணன் இந்த கம்பெனிக்கு தான் வேலைக்கு வரப்போகுதாம்.தகவல் வந்துச்சு..”-தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் பேசுவது போல வேணிக்கு தோன்ற,சீப்பை வைத்து தோழியின் தலையில் அடித்தாள்.
“வலிக்குதுடி லூசே”தலையை தடவியபடியே,
“நம்ம மேனேஜர்-க்கு வயசு ஆகிடுச்சாம்.அவர் வேலையை விடற எண்ணத்தில இருக்காராம்டி.அடுத்து யாரை வேலைக்கு வைக்கறதுன்னு கேட்டதுக்கு அண்ணன் பேரை சொல்லி,அவரை போதுமான அளவுக்கு வேலைக்கு பழக்கிவிட்டுட்டு ,தான் வேலையை விட்டு நின்னுக்கறதா சொல்லியிருக்காராம்டி அம்சு.அதுவுமில்லாம இங்க வேலை செஞ்ச அண்ணனை மேல்படிப்பு படிக்க சொல்லி எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்ததே அவர் தானாம்..”-விஷயத்தை சொல்ல சொல்ல,வேணிக்கு தலைகால் புரியாத நிலை.
“நிஜமா தான் சொல்றியா ரஞ்சி”ஆசையாக கேட்க,
“நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்.நம்ம வழிசல் வாசு இருக்கானே.சூப்பர்வைசர்! அவன் தான் சொன்னான்.இப்பவும் அண்ணே அடிக்கடி இங்க வருவாராம்,கணக்கில ஏதாவது கோளாறு இருந்தா சரிபண்ணி கொடுத்திட்டு போவாராம்..எவ்வளவு பெரிய ஆள பிடிச்சிருக்க.கொடுத்து வைச்சவடி நீ”-உண்மையான மனதோடு தோழியை அணைத்துக்கொள்ள,வேணிக்கோ சந்தோஷமும்,கவலையும் ஒன்று சேர வந்து தொலைத்தது.
அதை புரியாத ரஞ்சியோ,”அண்ணே மேனஜர் பொறுப்ப எடுத்துக்கிட்டு,நம்ம வேலை செய்யற இடத்துக்கு ஒரு ரவுண்ட்ஸ் வந்து,அப்படியே உன்னை ரொமான்ஸா பார்த்தா எப்படியிருக்கும்”-கற்பனையை அவள் ஓட்ட,இவளுக்கோ திக்கென்றிருந்தது.
“அடி லூசுக் கழுதை.எத்தனை முறை நாவல்ல வர்ற மாதிரி, நம்மளை கற்பனை பண்ணாதேன்னு சொல்லியிருக்கேன்.மறுபடியும் அப்படியே யோசிச்சிட்டு இருக்க”கோபமாய் திட்டவும்,
“ப்ச்ச்.கற்பனைலயாவது நல்லதா நால நினைப்போம்டி வேணி.உன் விஷயத்துல அது நெசமா நடந்தா,எனக்கு அது ரொம்ப சந்தோஷம் தான்”என்றவளை அணைத்துக்கொண்டாள்.
நல்ல நட்பும் கிடைப்பது வரமே!
தோழியை போல்,அவள் சொன்ன சூழ்நிலையை இப்போது வேணியும் கற்பனை செய்து பார்க்க,கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்த அதே வேளையில் அசிங்கமாகவும் தோன்றியது.
கணவன் பெரிதாய் படித்து நல்ல வேலையில்’கெத்தாக’ வந்து நிற்க,தானோ அங்கு துணி தைக்கும் பெண்ணாய்!!-நினைப்பே    கசந்தது.
தான் செய்யும் வேலையை ஒருபோதும் குறையாய் வேணி நினைத்ததேயில்லை.அவளுடைய பல சின்ன சின்ன ஆசைகளுக்கு தேவையான பணத்தை கொடுத்தது இந்த வேலை தான்.அதில் அவளுக்கு சந்தோஷமே.ஆனால் கணவனுக்கு தான் பொருத்தமானவள் இல்லையோ என்பதே பெருங்கவலையாய் இருக்க,அதை அப்படியே ரஞ்சியிடம் பகிர்ந்துகொள்ள,அவளுக்கும் வேணியின் மனநிலை புரியவே செய்தது.
முகம் வாடிப்போய் அமர்ந்தவளின் தோளைப்பிடித்து நேர்பார்வை பார்த்து,”நீயும் ஒண்ணும் எங்கண்ணனுக்கு குறைஞ்சவ இல்ல.புரிஞ்சுதா”எனவும்,கண்ணீர் தேங்கிய விழிகளே பதிலாய் இருக்க,
“இப்போ அண்ணனுக்கு நல்ல வேலை கிடைக்கறதில உனக்கு விருப்பமில்லையா வேணி.அதே மாதிரி ஹோட்டல்ல சோறு பொங்குற வேலையே பார்க்கணும்னு ஆசைப்படறியா”கோபமாய் கேட்டாள்.
“அதிலென்ன தப்பிருக்கு”என்றவள் அதிர்ந்து போன ரஞ்சியின் பார்வையில் தன் தவறு புரிந்தவளாய்,
“சமைக்கிற வேலை ஒண்ணும் குறைச்ச வேலையில்லைன்னு சொல்ல வந்தேன்.அவங்க எந்த வேலையையும் குறையா நினைக்க மாட்டேன்னு சொல்லியிருக்காங்க”-தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த போதிலும்,ரஞ்சியின் மனது சமன்படவில்லை.
“அம்சு,சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத,அண்ணா நல்லா படிச்சு,நல்ல வேலைக்கு போனா,உனக்கும் நாளைக்கு பொறக்க போற,உன் பிள்ளைக்கும் தான் நல்லது.எந்த வேலையும் குறைச்ச வேலை இல்லைன்னாலும்,அவங்க முன்னேறிப் போகும் போது முழு மனசோட சந்தோஷமா நீ ஒத்துழைப்பு தரணும்.தேவையில்லாம,அவங்க பெரியவங்களாகிட்டா,நம்மளை கண்டுக்கிட மாட்டாங்களோ,விட்டுட்டு போயிடுவாங்களோன்னு எல்லாம் நினைச்சு,அண்ணனோட செயலுக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது..புரியுதா”
“நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லடி ரஞ்சி.அவர் நல்ல நிலைக்கு வந்தா எனக்கு சந்தோஷம் தான்.என்னோட கவலையெல்லாம் நான் இப்படி இருக்கிறேன்னு தான்.இதுக்கு என்னடி பண்ணலாம்?”
“ம்ம்ம்.மொதல்ல எங்கண்ணனை சரிக்கட்டி குடும்பம் நடத்தப் பாரு.பொறவு அவர் மனசறிஞ்சு,அவர் போக்குக்கு என்ன முடிவேடுக்கணுமோ அப்படி எடு.நீ அவசரப்பட்டு தனிச்சு எந்த முடிவுமெடுத்து,பின்னாடி முழிச்சுக்கிட்டு நிக்காத”-ஆசானாய் தோழிக்கு அறிவுரை கூற,
“நீ சொல்றது தான் கரெக்ட்டு ரஞ்சி.அவங்க இன்னும் ‘நீ வேலைக்கு போ,இல்ல வீட்டில இரு’-ன்னு முடிவா எதுவும் சொல்லல.மொதல்ல மனசு விட்டு அவர் சொல்லட்டும்”உடனே ஒப்புக்கொள்ள,
“நீ மட்டும் அண்ணனோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்டன்னு சொல்லு.உனக்கு நானொரு நல்ல ஐடியாவா சொல்றேன்”என்றதும்,
“சரிடி,என் ஐடியா மணி”கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டாள்.
ரஞ்சியும் அறிவாளிப்பெண் தான்.சூழ்நிலை தெரிந்து நடக்கக் கூடியவள்.பத்தாவது தான் படித்திருக்கிறாள்.ஓரளவுக்கு நன்றாக ஆங்கிலமும் பேசுவாள்.பிறந்தது தமிழ்நாட்டில் என்றாலும்,பஞ்சம் பிழைக்க போய் சில வருடங்கள் வடஇந்தியாவில் இவள் குடும்பம் இருந்ததால்,ஓரளவுக்கு ஹிந்தியுமே நன்றாக பேசுவாள்.
மில்லில் புதிதாய் வேலைக்கு வரும் வெளி மாநில பெண்களிடம் பேசி,அவர்களிடம் தகவல் வாங்கும் பொறுப்பும் இவளிடம் தான் ஒப்படைக்கப்படும்.
எல்லா திறமையும் இருந்தாலும்,பெரிய படிப்பு பட்டையம் இல்லை என்பதால்,அந்த திறமைகளும் உள்ளுக்குள்ளேயே ஒடிந்து கிடக்க,அதற்காகவெல்லாம் கவலைப்படுவதில்லை ரஞ்சிதா.
எப்போதும் சிரித்த முகமாய் இருப்பவள்,அதிகமாய் தான் படிக்கும் நாவல்களின் வரும் நாயகன்,நாயகிகளை கிண்டலடித்துக் கொண்டிருப்பாள்.இது தான் இவள்.
இப்போதும் போனில் ஏதோ ஒரு கதையை பாதியில் படித்துக் கொண்டிருந்தவள்,மீண்டும் போனை எடுக்கப் போக,சரியாக நீலவேணியும் அழைத்தார்.
“வேணி,உன்னோட அம்மா”என்று கொடுக்க,அதை வாங்கியவள்,
“சொல்லும்மா,எதுவும் பிரச்சனையா”என்று தான் கேட்டாள்.
மாஜி மாப்பிள்ளை குடும்பத்தினர் சலசலத்துக் கொண்டிருப்பதாக போன முறை வந்த போது நீலவேணி கவலைப்பட்டார்.அதனாலையே இப்படி கேட்க,”பரவாயில்லையே,பிரச்சனை என்னன்னு கேட்கற அளவுக்கு பெரியாளாகிட்டியே”-வஞ்ச புகழ்ச்சியில் அமைதியாகிவிட்டாள்.
“நீ மாப்பிள்ளை கூட வெளில போயிருக்கதா ரஞ்சி சொன்னா,மாப்பிள்ளைக்கு கூப்பிட்டா மில்லுலையே விட்டுட்டதா சொல்றார்.நாளைக்கு ஞாயித்துக்கிழமை தானே.நேரா வீட்டுக்கே போயிருக்க வேண்டியது தானே”
‘அவங்க கூப்பிடவேயில்லையே,பிறகெப்படி போறதாம்’-தொண்டைக்குள்ளையே வார்த்தைகள் நின்றுவிட,
“என்னடி பேசறது கேட்குதா இல்லையா”அதட்டிய அதட்டலில்,
“நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்மா”-ஏதோ தைரியத்தில் சொல்லிவிட்டாள்.
“அதெல்லாம் நானே பேசிக்கறேன்.நீ போய் வார்டன்கிட்ட சொல்லி ரெடியா இரு.குடும்பம் நடத்துறதுக்கு தானே கல்யாணம் பண்ணான்.பொறவு எதுக்கு வீட்டுக்கு கூட கூட்டிட்டு போகாம இருக்கானாம்”மருமகனை திட்டவும்,மகளுக்கு கோபம் வந்துவிட்டது,
“ம்மா,எல்லாம் பேசி தானே இங்க கொண்டு வந்து விட்டீங்க.இன்னும் ஒரு மாசம் தான்.இங்கேயே அவருக்கு வேலை போட்டு தர்றேன்னு சொல்லியிருக்காங்களாம்”என்று ரஞ்சி சொன்னதை ஒன்றுவிடாமல் ஒளிபரப்ப,நீலவேணிக்கோ கொஞ்சம் நிம்மதி.
“நல்லது நடந்தா சரி தான்.நீ இப்ப ரெடியாயிரு.மாப்பிள்ளை வந்து கூப்பிட்டுக்குவார்.அப்படி இல்லையா,நான் இப்போ ஆயா வீட்டுல தான் இருக்கேன்.நானே உன்னை கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு,நாளைக்கு அங்கேயே உன்கூடவே தங்கறேன்”என்று அவராய் அடுக்கிக்கொண்டே போக,வேணிக்கு வயிற்றில் புளியை கரைத்த நிலை!!
இவரின் திட்டங்களுக்கு,பேச்சுக்கு தன் கணவன் சம்மதிக்க வேண்டுமே!!-பெரும் கவலை மனதை அரிக்க,
“சரிம்மா,சரிம்மா”என்று ‘சரிம்மா’ போட்டே போனை வைத்தாள். 
அடுத்த பத்து நிமிடங்களும்,’திக்..திக்’மனநிலை தான் வேணிக்கு.ரஞ்சி சிரிப்புடன் எதிலும் தலையிடாமல் அவள் பயத்தை பார்த்துக் கொண்டிருக்க,பத்தாவது நிமிடத்தில் நீலவேணி அழைத்தவர்,”மாப்பிள்ளை எங்கோ வெளிவேலையா போயிருக்காராம் வேணி.நாளைக்கு காலைல உன்னை வந்து கூப்பிட்டுக்கறாராம்.நீ இப்போவே போய் வீட்டுக்கு போறதுக்கு,பாரம் எல்லாம் எழுதி வார்டன்கிட்ட கையெழுத்து வாங்கி வை.
நாளைக்கு கிளம்பும்போது போன் போடு.மதிய நேரத்துக்கு நேரா உன்னோட வீட்டுக்கே வந்துடறேன்..பார்த்து கவனமா இரு”மகளின் பதிலை எதிர்பாராமலே வைத்துவிட,
அம்மாவின் பேச்சில் அவளுக்கு பிடித்த ஒரே விஷயம்,’ உன் வீடு’ என்பது தான்.
ரஞ்சிதாவிடமும் விவரத்தை சொல்லிவிட்டு,துள்ளளுடனையே படிவம் வாங்கி,வார்டனிடமும் கையெழுத்து வாங்கினாள்.
வார்டனோ அவளை முறைத்தபடி கையெழுத்திட்டவர்,”அடிக்கடி வெளில போற மாதிரி இருந்தா,இனி வெளில இருந்தே வேலைக்கு வந்துக்க”என்று திட்ட,அதற்கு கொஞ்சமும் வருத்தப்படாமல்,கணவனை சந்திக்கும் ஆசையில்..சிரித்துக்கொண்டே அவரிடமிருந்து விடைபெற்றவள்,ருசியில்லாத அரைகுறை உணவையும் ஆசை ஆசையாய் உண்டு,சீக்கிரமாகவே தூங்க போய்விட்டாள்.
மறுநாள் சொன்னது போலவே அரசு நேரத்துடன் மனைவியை அழைக்க வந்துவிட்டான்.
வழக்கம் போல் வாட்ச்மேன் அண்ணனிடம் கேலி கிண்டல்களை எல்லாம் பெற்றுக்கொண்டு,வேணியை எதிர்பார்க்க,அவளோ கையில் பெரிய பேக்காக கொண்டு வர,’சாயந்திரமா திரும்ப கொண்டுவந்து விட்டுடுவேனே,எதுக்கு இவ்வளவு துணியை எடுத்துட்டு வர்றா”புரியாமல் பார்த்தவன்,
அவள் வந்ததும்,”இதென்ன பேக்ல?”என,
“என்னோட ட்ரெஸ் கொஞ்சம் இதுல இருக்கு.கொஞ்சம் கொஞ்சமா வீட்டுல கொண்டு போய் வைச்சுட்டா ஈசியா இருக்கும்னு அம்மா சொன்னாங்க”அப்பாவியாய் சொல்ல,
“இது கொஞ்சமா?”ஆச்சர்யமாய் கேட்க,அவனாகவே பேசுவதில் அவளுக்கு உற்சாகமாகிவிட,
“இன்னும் நாலு பேக் வைச்சிருக்கேன்”என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டாள்.
அரசுவிற்கோ கவலையாகிப்போனது.
பெரிய செலவாளியை கல்யாணம் பண்ணிட்டமோ?-கலவரமாகிப் போனான்.
அதற்கு மேல் பேச அவன் ‘நா’ எழவில்லை.
இவளோ அது புரியாமல்,வழக்கம் போல அமைதியாகிட்டார் என்று நினைத்துக்கொண்டு பைக்கில் ஏற,தொடர்ந்த ஒரு மணி நேரப்பயணத்தில் ,கண்ணாடி வழியாக கூட அம்சவேணியை பார்க்கவில்லை அரசு..பாவம் அவன் கவலை அவனிற்கு!
வீட்டிற்குள் நுழைந்த உடனையே வேணிக்கு புரிந்து போனது.இந்த பதினாறு நாட்களாய் கணவன் இந்தப் பக்கம் வரவேயில்லை!-மெல்லிய பெருமூச்சில் ,தங்களது அறைக்குள் நுழைந்து பேகை ரூமில் கொண்டு போய் திணித்துவிட்டு,வெளியே வர,அரசுவின் கண்ணோ,ரூமில் இருந்த இன்னொரு பேகை ஆராய்ச்சியாய் பார்க்க,
கணவன் கண் போன திசையில் பார்த்தவள்,
“அது நம்ம கல்யாணத்தப்போ கொண்டு வந்த துணிப்பை”என்றதும்,அதற்கு மேல் அரசுவால் பொறுக்க முடியவில்லை.
“துணிக்கே இவ்வளவு செலவு பண்ணுவியா நீ”-கோபமா,ஆதங்கமா என்று தெரியாத குரலில் கேட்க,
“அம்மா தான் கல்யாணத்துக்காக வாங்கி வைச்சாங்க”-நம்ப முடியாமல் அரசு பார்க்க,
“எனக்கு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்ச உடனையே,புடவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி சேர்க்க ஆரம்பிச்சிட்டாங்க.ஒரே தடவைல வாங்கினா,காசு கையை கடிக்குமோன்னு அவங்களுக்கு பயம்.அன்னைக்கு நான் கொண்டு வந்தது எல்லாம் அவங்க வாங்கி வச்சது தான்.எல்லாமே புதுசு”எனவும்,எதோ சமாதானமானான்.
‘அப்போ இனிமேல் இந்த மாதிரி செலவு பண்ணி வாங்க மாட்டா’அவனாகவே கற்பனை செய்துகொண்டு,ஆசுவாசமாய் சேரில் அமர,பேகிலிருந்து அடுத்து அவள் எடுத்த மேக்அப் ஐயிட்டங்கள்,நிஜமாய் அவன் வயிற்றில் புளியை தான் கரைத்தது.
கிட்டத்தட்ட அந்த சின்ன அலமாரியையே அடைத்தது அந்த பொருட்கள்.பார்த்ததுமே காண்டாகிப் போனவன்,
‘டேய் அரசு,இன்னும் குறைஞ்சது நாலு வருஷத்துக்கு,இவளுக்கு புதுசா எதையும் வாங்கிக் கொடுத்திடக் கூடாது’உறுதியாய் முடிவு செய்துவிட்டான்,அதெல்லாம் நடவாத காரியமென புரியாமல்!!
ஓரளவிற்கு வேணி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து தெளிந்தவனாய்,”நா வெளில போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன்.நீ கதவை சாத்திக்கோ”எனவும்,
“கிட்சன்ல பாத்திரமெல்லாம் இருக்கு தான்.ஆனா அது பழசு தானே”-முழுதாய் சொல்ல முடியாமல் இழுத்து சொல்ல,ஏதோ புரிந்தவன் போல்,
“இப்போதைக்கு கொஞ்சம்,தட்டு,டம்ளர் எல்லாம் வாங்கிட்டு வர்றேன்.மத்ததை பின்னாடி பார்த்துக்கலாம்..என்ன”என்ற பின்னரும் அவள் ஏதோ சொல்ல முடியாமல் அமைதியாயிருப்பது போல தோன்ற,
“என்னால நீ என்ன நினைக்கறேன்னு எல்லாம் கண்டுபிடிக்க முடியாது வேணி. மனசில பட்டதை எனக்கு உடனே பேசிடணும்.நீயும் அது போலவே இருக்கணும்னு தான் ஆசைப்படறேன்”எனவும் அதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால்,
“அம்மா சீர் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னாங்க”-உண்மையை சொல்லிவிட்டாள்.
அவன் சொன்ன தினுசில்,அரசுவிற்கு சிரிக்கவா,கோபப்படவா என்றே தெரியவில்லை.
“அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு”அமைதியாய் சொல்லிவிட்டு கிளம்ப,
“வண்டி எல்லாம் பிடிச்சு ஏத்திட்டு வர்றதா காலைலேயே சொன்னாங்க”என்றாள் வேகமாய்!!
“அவங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?”
“அது அவங்க கடமை தானே”விட்டுக்கொடுக்காமல் வாதாட,
“நீ இருக்க இடமே தெரியாம இருந்தா,இந்த கடமையை எப்படி செஞ்சிருப்பாங்களாம்.ம்ம்..அவங்க இதெல்லாம் செய்வாங்கன்னு எதிர்பார்த்தா,நான் உன்னைய கல்யாணம் பண்ணேன்”கோபப்படவும்,அழுகை வர பார்த்தது வேணிக்கு!
முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு நிற்க,அதை காண சகியாமல்”என்னவோ உங்க இஷ்டத்துக்கு செய்-ங்க”திட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.
வேணிக்கோ எங்கு என்ன தப்பு செய்கிறோம் என்றே புரியவில்லை.
அவனின் சுயமரியாதையை சீண்டி பார்க்க துணிகிறோம் என்றும் புரியவில்லை.
சிவந்த கண்களை நீரை அடித்து கழுவிவிட்டு,நீலவேணிக்கு போன் செய்து,”சீரெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்றாங்கம்மா”ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னாள்.
அதற்கே நீலவேணி ஆடி தீர்த்துவிட்டார்.
அவரின் நெடுநேர பேச்சின் சாரம்சம் இதுவே..
“அடுத்தவன் வீட்டுப் பொருளை ஓசில மட்டும் உபயோகப்படுத்திக்கிடலாமா?நான் கொடுத்தா வாங்கிக்கக் கூடாதா?”என்பது தான்.
சீரெல்லாம் வேண்டாமென்று மாப்பிள்ளை சொன்னால்,பெருமை தான் படவேண்டும்.நீலவேணிக்கு அது ஏனோ இச்சமயம் உரைக்கவில்லை.
மகளின் நல்வாழ்வு மட்டுமே குறிக்கோளாயிருக்க, ‘நாந்தான் நல்லா வாழலை.என் பொண்ணாவது நல்லா வாழட்டும்.கைல இருக்கதை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து,எப்படியாவது இவங்க வாழ்க்கையை தேத்திவிட்டுடுவோம்’என்றெண்ணி இன்னும் வாழவே ஆரம்பிக்காத மகளின் வாழ்க்கையில் கொஞ்சம் அதிகப்படியாகவே மூக்கை நுழைத்தார்..விழைவு என்னவாம்???
பார்ப்போம் மெல்ல மெல்ல!! 

Advertisement