Advertisement

10
சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன்,
“அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம் போன போக்கில் தன் கோபத்தை கைவிட்டவன்,
“இன்னும் கொஞ்சம் நேரந்தான்..ஹோட்டல்ல சாப்பிட்டு உன்னை கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்”எனவும் மௌனமாய் தலையாட்டினாள்.
அதற்குள் பிரவீனும் வந்துவிட,அவன் கொண்டு வந்த டீயை மூவரும் குடித்தவர்கள்,கிளம்ப ஆயத்தமானார்கள்.
அரசுவும்,வேணியும் மீண்டும் ஆட்டோவில் ஏறி ஹோட்டல் நோக்கி பயணிக்க,பிரவீன் பைக்கில் இவர்களை பின்தொடர்ந்தான்.
கணவனது அருகில் அமர்ந்த வேணியின் மனமோ அவனின் அருகாமையில் லயிக்காமல்,அன்று” ,”நீ கொஞ்ச நாளைக்கு ஹாஸ்டல்-க்கே போயிடறியா”-அவன் கேட்டதிலையே லயித்துக்கொண்டிருக்க,மீண்டுமொருமுறை அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
தான் மெளனமாக கணவனது முடிவுக்கு தலையசைத்து ஒப்புதல் கொடுத்ததும்,”உனக்கு என்மேல கோபமே வரலையா வேணி”ஆதங்கத்துடன்,கோபத்துடன் தான் கேட்டான் அரசு.
அதற்கும் அவளிடம் மௌனமே பதிலானது.
“உன்னால பதில் சொல்ல முடியாது தான் வேணி.இப்போ மறுபடியும் உன்னை ஒண்ணு கேட்கிறேன்.எந்த நம்பிக்கையில என் கூட வந்த? என்கிட்ட அப்படி என்னத்த பார்த்து பிடிச்சு என் கூட வந்த”-ஆசையாய் அவன் கேட்கவில்லை..கழிவிரக்கத்தில் தான் கேட்டான்.அவனை விட அவள் கழிவிரக்கத்தில் இருந்ததாலோ என்னவோ உண்மையை சொல்லிவிட்டாள்..
“உங்கள எனக்கு பிடிச்சதுக்கு என்கிட்டே காரணமே இல்லைங்க!என்னோட அம்மா மாப்பிள்ளைக்கு இது இருக்கு, அது இருக்குன்னு நிறைய அடுக்கினாங்க.அதுல ஒண்ணு கூட உங்களுக்கு இருக்கான்னு பொருத்தி நான் பார்க்கல.எனக்குள்ள வந்த நேசம் ரொம்ப இயல்பானது.
காரண காரியம் என்னன்னு எனக்கு தெரியல.நான் ஆராயல.ரோட்டுல என்னைக் கடந்து எத்தனையோ பேர் போறாங்க தான்.அவங்க மேல எல்லாம் இந்த உணர்வுகள் எனக்கு வரலைங்க.இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல’-என்றாள்.
இயல்பானதொரு சூழ்நிலையில்..’என்னை ஏன் பிடிச்சது’என்ற கேள்வி கேட்டிருந்தால்,நிச்ச்சயம் அவளிடமிருந்து இது போல் பதில் வந்திருக்காது.இப்போது அவளே உணர்வுக்குவியலாய்,தன்னுடைய முடிவு சரியா,தப்பா என்ற குழப்ப மனநிலையில் இருந்ததாலயே..இந்த விஷயத்தை படபடவென்று அவனிடம் கொட்டிவிட்டாள்.
அவள் மனம் தான் குழம்பி தவித்ததே தவிர அவனிடம் அவள் மிகத்தெளிவாக ‘இப்படித்தான் என் நேசம் உயிர் பெற்றது’ என்று  சொல்லிவிட அவனுக்கு இப்போது புதுவித உணர்வு..என்னவென்று அவனுக்கு சொல்ல தெரியவில்லை.  
கண்ணீர் தடங்களோடு நின்றிருந்தவளின் மேல் இரக்கமே ஏற்பட,அந்த நொடி ஒரு உண்மையை அவனே ஒப்புக்கொண்டான்.
அவளை விடாமல் பார்த்து மனதில் சலனத்தை கொடுத்தது நான் தான்.தவறு தன் மேலிருக்க,’இனிமேல் என்னை நம்பி ஏன் வந்த’என்ற கேள்வியையே கேட்கக் கூடாதென்று உறுதியாய்(?) முடிவெடுத்தவன்,நடந்தையெல்லாம் நன்மைக்கே என்று எண்ணிக்கொண்டு,அவளுக்கும் சமாதானம் கூறினான்.
“காலைல எனக்கிருந்த அதிர்ச்சியில,உன்னை உதாசினப்படுத்திட்டுப் போனது தப்பு தான்.எனக்கு அந்த நேரம் எப்படி நடந்துக்கன்னே தெரியலை.அது தான் உண்மை! இந்த நொடி உன்னை சந்தோஷமா வைச்சுக்கற அளவுக்கு என் பொருளாதாரம் இல்லைங்கறத நான் ஒப்புக்கிட்டே ஆகணும்.
பணத்தால சந்தோஷத்த வாங்கிக்கொடுக்க முடியாது தான்.நம்மோட அடிப்படை தேவைகளை நிறைவேத்திக்கவாவது பணம் வேணும்! என்னால யார்கிட்டவும் போய் கடன்-னு கேட்டு நிற்க முடியாது.வாங்கின கடனை என்னால திருப்பிக் கொடுத்துட முடியும் தான்.ஆனால் திருப்பிக்கொடுக்கற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது.
பெருசா இல்லைன்னாலும்,நம்ம ரெண்டு பேருக்கு போதும்-ன்ற அளவுக்கு தாராளமா நான் சம்பாதிக்கணும்.அதுக்கு முதல்ல நான் என்னோட படிப்பை முடிக்கணும்.அதுக்கு இன்னும் ஒன்றரை மாசம் தான் இருக்கு.அதுவரைக்கும் உன்னை கம்பெனிலையே கொண்டு போய் விடறேன்.அது தான் உனக்கும் இப்போதைக்கு பாதுகாப்பு”என்றவன் அவளது முகத்தை தீர்க்கமாய் பார்த்துக்கொண்டே,
“நீ தான் என் மனைவின்னு நான் உறுதியா இருக்கேன்.என்னை நம்பினா போ.நம்பலைன்னா இங்கேயே இரு.நான் உன்னை எதுவுமே சொல்ல மாட்டேன்”எனவும்,இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘நம்பினால் உடனிரு.நம்பாவிட்டால் போ’என்று தான் கேள்விப்பட்டிருக்கிறாள்.அவள் படித்த கதைகளிலும் ஹீரோ அப்படித்தான் சொல்வான்.
தன் ஹீரோ மாற்றி சொல்வதையுணர்ந்து,கொஞ்சம் நொந்துகொண்டே,”உங்களை நம்பினதுனால தான் உங்ககூட வந்திருக்கேன்”என்றதும் நிம்மதியாய் உணர்ந்தான்.
“உன்னோட அம்மா,அப்பாவுக்கு தகவல் சொல்லிடலாம்.இனி பயந்து ஒண்ணும் ஆகிடப்போறதில்லை.உன்னை காணோம்னு அவங்க பதறி கண்ணீர்விட்டா,நம்ம வாழ்க்கை நல்லா இருக்காது”எனவும் சம்மதமாய் அம்மாவிற்கு அழைத்து பேசியவள்,அவர் வர சொன்ன இடத்திற்கு கணவனையும் அழைத்து போய் பேசி,அவரது கையில் இரண்டு அடியையும் வாங்கி,ஆறுதலான அணைப்பையும் பெற்று,ஆசிவாங்கிய பின் தான் மில்லிற்கே சென்றாள்.
இப்போது நினைத்துப் பார்க்க,’எல்லாம் சுமூகமாய் நடந்ததை’ இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை.
வீட்டில் சொல்லியிருந்தால் நாலு அடிகளோடு சம்மதம் கிடைத்திருக்கும்.தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து வீட்டை விட்டு வந்து,அம்மாவையும் வருத்தப்படுத்திய தன் முட்டாள்த்தனத்தை இப்போதும் நொந்துகொண்டிருக்க,அதே நேரத்தில் ஆட்டோவும் உணவகம் முன் நின்றதால்,அரசுவின் பின் இறங்கியவள்,அவனுடனே உணவகத்திற்குள் செல்ல,உணவகத்தில் அவள் அருகே கூட அவன் அமரவில்லை.
எதிர்திசையில் அமர்ந்தவனை புரியாமல் தான் பார்த்தாள்.
தான் எதுவும் அதிகமாய் எதிர்பார்க்கிறோமோ என்று கூட அவளுக்கு தோன்றிற்று.பிரவீனிற்குமே அரசுவின் செயல் கடுப்பைத்தான் கொடுக்க,எதுவுமே அப்போதைக்கு சொல்லாமல் அவன் பக்கத்து மேஜையில் அமர்ந்து உணவு உண்ண,பேரமைதியில் உணவு வேளையும் கடந்துவிட,வேணி’ரெஸ்ட் ரூம்’சென்ற வேளையில் நண்பனை தனியாக தள்ளிக்கொண்டு வந்தான் பிரவீன்.
“நீ தங்கச்சிய கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போடா.ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் கொண்டு போய் கம்பெனில விடு”என்று ஏதோ நல்ல எண்ணத்தில் தான் சொன்னான்..
தான் பார்த்துப்பார்த்து செய்து வைத்த திருமணம்.தவறுதலாக போய்விடக் கூடாதென்ற எண்ணத்தில் அவன் சொல்ல..அரசுவிற்கு சிரிப்பு..கூடவே ஏடாகூட எண்ணமும் தோன்ற,வழக்கமாய் நண்பனை கலாய்க்கும் பாணியில்,”பிரவீ,உன்னை நான் மாமான்னு எப்பவோ ஒருக்கா கூப்பிடறது உண்மை தான்.அதுக்காக மாமா வேலை பார்க்காதடா”நக்கலடித்தான்.
பிரவீனிற்கோ எங்கிருந்து தான் அப்படியொரு கோபம் வந்ததோ,அரசுவின் சட்டையை பிடித்துவிட்டான்.அரசுவுமே இதை எதிர்பார்க்கவில்லை.
“பிரவீ,நடுரோடுடா கையை எடு”என்று எச்சரிக்க,இப்போது சட்டையைவிட்டுவிட்டு நண்பனின் கையை வளைத்துப் பிடித்து திருகிவிட,இம்முறை பதிலுக்கு அரசுவும் பின்பக்கமாய் கைகொண்டு போய் பிரவீனின் தலைமுடியை பிடித்து இழுக்க..அந்த இடமே கலவரமாய் மாறிப்போனது.
உணவகத்திலிருந்து வெளியே வந்த அம்சு,இந்தக் காட்சியை பார்த்ததுமே அலறிப்போய் ஓடி வந்தாள்.
“விடுங்கண்ணா”
“விடுங்க மாமா”மாற்றி மாற்றி சொல்லிப் பார்க்க ஒரு பிரோயஜனுமில்லை..
எதிர்ப்பட்ட ஒருவர்,சண்டையை விலக்க முயலாமல்,”ஒத்த பொண்ணுக்காக ரெண்டு பேர் அடிச்சுக்கறானுங்க,கருமம்,கருமம்”என்று,திட்டிக்கொண்டேயிருக்க,
அவமானத்தில் வேணியின் முகம் கறுத்துப் போனது.
அதுவரை கட்டி உருளாத குறையாய் சண்டையிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் சட்டென்று பிரிய,பிரவீனோ,”யோவ் இங்க வாய்யா!! இப்போ உன்னைய பஞ்சாயத்துக்கு கூப்பிட்டாங்களா? என்ன ஏதுன்னே தெரியாம நீயா பேசிக்கிட்டே போற..இது என் தங்கச்சி.இவன் என் மச்சான்..நாங்க இப்ப அடிச்சுக்குவோம்,பின்னாடி கூடிக்குவோம்..உனக்கு என்னய்யா வந்துச்சு”-இன்னும் சில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து அடிக்கவே போய்விட,அரசு தான்..
“நீங்க போங்க சார்”என்று அவரை அனுப்பிவிட்டு,மச்சானை பிடித்து இழுத்துக்கொண்டு,போனான்.
பிரவீன் இன்னுமே அடங்கவில்லை.
வேணி நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள்.இவ்வளவு நேரம் சண்டையிட்டுக் கொண்டதென்ன!இப்போது உறவாடிக் கொண்டிருப்பதென்ன! முட்டைக் கண் கொண்டு விழி விரித்துப் பார்க்க…தங்கையின் பார்வையில் அண்ணன் சங்கடம் கொண்டான்.
அவள் முன்னே நாராசமாய் ஒருவனை திட்டிவிட்டோமே என்ற கவலையில்,”சாரிம்மா.கொஞ்சம் தப்பா பேசிட்டேன்”மன்னிப்பு வேற கேட்க,வேணிக்கோ பயங்கற ஆச்சர்யம்.
அவள் ஆண்களிடம் அவ்வளவாக பழகியதில்லை.ஆனால் இப்போது பிரவீனின் நடவடிக்கை, அவளுக்குள் உண்மையான சகோதர பாசத்தை தோற்றுவிக்க,”தேங்க்ஸ்-ண்ணா”மனதார சொன்னாள்.
‘எதற்காக நன்றி சொல்கிறாள்?’நண்பர்கள் இருவருக்குமே புரியவில்லை.
அவர்களின் கண்களின் கேள்வி அவளுக்கும் அந்நேரம் புரியத்தான் இல்லை.
எனவே,”உங்களுக்குள்ள என்ன சண்டை”இயல்பாய் விசாரிக்க,
“எப்படி சொல்வார்கள்’இருவரும்.
பிரவீன் நண்பனை முறைக்க…அரசு அதை கண்டுகொள்ளாமல்,”நீ ஆட்டோலையோ,இல்லை பஸ் பிடிச்சோ வந்து சேரு.ரெண்டு ஆளுக்கு பஸ் செலவு அதிகமா வருது”என்றவன்,
“வா போகலாம்”-வேணியை அழைக்க,அவளோ தயங்கி தயங்கி உடன்பிறவா அண்ணனை பார்க்க,
“நீ போம்மா.நான் வந்துடுவேன்”என்றதும் தான் நிம்மதியுடன் பைக்கில் ஏறினாள்.
‘பொண்டாட்டிய பார்த்தவுடனே நண்பன கழட்டிவிட ஆரம்பிச்சுட்டான்’நிம்மதி கலந்த பெருமூச்சுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றான்.
பேருந்து கட்டணத்தை பார்க்கும் போது,சாமான்ய மக்களுக்கு தலை சுத்தத்தான் செய்கிறது.அரசுவிற்கும் தலை சுற்றியதில் பிழையில்லையே!!
மாத சம்பளத்தை எண்ணி எண்ணி செலவு செய்பவர்களுக்கு தான்,இது போன்ற கஷ்டங்கள் தெரியும்..பிரவீன் என்று இந்த நிலை மாறும் என்ற எண்ணத்துடன் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டான்.
நண்பனுக்கு நிம்மதி தரும் பொருட்டே வேணியை தன்னுடன் பைக்கில்  அழைத்து வந்தது,பிற்காலத்தில் வேணிக்கு தெரிய வரும் போது,பெரிய சண்டையே வருவது நிச்சயம்..
ஆனால் இப்போது இந்த விஷயம் தெரியாததால்,கணவனுடனான முதல் பைக் பயண அனுபவத்தை ரசித்தபடியே வந்தாள்.மறந்தும் அவன் தோள் மேல் கை வைக்கவில்லை.பிடித்துக்கொள்ள வேண்டுமென்று இயல்பாகவே அவள் நினைக்கவில்லை..அவனோ,அவளுக்கும் மேலாய் சாலையிலையே கண்ணாய் ஓட்டினான். 
‘எங்கே செல்லும் இந்த பாதை..யாரோ யாரோ அறிவாரோ..’(இது என் மைன்ட் வாய்ஸ்)

Advertisement