Advertisement

6

இருவர் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென்றால் மணமக்களுக்கு பிடித்து தான் நடக்க வேண்டுமென்று அவசியமில்லை.ஏன் இரு குடும்பத்தினரின் விருப்பத்தோடு தான் நடக்க வேண்டுமென்றுமில்லை.

திருமண பந்தத்தில் இருவர் இணைய வேண்டியது  விதி என்றால் எந்தவிதமான முயற்சியுமின்றியே அவர்கள் இணைந்துவிடுவார்கள்.ஏதோவொரு உந்து சக்தி,தன் வேலையைக்காட்டி  பிடித்திருந்தாலும்,பிடிக்காவிட்டாலும் இருவரது திருமணத்தை நடத்திக்காட்டிவிடும்.

அது போலத்தான் அரசுவும் வேணியும் தம்பதியகளாகிவிட்டனர்.ஒருவேளை வேணி யோசித்திருக்கலாம்..இல்லை அரசு திருமணம் வேண்டாம் என்று உறுதியாயிருக்கலாம் என்பது போன்ற வாதங்களை மூன்றாம் மனிதர் வைக்கலாம்.

ஏன் சம்பந்தப்பட்ட இருவரும் கூட பின்னாளில் யோசிக்கலாம்.ஆனால் இந்த நொடி ஏதோ ஒருவிதத்தில் இருவரின் மனதும் இந்த பந்தத்தில் நுழைய  உடன்பட்டது என்பதை யாராலுமே மறுக்க இயலாது.

கண்ணனும் பிரவீனும் இங்கே பிரதான உந்து சக்திகள் என்று கூட சொல்லலாம்.இவர்கள் இருவரும் தான் இப்போதைக்கு குதூகலமாக இருந்தனர்.பிரவீனிற்கு மட்டும் சிறுகவலை.

இருவரின் வீட்டில் யாராவது ஒருவர் பெரிய தலையாக(பணக்காரர்களாக) இருந்திருந்தால்,அது ஒருவித த்ரில்லாக இருந்திருக்கும் என்று நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டான்.அதை கண்ணனிடம் சொல்லி,முதுகில் நாலு அடியை வாங்கியும் கொண்டான்.

“அண்ணா வலிக்குதுண்ணா”பிரவீனின் அலறலில் தான் அரசு சுற்றுப்புறத்தை உணர்ந்தான்.அரைமணி நேரமாக பயணம் செய்த உணர்வே இல்லை.அந்த அளவுக்கு சிந்தனையில் மூழ்கிப்போயிருந்தான்.

நடந்தது நடந்துவிட்டது.இனி அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற சிந்தனையே மனமுழுக்க ஆக்கிரமித்திருந்ததால்,பெரிதாய் ஆர்வமோ,வெறுப்போ காட்டாமால்,கண்ணனோ பிரவீனோ எது சொன்னாலும் சரியென்று தலையாட்டினான்.அவர்கள் சொல்படி நடந்தான்.

ஆனால் ஆழ்ந்த அமைதி அவனிடம்! வேணியிடம் மட்டும் முகம்திருப்புவதை அவனையும் அறியாமலையே இந்த கார் பயணத்தில் செய்து கொண்டிருந்தான்.அவளுக்கு தான் மன வருத்தம்.பெண் மனது இல்லையா!! பலதையும் எண்ணி தவித்து அவனுக்கு மேலாக குழம்பிக்கொண்டிருந்தது.

கண்ணனின் வீடு வந்துவிட,அவர்களுடன் வந்த பெண்மணி இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர்,அதற்கு மேல் தன் வேலை முடிந்தது என்பது போல அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

கண்ணனும் பிரவீனுமே கிளம்ப தயாராயிருந்தனர்..

கண்ணனுக்கு கடை வியாபாரம் நடக்க வேண்டும்.பிரவீனுக்கோ கல்லூரி செல்ல வேண்டும்.அதை விட சிறிது நாளுக்கு இந்த திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டும்.

காதல் திருமணத்தில் இரு குடும்பத்தினருக்கு சண்டை மூட்டிவிடவே ஊர் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்பது அவனது எண்ணம்.

ஏதோ ஒருவிதத்தில் இரு குடும்பத்தினரும்,சமாதானம் அடையும் நிலைக்கு வந்த பின்னரும்,சிலர் கண்டதையும் சொல்லி,குழம்பிய குட்டையில் மீன் எடுப்பது போல,பஞ்சாயத்து நடத்தி காதலர்கள் இருவரையும் பிரித்துவிட்டு,கைமேல் பணத்தையும் பார்த்துவிட்டு ஜாலியாக பார்ட்டி வைக்க கிளம்பிவிடுகிறார்கள்.

இப்போதைய இது போன்ற பஞ்சாயத்துகளில்  நீதி,நேர்மை நியாயமெல்லாம் எடுபடுகிறதோ இல்லையோ பணம் நன்றாக எடுபடுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையல்லவா!

இருவரும் நிலைமையை சொல்லி கிளம்ப தயாராக,”நானும் காலேஜ் வர்றேன்”என்று சொல்லிவிட்டவன்,பின் பிரவீனின் முறைப்பில் “சரி..நான் வரலை”என்று தன்னை திருத்திக்கொண்டான்.

பிரவீனிற்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.இத்தனை நாள் ஒட்டிப்பிறந்த இரைட்டைகள் போல, எப்போதும் ஒன்றாக தான் சுற்றுவார்கள்.இனி படிப்பு முடிந்தால் அடிக்கடி பார்க்க முடியுமோ இல்லை முடியாதோ என்று வருத்தப்பட்டவன் வெளியில் எதுவும் சொல்லவில்லை..

“மாப்ள.இன்னும் நாலு நாளைக்கு காலேஜ் பக்கம் வந்துடாத.நீ ஒரு இடத்துக்கு வேலைக்கு போயிட்டேன்னு சொல்லிக்கறேன்.கல்யாணமாகிடுச்சுன்னு நான் போய் உளறி வைக்க மாட்டேன்.அதனால நீ தைரியமா நாலு நாள் கழிச்சு வா.அடிக்கடி போன் பண்றேன்.இப்போ கிளம்பறேன்”மேற்கொண்டு அரசுவிடம் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் கண்ணனுடன் கிளம்பிவிட்டான்.

முன்பெல்லாம் அரசு கல்லூரியில் சில நேரம் அசந்து தூங்கிவிடுவான்.இரவு நேரம் வேலைக்கு போய்விட்டு வரும்போது மட்டுமே இப்படி நடக்கும்.அப்போதெல்லாம் சிலரிடம் பார்வையில்  இரக்கமும்,சிலரிடம் எகத்தாளமும்,சிலரிடம் மதிப்பும் கலந்த பார்வையிருக்கும்.

ஆனால் கல்லூரியில் திருமணமாகிவிட்டது என்று தெரிந்தால் அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இருக்காது.தன்னையறியாமல் கண்ணசந்தால் கூட ஓட்டி தள்ளிவிடுவார்கள்.இரட்டை அர்த்த வசனங்களெல்லாம் தூள் பறக்கும்..

அதனாலையே பிரவீன் அப்படி சொன்னான்.அரசுவிற்கு அது புரிய,பெருமூச்சுவிட்டு,கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.

தன்னை நம்பி ஒருத்தி வந்துவிட்டாள்.கோபத்தைக்காட்டி மட்டும் என்னவாகிவிடப் போகிறது? அடுத்த என்ன செய்ய முடியுமென்பதை பார்ப்போம் என்று தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான்.ஆனால் அவ்வப்போது இயலாமையில் கோபம் வரும் போது எடுத்த உறுதிகள் எல்லாம் காற்றோடு போய்விடும் என்பதும் அவன் அறிந்ததே.

வீட்டில் சோபாவில் தன்னந்தனியாக அப்பாவியாக அமர்ந்திருந்த மனைவியை பார்ப்பதற்கே அவனுக்கு பாவமாகத்தான் இருந்தது.எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாள்?அவசியம் கேட்க வேண்டுமென்று நினைத்தான்.

சோபாவிற்கு எதிர்புறமிருந்த சேரில் அமர்ந்தவன்,”பசிக்குதா..ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா”என்று அமைதியாய் பேசவுமே வேணிக்கு நிம்மதி வந்துவிட்டது.

“இப்போ பசிக்கலை.அண்ணா பார்சல் வாங்கி கொடுத்துட்டு தான் போனாங்க.பால் கூட வாங்கி வச்சிருக்காங்க.உங்களுக்கு டீ போடவா”சரளமாய் உபசரிக்க..அவனுக்கு தான் அதை ஏற்க முடியவில்லை..

எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணிட்டு,இப்போ எவ்வளவு கூலா என்கூட பேசறா-சட்டென்று அவனுக்கு கோபம் வந்துவிட்டது..சற்று முன் எடுத்த உறுதி வேறு மனதில் வந்து போக,

“வேண்டாம்”என்றவன்,

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியணும்.எந்த நம்பிக்கையில நீ என் கூட வந்த”குரலில் கோபம் வெளிப்பட..வேணி அப்போது குனிந்தவள் தான் நிமிரவேயில்லை.கண்கள் கலங்கிக்கொண்டிருந்தது.

மனதில் ஆயிரம் எண்ணங்கள்!! அன்றொரு நாள் விருந்தில் வைத்து சில கணங்கள் என்றாலும் உயிர்ப்புடன் ஒருவித ஆசையுடன் ரசிப்புடன் தன்னை பார்த்தானே..அந்த பார்வையை எவ்விதம் மறப்பாள்.அவளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்தது அந்த பார்வை தானே.இப்போதும் அது போல பார்க்க மாட்டானா என்று தான் ஏங்கினாள்..

இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவளுக்கு சிலிர்த்தது.அந்த நாளில் அரசுவின் பார்வைக்கு பதில் கொடுக்க முடியாமல் பதட்டத்துடன் வீட்டிற்கு ஓடி வந்தது முதல் ,அதை எண்ணி எண்ணி அவன் மீதான காதலை ஆசையை வளர்த்துக்கொண்டாள்..

வேறு எந்த சிந்தனையும் இல்லை.அவனது குணமோ, பொருளாதாரோ நிலையோ,குடும்ப நிலையோ இன்று வரைக்குமே அவளுக்கு தெரியாது தான்.ஆனால் அவளது மனதிற்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.கற்பனைக்கு கையும் தேவையில்லை.காலும் தேவையில்லை..குறிப்பாய் பணமும் தேவையில்லை..எண்ணம் மட்டுமே இங்கு பிரதானம்..

அப்படி மனதிற்குள் பொத்தி பொத்தி வளர்த்த ஆசையை..இப்போது கணவனிடம் சொல்ல அவள் தயாராகவேயில்லை..அவனது மனத்திலும் என்ன இருக்கிறது என்று முழுதாய் தெரியாமல் தன்னை வெளிப்படுத்துவதில்லை என்று காலையிலையே முடிவெடுத்துவிட்டாள்.

அந்த உறுதியில் இப்போது அமைதியாய் இருக்க,அந்த அமைதி அரசுவிற்கு எரிச்சலை தான் கொடுத்தது.

ஒருவருக்கு என்ன வேண்டும்,வேண்டாம் என்பதை எப்போதும் முகத்தை பார்த்தோ,இல்லை இவருக்கு இந்த நேரத்தில் இதுதான் தேவைப்படும் என்று உறுதியாக நினைத்தோ,அனைத்து நேரங்களிலும் உடனிருப்பவர்களால் முடிவெடுத்துவிட முடியாது.

அதிலும் திருமணமான புதிதில் எல்லா விஷயங்களையும் ஒருவரையொருவர் புரிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாத விஷயம்.

அவரவர்க்கு தனி மனமுண்டு! அதில் ஆயிரம் எண்ணமுண்டு !! தாமே வெளிப்படுத்தினால் தவிர,சில நேரம் நம் தேவைகளை பிறரால் அறிந்துகொள்ளவே முடியாது.

‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’என்ற பாட்டு எத்தனை பேருக்கு பொருந்தும் என்று தெரியவில்லை.அரசுவிற்கு இங்கே சுத்தமாக பொருந்தவில்லை என்பது தான் நிஜம்.

அவளின் நீண்ட நேர அமைதி,அரசுவிட பெருமூச்சு ஒன்றை வரவழைக்க,அவளுக்கு தன்னைப்பற்றி தெரியுமோ,தெரியாதோ உள்ளதை சொல்லிவிடுவோம் என்று எண்ணினான்.வேணிக்கு தான்,தான் உள்ளதை உள்ளபடி சொன்னால் தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மை.

ஆனால் அவனுக்கு அவளிடம் உண்மையை பகிர்வதில் என்ன பயம்..’எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டது நீ தானே..அப்போ அனுபவி’இது தான் அவன் நிலை.

அதை விட அவள் அவனிடம் எதை ஏமாற்றப்போகிறாள்..?அவனிடம் பெரிதாக பணமோ,சொத்தோ இல்லை…கொள்ளையடிப்பதற்கு ஒன்றே ஒன்று தான் அவனிடமிருக்கிறது..அது அவனது மனம் மட்டுமே!!!!!

‘அனைத்தையும் சொல்லிவிட வேண்டும்’ என்ற உறுதியெடுத்த பின் அரசு தயங்கவில்லை.

“வேணி.என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்,தெரியாதுன்னு எனக்கு தெரியலை.இருந்தாலும் இது தான்,நான்-னு நீ தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்..என்னோட அம்மா அப்பா ரெண்டு பேருமே குற்றத்தொழில் செஞ்சவங்க”எனவும் புரியாததால் குனிந்த தலையை கொஞ்சம் நிமிர்த்திப் பார்த்தாள்.

“அதாவது கஞ்சா கடத்தறது,திருட்டு தொழில் செய்யறது..இந்த மாதிரி”என்று சொன்ன நொடியிலையே அவளது உடம்பு வெடவெடத்துப்போய் வேர்க்க ஆரம்பித்துவிட்டது

சேலை முந்தியில் கையை துடைக்கும் சாக்கில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சித்தாள்.ஆனால் முடியவில்லை.அவளது பயம் அவனுக்கு வெளிப்படையாகவே தெரிய,அவனுக்கு இப்போது பரிதாபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

அந்த சிரிப்பில் வேணியின் உடம்பு சட்டென்று இயல்பு நிலைக்கு திரும்பியது தான் விசித்திரம்.

மனுஷ உடம்பு என்ன உடம்புய்யா!! மனமென்னும் மாயை காட்டும் மந்திர வித்தை தான் எல்லாம்.

அவனது சிரிப்பை ரசித்துப் பார்த்தவளின் முகத்திலும்,இப்போது புன்னகை.அந்த பார்வை அவனுக்கும் எதுவோ தயக்கத்தை புகுத்த அமைதியாகிவிட்டான்..

ஆனால் வேணியின் வாய்ப்பூட்டு விலகிவிட,”அப்போ பொய் தான் சொன்னீங்களா? நான் கூட உண்மைன்னு நினைச்சு பயந்துட்டேன்”எனவும்,

“இல்ல! நான் சொன்னதெல்லாம் உண்மை தான்.இதில நீ பயப்படறதுக்கு எதுவுமில்லைன்னு நினைக்கறேன்.ரிலாக்ஸா நான் சொல்றதை கேளு.அப்பா அம்மா ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தப்பு பண்ணி ஜெயிலுக்கு போயிடுவாங்க.எங்க ஏரியால அப்பா கொஞ்சம் குட்டி தாதான்னு வைச்சுக்கோ!! 

அப்போ அப்போ ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தவர தொடர்ந்து மூணு வருஷம் ஜெயில்ல இருக்க வைச்சுட்டேன்.அதுல அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் என்மேல பயங்கற கோபம்.அப்பாவுக்கு வெறின்னு கூட சொல்லலாம்.

அந்த வயசுல எனக்கு,அப்பா செய்யற தொழில் தப்புன்னு தோணுச்சு.போலிஸ் வந்து வினையமா என்கிட்ட வாக்கு கொடுத்து, கேட்கும் போது,எனக்கு பொய் சொல்ல தோணலை.

‘உன்னோட அப்பா திருந்திடுவாரு..நல்ல வேலைல சேர்த்துவிடறேன்.அவர் வெளில வர்ற வரைக்கும் உங்க குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்’-இப்படியெல்லாம் கொடுத்த வாக்கை அந்த போலிஸ் அண்ணாச்சி காப்பாத்தவேயில்லை.

அம்மாவுக்கும் ஆரம்பத்தில என்மேல கோபம்,போகப்போக என் மனசும் புரிய,அவங்க தம்பிகிட்ட என்னை அனுப்பிவிட்டு,படிக்க வச்சாங்க.அவரும் ஒரு டீக்கடைல வேலை பார்த்தவர் தான்.

அவரோடைய ஒட்டிக்கிட்டு,சின்ன சின்ன வேலையை செஞ்சுக்கிட்டு, பள்ளிக்கூடம் போய்க்கிட்டுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்..அதுக்கும் எமனா,மாமா விபத்துல போய் சேர்ந்துட்டார்.துக்க வீட்டுக்கு வந்தவர் தான் கண்ணன் அண்ணாச்சி.அவரும் மாமாவும் தோஸ்து.

மாமா கடைசியா அண்ணாச்சிய,பார்த்துப் பேசும் போது என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துடணும்னு சொன்னாராம்.கண்ணன் அண்ணாச்சியும் ரொம்ப நல்ல மனுஷன்.

“தினமும் உன் மாமன் கனவுல வந்து,நீயும் எம்மருமவன விட்டுட்டியே கண்ணப்பா-ன்னு கேட்கறான்.என் மனசு குத்துது அரசு!! என்னோட வந்துடு.உன்னை நான் பார்த்துக்கறேன்’-னு சொல்லி, இங்க கூட்டிட்டு வந்து எனக்கு படிப்பு வேலை சாப்பாடு எல்லாம் கொடுத்து இன்னி வரைக்கும் என்னை சந்தோஷமா வைச்சிருக்கார்.

இப்பவும் இந்த வீட்டை அவர் கொடுக்கலைன்னா நீயும் நானும் நடுத்தெருவில தான் நிற்கணும்.எனக்குன்னு பெருசா சொத்து,சேவிங்க்ஸ் இப்படி எதுவுமே கிடையாது.இனிமேல் தான் சம்பாதிக்கணும்.

அதனால தான் உன்னை கட்டிக்கவே தயங்கினேன்.என்னன்னே தெரியல! நம்ம விஷயத்தில கண்ணன் அண்ணாச்சி தான் ரொம்ப கட்டாயப்படுத்தினாப்ல..அவர் பேச்சை என்னால மீற முடியலை..எனக்கு உன்னை பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை..இப்போ கல்யாணம் வேணாம்னு நினைச்சேன்.ஆனா நடந்து முடிஞ்சிடுச்சு.இனி என்ன செய்யனும்னு யோசிச்சிட்டே இருக்கேன்.தெளிவா எதுவும் புரிபடலை”மனதிலிருந்த கவலையெல்லாம் கொட்ட,

கஷ்டத்திலையே வாழ்ந்து வந்திருக்கிற கணவனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டுமென்று நினைத்தாள்.ஆனால் என்ன உதவி செய்ய என்ற கேள்வியும் பிறக்காமல் இல்லை..காலம் பதில் சொல்லும்..

Advertisement