Advertisement

4
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
குளியலறையில் மூச்சடைக்க அழுது கொண்டிருந்த அம்சா ,முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.வாளியில் இருந்த தண்ணீரை முகத்தில் அடித்து அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,’இது அழறதுக்கான நேரமில்ல.ஏதாவது செய்யணும். சரியோ தப்போ,மனசில ஒருத்தன நினைச்சாச்சு! அவனோட வாழ வழி என்னன்னு பார்க்கணும்’உறுதியாய் எண்ணியவளுக்கு,எதிர்மறையான எண்ணங்கள் வராமல் இல்லை.
நினைத்ததெல்லாம் நடந்துவிடாது என்ற நிதர்சனம் புரியத்தான் செய்தது.தன்னைப்போல் அரசுவுக்கு தன் மேல் காதல் இருக்கிறதா இல்லையா? அவன் நல்லவனா கெட்டவனா? அவனை நம்பி போனால் தன் வாழ்க்கை மலருமா?கருகிவிடுமா?
எல்லாவற்றையும் விட இப்போது அவனுடன் போனால்,முதலில் அவன் ஏற்றுக்கொள்வானா?-இப்படி இன்னும் எண்ணற்ற கேள்விகள் அவள் மனதில் உதயமாகிக்கொண்டே இருக்க,ஒருக்கட்டத்தில் யோசித்து பலனில்லை என்று எப்போதும் போல் அவள் இஷ்ட தெய்வமான கண்ணனை சரணடைந்தாள்.
தினசரி காலண்டரில் இருக்கும் கண்ணனின் புகைப்படத்தின் முன் மகள் அமர்வதை நீலவேணி உணர்ந்திருந்தும் அவளிடம் எதுவும் பேச முயலவில்லை.திருமண விஷயத்தில் மகளிடம் இளக்கம்  காட்ட அவர் தயாராயில்லை.வாழ்க்கையில் தான் பட்ட வேதனைகள் போதும்,மகள் படக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
கருப்பாயி இதை எதுவும் உணராமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க,கண் மூடி மனதை ஒருநிலைப்படுத்திய அம்சவேணி,இறுதியாக அரசுவுக்கு அழைத்து விவரம் சொல்வதென்று முடிவெடுத்தாள்.ஆனால் அந்த முடிவின் ஆயுட்காலமும் சில நிமிடங்கள் தான்.மீண்டும் குழப்ப மேகங்கள் சூழ,இப்போது ‘ஒத்தையா,ரெட்டையா’ கடவுளிடம் கேட்க முடிவு செய்தாள்.
வீட்டிற்கு வெளியே சென்று துளசி இலையையும்,அரளிப்பூவையும் பறித்து வந்தவள், ஆச்சியையும்,அம்மாவையும் ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே,அவர்களின் உறக்கத்தை உறுதி செய்துவிட்டு,இரண்டு துண்டு காகிதத்தில் துளசியையும்,அரளிப்பூவையும் தனித்தனியாக எடுத்து மடித்து,கண்ணனின் முன் போட்டவள் ,கண் மூடி அமர்ந்து,தரையை தொட்டு தடவி,ஒரு துண்டை எடுத்து,அதை கடவுளாகவே பாவித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு பிரித்துப் பார்க்க,துளசி இலைகளே வந்திருக்க..அம்சவேணிக்கு மனதில் நிம்மதி.
‘நான் போக நினைக்கும் இடத்திற்கு, வழிகாட்டுகிறார் கடவுள் ‘-முடிவே செய்துவிட்டவள்,தன் கைப்பையை எடுத்து அதில் தனது அலைபேசி இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள்.
மறைந்திருந்து தான் பேச வேண்டும்..அதையும் உடனே செய்ய வேண்டும்.தாயுடன் ஊருக்கு சென்றுவிட்டால் நிச்சயம் அங்கிருந்து ,தான் நினைத்தாலும் வர முடியாது..கதைகளில் படங்களில் வருவது போல  அரசு ஆக்ஷன் ஹீரோவாக மாறினாலும்,அங்கிருந்து வரவே முடியாது என்று எண்ணியவள்,
‘இன்னும் அவர்கிட்ட பேசவே இல்லையாம்.அதுக்குள்ள உனக்காக ஆக்ஷன் ஹீரோவா மாறுவார்னு உனக்கு ரொம்ப ஆசைடி’தன்னையே கேலி செய்துகொண்டவளின் மனதில் இப்போது புதிதாக ஒரு பயம்.
ஒருவேளை அரசுவிற்கு வேறொரு காதலி இருந்தால்? அல்லது அத்தை மாமன் மகள் இருந்தால்?  தன்னை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு வேறெதுவும் சிரமங்கள் ஏற்பட்டால்? என்றெல்லாம் எண்ணிய நொடி, கண்ணில் நீர் பொலபொலவென கொட்டத் தொடங்க..அடுத்து என்ன செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை.
சொல்லிய காதலுக்கே ஊருக்குள் மதிப்பிருப்பதில்லை.இதில் சொல்லாத காதல்..அதுவும் ஒருதலைக் காதல்..இன்னும் சொல்லப் போனால் அரசுவின் பெயர்,தற்போதைக்கு வேலை செய்யும் புரோட்டாக் கடை,அவனது நண்பன் பிரவீன்,ஓனர் கண்ணன் அண்ணா என்ற பிட்டு தகவல்களை தவிர வேறு எதுவுமே அவளுக்கு தெரியாது.
இத்தனை உண்மைகள் மனதை சுத்தியல் கொண்டு அடித்தார் போல வலிக்க உரைத்தாலும்,ஏதோ ஒரு உந்துதலில்,கடவுளின் வழிகாட்டுதலின்படி செல்வோம் என்ற முடிவுடன் அரசுவின் அலைபேசிக்கு அழைத்தாள்.
வெகுநேரமாய் ரிங் போய்க்கொண்டே இருக்க,மறுமுனையில் வேலையாய் இருந்த அரசு,புது நம்பராய் இருக்கவும்,ஐயனுக்கு(அப்பா) தான் இந்த நம்பர் கிடைத்துவிட்டதோ என்று பயத்தினுடையே எடுத்து”ஹலோ” என்றான் உள்ளே போன குரலுடன்!!
இன்றளவும் தகப்பனை பார்த்தால் அரசுவுக்கு பயம் தான்.
அம்சாவிற்கு சில வினாடிகள் ‘தொண்டையில் கிச் கிச்’ வந்துவிட,குரலும் வரவில்லை.
‘ஹலோ,ஹலோ’வென்று இரண்டு முறை கத்திய பிறகே..
“நான் அம்சவேணி பேசறேன்”என்றாள்.
“அம்சவேணியா..நீங்க யாருன்னு தெரியலையே..மாத்திக் கூப்பிட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்”அலைபேசியை சட்டென்று வைத்துவிட்டான்.வயதுப்பெண்ணின் குரலாய் இருக்க மேற்கொண்டு பேச்சு வார்த்தை வைக்க,அவன் தயாராயில்லை.
“யார்டா போன்ல”கேட்டுக்கொண்டபடியே இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாக நான்கு பிளேட்டில் தோசைகளை கொண்டு வந்து கொண்டிருந்தான் பிரவீன்.
“யாரோ ராங் நம்பர்டா மாப்ள.அம்சவேணியாம்.நமக்கு தான் யாரையும் அந்த பேர்ல தெரியாதே”என்றவுடன் திடுக்கிட்டுப் போன பிரவீன் அவனையும் அறியாமல் கையிலிருந்த பிளேட்டை நழுவ விட,சத்தம் அந்த சின்னை அறையில் பலமாக எதிரொலித்ததில்,எட்டிப்பார்த்த கண்ணன்,ஒன்றுமே சொல்லாமல் எதிரேயிருந்த டிவியில் நாடகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.இது தான் அவர்.
பிரவீனுக்கு தான் பயம் பிடித்துக்கொண்டது.
கீழே சிதறிக்கிடந்த தட்டை எதுவும் சொல்லாமல் அரசு எடுத்துக்கொண்டிருக்க,மெல்ல அவனிடம் வந்தவன் காதில் கிசுகிசுப்பாய்,”டேய் அரசு,இது உன்னோட ஆள் பேர்டா”எச்சில் விழுங்கியபடியே தான் சொன்னான்.
முதலில் புரியாமல் முழித்தவன்,புரிந்தவுடன்,”டேய் எரும,அந்தப் பொண்ணு என்னோட ஆள் இல்லைன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்றது”சன்னமாய் ஆனால் வன்மையாய் திட்டிய நண்பனை கிலியுடன் பார்த்தான்.
“நீ என்னை எப்போ வேணா திட்டிக்கடா! எனக்கு வெக்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லவே இல்ல.இப்போ போன் பண்ணது ஒருவேளை தங்கச்சியா இருந்தா என்ன பண்றதுன்னு யோசிடா.உன் போன் நம்பர் கொடுத்து ஆறு மாசம் ஆகிடுச்சு.இப்போ திடீர்னு கூப்பிடுதுன்னா எனக்கு ஏதோ பயமா இருக்குடா.நிஜமாவே தங்கச்சி உன்னை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு தான் கூப்பிடுதோ”மீண்டும் எச்சில் விழுங்கிக்கொண்டான்.
அரசுவிற்கோ’இதென்னடா சோதனை..அவனவன் ஆயிரம் பொண்ணை சைட்டடிச்சு அம்பது பொண்ணை லவ் பண்றான்.நான் ஒரே ஒரு பொண்ணை,அதுவும் ஒரே நாள் தான் சைட்டடிச்சேன்..அது ஒரு குத்தமா’-காமெடியான பாணியில் தன்னையே கிண்டலடித்துக்கொண்டவன்,எதுவாய் இருந்தாலும், இன்றே பேசி அந்த பெண்ணிற்கு தெளிவு கொடுத்துவிட வேண்டுமென்று முடிவு செய்தவன்,
கண்ணனிடம் சென்று,”அண்ணா,ஒரு பத்து நிமிஷம் ப்ரேக் வேணும்.கூட்டமும் அவ்வளவா இல்லை.யாராவது வந்தா கூப்பிடுங்க”உரிமையாய் சொல்லிவிட்டு பிரவீனையும் இழுத்துக்கொண்டே கடையின் பின் பக்கமிருந்த பாத்திரம் கழுவும் இடத்துக்கு போனான்.
“நான் பேசறேன்.சொல்லி புரிய வைக்க முயற்சி பண்றேன்.எதுவும் சரிவரலைன்னா நீ தான் டீல் பண்ணிக்கணும் மச்சி”கடுமையாய் எச்சரித்துவிட்டே,நண்பனின் முறைப்பையும் பெற்றுக்கொண்டு அம்சவேணிக்கு அழைத்தான்.
முதல் ரிங்கிலையே எடுத்துவிட்டவள்,”ஹலோ,நீங்க அரசு தானே”என்றாள் தயக்கத்துடன்..
“ஆமாம்..நீங்க”வேண்டுமென்றே இழுக்க..
லேசான விசும்பலுடன்,”பக்கத்துல யாரும் இருக்காங்களா..அதான் என்னை தெரியாத மாதிரியே பேசறீங்களா”-அவள் கேட்க,அரசுவிற்கு நெஞ்சடைக்கும் உணர்வு.
என்னவோ பல ஆண்டுகள் காதலித்து ஒன்றாக வாழ்ந்த காதலுடன் அவள் பேசுவது போல தான் அவனுக்கு தெரிந்தது. மண்டையை உலுக்கிக்கொண்டவன்,
“ஆமா.பிரவீன் இருந்தான்…வேற யாரும் என் பக்கத்தில இல்ல.இன்னைக்கு தான் உன் பேரை தெரிஞ்சுக்கிட்டேன்”என்றவனின் முற்பாதியை தான் அவள் கேட்டாள்.
அதுவே அவளுக்கு போதுமானதாய் இருக்க,பிற்பாதியை கவனிக்காமல் விட்டுவிட்டாள்..
“எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ள பார்த்திருக்காங்க-ங்க.அரசு உத்தியோகமாம்.நல்ல சம்பளமாம்..”என்றவள் வசதியாக மாப்பிள்ளையின் குறைகளை சொல்லவே இல்லை..அதிலெல்லாம் விவரமான ஆள்.
அரசு,”ஹப்பா”நிம்மதி பெருமூச்சிவிட்டு,”இத சொல்லத்தான் கூப்பிட்டியா”என்றான் பெரும் விடுதலையுணர்வுடன்..!!
அவனது குரலில் பேதம் அவளுக்கு புரிந்துவிட்டது..இன்னும் சில விஷயங்களும் தெளிவாகவே புரிந்துவிட்டது..
இறுதியாக ஒன்றே ஒன்றை சொல்ல பிரியப்பட்டாள்.
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல..”கேவிக்கொண்டே சொன்னவள் பட்டென்று போனை வைத்துவிட்டாள்.
‘என்னை உங்களோட கூட்டிட்டுப் போறிங்களா’-கேட்க தான் ஆசைப்பட்டாள்.நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே அள்ளாடினாள் என்று சொன்னால் மிகையில்லை.
ஒருவேளை’கூட்டிட்டுப் போறிங்களா’என்று கேட்டால் அது எத்தகைய எதிர்வினையை தரும் என்று அவளுக்கு தெளிவாக புரியவில்லை.
ஒருவேளை அரசு கெட்டவனாக இருந்து,’இது அந்த மாதிரி கேசா’என்று எண்ணி,தன்னை அழைத்துக்கொண்டு போய் எளிதில் ஏமாற்றிவிட்டால் என்ற கற்பனையெல்லாம் நொடிப்பொழுதில் கண்ணுக்குள் உலா வர,அந்த அப்பாவிப் பெண் பயந்து தான் போனாள்.
‘எந்த தைரியத்தில் அவனுக்கு அழைத்தேன் நான்’தன்னையே கேட்டு மருகி,செல்லையே பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.
அரசுவோ தனது போனையே வெறித்துக்கொண்டிருந்தான்.ஓரளவிற்கு விஷயம் அவனுக்கு புரிந்துவிட்டிருந்தது.ஒரு பெண் தன்னிடம் ‘வீட்டில் பார்க்கும் திருமணத்தில் விருப்பமில்லை’என்று சொன்னால்,அதுவும் அம்சா சொன்னால் அதன் உள்ளர்த்தம் புரியாது போகுமா என்ன?
தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பிரவீனை முறைத்தபடி அவள் சொன்னதை அப்படியே சொல்ல,தலையில் கைவைத்தபடி அப்படியே அமர்ந்தவன்,”உன்னை விரும்பறேன்னு நாசூக்கா சொல்லிடுச்சுடா.நீ ஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்துவேன்னு எதிர்பார்க்குதாட்ட இருக்கு.இப்போ என்னடா மச்சான் செய்யப் போற”திகிலாக கேட்டவனுக்கு பதில் வேறொருவரிடமிருந்து வந்தது.
“ரொம்ப யோசிக்காம கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கடா அரசு”-திடுதிப்பென்று கேட்ட கண்ணனின் குரலில் நண்பர்கள் இருவரும் அவசரமாய் திரும்பி பார்க்க,
“எனக்கும் ஓரளவுக்கு விஷயம் தெரியும்-பா அரசு..இப்போ நீ எதுவுமே பண்ணாம சும்மா இருந்தேன்னா,அந்தப் பொண்ணு வீட்டுல பார்க்கற பையனை கட்டிக்கிட்டா பரவாயில்ல.ஆனால் தற்கொலை பண்ணிக்கிடற முடிவுக்கு போனா பிரச்சனை உனக்கு தான் பார்த்துக்க..போலிஸ் கேஸ் ஆனா,முதல்ல உன்னை தான் பிடிப்பாங்க.
கடைசியா உன் நம்பருக்கு தான் பேசிருக்கு.இதையெல்லாம் யோசிச்சு தான் சொல்றேன்.அந்த பொண்ணை கூட்டிட்டு வா.நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.எவன் என்ன செய்யறான்னு நானும் பார்க்கறேன்”வீராதி வீரன் போல் பேச,பிரவீனிற்கு வயிற்றை கலக்கியது.
தான் காதலித்திருந்தால் கூட இந்த அளவிற்கு பேஜாராகியிருக்க மாட்டோம் என்று எண்ணி எண்ணியே பயந்தான்.அவனுக்கு பேய் பயம் ஜாஸ்தி.அம்சா அவசரப்பட்டு தவறான முடிவெடுத்து,ஆவியாக வந்து’நீயும் என்னை விட்டுட்டியேண்ணா’என்று சொல்வது போல கற்பனையெல்லாம் செய்து பார்க்க நடுங்கிவிட்டது பையனுக்கு.
அதனாலையே அவசரமாய்,”மச்சான்,அண்ணா சொல்றதும் சரி தான்.உனக்கும் தான் ஏழைப் பொண்ணை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு கொள்கை இருக்கே! இந்தப் பிள்ளையும் ரொம்ப வசதியில்லாத வீட்டுப்பிள்ளை தான்டா..கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ திரும்ப அந்த பிள்ளையை மில்லுலயே கூட கொஞ்ச நாளைக்கு சேர்த்து விட்டுடு.அங்க ரொம்ப சேஃப்! நீயும் நிம்மதியா படிச்சு முடிச்சிட்டு,நல்ல வேலைல சேர்ந்த பின்னாடி,சேர்ந்து வாழ்வீங்களாம்”-இலவசமாய் ஆலோசனை எல்லாம் சொல்லவும் கடுப்பாகிவிட்டான்.
“டேய் அறிவுகெட்ட எருமை,நான் எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கணும்.முதல்ல அந்த பொண்ணு எனக்கு யார் முதல்ல! நான் காதலிக்கக் கூட இல்லடா.தேவையில்லாம பேசறதை விட்டுட்டு,மூடிட்டு உட்கார்”இன்னும் சில கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்துவிட்டு கண்ணன் பக்கம் திரும்பியவன்,
“அண்ணா..என்னோட சூழ்நிலையில இன்னொரு சுமையை நான் சுமக்க விரும்பல.அதோட நான் ஒண்ணும் அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்து ஏமாத்திடல.சொல்லப் போனா பேசியது கூட இல்லண்ணா. இத்தனை வருஷமும் என் வாழ்க்கைல எப்படியாவது ஒரு விடிவு வந்துடும்னு நம்பிக்கையோட இருந்தேன்..
இனி நல்லதே நடக்காதுன்னு,இந்த நல்லவன் பேச்சுல இருந்து தெரிஞ்சு போச்சு. இனி எதுவேணா நடந்துட்டு போகட்டும்-ண்ணா.போலிஸ் வந்து பிடிச்சிட்டுக் கூட போகட்டும்.செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டு போறேன்.அவ்வளவு தானே”எளிதாக சொல்வது போல இருந்தாலும் விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருந்தான்.
ஆதரவாய் அவன் தோளில் தட்டிய கண்ணன்,ஏதோ பேச வந்த பிரவீனை தடுத்துவிட்டு,”அரசு,இப்போ இப்படி பேசற நீ,நாளைக்கு அந்த பிள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா குற்றவுணர்ச்சியில உன்னை நீயே தண்டிச்சுக்குவப்பா. அந்தப்பிள்ளைக்கும் எதுவோ பிரச்சனையிருக்க போய் தான் கூப்பிட்டிருக்கு.ரொம்ப நல்ல பொண்ணு வேற. இப்போ உனக்குன்னு யாருமே இல்ல.அதனால நான் சொல்றதக் கேளுப்பா”என்பதையே திருப்பி திருப்பி வேறு வார்த்தைகளால் அடுத்த முக்கால் மணி நேரத்திற்கு பேசிப்பேசி அரசுவின் மனதை இளக்கினார்.
அரைமனதோடு அம்சவேணியை தன்னுடன் அழைத்து வர முடிவெடுத்துவிட்டான்.
இதில் பிரவீனின் பங்கு தான் அதிகம்.அவனது கற்பனைக்குதிரையின் வேகம் அப்படி!! ஒரு நொடி அரசுவின் பிள்ளைக்கு தன் மடியில் மொட்டையடிக்கும் காட்சி உலாப்போகும்.அடுத்த நொடி அம்சவேணியை நடுவீட்டில் படுக்க வைத்து மாலை போட்டிருப்பது போலவும் காட்சிகள் உலாப்போகும்..மனித மனம் இல்லையா!! இல்லாதது பொல்லாததையும் கற்பனை செய்து உயிருடன் இருப்பவர்களை கொல்லும்,இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும் செய்யும்..எல்லாம் மாயமே!!

Advertisement