Advertisement

3
கல்லூரி வளாகத்தில் இருந்த கேண்டினை நோக்கி சென்று கொண்டிருந்த பிரவீனும் அரசுவும்,ஒன்று போல் கையில் நோட்டை சுழற்றி விளையாண்டு கொண்டிருந்தார்கள்.
எதிர்ப்பட்ட நண்பர்களுக்கு பிரவீன் ஆரவாரமாய் பதிலளித்துக்கொண்டு வர,நண்பர்களின் பேச்சுக்களை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்து வந்து கொண்டிருந்தான் தமிழரசு.
அதுவும் உடன் படிக்கும் பெண்கள் என்றால் தேவையில்லாமல் ஒரு வார்த்தை பேசிவிட மாட்டான்.அதற்காக அவர்கள் உதவி என்று வரும்பொழுது செய்ய தயங்கியதில்லை.
ஓயாமல் வேலை செய்தாலும்,படிப்பில் இன்றுவரை இவன் தான் டாப்..எப்போதுமே புத்தகத்திற்குள் கண்ணை வைத்துக்கொண்டு இருப்பவனில்லை.எதையும் ஆர்வமாய் கூர்மையாய் கவனிக்கும் புத்தியுள்ளவன் என்பதால்,இதுவரை யாராலும் அவனை முந்த முடியவில்லை.
அதிலும் உடன் படிக்கும் மைதிலி இவனை எப்படியாவது முந்திவிட வேண்டும் என்று விழுந்து விழுந்து படிப்பாள்.ஆனால் அவளால் இரண்டாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது.
அவர்களது பேராசிரியர்கள் இந்த முறை கோல்ட் மெடல் வாங்குவது அரசுவா,மைதிலியா என்ற பெட் வேறு கட்டியிருக்கிறார்கள்.நிச்சயம் அரசு தான் வாங்குவான் என்பது பலருடைய எண்ணம்.
புத்தகத்திலிருப்பதை அப்படியே ஒப்பிக்காமல் கொஞ்சம் மாறுபட்டு,தன்னுடைய எண்ணத்தையும் சொல்லும் அரசுவை யாருக்கும் பிடிக்காமல் போகாது.மென்மையான குணம் கொண்டவன்.யாரையும் புண்படுத்தி அவனுக்கு பேச தெரியாது…
பிரவீனுக்கே நண்பனின் சில குணங்கள் பொறாமையை தூண்டியிருக்கிறது என்றாலும்,இருவருக்கிடையில் ஆழ்ந்த நட்பு இருப்பதால்,’பொறாமை’ உணர்வை எளிதாக கடந்து வந்துவிடுவான்.
கேண்டினில் வழக்கமாக தாங்கள் அமரும் டேபிளில் டீ வாங்கிக்கொண்டு அமர்ந்தார்கள்.
பிரவீனுக்கு அரசுவை கலாய்ப்பதென்றால் அலாதி பிரியம்.இப்போதும் செவ்வனே அந்த வேலையை செய்தான்.
“ஏன் மச்சான்.நம்ம காலேஜ்ல கலர் கலரா பிகருங்க இருக்கே.அவளுங்கள்ள ஒருத்தியைக் கூடவா உனக்கு பிடிக்கல..அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா”குரல் கவலையாக ஒலித்தாலும்,முகபாவனையில் எக்கச்சக்க கிண்டல் விரவியிருந்தது.
கையிலிருந்த நோட்டில் அவன் முதுகில் இரண்டடி வைத்தவன்,”ஏன்டா நீ வேற இதையே சொல்லி என் உயிரை வாங்கற.ஒரே ஒரு நாள் தெரியாத்தனமா,அதுவும் அஞ்சு நிமிஷம் அந்தப் பொண்ணை பார்த்து தொலைஞ்சுட்டேன்.அதுக்காக இந்த ரெண்டு வருஷமா நீ என்னை போட்டு படுத்தற பாடு இருக்கே!நிஜமாவே என்னால முடியலைடா..எனக்கு இப்போ ‘காதல்’,‘கல்யாணம்’,இதுல எல்லாம் ஆர்வம் இல்ல..இப்போதைக்கு படிப்ப முடிச்சு நல்ல வேலைல சேரணும்.கொஞ்ச நாள் கழிச்சு லோன் போட்டு சிம்பிளா ஒரு வீடு வாங்கிடனும்.இப்போதைக்கு என் டார்கெட் இது தான்.
இதெல்லாம் முடிஞ்சு நான் கல்யாணம் செய்யற போது,அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு பிள்ளைங்க இருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல..இதுக்கு இடையில ஏதாவது அழகான பொண்ணைப் பார்த்தா ரசிக்கறது தான்..கண்ணை மூடிக்க முடியலை..இந்த வயசுல அதெல்லாம் கன்ட்ரோல் பண்ணிக்கவும் முடியல..அதுக்கு காரணம் சேர்க்கை சரியில்ல..உன்னோட சேர்ந்து என் புத்தியும் இப்போ கெட்டுப் போயிட்டு இருக்கு”நண்பனின் மேலும் குற்றச்சாட்டை வைத்தான்.
“அப்போ நிஜமாவே நீ அந்தப் பொண்ணை விரும்பலையா.அப்புறம் எதுக்குடா புரோட்டா கட்டி ரெடியா வைக்கிற..நான் நம்பமாட்டேன்.நம்பவே மாட்டேன்”
“இந்த புரோட்டாவை விடவே மாட்டியாடா..அதென்ன காதல் சின்னமா…!! இப்போ சொல்றேன் தெளிவா கேட்டுக்கோ..நான் அந்தப் பொண்ணோட மனசுல ஆசைய வளர்க்கக் கூடாதுன்னு தான்டா,அவ வர்ற நேரத்துல வெளில கூட வர்றதில்ல.இப்போ நீ சொல்றதையெல்லாம் பார்க்கும் போது,இனிமேல் ஞாயித்துக்கிழமை சாயங்காலம் கடைக்கு வரக் கூடாதுன்னு மட்டும் தெளிவா புரியுது.
வீணா அந்தப்பொண்ணு மனசிலையும் ஆசைய வளர்க்கக் கூடாது.நீயும் அந்தப் பொண்ணுகிட்ட பேச்சை வளர்க்காதே.இருக்க கஷ்டத்தில இந்த வயசிலையே கல்யாணம் பண்ணி,என்னால சுமையை கூட்டிக்கிட்டே போக முடியாது”தெளிவாய் தீர்மானமாய் தன் முடிவை சொல்லிவிட்ட திருப்தியுடன் ஆறிப்போன டீயையும் வீணாக்க மனமில்லாமல் குடித்து வைத்தான்.
பிரவீனிற்கு தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அந்தப்பொண்ணு என்னடான்னா உரிமையாய்,’அவங்க போன் நம்பர் தர்றீங்களா-ண்ணா’-ன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடியே ஆர்வமா வாங்கிட்டுப் போச்சு..போன் பண்ணி பேசுச்சா என்னன்னு வேற தெரில.ஆனா இவனை பார்க்க வேண்டியே கடைக்கு,வாரம் வாரம் மறக்காம வந்துடுது..நான் வேற கிண்டலெல்லாம் பண்ணி ஏத்தி விட்ருக்கேனே..’-தனக்கும் ஒரு சகோதரி இருக்கும் நினைவில்..அம்சவேணியின் நிலையைக் கண்டு இவனுக்கு கதி கலங்கியது..
அரசுவின் பேச்சு உண்மையெனும் போது,இனி தானும் ஞாயிரண்டு விடுமுறை எடுத்து விடுவது தான் சரியாக இருக்கும் என்று எண்ணியவன்,எதுவும் பேசாமலையே நண்பனுடன் வகுப்பிற்குள் நுழைந்தான்..இன்னும் குழப்ப ரேகைகள் அவன் முகத்தில் எஞ்சியிருந்தது.
******
மதிய உணவு வேலையில் கேண்டினில் உணவை பெற்றுக்கொண்டு,வெளியில் இருந்த புல் தரையில் தோழியர்களான அம்சவேணியும்,ரஞ்சிதாவும் ஓய்வாக , அமர்ந்தனர்.
ஏதோ பரவாயில்லை என்பதற்கும் குறைவான ருசியில் இருந்த உணவை பசிக்காக வேகவேகமாக விழுங்கிவிட்டு, கொண்டு வந்திருந்த பாட்டிலால் கையையும் புல் தரையிலையே கழுவிவிட்டு கதை பேச ஆரம்பித்தனர் இருவரும்.
“அம்சு,நேத்து நானொரு கதை படிச்சேன்.ஹீரோயின் வேலை செஞ்சுட்டு இருக்க கம்பெனி வேறொரு ஆள் கைக்கு போகுதாம்.கம்பெனிய வாங்கற அந்த ஆள் தான் ஹீரோவாம்!! அப்படியே மோதல்ல ஆரம்பிச்சு,ரெண்டு பேருக்கும் காதல் வந்துடுது.நம்ம கம்பெனியும் வேறொரு ஆள் கைக்கு போகுதே.அந்த ஆளுக்கும் கல்யாணம் எல்லாம் ஆகலையாம்..அப்போ ஹீரோயின் நம்ம கூட வேலை செய்யறதில யாரா இருக்கும்டி.ஒருவேளை நீயோ..”கண்ணடித்து கேட்டவளை முறைத்துப் பார்த்தாள்.
“கொழுப்பு கூடிப்போச்சுடி உனக்கு..ஏதோ விபரம் தெரியாதப்போ,கதைல வர்ற மாதிரி ராஜகுமாரன் வந்து கல்யாணம் பண்ணிக்கனும்னு உன்கிட்ட சொல்லி தொலைச்சிட்டேன்.அதுக்காக இப்படியா ஓட்டுவ!! எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் இல்ல..ஏதோ மூணு வேலை கஞ்சி ஊத்தி,என்னை கஷ்டப்படுத்தாம,சந்தோஷமா வைச்சுக்கிட்டாப் போதும்.பெருசா வேறெந்த ஆசையும் இல்ல”-நானும் மனதளவில் முதிந்துவிட்டேன் என்று சொல்லாமல் சொல்லி,மனதில் அரசுவையும் தன் கற்பனயில் பொருத்திப்பார்க்க,ரஞ்சி விடுவேனா பார் என்ற ரீதியில்..
“இது நீ நேத்து படிச்ச கதையினால வந்த ஞான உதயம் தான! ஹீரோவுக்கு கொஞ்ச நாள்லயே ஹீரோயினை பிடிக்காம போயிடும்..பிரிஞ்சுடுவாங்க..புதுசா கல்யாணமாகாத ஒருத்தியைக் கட்டிக்கிட்டு,’உண்மைக் காதல் உன்னோட மட்டும் தான்’னு வசனம் பேசுவானே..அதையெல்லாம் படிச்சு தான் திருந்திட்டியோ..”விடாமல் நக்கலடிக்க,
“இனிமேல் நான் கதையே படிக்க மாட்டேன்டி.அது உன்மேல சத்தியம்”என்றதும் பதறிப்போனாள் ரஞ்சி.
“நான் ரொம்ப நாள் வாழ ஆசைப்படறேன்டி! உன்னோட சத்தியத்தை நீயே வைச்சிக்கோ!! இந்த போன் கைல இருக்க வரைக்கும் கதை படிக்கறத நீயும் விடமாட்ட.நானும் விடமாட்டேன்..ஸோ நாம திருந்தாத கேஸ்!! வேற பேசுவோம்”உண்மையை சொன்னவளை முறைத்தவள்,
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்குடி ரஞ்சி.நம்ம பக்கத்து ரூம் வந்தனா,ஓயாம போனை ஒளிச்சு வைச்சு,ரொமான்ஸ் படமா பார்க்கறா..அதை குறை சொல்ல முடியுமா என்ன!!எல்லாத்தையும் பொழுதுபோக்கோட நிறுத்திக்கணும்”என்று நிறுத்தியவளோ,அடிக்கடி தன் மனதுக்கும் இந்த வார்த்தையை சொல்லி கடிவாளமிடுவாள்.
அவளுடைய ராஜகுமாரன் கனவு அடிபட்டுப்போனதற்கு காரணம் அரசுவாக மட்டுமே இருக்க,கதையில் வரும் மிச்ச சொச்ச ரொமான்ஸ் ஆசைகள் எல்லாம் அவளிடம் அவ்வப்போது தலைதூக்கும்..
‘ஏன் அவங்க பேசக் கூட மாட்டேங்கறாங்க’ஏங்கி அழக்கூட செய்திருக்கிறாள்..காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற வரைமுறை அவளது மனதில் நங்கூரமாக பதிந்துவிட்டது..நிதர்சனத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாலும், அரசு மீதான எதிர்பார்ப்புகள்,ஆசைகளை சுத்தமாக அழிக்க முடியவில்லை..
அரசுவை பற்றி நினைத்தாலே அவளது முகம் சுண்டிப்போகும்.இந்தக் காதல்(?) நிறைவேறுமா,இல்லை அம்மா பார்க்கும் பையனுக்கு கழுத்தை நீட்டிவிடுவோமா என்ற பயத்திலையே வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
சூப்பெர்வைசிங் செய்யும் மதன் அம்சவேணியிடம் வந்தவன்,”உனக்கு விசிட்டர் வந்திருக்காங்க.ரிஷப்ஷன்ல கையெழுத்து போட்டுட்டு அரைநாள் லீவுக்கு எழுதி கொடுத்துட்டுப் போ.இனி இப்படி லீவு எடுக்கக் கூடாது”மிரட்டிவிட்டு நகர்ந்தான்.
ஒன்றும் புரியாமல் ரஞ்சியிடம் சொல்லிவிட்டு,வெளியே வர,வாயில்கதவுப் பக்கம் அவளது அம்மா நீலவேணி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
“ஊர்ல இருந்து வந்து நாலு நாள் கூட ஆகலை.அதுக்குள்ள அம்மா வந்திருக்கு.என்னவா இருக்கும்”யோசனையூடே அவர் அருகில் வர,
“என்னடி மசமசன்னு நடந்து வர்ற! எம்புட்டு நேரந்தான் நிற்கறது”என்றவர் எதுவும் சொல்லாமல் அவள் கைப்பிடித்துக்கொண்டு வெளியே வர பார்க்க,
“இரும்மா..கையெழுத்து போட்டுட்டு வர்றேன்”செக்யூரிட்டியிடமிருந்து நோட்டு வாங்கி அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தாள்.
வெளியே ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கவும்,என்னவென்று கேளாமல் அம்மாவுடன் பயணிக்க,பாட்டி வீட்டுக்கே ஆட்டோ வந்து நிற்கவும்,”இந்தப் பக்கம் எதுவும் வேலையா வந்துட்டு,என்னைய பார்த்துட்டுப் போகலாம்னு வந்தியாம்மா”-என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம் என்று கேட்டு வைத்தாள்.
“எல்லாத்தையும் வெளில நின்னே சொல்லிடணுமா! உள்ள போடி”விரட்டியவர்,ஆட்டோவிற்கு காசைக் கொடுத்துவிட்டு, உள்ளே வருவதற்குள்,அவளது பாட்டி கருப்பாயி விஷயத்தை சொல்லியிருந்தார்.
உச்சக்கட்ட அதிர்ச்சியில் அவளது உடம்பெல்லாம் வேர்த்து வழிய,நீலவேணிக்கு அவளது காதல் விஷயம் தெளிவாக தெரியாதல்லவா!!
திருமணத்தை எண்ணி பயப்படுகிறாள் என்றே எண்ணியவர்,தன் கைப்பையிலிருந்த போட்டோவை எடுத்து அவளிடம் நீட்ட,அனிச்சை செயலாக இரண்டடி பின் நகர்ந்தவள்,சட்டென சுதாரித்து போட்டோவை கையில் வாங்கிப் பார்த்தாள்..
தலையில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது..
கருப்பாயி பேத்தியின் காதுக்குள்,”சொட்ட மண்டடி! முடிய நட்டு வச்சிருக்கானுங்க”கிசுகிசுப்பாக சொல்ல,நீலவேணி முறைத்தார் தன் தாயை!!
“இங்க பாரு அம்சு.மாப்பிள்ளைக்கு வயசு நாற்பதாகுது”என்றவுடனே போட்டோவை கீழே போட்டுவிட்டாள்.
“ம்மா”கீச்சுக்குரலில் கத்த,
“என்னடி நொம்மா,வயசு தான் கூடவே தவிர நேர்ல பார்க்க மாப்பிள்ளை ஜம்முன்னு இருக்கார்.எந்த சீரும்(?) தேவையில்ல..ஜாதகம் பொருந்தியிருக்கு.பொண்ணு மட்டும் போதும்னு சொல்லிட்டாங்க.நான் கூட ரெண்டாவது தாரத்துக்கு தான் கேட்கறாங்கன்னு கோபப்பட்டேன்.ஆனா மொதக் கல்யாணம் தானாம்! ஒரு கெட்டப்பழக்கமும் இல்ல.அரசாங்க உத்தியோகத்துல இருக்கார்.நிலபுலன் நிறைய கெடக்கு..நீ அதிர்ஷ்டக்காரி தான்டி.என்ன மாதிரி இல்ல”பெருமையாய் பேசிக்கொண்டே போக,
“அம்மா,எனக்கு இவங்களை பிடிக்கலை”பட்டென சொல்லிவிட்டாள்.
“ஏனாம்”கோபத்தை அடக்குகிறார் என்பது குரலிலையே தெரிய,
“உன்னோட வயசும் அவரோட வயசும் ஒண்ணும்மா.எனக்கு அப்பா மாதிரி”என்றவளை முடிக்க விடாமல் கன்னத்தில் அறை விட்டவர்,மகளின் கண்ணீரை பொருட்படுத்தாமல்,அவளை சம்மதிக்க வைக்கும் முனைப்போடு பேசினார்.
“யாரை யாரோடி இணை கூட்டற..இந்த மனுஷனுக்கு ஒத்த கெட்டப்பழக்கமும் இல்லை.ஆனா உன்னோட அப்பன்காரன்..சரியான கேடி.கட்டுனவளையும்,பெத்த பிள்ளையும் வைச்சு கஞ்சி ஊத்த துப்பில்லாதவன்..என்னோட நிலைமை உனக்கும் வந்திடக் கூடாதுன்னு தான்டி வயசைக் கூட பார்க்காம சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கேன்.அங்க நீ ராசாத்தி மாதிரி வாழலாம்.உனக்கு அவர் தான் புருஷன்”உறுதியாக சொல்லிவிட..
“இப்படி வயசானவன கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு பதிலா,என்னை வெஷம் வைச்சு கொன்னுட்டு,நீ சந்தோஷமா இரு”என்றதற்கு இன்னொரு கன்னத்தில் அறை விழ..மகளின் அழுகை சத்தத்தில் இப்போது தாய்க்கும் அழுகை வந்தது.
முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவர்,“உன்னை வெஷம் வைச்சு கொல்றதுக்காகவாடி,நா எல்லா அசிங்கத்தையும் தாங்கிட்டேன்.பெத்தபுள்ளைகிட்ட வெக்கத்த விட்டு சொல்றேன்டி..உன்னோட ஆத்தா பலரோட சோரம் போனவ”ஆத்திரத்தில் வெடிக்க..
“ம்மா”அதிர்ந்து போய் கத்தினாள்.
கருப்பாயி ஒருபக்கம் அழுக ஆரம்பித்தார்.
“என்னடி பொய் சொல்றேன்னு நினைக்கறியா.உத்தமியா வாழணும்னு நினைச்சவளை குடிக்க வைச்சு,இன்னொருத்தனுக்கு கூட்டிக்கொடுத்தான் உங்கப்பன்! போதை தெளிஞ்ச உடனே நெஞ்சும் உடம்பும் காந்திப்போச்சு.சுருக்கு மாட்டிக்கிட போயிட்டேன்.
அதுக்கு முன்னாடி உங்கப்பன போட்டு தள்ளணும்னு வெறியோட தலைய முடிஞ்சுக்கிட்டு வந்தேன்..வீட்டுக்குள்ள அந்த ஆள் மேல நீ படுத்துக்கிடந்த..அதுக்கு மேல உசுரை எடுக்கவும்,என்னோட உசுரை மாச்சுக்கவும் எனக்கு தெம்பில்லடி..
உங்கப்பன்கிட்ட நியாயம் கேட்டா,’மண்ணு திங்கற உடம்ப யார் வேணா தின்னுட்டு போகட்டும்’னு இளிச்சான்..அவனோட வாழவே கூடாதுன்னு இந்த கிழவிகிட்ட வந்தா,நாலு நாளைக்கு மேல இருக்க முடியல.
கைப்புள்ளையோட வாழாவெட்டியா வந்து நின்னா ரோட்டுல போற பத்துல நாலு பேர்,படுக்கைக்குள்ள வர தயாரா இருந்தானுங்க..உடம்ப காட்டி பிழைக்கிறவன்னு எல்லாருக்கும் இளக்காரம்..
அந்த அசிங்கத்தையும் தாங்க முடியாம,மறுபடியும் உங்கப்பனோட போய் சீரழிஞ்சு,கண்டவனுக்கு எல்லாம் பயந்து,ஊர்விட்டு ஊர் வந்து திக்கு தெரியாம முழிச்சேன்.அப்போ ஒருமவராசன் தான்,இப்போ வேல செய்யற இடத்தில வேலை வாங்கி கொடுத்தான்.இல்லைன்னா இந்நேரம் உன்னோட ஆத்தா சீக்காளியா செத்துப் போயிருப்பா!!
என்னோட வாழ்க்கையில நடந்த இத்தனையும்  எதுக்காக,யாருக்காக தாங்கிக்கிட்டேன்! எல்லாம் உனக்காக தான்..என்ன மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் அடுத்தவன் முன்னாடி உடம்பை காட்டப் போறியா..இல்ல கவுரவமா இவர கட்டிக்கப் போறியான்னு முடிவு பண்ணிக்க”என்றவர் மகளின் முகத்தை பார்க்க தெம்பில்லாது,பாயை விரித்து ஒரு ஓரமாக படுத்துவிட்டார்..அழுக கண்ணீரெல்லாம் மிச்சமில்லை.. மனமெல்லாம் ரணமாகிக்கிடந்தது.
கருப்பாயி பேத்தியின் தலையை தடவிவிட்டு,அவரும் ஒரு ஓரமாய் படுத்துவிட..அம்சவேணிக்கு நிஜத்தை எதிர்கொள்ள முடியவில்லை..
தாயின் நிலைமை இப்படியிருக்கும் என்று யோசித்துக்கூட பார்த்தாளில்லை..தன்னைப் பொறுத்தவரை..’அம்மா ஒரு இரும்பு மனுஷி.ஆம்பளைங்களை நெருங்க விடாதவர்’ என்ற அடிப்படை எண்ணமே தகர்ந்து போய்விட…வெளியே இருந்த குளியலறைக்குள் போய் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.
அவளது அழுகை உள்ளே இருந்தவர்களுக்கும் கேட்க..இரு பெண்மணிகளின் நெஞ்சமெல்லாம் ரணம்..ரணம் மட்டுமே…

Advertisement