சங்கமித்ராவை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அவளின் குடும்பத்தினர், தமக்கை விரும்பியவனை திருமணம் செய்துகொண்டாள் அதனால் அனைவரும் அவள்மீது கோவமாக இருப்பதாக எண்ணினாள் அலக்நந்தா.
சச்சிதானந்தனின் திருமணமோ அவன் குடும்பத்தில் நடந்த பிரச்சனையோ அவளுக்குத் தெரியாது, அக்காவுடன் பேச அவளும் முயற்சிக்கவில்லை.
பலமுறை இவளைப் பார்க்க மித்ரா வந்தபோதும் இவள் தாயின் மீது இருந்த பயத்தில் அவளைப் பார்த்தாலே ஓடி ஒளிந்தாள், ஒரு வருடம் கடந்த நிலையில் பல மாதங்களாக வராமல் இருந்த மித்ரா ஒரு நாள் மாலை பள்ளி வாசலில் நின்றிருந்தாள் மேடிட்ட வயிற்றோடு.
அதைப் பார்த்தபிறகு அவளைக் கடந்து செல்ல இயலவில்லை அலக்நந்தாவால், தமக்கையின் அருகில் செல்ல இவளின் கையைப் பற்றித் தன் வயிற்றில் வைத்தாள் மித்ரா.
குழந்தையின் அசைவை உணர்ந்தாள் அலக்நந்தா, தன் கைகள் உணர்த்த அந்த அசைவு அவளின் உள்ளே ஏதோ புதிய உணர்வைக் கொடுக்க அதன் பிறகு தவறாமல் மித்ராவை சந்திக்க தொடங்கினாள் நந்தா.
பிரசவ நாள் அடுத்து வந்தது, குழந்தை பிறந்தபிறகு அவளைச் சென்று பார்க்க முடியவில்லை நந்தாவால், மித்ரா தான் எப்பொழுதும் நந்தாவை பார்க்க வருவாள்.
தங்களின் வீட்டை ஒரு முறை மித்ரா காண்பித்துருக்க பள்ளியிலிருந்து நேரே ஒரு நாள் அக்காவின் வீட்டிற்கு வந்துவிட்டாள், அவளைப் பார்த்த மித்ராவிற்கு மகிழ்ச்சியை அடக்க இயலவில்லை தன்னை தேடி அவள் வந்ததை நம்பவும் முடியவில்லை.
“நந்தா” என்று தங்கையை அணைத்துக் கொண்டாள், அங்கு நின்றிருந்த சச்சியை பார்த்தவள் தயங்கி நின்றாள்நிற்க “வாம்மா” என்ற சச்சி “நீங்கப் பேசுங்க” என்றவன் அறையிலிருந்து வெளியேறினான்.
வீட்டில் இரண்டு ஆட்கள் வேலைக்கு இருந்தனர் எப்பொழுதும், பிரசவம் முடிந்த பிறகு முழுநேரமும் அவளைப் பார்த்துக்கொள்ள ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மித்ராவின் அருகிலேயே இருந்து இருவரையும் பார்த்துக்கொண்டான்.
தன்னுடைய சேமிப்பிலிருந்து ஒரு உடையைக் குழந்தைக்கு வாங்கி வந்திருந்தாள் நந்தா “ரொம்பலாம் காசு இல்லக்கா இது தான் வாங்க முடிஞ்சுது” என்றவளை பார்த்து விழிகள் நிறைந்தது மித்ராவிற்கு.
தாய் வீட்டு ஆதரவும் இல்லை கணவன் வீடும் இல்லை, தன்னை காண வரும் ஒரே உறவு அவள் கொண்டு வந்த உடையைக் குழந்தைக்கு அணிவித்து அழகு பார்த்தாள் மித்ரா.
அதன் பிறகும் சிலமுறை குழந்தையைக் காண அவர்கள் வீடு சென்றாள் நந்தா, சச்சியுடன் எப்பொழுதுமே பேச்சுக்கள் கிடையாது, குழந்தையின் இரண்டாம் பிறந்தநாளுக்கு மித்ராவையும் அத்வுவையும் அழைத்துக் கொண்டு வண்டலூர் சித்தி விநாயக கோவில் வந்திருந்தான் சச்சி.
மித்ரா அழைத்ததால் நந்தாவும் வந்திருந்தாள், அவர்கள் குடும்பமாக அந்தப் பக்கம் நிற்க இவள் மறுபுறம் நின்றிருந்தாள், இவர்கள் அர்ச்சனை முடித்த நேரம் உள்ளே நுழைந்தார்கள் பாரிவேந்தனும் வானதியும்.
படிப்பை வெளிநாட்டில் முடித்தவன் அங்கேயே அவனுடைய கம்பெனியைத் தொடங்கியிருந்தான், அதிகம் குடும்பத்தோடு நேரம் செலவழித்து இல்லை.
சச்சி வானதி திருமணத்திற்கு வந்தவன் அதன் பிறகு இப்பொழுதுதான் வருகிறான், அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்பது வரை மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது.
சச்சிதானந்தன் மித்ராவுடன் வண்டாலூரில் இருப்பதே வானதி அறியவில்லை, மகேந்திரனும் மாதவனும் சச்சியை பின்தொடர்ந்து விவரங்கள் அறிந்து கொண்டனர்.
ஒருமுறை மகனின் விருப்பத்தை மீறிச் செய்த காரியம் இவ்வளவு பிரச்சனைகளை உருவாக்கி இருக்க மீண்டும் உடனே எதுவும் செய்ய விரும்பவில்லை மகேந்திரன்.
மகனிடம் பேசிப் பார்த்தும் அவன் வழங்கவில்லை “மித்ராவிற்கு உங்களால் ஆபத்து வந்தால் என்னையும் நீங்கள் அதன் பிறகு பார்க்க முடியாது” என்று கூறிவிட அவர் நிதானித்தார், மனைவியிடமும் மருமகளிடமும் இந்த விவரங்களைக் கூறவில்லை.
அவன் மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டதாக அவர்கள் நினைத்திருந்தனர், தன்னிடம் வந்துவிடுவான் மித்ராவை மீண்டும் பார்த்த அதிர்ச்சியில் இப்படி நடந்து கொண்டான் என்றுதான் நம்பினாள் வானதி.
பாரிவேந்தனிடம் இந்தப் பிரச்சனைகளைக் கூறிவிட்டால் நாளைச் சச்சி மீண்டும் தன்னிடம் வரும்போது தம்பியின் முன் அவன் நிலை தாழ்ந்துவிடும் என்று அவள் அஞ்சினாள், வீட்டின் பெரியவர்கள் மட்டுமே விஷயம் அறிந்தவர்கள் வீணாவிற்கும் இந்த விவரங்கள் தெரியாது.
சச்சி வீட்டிற்கும் செல்லவில்லை, தாயிடம் மட்டும் எப்பொழுதாவது பேசுவான் ஆனால் அவர் அழைத்தாள் அவன் என் அணைத்து வைக்கப்பட்டிருக்கும், தம்பியிடம் தொழில் ரீதியான பேச்சுக்கள் மட்டும் இங்கு நடந்த ஏதும் முழுதாகத் தெரியாமலே இந்தியா வந்து சேர்ந்திருந்தான் பாரிவேந்தன்.
சம்பத்தின் இரண்டு படங்கள் வெற்றியடைந்திருந்தது, அவனின் திருமணமும் முடிவு செய்யபட்டிருக்க வண்டலூரில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி இருந்தான்.
நண்பனின் திருமணத்திற்கு வந்த பாரி அந்த வீடும் இடமும் பிடித்து விட அங்கேயே அவனும் ஒரு வீடு வாங்கினான், அதன் பூஜைக்கு அன்னையையும் அண்ணியையும் அழைத்து வந்திருந்தான்.
மாலை கோவிலுக்குப் போகலாம் என்று வானதி கூற சுமதி வரவில்லை என்றார் ஆகையால் பாரியும் வானதியும் சென்றனர், உள்ளே நுழைந்தவர்கள் கண்டது கையில் குழைந்தையுடன் நின்ற சச்சிதானந்தனை தான் அவன் அருகில் பட்டுடுத்தி உரிமையோடு நின்றவளை பார்த்ததும் வானதியின் மொத்த உலகமும் சுழன்றது.
அவள் மித்ரா என்பது தெளிவாகப் புரிய அடிவயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு, “அவன் நினைவுளில் நான் எங்கேயும் இல்லையா!! என்னை மொத்தமாகக் கைவிட்டு விட்டானா, அவளுடன் வாழுந்து கொண்டு இருக்கிறானா… அவர்களுக்குக் குழந்தையும் இருக்கிறதா” மெல்ல மெல்ல உடல் தளர அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள் வானதி.
“அண்ணி அண்ணி என்னாச்சு” என்றவனின் குரலில் முதன் முதலாக அவனைப் பார்த்தாள் அலக்நந்தா, சச்சியும் மித்ராவும் கூட அப்பொழுதான் அவர்களைக் கவனித்தனர்.
மித்ராவை பயம் தொற்றிக் கொண்டது அவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்வை மொத்தமும் பாரிவேந்தனின் மேலே.
வானதியை பார்த்தவன் அண்ணனின் அருகில் வந்து “யார் இவங்க” என்க, அவன் தலை தாழ்த்தி நின்றான் “உன்னைத்தான் கேட்டேன் யார் இது” என்க.
“மித்ரா என் மனைவி” என்று அவன் உரைக்க “அப்போ அவங்க யாரு” என்றான் பாரி கர்ஜனையாக.
“பாரி நான் சொல்றத கேளு உனக்குத் தெரியாது, நானும் மித்ராவும்தான் விரும்பினோம் நம்ம அப்பவும் வானதி அப்பாவும் எங்களைப் பிரிச்சுட்டாங்க, இவ வேற கல்யாணம் கூடப் பண்ணாம எனக்காகக் காத்திருந்தா எப்படி இவளை நான் விட முடியும்” என்றவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துவிட்டான் பாரி.
“அவங்களுக்கு கல்யாணம் ஆகல, உனக்கு ஆயிடுச்சுல?? இவ்ளோ பெரிய துரோகத்தை அண்ணிக்கு பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது, என்ன மனுஷன் நீ” என்றவன்.
“நீங்க விரும்பியிருக்கலாம் ஆனா இன்னொரு பொண்ணோட கணவன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கீங்க வெக்கமா இல்ல” என்றான் மித்ராவிடம்.
“பாரி அவளை அப்படி பேசாத” என்ற அண்ணனை வெறுப்போடு பார்த்தவன் “உன்கிட்ட இப்படி ஒன்ன நான் எதிர் பார்க்கல ஐ ஹெட் யூ டு தி கோர்” என்றவன் திரும்பி நடக்க அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டாள் நந்தா.
தன் தமக்கை திருமணம் ஆன ஒருவனை கல்யாணம் செய்திருக்கிறாளா, அவள் விழிகள் இப்பொழுது வானதியில் பதிந்தது, அவள் விழிகளைச் சந்திக்கவே முடியவில்லை நந்தாவால்.
அவளின் விழி வழியே உயிர் வடிந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது “அண்ணி அண்ணி” என்ற பாரியின் எந்த அழைப்பும் அவள் செவிகளை எட்டவில்லை.
“ஏமாற்றிவிட்டாயா” என்றது அவள் விழிகள் கணவனிடம்.
அந்த நொடி சச்சி மனதால் பெரிதாக அடி வாங்கினான், விரும்பியவளுடன் நிறைவான வாழ்வு என்று இருக்க இன்றும் தனக்காக இவள் காத்திருக்கிறாளே என்று அப்பொழுது அவன் உள்ளம் குத்தியது.
“துரோகி” என்று குற்றம் சாட்டியது நந்தாவின் பார்வை இருவரையும்.
மித்ராவின் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் வேகமாக வெளியேறியவள் கண்டது வானதியுடன் சீறிப்பாய்ந்த பார்வேந்தனின் காரைத்தான்.
எப்படி வந்து சேர்ந்தாள் என்றே அறியாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தால் நந்தா, அடக்க அடக்க வெடித்து கிளம்பியது அழுகை மீண்டும் மீண்டும் வானதியின் முகம் கண்முன் தோன்றி அவள் நிம்மதியை குலைத்தது.
அவளின் நிலையைப் பார்த்த சாரதா கூடப் பயந்துவிட்டார், கணவனின் இறப்பிற்கு பிறகு தன்னையே ஒரு கூட்டிற்குள் அடைத்துக்கொண்டவர் மித்ராவின் செய்கைக்குப் பிறகு மொத்தமாகத் தன்னை தனிமை படுத்துக்க கொண்டார், அவருடைய குரலே வீட்டில் கேட்க்காது.
இப்பொழுது இவள் அழுது கரைவதை பார்த்ததும் அந்தத் தாய் உள்ளம் ஏதேதோ கற்பனை செய்து அச்சம் கொண்டது “ஏய் என்ன எழவு விழுந்துச்சுனு இப்போ இப்படி ஓப்பாரி வெக்குற சொல்லித்தொலை” என்றவரின் காலைப் பற்றிய நந்தா மூன்று வருடமாக மித்ராவுடன் பேசுவதையும் இப்பொழுது தான் பார்த்ததையும் கூற.
அவளைத் துடைப்பத்தால் அடி வெளுத்து விட்டார் சாரதா “ஐயோ ஐயோ என்ன சாபமோ இப்படி இந்தக் குடும்பம் நாசமா போச்சு, இப்போ இன்னொரு பொண்ணு கண்ணீர் கோவில்ல விழுற அளவுக்குப் பாவத்தை எல்லார் தலைலையும் இறக்கிட்டாலே”.
“இன்னமும் என்னத்துக்கு உசுரோட வெச்சுருக்க ஆண்டவா” என்று அவர் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற ராஜ சேகர் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
வருடங்கள் கடந்தும் நந்தாவால் வானதியை மட்டும் மறக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்தவன் தாயிடம் கேட்டு அணைத்து விவரங்களையும் அறிந்துகொண்டான், அவன் கூறிய பிறகே சுமதிக்கு மகன் அந்தப் பெண்ணுடன் வாழ்கிறான் என்பதும் அவனுக்குக் குழந்தை இருக்கிறது என்பதும் தெரிந்தது.
விஷயம் அறிந்த ராதிகாவும் வீணாவும் ஒருபாடு அழுது தீர்த்தனர், மாமியாரும் மருமகளும் ஒன்றாக மருத்துவமணையில் கிடந்தனர் மகனின் துரோகத்தை எண்ணி சுமதி அழுது கரைய தன் வாழவில் நடந்த எந்த விஷயத்திற்கு அழ என்று தெரியாமல் வெறித்த பார்வையோடு கிடந்தாள் வானதி.
மாதங்கள் உருண்டோட எப்படி எல்லாமோ பேசிப் பார்த்தும் கெஞ்சி மிரட்டிப் பார்த்தும் வேறு திருமணத்திற்கு அவள் சம்மதிக்கவில்லை, அனைவரின் கோபமும் மித்ராவின் மீது சென்று சேர்ந்தது.
யாரிடமும் எதற்காகவும் இறங்கி போகாத பாரிவேந்தன் அண்ணிக்காக அண்ணனிடம் கூடச் சென்று பேசிப்பார்தான் “என்னால மித்ராவை விட்டு வர முடியாது பாரி நீயாவது புரிஞ்சிக்கோ” என்ற அண்ணனை வெறுமையாகப் பார்த்தான்.
என்ன சொல்ல இவனிடம் அடித்து இழுத்து சென்று அண்ணியிடம் ஒப்படைக்க இவன் சின்னக் குழந்தையா, இறுதியில் அனைவரும் சேர்ந்து ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வை அழித்து விட்டனரே என்று மனம் நொந்தான்.