உயிரின் துளி காயும் முன்பே –  5

மயிலாடுதுறையில் இருக்கும் மனக்குடி  ராஜசேகரின் பூர்வீகம், அறுபது வருடம் வாழ்ந்த ஊரை விட்டு அவர்கள் பயணம் தொடங்கியது.

உறவினர்களைத் தேடி செல்ல மனம் வரவில்லை எல்லோரும் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லி முடியவில்லை.

பாண்டியனின் நண்பர் ஒருவரின் உதவியோடு காஞ்சிபுரத்தில் இருந்த நாதநல்லூர்  என்ற இடத்தில தஞ்சம் அடைந்தனர், சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தனர், பொருட்கள் பாதியை விற்றுவிட்டு அந்த வீட்டில் தங்கள் வாழ்வை தொடங்கினர்.

தொழில் செய்து பழகியவர்கள் வேறு வேலை பழக்கம் இல்லை, கையில் இருந்த பணத்தில் ஒரு கடையைத் தொடங்கி நடத்த எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.

தொழிலில் நஷ்டம்,  சங்கமித்ராவை நினைத்து மனதிற்குள் புழுங்கி தவித்தார் பாண்டியன், மகள் யாருடனும் பேசுவதில்லை படிப்பைத் தொடரவில்லை தன்னை தன் உலகத்தைக் குறிக்கிக்கொண்டாள்

தன்னால் மட்டுமே தன் குடும்பம் இத்தனை கஷ்டப்படுகிறது என்ற குற்ற உணர்ச்சியும் அவளைக் கொன்று கொண்டிருந்தது.

அலக்நந்தாவை அருகில் இருந்த பள்ளியில் சேர்த்துவிட்டனர், குடும்பத்தை எப்படி காக்க பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற சிந்தனை ஓயாமல் அவரை வாட்ட இதயத்தின் இயக்கத்தைக் கவனிக்க தவறினார் பாண்டியன்.

மூன்று  வருடங்களில் மூச்சை நிறுத்திக்கொண்டார், அவர்கள் வாழ்வே முடங்கிவிட்டது, அவர்களைத் தாங்கி நின்ற மரம் வேரோடு சாய்ந்து விட்டது திக்கு தெரியாமல் அவர்கள் தவித்து நின்றனர்.

தாயம்மாவும் சாரதாவும் மொத்தமாக உடைந்துபோனார்கள், ராஜசேகர் வயதான காலத்தில் குடும்பத்தைக் காக்க போராட அத்தனை நாட்கள் ஏதோ ஒரு உலகில் வாழ்ந்திருந்த மித்ரா விழித்துக்கொண்டாள்.

பொறுப்பை அவள் எடுத்துக்கொள்ள, படிப்பை முடிக்காத காரணத்தால் சிறிய வேலைகளைச் செய்து வந்தாள், அதன் பிறகு வண்டலூருக்கு குடிவந்தார்கள், அருகில் இருந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவு விற்கும் இடத்தில பில்லிங் பிரிவில் வேலை கிடைத்தது.

மகன் இறந்த ஆறு மாதத்தில் தாயம்மாவும் மரணம் அடைந்தார், பேருக்கு உண்டு எப்படியோ நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தனர்.

சங்கமித்ராவை தேடி அலைந்த நாட்களில் அந்த வெறுமையை மறக்கத் தன்னை தொழிலில் அதிகம் நுழைத்துக்கொண்டான் சச்சி, அப்படி ஆறு  முக்கிய நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் வாங்கினான் அந்த ஐந்து வருடங்களில்.

எப்பொழுதும் போவதில்லை ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் சென்று பார்த்துவருவான், அப்படி அவன் வாங்கிய ஒரு தியேட்டரின் உணவு வழங்கும் இடத்தில் அவளைப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து விட்டது.

நேரே அவள் முன் சென்று நின்றுவிட்டான் அவனைக் கண்ட அந்த நொடி மரணத்தின் வாயில்வரை சென்று மீண்டு வந்ததை போல நெஞ்செல்லாம் அடைக்க மூச்சு முட்டிக் காற்றுக்கு தவித்தாள் மித்ரா.

யாரை பற்றியும் கவலை படாமல் அவளை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான், அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அவள்.

தங்களுக்கு நடந்த அநியாயத்தை அவனிடம் கூறியவள் அந்த வலிகளை எல்லாம் அந்த நொடி அனுபவிப்பதை போல அழுது கரைந்தாள்.

தன்னை சுற்றி எத்தனை பெரிய சதி நடந்திருக்கிறது ஒன்றுமே தெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று கோபம் கொண்டான், அனைத்தையும் அறிந்து கொண்டவன் கோபம் எல்லாம் தன் தந்தை மீதும் மாமனார் மீதும் திரும்பியது.

தன்னையே எண்ணி அவள் திருமணம் செய்யாமல் நிற்கத் தான் திருமணம் முடித்து ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறேனே என்று வெட்க்கினான், அவன் மனச்சாட்சி கேள்விகளால் அவனைக் குத்திக்கிழித்தது.

“எனக்குத் தெரியும் சச்சி நீங்க வருவீங்கன்னு இந்த உயிரையே உங்களுக்காகத் தான் பிடிச்சு வெச்சுருக்கேன்” என்றவள் முன் மண்டியிட்டவன்.

“என்ன மன்னிச்சுடு மித்து, நான் பாவி பாவி… நான் வேற கல்யாணம் பண்ணிட்டேண்டி உனக்குத் துரோகம் பண்ணிட்டேண்டி” என்றவன் வார்த்தை முடிக்கும்போது உணர்வற்று தரையில் சரிந்தாள் மித்ரா.

மருத்துவமனையில் அவனைக் காண அவள் மறுத்துவிட்டாள், வேளையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டாள், எத்தனை நாட்கள் வீட்டில் இருக்க? குடும்பம் பட்டினி கிடக்குமே மீண்டும் ஓடத் தொடங்கினாள்.

விடாமல் அவளைப் பின் தொடர்ந்தான், மன்னிப்பை யாசித்தான்  மூன்று மாதங்கள் அவள் பின்னே நடந்தவன் ஒரு முடிவோடு வீட்டிற்கு சென்றான்.

தந்தையையும் மாமனாரையும் நிறுத்திக் கேள்வி கேட்டான் “என் வாழ்வை இப்படி அழித்து விட்டீர்களே” என்று சாடினான் “இரண்டு பெண்களின் சாபம் என் தலையில் விழ நீங்கள் இருவர் மட்டுமே காரணம்” என்றவன்.

மாதவனிடம் “உங்க பொண்ணு நல்லா  இருக்கணும்னு இன்னொரு பொண்ணோட உணர்வுகளைக் கொன்னுட்டிங்களே, அவ எனக்காக இத்தனை வருஷமா காத்திருக்காளே”.

 “அந்தக் கண்ணீரை பாத்த அப்புறமும் உங்க மகளோட எப்படி வாழ்வேன்?  எனக்கு யாருமே வேண்டாம்  நான் அமெரிக்காவே போறேன், நீங்க யாரும் என்ன தேடி வரக் கூடாது அப்படி வந்தா மறுபடியும் என்ன நீங்கப் பாக்க மாடீங்க” என்றவன் படியின் அருகில்  வர வெறித்த பார்வையோடு அவனை நோக்கி நின்றிருந்தாள் வானதி.

அவள் கைப்பற்றி அறைக்கு அழைத்து வந்தவன் அவளிடம் அனைத்தையும் கூற, அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, விழிகள் மட்டும் நிற்காமல் நீரை பொழிந்தது.

அவனை நெருங்கி அவன் சட்டையைப் பற்றியவள் “என் அப்பா தப்பு பண்ணினார் நான் என்ன பண்ணுனேன்?? என்கிட்டே உங்களுக்கு இப்படியொரு காதல் இருந்ததா சொல்லி இருக்கலாமே”.

தன் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்தவள் “இது வெறும் சதை பிண்டம் மட்டும்னு நினைசீங்களா, நா மட்டுமே உங்கள காதலிச்சதால என் காதல் மதிப்பில்லாததா….”.

“என் காதலோட பரிசா உங்க உயிரை ஆசையா சுமந்தேனே அதையும் தொலைச்சுட்டேனே, இப்போ நீங்களே எனக்குச் சொந்தமில்லைனு சொல்றீங்களே உங்க மனசுல ஒரு மூலைல கூட என் நினைவு இல்லையா ? இத்தனை நாலா ஒருத்தனுக்கு மட்டும் முந்தி விரிக்குற விபச்சாரியாதான் என்ன பாத்தீங்களா” என்றவள் கேள்வியில்.

“வானதி…” என்றவன் குரலோடு கையும் உயர்ந்தது அவளை நோக்கி.

அப்படியே நின்றாள் கையை இறக்கி தன்னை நிலைப்படுத்தியவன் “என்ன வார்த்தை சொல்ற உன்கூட நான் வாழ்ந்தது உண்மையாத்தான், ஆனா என் மனசுல மித்ரா எப்போவும் இருந்தா இனி அவ வர மாட்டா அவளைப் பத்தி பேசி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் சொல்லல”.

“ஆனா இனிமே என்னால முடியாது, உன்னோட என்னால இருக்க முடியாது நீ… நீ… உங்க வீட்டுக்குப் போய்டு உனக்கு வேற ஒரு நல்ல வாழ்க்க…” என்றவனை முடிக்க விடவில்லை அவள்.

அடுத்த அறையில் சென்று கதவை அடைத்துக்கொண்டாள், அறையில் பொருட்கள் எல்லாம் உடையும் சத்தம் கேட்டது, வெகுநேரம் அழைத்துப் பார்த்து வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான், எந்தச் சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.

தந்தையுடன் பேசுவதை நிறுத்தி விட்டாள், வீட்டிற்கு போக மறுத்துவிட்டாள் சுமதி தாயாக அவளை மடி தாங்கினார் அழுது அழுது ஒரு கட்டத்தில் அவளுக்குக் கண்ணீரே வற்றி விட்டது.

அமெரிக்கா செல்ல விமான நிலையம் சென்றவனை காத்து நின்றிருந்தாள் சங்கமித்ரா, அவனை வெறுக்க முடியவில்லை என்ன துன்பம் ஆனாலும் பரவாயில்லை அவனின்றி இனி வாழ முடியாது என்ற முடிவோடு அவள் நின்றாள்.

ஓடிச் சென்று  அவனை அனைத்துக்கொண்டவள் “நாம எல்லார்க்கும் துரோகிங்களா ஆயிடுவோம்ல” என்றாள் விதும்பலோடு.

அவளை இன்னும் இறுக்கி அனைத்தவன் “இல்லடி எல்லாரும் நமக்குத் தான் துரோகம் பண்ணிட்டாங்க” என்றான் விழிமூடி.

மித்ராவின் வீட்டில் அவளின் காலைப் பிடித்துக் கெஞ்சினார் சாரதா “உன் அப்பாவை  இந்தக் காதல் தான் பலி வாங்கிடுச்சு எங்க யாரை பத்தியும் கவலை படாம உன்ன நெனச்சு நெனச்சே போய்ட்டாரு, வேண்டாம் இன்னொரு பெண்ணோட சாபம் உனக்கு வேண்டாம் போகாத” என்று தாத்தாவும் அவளிடம் கெஞ்சினார்.

அவள் திடமாக இருந்தாள் அவர்களை உதறி கோயிலில் எளிமையாக அவன் கையால் தாலி வாங்கி, அவன் அவளுக்காக வாங்கிய வீட்டில் வாழத் தொடங்கிவிட்டனர்.

விவாகரத்தை பற்றிப் பேசப்போக யோசிக்காமல் முதல் மாடியிலிருந்து குதித்துவிட்டாள் வானதி, அதன் பிறகு அவளிடம் பேசவே அவன் அஞ்சினான்.

அவளிடம் அசாத்தியமான ஒரு பிடிவாதம் வந்து அமர்ந்து கொண்டது, விழுந்ததில் அடிபட்டுக் கொஞ்சம் கால் சரி இல்லாமல் போய்விட்டது இப்பொழுதும் கொஞ்சம் நடையில் தடுமாற்றம் இருக்கிறது வானதிக்கு.

விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே

விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே

நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ

பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ

காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ

சோகங்களே…. வாழ்க்கையின் வேதமோ