நந்தாவின் உடலில் மெலிதான நடுக்கம் கைகள் சில்லிட்டிருக்க பால்கனியின் கம்பியை இருக பற்றினாள், அவளையே பார்த்திருந்த சுமதி அருகில் நெருங்கி அவளின் தோளில் தட்டினார்.
“எதுக்கு மா இவ்ளோ டென்ஷன் என் மகனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு, யார் சொன்னாலும் அவன் முடிவு மாறப் போறதில்லை அத மாத்ர எண்ணமும் எங்களுக்கு இல்லை” என்றவரை பார்த்தவள் விழிகள் நிறைய தொடங்கியது.
“மச்… என்ன இது” என்று அவளின் விழிநீரை துடைத்தவர் “எனக்குத் தெரியவேண்டியது ஒண்ணுதான் பாரிய உனக்குப் பிடிச்சுருக்கமா” என்றவரை அவள் குழப்பமாகப் பார்த்தாள்.
“புரியுது இப்போ போய் இப்படி கேக்குறேன்னு யோசிக்கிற, நீ ஒரு தடவ சொல்லிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்” என்க அவள் பிடிக்கும் என்று தலை அசைத்தாள்.
“பேச மாட்டியா எங்கிட்ட, அவன் பேசுறவங்களையே வெச்சு செய்வான், நீ இப்படி இருந்தா உன்ன மடிச்சு வாயில போட்டுப் போயிடுவான்” என்க அவள் முகம் செம்மை பூசியது.
“சரியாப்போச்சு அதுக்கும் சிரிப்புதானா, என்னப்பத்தி என்ன சொன்னான் நான் ரொம்ப கெட்டவ ராட்சசி அப்படின்னு சொன்னானா” என்க, ஒரு நொடி அதிர்ந்துவிழித்தவள் “இல்லை” என்று வேகமாகத் தலை ஆட்டினாள்.
“ஹா… ஹா…” என்று சத்தமாகச் சிரித்திக்கொண்டே அங்கு வந்தவன் “உங்கள பத்தி பேசுறதா?? முதல்ல என் முழு பேர் அவளுக்குத் தெரியுமான்னு கேளுங்கமா” என்றான் அவளை விழிகளால் வருடிக்கொண்டே.
அவன் குரல் கேட்ட நொடி விழிகள் மீண்டும் தரை நோக்கியது அவன் அழகிக்கு, மகனின் பரிணாமத்தை வியந்து பார்த்து நின்றார் சுமதி, அவனுடைய புரிதல் ஆச்சர்யம் அளித்தது.
வாழ்வில் யாரையேனும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறானா என்றே அவருக்குத் தெரியவில்லை, இன்று முதல் முறை அதைக் கண்ணால் பார்க்கிறார்.
சூர்யப்பிரியா சொன்னதிலிருந்து இருவரும் சாதாரணமாகக் கூடப் பேசிக்கொண்டதில்லை என்று தெரிந்தது அப்படியே பேசி இருந்தாலும் இவள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்பதும் புரிந்தது.
“காலேஜ் எப்போ போகணும்” என்று அவளிடம் சுமதி கேட்க “ஒன்பதரை” என்றாள்.
“இப்போ போன சரியா இருக்குமா கிளம்ப” என்றவரிடம் “ஹ்ம்ம்” என்றாள்.
அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் அந்தச் சிறிய சாமி அறையின் உள்ளே வைத்திருந்த கவரை எடுத்து வந்து அவளின் முன் நீட்டி “நான் குடுத்தா வாங்கிப்பியா” என்க.
அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்து நின்றாள், திரும்பி அவனைப் பார்க்க “வாங்கிக்கொள்” என்று அவன் சொல்ல வில்லை உன் விருப்பம் என்பதாகப் புன்னகையோடு நின்றிருந்தான்.
அவரிடம் வேண்டாம் என்று சொல்ல ஒரு சதவீதம் கூட முடியவில்லை வாங்கிக்கொண்டாள் “இன்னைக்கு காலேஜுக்கு இத போட்டுப் போறியா” என்று அவர் கேட்க.
வீட்டில் என்ன சொல்ல என்ற பயம் மனதை கவ்வியது, பாரிவேந்தன் சம்பத்திடம் ஏதோ கூற அவன் மனைவியிடம் அதைப் பகிர்ந்தான் “நந்தா நான் குடுத்தேன்னு சொல்லு” என்றாள் சூர்யபிரியா.
நந்தாவின் பதட்டம் மறைந்து முகத்தில் புன்னகை குடிகொண்டது, சுமதி அதிர்ச்சியில் வாய் பிளந்து விட்டார், அவ அதுக்கு தான் பயப்படுறானு இவனுக்கு எப்படி தெரிந்தது “எப்பட்றா…” என்று நின்றிருந்தார் அவர்.
வீட்டிற்கு செல்லும் வரை பதட்டம் இருந்துகொண்டே இருந்தது தெருவின் உள்ளே நுழைந்தபோது இவளின் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளிப் பந்தல் இடப்பட்டிருந்தது.
அப்பொழுது தான் நினைவு வந்தது அம்மாவும் தாத்தாவும் அந்த வீட்டின் பெண்ணின் திருமணத்திற்கு சென்றிருக்கிறார்கள், வேன் வைத்துத் தெருவே திருமணத்திற்கு போயிருக்கிறது.
காலையிலிருந்து நடந்த விஷயங்களில் இதை மறந்தே விட்டாள், இப்பொழுது கொஞ்சம் ஆசுவாசம் என்றாலும் உடையைப் பார்த்தால் நிச்சயம் கேள்வி எழும், அனைத்தையும் புறம் தள்ளியவள் வீட்டிற்கு சென்று அந்தக் கவரை பிரித்துப் பார்த்தாள்.
சந்தன நிறத்தில் அடர்ந்த சிகப்பு நிற ஜரிகை இழையோடியது, தலைக்குக் குளித்துத் தளர பின்னலிட்டு சிகப்பு நிற பொடிக்கற்கள் வைத்த கம்மல் அணிந்து பார்க்க, அவளுக்கு அத்தனை எடுப்பாக இருந்தது அந்த உடை.
“அவர்களிடம் காண்பிக்க இயலாதே” என்று நினைத்த நொடி “அவர்களிடமா? அவரிடமா!” என்று கேலி செய்தது மனது, வெட்க சிரிப்போடு காலேஜிற்கு கிளம்பிவிட்டாள்.
முகம் நிறைய புன்னகை பூக்கள் சிதறி கிடக்க இடையிடையே நாணம் வந்து சிவக்கவைத்தது, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தவள் கால்கள் ஒரு இடத்தில ஷாக் அடித்தபோல நின்றது.
காரின் கண்ணாடியை இறக்கி வைத்து இவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சுமதி, காரின் பின்னால் சாய்ந்து நின்று இவளை மொத்தமாக விழிகளால் பருகிக்கொண்டிருந்தான் பாரி வேந்தன்.
உள்ளங்காலிலிருந்து சிலுசிலு என்று ஒரு உணர்வு புயல் வேகத்தில் உடல் எங்கும் பரவி அவளைத் தள்ளாட செய்தது, அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தன் பார்வையை சுமதியின் மேல் பதித்தாள் அலக்நந்தா.
“வா” என்று அவர் சைகை செய்ய நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தது கால்கள், பார்த்திருந்தவன் விழிகளில் ரசனை கூடியது “கார்ஜியஸ்” என்றான் மெல்ல.
தன்னை அவள் நிமிர்ந்து பார்க்கப் போவதில்லை என்று அவனுக்குப் புரிந்தது “வா நாங்களே காலேஜில விட்டுட்டு போறோம்” என்று அவர் கூற.
“ஏதே??” என்று அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய வந்த சிரிப்பை இதழ்களுக்குள் ஒலித்துக்கொண்டான் பாரிவேந்தன்.
“இல்ல நான் பஸ்ல…” என்று அவள் முடிக்கும் முன் “இனிமே பஸ் பிடிச்சு போகலாம் நேரம் இல்ல நீ வா” என்று அவளைத் தன்னோடு பின்னால் பிடித்து அமர்த்திக்கொண்டார்.
மகனின் முகத்தைப் பார்க்கவே இல்லை, பார்வையாலே தன்னை எரித்துவிடுவான் என்று தெரிந்ததால் கமுக்கமாக அமர்ந்து அவளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டார்.
இறுதி வரை அவர் மட்டுமே பேசினார் அவருடைய அணைத்து கேள்விக்கும் அவளுடைய தலை மட்டுமே அசைந்தது, இருவருக்கும் அந்தப் பயணம் மிகவும் பிடித்தது.
பதட்டத்தையும் கடந்து அவனின் விழிகள் தன்னிலிருந்து நகர மறுப்பதிலேயே அவளின் செல்கள் எல்லாம் பூக்கள் பூத்தது, கல்லூரியில் அவளை இறங்கிவிட்டனர்.
சுமதியிடம் விடை பெற்றவள் அவன் புறம் திரும்பாமலே இறங்கி நடந்தாள்.
சில அடிகள் நடந்தவளின் நடை தேங்கியது திரும்பிப் பார்க்கவும் முடியாமல் செல்லவும் முடியாமல் ஒரு நிலை, அலைபேசி அடிக்க எடுத்துப்பார்த்தாள் அவனே…
அழைப்பை ஏற்று செவியில் வைக்க “அழகி” என்ற ஆழ்ந்த அழைப்பில் அவனிடம் ஓடிச் சென்று இறுக்க அணைத்து மார்பில் முகம் புதைத்துக்கொள்ள துடித்தது மனது, விரல்களை இறுக்கமாக மூடி அசையாமல் நின்றாள்.
அந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை மெல்ல திரும்பிப் பார்க்க அவளையே பார்த்து நின்றிருந்தவன் “அல்லூரிங் அழகி…. யு ஆர் கில்லிங் மீ” என்றதோடு வாகனத்தைக் கிளம்பிவிட்டான்.
அவளுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை, என்ன சொன்னான் என்ற யோசனையில் வகுப்பிற்குள் செல்ல அவளின் தோழி இவளைப் பார்த்தவுடன் “ஏய் நந்தா நீயா இது!! என்னடி அதிசயம்” என்று அவளைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தாள்.
“செமயா இருக்கு டி இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, பாத்துடி யாராவது கொத்திட்டு போகப் போறாங்க, ஆமா இன்னைக்கு உனக்குப் பர்த்டே கூட இல்லையே அப்பறம் இவ்ளோ அழகா மேடம் வந்திருக்கீங்க” என்ற தோழிக்குப் பதில் கூறாமல் அவளின் அலைபேசியை வாங்கிய நந்தா கூகுளில் “அல்லூரிங்” என்று டைப் செய்தாள்.
“என்னடி வந்ததும் அல்லு அர்ஜுன் பத்தி தேடுற” என்றாள் அவளின் தோழி, அவளைப் பார்த்து முறைத்த அலக்நந்தா அதன் அர்த்தத்தைப் பார்த்தாள்.
“அல்லூரிங் – விளக்கிக் கூற இயலாத முறையில் மயக்குகிற; தன்வயப்படுத்துகிற” என்ற அர்த்தத்தை அது கொடுத்தது, அலக்நந்தாவின் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்திருந்த அவளின் தோழி “என்னடி நடக்குது” என்றாள் அவளைக் கூர்மையாகப் பார்த்து.
உணர்வுகளை அடக்கிய அலக்நந்தா “ஒன்னும் இல்ல” என்று கூறி வெளியேறிவிட்டாள், நேராகக் கேன்டீன் சென்று அமர்ந்துகொண்டாள், எதிலும் மனம் நிலைக்கவில்லை நினைவுகள் முழுதும் அவனின் பார்வையும் வார்த்தையும் நிறைந்து நின்றது.
“இது நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா, தாயின் மனதை மீண்டும் காயப்படுத்தும் நிகழ்வாக மாறுமா, அக்காவைப் போலத் தன்னையும் ஒதுக்கி வைத்து விடுவார்களா”.
“அவனை விலகி ஒரு வாழ்வு தனக்கு சாத்தியமா… இதே நிலையில்தான் அக்காவும் அவரும் இருந்தார்களா?? ஆனால் அவர் திருமணம் முடிந்து மனைவியை விட்டு விட்டுக் காதலித்தவளை கைப்பிடித்தார், அது தவறு இல்லையா?? காதலில் எதுவும் தவறு இல்லை என்று சொல்கிறார்களே”.
“இறைவா நான் என்ன செய்யட்டும், ஏன் இந்தக் காதல் என்னுள் நுழைந்தது, அவரோடு ஒரு வாழ்வை கனவு கண்டுவிட்டேனே என்னிடமிருந்து அவரைப் பிரித்து விடாதே” என்று மனதிற்குள் புலம்பியவள் விழிகள் நிறைந்துகொண்டே இருந்தது.
மனதில் சொல்ல முடியாத பாரம் அழுத்த மூச்சு முட்டியது, உடல்நிலை சரி இல்லை என்று சிக் ரூமில் படுத்துக்கொண்டாள்.
மாலை அவளின் தோழி வந்து அழைக்கக் கண்கள் வீங்கி முகம் சிவந்து இருந்தது “என்னடி காலைல நல்லாதானே இருந்த எதுக்கு அழுத, என்ன பிரச்னை நந்தா என்கிட்டே சொல்லு” என்றவளிடம் “ஒன்னும் இல்ல டி தலவலி” என்று கூறி மழுப்பினாள்.
இப்பொழுது அவள் கூற விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்ட தோழி “சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்க.
“இல்ல நீ போ நான் கொஞ்சம் நேரம் லைப்ரரி போறேன்” என்றவளை விசித்திரமாகப் பார்த்தாள் அவள், இவள் என்னவோ சரி இல்லை அவளே சொல்லட்டும் என்று முடிவு செய்தவள்.
“சரி வா நானும் வரேன்” என்க, “வேண்டாம் பல்லவி நான் படிச்சுட்டு போறேன் நீ போ” என்றாள் அலக்நந்தா.
தனியாக இருக்க விரும்புகிறாள் என்று புரிந்தது அவளைத் தொல்லை பண்ணாமல் சென்றுவிட்டாள் பல்லவி.
வெகுநேரம் இருந்தவள் வீட்டிற்கு புறப்பட்டாள், கல்லூரிக்கு வெளியில் வந்தவள் பார்வை சுற்றிலும் சுழன்றது, விழிகள் தேடியவன் கொஞ்சம் தொலைவில் காரோடு நின்றிருந்தான்.
அவளை ஆராச்சியாகப் பார்த்திருந்தான் பாரிவேந்தன், கல்லூரி முடிந்த உடனே வருவாள் என்று எதிர்பார்ப்போடு நின்றிருக்க கல்லூரி முடிந்து ஒருமணி நேரம் கடந்து இப்பொழுதுதான் வருகிறாள்.
அதுவும் முகத்தில் காலைத் தான் பார்த்து ரசித்த மலர்ச்சி இல்லை, எதை நினைத்துக் குழப்பிக் கொள்கிறாள் என்று கவலையாக இருந்தது.
“என்னுடன் வா” என்று அவளை அழைக்கவில்லை, அமைதியாக நின்றிருக்க நடந்துகொண்டே இருந்தாள், மூளைக்குள் இடியாப்ப சிக்கலாகக் குழப்பங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
உடலின் வலு எல்லாம் வடிந்துவிட்டதாக, உடலே பாரமாக, நடப்பதே நரகமாக…. வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள், உள்ளே அமர்ந்ததும் இத்தனை நேரம் அடக்கிய அழுகை மீண்டும் வெடித்தது.
டிரைவர் உடனே வண்டியை நிறுத்திவிட்டார் “என்னம்மா” என்று அவர் பதறிக் கேட்கத் தன்னை கட்டுப்படுத்தியவள் திரும்பிப் பார்த்தாள், ஆட்டோ நின்றவுடன் வேக நடையில் அவன் வருவது தெரிந்தது.
“அண்ணா ப்ளீஸ் வண்டியை எடுங்க” என்று அவசரப்படுத்த அவரும் வண்டியை எடுத்துவிட்டார், வீட்டிற்கு சென்றபிறகு மனதில் இன்னும் பாரம் கூடியது, அவனைத் தவிர்ப்பதாக நினைத்திருப்பானோ, வீட்டிற்கு போகாமல் அங்கேயே நின்றிருந்ததால்??.
ஆசையாக வந்தவனை அவமதித்து விட்டேனே என்று கலங்கி தவித்தாள், உடையை நனைத்து உலர்த்தி விட்டுக் குளித்தவள் சுருண்டு படுத்துவிட்டாள், இன்று காலை உணவு உண்டது இந்த நொடிவரை ஒன்றும் உள்ளே செல்லவில்லை.
இரவு வந்த சாரதாவும் ராஜசேகரும் அவள் உரக்க கலக்கத்தில் இருப்பதாக நினைத்து எதுவும் கேட்கவில்லை, காலை எப்பொழுதும் போலச் சம்பத் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
மனம் அடித்துக்கொண்டது இங்கு இருப்பானா… எப்படி அவனை எதிர்கொள்ள என்றே தெரியவில்லை, வேலையில் கவனம் இல்லை சிந்தனை எங்கோ இருக்க அவளைப் பார்த்தவுடனே சூர்யபிரியாவுக்கு புரிந்து விட்டது.
நேரம் ஏழு மணியைக் கடந்தும் பாரி வேந்தன் கீழே வரவில்லை, நந்தாவிற்கு மனம் வலித்தது தன் மீது கோபமாக இருக்கிறான், அவனைக் காயப்படுத்தி விட்டோம் என்ற நினைவே உயிரை வதைத்தது.
சூரப்ரியாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள், எங்கிருந்து புதிய உடை என்ற தாயிடம் பொய் உரைத்து வீட்டில் இருக்கமுடியாமல் கல்லூரிக்குத் தயாரிக்கிவிட்டாள்.
சூரப்ரியா கணவனிடம் விவரம் கூற அவனும் நண்பனுக்கு அழைப்பு விடுத்துவிட்டான், அவனின் “ஹலோ” என்ற அழைப்பே கூறியது அவன் உறக்கத்தில் இருப்பதை.
“எங்கடா இருக்க” என்ற சம்பத்துக்கு எந்தப் பதிலையும் தரவில்லை பாரிவேந்தன், “எங்கேயோ இரு… என்ன பிரச்னை நந்தா கூட, அந்தப் பிள்ளையைப் பார்க்கவே முடியல நேத்து பார்த்த பொண்ணா இதுனு இருக்கா” என்க.